‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 5

பகுதி 2 : ஆழ்கடல் பாவை – 2

சூழ்ந்து அலையடித்துக்கொண்டிருந்த கடலாழத்தில் தருமன் அமர்ந்திருந்தான். அலைகளின் ஒளி கண்களுக்குள் புகுந்து உடலெங்கும் நிறைந்து அவனை கரைத்து வைத்திருந்தது. நீர்ப்பாசியென அவன் உடல் நீரொளியுடன் சேர்ந்து தழைந்தாடியது.

அப்பால் கங்கைக்குமேல் வானம் செந்நிறம் கொண்டது. நீரலைகளின் நீலம் செறிந்து பசுங்கருமை நோக்கிச் சென்றது. அலைகளோய்ந்து கங்கை பல்லாயிரம் கால்தடங்கள் கொண்ட பாலைநிலப்பரப்பு போல தெரிந்தது. பெருவிரிவுக் காட்சிகள் ஏன் சொல்லின்மையை உருவாக்குகின்றன? உள்ளம் விரிகையில் ஏன் இருப்பு சிறுத்து இல்லாமலாகிறது?

முரசொலியைக் கேட்டு கலைந்து தருமன் எழுந்து நின்றான். தன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்ததை உணர்ந்தபின் கண்களை மூடி அசையாமல் நின்றான். மாளிகை அப்படியே அதலத்திற்கு இறங்கிச்செல்வது போலிருந்தது. நிலைதடுமாறி விழுந்துவிடுவோம் என உணர்ந்ததும் முழுஅகத்தாலும் தன்னை நிறுத்திக்கொண்டான். கண்களைத் திறந்தபோது உடல் மென்வியர்வையில் மூடியிருந்தது.

உப்பரிகையை அடைந்து கைப்பிடியை பற்றியபடி கீழே இருந்த படித்துறையை நோக்கினான். மாளிகைக்காவலர்கள் கைகளில் படைக்கலங்களுடன் படித்துறை நோக்கி சென்றனர். மூன்று அணிச்சேடியர் கைகளில் மங்கலத்தாலங்களுடன் மாளிகையிலிருந்து கிளம்பி பட்டுநூல் பின்னலிட்ட ஆடைநுனிகளின் அலைகளுக்கு அடியில் செம்பஞ்சுக்குழம்பு பூசியகால்கள் செங்கல் பரப்பப்பட்ட பாதையில் பதிந்து பதிந்து எழ, இடையசைய, தோள் ஒசிய நடந்து சென்றனர். சிசிரன் அவர்களுக்குப்பின்னால் திரும்பி நோக்கி கைகளை வீசி எவருக்கோ ஆணைகளிட்டபடி சென்றான்.

கங்கையின் காற்றில் உடல் குளிரத்தொடங்கியது. அறியாமல் கையால் தன் குழல்கற்றைகளைத் தொட்ட தருமன் அவை சுருள்களாகக் கிடப்பதைக் கண்டு புன்னகைத்துக்கொண்டான். அங்கே அக்கோலத்தில் தன்னைப்பார்க்கையில் அவள் என்ன நினைப்பாள் என்ற எண்ணம் வந்தது. கண்களுக்குள் ஊசிமுனையால் தொட்டு எடுத்தது போல் புன்னகை வந்து மறையும். அவளுக்குள் என்ன நிகழ்கிறதென எவரும் அறிய முடியாது. அவன் மீண்டும் தன் உடலெங்கும் நெஞ்சின் ஓசை எதிரொலிப்பதை உணர்ந்தான்.

கொம்பொலி மிக அண்மையில் எழுந்தது. மரக்கூட்டங்களுக்கு அப்பால் பாஞ்சாலத்தின் விற்கொடி காற்றில் மெல்லத் துவண்டபடி நீந்தி வந்தது. இலைத்தழைப்பின் இடைவெளிகள் வழியாக கருக்கொண்ட செம்பசுவின் வயிறென சிறிய பாய்களின் புடைப்பு தெரிந்ததும் அவன் மேலும் சாளரத்தை அணுகி பற்றிக்கொண்டான். அங்கிருந்து பார்ப்பதை எவரும் அறியலாகாது என்று எண்ணினாலும் ஒளிந்து நோக்குவதை கற்பனைசெய்ய முடியவில்லை.

கங்கைநீரில் குனிந்து தங்கள் நீர்ப்படிமையை தொட்டுத் தொட்டு அசைந்துகொண்டிருந்த மலர்மரக்கிளைகளுக்கு அப்பால் காவல்படகின் அமரமுனை நீண்டு வந்தது. அதில் நின்றிருந்த வீரன் கைகளை வீசிக்கொண்டிருந்தான். உச்சகட்ட ஓசையில் அவன் முகம் சுருங்கி கண்கள் மூடியிருக்க அவன் குரல் காற்றில் எங்கோ கொண்டுசெல்லப்பட்டிருந்தது. இன்னொருவன் கையிலிருந்த கொடியை வீசியபடி கயிற்றில் தொற்றி மேலேறினான்.

அந்திச்செம்மை பரவிய வெண்பாய்களை அணையும் தழல் என சுருக்கியபடி முதல்படகு துறைநோக்கி வந்தது. எச்சரிக்கையுடன் நீள்மூக்கை நீட்டி பின் கரையணைந்து விலாகாட்டியது. அதன் கொடிமரத்திலிருந்து விழுதுகளெனத் தொங்கிய கயிறுகள் குழைந்தாடின. அதன் கண்ணிச்சுருளை இரு குகர்கள் எடுத்து வீச அதைப்பற்றிக் கொண்டு ஓடிவந்த சேவகன் கைகளை வீசி ஏதோ கூவினான். துறைமேடையின் அதிர்வு தாங்கும் மூங்கில்சுருள்கள்மேல் படகு பெரும் எடையின் உறுதியான மென்மையுடன் வந்து முட்டியது. கண்ணிவடங்களை கரை எடுத்து பெருங்குற்றியில் கட்டிச்சுற்றி இரு பக்கங்களிலாக இழுத்ததும் மதம் கொண்ட யானை என முன்னும் பின்னும் அசைந்து மெல்ல அலையடங்கி படகு அமைந்தது.

அதை நோக்கி மரமேடையை உத்தி வைத்தனர். படகிலிருந்து இருபது காவல்வீரர்கள் ஏந்திய ஒள்வேல்களுடன் இறங்கி துறையில் அணிவகுத்து நின்றனர். தொடர்ந்து வந்த அணிப்படகின் பாய்களை கொடிமரத்துடன் சேர்த்து கட்டியிருந்தனர். அதிலிருந்து வந்த பெருவடத்தை கரையிலிருந்தவர்கள் இழுத்து கரைசேர்த்து சுற்றிக்கட்டி இறுக்க அது மெல்லத்திரும்பி துறைமேடையை அணுகி மூங்கில்சுருள்களில் மோதி அமைந்தது. அதன் அமரத்தில் நின்றிருந்த வீரன் கொம்பை எடுத்து பிளிறலோசை எழுப்பினான்.

அஞ்சிய விரலென துறையிலிருந்து நீண்ட மேடை படகில் அமைந்தது. அணிப்படகிலிருந்து ஐந்து சூதர்கள் மங்கல வாத்தியங்களுடன் முன்னால் வந்து இசைத்தபடியே அதில் நடந்து கரைக்கு வந்தனர். ஏழு அணிப்பரத்தையர் தாலங்களுடன் அறைக்குள் இருந்து வெளிவந்து அதில் நடந்து வந்தனர். அந்திச் செம்மையில் அவர்கள் எழுவருமே மாந்தளிர்கள் போல ஒளிவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து இருபக்கமும் இரு சேடியர் துணைவர திரௌபதி உள்ளிருந்து நடந்து வந்தாள்.

கரையில் நின்றிருந்த சேவகர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். அணிச்சேடியர் தாலங்களுடன் முன்னால்சென்று தாலமுழிந்து தூபமும் சுடரும் காட்டி அவளை வரவேற்றனர். கால்கீழ் ஒரு கண்காணாத் தெப்பத்தில் ஒழுகிவருபவள் போலிருந்தாள் திரௌபதி. அவள் எப்போதும் அப்படித்தான் நடக்கிறாள் என்று தருமன் எண்ணிக்கொண்டான். உடல் ஒசியாது நடக்கும் பிறிதொரு பெண்ணை பார்த்ததில்லை என்று தோன்றியது. அசையாத சுடரைக் காண்பதுபோல அது அச்சுறுத்தும் அமைதியொன்றை உள்ளே நிறைத்தது.

மலர் சொரிதலை ஏற்றபடி அவள் மாளிகை நோக்கி நடந்து வந்தாள். நீட்டிய கூரைக்குக் கீழே அவள் மறைவதுவரை நோக்கியபின் அவன் திரும்பி நடந்து மீண்டும் பழைய இடத்திலேயே அமர்ந்துகொண்டான். இதுதான் இன்பமா? வாழ்க்கையின் இனியதருணங்களெல்லாம் இப்படித்தான் வந்துசெல்லுமா? அவன் அதைப்போன்ற தருணங்களை மீண்டும் எண்ணினான். இனியவை என தன் வாழ்க்கையில் எதுவுமே நிகழ்ந்ததில்லை என்று தோன்றியது. நெஞ்சம் அலைகளழிந்து அமைந்த கணங்கள் நினைவில் பதிந்து கனவென நீடிக்கின்றன. ஆனால் அவை உவகையின் கணங்கள் அல்ல. உவகை என்பதுதான் என்ன?

புத்தம்புதிய நூல் ஒன்றைக் காணுவது கைகளை பரபரக்கச் செய்கிறது. புதிய ஆசிரியர் கிளர்ச்சியளிக்கிறார். ஆனால் அவை மிகச்சில கணங்களில் முடிந்துவிடுகின்றன. பின்னர் அமிழ்தல், இருத்தலழிதல். இது நிலைகுலைவு. அனைத்தும் இடிந்து சிதறிக்கிடக்கின்றன. சொல்லோடு சொல்லை ஒட்டும் பொருள் என ஏதும் அகத்தில் இல்லை. யானைகள் மேய்ந்து சென்ற புல்வெளி போல என்று பராசரர் புராணசம்ஹிதையில் சொல்லும் உவமை. என்ன நினைத்துக்கொண்டிருக்கிறேன் நான்? எது வரினும் உவகையை அறியாதவனாக என்னை ஆக்கி இறைவனை நோக்கி ஏகடியம் செய்கின்றனவா நூல்கள்?

சிசிரன் வந்து வணங்கி “இளவரசி அகத்தறை புகுந்துவிட்டார்கள் அரசே” என்றான். தருமன் எழுந்துகொண்டு உடனே விரைந்து எழுந்துவிட்டோமோ என்ற ஐயத்தை அடைந்து மீண்டும் அமரலாமா என ஒருகணம் உடல் தயங்கி என்ன மூடத்தனம் அது என உள்ளூர வியந்து தத்தளித்தபின் “ஆம்” என்றான். ”இடது உப்பரிகையில் அமர்ந்திருக்கிறார்கள். இவ்வரண்மனையின் கீழ்த்தளத்தில் மட்டுமே சேவகரும் காவலரும் இருப்பார்க்ள். எவரேனும் வரவேண்டுமென்றால் நீங்கள் இச்சரடைப்பற்றி இழுத்து மணியோசை எழுப்பினால் போதும்” என்றான்.

அவன் தலைவணங்கி திரும்பிச்சென்ற ஒலியை கேட்டுக்கொண்டு தருமன் நின்றான். பின்னர் அங்கே நின்றிருப்பதன் பொருளின்மையை உணர்ந்தான். மீண்டும் சென்று பழைய பீடத்திலேயே அமர்ந்து கங்கையை நோக்கிக்கொண்டிருக்கவே அவன் உள்ளம் விழைந்தது. அதுவே இனியது. வெறுமனே நெஞ்சோடு நவின்று அமர்ந்திருத்தல். இங்கே வேறேதோ நிகழவிருக்கிறது. வேறேதோ. உவகையை அழிப்பது. முற்றாகக் கலைத்திடுவது. ஆம், என் உள்ளம் சொல்கிறது. ஆம், அதுதான். வேண்டாம், இப்படியே இறங்கிச் சென்றுவிட்டாலென்ன?

தருமன் பெருமூச்சு விட்டான். ஒன்றும் செய்யப்போவதில்லை நான். பெருநதி ஒன்று என்னை அள்ளி இத்திசைநோக்கி கொண்டுசெல்கிறது. திகைத்தும் தவித்தும் கனன்றும் அணைந்தும் நான் அதன் வழியில்தான் சென்றாக வேண்டும். அங்கே அவளிருக்கிறாள். இடது உப்பரிகை கங்கையின் வளைவை நோக்கித் திறப்பது. அங்கே…

அப்போதுதான் அவளை அத்தனை அண்மையில் அத்தனை துல்லியமாக நோக்கியிருப்பதை அவனே அறிந்தான். இளநீலநிறப் பட்டாடையின் திரையாடலுக்கு அடியில் செம்பஞ்சுக்குழம்பிட்ட பாதங்கள் தொட்டனவா இல்லையா என தெரியாமல் வந்தன. மேல்பாதங்களில் வரையப்பட்ட நெல்லியிலைச்சித்திரம். கணுக்காலைத் தழுவி இறங்கிய சிலம்பின் குழைவு. அதன் நடுவரியில் மின்னிய செந்நிறக் கற்களின் கனல்நிரை.

நீலப்பட்டாடைக்குமேல் மணியாரங்கள் தொங்கின. வெண்வைரங்கள் ஒளிர்ந்த மணிமேகலை பனித்துளிகள் செறிந்த காட்டுச்சிலந்திவலை என இடைசுற்றியிருந்தது. இடைவளைவில் தழைந்த பொற்கச்சைக்கு மேல் மென்கதுப்புச் சதையில் அணிபுதைந்த தடம். உந்திச்சுழிக்குக் கீழ் நீரலையென அதிர்ந்த மென்மை. கருவேங்கையின் அகக்காழின் வரிகளென மென்மயிர்பரவல். வளைந்தெழுந்த இடைக்கு குழைந்தாடிய சரப்பொளியின் அக்கங்கள். அதற்குமேல் அவன் பார்க்கவில்லை என்று அப்போது உணர்ந்தான்.

கருநிலவு நாளுக்கே உரிய நீலம் நீர்வெளிமேல், இலைப்பரப்புகளுக்குமேல், அரண்மனையின் உலோக வளைவுகளில் தெரியத் தொடங்கியது. நீல திரவம் வானிலிருந்து பொழிந்து மண்ணை நிறைத்து மூடுவதுபோல கண் நோக்கியிருக்கவே காட்சிகள் இருண்டன. நெய்ச்சுடர் விளக்குகள் மேலும் மேலும் ஒளி கொண்டன. கங்கை ஓர் இருண்ட பளபளப்பாக மாறியது. அதன் மேலிருந்து நீராவி மணக்கும் காற்று கடந்துவந்தது.

அறைவாயிலைக் கடந்து உப்பரிகையில் அவன் நுழைந்தபோது அங்கே பட்டுவிரித்த பீடத்தில் அமர்ந்திருந்த திரௌபதி காதோரம் மணிச்சரம் அலைய குழைகளின் ஒளி கன்னத்தில் அசைய திரும்பி நீண்ட விழிகளால் நோக்கினாள். அவன் கால்மறந்து நிற்க அவள் இடக்கையால் தன் ஆடைமடிப்புகளை மெல்ல அழுத்தி எழுந்தாள். நிமிர்ந்த தலையும் நேரான தோள்களுமாக நின்று அவனை நோக்கினாள். ஒருகணம் அப்பார்வையை நோக்கியபின் அவன் விழிவிலக்கிக்கொண்டான்.

“தாங்கள் நூலாய்ந்துகொண்டிருப்பீர்கள் என்று எண்ணினேன்” என்று அவள் சொன்னாள். நூல் என்ற சொல் பட்டு குளிர்ந்துறைந்த அவன் சித்தம் எழுந்தது. “ஆம், ஒரு நூல். அதை இன்னமும் நான் வாசித்து முடிக்கவில்லை.. ” என்றான். உடனே அது பிழையாகப் பொருள்படுமோ என்றெண்ணி “சில பக்கங்களே இருந்தன. முடித்துவிட்டேன்” என்றான். அவள் புன்னகையுடன் “அவ்வாறுதான் நானும் எண்ணினேன்” என்றாள்.

திரைச்சித்திரமென உறைந்த அத்தருணத்தை ஒரேகணத்தில் அவள் உயிர்கொள்ளச்செய்துவிட்டதை அவன் உணர்ந்தான். முதலில் அவன் பேசவேண்டுமென்று எண்ணாமல் அவளே பேசத் தொடங்கியதும், அவன் பூணவிழையும் சித்திரத்தையே அவனுக்கு அளித்ததும், அதில் நூல் என்ற சொல்லை சற்றே அழுத்தியதும் எல்லாம் எண்ணிச்செய்தனவா என்ற எண்ணம் வந்ததுமே அவன் அகம் திகைத்தது.

“என்ன நூல்?” என்றாள் திரௌபதி. “புராணமாலிகா” என்று அவன் சொன்னான். பிரஹதாங்கப்பிரதீபம் என்று சொல்லியிருக்கலாமோ என்று எண்ணியபடி “வித்யாதரர் எழுதிய நூல். தொன்மையான கதைகள் அடங்கியது” என்றான். அவள் புன்னகையுடன் “அது இளவயதினருக்குரியதல்லவா?” என்றாள். தருமன் புன்னகையுடன் ”ஆம், இளமைக்கு மீள ஒரு முயற்சி செய்யலாமே என்றுதான்” என்றான். திரௌபதி முகவாயை சற்று மேலே தூக்கி சிரித்து “நான் மழலையரை இன்னும் சிறிது காலம் கழித்தே வளர்க்க விழைகிறேன்” என்றாள். தருமன் வெடித்துச் சிரித்துவிட்டான்.

அச்சிரிப்புடன் அவளை மிக அண்மையானவளாக உணர்ந்தான். பீடத்தில் அமர்ந்துகொண்டு “அமர்க!” என்று கைநீட்டினான். “எந்தக் கதையை படித்துக்கொண்டிருந்தீர்கள்?” என்றாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “அந்தத் தற்செயலில் என்ன ஊழ்குறிப்பு உள்ளது என்று நோக்கத்தான். ஏழுசுவடிகளையும் ஏழு வரிகளையும் தள்ளி அவ்வாறு வாசிக்கும் வழக்கம் உண்டல்லவா?” என்று அவள் அமர்ந்தவாறே சொன்னாள்.

சிறகை அடுக்கிக்கொண்டே இருக்கும் சிறிய குருவிகளைப்போல ஒவ்வொரு அசைவிலும் அவள் ஆடையை இயல்பான கையசைவால் சீரமைத்துக்கொண்டாள். நுரைபோல புகைபோல அவள் உடல் அத்தனை மென்மையாக மண்ணில் படிந்திருப்பதாகத் தோன்றியது.

தருமன் “வித்யாதரரின் கதைகள் மிக எளியவை” என்றான். ”அவற்றில் போர்களும் குலமுறைகளும் இல்லை. ஆகவேதான் அவற்றை குழந்தைகள் விரும்புகின்றன.” திரௌபதி “ஆம், இளமையில் நானும் அக்கதைகளை விரும்பியிருந்தேன்” என்றாள். தருமன் “நான் வாசித்த கதையை சொல்வதற்கு முன் நீ விரும்பிய ஒரு கதையை சொல்” என்றான்.

திரௌபதி புன்னகைத்தபோது அவள் இதழ்களின் இருமருங்கும் மெல்லிய மடிப்பு விழுந்தது. ஒருகணத்தில் அறியாச் சிறுமியாக அவள் மாறிவிட்டதுபோல காட்டியது அது. “அன்னப்பறவைகளைப் பற்றிய கதை. அதை மிகச்சிறுமியாக இருக்கையில் நானே வாசித்து அறிந்தகணம் இப்போதும் நினைவிருக்கிறது. ஏட்டிலிருந்த கோடுகளும் சுழிகளும் சொற்களாகி பின் கனவாக மாறிய விந்தையில் நான் மெய்சிலிர்த்தேன்.”

சிறுமியரைப்போல அவள் துடிப்புடனும் கையசைவுகளுடனும் பேசினாள். “நாட்கணக்கில் அந்தச்சுவடியுடன் அரண்மனையில் அலைந்துகொண்டிருந்தேன் என்று என் அன்னை சொல்லிச்சிரிப்பதுண்டு. ஒவ்வொரு தாதியிடமாகச் சென்று மடியில் அமர்ந்து அதை வாசித்துக்காட்டுவேனாம். அதுவும் பலமுறை. என்னைக் கண்டதுமே சேடிகள் பயந்து ஓடத்தொடங்கினராம்” பற்கள் ஒளிவிட அவள் நகைத்தாள்.

“அது வான்மீகமுனிவரின் ஆதிகாவியத்தில் உள்ள கதைதான்” என்றான் தருமன். “ஆம், அதை பிறகுதான் அறிந்துகொண்டேன்” என்றாள் திரௌபதி. “சொல்” என்றான் தருமன். “இல்லை, உங்களுக்குத்தான் தெரியுமே” என்று அவள் சிறுமிபோல தலையை அசைத்தாள். “நீ கதை சொல்லும்போது மேலும் சிறுமியாக ஆகிவிடுவாய்… அதனால்தான்… சொல்” என்றான் தருமன். சிரித்துக்கொண்டு சினத்துடன் “மாட்டேன்” என்றாள்.

அவன் கைகூப்பினான். அவள் சரி என்று கையசைத்தபின் “பிரம்மனின் மைந்தரான கஸ்யபர் தட்சனின் எட்டு மகள்களையும் மணந்தார். அவர்களில் தாம்ரை என்னும் துணைவிக்கு ஐந்து பெண்கள் பிறந்தனர். அவர்களில் கிரௌஞ்சி ஆந்தையை பெற்றாள். ஃபாஸி கூகைகளையும் ஸ்யேனி பருந்துகளையும் ஸுகி கிளிகளையும் பெற்றாள். திருதராஷ்டிரிதான் சக்ரவாகத்தையும் அன்னப்பறவையையும் பெற்றாள்” என்றாள்.

“இத்தனை பறவைகளும் உடன்பிறந்தவர்களா என்று அக்காலத்தில் எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். ஆந்தையும் அன்னப்பறவையும் எப்படி ஒருகுலத்தில் பிறக்க முடியும்? கூகையும் கிளியும் எப்படி ஒருகுருதியாக இருக்க முடியும்? எத்தனையோ நாட்கள் இதை எண்ணி எங்கள் தோட்டத்தில் தனித்தலைந்திருக்கிறேன்.” அவள் முகத்திலெழுந்த சிறுமிக்குரிய படபடப்பை கண்டு தருமன் புன்னகைசெய்தான். இத்தனை எளிதாக அவளால் உருமாற முடியுமா என்ன?

“பிறகு என்ன தெளிந்தாய்?” என்றான். “ஒருநாள் எங்கள் தோட்டத்தில் உள்ள சிறுகுளத்தில் அன்னங்கள் நீந்திக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவற்றை நோக்கியபடி அமர்ந்திருந்தபோது இதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். என் தாதி அழைக்கும் குரல் கேட்டதும் எழுந்து அவள் குரல் கேட்ட திசை நோக்கி திரும்பியபோது உரத்த கூகைக்குரல் கேட்டேன். திகைத்துத் திரும்பியபோது அறிந்தேன், தன் இரையை கவ்விச்சென்ற இன்னொரு அன்னத்தை நோக்கி ஓர் அன்னப்பறவை எழுப்பிய சினக்குரல் அது என்று.”

திரௌபதியின் கண்கள் சற்று மாறின. “அதன்பின் ஒவ்வொரு பறவையிலும் இன்னொன்றை கண்டுகொண்டேன். சின்னஞ்சிறு கிள்ளையும் பருந்தாக முடியும் என்று. இரவில் ஆந்தையாக ஒலியெழுப்புவது அன்னமாகவும் இருக்கலாம் என்று. அதை என் அன்னையிடம் சொன்னேன். அவளுக்கு நான் சொன்னது புரியவில்லை. தந்தையிடம் ஒருமுறை அதை சொன்னேன். நீ அரசுசூழ்தலை கற்கத்தொடங்கிவிட்டாய் என்றார்.” அவள் சிரித்து “அன்றுமுதல் நான் அரசியல்நூல்களுக்கு திரும்பினேன்” என்றாள்.

தருமன் சிரித்துக்கொண்டு ”ஆம், அதற்கப்பால் அரசியலில் கற்கவேண்டியதேதும் இல்லை” என்றான். திரௌபதி திரும்பி நோக்கி “சேவகர்கள் கீழே இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்” என்றாள். தருமன் எழுந்துகொண்டு “ஆம், அவர்களை அழைக்க ஒரு மணிச்சரடு உள்ளது” என்றபின் “எதற்காக அழைக்கிறாய்?” என்றான். “இரவில் நறுநீர் அருந்துவதுண்டு நான்” என்றாள். தருமன் அறைக்குள் சென்று உயரமற்ற பீடத்தில் இருந்த மண்குடத்தை நோக்கி “இங்குளது என எண்ணுகிறேன்” என்றான். “ஆம், நான் சிசிரனிடம் வைக்கும்படி சொல்லியிருந்தேன்” என்றாள் திரௌபதி.

தருமன் இன்னீரை சந்தனக் குவளையில் ஊற்றி எடுத்துவந்து அவளிடம் அளித்தான். “என்னுடைய நீர்விடாய் அரண்மனையில் இளமைமுதலே நகைப்புகுரியதாக இருந்தது“ என்றபடி அவள் அதை வாங்கி முகம் தூக்கி அருந்தினாள். அவளுடைய மென்மையான கழுத்தின் அசைவை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். அவள் குவளையை அருகே வைத்தபடி “என்ன?” என்றாள். “மயில்கழுத்தின் வளைவு” என்றான். திரௌபதி “வர்ணனைகளைக்கூட நூலில் இருந்துதான் எடுக்கவேண்டுமா என்ன?” என்று சிரித்தபடி இதழோரத்திலிருந்த நீரை விரலால் சுண்டினாள்.

“நானறிந்ததெல்லாம் நூல்கள் மட்டுமே” என்றான் தருமன். அவள் “என்னை அனலி என்பார்கள் தாதியர். எனக்குள் இருக்கும் அனலை நீரூற்றி அணைத்துக்கொண்டே இருக்கிறேனாம்” என்றாள். தருமன் “பெண்கள் ஆண்களைவிட இருமடங்கு நீர் அருந்துவார்கள் என்கின்றன நூல்கள்” என்றான். “ஏன்?” என்றாள் அவள். “தெரியவில்லை. அவர்களிடம் கற்பின் கனல் உறைகிறது என்று கவிஞர்கள் சொல்கிறார்களே, அதனாலோ என்னவோ?” என்று தருமன் நகைத்தான்.

திரௌபதி நகைத்துவிட்டு “சொல்லுங்கள், நான் அழைத்தபோது என்ன கதையை வாசித்துக்கொண்டிருந்தீர்கள்?” என்றாள். தருமன் ஒருகணம் திகைத்து உடனே உணர்ந்துகொண்டு “இறுதிக்கதைதான்” என்றான். “எனக்கு நினைவில்லை” என்றாள் அவள். அவள் விழிகளை நோக்கியபின் புன்னகையுடன் “என்னால் கதைகளை சுருக்கித்தான் சொல்லமுடியும்” என்றான் தருமன். “சொல்லுங்கள்” என்றாள் அவள் தலையைச் சரித்து கண்களில் புன்னகையுடன்.

தருமன் “மனுவின் மகள் இடா சிறுமியாக இருக்கையில் ஒருநாள் தன் தந்தையிடம் தந்தையே இம்மண்ணில் நன்மையையும் தீமையையும் எப்போது நான் அறிந்துகொள்வேன் என்று கேட்டாள். இன்னும் நீ முதிரவில்லை என்றார் மனு. முதிர்சிறுமியாக ஆனதும் மீண்டும் அவள் கேட்டாள். நீ இன்னமும் முதிரவில்லை என்றார் மனு. இளம்பெண்ணாக அவள் ஆனபோது மீண்டும் கேட்டாள். தேவருலகுக்கும் அசுரர் உலகுக்கும் சென்று எரிகடன்கள் எப்படி செய்யப்படுகின்றன என்று பார்த்துவா என்று அவளை அனுப்பினார் மனு” என்றான்.

“கீழுலகு சென்ற இடா அங்கே அசுரர்கள் ஆற்றிய எரிகடனை கண்டாள். அவர்களின் எரிகுளத்தில் மூன்று நெருப்புகளும் நிகராக எரியவில்லை. அதன்பின் அவள் விண்ணுலகு சென்று தேவர்களின் எரிகடனை நோக்கினாள். அங்கும் மூன்று நெருப்புகளும் நிகரல்ல என்று கண்டாள். மண்ணுலகு மீண்டுவந்து தந்தையிடம் அதை சொன்னாள். மனு புன்னகைத்து அவ்வண்ணமெனில் முறையான எரிகடனை நீ அறிந்திருக்கிறாய் என்றே பொருள். அதை நிகழ்த்து என்றார்.”

திரௌபதியின் விழிகளில் ஒரு சிறிய ஒளியசைவு நிகழ்ந்தது என்று தருமனுக்கு தோன்றியது. தான் சொன்னதில் ஏதேனும் பிழையோ என அவன் உள்ளம் தேடியது. “இடா மும்முறை தேவர்களையும் மும்முறை அசுரர்களையும் வாழ்த்தி ஏழாவது முறை கண்களை மூடி ஓம் என்று சொல்லி தந்தையின் எரிகுளத்தில் மூவெரியேற்றினாள். அவள் கைபட்டு எழுந்த நெருப்புகள் மூன்றும் முற்றிலும் நிகராக இருந்தன. தந்தை அவளை வாழ்த்தி நீ நன்றுதீதை அறிந்துவிட்டாய் என்று பாராட்டினார்.”

அவன் சொல்லி முடித்த பின்னரும் அவள் அமைதியாக இருந்தாள். தருமன் “இது தைத்ரிய சம்ஹிதையில் உள்ள கதை. இதை என் குருநாதர்கள் வேறுவகையில் விளக்குவார்கள்” என்றான். திரௌபதி தலையசைத்தாள். அவள் அதை எதிர்பார்ப்பது தெரிந்தது. “விண்ணுலகிலும் அடியுலகிலும் எரிசெயல் முறையாகத்தான் நடந்துவந்தது. மண்ணுலகப் பெண்ணான இடா அங்கே வெற்றுடலுடன் சென்றாள். அவளைக் கண்டு தேவர்களும் அசுரர்களும் நிலையழிந்தமையால்தான் சுடர்கள் சமநிலை அழிந்தன.”

திரௌபதி புன்னகைத்து “ஆம், நான் அதை எண்ணினேன்” என்றாள். “அசுரர்கள் அவளை திரும்பி நோக்கினர், ஆகவே அவர்களின் முனைப்பு சிதறியது. தேவர்கள் அவளை நோக்கி விழிதிருப்பவில்லை. ஆனால் அவர்களின் உள்ளத்தில் அவள் காலடியோசை எதிரொலித்தது. ஆகவே அவர்களின் குவியம் கலைந்தது” என்றான் தருமன். திரௌபதியின் இதழ்கள் மீண்டும் புன்னகையில் நீண்டு இரு சிறு மடிப்புகள் கொண்டன.

“பின்னர் தேவர்களும் அசுரர்களும் இடாவை தேடிவந்தனர்” என்றான் தருமன். “அசுரர்கள் அவள் பின்வாயில் வழியாக இல்லத்தில் புகுந்து தங்களை ஏற்கும்படி அவளை வேண்டினர். தேவர்கள் அவள் தலைவாயில் வழியாக வந்து அவளிடம் தங்களை ஏற்கும்படி கோரினர். அவள் தேவர்களை ஏற்றுக்கொண்டாள். அவள் தேவர்களை ஏற்றுக்கொண்டமையால்தான் மண்ணுலகிலுள்ள அத்தனை உயிர்களும் தேவர்களை ஏற்றுக்கொள்கின்றன.”

திரௌபதி சிரித்துக்கொண்டே எழுந்தாள். கங்கைக்காற்றில் அவள் ஆடை மெல்ல எழுந்து பறந்தது. அதை இடக்கையால் பற்றிச் சுழற்றியபடி கழுத்தைத் திருப்பி “அவள் ஏன் தேவர்களை ஏற்றுக்கொண்டாள்?” என்றாள். “அவர்கள் தலைவாயில் வழியாக வந்தனர்” என்றான் தருமன் சிரித்தபடி. “இல்லை, அவர்கள் அவள் காலடியோசையிலிருந்து கண்டறிந்த இடா பன்மடங்குப் பேரழகி. அவள் அவ்வுருவையே விரும்பினாள்” என்றாள் திரௌபதி.

அவள் விழிகள் அவன் விழிகளை தொட்டன. சிலகணங்கள் விழிகள் தொடுத்துக்கொண்டு அசைவிழந்து நின்றன. தருமன் தன் நெஞ்சின் ஓசையை கேட்டான். விழிகளை விலக்கிக்கொண்டு பெருமூச்சுவிட்டான். அவள் தூணில் மெல்ல சாய்ந்துகொள்ளும் அசைவை நிழலில் கண்டான். மீண்டும் அவளை நோக்கினான். புன்னகையுடன் அவள் அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள்.

நூறுமுறை எழுந்து அவளைத் தழுவிய ஆன்மாவுடன் அவன் உடல் அசைவற்று இருந்தது. எழுந்து படியிறங்கி ஓடவேண்டுமென்ற எண்ணம் ஒரு கணம் வந்து சென்றது. மீண்டும் அவளை நோக்கியபோது அவள் தன் இருகைகளையும் குழந்தையை அழைப்பதுபோல விரித்தாள். அவன் தன் உடலில் எழுந்த விரைவுடன் எழுந்து அவளருகே சென்றான்.

ஆனால் அவள் உடலின் நறுமணத்தை அறிந்ததுமே அவன் உடல் அசைவழிந்தது. நீட்டிய கைகள் அப்படியே நின்றன. அவள் தன் இரு கைகளால் அவன் கைகளைப்பற்றிக் கொண்டு அவன் விழிகளுக்குள் நோக்கினாள். அவன் உடல் வெம்மை கொண்டு நடுங்கியது. அவள் விழிகளில் கூரிய ஒளி ஒன்று வந்துவிட்டிருந்தது. கொல்லவரும் வஞ்சமும், நீயல்லவா எனும் ஏளனமும், யார் நீ எனும் விலகலும் இணைந்த ஒரு புதிர் நோக்கு.

அவள் மேலுதடு சற்றே எழுந்து வளைந்திருக்க அதன்மேல் வியர்வை பனித்திருந்தது. மேலிதழ்களின் ஓரத்தில் பூமயிர் சற்றே கனத்து இறங்கியிருக்க மலர்ந்த கீழுதடின் உள்வளைவு குருதிச்செம்மை கொண்டிருந்தது. சிறிய மூக்கிலிருந்து மூச்சு எழுவதாகவே தெரியவில்லை. ஆனால் நீண்ட கழுத்தின் குழிகள் அழுந்தி மீண்டன. கழுத்தில் ஓடி மார்பிலிறங்கிய நீல நரம்பு ஒன்றின் முடிச்சை கண்டான். முலைக்கதுப்பின் பிளவுக்குள் இதயத்தின் அசைவு. காதிலாடிய குழையின் நிழல் கழுத்தை வருடியது. கன்னத்தில் சுருண்டு நின்ற குழல்கற்றை தன் நிழலை தானே தொட்டுத் தொட்டு ஆடியது.

அவன் கண்களை நோக்கி ஆழ்ந்த குரலில் “நீங்கள் இன்று நினைத்துக்கொண்ட உண்மையான கதை என்ன?” என்றாள் திரௌபதி . மூச்சடைக்க தருமன் “ம்?” என்றான். “எந்தக்கதை உங்கள் நெஞ்சில் இருந்தது?” என்று கேட்டபடி அவள் அவன் கைகளை எடுத்து தன் இடையில் வைத்துகொண்டாள். அவன் உடல் உலுக்கிக்கொண்டது.

அவனால் நிற்க முடியவில்லை. ஆனால் அவன் கைகள் அவள் இடையை சுற்றி வளைத்தன. அவள் உடலின் வெம்மையும் மணமும் எழுந்தன. அத்தனை மணங்களுக்கு அடியில் அவள் மணம். அது எரிமணம். குங்கிலியம் அல்லது அரக்கு அல்லது… வேறேதோ எரியும் மணம். எரியும் மணமல்ல, எரியக்கூடிய ஒன்றின் மணம்…

அடைத்த குரலில் “இல்லை” என்று அவன் சொன்னான். அவள் தன் முலைகளை அவன் மார்பின்மேல் வைத்து கைகளால் அவன் கழுத்தை வளைத்து முகம் தூக்கினாள். அவனளவே அவளும் உயரமிருந்தாள். “வித்யாதரரின் நூலின் கதை என்றால் அது நீரரமகளைப்பற்றியதுதான்… இல்லையா?” அவள் கன்னத்தில் அந்த மெல்லிய பரு. எப்போதோ பட்டு ஆறிய சிறிய வடுவின் பளபளப்பு. காதோர பூமயிரின் மெல்லிய பொன்பூச்சு.

“ஆம்” என்றான் தருமன். அவள் இதழ்கள் புன்னகையில் விரிந்தன. செந்நீல நச்சுமலர் ஒன்று விரிவதைப்போல. கங்கையில் ஓர் ஆழ்சுழி போல. “மீளமுடியாது மூழ்கத்தான் போகிறீர்கள்” என்றாள். “ம்” என்று அவன் சொன்னான். “என்ன?” என்றாள். “ம்” என்று அவன் சொன்னான். அவன் மூக்கு அவள் கன்னத்தில் உரசிச்செல்ல அவன் உடல் மீண்டும் அதிர்ந்தது.

அவள் மேலும் தலைதூக்க மீண்டும் அவள் உதடுகள் மலரிதழ்கள் பிரிவதுபோல விரிந்தன. அந்த ஓசையைக்கூட கேட்கமுடியுமென்று தோன்றியது. அதன்பொருள் அதன்பின்னர்தான் அவனுக்குப்புரிந்தது. அவன் அவள் இதழ்களில் இதழ்சேர்த்து முத்தமிட்டான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைகசாக்கின் இதிகாசம்- சொற்கள்
அடுத்த கட்டுரைவல்லபி வானதி- நிலவழிபாடு