தோப்பில் முகமது மீரான், கருத்துச்சுதந்திரம்

அன்புள்ள ஜெ

உங்களைப்போன்றவர்கள் சொல்வது இந்துக்கள் திரும்பி பல படிகள் இறங்கிச்செல்லவேண்டும் என்று. முஸ்லீம்களைப் பாருங்கள் என்றுதான் அத்தனை இந்துத்துவர்களும் நாத்தெறிக்கப் பேசுகிறார்கள். ஏன் பார்க்கவேண்டும் என்றுதான் நான் கேட்கிறேன்.ஒரு முஸ்லீம் மதநிந்தனை என்று கோபம் கொள்வது மேலே ஏறி வரமுடியாத காரணத்தால். அது மன்னிக்கப்படலாம். ஓர் இந்து மதநிந்தனை என்று பேசுவது அவனுக்கு ஆசிரியர்களாக வந்த அத்தனை ஞானிகள் முகத்திலும் எட்டி உதைத்து பல படிகள் கீழிறங்குவதன் மூலம்


உங்களின் இந்த வார்த்தைகளைப் படித்துக் கொண்டிருந்தபோது என் கையில் இருந்த புத்தகம் ” ஒரு கடலோர கிராமத்தின் கதை ” மிக ஏதேச்சையாக நிகழ்ந்ததுதான் . 88ல் வெளிவந்திருக்கிறது . நான் அப்போது ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் . பெருமாள் முருகன் விவகாரம் உச்சகட்டத்தில் இருக்கும் இவ்வேளையில் இப்புத்தகம் என்னுள் ஆயிரம் கேள்விகளை எழுப்பியபடி இருக்கிறது . கடலோர கிராமம் என்று முகமது மீரான் சுட்டியிருப்பது இன்றைய குமரி மாவட்டத்து தேங்காய்ப்பட்டினம் . கற்பனையான ஏதோ ஓர் ஊர் அல்ல . அவரது சொந்த கிராமமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . பெரும்பான்மையோர் இசுலாமியர்கள் . மீரான் உங்களது நண்பர் என்பதையும் அறிவேன் .

ஊருக்கு வரும் மதகுரு ( தங்ஙள் ) முதலாளி அகமது கண்ணு வீட்டில் தங்க வைக்கப் படுகிறார் . அங்கிருந்தபடியே பேய் ஓட்டுகிறார் . தீராத வியாதிகளை எல்லாம் தீர்க்கிறார் . எல்லாவற்றையும் விட என்னைப் பிடித்து நிறுத்தியது , திருமணம் ஆகி பதினாலு வருடங்கள் கழிந்தும் பிள்ளைப் பேறு இல்லாமல் இருக்கும் பெண்ணை ரகசியமாக உறவு கொண்டு பிள்ளை பாக்கியம் தருகிறார் . ஊருக்குள் வரும் இங்கிலீஷ் பள்ளியை மதத்திற்கு எதிரானது என்று இரவோடு இரவாக கொளுத்தி சாம்பலாக்குகிறார்கள். 60 வயது கிழவனுக்கு 12 வயது சிறுமியைக் கட்டி வைக்கிறார்கள்

இது எல்லாம் 80 களிலேயே அச்சில் கொண்டு வந்திருப்பது புரட்சி அல்லாமல் வேறென்ன ? ஒரே வித்தியாசம் மீரான் பெருமாள் முருகனைப் போன்று ஒரு அபத்தத்தைச் செய்யவில்லை . இது ஆய்வு செய்து உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் என்று முன்னுரையில் எழுதவில்லை . இது புனைவு போனால் போகிறதென்று விட்டுவிட்டார்களா ? அல்லது சலசலப்பை ஏற்படுத்தியதா என்பதைச் சொல்லுங்கள் ஜெ . அப்படி ஒரு புரிதலும் , சகிப்புத்தன்மையும் இசுலாமியர்களிடம் இருந்ததென்றால் முதல் பத்தியில் இருக்கும் உங்கள் வார்த்தைகளோடு முரண் படுகிறதல்லவா ?

இது நாவலாக வெளிவருவதற்கு முன்னரே முஸ்லிம் முரசு என்னும் இசுலாமிய இதழில் தொடராக வெளிவந்தது என்று அறிந்தபோது மேலும் ஆச்சர்யமடைந்தேன் . உங்கள் கருத்தை அறிய ஆவலாக இருகிறேன் .

அன்புடன் ,

thoppil111
சுரேன்

அன்புள்ள சுரேன்,

இன்று இஸ்லாமிய மதத்தில் உள்ள போக்குகளை கூர்ந்து கவனித்தால் இதைப்புரிந்துகொள்ள முடியும். இஸ்லாமில் வலுவான சமூகவிசையாக இன்று உள்ளது வஹாபியப்போக்கு. அது ஒருவகை சீர்திருத்தப்போக்கு, அதே சமயம் அதி தீவிரமான அடிப்படைவாத மனநிலை கொண்டது.

[பழமைவாதம் வேறு அடிப்படைவாதம் வேறு. பழமைவாதம் அதன் நெடுங்கால வரலாறு காரணமாகவே பலவகையான சமரசங்களையும் ஏற்றுக்கொண்டிருக்கும். அடிப்படைவாதம் பழைமைவாதத்துக்கு எதிரான சீர்திருத்த நோக்குள்ளதாக இருக்கும். ஆனால் அதன் இலக்கு அரசியலதிகாரம் என்பதனால் பழைமையில் உள்ள சில சாரம்சமான விஷயங்களை அது மேலும் ஆவேசத்துடன் முன்னிறுத்தும். எந்த விதமான சமரசமும் அற்றதாக இருக்கும். போர்க்குரலாக ஒலிக்கும்- இவ்விஷயத்தைப்பற்றி நான் மிக விரிவாக காந்தியும் சனாதனமும் என்ற கட்டுரையில் எழுதியிருக்கிறேன்]

இஸ்லாமில் உள்ள வஹாபியப் போக்கு தங்கள்கள், மாயமந்திரங்கள். பலவகையான திருவிழாக்கள்,நம்பிக்கைகள், ஆசாரங்கள் ஆகியவற்றுக்கு எதிரானது. அவற்றையெல்லாம் தோப்பில் முகமது மீரானை விடவும் கடுமையாக எதிர்ப்பவர்கள் வஹாபியர். அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் கூட்டம் போட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மறுபக்கம் அவர்கள் குர்ஆன் மீதும் நபி மீதும் மறுகேள்விக்கே இடமில்லாத நம்பிக்கையைக் கோருகிறார்கள். ஒரு சிறிய ஐயத்தைக்கூட மதநிந்தனையாகவே கருதுகிறார்கள். மதநிந்தனையை தாங்களே வன்முறை மூலம் தண்டிக்கிறார்கள்.

கேரளத்தில் என்ன ஏது என்று தெரியாமல் ஒரு பேராசிரியர் கலீல் கிப்ரானின் ஒரு வரியை தேர்வில் கேள்வியாகக் கேட்கப்போய் அதை மதநிந்தனை என தவறாக நினைத்த வஹாபியர் அந்தப் பேராசிரியரின் கையை வெட்டி வீசியது நினைவிருக்கலாம். அப்போது பொதுவாக இந்திய ஊடகங்கள் அமைதிகாத்ததும் நாமறிந்ததே.

இந்துமதத்திற்குள் இன்று பழைமைவாதம் மட்டுமே உள்ளது. நவீன அடிப்படைவாதத்தை உருவாக்கி நிலைநிறுத்தும் முயற்சிகள் பெருமளவு வெற்றிபெறவில்லை. ஆகவேதான் ராமனைச் செருப்பாலடிக்க முடிகிறது. சாதியாசாரங்களைக் குறைசொல்ல முடியவில்லை. [இன்று உலகில் உள்ள மதங்களில் மதநிந்தனையை தண்டனைக்குரிய, மரணதண்டனைக்குரிய, குற்றமாகக் கருதும் ஒரே மதம் இஸ்லாம்தான்]

தோப்பில் முகமது மீரான் அவர்களை நான் முதலில் சந்தித்தபோது அவர் வஹாபியக் கருத்துக்களால் கவரப்பட்டவராக இருந்தார். அதன்பொருட்டு பழைமைவாதிகளால் ஊரைவிட்டு விரட்டப்பட்டு நெல்லையில் வாழ்ந்திருந்தார். வஹாபியம் என்பது மத ஆசாரங்களுக்கு எதிரானது, ஆனால் குர்ஆனை அதி தீவிரமாக முன்னிறுத்துவது என்பதையே நான் அவரிடமிருந்துதான் அறிந்தேன்.

அத்தகைய இதழில்தான் அவரது நாவல் தொடராகவும் வந்தது. அவர் செய்தது பழைமைவாத எதிர்ப்பாகவே கொள்ளப்பட்டது, மதநிந்தனையாக அல்ல. அவர் உறுதியான இஸ்லாமிய நம்பிக்கை கொண்டவராகவே எப்போதும் இருந்தார். இஸ்லாமில் மதநிந்தனை என்பது குர்ஆன், நபி,ஹதீஸுகளை மறுப்பதுதான். அவநம்பிக்கை கொள்வதும்கூட மதநிந்தனையே.

இதுநாள்வரை இங்கே இஸ்லாமிய மதத்தின் ஆசாரங்கள் சடங்கு விமர்சிக்கப்பட்டுள்ளன. நபியையோ குர்ஆனையோ ஐயப்படவோ விமர்சிக்கவோ எவரும் அனுமதிக்கப்பட்டதில்லை. அதைப்பற்றி ஒரு முன்ஜாமீன் எடுத்தபின்னர்தான் எல்லாரும் பிற கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். பிறமதத்தவரும் நாத்திகர்களும் கம்யூனிஸ்டுகளும்கூட.

பின்னாளில் தோப்பில் வஹாபியர்களின் அலட்டல் மூலம் இஸ்லாமிய சமூகம் கொள்ளும் பிளவுகளை விமர்சித்து அஞ்சுவண்ணம் தெரு என்ற நாவலை எழுதியிருக்கிறார்.அப்போதும் மதத்தின் ஆதார நம்பிக்கைகளை முழுமையாக ஏற்று ஒரு தீவிர முஸ்லீமாக தன்னை முன்வைத்துக்கொண்டே எழுதியிருக்கிறார். வேறெப்படியும் உலகில் எங்கும் எவரும் செயல்பட முடியாது இன்று.

ஜெ

முந்தைய கட்டுரைமேலும் தஸ்தயேவ்ஸ்கி
அடுத்த கட்டுரைசார்லி ஹெப்டோ -கருத்துச் சுதந்திரம்-கடிதங்கள்