‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 4

பாஞ்சாலத்தின் பேரமைச்சர் கருணர் கங்கையின் மறுகரையில் முந்தையநாள் இரவே தன் அகம்படியினருடன் சென்று தங்கியிருந்தார். காலையில் விடிவெள்ளி எழுந்ததுமே கிளம்பி ரிஷபவனம் என்று அழைக்கப்பட்ட சிறிய சோலைக்குள் அமைந்திருந்த துர்வாசரின் கானில்லத்தை அடைந்தார். மரப்பட்டைகளாலும் கங்கைக்கரைக் களிமண்ணாலும் கட்டப்பட்டு ஈச்சஓலையாலும் புல்லாலும் கூரையிடப்பட்ட பன்னிரண்டு சிறிய குடில்கள் பிறைவடிவில் அங்கே அமைந்திருந்தன. காலைக்காற்றில் அவற்றில் கட்டப்பட்டிருந்த கொடிகள் பறவைச்சிறகடிப்பு போல படபடத்தன. குடில்களின் நடுவே இருந்த முற்றத்தில் விடியலின் எரிசெயல் நிகழ்ந்துகொண்டிருந்தது.

சோலைக்கு வெளியே தன் அகம்படியினருடன் கருணர் எரிசெயல் முடிவதற்காக காத்திருந்தார். மிக இளமையில் அவர் முந்தைய துர்வாசரை பாஞ்சாலத்தின் பேரவைக்கூட்டம் ஒன்றில் கண்டிருந்தார். முதிய ஆலமரம்போல சடைகள் தொங்க உடல்குறுகிய முதியவர். அவர் நூற்றுப்பன்னிரண்டாவது துர்வாசர் என்று சூதர்கள் சொன்னார்கள். நூற்றுப் பதின்மூன்றாவது துர்வாசரே முதியவர்தான் என்று கேட்டிருந்தார். எரிகுளத்தின் செந்தழலின் அலைப்புறும் ஒளியில் அமர்ந்திருந்த துர்வாசரை அப்பால் நின்று நோக்கியபோது அவரே ஒரு தழல் என்று தோன்றியது.

வேள்விமுடிந்து துர்வாசர் எழுந்து தன் குடிலுக்குள் சென்றபின் கருணர் அருகே அணுகி பிறவைதிகர்களையும் துர்வாசரின் மாணவர்களையும் வணங்கினார். அவர்கள் அளித்த வேள்வியன்னத்தை உண்டபின் காத்திருந்தார். துர்வாசர் அழைப்பதாக ஆணைவந்ததும் குடிலுக்குள் சென்று புலித்தோல் மேல் மலரமர்வில் இருந்த துர்வாசரின் முன் எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து வணங்கினார். அவர் வாழ்த்துரை சொல்லி எழுந்தமர ஆணையிட்டார். அணைந்துகொண்டிருக்கும் அனல் என செந்நிறம் கலந்த கருஞ்சடைக்கற்றைகளும் மெலிந்து இறுகிய செந்நிற உடலும் புலிக்கண்களும் கொண்டிருந்த துர்வாசர் அவரை நோக்கி “சொல்” என்றார்.

“அடியேன் பெயர் கருணன். பாஞ்சாலத்தின் பேரமைச்சன். தங்களை இன்று காம்பில்யத்தில் நிகழும் இளவரசியின் மணநிகழ்வுக்கு அழைத்துச்செல்ல ஆணையிடப்பட்டிருக்கிறேன். எழுந்தருளல் வேண்டும்” என்றார் கருணர். அவரை கூர்ந்து நோக்கி “உன் தந்தை பெயர் என்ன?” என்றார் துர்வாசர். “சௌனக வைதிக மரபைச்சேர்ந்தவர் அவர். ரிக்வைதி. பன்னிரு ஆண்டுகளுக்கு முன் காலம்சென்ற அவரை தேவசன்மர் என்று அழைத்தனர்” என்றார் கருணர். “எனக்கு முன் அவர் பாஞ்சாலத்தின் பேரமைச்சராக இருந்தார்.”

துர்வாசர் தலையசைத்து “ஆம், அறிவேன். அவனுடைய இருபத்தெட்டாவது நாள் முதல்மயிர் கழித்தல் என் முன் நிகழ்ந்தது” என்றார். கருணர் உடல் சிலிர்த்தது என்றாலும் அவரது சித்தம் வினாக்களாக பெருகி எழுந்தது. ஆனால் துர்வாசர் தொடர்ந்து “உங்கள் குலத்தையே நான் அறிவேன். தேவசன்மனின் தந்தை திருணதூமன் என்னிடம் சிலகாலம் வேதம் பயின்றிருக்கிறான். அவனுக்கு இருந்த இழுவை நோய் என்னுடன் தொடரமுடியாது செய்தது. அவன் தந்தை சுதாமனை சௌனகவனத்தில் வசிட்ட குருமரபில் ஒருவனாக கண்டிருக்கிறேன். அவன் தந்தை சுகாசர் பிரீதை என்னும் வனமகளை மணந்தது என் முன்னிலையில்தான்” என்றார். கருணரின் அனைத்து வினாக்களும் நீர் பட்டவை போல அணைந்தன. சித்தம் குளிர்ந்து கல்லாகிக் கிடந்தது.

துர்வாசர் பெருமூச்சுடன் “ஆம், இதுவும் என் கடனே. இவை என்னிலிருந்து தொடங்கவேண்டுமென்பது ஊழ் எனக்கொள்கிறேன். கிளம்புவோம்” என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று கருணர் வியந்துகொண்டாலும் எதுவும் கேட்கவில்லை. துர்வாசரையும் அவரது ஏழு மாணவர்களையும் அழைத்துச்சென்று அணிப்படகில் கங்கையைக் கடந்து காம்பில்யத்தை அடைந்தார். துறவுக்கொள்கைப்படி துர்வாசர் உயிர்களின் மேல் ஏறுவதில்லை என்பதனால் நகரின் சாலைகளில் தன் மாணவர்களுடன் நடந்தே சென்றார். இருமருங்கும் கூடிய நகர் மக்கள் மண்டியிட்டு நிலத்தில் நெற்றிதொட வணங்கினர். அவர் கால்கள் பட்ட மண்ணை குனிந்து அள்ளி நெற்றியில் அணிந்தனர்.

எதிரே புரவியில் வந்த ஒற்றர்தலைவர் சிம்மர் விலகி துர்வாசர் செல்ல வழிவிட்டு வணங்கி நின்றபின் கருணரிடம் வந்து “அங்கே மணமேடை ஒருங்கி விட்டது அமைச்சரே. மணமக்கள் ஐவரும் மேடைக்கு வந்துவிட்டனர். அஸ்தினபுரியின் அமைச்சர் விதுரர் வந்து அவையமர்ந்திருக்கிறார். அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்” என்றார். எரிச்சலுடன் “நான் நேரத்தை வகுக்கவில்லை சிம்மரே. இது முனிவரின் பாதை. நான் தொடர்கிறேன்” என்றார் கருணர்.

சிம்மர் கைகாட்ட அவரது ஒற்றன் ஒருவன் புரவியில் திரும்பி விரைந்தான். அவன் சென்று சற்று நேரத்தில் அரண்மனையின் முரசுகள் முழங்கத் தொடங்கின. துர்வாசர் அரண்மனையின் கிழக்கு முற்றத்தை அடைந்தபோது அரண்மனைக்கு மேல் இருந்த நான்கு காவல்மாடங்களிலும் பெருமுரசுகள் அதிர்ந்தன. அரண்மனைக்குள் இருந்து சத்யஜித்தும் சித்ரகேதுவும் முழுதணிக்கோலத்தில் வந்து துர்வாசரை உடல் மண்படிய வணங்கி உள்ளே அழைத்துச்சென்றனர்.

சுயம்வரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ஏழடுக்குப் பந்தல் மீண்டும் சீரமைக்கப்பட்டு வண்ணப் பட்டுத்திரைச்சீலைகளும் பாவட்டாக்களும் மலர்மாலைகளும் கொண்டு அணிசெய்யப்பட்டிருந்தது. குடிகளவையிலும் வைதிகர் அவையிலும் மக்கள் நிறைந்து செறிந்திருந்தனர். அரசரவையில் மட்டும் உசிநார மன்னர் சுசேனர், திரிகர்த்த மன்னர் உத்தவன், குலிந்த மன்னர் சுபாங்கதன், லோமச நாட்டரசர்களான விதண்டர் தண்டர், பால்ஹிக நாட்டு சித்ரரதன், கின்னரநாட்டின் அரசர் சோமசேனர் என அன்னைவழி முறைமைகொண்ட அண்டை நாடுகளின் அரசர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களும் தனித்தனியாக தங்கள் அமைச்சர்களும் தளபதிகளும் சேவகர்களும் சூழ அமர்ந்திருந்தனர்.

மங்கலவாத்தியங்கள் நின்று நிமித்திகர் துர்வாசரின் வரவறிவிக்க அவை எழுந்து கைகூப்பி நின்றது. கைகூப்பியபடி துர்வாசர் உள்ளே நுழைந்ததும் மூன்று அவைகளிலும் இருந்தவர்கள் அனைவரும் அவரை வாழ்த்திய ஒலி எழுந்தது. பொன்பட்டுத் தோரணங்களாலும் மலர்மாலைகளாலும் அணிசெய்யப்பட்டிருந்த நீளமான மணமேடையில் இடப்பக்கமாகப் போடப்பட்டிருந்த அரியணையில் அமர்ந்திருந்த துருபதன் தன் தேவியருடன் எழுந்து நின்று கைகூப்பி தலைவணங்கினான். ஏழு வலம்புரிச்சங்குகள் ஒன்று நின்ற முனையிலிருந்து ஒன்று தொடங்க சுழல் சுழலாக ஒலித்து நீண்டு அவரை வாழ்த்தின.

பாஞ்சாலத்தின் ஐந்து பெருங்குலங்களில் இருந்தும் குலத்தலைவர்கள் கைகளில் தங்கள் குலங்களுக்குரிய இலச்சினைக்கோல்களுடன் இணைந்து வந்து துர்வாசரை கால்தொட்டு வணங்கி அவை நோக்கி கொண்டு சென்றனர். அவரை புலித்தோலிட்ட வெள்ளிப்பீடத்தில் அமரச்செய்து வணங்கி வாழ்த்துகொண்டு பின்னகர்ந்தனர். அகலிகையும் பிருஷதியும் மணிமுடி கொண்ட முழுதணிக்கோலத்தில் தொடர, பாஞ்சாலத்தின் தொன்மையான மணிகள் பொறித்த ஆடகப்பசும்பொன் முடி சூடி செங்கோல் ஏந்திய துருபதன் வந்து துர்வாசரின் பாதங்களை பணிந்தார். மூவரும் அவரது கால்களை பொற்தாலத்தில் வைத்து நறுமணநீரூற்றிக் கழுவி ஏழு வகை மலரிட்டு பூசை செய்தார்கள்.

தொடர்ந்து துருபதனின் இளையோனாகிய சத்யஜித்தும் அவர் துணைவி கிருதையும் துர்வாசருக்கு பாதபூசனை செய்தனர். அதன்பின் துருபதனின் மைந்தர்களான சுமித்ரன். ரிஷபன், யுதாமன்யு, விரிகன், பாஞ்சால்யன், சுரதன், உத்தமௌஜன், சத்ருஞ்ஜயன், ஜனமேஜயன், துவஜசேனன், திருஷ்டத்யும்னன் ஆகியோர் ஒவ்வொருவராக வந்து அடிவழிபாடு செய்தனர். துர்வாசர் அவர்களின் தலைமேல் மலர் போட்டு வாழ்த்தினார். அவர்கள் மும்முறை வணங்கி புறம்காட்டாது பின்சென்றனர்.

மணமேடையில் இடப்பக்கம் போடப்பட்ட மாமன்னர் புரு அமர்ந்திருந்த பாஞ்சாலத்தின் அரியணயில் துருபதன் செங்கோல் ஏந்தி மணிமுடி சூடி அமர அவர் இருபக்கமும் அகலிகையும் பிருஷதியும் அமர்ந்தனர். இரு சேவகர்கள் பிடித்த வெண்கொற்றக்குடை அவர் மேல் கவிந்திருந்தது. அவர்களுக்குப் பின்னால் போடப்பட்ட பீடங்களில் சத்யஜித்தும் கிருதையும் துருபதனின் மைந்தர்களும் அவர்களின் துணைவியரும் அமர்ந்தனர். அவர்களைச் சூழ்ந்து தாலங்கள் ஏந்திய சேடியரும் சேவகரும் நின்றனர்.

துர்வாசர் திரும்பி கருணரிடம் “சிகண்டி எங்கே?” என்றார். அவர் பதறி நான்குபக்கமும் நோக்கியபின் ஓடிச்சென்று ஒற்றர்தலைவர் சிம்மரிடம் “சிம்மரே, சிகண்டி எங்கே?” என்றார். “ஏன்?” என்றார் சிம்மர். “முனிவர் கேட்கிறார்” சிம்மர் “உங்களுக்குத் தெரியாததா அமைச்சரே? அவர் மங்கல நிகழ்வுகளில் பங்கெடுப்பதில்லை” என்றார். “அவரை அழைத்துவாருங்கள். உடனே” என்றபின் கருணர் திரும்பிச்சென்று “அவர் மடைப்பள்ளியை நடத்துகிறார். இதோ வந்துகொண்டிருக்கிறார்” என்றார். துர்வாசர் தலையசைத்துவிட்டு கைகளைக் கட்டியபடி கண்மூடி காத்திருந்தார்.

அவையில் சலசலப்பு ஒலிக்க சத்யஜித் வந்து கருணரிடம் என்ன நிகழ்கிறது என்று கேட்டார். அவர் மெல்லிய குரலில் விடை சொன்னார். ஆனால் அதற்குள் எப்படியோ அவையெங்கும் துர்வாசர் சிகண்டிக்காக காத்திருப்பது தெரிந்துவிட்டது. பேச்சொலிகள் எழுந்து முழக்கமாக நிறைந்தன. அனைவர் விழிகளும் சிம்மர் உள்ளே சென்ற மணமேடை வாயிலை நோக்கிக்கொண்டிருந்தன. தௌம்யரின் மாணவர்களின் வேதமுழக்கம் மட்டும் அவ்வுணர்ச்சிகளுடன் தொடர்பற்றதுபோல கேட்டுக்கொண்டிருந்தது. அவையில் எழுந்த ஒலியே சிகண்டி வருவதை காட்டியது. சிம்மர் தொடர சிகண்டி அவையின் உள்வாயில் வழியாக வந்தார்.

சிகண்டி வெண்ணிற மேலாடையும் கீழாடையும் உடுத்து காதுகளில் மணிக்குண்டலம் ஒளிர திடமான காலடிகளுடன் நடந்து வந்தார். அவரது கொழுத்த கரிய உடலில் மேலாடைக்குள் முலைகள் அசைந்தன. தோளில் சரிந்த கூந்தலிழைகளில் நரைக்கற்றைகள் கலந்திருந்தன. அவரது முகவாயில் கரிபடிந்த சிலந்திவலை என இருந்த மெல்லிய தாடியிலும் வாயோரங்களில் மட்டும் எழுந்து கத்திமுனை என சுருட்டிவிடப்பட்டிருந்த மீசையிலும் நரை இருக்கவில்லை. மதம்படிந்த சிறிய பன்றி விழிகளுடன் துர்வாசரை அணுகி சற்று விலகி நின்றார். கருணர் மெல்ல “முனிவருக்கு அடிவழிபாடு செய்க இளவரசே” என்றார்.

சிகண்டி உறுதியான குரலில் “அடிபூசனை செய்வதென்பது முழுமையாக என்னை படைப்பதாகும். நெறிகளின்படி அதன்பின் அவரது ஆணைக்கு நான் முற்றிலும் கட்டுப்பட்டவன் ஆவேன். இம்மண்ணில் எவருடைய ஆணைக்கும் நான் பணியமுடியாது” என்றார். துர்வாசர் சிரித்தபடி “உனக்கான ஆணைகள் உன் அன்னையால் அளிக்கப்பட்டுவிட்டன என நான் அறிவேன் மைந்தா. நீ என்னை பணியவேண்டியதில்லை. ஆனால் என் வாழ்த்துக்களை நான் வழங்கியாகவேண்டும்… வருக!” என்றார். சிகண்டி அருகே சென்று தலைகுனிந்து வணங்க அவர் பிறரை வாழ்த்தியதுபோல மலர் எடுத்து அவர் தலையிலிட்டு “எண்ணியது ஈடேறட்டும். வெற்றியும் புகழும் சிறக்கட்டும்” என வாழ்த்தினார். சிகண்டி வணங்கி துருபதனின் பின்னால் சென்று அமர்ந்துகொண்டார்.

மணமேடைக்கு வலப்பக்கமாக தொல்வேதம் பருகி பொன்னொளி கொண்ட மூன்று நெருப்புகளும் வைதிகரால் பேணப்பட்டு தழலாடிக்கொண்டிருந்தன. பாஞ்சாலத்தின் தலைமை வைதிகரான தௌம்யர் அவியன்னத்தை கொண்டுவந்து துர்வாசருக்கு வழங்கினார். அவர் அதை உண்டதும் பிறருக்கும் அவியன்னம் பகிர்ந்தளிக்கப்பட்டது. துருபதன் அதை பகிர்ந்து தன் துணைவியருக்கு அளித்து உண்டார். அவரது மைந்தரும் அவ்வண்ணமே செய்தனர். மீண்டும் நெய்யூற்றப்பட்டு வேள்வித்தீ மேலெழுந்தது.

முதுநிமித்திகரான பத்ரர் தங்கள் குலத்தின் ஏழு இளநிமித்திகர்களுடன் முன்னால் வந்து துர்வாசரை வணங்கி மணநிகழ்வு எழுதிய ஓலையை அவரிடம் அளித்து பணிந்து நின்றார். துர்வாசர் அதைத் தொட்டு வாழ்த்தி திருப்பியளித்ததும் அவர் அதை தலைக்குமேல் தூக்கி அவைக்குக் காட்ட அவை வாழ்த்தொலி எழுப்பி முழங்கியது. கோல்காரன் அதை அவரிடமிருந்து வாங்கி மேடைமேல் நின்று உரக்க வாசித்தான். அவையில் அமைக்கப்பட்டிருந்த மேடைகளில் நின்றிருந்த ஒன்பது நிமித்திகர்கள் அதை கேட்டு மீண்டும் கூவினர்.

நிமித்திகன் முழுமுதல் அன்னை உக்கிரசண்டியையும் அவளுடைய ஐந்து தோற்றங்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, சாவித்ரி, ராதை ஆகியோரையும் துதித்தான். ஐந்துகுலத்தையும் பாஞ்சாலமன்னனின் குலமுறையையும் வாழ்த்தினான். அதன்பின் முறையாக மண அறிவிப்பு செய்தான். “அவையீரே, ஐங்குலத்தீரே, மூதாதையரே, தெய்வங்களே! அனைவரும் அறிக! சந்திரன் நலம்நிறைந்த புஷ்யவிண்மீனை அணுகும் இந்நன்னாளில் பாஞ்சால நிலமாளும் துருபத மன்னரின் மகளான இளவரசி கிருஷ்ணையை அஸ்தினபுரியின் பாண்டுமன்னரின் மைந்தர்களாகிய இளவரசர் ஐவருக்கும் முறைப்படி கைப்பிடித்தளிக்க முடிவெடுத்திருக்கிறோம். விண்ணை ஆளும் மும்மூர்த்திகளும் பெண்ணை ஆளும் தேவர்களும் வந்து இம்மணத்தை வாழ்த்துக! ஓம்!ஓம்! ஓம்!”

அவை அதனுடன் இணைந்துகொண்டு ஓங்கார ஒலியெழுப்பியது. சத்யஜித்தும் சித்ரகேதுவும் பத்ரரும் கருணரும் அவையின் மறுபக்கம் தனியறையில் இருந்த பாண்டவர்கள் ஐவரையும் அழைத்து வரச்சென்றனர். பாண்டவர்கள் அவர்களுக்கு யாதவ கிருஷ்ணனால் அளிக்கப்பட்ட அணிகளையும் ஆடைகளையும் அணிந்திருந்தனர். அவர்களில் பீமனிடம் மட்டுமே திருமணம் கொள்வதற்குரிய களிப்பு இருப்பதாகத் தோன்றியது. நகுலனும் சகதேவனும் நாணிக்கூசியவர்கள் போல எவர் விழிகளையும் நோக்குவதை தவிர்த்தனர். அர்ஜுனன் முகம் இறுகியிருக்க இடக்கையால் கூரிய மீசையை முறுக்கிவிட்டபடி விழிசரித்திருந்தான். தருமன் துயர் கொண்டவனைப்போல தலையை குனிந்திருந்தான்.

சத்யஜித் தருமனை வணங்கி “பாண்டவ இளவரசர்களே, கடிமணம் கொள்ள மணமேடைக்கு வருக” என்றார். தருமன் பெருமூச்சுடன் பீடத்தில் இருந்து எழுந்தான். “மணமகன்களுக்கு துணைவர்கள் எவர்?” என்றார் பத்ரர். தருமன் வெறும் விழிகளால் அவரை நோக்க பத்ரர் “யாதவர்கள் உங்கள் துணைவர்கள் அல்லவா? அவர்கள் இருந்திருக்கலாமே” என்றார். தருமன் “நிமித்திகரே, அவர்கள் அஸ்தினபுரியின் துணைநாட்டுக்கு அரசர்கள். அஸ்தினபுரியின் இளவரசர்கள் சென்றபின் அவர்கள் இங்கிருக்க முடியாது” என்றான். “ஆம், அது முறையே” என்றார் கருணர்.

பத்ரர் அவரை நோக்கிவிட்டு “அவ்வாறென்றால் பாஞ்சாலத்தின் சேவகர்களே பாங்கர்களாக வரட்டும். மாலையை வாங்கவும் அணிகளை அளிக்கவும் ஒவ்வொருவருக்கும் அருகே ஒரு துணைவன் நின்றாகவேண்டும்” என்றார். கருணர் வெளியே சென்று அவையமைச்சரை அழைத்து ஆணையிட பட்டாடை அணிந்த ஐந்து பாங்கர்கள் விரைந்து வந்தனர். “செல்வோம்” என்றார் பத்ரர். தருமன் தளர்ந்த காலடிகளுடன் முன்னால் நடக்க பாங்கன் அவனுக்கு வலப்பக்கம் நடந்தான். தொடர்ந்து தலையைத் தூக்கி பெரிய கைகளை ஆட்டியபடி பீமன் சென்றான். அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் பின் தொடர்ந்தனர்.

அவர்கள் மணப்பேரவையில் நுழைந்ததும் மக்களின் வாழ்த்தொலி எழுந்து சூழ, மங்கலப்பேரிசை அதனுடன் இணைந்துகொண்டது. மக்களின் வாழ்த்துச் சொற்களையே முழவுகளும் கொம்புகளும் முரசுகளும் சொல்லிக் கொண்டிருப்பதாக தோன்றியது கருணருக்கு. இசையின் தாளம் அனைத்து அசைவுகளுடனும் இணைந்துகொண்டது. பாண்டவர்களின் நடையில் அது மிடுக்கை அளித்தது. சேவகர்களின் செயல்களில் ஒழுங்கை அமைத்தது. பாண்டவர்கள் ஐவரும் சென்று துர்வாசரை வணங்கி மலர்வாழ்த்துகொண்டது நடனம்போலிருந்தது. அவர்கள் திரும்பி மணமேடையில் ஏறி பாங்கர் பின்னால் நிற்க நிரை வகுத்து நின்றனர்.

மண அரங்கின் வலப்பக்க வாயில் வழியாக இரு சேடிகளால் நடத்தப்பட்டு குந்தி வந்தாள். அவள் வெள்ளை மேலாடையால் முகத்தை முழுமையாக மறைத்திருந்தாலும் நிமிர்ந்த தலையுடன் சீரான நடையுடன் அவைக்கு வந்து வணங்கினாள். நிமித்திகன் தன் அணிக்கோலைத் தூக்கி “விருஷ்ணிகுலத்து யாதவமன்னர் சூரசேனரின் புதல்வியும் மார்த்திகாவதியின் குந்திபோஜனின் அறப்புதல்வியும் அஸ்தினபுரியின் பாண்டு மன்னரின் பேரரசியும் மணமக்கள் ஐவரின் அன்னையுமாகிய பிருதைதேவியை வாழ்த்துகிறது இப்பேரவை” என்று அறிவித்தான்.

குந்தி வந்து துர்வாசரை வணங்கி மலர்வாழ்த்து பெற்றாள். அவளை சேடியர் கொண்டுசென்று மணஅரங்கின் வலப்பக்கமாகப் போடப்பட்ட பீடத்தில் அமரச்செய்தனர். அவள் அமர்ந்ததும் இடப்பக்க வாயில் வழியாக விதுரரும் குண்டாசியும் நிமித்திகனின் வாழ்த்துடன் உள்ளே வந்து துர்வாசரை வணங்கி அவளருகே பீடத்தில் அமர்ந்தனர். இரு குடியினரும் இருபக்கமும் அமர நடுவே மணமகன்கள் நின்றனர்.

பத்ரர் சென்று வணங்கி தௌம்யரிடம் மணநிகழ்வுக்கான ஒப்புதலை கோரினார். அவர் தர்ப்பை மோதிரம் அணிந்த கைதூக்கி வாழ்த்தி ஒப்புதலளித்ததும் பத்ரர் அதை நிமித்திகனிடம் சொல்ல நிமித்திகன் கோல்தூக்கி அவையை அமைதிகொள்ளச்செய்து “அவையோர் அறிக! பாஞ்சாலப் பெருங்குடிகள் ஐந்தின் குலமுறைப்படி ஏழு மணச்சடங்குகளினூடாக இங்கு பாஞ்சாலத்தின் சிறுமகள் அஸ்தினபுரியின் மறுமகளாவாள். மூதாதையரும் ஐம்பருக்களும் தெய்வங்களும் துணைநிற்கட்டும்” என்று வாழ்த்தினான். வலம்புரிச்சங்குகள் ஓங்காரமிட்டு அமைய பெருமுரசும் கொம்புகளும் ஒலித்தெழுந்தன. மங்கலப்பேரிசை மீண்டும் தொடங்கியது.

பாஞ்சாலத்தின் ஐந்து குலங்களைச் சேர்ந்த மூத்தார் ஐவரும் அவர்களின் குலங்களுக்குரிய ஐந்து மரங்களின் மலர்க் கிளைகளை இடக்கையில் ஏந்தி மணமுற்றத்துக்கு வந்தனர். துர்வாசகுலத்திற்கு வேங்கையும், சிருஞ்சயருக்கு மருதமும், கிருவிகளுக்கு கொன்றையும், சோமகர்களுக்கு செண்பகமும், கேசினிகளுக்கு பாலையும். மருத மரக்கிளையை அர்ஜுனனும், வேங்கையை பீமனும், கொன்றையை நகுலனும், செண்பகத்தை சகதேவனும் பெற்றுக்கொண்டனர். தருமன் பாலைக்கிளையை வாங்கிக்கொண்டான்.

பாண்டவர்களின் குலமூதாதையர் சார்பில் விதுரர் குண்டாசியுடன் சென்று ஐங்குலத்தலைவர்களிடம் அவர்களின் பெண்ணை மகற்கொடையாக கேட்டார். அவ்வினாவும் விடையும் பாஞ்சாலத்தவரின் தொன்மையான பைசாசிக மொழியிலமைந்த மந்திரங்களாக இருந்தன. பத்ரர் அவற்றைச் சொல்ல இருசாராரும் திருப்பிச் சொன்னார்கள். கிருவிகுலத்தலைவர் பத்துபொன் கன்யாசுல்கமாக கேட்டார். சோமகர் இருபது பொன் கேட்டார். சிருஞ்சயர் முந்நூறு பொன் என்றார். துர்வாசர் நாநூறு என்று சொல்ல கேசினிகுலத்தலைவர் ஐநூறு பொன் என்றார். விதுரர் “ஆம் !ஆம் !ஆம்!’ என மும்முறை சொன்னபின் ஐநூறு பொன் அடங்கிய பட்டுக்கிழியை அவர்களிடம் அளிக்க அவர்கள் “ஆம் !ஆம் !ஆம்!” என்று சொல்லி மகற்கொடைக்கு ஒப்புக்கொண்டனர்.

குடிமூத்தார் ஐவரும் பாண்டவர்களை அழைத்துச்சென்று துருபதன் முன்னால் நிறுத்தி அவரது மகளை பாண்டவர்களுக்கு அளிக்கும்படி கோரினர். அவர் அவர்களைப் பணிந்து குலமூத்தாரின் ஆணையை ஏற்பதாக அறிவித்தார். அவர் திரும்பி தன் தேவியர் இருவரிடமும் அதைச் சொல்ல அவர்களும் தாமரை மலரிதழ் போல கைகளை முத்திரை காட்டி “அவ்வாறே ஆகுக!” என்றனர். அரசர் தன் அமைச்சரிடம் வலக்கையால் வேல் முத்திரை காட்டி “ஆவன செய்க!” என்று ஆணையிட சங்குகள் முழங்கின. அவையெங்கும் உடலசைவும் பேச்சொலியும் நிறைந்தன.

வலது வாயிலில் இருந்து எண்மங்கலத் தாலமேந்திய பன்னிரு அணிப்பரத்தையர் இடையொசிய முலையசைய நடந்து வந்தனர். அவர்களைத் தொடர்ந்து உருவிய வாளேந்தி முன்னால் வந்த திருஷ்டத்யும்னனால் வழிநடத்தப்பட்டு இருபக்கமும் இரு சேடியரால் துணைக்கப்பட்டு திரௌபதி நீரில் வரும் அன்னம் என ஒழுகி மணமேடை நோக்கி வந்தாள். அவளைக் கண்டதும் அவையெங்கும் வாழ்த்தொலிகள் எழுந்தன. பாஞ்சால முறைப்படி செந்நிற மரவுரியாடை அணிந்து நகைகளேதும் இல்லாமல் கூந்தலையும் தோள்களையும் இடையையும் மலர்களைக் கொண்டு மட்டுமே அணிசெய்திருந்தாள். கையில் ஒரு நிறைநாழியில் வஜ்ரதானியமும் தினையும் கோதுமையும் கலந்து அதன்மேல் ஒரு அத்திப்பழத்தை வைத்திருந்தாள்.

நிறைநாழியை மணமேடைநடுவே வைத்துவிட்டு துர்வாசரை அணுகி வாழ்த்து பெற்றாள். ஐந்து குலமூதாதையரை வணங்கியபின் தன் தந்தையையும் அன்னையரையும் சிறியதந்தையையும் தமையனையும் வணங்கிவிட்டு மேடையில் வந்து நின்றாள். ஐந்து குலத்தில் இருந்தும் ஐந்து முதிய மாமங்கலையினர் மணமேடைக்கு வந்து அவளை மஞ்சளரிசியும் மலரும் இட்டு வாழ்த்தினர். ஒவ்வொருவரும் தங்கள் குலத்திற்குரிய மலர்க்கிளைகளால் அவள் நெற்றியைத் தொட்டு மாமங்கலையாக வாழ்கவென்று வாழும் சொல்லளித்தனர்.

நிமித்திகன் கோல் ஏந்தி “வளம் நிறைத்தல்!” என அறிவித்ததும் மூதன்னையர் மேடையில் விரிக்கப்பட்ட மரவுரியில் அவளை கிழக்கு நோக்கி அமரச்செய்தனர். மரத்தாலத்தில் உமியும் மண்ணும் கலந்து பரப்பி அவள் முன் வைத்தனர். திரௌபதி தொன்மையான வளமூட்டும் மந்திரங்களை அவர்கள் சொல்லக் கேட்டு திருப்பிச் சொன்னபடி அதில் நிறைநாழியில் இருந்த மூன்று தானியங்களை ஐந்துமுறை அள்ளி விதைத்தபோது சேடியரும் அரண்மனைப்பெண்டிரும் குரவையிட்டனர். இடக்கையை கதிர்முத்திரையுடன் வைத்துக்கொண்டு வலக்கையால் அள்ளி ஏழுமுறை நீரூற்றிவிட்டு அவள் வணங்கினாள். முளைநிலம் சேடியரால் எடுத்துக்கொண்டுசெல்லப்பட்டது.

பின்னர் ஐந்துகுலங்களையும் சேர்ந்த ஐந்து இளம் அன்னையர் மணமேடைக்கு வந்தனர். கிருவிகுலத்தவள் கன்றுமேய்க்கும் வளைதடியையும், சோமககுலத்தவள் கட்டுக்கயிற்றுச் சுருளையும், சிருஞ்சயகுலத்தவள் பால்கறக்கும் சுரைக்குடுவையையும், துர்வாச குலத்தவள் தயிர்கடையும் மத்தையும், கேசினி குலத்தவள் நெய்க்குடத்தையும் அளித்தாள். மேடையில் கொண்டுவைக்கப்பட்ட மரத்தாலான பசுவின் சிலையருகே வைக்கப்பட்ட சிறிய மரச்சம்புடத்தில் தேன், தயிர், நெய் மூன்றையும் கலந்து செய்யப்பட்ட மூவமுதை இடக்கையால் கன்று முத்திரை காட்டியபடி வலக்கையால் எடுத்து கொண்டுசென்று தன் தந்தைக்கும் அன்னையருக்கும் அளித்தாள்.

ஐந்து குலங்களையும் சேர்ந்த ஐந்து கன்னியர் மணமேடைக்கு வந்து திரௌபதிக்கு சிறிய தூண்டிலையும், மீன்வலையையும், மீன்அரிப்பையும், மீன்கூடையையும், மண்குடுவையையும் அளித்தனர். அவள் இடக்கையால் மீன்முத்திரை காட்டியபடி மேடையில் வைக்கப்பட்ட மரத்தொட்டியில் போடப்பட்ட மரத்தாலான சிறிய மீனைப் பிடித்து எடுத்துச்சென்று தன் தந்தையின் இளையோனிடம் அளித்தாள்.

நிமித்திகர் கைகாட்ட முரசு தாளம் மாறுபட்டு ஒலிக்கத் தொடங்கியது. விதுரரை அணுகிய பத்ரர் வணங்கி மகள்கொடை நிகழவிருப்பதாக அறிவித்தார். விதுரர் எழுந்து கைகளைக் கூப்பியபடி நடந்து சென்று பாண்டவர்களை அணுகி அவர்களை அழைத்துக்கொண்டு துருபதன் அருகே சென்றார். துருபதன் தன் அரசியருடனும் இளையோருடனும் எழுந்து நின்றார். திருஷ்டத்யும்னனால் அழைத்துவரப்பட்ட திரௌபதி அவரது வலப்பக்கம் வந்து நின்றாள். நிமித்திகன் கோலைத் தூக்கி வீசி “நீரூற்றல்!” என அறிவித்தான்.

பத்ரர் அருகே நின்று மணச்சடங்குகளை செய்வித்தார். மங்கல இசையும் குரவையொலிகளும் எழுந்து சூழ விதுரர் தன் கையை நீட்ட துருபதன் தன் மகளின் வலது கையைப் பற்றி அவரது கைமேல் வைத்தார். அக்கைமேல் தருமன் தன் கையை வைத்து பற்றிக்கொண்டான். பிறநால்வரும் தங்கள் கைகளை அக்கைகள்மேல் வைத்தனர். மஞ்சள்நிறச் சரடால் அக்கைகளை சேர்த்துக் கட்டினார் பத்ரர். ஐந்துகுலத்தலைவர்களும் வந்து மணமக்களை அரிசியும் மலருமிட்டு வாழ்த்தினர்.

சேவகர் ஊற்றிய மஞ்சள்நீரில் தன் கைகளை மும்முறை கழுவிக்கொண்டபோது துருபதன் கண்கலங்கி உதடுகளை இறுக்கிக் கொண்டார். விழிநீர் வழியக்கூடாது என அவர் முயன்றாலும் மூன்றாவது முறை நீர்விட்டபின் மஞ்சள்பட்டால் கைகளைத் துடைத்தபோது விம்மி அழுதுவிட்டார். அதுவரை தலைகுனிந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த பிருஷதியும் அழுதபடி மேலாடையால் முகம் மறைத்தாள்.

திரௌபதியை கைப்பிடித்தபடி திரும்பிச்சென்ற தருமனின் மறுகையை பற்றியபடி பீமன் செல்ல அவன் கைகளைப்பற்றியபடி அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் சென்று துர்வாச முனிவரை ஒரேசமயம் கால்தொட்டு வணங்கி வாழ்த்து பெற்றனர். திரும்பி குந்தியை அணுகி வாழ்த்து பெற்றனர். அவள் முகத்தை மறைத்த திரையுடன் இருகைகளையும் தூக்கி வாழ்த்தினாள். விதுரரை வணங்கி வாழ்த்து பெற்றபின் அவர்கள் மேடையில் வந்து நின்றனர்.

நிமித்திகன் “குறைவெல்லல்!” என அறிவிக்க தௌம்யர் வேள்விக்கு இருக்கையாக போடப்பட்டிருந்த தர்ப்பைகளில் இருந்து ஐந்து கீற்றுகளை எடுத்து வந்து அவர்கள் ஐவருக்கும் அளித்தார். அவர்கள் வரிசையாகச் சென்று திரௌபதியின் நெற்றியையும் புருவத்தையும் தர்ப்பையால் மும்முறை வருடினர். மஞ்சள்நீரை அள்ளி அவள் தலைமேல் மும்முறை தூவினர். தருமன் அவளை கைபற்றி அழைக்க அவள் தன் உடலில் இருந்து மூன்று மலர்களைப் பறித்து திரும்பிப்பாராமல் பின்பக்கம் போட்டுவிட்டு அவனை நோக்கி மூன்று அடி எடுத்துவைத்தாள்.

நிமித்திகன் “ஆகொடை” என்று அறிவிக்க ஐவரும் அவள் கைபற்றி மணமேடைவிட்டு கீழிறங்கினர். பொற்பூணிட்ட கொம்புகள்கொண்ட வெண்ணிறப்பசுக்கள் ஐந்தை சேவகர் கொண்டு வந்து நிறுத்தினர். தௌம்யர் அருகே வந்து நின்று வேதமந்திரங்களை சொல்லிக்கொடுக்க அவர்கள் அதை உச்சரித்தபடி கட்டுக்கயிற்றைப் பற்றி ஐந்து வைதிகர்களுக்கு அப்பசுக்களை அளித்தனர். வைதிகர் அவர்களை வாழ்த்தி திரும்பிச் சென்றனர்.

நிமித்திகன் “திருவளித்தல்!” என அறிவிக்க மீண்டும் மேடையேறி அஸ்தினபுரியின் முறைமைப்படி மஞ்சள்பட்டாடை, மணிகள் பதிக்கப்பட்ட அணிகள், மலர்மாலைகள், குங்குமம், மஞ்சள் என ஐந்து மங்கலங்கள் கொண்ட தாலத்தை ஐவரும் கைசேர்த்து திரௌபதிக்கு அளித்தனர். அவள் அதை தலைவணங்கி வாங்கியபின் சேடிகளால் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டாள். அவள் செல்வதும் கண்ணுக்குத்தெரியாத நீரோடை ஒன்றில் ஒழுகிச்செல்லும் அன்னம்போலவே இருந்தது.

“எரிதொழுதல்” என்று நிமித்திகன் அறிவிக்க தௌம்யர் வந்து தருமனை அழைத்துச்சென்று அரங்கில் எரிந்துகொண்டிருந்த மூன்று எரிகுளங்களில் தென்னெரியின்முன் தர்ப்பையாலான வேள்விப் பீடத்தில் அமர்த்தினார். பிறபாண்டவர்கள் அவனுடன் இணையாக அமர்ந்துகொண்டனர். வைதிகர் வேதமோத அதைக்கேட்டு இதழ்மட்டும் அசைய திருப்பிச் சொன்னபடி அவர்கள் தென்னெருப்பில் நெய்யும் சமித்தும் அவியும் இட்டு வணங்கினார்கள்.

நிமித்திகன் “மலர்மாற்றல்” என்று அறிவித்தான். மங்கல நீராடி பாண்டவர்கள் அளித்த பட்டாடையையும் நகைகளையும் அணிந்து, மலர்சூடி, குங்குமமும் மஞ்சளும் நெற்றியில் தொட்டு, திரௌபதி மீண்டும் மேடைக்கு வந்தாள். தருமன் அவளுக்கு செண்பகம், பாரிஜாதம், நீலம், முல்லை, அல்லி எனும் ஐந்து மங்கலமலர்களால் ஆன மாலையை அணிவிக்க அதை அவள் அவனுக்கு திரும்ப அணிவித்தாள். மும்முறை மாலைமாற்றியபின் தருமன் பின்னால் செல்ல பீமன் முன்வந்து மாலைமாற்றினான். ஐவரும் மாலைமாற்றிக்கொண்டபின் பத்ரர் கைகாட்ட முரசின் தாளம் விரைவு கொண்டது. அலையெழுவதுபோல சூழ்ந்திருந்த அரங்கினர் முழுவதும் எழுந்து நின்றனர்.

நிமித்திகன் “நாண்பூட்டல்” என அறிவித்தான். சோமக குலத்தின் மூத்தார் இல்லத்தில் கரவறையில் தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டு வந்த தொன்மையான மரத்தாலத்தில் கூழாங்கல், ஒருபிடி மண், சிறுகுவளையில் கங்கைநீர், செண்பக மலர், அத்திக்கனி, புலிநகம், கஸ்தூரி, மயிற்பீலி ஆகிய எட்டு மலைமங்கலங்களுடன் தாலியை வைத்து ஐந்து மூதன்னையர் எடுத்துச்சென்று துர்வாசரிடம் நீட்டினர். அவர் எழுந்து அதை மும்முறை தொட்டு வாழ்த்தினார். குலமூத்தார் வரிசையாக அதைத் தொட்டு வாழ்த்த துருபதனின் சோமககுலத்தின் மூத்தவர் தாலத்தை வாங்கிக் கொண்டுசென்று முதுவைதிகர் தௌம்யரிடம் அளித்தார். அவர் அதை வேள்வித்தீ முன் வைத்து வேள்விச்சாம்பலைத் தூவி வாழ்த்தி கொண்டுசென்று பத்ரரிடம் கொடுத்தார்.

மரவுரிநூலை திரித்து மஞ்சள் பூசி செய்யப்பட்ட சரடில் குலமுறையும் காப்பும் எழுதப்பட்ட பனையோலையை இறுகச்சுருட்டிக் கட்டி உருவாக்கப்பட்ட தாலியை துருபதனும் அவன் துணைவியரும் இளையோனும் மைந்தரும் தொட்டு வாழ்த்தினர். பின் குந்தியும் விதுரரும் தொட்டு வாழ்த்தினர். துருபதனும் குடியினரும் ஒருபுறம் நிற்க குந்தியும் விதுரரும் மறுபுறம் நிற்க பத்ரர் வழிகாட்ட தருமன் அதை தன் நடுங்கும் கரங்களால் எடுத்து திரௌபதியின் கழுத்தில் கட்டி முதல்முடிச்சை போட்டான். அதன்பின் பாண்டவர் நால்வரும் மேலும் நான்கு முடிச்சுகளை போட்டனர்.

மேளமும் குரவையும் கண்ணுக்குத்தெரியாத விண்ணவரின் களியாட்டு என அவையைச் சூழ்ந்திருந்தன. அவையினர் வாழ்த்துக்களைக் கூவியபடி வீசிய மஞ்சளரிசியும் மஞ்சள் மலர்களும் அவர்களைச் சுற்றி மழையாகப் பெய்தன. சற்று நேரத்தில் வசந்தகாலக் கொன்றைமரத்தடி போல பொன்விரிப்பு கொண்டது மணமுற்றம். ஐந்து முறை முடியப்பட்ட தாலியுடன் திரும்பிய திரௌபதி அவை நோக்கி வணங்கினாள்.

நிமித்திகன் “ஏழடிவைத்தல்” என்று அறிவித்தான். தருமன் பாஞ்சாலியின் கைகளை பற்றிக்கொள்ள பாண்டவர்கள் அவன் கைதொட்டு கைகோர்த்தனர். அறுவரும் கைபற்றியபடி அவியேற்று எழுந்தாடிய மூவெரியை சுற்றி ஏழு காலடிகளை எடுத்து வைத்தனர். ஒவ்வொரு காலடிக்கும் தௌம்யர் அதற்குரிய வேதமந்திரங்களை சொன்னார். ஏழாவது அடியை வைத்ததும் அவர்கள் அமர்ந்து வேள்வித்தீயை வணங்கி அதன் சாம்பலை நெற்றியிலணிந்துகொண்டனர்.

‘சொல்கொளல்’ என அறிவிக்கப்பட்டதும் அறுவரும் கைபற்றியபடி சென்று குந்தியை வணங்கினர். அவள் அரிமலரிட்டு வாழ்த்தியதும் விதுரரை வணங்கினர். பின்னர் துருபதனையும் துணைவியரையும் வணங்கினர். துருபதன் எங்கிருக்கிறோமென்று அறியாதவர் என மயக்குற்ற முகத்துடன் பாவையென அவர்களை வாழ்த்தினார். பிருஷதி திரௌபதியை வாழ்த்தியபோது மீண்டும் மேலாடையால் முகம் துடைத்து அழத்தொடங்கினாள்.

நிமித்திகன் கோலைத்தூக்கி ”அவையீரே, சான்றோரே, மூதாதையரே, தெய்வங்களே கேளுங்கள். இனிய மயக்குறும் நீரால் இவள் வளர்க்கப்பட்டாள். இசைநிறைந்த கனவுகளுக்கு நீர் இவளை கையளித்தது. பின்னர் ஒளிவிடும் தூய நெருப்பால் இவள் நிறைந்தாள். நீரும் இசையும் நெருப்பும் இவளை விட்டு விலகட்டும். அம்மூன்றும் ஆன கணவனால் இவள் நிறைவடைவாளாக! இங்கு இக்கடிமணம் மங்கலமுழுமை கொண்டது” என்று வாழ்த்தி தலைவணங்கி பின்னகர்ந்தான்.

”ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருதீயோ அக்நிஷ்டே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா” என்று வைதிகர் வேதமந்திரத்துடன் நெருப்பை எழுப்பினர். பிரபஞ்சவடிவம் கொண்ட காதலனே இவள் படுக்கையை விட்டு அகல்க. இனி இவள் மானுடக்காதலனுடன் அமைக என்றது வேதம். “உதீர்ஷ்வாதோ விச்வாவ‌ஸோ ந‌ம‌ஸேடாம‌ஹே த்வா அந்யாம் இச்ச‌ ப்ர‌ப‌ர்வ்ய‌ம் ஸ‌ம்ஜாயாம் ப‌த்யா ஸ்ருஜ”

ஒற்றர்தலைவர் சிம்மர் வந்து கருணர் அருகே குனிந்து “அமைச்சரே, இங்கே மணச்சடங்குகள் முடிகின்றன. வேள்வி மட்டும் மாலை வரை தொடரும். இளவரசியின் அடுத்த சடங்கு உக்ரசாமுண்டி ஆலயத்திற்குச் சென்று சுடராட்டு செய்தல்” என்றார். “இளவரசியுடன் ஒரே ஒரு பெண் மட்டுமே செல்லவேண்டுமென்பது நெறி. சேடியர் எவர் செல்லலாம் என்று சொல்லுங்கள். அவளுக்கு பூசனைநெறி தெரிந்திருக்கவேண்டும்.” கருணர் “இளவரசியின் அணுக்கத்தோழி மாயை எங்குமே தென்படவில்லையே. அவள் உடன் செல்லட்டுமே” என்றார்.

சற்று தயங்கியபின் “அவள் சூல்மங்கலம் கொண்டிருக்கிறாள். அவள் மங்கலமன்றில் நிற்கக் கூடாது என்று அரசி சொன்னார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அவள் அழகியல்ல. ஆகவே அவைச்சடங்குகள் எதிலும் அவளை சேர்க்கவேண்டாமென்பது அரசியின் எண்ணம்” என்றார் சிம்மர். “இது அவைச்சடங்கு அல்ல. இதற்கு பார்வையாளர்கள் இல்லை. மாயை உடன்செல்லட்டும். அவளுக்குத்தான் முறைமைகளும் இளவரசியின் உள்ளமும் தெரியும்” என்றார் கருணர். சற்றே சிரித்து “சூல்மங்கலம் கொள்வது சண்டிக்கு உகந்தது என்று நான் சொன்னதாக சொல்க!” என்றார். சிம்மர் தலையசைத்து “ஆணை” என்றபின் விலகிச்சென்றார்.

பாண்டவர்கள் திரௌபதியை கரம்பற்றியபடி சென்று அவைமன்றில் நின்றதும் தௌம்யர் அமர்ந்து திரும்பி மங்கல அவியளிப்புக்கு ஆணையிட்டார். வைதிகர் வேதமந்திரங்களை சொன்னபடி நெய்யூற்ற எரிகுளங்களில் தழல் எழுந்தது. வாழ்த்தியவர்கள் மீண்டும் தங்கள் பீடங்களில் அமர்ந்து கால்களை நீட்டி உடல் தளர்த்திக்கொண்டனர். தொடர்ந்து நிகழும் மூன்றுவகை அவியூட்டலுக்குப்பின் மணமங்கலம் நிறைவடையும் என்று அறிந்திருந்த மக்கள் இசையின் அதிர்வால் தடுக்கப்பட்டு தங்களுக்குள் தேங்கியிருந்த சொற்களை உணர்ந்து மெல்லிய குரலில் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டனர். அவர்களின் பேச்சொலி எழுந்து அவைப்பந்தலின் மேல் வியர்வைவெம்மையும் வேள்விப்புகையும் மலர்மணமும் கலந்த படலமாக நிறைந்திருந்த காற்றில் ரீங்கரித்தது.

மெல்லிய குரலோசையாக கேட்டாலும் கிழக்கு வாயிலருகே நிகழ்ந்தது ஏதோ பூசலென உடனே அனைவரும் அறிந்தனர். அச்சோர்வில் ஒரு பரபரப்பு இனிதாக இருந்ததனால் பெரும்பாலானவர்கள் எழுந்து நின்று எட்டிப்பார்த்தனர். எழுந்து நோக்கிய கருணர் வாயிற்காவல்வீரர்கள் பின்தொடர கோலேந்திய ஒருவர் உள்ளே வந்துவிட்டதையும் அவரை தொடத்தயங்கிய காவலர்கள் கூவியபடி படைக்கலங்களுடன் பின்னால் ஓடிவருவதையும் கண்டார்.

அரங்கில் இளநீலத்திரையென படர்ந்திருந்த புகைத்திரைக்கு அப்பால் தெரிந்த அம்மனிதரை முதலில் தெருவிலிருந்து காவலர் அயர்ந்தவேளையில் உட்புகுந்த களிமகனோ பித்தனோ என்றுதான் கருணர் எண்ணினார். வெளியேற்றும்படி காவலனை நோக்கிக் கைநீட்டி ஆணையிடப்போனபோதுதான் அவர் உக்ரகாபாலிகன் என்று தெரிந்தது. திகைத்து ஒரு கணம் நின்றபின் அவர் காவலர்களை நோக்கி “நில்லுங்கள்! அப்பால் செல்லுங்கள்!” என்று கூவியபடி அரங்கின் இடைபாதை வழியாக அவரை நோக்கி ஓடினார். வீரர்கள் திகைத்து நின்றுவிட காபாலிகர் மட்டும் நிமிர்ந்த உடலுடன் காட்டெருது போல உடல் குலுங்க, தரையதிர நடந்து வருவதைக் கண்டு திகைத்து சற்று பின்னடைந்தார்.

காபாலிகரின் கையில் இருந்த கருகிய காட்டுமரத்தின் உச்சியில் புதிய மண்டையோடு ஒன்று இருந்தது. சுண்ணமாக மாறாது இன்னமும் உயிர்ச்செம்மை எஞ்சியிருந்த புதிய மண்டை. வலக்கையில் அதேபோன்ற இன்னொரு மண்டையோட்டை ஏற்புக்கலமாக வைத்திருந்தார். சடைக்கற்றைகள் பரவிய இறுகிய தோள்களிலும் காட்டுவேங்கையின் தூரெனத் திரண்ட மார்பிலும் சாம்பல் பூசப்பட்டிருந்தது. காது மடல்களில் எலும்புகளை அணிந்திருந்தார். விழிகள் அனல்துளிகள் போலிருந்தன.

படைத்தலைவர் ரிஷபர் துருபதனின் அருகிருந்து உருவிய வாளுடன் தாவி “யார் இவரை உள்ளே விட்டது மங்கல நிகழ்வில்?” என்று கடும் சினத்துடன் கூவியபடி ஓடிவந்தார். துர்வாசர் எழுந்து கைநீட்டி “படைத்தலைவரே, அவர் வரவேண்டியவரே” என்றார். உக்ரகாபாலிகர் மேடையை நோக்கி திரௌபதியை தன் ஊழ்கத்தடியால் சுட்டி “நான் அவள் கையால் இரவல் கொள்ள வந்தேன்” என்றார். அவை முழுக்க அசைவற்று விழியுறைந்து அவரை நோக்கி நின்றது. துர்வாசர் “காபாலிகரே, இங்கு நீர் கொள்ளும் ஏற்பு இக்குடியை நலம்பெறச் செய்யட்டும்” என்றார்.

திகைப்பை உதறிய துருபதன் அருகே வந்து கைகூப்பி “காபாலிகரை வணங்குகிறேன். தங்கள் அடிகள் இந்நகரிலும் அரண்மனையிலும் பட்டது என் நல்லூழ். தாங்கள் நாடுவதென்ன என்று அருள்புரியவேண்டும்” என்றார். காபாலிகர் “நான் அவள் கையில் இருந்து இடுகை ஏற்க வந்தேன்” என்றார். அவர் குரல் குறுமுழவின் உறுமலென ஒலித்தது.

துருபதன் திரும்பி நோக்க திரௌபதி கைகூப்பியபடி முன்னால் வந்தாள். அவளைக் கண்டதும் மண்டையோடு தொங்கிய ஊழ்கத்தடியை தலைக்குமேல் தூக்கிய காபாலிகர் “அன்னை வாழ்க! அவள் கொள்ளப்போகும் பலிகளால் இப்புவி நலம் கொள்க!” என்றார். அவர் தன் மண்டையோட்டை நீட்டியபோது அதில் என்ன போடுவது என்பது போல திரௌபதி இருபக்கமும் நோக்கினாள்.

அவளருகே நின்ற சேடியர் ஓடிவந்து தாலத்தை நீட்டினர். அவள் அவற்றை விழிகளாலேயே விலக்கினாள். துருபதன் திரும்பி பத்ரரை நோக்க அவர் பின்வரிசை நோக்கி கைவீசியபடி ஓடினார். அதற்குள் திரௌபதி அவர் விழிகளை கூர்ந்து நோக்கியபடி தன் கூந்தலில் சூடியிருந்த செங்காந்தள் மலரை எடுத்து அவரது மண்டையோட்டு ஏற்புக்கலத்தில் போட்டாள். அவர் நிமிர்ந்து அவள் விழிகளை நோக்கியபின் மீண்டும் தன் ஊழ்கத்தடியை தூக்கி “அன்னையே வாழ்க!” என்றபின் திரும்பி நடந்தார்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

என்ன நடந்தது என்றே கூட்டத்தினருக்கு புரியவில்லை. அனைவரிடமும் இருந்து எழுந்த ஒலி பெரும் முழக்கமாக ஒலித்தது. துர்வாசர் கைதூக்கி மணநிகழ்வுகள் தொடரட்டும் என ஆணையிட மங்கல இசை பெருகி எழுந்தது. அந்த இசை பதற்றமடைந்திருந்த அவையினரை ஆறுதல்படுத்தியது. கனத்த குளிர்மழை போல அவர்கள் மேல் அது பெய்து நிறைய அவர்கள் மெல்ல மெல்ல அமைந்தனர். தௌம்யர் கைகாட்ட வைதிகர் மீண்டும் வேதம் முழங்கத் தொடங்கினர்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைசார்லி ஹெப்டோ – அரசின்மைவாதத்தின் சிரிப்பு
அடுத்த கட்டுரைகாந்தி , கோட்ஸே- கடிதம்