பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 5
நள்ளிரவில் மூன்றாம் சாமத்தின் தொடக்கத்துக்காக பெருமுரசு ஒலித்தது. மிதுனராசிக்கு இடம்பெயர்ந்த வியாழன் ஊதப்பட்ட அனல்துண்டு போல சந்திரன் சூடிய மணிமுடியில் ஒட்டியிருந்து ஒளிவிட்டது. காலடியில் ரோகிணி ஊசி முனை போல சுடர்ந்து அமர்ந்திருந்தாள். சந்திர வட்டம் முகிலில் முழுமையாக மறைந்து பின்னர் மறுபக்கம் வெளிப்பட படபடத்தபடி காகம் ஒன்று மரத்தில் இருந்து எழுந்து வானில் சுழன்று பின் அமைந்தது.
காம்பில்யத்தின் தெற்குக்கோட்டை வாயிலின் அருகே பெருவீதியின் மும்முனையில் இருபக்கமும் நிரைவகுத்த எரிபந்தங்களின் நடுவே படைக்கலங்களுடன் அணிகொண்ட வீரர்களின் முகப்பில் நின்றிருந்த ரிஷபர் நிலைகொள்ளாமல் கிழக்கை நோக்கிக் கொண்டிருந்தார். இருண்ட வானில் எரியம்பு எழுந்தமைவதைக் கண்டதும் அவர் திரும்பி கைகாட்ட, அறிவிப்பாளன் குழற்சங்கை எடுத்து ஊதினான். கோட்டைமேடைமேல் இருந்த பெருமுரசம் சினமெழுந்த யானையின் வயிறு போல உறுமத் தொடங்கியது. கூட்டமாக யானைக்கன்றுகள் பிளிறுவதுபோல கொம்புகள் முழங்கின.
ஒற்றைக்குதிரை இழுத்த திறந்த பந்தத்தேர் நாற்புறமும் பன்னிரு எண்ணைப்பந்தங்கள் எரிய முதலில் வந்தது. காற்றில் நெருப்புகள் கிழிந்து பறந்துகொண்டிருக்க நடுவே நின்றிருந்த எண்ணைச்சேவகன் கலத்திலிருந்து நீண்ட அகப்பையால் அள்ளி அள்ளி ஊற்றிக்கொண்டிருந்தான். துடிதாளமென குளம்புகள் ஒலிக்க, உருவிய வாளுடன் அமர்ந்த வீரர்களுடன் நான்கு படைக்குதிரைகள் அதைத் தொடர்ந்து வந்தன. அதன்பின் செந்தழலென படபடத்துப் பறந்த பாஞ்சாலத்தின் விற்கொடியுடன் கொடிச்சேவகன் வெண்குதிரையில் வந்தான். பந்தங்களின் வெளிச்சத்தில் வெள்ளிச்சிற்பங்களில் பொன்மின்ன, செந்நிறத் திரைச்சீலைகளில் தழல்நெளிய, இரட்டைக்குதிரைகள் இழுத்த அரசரதம் வந்து சகட ஒலியுடன் நின்றது. கடிவாளம் இழுபட்ட குதிரைகள் பற்கள் தெரிய தலைதிருப்பி விழித்த கருங்கண்களில் பந்தச்சுடர்களை காட்டின.
கூடிநின்ற வீரர்களும் ஐங்குலத்துப் பூசகர்களும் வாழ்த்தொலி எழுப்பினர். ரிஷபர் ஒடிச்சென்று தலைவணங்கி நின்றார். ரதவாயில் திறந்து வெள்ளிப்படிகளில் காலெடுத்து வைத்து கையில் பூசைத்தாலத்துடன் மாயை இறங்கிவந்தாள். தொடர்ந்து திரௌபதியின் கரிய வெற்றுக்கால்கள் திரைவிலக்கி வந்து படிகளில் மெல்ல அமைந்தன. செந்நிறமான மரவுரி ஆடையின் மடிப்புகள் உலைய அவள் இறங்கி தரையில் நின்றதும் வாழ்த்தொலிகள் உரத்தன. ரதத்தின் பின்னால் வந்த வண்டியில் இருந்து இறங்கிய தலைமைச் சேடி அழைக்க ரிஷபர் அருகே சென்றார். அவள் சொன்னதைக் கேட்டு அவர் கையசைத்ததும் முரசுகளும் கொம்புகளும் நின்று மங்கல வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின.
திரௌபதியும் மாயையும் காதிலும் முலைகள் மேலும் அணிகளேதுமின்றி இடைசுற்றி எடுத்து மார்பில் போடப்பட்ட செந்நிற மரவுரி ஆடை மட்டும் அணிந்திருந்தனர். தாலங்களில் மங்கலப் பொருட்களுடன் நின்ற ஐந்துகுலப் பூசகர்களும் அருகே வந்தனர். கிருவிகுலப் பூசகர் மண், கல், வேர், கனி, பொன் என ஐந்து மண்மங்கலங்களை தாலத்தில் ஏந்தி வந்து திரௌபதியின் முகத்தை மும்முறை உழிந்து வாழ்த்தினார். சிருஞ்சய குலப்பூசகர் நீர்ச்சிமிழ், பரல்மீன், முத்து, சங்கு எனும் நான்கு நீர்மங்கலங்களையும் சோமக குலப்பூசகர் சுடர், நெய், வைரம் என்னும் மூன்று எரிமங்கலங்களையும் துர்வாசகுலப் பூசகர் வெண்கொக்கின் இறகு, தளிரிலை என இரண்டு வளிமங்கலங்களையும் கேசினி குலப்பூசகர் விண்மங்கலமான ஆடியையும் தாலத்தில் ஏந்திவந்து அவளை வாழ்த்தினர்.
ஐந்து பருக்களின் மங்கலங்களையும் ஒன்றாக்கி ஒரு பெரியதாலத்தில் பரப்பி அதன் நடுவே மண் அகலில் சுடரை ஏற்றி அவளிடம் அளித்த சோமக குலத்து மூத்தபூசகர் “தேவி, இப்பூசனைப்பொருட்களை உக்ரசண்டிகைக்குப் படைத்து வழிபடுங்கள். ஐந்து பருக்களும் அன்னையின் அடிப்பொடியே ஆகுக. கொல்வேல் தொல்பாவை வாழ்த்துடன் மீளுங்கள். ஒன்று நினைவுகூர்க. இச்சுடர் இங்கிருந்து அன்னையின் ஆலயம் செல்வது வரை அணையலாகாது. மீண்டும் இதை கொளுத்திக்கொள்ளும் எப்பொருளும் தங்களுக்கோ தோழிக்கோ அளிக்கப்படாது. இச்சுடரைக் கொண்டு அன்னையின் ஆலயவிளக்குகளை ஏற்றுங்கள். அவ்விளக்கிலிருந்து மீண்டும் ஒரு சுடர்பொருத்திக்கொண்டு மீளுங்கள்” என்றார்.
கிருவிகுலத்து முதுபூசகர் ”நீங்கள் கொண்டுவரும் அச்சுடரால் ஐந்து அன்னையர் ஆலயங்களிலும் நெய்விளக்குகள் ஏற்றப்படும். இரவெல்லாம் பூசனைகளும் விடியலில் பலியும் முடிந்தபின் ஐந்து அன்னையரின் சுடர்களில் இருந்தும் ஐந்து சுடர்கள் கொண்டுசெல்லப்படும். முதல்சுடர் தென்திசை ஆளும் மூதன்னையரின் நினைவுக்கற்களுக்கு முன் ஏற்றப்படும். இரண்டாவது சுடர் கன்னித்தெய்வங்களுக்கும் மூன்றாம் சுடர் கருநிறைத் தெய்வங்களுக்கும் நான்காம் சுடர் முலையெழு பசுக்களுக்கும் ஏற்றப்படும். ஐந்தாம் சுடர் அந்தப்புரத்தின் தென்மேற்கு மூலையை ஆளும் கன்னிகை யட்சிக்கு முன் ஏற்றப்படும். அத்துடன் இந்த மணச்சடங்குகள் முடிவடைகின்றன. இந்நகரில் அனைத்துக் கடன்களையும் நிறைத்து கனி மரத்தை என நீங்கள் விடுதலை கொள்வீர்கள். அன்னையர் வாழ்த்துக்களும் பெண்ணை தொடரும் தெய்வங்களும் மட்டுமே உங்களுடனிருக்கும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார்.
திரௌபதி அந்தத் தாலத்தில் எரிந்த சிறிய நெய்ச்சுடரை விழிகளுக்குள் அனல்துளிகள் தெரிய நோக்கிக்கொண்டிருந்தாள். மாயை “தாலத்தை வாங்கிக்கொள்ளுங்கள் அரசி” என்றாள். திரௌபதி பாவை என கைநீட்டி அதை வாங்கிக்கொண்டதும் சோமகபூசகர் மாயையிடம் “தேவிக்குத் துணைசெல்க! அன்னையின் பூசனைக்கான முறைமைகளை நீ அறிவாய்” என்றார். “ஆம்” என்றாள் மாயை. ”அவ்வாறே ஆகுக!” என்றார் பூசகர்.
பூசகர் கைகாட்ட மீண்டும் பெருமுரசுகளும் கொம்புகளும் ஒலிக்கத் தொடங்கின. அவர்கள் இருவரும் பெருஞ்சாலையின் கை என பிரிந்த சிறுவழியில் நடந்து கோட்டையின் தென்வாயிலை கடந்தனர். அவர்கள் வெளியேறியதும் சிறுவாயில் மூடப்பட்டது. ஒலிகளும் ஒளிகளும் மெல்ல பின்னிட அவர்களுக்கு முன் எண்ணை ஊறி நிறைந்தது போல மங்கிய ஒளியுடன் வானும் கரிய கறைவடிவங்களென காடும் விரிந்தன. நிலவு முழுமையாகவே முகில்திரைக்கு அப்பாலிருந்தது. கண்முன் வளைந்த வடக்கு வான்சரிவில் விண்மீன்கள் தோன்றிக்கொண்டிருந்தன. தாலத்திலிருந்த சிறிய சுடர் நாற்புறமும் நெருக்கிய இருளால் எற்றப்பட்டு அலைப்புற்றுத் தவித்தது. அசைகையில் சிறிய நாக்கு போலவும் அமைகையில் கூர்வேல் ஒன்றின் தங்கமுனைபோலவும் அது உருமாறிக்கொண்டிருந்தது.
திரௌபதியின் நீண்ட குழல் அவள் நடையில் அலையிளகியது. உடலில் உரசிய மரவுரி பிறிதொரு மூச்சொலி என கேட்டது. திரௌபதியின் உடலின் வெம்மையை மாயையால் உணர முடிந்தது. செல்லச்செல்ல அவ்வெம்மை ஏறிஏறி வருவதைப்போல் தோன்றியது. அது அவளை மேலும் அவளருகே இழுத்தது. சுடரொளியில் இருவர் நிழல்களும் பொங்கி அவர்களுக்குப் பின்னால் வானோக்கி எழுந்து அசைந்தன. பேருருவக் கைகளை காடுகளுக்கு மேல் வீசி மரங்களுக்கு மேல் காலெடுத்து வைத்து நடந்தனர்.
புதர்களுக்குள் இரு அனல்துளிகளை மாயை கண்டாள். உடனே மேலும் இரு புள்ளிகள் தெரிந்தன. முதல்நரி அசையாமல் தலைதூக்கி நோக்கிக்கொண்டிருக்க இன்னொன்று தலையைத் தாழ்த்தி மெல்ல முனகியது. சுடரிலிருந்து விலகியதுமே விழிகள் கூர்மைகொண்டமையால் நரியின் அசைவை காணமுடிந்தது. நின்றிருந்த நரியின் கழுத்துமயிரின் சிலிர்ப்பு கூட தெரிந்தது. மாயை திரௌபதியை நோக்கினாள். அவள் நிமிர்ந்த தலையுடன் வானொளி தெரிந்த விழிகளுடன் நடந்துகொண்டிருந்தாள். சற்றே தூக்கிய முகவாயின் கீழ் கழுத்தின் வளைவில் வழியும் எண்ணையின் மென்னொளி. கன்னத்து புன்மயிர்க்கோவையை நனைத்திருந்தது எந்த முகிலில் கரந்த நிலவொளி என்று தெரியவில்லை.
நிலவில்லாத வானுக்கு எங்கிருந்து ஒளிவருகிறது என மாயை எண்ணிக்கொண்டாள். வானம் ஒரு திரை என்பார்கள் சூதர்கள். அதற்கப்பால் உள்ளன மூதாதையர் வாழும் உயிர்ப்புலகு. அவ்வுலகின் ஒளி திரைவழியாக கசிகிறதா? அங்கிருந்து இறங்குவதா கோரைப்புல் சூடி நின்ற செண்டுகளை சிலிர்த்து அசையச்செய்து செல்லும் இளங்குளிர்காற்று? மூதன்னையரே காற்றென வந்து மரங்களில் அசைகிறார்களா? அப்பால் மரக்கூட்டங்கள் இருளாக அலையடித்தன. அலையசைவு கூடியிருக்கிறதா?
அப்போதுதான் தன் குழல்கற்றை எழுந்து முன்னால் பறந்துகொண்டிருப்பதை மாயை உணர்ந்தாள். உதிரி மயிர்க்கற்றைகள் கன்னங்களில் படிந்து இதழ்களில் உரசின. கனத்த மரவுரி ஆடை உடலைக்கவ்வியபடி துடித்தது. அகல்சுடர் கைபட்டு அழிந்த குங்குமத்தீற்றல் போல சரிந்து பறந்தது. குறுகி அணையப்போய் மீண்டும் எழுந்தது. அவர்களைச் சூழ்ந்து பல்லாயிரம் செண்டுகளை ஏந்திய கோரைப்புல்வெளி அலையடித்தது. மாலையிளவெயிலில் அவை தழலென ஒளிவிடும். அவை விழையும் தழல். அவற்றின் வேர் உறிஞ்சும் நீரின் உயிர். காய்ந்த புல்லும் சதுப்புச்சேறும் பாசியும் கலந்த மணம். மிகத்தொலைவில் இருளில் கிடக்கும் தீட்டப்பட்ட வாள் என, கரிய தோலின் வடு என சிற்றாறின் நீரொளி. அதற்கு அப்பால் காடு கொந்தளிப்பதை கேட்க முடிந்தது. வளியருவி ஒசை வேறெங்கோ இருந்து கேட்டது.
மாயை அச்சத்துடன் திரௌபதியின் தாலத்தில் எரிந்த சுடரை நோக்கினாள். வண்டின் சிறகு போல சுடர் அதிர்ந்துகொண்டிருந்தது. திரௌபதி நின்று குனிந்து தன் தாலத்திலிருந்து முன்னாலெழுந்து பறந்த சுடரை நோக்கி ஒரு கணம் நின்றாள். அவள் கூந்தல் எழுந்து தாலம் மேல் விழுந்தது. இடக் கையால் தாலத்தை தோள்மேல் ஏந்திக்கொண்டு கூந்தலை அள்ளிச் சுழற்றி பெரிய கொண்டையாக்கி கட்டினாள். அகல்சுடரை வலக்கையால் எடுத்துகொண்டு குனியாமல் உடல்தாழ்த்தி அமர்ந்து அகல்நெய்யை புல்லின் காய்ந்த கூளத்தில் ஊற்றி அதன் மேல் சுடரை வைத்து பற்றவைத்தாள். அவள் என்ன செய்கிறாள் என ஒரு கணம் கடந்தே மாயை உணர்ந்தாள். அச்சத்துடன் “அரசி!” என்று அவள் அழைத்தாள்.
திரௌபதி அவளைக் கேளாதவள் போல ஒற்றைக்கையாலேயே தன் ஆடையை களையத் தொடங்கினாள். இடையில் செருகியிருந்த கொசுவத்தை எடுத்து சுழற்றி தோளிலிருந்து விடுவித்து காற்றில் வீசி கையில் சுருட்டி பந்தாக்கி வலக்கையில் எடுத்துக்கொண்டு நின்றாள். அவள் செய்வதன் பொருளை உணர்ந்த மாயையும் தன் தாலத்தை நிலத்தில் வைக்காமலேயே ஆடையைக் கழற்றி வலக்கையில் எடுத்துக்கொண்டு அசையாமல் நின்றாள்.
கோரையில் பற்றிய நெருப்பிலிருந்து பச்சைத்தழை கருகும் புகைமணம் எழுந்தது. தைலமெரியும் மணமாக அது மாறியது. மஞ்சளாகவும் பின் சற்றே நீலமாகவும் கலைந்து பரவிய காற்றால் ஊதப்பட்டு சுடர் சடசடவென்ற ஒலியுடன் சிதறி எழுந்து கோரைத் தாள்களில் பற்றி ஏறியது. பக்கவாட்டில் இருந்து வீசியகாற்று கோட்டையில் மோதிச்சுழன்று அவர்களுக்குப்பின்னாலிருந்து விசையுடன் வீசியது. காற்றில் ஏறி திளைத்தாடிய தழல் ஒன்றிலிருந்து ஒன்றென எழுந்து கோரைத்தாள்களை கவ்விக்கொண்டு விரிந்தது. ஒளிமிக்க திரவம் கலத்திலிருந்து கொட்டப்பட்டு சிதறிப்பரவுவது போல தழல் நாற்புறமும் வடிவற்ற பரப்பாக விரிவதை மாயை கண்டாள்.
அப்பால் புதர்களில் இருந்து நரிகள் ஊளையிட்டன. கோரைகளை வகுந்தபடி அவை ஓடுவது தெரிந்தது. புகையும் கரிச்சுருள்களுமாக வெங்காற்று மேலெழுந்து சென்றது. நெருப்பு அணையுடைத்துப் பரவும் நீரென நான்கு பக்கமும் பெருகி விரிந்தது. அது எரித்துச்சென்ற பின் கிடந்த சாம்பல் படிந்த சதுப்பின் மேல் காலெடுத்து வைத்து திரௌபதி நடந்தாள். பொசுங்கித் தீராத புற்குற்றிகள் கால்பட்டு கனல்பொறிகளாகி சிதறின. உடைந்த கற்சில்லுகளில் அனல் பளபளத்தது. சதுப்பில் வெந்த தவளைகள் மல்லாந்து கால் நீட்டி துடித்துத் துடித்து விழுந்துகொண்டிருந்தன. வெந்து உரிந்த பாம்புகள் வளைந்து அதிர்ந்து சொடுக்கி நீண்டன.
அருகே தேங்கிய நெருப்பு என ஒளிவிட்டது நீர்ப்படலம் என்று மாயை கண்டாள். திரௌபதி தன் மரவுரியாடையை அந்த நீரை நோக்கி வீசியபின் அதற்கு வந்து சேர்ந்த அகன்ற நீரோடை வழியாக நடக்கத் தொடங்கினாள். மாயையும் ஆடையை நீரில் போட்டுவிட்டு அவளை பின்தொடர்ந்தாள். சதுப்பு நீரோடையில் முழங்கால் வரை அழுந்தும் சேறுதான் இருந்தது. கலங்கி எழுந்த சேற்றில் புளித்த மாவின் வாசனை எழுந்தது. சிறுதவளைகள் புல்வெளியில் இருந்து நீர் நோக்கி தாவின. அவர்களைச் சூழ்ந்து செந்தழலால் ஆன ஏரி அலையடித்தது. ஓடிக்களைத்த புரவிக்கூட்டம் போல மூச்சிரைத்து, செம்பொறிகள் வெடித்துச் சிதறி கொப்பளித்தது கானெரி.
நீரும் நெருப்பாகி ஒளிவிட நெருப்பில் நீந்திச்சென்றுகொண்டிருப்பது போல மாயை உணர்ந்தாள். திரௌபதியின் உடலில் வியர்வை பரவி கரிய வளைவுகளில் எல்லாம் செவ்வொளி தெரிந்தது. நெருப்பேந்திய முலைகள். உருகிக்கொண்டிருக்கும் இரும்புச்சிலை என தோள்கள். ஊதிக் கனலும் கரி என விழிகள். எக்கணமும் தழலாக வெடித்து எரிந்து நின்றாடக்கூடும் என்றிருந்தாள்.
நெருப்பலைப்பெருக்கு நடுவே உக்ரசண்டிகையின் ஆலயம் மிதந்து அலைவுறுவது தெரிந்தது. அதன் கருவறைக்கு முன்னாலிருந்த பாறைப்பரப்பைச் சூழ்ந்து அனலின் அலைகள் அறைந்து சுழித்தெழுந்தன. அருகே நின்றிருந்த பாலைமரம் இலை பொசுங்கி தழைந்து அசைந்தது. அதிலிருந்த பறவைக்கூட்டம் கலைந்து வானிலெழுந்து புகைவெளியில் திசையழிந்து கூவி சிறகடித்து மோதிச்சுழித்தது. தொலைவில் இன்னொரு மரம் பற்றிக்கொண்டது. தீநாக்கு வானிருளை நக்க நீண்டு நெளிந்தது. அப்பால் சிற்றாறின் சதுப்பில் ஓடிய நீர்த்தடங்கள் செந்நெருப்பு வரிகளாக இருந்தன. குளம்புத்தடங்கள் செவ்விழிகளாகத் தெரிந்தன. ஆறு எரிப்பெருக்கென வழிந்து வளைந்தோடியது.
பாறையை அடைந்ததும் திரௌபதி குனிந்து எரியும் கோரைத்தாள் ஒன்றை எடுத்துக்கொண்டு நடந்தாள். காலடியால் நடைபாதையென ஆகியிருந்த சதுப்புத்தடத்தின் இருபக்கமும் தீ நின்றெரிந்தது. அவள் ஆலயத்திற்குள் சென்று பூசைத்தாலத்தை தேவியின் முன் வைத்தாள். அன்னை காலடியில் இருந்த கல்லகலில் நெய் ஊற்றி தன் கையில் எரிந்த கோரையால் அதன் திரியை ஏற்றினாள். மாயை தனது தாலத்தை கொண்டு சென்று சண்டிகையின் ஆலயப்படிகளில் வைக்க அதை திரௌபதி எடுத்துக்கொண்டாள்.
சூழ்ந்து கொந்தளித்த செந்தழல் ஒளியில் சுவரோவியமாக எழுந்தருளிய சண்டிகையும் கனலுருவாக தெரிந்தாள். செம்மை, மஞ்சள், வெண்மை நிறங்களால் ஆன அன்னையின் இருபது கைகளில் இருந்த படைக்கலங்களும் விழித்த வட்டவிழிகளில் பதிக்கப்பட்ட செம்பளிங்குக் கற்களும் சுடர்ந்தன. வெறிநகையில் விரிந்த வாயின் இருபக்கங்களிலும் வளைந்த பன்றித்தந்தங்களில் குருதி என அனலொளி வழிந்தது. குருதி வழிய பிளந்த அல்குல் வாயிலுக்குள் இருந்த மும்மூர்த்திகளின் விழிகளும் எரிந்தன.
நெருப்பு நாய்க்குட்டிகளென வந்து காலை முத்தமிட்டது. மாயை துள்ளி விலகி ஓடி பாறைமேல் ஏறிக்கொள்ள உவகைகொண்ட நாய்க்குட்டிகள் துள்ளிக்குதித்து துரத்திவந்தன. அவள் ஓடிச்சென்று பாறைப்பரப்பில் ஏறிக்கொண்டாள். அதன் மேல் வெள்ளெலும்புகள் சிதறிக்கிடந்தன. ஊன் எஞ்சிய தடித்த தொடை எலும்புகள். வளைந்த விலாவெலும்புகள். அவள் கால்களால் அவற்றைத் தட்டி விலக்கியபின் நின்று கொண்டு ஆலயத்திற்குள் பூசை செய்துகொண்டிருந்த திரௌபதியை நோக்கினாள். எதிர்த்திசையிலிருந்து எழுந்து வந்த காற்று கோரைப்புல்வெளிமேல் எழுந்து பரவ மொத்தப்புல்வெளியும் கருகி ஒளியிழந்து குப்பென்று மீண்டும் செந்தழல்பரப்பாகியது. தெற்குக்கோட்டை வாயில் வரை நின்ற பல மரங்கள் எரிந்து எழுந்தன.
மாயை கைகளை நெஞ்சில் சேர்த்துக் குவித்தபடி காற்றுவரும் வடக்கு திசையை திரும்பி நோக்கினாள். காற்று புகைத்திரையை அள்ளி விலக்க வானில் ஊறிக்கனிந்து சொட்ட எழுந்து நிறைந்திருந்த விண்மீன்கள் தெரிந்தன. சிலகணங்களிலேயே அவள் அசையாத விழியாக குனிந்து அத்தழலாட்டத்தை நோக்கிக்கொண்டிருந்த துருவனை கண்டுகொண்டாள். மயக்குற்றவள் போல அண்ணாந்து அதையே நோக்கி நின்றிருந்தாள்.
[பிரயாகை முழுமை]
வெண்முரசு அனைத்து விவாதங்களும்