14, 15. அன்னத்திலிருந்து
உயிர்கள் உருவாகின்றன.
மழையிலிருந்து
அன்னம் உருவாகிறது
வேள்வியால்
மழை உருவாகிறது
வேள்வியோ
செயல்களால் உருவாகிறது
செயல்
பிரம்மாவிலிருந்து உருவாகிறது
பிரம்மா
எழுத்திலிருந்து உருவானவர்
என்று அறிக.
ஆகவே எங்கும் நிறை பரம்பொருள்
என்றும்
வேள்வியில் உறைகிறது.
ஒரு மாபெரும் சுழல்
கீதையின் இந்த வரிகளை வேதங்களில் வேள்வி எந்த குறியீட்டுப் பொருளில் கூறப்பட்டிருக்கிறதோ அந்த பொருளில் விரிவாக்கம் செய்வோமென்றால் கீதையின் செயலாற்றுதல் குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்கான மிகச் சிறந்த உதாரணமாகவே இதைக் கொள்ள முடியும். வேள்வியாக ஆற்றப்படும் செயல்களால் வளரும் தேவர்கள் வேண்டிய நலன்களை அளிப்பார்கள். அந்த நலன்கள் அனைத்தும் மீண்டும் அந்த வேள்விக்கே அர்ப்பணம் செய்யத்தக்கவை. மாறாக அதை தனக்கென வைத்துக் கொள்ளுதல் திருட்டாகும் என்கிறது கீதை.
பின் அதையே மீண்டும் குறியீட்டு மொழியில் உறுதி செய்கிறது. ஒரு மாபெரும் செயலின் விளைவாக தன் வாழ்வை அமைத்துக் கொள்பவன், அதன் விளைவை ‘உண்டு’ வாழ்பவன், விடுதலையடைகிறான். தனக்கென வாழ்க்கையை அமைத்துக் கொள்பவன், தனக்கென ‘சமைத்துக்’ கொள்பவன் பாவம் செய்கிறான். இந்தக் குறியீட்டை வாசகர்களே எளிதில் விரிவாக்கம் செய்து கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கை முழுக்க முழுக்க உங்களுக்காகவே ஆனதென்றால் நீங்கள் எப்படியோ பாவத்தைச் சேர்த்துக்கொள்கிறீர்கள் என்றே இவ்வரிகளைச் சுருக்கலாம்.
இந்தத் தருணத்தில் அர்ஜூனனுக்கு கீதை வேள்வி என்று கூட்டுவது குருஷேத்ர போரையே. நாம் ஒவ்வொருவருக்கும் நமக்கான வேள்விகள் உள்ளன. அதற்கு நம்மை அர்ப்பணித்து அதன் ‘வேள்விமீதத்தை’ உண்டு வாழ்தலே உன்னத வாழ்க்கை. அதன் மூலம் நாம் அடையும் வேள்விப்பயனையும் அந்த வேள்விக்கே அர்ப்பணித்து வாழும் வாழ்க்கையை கிருஷ்ணர் ‘கர்மயோகம்’ என்கிறார். அதுவே கர்மச்சூழலில் இருந்து மனிதர்களை விடுவிக்கக்கூடிய கர்மம். பிற அனைத்துமே கர்மசக்கரத்தில் மனிதர்களை சிக்கிவிடச் செய்வதேயாகும் என்பதே கீதையின் பாடம்.
சமகாலத்தில் கீதையின் இந்த அறிவுறுத்தலையே தன் வாழ்வாக நிகழ்த்திக்காட்டி சென்ற கர்மயோகி காந்தி. அவரது வேள்வி இந்த தேசத்தின் விடுதலை. வேள்வியே அவரது அன்றாட வாழ்வானது. அதன் வேள்வி மீதமே அவரது உணவானது. அவர் அடைந்த அனைத்தும், அவரேகூட, அதில் அர்ப்பணமாக ஆயிற்று. மாபெரும் கர்மயோகிகளை நமக்கு சுற்றும், கொஞ்சம் கவனித்துப் பார்க்க முடிந்தால் ஒவ்வொரு நாளும் காணமுடியும் என்பதே என்னுடைய அனுபவமாகும்.
கருத்திலிருந்து பொருளுக்கும் திரும்பவும்
தர்மத்தின் இயக்கமுறையின் நுட்பமான சித்திரம் ஒன்று இந்த அழகிய பாடலில் உள்ளது. பிரபஞ்ச நிகழ்வை கூர்ந்து நோக்கினால் இந்த வினா எழும். ‘எப்படி ஒரு கருத்து பொருள் வயமான வெளிப்பாடாக ஆகிறது?’ இந்தப் பொருள்வயமான பிரபஞ்சத்தில் ஒரு கருத்து உள்ளுறைந்திருப்பதை நாம் காண்கிறோம். பொருண்மை விதிகளாகவும் விதிகளுக்குள் உள்ள ஒத்திசைவாகவும் உள்ளது அந்தக் கருத்து. அவ்வாறு இந்த பிரபஞ்சத்தை குறுக்கியபடியே சென்றால் இறுதியில் அதை ஒரு கருத்துநிலையாக சுருக்க முடியுமென்றால் அதை பிரம்மம் என்று கூறலாம். பெளத்த சொற்களில் தம்மம் அல்லது தர்மம் எனலாம். நவீன மொழியில் பிரபஞ்ச மனம் (Cosmic Mind) எனலாம்.
அந்த பிரபஞ்ச மனம் அல்லது பிரம்மம் அல்லது தர்மம் எப்படி பொருள்வயமாக நாம் காணும் இந்த பெரும் விரிவாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது? அதற்கான விளக்கமே அந்தப்பாடலில் உள்ளது. அதை எளியதோர் கவித்துவ உருவகமாக கூறிச்செல்கிறது கீதை. இந்த கவியுருவகத்தை அது வேதங்களில் இருந்து பெற்றுக்கொண்டு தனக்குரிய தத்துவார்த்தமான கோணத்தில் விரிவாக்கம் செய்கிறது.
உயிர்கள்தான் நாம் மிக அருகே அறியும் பொருள்வயப் பிரபஞ்சம். அவைதான் பொருள்வயப் பிரபஞ்சத்திற்குள் கருத்து உறைவதை நமக்கு காட்டியபடியே இருப்பவை. கீதையில் இந்தச் செய்யுள் உயிர்களுக்கும் தூய பரும்பொருட்களுக்குமான உறவை முதலில் சுட்டிக் காட்டுகிறது. உயிர்கள் மழையால் உருவாக்கப்படுகின்றன. மழையைச் சார்ந்திருக்கின்றன. மழையே உணவை உருவாக்குகிறது. உணவே உயிர்களை உருவாக்குகிறது.
ஆனால் அடுத்து அந்த மழை வேள்வித்தன்மை கொண்ட செயல்களின் மூலம் உருவாகிறது என்கிறது கீதை. நவீன தர்க்க முறையின்படிப் பார்த்தோமென்றால் இங்கே கீதை மிகப்பெரிய தர்க்கப்பிழை ஒன்றை செய்கிறது. பொருள்முதல்வாதம் சார்ந்த, புறவயமான தர்க்கம் வழியாக நகர்ந்து வந்து கோண்டிருந்த அது சட்டென்று கருத்து முதல்வாத தர்க்கத்திற்கு தாவுகிறது. மழை என்ற புறவய நிகழ்வு வேள்வித்தன்மை கொண்ட செயல்களுக்காக எப்படி நிகழ முடியும்?
உதாரணமாக மழை எப்படிப் பெய்கிறது என்ற வினாவுக்கு நிஸர்கதத்த மகராஜ் இவ்வாறு பதில் கூறியதாக பதிவாகி உள்ளது. கடல் சூடாகி மேகமாகி குளிர்வதனால் மழை பெய்கிறது எனலாம். பூமியின் மேற்பரப்பில் உருவாகும் தட்ப வெப்ப வேறுபாடுகளினால் மழை பெய்கிறது எனலாம். ஆனால் அதைவிட எளிமையாக மழை பெய்தால்தான் உயிர்கள் வாழ முடியும், அதனால்தான் பெய்கிறது எனலாம்.
கடைசியாகக் கூறப்பட்ட பதிலுக்கு தர்க்கம் இல்லை. ஆனால் கவித்துவம் மூலம் அது இன்னமும் உண்மையை நெருங்குகிறது. அதைப் போன்றதே கீதையின் பதிலும். ஏன் மழை பெய்கிறது என்றால் இந்தப் பூமியில் மானுட வாழ்வு பெரும் செயல்கள் மூலம் நாம் சிறக்கும்போதுதான். மேலும் அது சிறக்க வேண்டும் என்றுதான்! குறளிலும் இதே தரிசனத்தை நாம் வான் சிறப்பு பகுதியில் காணலாம்.
பெருஞ்செயல்கள் என்பவை இப்புவியில் நிகழ்ந்துகொண்டே இருக்கும் வாழ்வெனும் சுழற்சியின் பகுதிகள் மட்டுமே. அந்த வாழ்வு படைப்பு சக்தியால் உருவாக்கப்பட்டது. படைப்பு சக்தி என்பது ஆதியில் இருந்த படைப்பு என்றும் கருத்தில் இருந்து உருவாயிற்று. பிரம்மா எழுத்தில் இருந்து உருவானவர் என்ற வரி அதையே குறிக்கிறது.
அதாவது இங்கு மீண்டும் கீதை கவித்துவம் மூலம் அந்த அடிப்படை வினாவை எதிர்கொள்கிறது. நாம் காண்பது பிரம்மாண்டமான படைப்பாற்றலை. பிரபஞ்சங்களை, கோள்களை, புவியை, வாழ்வை உருவாக்கிய அந்த ஆற்றலானது ஆற்றல் என்ற கருத்தின், ஆற்றலுக்கான விருப்பின் வெளிப்பாடு மட்டுமே. அந்த மையப் பெரும் இச்சையே பிரம்மம். அந்த பிரம்மத்தின் பருவடிவ வெளிப்பாடே இங்குள்ள செயல்கள், பெருவெளி. அப்பெருவெளியில் நாம் ஆற்றும் பெருஞ்செயல் என்பது பிரம்மத்தின் வெளிப்பாடே. ஆகவே அதுவும் பிரம்மமே என்கிறது கீதை. வேதாந்தத்தின் உச்சநிலைப் பதில் இதுவே.
சாராம்சமான கருத்துநிலையான பிரம்மம் எப்படி பருவெளியாயிற்று? தன் இச்செயலால் தானே அவ்விதம் தோன்றலாயிற்று. அப்படியானால் இப்பருவெளி பிரம்மம் அல்லவா? ஆம். இப்பெருவெளியின் அனைத்தும் பிரம்மமே. அனைத்துச் செயலும் பிரம்ம வெளிப்பாடே. அதையே இங்கு பெருஞ்செயலுக்கு விரித்தெடுக்கிறது கீதை.
நித்ய சைதன்யயதி இந்த அழகிய செய்யுளுக்கு எழுதிய விவரணையில் இப்படி கூறுகிறார்.’ஒன்று மட்டும் கூறலாம். அறியப்படக்கூடியதன் ஓர் எல்லயைத் தாண்டும் போது அறிய முடியாமையில் அது வேரூன்றியிருப்பதை நாம் காண்கிறோம். நம் வாழ்வின் ஒவ்வொரு அன்றாடச் செயல்பாடும் அந்த எல்லைக்கு அப்பால் நம்மால் அறியவே முடியாத ரகசியத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது. மழை என்ற எளிய பெளதிக யதார்த்தம் அதன் உச்சத்தில் பிரபஞ்சத்தை நிலைநாட்டும் மர்மத்தில் இருந்து தொடங்குகிறது’
மிக அழகிய இச்செய்யுளை ஒரு கவிதை போல தொடர்ந்த மறுவாசிப்புகளுக்கு உள்ளாக்கி பற்பல கோணங்களில் பொருள் கொள்ள முடியும். ஆனால் அதைவிட முக்கியமாக இக்கவிதையை நம் நுண்ணுர்வால், நம் கனவால், தியானிக்கும் போது இது நம் தர்க்க மனத்தை பிரமிக்கச் செய்வதை நாம் காண முடியும். அப்படிப்பட்ட பிரமிப்பின் பரவசம் வழியாக நாம் அடையும் அனுபவமே இவ்வழிகளை மேலும் திறக்கமுடியும். இக்கவிதை தர்க்கத்திற்கு ஒரு பெரிய புதிர். ஆகவே ஒரு மாபெரும் தியான மந்திரம்.
பிரணவவாதம்.
கீதையின் இச்செய்யுள் ஒரு வேதமந்திரம் போல உள்ளது. அதன் அழகியலும் சரி கருத்தும் சரி வேதங்களை ஒட்டி உள்ளன. அதன் அத்தனை கலைச் சொற்களையும் வேதங்களில் ஞானகாண்டப் பகுதியை வைத்துப் பொருள் கொள்வதே முறையாகும். வேதங்களில் அன்னம் என்பது விரிவான பொருளில் கையாளப்பட்ட ஒரு கலைச் சொல். முதல் தளத்தில் அது ‘உணவு’தான். ஆனால் பூமியில் உள்ள எல்லாமே எதற்கோ உணவுதானே?
ஆகவே அந்த கருதுகோள் விரிந்து பூமியில் உள்ள அத்தனை உயிர்ப்பொருளையும் சுட்டுவதாக கையாளப்பட்டது. அன்னம் அன்னத்தில் இருந்து பிறக்கிறது. அன்னத்தை உண்டு வளர்கிறது. அன்னத்திற்கு உணவாகிறது. இதுதான் உலக லீலை என்பது, இல்லையா? இந்தத் தரிசனம் தத்துவார்த்தமாக விரியும் பொழுது பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பருப்பொருளும் அன்னம் என்ற சொல்லால் சுட்டப்பட்டன. பிரபஞ்சத்தில் உள்ள அசத் என்ற இருப்புதான் அன்னம். அதாவது பிரபஞ்சத்தை அதில் உள்ள பருப்பொருள் அப்பருப்பொருளை இயக்கும் கருத்து என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். பருப்பொருளை அன்னம் என்று கூறலாம். கருப்பொருளை சத் என்று கூறியது வேததரிசனம். அது என்ன என்ற வினாவை பிரம்மாண்டமாக அது எதிர்கொண்டது.
இந்தப் பாடல் நேரடியாக கண்கூடான உலகநிகழ்வு ஒன்றை கூறுகிறது. குறியீட்டு ரீதியாக இன்னொரு பெரிய கருத்து ஒன்றை கூறுகிறது. இவ்வுலகமெங்கும் நாமறியும் பருப்பொருளும் கருப்பொருளும் எப்படி ஒன்றோடொன்று பிரித்தறிய முடியாமல் கலந்துள்ளன என்பதன் சித்திரமே இப்பாடல். அன்னத்தின் இருந்து உயிர்கள் உருவாகின்றன. அதாவது பருவில் இருந்து கரு உருவாகிறது. ஆனால் அன்னம் மழையில் இருந்தும் மழை வேள்வியில் இருந்தும் வேள்வி செயலுக்கத்தில் இருந்தும் உருவாகிறது.
அதாவது பருப்பொருள் கருப்பொருளின் விளைவாக பிறக்கிறது! செயலை ஆதிப்படைப்பு சக்தியாகிய பிரம்மாவின் ஆக்கம் என்று கூறும் கீதை அந்தப் படைப்பு சக்தியே எழுத்தில் இருந்து உருவானது என்று கூறுகிறது. அதாவது சாராம்சமானது கருத்து. அந்தக் கருத்தின் புறவெளிப்பாடே பருவெளி, அல்லது அன்னம். அந்தக் கருத்தின் விளைவாகவும் அக்கருத்தை வளர்க்கும் வழியுமாக அமைவது வேள்வி. ஆகவே இங்கு அனைத்தும் தானாகி விரிந்து பிரபஞ்சமாக காட்சியளிக்கும் பரும்பொருளேகூட வேள்வியில் உறையும் ஒன்றுதான்.
கீதையின் பொதுவான தர்க்க கட்டுமானத்திற்கு சற்று வெளியே நிற்கும் ஒரு பாடல் இது. இந்தப்பாடலை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் வேதங்களில் உதயமாகி இந்து ஞானமரபின் ஒரு மையமான தரிசனமாக நீடிக்கும் பிரணவவாதத்திற்குத்தான் செல்ல வேண்டும். ஏதோ ஒருவகையில் பிரணவவாதம் உலகின் ஞானமரபுகளில் எல்லாம் இருந்து கொண்டிருக்கும் தரிசனமே. ஆதியில் வார்த்தை இருந்தது என்ற பைபிளின் முதல் சொற்றொடர் அதையே காட்டுகிறது. பிரணவவாதம் ‘ஒலிமையவாதம்’ என்று மொழிபெயர்க்கப்படலாம். அதிலிருந்தே ‘எழுத்து மையவாதம்’ உருவாகியது.
பிரணவவாதம் என்பதை விரிவாக விளக்குவதற்கான தருணமல்ல இது. இந்து ஞானமரபின் மிக விரிவான ஒரு தத்துவக் கோட்பாடு அது. அதன் ஒரு சுருக்கமான சித்திரத்தை இங்கே அளிக்கலாம். புராதனமான வேத தரிசனம் பூர்வ மீமாம்சை. இது ஆறுதரிசனங்களில் ஒன்று வேதங்களை முழுமுதல் ஞானம் என்று வகுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் மேலே சிந்திக்க முற்படுவதுதான் பூர்வ மீமாசம்த்தின் இயல்பாகும். வேதங்களை மனிதனால் உண்டுப்பண்ணப்படாதவை (அபொருஷேயம்) என்று இது வகுத்துக் கொள்கிறது. மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு ஞான வெளியில் வேதங்கள் என்றும் இருந்தன என்கிறது. அவற்றை ரிஷிகள் தங்கள் உள்ளுணர்வால் பெற்று ஒலி வடிவம் அளித்தார்கள் என்கிறது.
அப்படியானால் சொல் வேறு, பொருள் வேறு என்றாகிறது. இதை விளக்கவே பூர்வ மீமாம்சகர்கள் ‘நித்ய சப்த சித்தாந்தம்’ என்ற ஒன்றை உருவகித்தார்கள். அதாவது சொல்லுக்கும் பொருளுக்குமான உறவு தற்காலிகமானது. [கிட்டத்தட்ட இதையே இன்றைய மொழியியல் குறிப்பிடுகிறது. மொழியை லாங், பரோல் என்று இரண்டாக அது பிரிக்கிறது. லாங் என்பது அகமொழி. சமூகத்தால் ஏற்கப்பட்டு அச்சமூகத்தின் அகத்தில் இருப்பது. பரோல் என்பது ஒலியாக வெளிப்படுவது. இரண்டுக்கும் இடையேயான உறவு என்பது இடத்திற்கும் தருணத்திற்கும் ஏற்ப உருவம் மாறுவது என்கிறது மொழியியல் இன்று)
மீமாம்சகர்கள் சொல் பிற்பாடு வந்தது என்கிறார்கள். அர்த்தம் என்றும் இருந்து கொண்டிருப்பது. புரிந்து கொள்வதற்காக இப்படிக் கூறலாம். அன்பு என்பது எப்போதும் இருப்பது. அன்பு என்ற சொல் தமிழ் மொழி தோன்றிய பிறகு உருவானது. அன்பு என்பது அச்சொல்லுக்கு அப்பால் இருந்து கொண்டிருப்பதனால்தான் அன்பு என்று சொன்னதும் அதன் மூலம் சுட்டிக்காட்டப்படுவது என்ன என்று புரிந்து கொள்கிறோம் இல்லையா?
இந்த தரிசனத்தின்படி பிரபஞ்சத்தில் நாம் அறியும் ஒவ்வொன்றும் கருத்து வடிவில் நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கிறது. நாம் அவற்றுக்குப் பெயர்தான் போட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த நித்ய சப்த கோட்பாடு (தமிழில் அழியாமொழி கோட்பாடு) அதன் அடுத்த வடிவில் பிரணவவாதத்தை எட்டுகிறது. அதாவது இங்கே இந்த மேஜை உள்ளது. இந்தப் பருவடிவம் இப்போது ஓர் ஆசாரியால் உருவாக்கப்பட்டது. கருத்து வடிவில் மேஜை முன்னரே இருந்து கொண்டிருக்கிறது. அதைப்போலத்தான் இப்பிரபஞ்சமும். கருத்துவடிவில் இப்பிரபஞ்சம் எப்போதுமே அழியாமல் இருந்து கொண்டிருக்கிறது. அந்தக் கருத்தின் பருப்பொருள் வடிவ சுயவெளிப்பாட்டையே நாம் பிரபஞ்சம் என்கிறோம்.
இந்த அகன்ற பருப்பொருள் வெளியை கருத்து வடிவமாக எடுத்துக் கொண்டால் அது ஒரு மாபெரும் ஒலிமயமான வெளியாக இருக்கும் அதாவது எவராலும் கேட்கப்படாத ஒலியாலானதாக எவரும் உணராத மொழிமயமானதாக, இல்லையா? அந்த மொழிவெளியை அல்லது ஒலி வெளியை இவையனைத்திற்கும் மூலப்பரப்பாக கொள்ள வேண்டும். அந்த வெளியின் வேராக, தொடக்கப்புள்ளியாக உள்ள ஒரு முழுமுதல் ஒலி எதுவாக இருக்க முடியும்? அதுவே ஓம். அல்லது பிரணவம். மெளனம் ஒலியாக உருவம் கொள்ளும்போது ஏற்படும் முதல் ஒலி ஓங்காரமே. அதுவே ஒலிகளுக்கெல்லாம் அன்னை. ஒலிக்காட்டுக்கு மூலவிதை. அதுவே தொடக்கம். அதில் இருந்தே அனைத்தும் உருவாயின. அதுவே படைப்பு சக்தியாகும்.
சிக்கலான இந்தக் கருத்து எளிமையான புராணங்களில் கூறப்பட்டு நம்மை வந்தடைந்திருக்கும். பிரம்மாவின் மனத்தில் ஓம் என்ற ஒலிதான் முதலில் பிறக்கிறது. தியானத்தின் முடிவற்ற மெளனத்தில் இருந்து அவரது மனம் அறியும் முதல் ஒலி அது. அந்த ஓங்காரத்தில் இருந்தே மூவுலகங்களிலும் பிறந்து வருகின்றன என்று நாம் புராணக் கதைகளில் கேட்டிருப்போம். ஒலி எப்படி பருப்பொருளாக ஆகிறது என்பதற்கான விளக்கமே பிரணவவாதம் என்று கூறலாம்.
கீதையின் இந்தப் பாடல் பெரும்பாலும் பூர்வ மீமாசத்தில் தரிசனத்தை ஒட்டி அமைந்துள்ளது என்பதைக் காணலாம். இது கீதையின் தனித்தன்மைகளில் ஒன்று. புகழ்பெற்ற மார்க்கஸிய ஆய்வாளரான டி.டி. கோஸாம்பி முதலியோர் இதை வைத்து கீதையை ‘மகத்தான இலக்கியத்திருட்டு’ என்கிறார்கள். காரணம் கீதையில் சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமாம்சம் ஆகிய தரிசனங்களின் கருத்துக்கள் பல இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன. சென்ற சாங்கிய யோகத்தில் சாங்கிய சித்தாந்தத்தின் மூலப்பிரகிருதி என்ற கோட்பாடு எடுத்தாளப்பட்டிருப்பதை வாசித்தோம். இங்கே அழியா மொழி மற்றும் பிரணவக் கோட்பாடுகள் பூர்வ மீமாம்சையில் இருந்து எடுத்தாளப்படுகின்றன.
கீதை இந்த கோட்பாடுகளை ‘அப்படியே’ எடுத்தாள்வது இல்லை என்பதை வாசகர் கவனிக்க வேண்டும். கீதை இவற்றை கொஞ்சம் ‘மழுங்கடித்து’ விடுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கு ஒன்று எதிரான தரிசனங்கள். ஒன்றை ஒன்று மறுத்து வாதாடுபவை. கீதை பேசும் கோட்பாடு வேதாந்தம், அது உத்தர மீமாம்சம் என்று கூறப்படுகிறது. பிற ஐந்து தரிசனங்களையும் தன்னுள் இணைப்பதற்காக கீதை இந்த மழுங்கடித்தலை நிகழ்த்துகிறது. நித்ய சைத்ன்யயதி இதை ‘வைரங்களை நகையில் பதிப்பதற்காக வெட்டுவது போன்ற செயல்’ என்று கூறுகிறார்.
கீதை இந்த மழுங்கடித்தலை எப்படிச் செய்கிறது? இந்தச் செய்யுளில் செய்வது போலத்தான். கீதை மீமாம்சத்தின் கோட்பாட்டை தன் விவாதத்தில் ஒரு உதாரணமாக ஆக்கிவிடுகிறது. அதாவது கவித்துவமாக அதைப் பயன்படுத்துகிறது. நேரடியான கோட்பாடுப் பொருள் அளிப்பதை தவிர்த்துவிடுகிறது. இந்தச் செய்யுளில் கூட அனைத்தும் மொழியில் இருந்து எழுத்தில் இருந்து உதயமானவை என்று கூறவரும் கீதை அதை ஒரு கவித்துவக் கூற்றாக கூறி முன்னகர்கிறது. ஒரு கோட்பாடாக அல்ல.
இன்னொரு விஷயமும் உண்டு. கீதை உருவான காலகட்டம் உபநிடதங்களின் தொடக்க காலம். அதன் இன்றைய வடிவு மட்டுமே பிற்காலத்தையது . அதாவது கீதை உயிர்வாழ்ந்த ஞான குருவாகிய கிருஷ்ணனே கூறியது . அவர்காலத்தில் இந்த தரிசனங்கள் பிற்காலத்தில் அவை அடைந்த வளர்ச்சியை அடையாமல் இருந்திருக்கலாம். அவை மிக ஆரம்பகட்டத்தில் இருந்திருக்கலாம். அந்த வடிவில் கிருஷ்ணன் தன்னுடைய நூலில் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆறு தரிசனங்களையும் ஒரே தரிசனமாகத் தொகுத்துப் பார்க்கும் மரபு பிறகு நெடுங்காலம் நம் மரபில் இருந்துள்ளது.
இந்தப் பின்னணியில் இப்பாடலைப் பார்ப்போம். அதை இப்படி சுருக்கிக்கொள்ளலாம். முழுமுதல் சொல் அல்லது எழுத்தான பிரணவத்தில் இருந்து உருவானவர் பிரம்மா. பிரம்மாவில் இருந்தே பிரபஞ்சத்தில் பருவடிவமும் அதன் முடிவிலா இயக்கமும் ஆரம்பமாகிறது. அந்தச் செயல்களில் மிகவும் மகத்தானது வேள்வி. வேள்வியில் இருந்து மழை உருவாகிறது. மழையில் இருந்து உணவு. உணவில் இருந்து உயிர்கள் உருவாகின்றன. உயிர்குலம் பெருகுகிறது. அவ்வாறு உயிர்க்குலம் பெருக அவசியமான முழுமுதல் தேவை பிரணவம். அந்தப் பிரணவத்தைப் பெருக்கும் தன்மை வேள்விக்கு உண்டு. ஆகவே இந்தப் பிரபஞ்சப் பேரியக்கமே வேள்விக்குக் கட்டுப்பட்டது. பிரபஞ்ச சாரமான பிரம்மமும் கூட வேள்விக்குக் கட்டுப்பட்டதே.
இந்தப் பாடலில் இருவகை வேள்விகள் வருகின்றன. மழையை உருவாக்கும் வேள்வி ஒன்று. இது முதலில் கூறப்படுகிறது. குறியீடாக இது முன்வைக்கப்படுகிறது. பிரணவத்தை உருவாக்கும் வேள்வி இன்னொன்று.. ஏற்கனவே இந்த பகுதியில் கூறிவந்ததுடன் பெரிதும் ஒத்துப் போவது இது என்பதைக் காணலாம். அதாவது முதலில் கூறியது வேத வேள்வி. வேள்வி என்ற சடங்கு. இரண்டாவதாகக் கூறப்பட்டது மாபெரும் செயல். கிருஷ்ணன் ஒன்பதாவது பாடலில் கூறும் செயல் எனும் சுழலை அறுக்கும் சக்தி கொண்ட செயல் அது.
இவ்வாறாக இப்பாடலின் பொருள் பத்தாம் பாடலுடன் இணைவதை பார்க்கலாம். ‘மாபெரும் செயல்கள் மூலம் மாபெரும் கருத்துக்கள் உருவாகின்றன. மாபெரும் கருத்துக்கள் மூலம் மானுடம் தழைக்கிறது’ என்று இச்செய்யுள்ளுக்கு சுருக்கமான பொருள் எடுக்கலாம். பிரம்மம் உறைவது வேள்வியென ஆற்றப்படும், பெருஞ்செயலில் பற்றிலாத செயலில். அதில் இருந்துதான் பிரபஞ்சத்தின் ஆதிமூலமாக உள்ள முதல்எழுத்து அல்லது பிரணவம் உருவாகிறது. பிரணவத்தைப் பெருக்குவதே வேள்வியெனச் செய்யப்படும் பெருஞ்செயலின் நோக்கம்
[மேலும்]