சார்லி ஹெப்டோ -கருத்துச் சுதந்திரம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

உங்கள் சார்லி ஹெப்டோ – அரசின்மைவாதம் கட்டுரை மிக முக்கியமானது. கடந்த இரண்டு வாரங்களாக எந்த ஒரு இந்திய இதழிலும் இப்படி ஒரு நடு நிலையான கட்டுரையைப் படிக்கவில்லை. என் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் எழுத்து.

“அரசின்மைவாதம் என்பது மிகப்புனிதமான ஓர் மனநிலை” என்று நீங்கள் எழுதியிருப்பது நம் சமூக அரசியலமைப்புக்கு ஒரு அறைகூவல். நாம் ஐரோப்பா இருக்கும் இடத்தை அடைய நூறு ஆண்டுகளாகும் என்று கூறியிருப்பது வருத்தமளிப்பதாக இருந்தாலும் அது உண்மையே . மேற்கு ஐரோப்பா இருக்கும் இடத்தை அமெரிக்காவே எட்டவில்லை.

சார்லி ஹெப்டோ கார்டூன்களை எந்த முக்கிய அமெரிக்க இதழிலும் காண முடியவில்லை. அமெரிக்க ஊடகங்களில் அரசாங்கத்துடன் ஒத்து போகும் ஒருவித தணிக்கைமுறையே நிலவுகிறது. அராஜகம்(Anarchy) என்ற வார்த்தையை பாஸிசம் கம்யூனிசமுடன் வைத்து எதிர்மறையாகப் பார்கிறார்கள் அமெரிக்கர்கள். அமெரிக்க வங்கிகிகளுக்கு எதிராக அரசின்மைவாதிகள் நடத்திய போராட்டம் கிண்டல் கேலிகளுக்கு உள்ளாக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது.

மேற்கு ஐரோப்பா அடைந்திருக்கும் தனி மனித சுதந்திரம் நீங்கள் சொன்னது போல் பல கோடி உயிர்கள் காவு கொடுக்கப்பட்டு கிடைத்த ஒன்று. மானுடத்துக்கு கிடைத்த அரிய வரம். அதனைக் காப்பது வரலாற்றுணர்வுடைய ஒவ்வொரு மனிதனின் கடமை. அதற்காக குண்டு பாய்ந்து ரத்தமும் சிந்தலாம்.

அதற்காக ஐரோப்பா அனைத்திலும் மேல் என்று சொல்லிவிட முடியவில்லை. ஜிப்ஸி ரோமா மக்கள் இன்னமும் பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் ஒடுக்கப்பட்டு விளிம்பு நிலையில் தான் இருக்கிறார்கள். யூத எதிர்ப்பும் பல நாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. முஸ்லீம்களுக்கு பிரான்ஸில் நல்ல வேலை கிடைப்பது அரிது. நகரங்களுக்கு வெளியே இருக்கும் குடியிருப்புகளில் தான் வாழ்கிறார்கள். ஐரோப்பா செல்லக் கூடிய தூரம் அதிகமே.

இந்தியாவில் தனி மனித சுதந்திரம் பற்றிய குற்றச்சாட்டுக்கு நேரெதிராக இந்து மதத்தை கேலி செய்யும் பி.கே போன்ற படங்களுக்கு பெரும்பான்மையினரனால் அங்கீகாரம் அளிக்கப்படுவதைக் காண்கிறோம். அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ கிறித்திவ வழிபாடு முறைகளை நேரடியாகத் தாக்கும் ஒரு படம் இப்படி வெற்றி நடை போட்டதில்லை. அந்த வகையில் இந்தியா பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது.

நீங்கள் தொடர்ந்து தார்மீக, அற உணர்வுடன் எழுதி வருவது மிகுந்த மன நிறைவளிக்கிறது ஜெ.

சிவா

*

அன்புள்ள ஜெ,

பெருமாள் முருகன் – கடைசியாக கட்டுரையில், நீங்கள் தெரிவித்த கருத்து.

> ஆனால் அதற்காக இப்போது அவர்களை விமர்சித்து அவர்களை மேலும் கோபவெறி அடையச்செய்யமாட்டேன். அவர்களிடம் இதைச் சொல்லும் சிந்தனையாளர்கள் அவர்களிடமே உருவாகவேண்டுமென விரும்புவேன்.

அப்படி ஒரு சிந்தையாளர் உருவானால், அவர் நிலமை சற்றே பரிதாபம்தான். அப்படிப்பட்ட சிந்தனையாளரான, ரைஃப் பதாவி என்ற சவுதி இளைஞனுக்கு சவுதி அரசால் 1000 சவுக்கடி வழங்கப்படுகிறது. ரைஃப் பதாவியின் வலைப்பூவிலிருந்து – http://www.theguardian.com/world/2015/jan/14/-sp-saudi-blogger-extracts-raif-badawi

Facebook இல், என் நட்பு வட்டத்தில், பல்வேறு நாட்டவரும், மதத்தவர்களும் உண்டு. அதனால், நல்ல விஷயங்களையே பகிர்ந்து கொள்கிறேன். இஸ்லாம் பற்றி, சமீபத்தில் நான் பகிர்ந்து கொண்ட செய்தி http://www.ndtv.com/article/blog/yes-islam-needs-to-reform-647551. இஸ்லாமியர்களில் பலரும் சீர்திருத்தங்களை விரும்பினாலும், மிகச் சிலரே அதை தெரிவிக்கும் தைரியம் உள்ளவர்களாக இருக்கின்றனர். யாருக்கு 1000 சவுக்கடி வேண்டியிருக்கிறது! அவர்களுடைய கருத்துக்களை, பிற மதத்தினர் தெரிந்து கொள்வது அவசியம் என்ற எண்ணத்தில் இதைப் பகிர்ந்தேன். இதற்கு எதிர்வினையாக ஒரு இந்து இளைஞன் என்னை நிறவெறியன் என்று திட்டினான். பிரச்சினை அதுவல்ல. ஒரு முஸ்லிம் இளைஞன் தெரிவித்த கருத்துக்கள் கீழ்க்கண்டவாறு:

> I believe the fact that there is NO need to change “Islam” as it is perfect in the way it is and does not need to reform as this is the word of the GOD.

>Again Islam is not a choice where people can change according to each country. Saudi follows the purest form of Islam compared to any other country in the world and you see a very little or less % or of deviation in crimes such as bombing, theft, rapes etc., Whereas other Asian & western countries including India , USA, Pak and Bangladesh and modified it with customized interpretations which has ended up in such as poor state. Summary is lets stick to the basics, the word of God and follow it AS IS. Reformation doesn’t help any individual.

இதற்கு மேல் விவாதிக்க என் மொழிப்புலமையும் நேரமும் இடம் கொடுக்கவில்லை.

இந்த இளைஞன் சவுதியில் எல்லாம் நன்றாக இருப்பதாக நினைக்கிறான். மாறி வரும் உலக சூழ் நிலையில், இஸ்லாமைத் தவிர வேறு எந்த மதமோ, நாத்திகமோ இல்லாதிருப்பதே சரியென்ற எண்ணம் இருக்கிறது. பிற கருத்துக்களுக்கு இடம் தராதது தவறான சமூக வழக்கம் என்ற உணர்வும் இல்லை. சவுதியில் போதைப்பொருள் உபயோகமும், Porn தேடலும் இந்தியாவை விட அதிகம். ஆனால், பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் மட்டுமே சமூகப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றன.

இதில் ஆறுதலான ஒரே விஷயம் – கருத்து தெரிவித்த முஸ்லிம் இளைஞனின் கண்ணியமான எதிர்வினை. தனிப்பட்ட மரியாதையின் காரணமாக இருந்தாலும், நன்றே.

அன்புடன்,
ஸ்ரீதர்

அன்புள்ள ஜெமோ

பீர் முகம்மது என்பவர் தன் முகநூல் பக்கத்தில் பதிந்த பதிவு இது. எவரும் கவனிக்காதது. உங்கள் கவனத்துக்கு

ரஃபீக்

பெருமாள் முருகனும், ரஃயீப் பதவி யும்

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் சாதியை விமர்சிப்பது, சனாதன தர்மத்தை விமர்சிப்பதை இந்துத்துவா சக்திகள் பொறுப்பதில்லை. அம்மாதிரியான விமர்சன குரல்களை நசுக்கவே முயற்சிக்கிறார்கள். ஆனால் இங்கு ஜனநாயகம், மதசார்பின்மையான அரசமைப்பு இருப்பதால் எழுத்தாளனின் தலை தப்பிக்கிறது. அவன் கல்லால் எறிந்து கொல்லப்படுவதில்லை.

ஆனால் தூய இஸ்லாம் என்று சொல்லிக்கொள்ளும் வஹ்ஹாபியத்தின் தாயகமான சவூதி அரேபியா இதற்கு நேர்மாறானது. இங்கு மன்னரையோ அல்லது அவரை சார்ந்தவர்களையோ விமர்சித்தாலே அது இஸ்லாத்தை விமர்சித்ததாக கருதப்படும். அதற்கு சூழலை பொறுத்து மரணதண்டனை, கல்லெறி, கசையடி போன்றவை கிடைக்கும்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் கருத்து சுதந்திரத்திற்காக இணையதளம் தொடங்கி பதிவுகளை செய்த சவூதிய குடிமகனாக ரஃயீப் பதவிக்கு அரசாங்கம் 1000 கசையடி தண்டனை அளித்திருக்கிறது. கடந்த 9 ம் ந்தேதி சவூதியின் ஜித்தா நகரில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக 50 கசையடி கொடுக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலிருந்து கண்டனம், விமர்சனம் வந்த போதும் அதனை மீறி இது நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

தன்னை விமர்சிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதே வஹ்ஹாபியத்தின், அதன் அரசுகளின், அந்த கொள்கை கொண்ட அமைப்புகளின் முக்கிய நிலைபாடு. அதையும் அவர்கள் இஸ்லாமிய பிரதிகளிலிருந்தே மேற்கோள் காட்டி நடைமுறைப்படுத்துகிறார்கள்…. எல்லா மத மற்றும் சாதிய வெறியர்களும் இந்த விஷயத்தில் ஒரே நிலைபாடு தான்…..

ஃ குறிப்பு: ரயீப் பதவியை ஆதரிப்பவர்கள் மட்டுமே பெருமாள் முருகனையும் ஆதரிக்க வேண்டும். இரண்டுமே ஒன்று தான்….

– எச்.பீர்முஹம்மது

முந்தைய கட்டுரைதோப்பில் முகமது மீரான், கருத்துச்சுதந்திரம்
அடுத்த கட்டுரைஒலியும் மௌனமும்- கடிதம்