சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வுலகின் அன்னியக்கரங்கள் என்று நான் கலாச்சாரச் செயல்பாடுகளிலும் சிலவகைச் சேவைகளிலும் ஊடாடி பெரும் செல்வாக்கைச் செலுத்தும் அன்னிய நிதிபற்றி சில கருத்துக்களைச் சொல்லியிருந்தேன். அன்று பெரும்பாலும் ஒருவகை வம்புகளாக மட்டுமே காணப்பட்ட அவை இன்று பரவலாக பேசப்படுகின்றன. சற்றுப்பிந்தியேனும் நான் சொன்னவற்றுக்கு ஒரு மதிப்பு வந்திருப்பதை உணர்ந்து மகிழ்ச்சி
*
தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் எனக்கு இந்த நிதிவலை பற்றிய தகவல்கள் தெரியவந்தன. அன்று நான் அதிதீவிரமாக பங்கெடுத்த பல சூழியல் அமைப்புகள் அன்னிய நிதி பெற்றவை என்பது அவற்றுக்குள் நிகழ்ந்த சண்டைகள் வழியாகத் தெரியவந்தமை எனக்கு பெரிய அதிர்ச்சியை அளித்தது. அவற்றில் பல அமைப்புக்கள் காந்தியம் பேசியவை. சில அமைப்புக்கள் இடதுசாரி அரசியல் பேசியவை. இரண்டு தரப்பும் மாறி மாறி சண்டையிட்டனர். ஒரே இடத்தில் நிதி பெற்றிருந்தனர்.
ஒரு கட்டத்தில் என்னிடமே ஒருவர் நிதிபெறும் ஓர் அமைப்பை சேர்ந்து நிறுவுவதற்கு ஆலோசனை கேட்டார். அன்று நான் சொற்ப சம்பளம் பெறும் ஊழியன். ஆனால் அது எனக்கு அருவருப்பை ஊட்டியது. விலகிக்கொண்டேன். ஆனால் என்னவோ நிகழ்கிறது என்று மட்டும் தெரிந்தது. பின்னர் பஞ்சாப், வடகிழக்கு பிரச்சினைகளைப் பற்றி ஆராய்ந்தபோதுதான் இந்த நிதிவலையின் அரசியல் புலம் பிடிகிடைத்தது. கடைசியாக சில உளவுத்துறை உயரதிகாரிகள் தெளிவு அளித்தனர்.
*
நிதிபெற்றவர்கள், பெறச்சூழ்பவர்கள், பெற்றவர்களை அண்டியவர்கள் என ஒரு பெரும்கூட்டம் நம்மிடையே உள்ளது. இவர்களில் கணிசமானவர்கள் இங்கே முற்போக்கு பாவனைகளுடன் அறிவுஜீவிகளாக ஊடகங்களை நிறைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு பெரும் ஊடகங்களில் வலுவான ஊடகநண்பர்கள் இருக்கிறார்கள்.சர்வதேசக் கலாச்சார அமைப்புகளின் பெரும்பின்புலம் உள்ளது. உள்ளூரில் செயல்படும் தன்னார்வக்குழுக்களின் ஆதரவுப்புலம் உள்ளது.
இவர்கள் நிதிகளை வாங்கித்தர முடியும். சர்வதேசக்கருத்தங்க அழைப்புகளை ஏற்பாடு செய்ய முடியும்.நூல்களுக்கு மொழிபெயர்ப்புகளை உருவாக்கி சர்வதேச அளவில் கொண்டுசெல்லமுடியும். எவரையும் எந்த எல்லைவரைக்கும் கொண்டு செல்லும் ஆற்றலும் இவர்களுக்கு உண்டு. இன்றைய இந்தியாவின் இலக்கியக் -கலாச்சார- சிந்தனைத்தளத்தின் உண்மையான மைய சக்தி இவர்களே
ஒருவரை ஒருவர் மறுத்தும் வாதிட்டும் இவர்கள் பண்பாட்டுச்சூழலை நிறைத்திருந்தாலும் நிதி என்று சுட்டப்படும்போது ஒற்றைக்குரலில் திரண்டு எழுவதைக் காணலாம். இந்த பெரும் சக்திக்கு எதிராக எந்த எழுத்தாளரும் இங்கே எதிர்த்து நிற்கமுடியாது. ஊடக அவதூறுகள் முதல் கருத்தியல்தளத்தின் சூழ்ந்துதாக்கும் உத்திகள் வரை பெரும் எதிர்ப்பைச் சந்திக்கவேண்டியிருக்கும். ஆகவே இதைப்பற்றி தெரிந்தும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அமைதிகாப்பதே வழக்கம்
நான் ஒருவகை தற்கொலைத்தன்மையுடன் இவ்வகை விஷயங்களில் கருத்துச்சொல்லவேண்டும் என எனக்கே விதித்துக்கொண்டவன். அது நான் பி.கே.பாலகிருஷ்ணனிடமிருந்து கற்றுக்கொண்டது. இன்று என் சொற்கள் வழியாக இவை கவனப்படுத்தபட்டமைக்காகவே நான் தாக்கப்படுகிறேன். என்னை ஃபாசிஸ்டு என்றும் மதவெறியன் என்றும் சாதிவெறியன் என்றும் முத்திரையிடும் பெரும் பிரச்சாரப்பணியை நிதியமைப்புகள் தங்கள் கையாட்கள் வழியாக முன்னரே தொடங்கிவிட்டன. கொஞ்சம் கவனமாக இருப்பதனால் பாலியல்குற்றச்சாட்டு மட்டும் இன்னமும் வரவில்லை.
நிதிப்பிள்ளைகள் பல கோணங்களில் சுற்றிச்சுற்றி கம்பு வீசுகிறார்கள். அவர்களின் பதற்றம் புரிந்து கொள்ளத்தக்கதே. அந்த தர்க்கங்களை சுயபாதுகாப்புக்காக உருவாக்கிக்கொண்ட பின்னரே அவர்கள் இதில் இறங்கியிருப்பார்கள்.அவர்களிடம் வெட்டித்தர்க்கம் செய்ய நேரமிருப்பவர்கள் செய்யலாம். ‘நம்ம சைடை எடுத்துப் பேசுறாரே’ என்று ஆதரிப்பவர்கள் ஆதரிக்கலாம். நான் சொல்வது குறைந்தபட்ச தர்க்கசிந்தனையும் நியாயஉணர்வும் கொண்ட எவருக்கும் புரியும் விஷயம் மட்டுமே.
*
1. அறிவியல் ஆய்வுகளுக்கான நிதிக்கொடைகளையும் இதேபோன்ற பண்பாட்டு ஆராய்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கான நிதிக்கொடைகளையும் கலந்துகட்டி மாயம் செய்கிறார்கள் நிதிப்பிள்ளைகள். அறிவியல் ஆய்வுகளில் ஏராளமான புறவயமான அளவுகோல்கள் உள்ளன. அவை நேரடியான அறிவுத்துறைச்செயல்பாடுகள். சர்வதேச ஒத்துழைப்பு இன்றி பலவகை அறிவியலாய்வுகள் சாத்தியமே அல்ல என்பதனால் உலகிலுள்ள பல அறிவியலமைப்புக்கள் நிதிக்கொடைகளை அளித்து ஆய்வுகளை விரிவாக்கம் செய்கின்றன
பண்பாட்டு ஆய்வுகளுக்கு அப்படிப்பட்ட புறவயத்தன்மை இல்லை. ஒரளவு இருந்தாலும் இங்கிருக்கும் சூழலில் அப்படி ஏதும் சுத்தமாகவே இல்லை என்பது இவற்றில் குரலெழுப்புவர்களின் தகுதியை நோக்கினாலே தெரியும். இப்பண்பாட்டு ஆய்வுகளும் நடவடிக்கைகளும் நேரடியாகவே அரசியல் செயல்பாடுகளுடன் பிணைந்தவை. இதை புரிந்துகொள்ள பொதுத்தர்க்கமே போதும்
2. ‘நிதியுதவி நிறுவனம்’ என்ற பொதுச்சொல்லைப் பயன்படுத்தி இந்த நிதிப்பிள்ளைகள் கார்ப்பரேட் நிதியையும் அன்னிய நிதியையும் தந்திரமாக குழப்பியடிப்பதைக் காணலாம். இரண்டும் வேறுவேறு. கார்ப்பரேட்நிதி இந்தியத் தொழில்நிறுவனங்களுடையது என்றால் அது வேறு விஷயம். அதிகபட்சம் அவர்களின் தொழில்சார்ந்த சில முன் எதிர்பார்ப்புகளும் திட்டங்களும் அவர்களுக்கு இருக்கலாம். டாட்டாவுக்கு இருப்பது போல
இங்குள்ள கார்ப்பரேட் அமைப்புக்கள் பலவகையான சட்ட நிர்ப்பந்தங்களுக்காக நிதியுதவி செய்யலாம். விளம்பரத்துக்காகச் செய்யலாம். உண்மையான அறநோக்குடனும் செயல்படலாம். வெளிப்படையாக அவற்றைப்பெற்று பணியாற்றுவது பெரும் பிழை அல்ல. காந்தியே பிர்லா-டாட்டாவிடம் நிதி பெற்றவர்தான். அந்த நிதியை அவர்கள் பெற்றதும் செலவிட்டதும் வெளிப்படையாகத் தெரியவரும் என்றால் அதையும் கருத்தில்கொண்டபடி அவர்களின் செயலை நாம் மதிப்பிடலாம்
3. ஆனால் அமெரிக்க- ஐரோப்பிய பின்புலம் கொண்ட நிதியுதவி அமைப்புக்கள் அப்படிப்பட்டவை அல்ல. அவற்றைப்பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. மிகவிரிவான பின்புல ஆராய்ச்சி இல்லாமல் அவற்றைப்பற்றி எதையுமே சொல்லமுடியாது. அப்படிச் சொல்லவேண்டிய ஆவண ஆதாரங்களை அவைதான் அளிக்கவேண்டும்.அவை அளிப்பதில்லை. அதிகபட்சம் நான்காண்டுகளுக்கு மேல் ஆவணங்களை பேணுவதில்லை என அவை அரசுவிசாரணையில் தெரிவிக்கின்றன.
உண்மையில் வெளிப்படையானவை, ஆதாரபூர்வமானவை என்று அவற்றை ஆதரிப்பவர்கள் சுட்டிக்காட்டும் எல்லா ஆதாரங்களும் அந்த அமைப்புகளே முன்வைக்கும் வெற்றுவரிகள்தான். நாம் சென்று ஆராய்ந்து அறியக்கூடியவை அல்ல. அந்த எளிய தகவல்கள்கூட மிகக்கடுமையான அரசுக் கட்டுபாட்டுக்காக அவை வேறுவழியில்லாமல் வெளிப்படுத்துபவை மட்டுமே. அவை உண்மையில் என்ன ஏது என்றே நம்மால் அறிய முடியாத அமைப்புகள்தான். ஐயமே தேவை இல்லை
ஆகவே தன் சிந்தனைகள் மதிப்பு மிக்கவை என நினைக்கும் எவரும் அவற்றை அணுக மாட்டார் என்றே நினைக்கிறேன்.
4 எவருக்கு எந்த அடிப்படையில் நிதியளிக்கின்றன, உலக அளவில் என்னென்ன ஒட்டுமொத்தத் திட்டங்களின் அடிப்படையில் நிதியளிக்கின்றன, ஆய்வுத்தரவுகளை எவருக்காக பயன்படுத்துகின்றன என்பதெல்லாம் இந்தியா போன்ற பிற்பட்ட அரசுகளின் உளவுத்துறைகளாலேயே அறியமுடியாதவை. நேற்று கூட இவற்றை ஆராய்ந்த ஓய்வுபெற்ற கேரள உளவுத்துறை அதிகாரியும் எழுத்தாளருமான ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ‘அறியவே முடியாது. நாமெல்லாம் சின்னக் கொசுக்கள். அது யானை’ என்றார். சும்மா சுற்றிச்சுற்றி ரீங்காரமிட்டு பறப்பது மட்டுமே நம் ரா போன்ற அமைப்புக்கே செய்யக்கூடுவதாக இருக்கிறது.
அத்துடன் எங்கு எந்த அதிகாரி அல்லது அரசியல்வாதி மறைமுகமாக நிதிபெற்றிருக்கிறார் என்றே சொல்லமுடியாது. ஆகவே எவரும் துணிந்து கைவைப்பதும் இல்லை. காங்கிரஸ், பாரதியஜனதா என எவரும் இதில் விதிவிலக்கில்லை.
மேலும் இந்த அமைப்புக்களால் பேணப்படும் அறிவுஜீவிகள் இந்தியச்சூழலில் பெரும் சக்தி. இங்குள்ள ஒற்றைப்படையாகத் திரட்டப்பட்ட அறிவமைப்பு என்றால் உண்மையில் இவர்கள்தான். இவர்களில் புகழ்பெற்ற இதழாளர்களும் பலர் உண்டு. அத்துமீறினால் எந்த பெரிய அதிகாரியாக இருந்தலும் கதற அடித்துவிடுவார்கள்.அந்தப்பயம் எல்லா அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் உண்டு என்றார் அந்த முன்னாள் அதிகாரி..
இந்நிலையில் எழுத்தாளர்கள் இவற்றைப்பற்றிய ஐயங்களை மட்டுமே இன்றைய நிலையில் சொல்லமுடியும். இந்த மாபெரும் நிதியமைப்புக்களைப்பற்றி ‘ஆதாரபூர்வமான’ கட்டுரைகளை எழுத எழுத்தாளர்கள் ஜேம்ஸ்பாண்டுகள் அல்ல. ஆகவே இதன் நிதிப்பிள்ளைகள் ‘ஆதாரம் உண்டா?’ என்றுதான் எப்போதும் எம்புவார்கள்.
5 இந்த அன்னிய நிதியமைப்புக்கள் பெரும்பாலும் மிக விரிவான ஏகாதிபத்திய நோக்கம் கொண்டவை என்பதை அவற்றின் செயல்பாடுகளில் இருந்து பலவாறாக ஊகித்து விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். ஊகிக்கத்தான் முடியும், ஆதாரங்களை அவற்றுக்குள் இருந்து எவரேனும் வெளிப்படுத்தினால்தான் உண்டு. அதுவும் ஓரளவு அவ்வப்போது நடந்திருக்கிறது
ஃபோர்ட் பவுண்டேஷன் ராக்ஃபெல்லர் ஃபவுண்டேஷன் முதலியவை எப்படி எப்படி கீழைநாடுகளின் அரசியல் பண்பாடுகளில் ஏகாதிபத்திய நோக்குடன் சூறையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றன என்பது அவ்வகையில் பக்கம் பக்கமாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. என் இணையதளத்திலேயே பல கட்டுரைகளுக்கான சுட்டிகள் உள்ளன
6 இவ்வமைப்புக்கள் ‘ரகசிய’ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புக்கள் அல்ல. இவை செய்யும் செயல்கள் வெளிப்படையானவைதான். பிரச்சினை இவற்றின் முழுவடிவம் நமக்குத்தெரியாது என்பதே. ஆகவே ‘எல்லாம் வெளிப்படையானவை’ என்று பிலாக்காணம் வைப்பதில் பொருளே இல்லை. இவை பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் பொதுவான சட்டங்களை முழுமையாகவே கடைப்பிடிப்பவை. மிகச்சிறந்த நிபுணர்களைக்கொண்டு அச்சட்டங்களை தேவையானபடி கையாளக்கூடிய அளவில் செயல்பாடுகளை வகுத்துக்கொண்டவை.
7 இவற்றின் செயல்பாடுகள் இருவகை. ஒன்று, நேரடியான நிதிக்கொடைகள். இரண்டு இரண்டாம் கட்ட அமைப்புகளை உருவாக்கி அவற்றுக்கு நிதிக்கொடைகளை அளிப்பது. சிலசமயம் மூன்றாம் கட்ட அமைப்புகளையே உருவாக்கும்.
சென்ற காலங்களில் வடகிழக்கு மாகாணங்களில் இந்த நிதியமைப்புகள் உருவாக்கிய ‘பண்பாட்டுச் செயல்பாடுகள்’ மூலம் உருவான சமூகப் பேரழிவை உணர்ந்தபின்னர் அரசு கண்காணிப்பை செறிவுபடுத்தியது. உடனே இவை இரண்டாம் கட்ட அமைப்புகளை உருவாக்கி அவற்றுக்கு நிதியளிக்கத் தொடங்கின. இந்த இரண்டாம் கட்ட அமைப்புக்கள் இந்தியர்களால் இந்தியச் சட்டங்களுக்கு முற்றிலும் உட்பட்ட முறையில் அமைக்கப்பட்டவையாகவே இருக்கும். உள்ளூர் நிதிகளையும் இவை ஓரளவு பெற்றுக்கொள்ளும்.
இவற்றின் நிதிவலை மிகச்சிக்கலானது. அதன் மீதான எந்த விமர்சனத்திற்கும் பதிலாக இந்தச் சிக்கலைத்தான் இவர்கள் முன்வைப்பார்கள். இது அந்த நிறுவனமே அல்ல,இது வேறு என்பார்கள். இது முற்றிலும் சட்டபூர்வமானது என்பார்கள். அது இதை எதிர்க்கிறதே என்பார்கள்.
8 இந்த பலவகை முகமூடிகள் கொண்டவை. ஓரளவு முக்கியமான ,புகழ்பெற்ற கலைஞர்களுக்கும் சேவையாளர்களுக்கும் இவை நிதிவழங்கியிருக்கும். எப்போதாவது இவற்றின் செயல்பாடுகள் விமர்சிக்கப்படும் என்றால் ‘இவர்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்டதே. சிலர் வேறுமாதிரி இருப்பார்கள். அதை நிதிக்கொடையாளர் எப்படி கட்டுப்படுத்த முடியும்?’ என்ற பதில் சொல்லப்படும்
9 நிதியமைப்புக்கள் ஆய்வுகளில் எவ்வகையிலும் குறுக்கிடுவதில்லை என்று இந்த நிதிப்பிள்ளைகள் மீளமீளச் சொல்வார்கள். ஆனால் இவர்களின் நிதி பெற்ற அனைத்து ஆய்வுகளிலும் உள்ள பொதுத்தன்மையை எளிதில் உணர முடியும். எந்த காரணமும் இல்லாமல் நிதிகொடுக்க அவர்கள் கருணாமூர்த்திகளான கடவுள்கள் அல்ல என்பதை அறிய புலனாய்வுத்திறன் தேவை இல்லை.
ஏகாதிபத்திய நிதி பெற்று புரட்சி செய்கிறோம் என்று சொல்பவர்களும் இங்குண்டு. நிதிகொடுப்பவன் ஏமாளி இவர்கள் மேதைகள் என நம்புபவர்கள் நம்பலாம்.
10 இந்தியாவின் பண்பாட்டுத் தளத்தில் இன்றுவரை நிதியின்மையால் மிகப்பெரும்பாலான உண்மையான ஆய்வுகள் முழுமையடையாத நிலையிலேயே உள்ளன. சொல்லப்போனால் இப்போது ஆய்வு என நிகழ்வது மிகமிகச் சொற்பம்.ஆனால் இன்னொருபக்கம் இந்த அன்னியநிதி சில திசைகளில் பீரிட்டுக்கொண்டிருக்கிறது. முதன்மையான ஆய்வாளர்கள் நிதியின்றி இருக்கையில் வேறுசிலர் நிதியில் த்ளைக்கிறார்கள். இதுதான் பிரச்சினை
11. உலகின் பலநாடுகள் – குறிப்பாக இடதுசாரி அரசுகள் – போர்டுபவுண்டேஷன் போன்றவற்றை தடைசெய்துள்ளன. இங்குள்ள பல்வேறு வழிகளினூடாக இந்திய அரசு இவர்களை இன்று கட்டுப்படுத்துகிறது. ஆனால் சட்டத்தின் வளைவுகளை மிகத்திறமையாக இவர்களால் கடந்துசெல்ல முடியும்
இப்படி சட்டத்தை வளைத்தும் ஊடுருவியும் இவர்கள் செய்யும் பணியின் நோக்கம் இங்கே உண்மையான பண்பாட்டு ஆய்வை ஊக்கப்படுத்துவதும் சிறந்த இலக்கியங்களை உருவாக்குவதும் கலைகளை வளர்ப்பதும் மனிதாபிமான சேவையும் மட்டுமே என உண்மையிலேயே நம்புபவர்கள் தங்களுக்கு 18 வயது தாண்டிவிட்டதா என இன்னொரு முறை உறுதிசெய்துகொள்லலாம்
12 இவ்வமைப்புக்களில் உள்ள முக்கியமான ‘ரகசிய’ அம்சம் இவற்றை அணுகுவதிலுள்ள பாதைதான். சட்டப்படி எல்லாமே வெளிப்படையானவை. விதிகளின்படி எவரும் அணுகி நிதிபெறலாம். ஆனால் நடைமுறையில் ஏற்கனவே இவர்களின் உள்வட்டத்தில் உள்ள சில முக்கியமானவர்களால் பலகட்ட பரிசீலனைக்குப்பின் தனிப்பட்ட முறையில் சிபாரிசு செய்யப்படாமல் எவரும் உள்ளே செல்லமுடியாது. மிக அந்தரங்கமான ஒரு தொடர்புவலை இது. உள்வட்டத்தில் உள்ள ஒருவர் அதற்கு உள்வட்டத்தில் உள்ள ஒருவருக்கு சிபாரிசு செய்வார். அவர் மேலும் உள்ளே உள்ள ஒருவருக்கு. அதன்பின் எங்கோ எவரோ முடிவெடுக்கிறார்
இந்தவழியில் சென்று பணம்பெற்ற ஒருவர் என்னிடம் சொன்னார் ‘தேவடியா வீட்டுக்கு தெரிஞ்சவன் கூட்டிட்டுப்போறது மாதிரி”
13 இவர்கள் அளிக்கும் நேரடிநிதி ஆவணங்களில் சிலசமயம் குறைவானதாகவே படும். ஆனால் கருத்தரங்குகளுக்கான அழைப்பு, நூலை மொழியாக்கம் செய்தல் என அவை அளிக்கும் உதவிகள் பலதரப்பட்டவை
*
அடிப்படையில் இவ்வமைப்புக்களின் செயல்பாடுகளை பொதுவாக இப்படித் தொகுக்கலாம். .
அ. அவை கீழைநாடுகளின் பண்பாடுகள் பிற்பட்டவை என நிறுவும் நோக்கத்தை மறைமுகமாக நிறைவேற்றும், அதற்கான தரவுகளை உருவாக்கும்
ஆ. கீழைநாடுகளின் மக்கள்திரள்கள் நடுவே உள்ள சமூகப் பிளவுகள் மற்றும் அவநம்பிக்கைகளைத் தொகுக்கும். அவற்றை ஒரு பெரிய தரவுத்தொகையாக சேகரித்து மூலநிறுவனங்களால் வழிநடத்தப்படும் வேறு நிறுவனங்களுக்கு அளிக்கும். அவை பெரும்பாலும் ஐரோப்பிய ,அமெரிக்க கல்விநிறுவனங்களாகவே இருக்கும்.
இ. கீழைநாடுகளின் ஆவணப்படுத்தப் படாத நாட்டார்,பழங்குடி ஞானத்தை சேகரித்து ஆவணப்படுத்தும். அந்த ஆவணங்கள் ஒருபோதும் இங்குள்ள அரசுக்கோ அரசு நிறுவனங்களுக்கோ அளிக்கப்டாது. எந்த வகையிலும் அவை கீழைநாடுகளுக்குரிய வகையில் காப்புரிமை பெறப்படாது. அந்தத் தரவுகள் பிறருக்கே அளிக்கப்படும்
ஈ இங்குள்ள தன்னார்வக்குழுக்களின் அரசியலுடன் கச்சிதமாக அவை இணைந்து செயல்படும்
உ இந்தக்காரணத்தால்தான் நாட்டாரியல், மானுடவியல், சமூகவியல் ஆய்வுகளுக்கு நிதியளிக்கப்படுகிறது. நாட்டார்தன்மை கொண்ட இலக்கியம் மற்றும் நாட்டார் கலைகளுக்கு நிதியளிக்கப்படுகிறது.
*
ஃபோர்டு பவுண்டேசன் நிதி பெற்று வடகிழக்கில் அரிய மருத்துவ- கல்விச்சேவை செய்த இரு பாதிரிமார்களை எனக்குத்தெரியும். நித்யாவுடன் நெருக்கமானவர்கள். ஒருகட்டத்தில் அவர்களுக்குத்தெரிந்தது அவர்கள் வழியாக அங்கே அந்த அமைப்புக்கள் வேரூன்றின என்று. அவை இனக்குழுக் காழ்ப்புகளை ஆராய்ந்தன.. அந்த தகவல்களின் அடிப்படையில் அங்கே மெல்லமெல்ல தீவிரவாதம் உருவாக்கப்பட்டது. பல்லாயிரம் பேர் இனக்குழு மோதல்களில் செத்தன்ர். ஒட்டுமொத்த வடகிழக்கே வறுமையில் பின் தங்கிய நிலையில் மூழ்கி அழிந்தது.
அந்தப்பாதிரியார் என்னிடம் கண்ணீருடன் சொன்னார் ‘நான் செய்தது சேவை அல்ல, படுகொலை! அது 18 ஆண்டுகள் கழித்து எனக்குத்தெரிந்தது’
*
இந்த நிதிப்பிள்ளைகளை நான் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவில்லை. அவர்களை எவ்வகையிலும் அவமதிக்கவும் இல்லை. அவர்கள்தான் என்னை அவமதிக்கிறார்கள்
நான் சொல்வது இவையே
1. இவர்கள் அடைந்த நிதி, சென்ற கருத்தரங்குகள், இவர்களை முன்வைக்கும் தன்னார்வக்குழுக்கள் மற்றும் கலாச்சார அமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடுகளுடன் இணைத்து இவர்களின் கருத்துக்களை புரிந்துகொள்ளவெண்டும்
2 இவர்களை தனிப்பட்ட சிந்தனையாளர் அல்லது எழுத்தாளர்களாக கருதக்கூடாது. இவர்கள் ஒரு கருத்தியல் வலையின் கண்ணிகளாக கருதவேண்டும்
3 கைக்காசைப்போட்டு சிற்றிதழும் கருத்தரங்குகளும் சந்திப்புகளும் நடத்துபவர்கள், அலுவலகத்தில் முதுகொடிய வேலைசெய்தபின் எஞ்சிய நேரத்தில் இலக்கியம் ஆக்குபவர்கள், வறுமையில் நிற்பவர்கள், தன் உழைப்பில் வாழ்ந்து இலக்கியம் ஆக்குபவர்களால் கட்டி எழுப்பப்பட்டது தமிழ் சிற்றிதழ்சார் அறிவுலகம். அவர்களுக்கு எந்த நிதியும் வந்துசேர்வதில்லை.
இந்த நிதிப்பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாக சிற்றிதழ் சார்ந்த அறிவியக்கத்தை கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து விடுபட இந்த தெளிவு நமக்குத்தேவை. அவ்வளவுதான்.
*
போர்டு பவுண்டேஷனும் சி ஐ ஏவும் ஜேம்ஸ் பெட்ராஸ்
சிஐஏவும் ஃபோர்ட் பவுண்டேஷனும் மாற்று ஊடகங்களில் – இன்னொரு கட்டுரை
[ இக்கட்டுரையை கூகிள் மொழியாக்கத்தில் தமிழிலும் வாசிக்கலாம்]