மனிதராகி வந்த பரம்பொருள் 3

ஏப்ரல் ஒன்றாம் தேதி எனக்கு ஏற்பட்ட மகத்தான மனத்தடுமாற்றத்தைப்பற்றி நிறையபேர் கேட்டார்கள். என்னுடைய நோக்கம் உண்மையில் பகடி அல்ல. ஏப்ரல் ஒன்று ஆனதனால் அதைப் பயன்படுத்திக்கொண்டே, அவ்வளவுதான். இந்தக்கட்டுரை ஒரு பரிசோதனை மட்டுமே.

இந்த கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளின் கணிசமானவை — கிட்டத்த கால்பங்கு– ஏதோ ஒருவகையில் அந்த அற்புதங்களை நம்பியோ அல்லது நிராகரிக்க முடியாமலோ எழுதப்பட்டவை. அதுதான் என்னுடைய கேள்விக்கான இடம். எப்படி அற்புதங்களுக்கான இந்த வேட்கை நம்முடைய மனத்தில் எழுகிறது?

என்னுடைய இந்த இணையத்தளத்தில் பௌதிக விதிகள் என்பவை மனிதன் அன்ற சின்னஞ்சிறு உயிரினத்தால் மீறக்கூடிய அளவுக்கு எளிமையாக இருக்க நியாயமில்லை என்றுஎ ழுதியிருக்கிறேன். அவை மகத்தானவை, ஆகவே அவையே அற்புதங்கள். அவற்றை ஒருவர் மீற முடிய்ம் என்றால் அவற்றை உருவாக்கிய இறைவன் என்ற கருத்தே  அடிபட்டு போகிறது — அதாவது அற்புதம் என்ற பேச்சே இறைமறுப்பாகும். அதுவும் சமீபமாக அற்புதங்களுக்கு எதிராக விரிவாக எழுதியிருக்கிறேன். இருந்தும் எப்படி என் இணையதள வாசகர்களிலேயே ஒரு சாராருக்கு அந்த நம்பிக்கை தேவையாகிறது?

சின்னஞ்சிறு வயதில் குழந்தை எதிர்கொள்ளும் முதல் பிரம்மாண்டமே பௌதிக விதிதான். ஒரே சமயம் இரு நாற்காலிகளில் இருக்க முடியாதென்ற விதி. ஏன் என்னால் அங்கே போக முடியவில்லை, ஏன் சின்ன பாத்திரத்தில் பெரிய பாத்திரத்தை நுழைக்க முடியவில்லை என்று  குழந்தை பீதியடைகிறது. குழம்புகிறது. விழுந்து அடிபட்டு ரத்தம் சிந்தி பௌதிக விதிகளை மீறமுடியாதென்று அது புரிந்துகொள்கிறது.

ஆனால் அதற்கான விழைவு மனதுக்குள் எங்கோ இருந்துகொண்டே இருக்கிறது. எல்லா குழந்தைக் கதைகளும் பௌதிக விதிகள் மீறப்படுவதைப்பற்றிப் பேசுபவையே. எல்லா கனவுகளிலும் பௌதிக விதிகள் மீறப்படுகின்றன. எப்போதுமே நம் மனம் மாயாஜாலங்களுக்காக ஏங்குகிறது. அந்த ஆழ்மன விழைவை நாம் கண்காணிப்பதில்லை. நம்மையறியாமலே அதற்கு ஆட்படுகிறோம்.
நாம் அறியும் ஒரு யதார்த்தம் உண்மை. மனித மனம் அந்த பௌதிக விதிகளுக்கு கட்டுபப்ட்டதல்ல. ஆகவே மனதின் அபாரமான ஆற்றலால் ஏதேனும் ஒரு வழியில் பௌதிக விதிகளை வெல்ல முடியுமா என நாம் எண்ணுகிறோம். அத்துடன் அதில் நம் அகங்காரமும் கலந்துகொள்கிறது. இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் நம் இடம் மிகமிகச் சிறிதே, நாம்  அற்பமான துளிகளே என நாம் உணர்வதில்லை.ந் அம்மை பிரபஞ்ச நாயகமாக கற்பனைசெய்துகொள்கையில் அந்த அற்புதங்களை நிகழ்த்துவது சாத்தியமே என நினைக்கிறோம்.

அற்புதம் ஒன்று உள்ளது. இந்தகக்தை நடராஜகுருவின் உரையில் வருகிறது. நதியில் ஒரு சருகு ஒரே திசைக்கே செல்ல முடியும். அந்நதியில் போகும் படகு மூன்று திசைகளை தேர்வுசெய்ய முடியும். அந்த நதியில் உள்ள மீனோ நான்கு திசையிலும் செல்ல முடியும். அந்த நதிக்குமேல் பறக்கும் பறவை ஐந்து திசைக்கும் செல்லும்.

ஆனால் அதனருகே அமர்ந்து யோகம் செய்யும் யோகியின் மனம் எல்லா திசைகளுக்கும் செல்லும். அதுவே உண்மையான அற்புதம். அங்குமட்டுமே மானுடன் பௌதிக விதிகளை மீறிச்செல்கிறான்

முந்தைய கட்டுரைமலை ஆசியா – 7
அடுத்த கட்டுரைகர்மயோகம் : (8 – 13)