தன்னறம்

இரண்டாயிரத்து மூன்றில் நான் குடும்பத்துடன் நண்பர் சோமசுந்தரத்தைப் பார்க்க டமன் சென்றிருந்தேன். அவர் எல்லைக் கடற்படையில் உயரதிகாரி. டமன் வருமாறு அழைத்துக்கொண்டே இருந்தார். டமன் நகரில் இருந்து ஏழு மணிநேரப் பயணத்தில் அஜந்தா இருக்கிறது. பேருந்தில் அஜந்தா சென்று வரலாம் என்று கிளம்பினோம்.

போகும்வழியில் ஒரு மோட்டலில் நிறுத்தினார்கள். நல்ல உயர்தரமான கட்டிடம். உள்ளே சென்று ஆளுக்கொரு லஸ்ஸி சாப்பிட்டோம். வெயிலுக்கு அது இதமாக இருந்தது. பேருந்து மீண்டும் கிளம்பியது. அஜிதன் பேருந்தில் வாந்தி எடுக்கக்கூடும் என்பதனால் அவனுக்கு மாத்திரை கொடுத்திருந்தோம். சைதன்யா சின்னப்பிள்ளை ஆனதனால் சளிபிடிக்கும் என லஸ்ஸி கொடுக்கவில்லை.

ஔரங்பாபாத் சென்று இறங்கினால் அஜிதன் உடம்பு கொதித்துக்கொண்டிருந்தது. இறங்கியதுமே வாந்தி எடுத்தான். சளியாக இருக்கும் என்று நினைத்து காய்ச்சலுக்கான மாத்திரை வாங்கிக்கொடுத்து விடுதி அறையிலேயே வைத்திருந்தோம். அது பெரிய முட்டாள்தனம். இரவெல்லாம் காய்ச்சல். அதிகாலையிலே கடுமையான காய்ச்சல். புலம்பவும் உருவெளிக்காட்சிகளைப் பார்க்கவும் ஆரம்பித்துவிட்டான்.

மறுநாள் விடுதியிலேயே கேட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைகளில் ஒன்றுக்குக் கூட்டிச் சென்றோம். ஒரு நான்குமாடிக்கட்டிடம். மூன்று சகோதரர்கள் நடத்தும் மருத்துவமனை. உடனே படுக்க வைக்கச் சொல்லிவிட்டார்கள். மூன்று பையன்களுமே எ·ப்.ஆர்.சி.எஸ் டாக்டர்கள். ஆழமானவர்கள். மிகமிகப் பண்பானவர்கள். மிகச்சிறந்த நிர்வாகிகளும் கூட. மூவருமே எங்கே வந்தாலும் கழுவுதொட்டி கழிப்பறை இரண்டையும் பார்க்காமல்செல்லமாட்டார்கள். தாதிகள் வேலைக்காரிகள் எல்லாருமே அன்பான மனிதர்கள். .அந்த மருத்துவமனைதான் நான் இதுவரை பார்த்ததிலேயே இலட்சிய மருத்துவமனை.

உணவு விஷமாகிவிட்டது என்றார்கள். அந்த லஸ்ஸி கெட்டுப்போயிருந்தது. ”வட இந்தியாவில் லஸ்ஸி சாப்பிடவே சாப்பிடாதீர்கள். மிஞ்சிய மோரில் மேலும் பாலை உறைகுத்திக்கொண்டே இருப்பார்கள். அதில் ஒருபகுதி பாலுக்கு வாரக்கணக்கில் கூட வரலாறு இருக்கும். அதில் சில தப்பான ரசாயனங்கள் இருக்கும்” அஜிதனுக்கு உள்ளே போன ரசாயனம் வாந்தியாக வரமுடியாமல் மாத்திரை தடுத்துவிட்டது.

சரி, உணவு விஷம் என்றால் அனேகமாக குடல் கழுவப்பட்டதும் சரியாகிவிடும் என்று நான் சொன்னேன். அருண்மொழி சைதன்யா இருவரையும் சோமசுந்தரத்துடன் அனுப்பி அஜந்தா எல்லோரா தௌலதாபாத் பார்த்து வரச்சொல்லிவிட்டு நான் ஆஸ்பத்திரியிலேயே இருந்தேன்.

ஆனால் மாலையில் காய்ச்சல் இன்னும் அதிகமாகிவிட்டது. என்னைப்பார்த்து ”அப்பா, உன் பக்கத்திலே யாரு ?” என்று கேட்க ஆரம்பித்தான். ‘அப்பா ஆனை! ஆனை!’ எழுந்து ஓட முயன்றான். முறிமருந்துகளின் கடுமை ஏறியபடியே சென்றது. நான் அருண்மொழி,சைதன்யா இருவரையும் சோமசுந்தரத்துடன் திருப்பி டமனுக்கே போய்விடும்படியும் நான் அங்கே இருந்து பார்த்துக்கொள்கிறேன் என்றும் சொன்னேன். அவர்கள் சென்றார்கள்.

மறுநாளும் அதே காய்ச்சல். உள்ளே சென்ற எதுவுமே நிற்காது. வாந்தி பேதி. காலராவாக இருக்கும் என்று சோதனை செய்தார்கள். காலரா இல்லை. வேறு என்ன? வயிறை பலமுறை கழுவியாகிவிட்டது. பலமுறை முறி மருந்து கொடுத்து விட்டார்கள். மூன்று சகோதரர்களும் மாறி மாறி வந்து பார்த்தார்கள். மறுநாள் காலையிலும் காய்ச்சல் இறங்கவில்லை. சகோதரர்கள் முகத்தில் கவலை படிந்துவிட்டது.

மாடியில் ஒரு சந்திப்புக்கூட்டம் போட்டு என்னை வரச்சொன்னார்கள். ”சிக்கலாக ஏதோ ஆகிவிட்டது. முடிந்தவரை செய்கிறோம்” என்றார்கள். ”மும்பை கொண்டுபோகட்டுமா?” என்றேன். ”பயணம் கடினமானது. உங்கள் விருப்பம்” என்றார்கள். நான் ”நான் உங்களை நம்புகிறேன் டாக்டர், நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்” என்றேன். டாக்டர் நெகிழ்ந்துவிட்டார்.

”இதற்குமேல் எவரும் எதுவும் செய்ய முடியாது… இன்னும் மதியம் வரை பார்ப்போம். அதன் பின் நான் இந்த ஔரங்காபாதில் உள்ள எல்லா முக்கிய டாக்டர்களையும் வரவழைத்துப் பார்க்கச் சொல்கிறேன். இன்றிரவுக்குள் மும்பையில் இருந்து எனக்குத்தெரிந்த ஒரு பெரிய மருத்துவரை விமானத்தில் வரவழைத்து பார்க்கச் செய்கிறேன். இதெல்லாம் என் செலவு” என்றார்

”செலவைப்பற்றி கவலை இல்லை” என்றேன். ”இல்லை எங்களால் நோயை ஊகிக்க முடியவில்லை என்பது எங்கள் தவறு” என்றார். அங்கே சாத்தியமான எல்லா சோதனைகளையும் செய்யலாம் என்று முடிவெடுத்து ஒவ்வொன்றாகச் செய்ய ஆரம்பித்தனர். குருதியில் கடுமையான நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகி உடல் மிகக்கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தது. ஆனால் எந்த பாக்டீரியா வைரஸ¤ம் இல்லை.

கடைசியில் மார்பு எக்ஸ்ரே எடுத்தபோது அதிர்ச்சி. இடது நுரையீரலில் நிமோனியா போல தெரிந்தது. நிமோனியாவா? குடித்த தயிர் எப்படியாவது நுரையீரலுக்கு போக நேர்ந்ததா? அதிர்ச்சியாக இருந்தது அவர்களுக்கு. என்னிடம் கேட்டார்கள். நான் நிமோனியாவுக்கு வாய்ப்பே இல்லை என்றேன்.

பையனுக்கு சுயநினைவு திரும்பவில்லை. காய்ச்சல் நீடித்தது. அந்த ஆஸ்பத்திரியில் இருந்த அத்தனை வட இந்தியப் பெண்களும் வந்து ‘பேட்டா’வுக்கு சாமி பிரசாதம் வைத்து விட்டார்கள். எனக்கு எதுவுமே தெரியாது. எல்லாமே பிற நோயாளிகளின் உதவியாளர்கள்தான் செய்தார்கள்.

அன்று மதியம் மூன்று டாக்டர்களின் தந்தையான டாக்டர் வந்தார். எண்பது வயது. டிராக் சூட் – ஷர்ட் போட்டுக்கொண்டு நடக்கச்சென்றவர் இங்கே வந்து அஜிதனைப் பார்த்தார். ஔரங்காபாதின் முக்கியமான மருத்துவர்களில் ஒருவராக இருந்து அந்த நிறுவனத்தை உருவாக்கியவர் அவர். தன் அறுபது வயதில் மருத்துவத்தில் இருந்து முழுமையாக விலகிக் கொண்டு தன் சொந்த மகிழ்ச்சிக்கான விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டாராம். அவருக்கு கோயில்களுக்கு நடந்து செல்வதுதான் அப்போதைய வாழ்க்கை. இந்தியா முழுக்க சென்றிருக்கிறார்.

பையனைப் பார்த்தார். ஒன்றுமே பிடிபடாமல் நாற்காலியில் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தார். நிமோனியா இல்லை என்று உடனே நிராகரித்துவிட்டார். அப்படியானால் என்ன? எக்ஸ்ரேயை வேறு கோணத்தில் எடுக்கச் சொன்னார். அது ஏதோ ‘மெக்கானிக்கல்’ பிரச்சினை என்றார். ‘சின்னவயதில் பிரைமரி காம்ப்ளெக்ஸ் இருந்ததா?” என்றார் கிழ டாக்டர் ”ஆமாம்” என்றேன்

பிரைமரி காம்ப்ளெக்ஸ் காரணமாக நுரையீரல் ஒருபகுதியில் கொஞ்சம் வீங்கி அது இன்னொரு நுரையீரலை அழுத்துகிறது. அதுதான் எக்ஸ்ரேயில் தெரிந்தது. பெரிய டாக்டர் நிலைகொள்ளாமல் இருந்தார். மாடியில் அமர்ந்து என்னிடம் மீனாட்சி கோயிலைப்பற்றி பேசினார். சட்டென்று எழுந்து ”எல்லா முறி மருந்துகளையும் நிறுத்துவோம்” என்றார்

பையன்கள் பதறினார்கள். ”முடியாது,அது ஆபத்து” என்று மூத்தவர் நேராகச் சொல்லாமல் சுவரைப்பார்த்து சொன்னார். கிழவர் ”நிறுத்து, நான் சொல்கிறேன்” என்றார். மூவரும் இருண்ட முகத்துடன் செய்தார்கள். நான் கிழவரை நம்பினேன். துல்லியமான ஓர் உள்ளுணர்வு சொன்னது, அவருக்கு ஆழம் உண்டு என

அன்றிரவே காய்ச்சல் குறைந்தது. மறுநாள் முற்றிலும் காய்ச்சல் இல்லை. மதியம் எழுந்து அமர்ந்துவிட்டான். தூங்காமல் ஒருமணிநேரத்துக்கு ஒருமுறை மென்மையான உணவை கொடுத்துக்கொண்டே இருக்கச் சொன்னார்கள். நான் இரவெல்லாம் பகலெல்லாம் விழித்திருந்தேன். அஜிதனுக்கும் தூக்கமில்லை. நான் தொடர்ந்து நான்குநாட்கள் ஒருநாளுக்கு  இரண்டுமணிநேரம்கூட தூங்காமல் இருந்த நாட்கள் அவை. உடலுக்கு மனம் விரும்பியபடிச் செல்லும் அபாரமான திறனுண்டு என உணர்ந்தேன்.அப்படியே இரண்டு நாட்கள்.

நான் அவனுக்கு மெல்லிய குரலில் கதை சொல்லிக்கொண்டே இருந்தேன். மொத்த மகாபாரதத்தையும்  ஆரம்பம் முதல் கடைசி வரை சொன்னேன். முடிக்க இரண்டுநாள் ஆகியது. ஏறத்தாழ இருபது மணிநேரம் சொல்லியிருப்பேன். கதையின் வேகமும் கிளர்ச்சியும் குழந்தையின் முகத்தில் ஏற்றும் உணர்ச்சி கொந்தளிப்புகளை இப்போதும் நினைவுகூர்கிறேன். கர்ணனுக்காக விசும்பி விசும்பி அவன் அழ ஒரு பாட்டி வந்து ‘வயிறு வலிக்கிறதா?’ என்று கேட்டு தடவி விட்டாள்.

மகாபாரதம் எத்தனை பெரிய வண்ண உலகம்! இன்றும் அஜிதன் அவன் வாழ்வின் பொன்னாட்கள் என அந்த இரு நாட்களை அடிக்கடிச் சொல்வான்.  அவன் அப்பா அவனை மட்டுமே கவனித்துக்கொண்டு அவனுடன் மட்டுமே இருந்த நாட்கள். ‘நல்ல வேளை அப்பலாம் செல்போன் கிடையாது. யாருமே கூப்பிடலை’ என்பான். நான் ஒரு மகத்தான கதைசொல்லி என  அங்கீகரித்த முதல்பெரும் வாசகன் அவனே.

முற்றிலும் சரியாகி விட்டபின் டாக்டரிடம் கேட்டேன், என்ன நடந்தது என. கிழவர் சொன்னார். அஜிதனின் உடம்பு அவர்கள் அளித்த முறிமருந்துக்களை கிருமியாக, விஷமாக நடத்த ஆரம்பித்திருந்தது என. அல்லது நான் அப்படி புரிந்துகொண்டேன். டாக்டர் மீனாட்சிகோயிலைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது வெளியே நாய்க்குரைப்பொலி கேட்டதாம். அப்போது அவருக்கு அந்த எண்ணம் வந்தது. ‘திருடனை துரத்த நாய் உள்ளே வந்தது. திருடன் ஓடியும் நாய் உள்ளேயே சுற்றி வருகிறது!’ அதுதான் தீர்வு.

ஆச்சரியமாக இருந்தது. மறுநாள் மூத்தவரிடம் கேட்டேன், அது ஏன் உங்களுக்கு தோன்றவில்லை என. அவர் சொன்னார் ”எந்த துறையிலும் உள்ளுணர்வே முதன்மையானது. அடுத்தது கற்பனை. அதற்கடுத்ததே தர்க்கமும் அதை வலுப்படுத்தும் கல்வியும் எல்லாம். அப்பா அபாரமான நுண்ணுணர்வால் ஆனவர். அதை அவர் குழந்தைத்தனமான கற்பனை மூலம் மீட்டி எடுக்கிறார். அது மிகச்சிறந்த ஒரு வழிமுறை. ஆனால் அதற்கு மனதுக்குள் அந்தக் குழந்தை இருந்துகொண்டே இருக்க வேண்டும். நவீனக் கல்விமுறை கொஞ்சம் கொஞ்சமாக அந்தக்குழந்தையை அழிக்கிறது. அதை மீறி அந்தக் குழந்தையை தக்கவைத்திருப்பவரே மேதைகள்”

டாக்டர் சொன்னார் ”அத்துடன் அவரது அனுபவம். அனுபவம் மூலம் உள்ளுணர்வை தீட்டிக்கொண்டே இருந்திருக்கிறார். நானும் அந்த அனுபவத்தை அடையும்போது என் உள்ளுணர்வும் கூர்மையாகலாம். என்ன இருந்தாலும் நான் அவரது மகன்” சிரித்துக்கொண்டே தம்பி டாக்டர் சொன்னர் ”நாவலாசிரியர்கள் மட்டும்தான் தியானிக்கிறார்கள், கற்பனை செய்கிறார்கள் என்று நினைக்காதீர்கள்…நாங்களும்தான் செய்கிறோம்”

பெரிய டாக்டர் அஜிதனுக்கு ஒரு பரிசு கொடுத்தார். சாதாரணமான கட்டணம் வந்தது. நான் கட்டணம் குறைவாக இருக்கிறதே என்றேன். ‘பரவாயில்லை, எங்களூருக்கு வந்திருக்கிறீர்கள்’ என்றார் டாக்டர். ஆச்சரியமாக இருந்தது அந்த மனநிலைகள். நேர் எதிரே ஜோஷி என ஒரு மராட்டிய பிராமணர் மருந்துக்கடை வைத்திருந்தார். முதல்நாள் மருந்து வாங்கும்போது ”முதல் பிரிஸ்கிருப்ஷனா?” என்றார். ஆமாம் என்றதும் ஒரு ராமர்படத்து முன் அதை வைத்து பிரார்த்தனை செய்து அதன் பின் மருந்து கொடுத்தார். அதன் பிறகு சிக்கல்கள் உருவானபோது ஒவ்வொரு நாளும் அவரது மனைவி மேலே வந்து பூஜைசெய்த பிரசாதம் அளித்துவிட்டுச் சென்றார்.

அஜிதன் மூன்றாம்நாள் அழுகையுடன் இருந்தான். அத்தனை தூரம் வந்துவிட்டு அஜந்தா பார்க்காமல் திரும்புவதா? மேலும் சைதன்யாவே பார்த்துவிட்டாளே. ஊருக்குபோய் மானத்துடன் வாழவேண்டாமா? டாக்டர்கள் கூடவே கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.’உடலில் வலிமையே இல்லை. பேருந்தில் டமன் சென்று ஒருநாள் ஓய்வெடுத்து அங்கே ஒரு டாக்டரை பார்த்துவிட்டு ஊருக்குக் கிளம்புங்கள்’ என்றார்கள்.

கிழடாக்டர் வந்து அஜிதனைப் பார்த்ததுமே ”என்ன பிரச்சினை பேட்டா, முகம் சப்பி இருக்கிறதே?’ என்றார். அவனே அஜந்தாவைப் பற்றி சொன்னான். ”அங்கே வெறும் பொம்மைதான். இங்கே பக்கத்தில் மிருகசாலை இருக்கிறது.போய்ப்பார்” என்றார். ”எனக்கு சிற்பங்கள்தான் பார்க்க வேண்டும். அங்கே போதிசத்வர் சிலைகள் இருக்கிறது”

டாக்டர் அயர்ந்து ”நீங்கள் சொன்னீர்களா?” என்றார். அஜிதன் ”எங்க அப்பாவை விட எனக்கு தெரியும். நானே புத்தகத்தில் வாசித்தேன்” என்றான். டாக்டர் சிரித்து ”இத்தனை சொல்கிறான். பார்க்காமல் போகலாமா? ஒரு கூடை ஆரஞ்சு வாங்குங்கள். அந்தச் சுளைகளை உரித்து கொடுத்துக்கொண்டே கூட்டிச் செல்லுங்கள். சக்கையை துப்பிவிடவேண்டும். வேறு எதுவுமே கொடுக்க வேண்டாம். ஆரஞ்சு சாறு எதுவுமே கொடுக்கக்கூடாது. நேராக பழத்தில் இருந்து வரும் சாறு மட்டுமே உணவு. போய்வாருங்கள்” என்றார்.

அதைக் கேள்விப்பட்டு பெரிய மகன் மறுத்தான். அப்பா டாக்டர் ”இது ஒரு டாக்டராக நான் சொல்வது அல்ல, ஒரு மகாராஷ்டிரியனாக நான் சொல்வது. ஔரங்காபாத் வந்து அஜந்தா பார்க்காமல் போகலாமா? அதுவும் ஒரு இளம் மேதை?” என்று அஜிதனைப் பார்த்து கண்ணடித்தார்.

ஒரு கூடை நிறைய ஆரஞ்சும் துப்புவதற்கு பிளாஸ்டிக் பையுமாக கிளம்பிச் சென்றோம். அஜந்தா அஜிதனை கொள்ளை கொண்டது. ஒரு கனவில் இருப்பது போல இருந்தான். பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஐந்து நிமிடம் அமர்ந்திருக்க வேண்டும் என்பது டாக்டரின் ஆணை. அஜந்தாவில் உள்ள நூற்றுக்கணக்கான மிகச்சிறிய கல்குகை அறைகளில் ஒன்றில் அமர்ந்தோம். இரு கட்டில் திண்டுகள். குளிர்ந்த கல். இருவருக்கு மட்டுமே இடமுள்ள குகை. ‘படுடா’ என்றேன். அவன் படுத்தான் இன்னொன்றில் நான் அமர்ந்தேன்.

மகாபாரதம் முன்தினமே முடிந்திருந்தது. அதில் நான் கீதையை சொல்லவில்லை. ‘கீதையைச் சொல்’ என்றான். கீதையை எப்படி ஐந்தாம் வகுப்புப் பையனுக்குச் சொல்வது? அதுவும் ஒரு சவாலே என்று சொல்ல ஆரம்பித்தேன். அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். புரியாத போது உதாரணங்களுக்கு தாவினேன். கீதையையும் நாற்பத்தைந்து நிமிடங்களில் சொல்லி முடித்தேன்

‘தன்னறம்’ [ஸ்வதர்மம்] பற்றி மேலும் கேட்டான். ”எது உனக்குரிய செயலோ அது. எந்தச் செயலுக்காக நீ பிறந்திருக்கிறாயோ அது. அதைச் செய்யும்போதே மனநிறைவும் வாழ்வின் முழுமையும் கிடைக்கும். அதுவே கீதையின் மையச் செய்தி” என்றேன். ”அதை எப்படி கண்டு பிடிப்பது?” என்றான்.

நான் டாக்டர் நோயைக் கண்டுபிடித்த விதத்தை சொன்னேன். ”எந்தத் துறையில் உனக்கு உள்ளுணர்வு திறக்கிறதோ அதுவே உன் தன்னறம்” என்றேன்

நேற்று அஜிதன் சார்ல்ஸ் டார்வினின் ‘ஆர்ஜின் ஆ·ப் ஸ்பீஸ’ஸை வாசித்துக்கொண்டிருந்தான்.  அவன் வயதுக்கு அது கடுமையான மூல நூல். நூற்றைம்பதண்டு பழைய கஷ்டமான ஆங்கிலத்தை மூச்சுபிடித்து வாசிப்பதைக் கண்டேன். ”நெறைய விஷயங்கள் டார்வினுக்கு தெரியல்லை. டிங்கோ நாய் பழகிய நாயில் இருந்து உருவான காட்டு இனம். இவர் அதை காட்டுநாய்க்கும் பழகிய நாய்க்கும் நடுவே உள்ளது என்கிறார்”  என்றான். ”இது பழைய புக்” என்றேன்

”நேச்சுரல் செலக்ஷன் வரை வந்திட்டேன்.. ராத்திரி படிச்சிட்டிருந்தப்ப திடீர்னு பயமா ஆயிட்டுது. அவருக்கு புதூசா நேச்சரல் செலக்ஷன்னு ஒரு விஷயம் தோணியிருக்கே. எவ்ளவு பயமா இருக்கும் அப்டி தோணுறப்ப” ”ஏன்?” ”பைத்தியம் புடிச்சிட்டுதுன்னா?” என்றான் .”எனக்கெல்லாம் நேத்து ரொம்ப பயமா இருந்தது”

”அப்ப விட்டுடு” என்றேன்.”இது எனக்க சொதர்மம்லா?” என்றபின் எழுந்து ”ஹை சொதர்மம்! ஆ அஜக்கு! ஆ குமுக்கு!” என்று ஆடிக்காட்டினான். இந்தப்பயலை எங்கேயுமே சேர்க்க முடியவில்லை என்பதே என் வாழ்க்கையின் முக்கியமான பிரச்சினை.

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 30, 2010

முந்தைய கட்டுரைசிதையப்போவது பிரபஞ்சமன்று, நாமே!(அறத்தாறிது)
அடுத்த கட்டுரைகோவை – வெண்முரசு கலந்துரையாடல்