ஜெ,
விஷ்ணுபுரம் வாசித்த போது எனக்கு பெரிய மனக்கிளர்ச்சியை அளித்தது அங்கே ஓடிய சோனா என்கிற சிவந்த நிறமான ஆறுதான். அதை விதவிதமாக வர்ணித்திருப்பீர்கள். ரத்த ஆறு, தீயால் ஆன ஆறு என்றெல்லாம். அதன் அருகே உள்ள மரங்களின் இலைகளில் அடிப்பக்கம் சிவந்த நிற ஒளி அலையடிக்கும் என்ற வர்ணனை அதை அப்படியே கனவுமாதிரி கண்ணில் நிறுத்தியிருக்கிறது
அந்த நாவலில் எல்லாவற்றுக்கும் ‘அர்த்தம்’ உண்டு. சோனாவும் ஹரிததுங்கா என்ற குன்றும் மட்டும்தான் அர்த்தமே இல்லாதவை. அவை பாட்டுக்கு இருக்கின்றன. சோனா கடைசியில் நீரும் நெருப்பும் ரத்தமும் ஆகி வந்து விஷ்ணுபுரத்தை சூழ்ந்து கொள்ளும்போது எனக்கு ஒரு மாபெரும் பிரசவம் என்ற எண்ணம்தான் வந்தது
அஸ்ஸாமில் சோனா என்ற ஒரு நதி உள்ளது என்பார்கள். அது பிரம்மபுத்திராவின் கிளைநதி. அதைவைத்துத்தான் கற்பனைசெய்தீர்கள் என்று ஒருமுறை என் நண்பர் சொன்னார். நான் காசிக்கும் ஹரித்துவாருக்கும் பத்ரிக்கும் சென்றபோது பார்த்தேன். அளகநந்தா எப்போதும் சிவப்புதான்.
ஆனால் சீனாவில் உள்ள yangtze river சிவப்பாக ஆன இந்தச்செய்தி மனதை முதலில் பதறச்செய்தது சீனாவிலே உள்ள ஆறு எப்படியோ பொல்யூட் ஆகி சிவப்பாகிவிட்டது படங்கள் என்னை கொஞ்சம் கொஞ்சமாக கனவுக்குள் கொண்டு சென்றன. சோனாவையே கண்டேன்
சாமிநாதன்