அன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழா

1

ஞாயிறு மாலை தான் பூமணி பாராட்டு விழா தான் என்றாலும், சனிக்கிழமை காலையிலேயே ஆரம்பித்தது இலக்கிய கொண்டாட்டம்.

ஜெயமோகன் கோவையிலிருந்து காலை தான் வந்தார். சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த நண்பர் தனாவின் வீட்டுக்கு காலை பதினொரு மணிக்கு வந்து சேர்ந்தோம். அவர் சிறிது ஓய்வெடுக்கட்டும் என நாங்கள் நினைத்திருந்தாலும், ஒரு பதினந்து நிமிடத்தில் தயாராகி வந்து விட்டார்.

மதியத்துக்குப் பின் தான் சந்திப்பு என தளத்தில் அறிவிப்பு கொடுத்திருந்தாலும், காலையிலிருந்தே வாசகர்கள் வந்தவண்ணம் இருந்தனர். காலையில் வந்த வாசகி மங்கை அவர்களின் கேள்விகள் ஆரம்பம் எனலாம், அவர் கொண்டுவந்திருந்த கேக் போலவே சில கேள்விகளும் சுவையாகவே இருந்தன.

வெண்முரசு பற்றிய கேள்விகளுடன் ஆரம்பித்தது அன்றைய உரையாடல். பெண் எழுத்து, ஆண் எழுத்து என்று வித்தியாசமில்லை என விவாதிக்கப்பட்டது. படைப்பாளியின் மனம் இயங்குவது ஆழ்மனத்தில் அங்கே பெண், ஆண், ஜாதி எந்த வித்தியாசமும் இல்லை. நல்ல படைப்பாளி எந்த ஒரு பாத்திரத்தின் மன நிலையையும் படைப்பில் கொண்டுவந்துவிட முடியும் என்றார் ஜெ.

பின்னர் இலக்கியம், தத்துவம் வரலாறு என பல தளங்களில் உரையாடல் தொடர்ந்தது, எல்லாவற்றிலுமே மைய அச்சாக காந்தியம் இருந்ததாக எனக்குத் தோன்றியது. காந்திய வழிமுறைகளில் வன்முறைக்கும் வெறுப்புணர்வுக்கும் இடமில்லை என்று கூறிய ஜெயமோகன், போராட்டத்தின் நோக்கம் சரியாக இருந்தால் கூட, சில நேரங்களில் வெளிப்படும் வன்முறையால் அது எப்படி மதிப்பிழக்கும், முடக்கப்படும் என்றும் விளக்கினார்.

வெற்றியை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்ட, தற்காலிக சமரசத்துக்கும், பெரிய வெற்றிகள் சாத்தியமிலாதபோது சிறிய வெற்றிகளுக்கும், இடமில்லாத போராட்டம் காந்திய போராட்டமில்லை என்றார். காந்திய வழிமுறை படிப்படியாக முன்னேறுவது.

பூமணியின் மனைவியும் மகனும் பேரனும்
பூமணியின் மனைவியும் மகனும் பேரனும்

காந்தி எப்படி தனது நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் வன்முறையும் வெறுப்புணர்வும் சற்றும் நுழையாதபடி பார்த்துக்கொண்டார் எனவும், ஆங்கில ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தாலும், அவர் ஆங்கிலேய மக்களிடமும் பதிரிக்கைகளிடமும் எப்படி செல்வாக்கு மிக்கவராக இருந்தார் என்பதும் விவாதிக்கப்பட்டது.

மதிய உணவுக்குப் பின்னர், ஒரு எதிர்பாராத சந்திப்பு. ஜெயமோகன் அவர்களின் நீண்டகால இலங்கை நண்பரான திரு கருணாகரன் வந்திருந்தார். நீண்ட கால கடித நண்பர்கள் என்றாலும் இருவரும் இப்போதுதான் நேரடியாக சந்திக்கிறார்கள், அதுவும் வாசகர்கள் முன்னிலையில் எனபது ஒரு நெகிழ்ச்சியான கணமாக இருந்தது.

கருணாகரன்
கருணாகரன்

கருணாகரன் இப்போதும் இலங்கைவாசிதான். தமிழர் இயக்கங்கள், ஆயுத போர், முகாம், போருக்குப் பின்னரான நிலைமை என அனைத்திலும் நேரடி அனுபவம் உள்ளவர். பல நேரடி இழப்புகளைச் சந்தித்தவர். அந்த சந்திப்பு மிக உணர்ச்சிபூர்வமாக அமைந்தது.

கருணாகரன் அவர்களின் உரையாடல் தொடர்ந்தது. அவரது அனுபவங்கள் கிட்டத்தட்ட அதுவரை பேசிய காந்திய சிந்தனைகள் ஒவ்வொன்றுக்கும் சான்று போல இருந்தது ஒரு எதிர்பாராத ஆச்சர்யம். ஆயுதப்போராட்டங்களில் பல இழப்புகளைச் சந்தித்த ஒருவர் அன்பையும், காந்தியையும் பேசும்போது அது நம்மை அசைத்து விடுகிறது.

இரவும் தொடர்ந்தது உரையாடல்.மாலை தான் சென்னை வந்து சேர்ந்த பாலா சனி இரவே சந்திப்புக்கு வந்துவிட்டார். இந்த விழாவை நடந்தவேண்டும் என ஆரம்பித்தவர் நமது பாலா. சில வாரங்களாக சென்னையில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து தொடர்புகொண்டு ஏற்பாடுகளைச் செயல்படுத்தி வந்தார். செந்தில் பம்பரமாக சுழன்று செயலாற்றினான். தனா பல முக்கிய பொறுப்புகளை எடுத்துக்கொண்டார். ஜெயகாந்தனும் பாலு மகேந்திராவும் செயல் வீரர்கள்.

சனி இரவு ஒரு மணிக்கு மேல்வரை உரையாடல் தொடர்ந்தது.

ஞாயிறு காலை, விழாவின் நாயகர் பூமணி ரயிலில் வந்து சேர அவரை ஹோட்டலுக்கு அழைந்துச் சென்றோம். அன்று கோவை நண்பர்களும் வந்து சேர சபை களைகட்டியது. உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தாலும் விழா ஏற்பாடுகள் பற்றிய பரபரப்பும் தொற்றிக்கொண்டிருந்தது.

விழா மிக சிறப்பாக அமைந்தது.

சுரேஷ் பாபு வலது ஓரம்
சுரேஷ் பாபு வலது ஓரம்

விழாவின் ஒரு முக்கிய அம்சம் நண்பர்களைச் சந்திப்பது. அதுவும் மிக சிறப்பாகவே அமைந்தது. பல புதிய நண்பர்களும் அறிமுகம் ஆனார்கள்.

பூமணி அவர்கள், சென்னைக்கு வந்ததில் இருந்து, திரும்ப அவரது ஹோட்டல் அறைக்கு சென்று விடுவது வரை அவரை கவனித்ததில், மிக உற்சாகமானவராக இருந்தார். விழாவில் பேசிய அவர், சாதி மதம் அரசியல் இவற்றின் பிடியிலிருக்கும் சமுதாயம் பற்றி தன் நாவல் பேசுவதாகக் கூறிய பூமணி,விருதுகளை விட, படைப்பு மக்களிடம் கொண்டு செல்வதே மகிழ்ச்சி, அதை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் செய்கிறது என பாராட்டி, வாழ்த்துகளை அன்போடு ஏற்றுக்கொண்டார்.

பூமணியின் மகனும், குட்டி பேத்தியும் வந்திருந்தது மகிழ்ச்சி. திரும்ப செல்லும்போது அடுத்த நாவலுக்கு தயாராகிவிட்டார் என அவரது மனைவி மிக மகிழ்ச்சியோடு சொன்னது எங்களுக்கும் கூடுதல் மகிழ்ச்சி.

பூமணியின் அரசியல், சமூகவியல் மற்றும் தத்துவ தரிசனங்கள் பற்றியதாக அமைந்தது அவரது உரை. முற்போக்கு எழுத்தின் நம்பிக்கையையும், நவீனத்துவத்தின் வடிவ அழகையும் ஒருங்கே கைகொள்ளும் படைப்புகள் அவை என்றார்.

பூமணியை அன்பின் உபாசகர் பூமணி என குறிப்பிட்ட ஜெயமோகன், பூமணியின் படைப்புகளின் ஜாதி கடந்த மதம் கடந்த அன்பைப்பற்றி பேசினார். பிறகு, வெக்கை ஆகிய படைப்புகளையும் குறிப்பிட்ட அவர், அவற்றின் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகும் அன்பையே தரும் இயல்பை சுட்டிக்காட்டினார்.

விழா மிக மகிழ்ச்சியுடன் நிறைவடைந்ததது. இந்த மகிழ்ச்சிக்கு அந்த இரு நாட்களும் காந்திய சிந்தனைகளின் செயல் வடிவம் போல் இருந்ததும் காரணம் என்று சொல்லலாம்.

சுரேஷ்பாபு சென்னை

முந்தைய கட்டுரைபிரயாகை முடிவு
அடுத்த கட்டுரைமின்தமிழ் அட்டை – ஒரு விவாதம்