வெண்முரசில் தொடங்குவது…

Mudar-kanal-600x600

வணக்கமும் அன்பும்,

உங்களுடன் முதலில் எப்படி அறிமுகம் செய்து கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுடைய எல்லாப் படைப்புகளையும் நான் வாசித்ததில்லை.

வெண்முரசுதான் முதலில் என்னை ஈர்த்தது. நேற்றைக்கு முன்தினம் நீங்கள் “எப்போ வருவாரோ” வில் பேசியது போல, 8 வயதில் பாட்டி சொல்லக்கேட்ட மஹாபாரதம் எனக்கு மிகப் பிடித்த வடிவில் கிடைத்தது மிகுந்த உற்சாகத்தை அளித்தது. சிறு வயது தாண்டி நான் வாசிக்கத்துவங்கியபோது மிக வறண்ட கதைகளே படிக்கக் கிடைத்தன (ஒன்றிரண்டு பதிப்புகளையே வாசித்திருக்கிறேன். தேடிப் படிக்கவில்லை என்பதும் உண்மை).

கல்கி, சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன், லா.ச.ரா. தி ஜா என எனக்கு என் தந்தை அறிமுகப்படுத்திய வரிசைக்குப் பின் மனமுவந்து யாரையும் இதனுடன் சேர்த்துக் கொள்ள முடியாத வெறுமை இருந்து கொண்டே இருந்தது. மற்ற எல்லாரையும் அவ்வப்போது படித்தாலும் நான் சரணடைகிற இடம் வெறுமையாகவே இருந்தது.

2

வெண்முரசு வாசிக்கத் துவங்கியதுமே தெரிந்துவிட்டது இது வேறு வகை என்று. மரபின் மைந்தன் முத்தையா சாரின் வியாசமனம் படித்த பிறகு முதற்கனல் வாசித்தேன். பிறகு நேரம் கிடைக்கிற போதெல்லாம் அக்கதாபாத்திரங்களுடனே உலவினேன்.

பெரும்பாலான இடங்களில் உணர்வுகளை மிக நுட்பமாக நீங்கள் சொன்ன இடங்கள் ஆச்சரியத்திலாழ்த்தின. எப்போதும் தடுமாற்றத்துடனே இருக்கிற எனக்கு உங்கள் காவியத்தின் சேடிகள் கூட பிரமிப்பை ஏற்படுத்தினார்கள்.

உடலால் பார்ப்பதும், பீமனின் ஏளன மனநிலையும், ஒவ்வாத உணர்வுகளை உந்தித் தள்ளும் முனைப்பும் குந்திக்கும் அர்ஜுனனுக்குமான அண்மையும் விலகலும், இடையிடையே சொல்லப்படுகிற மனித இயல்புகளும் மௌனத்தின் அடர்த்தியை மொழி பெயர்க்கும் லா.ச.ரா.வைத் தாண்டி நின்றவை.
3
அவற்றில் நான் பிரமித்து நின்ற இடம் முதற்கனலின் கடைசி அத்தியாயம். யாரோடும் பகிர்ந்து கொண்டுவிட முடியாத முழுமையான அனுபவம். . யாருக்கும் புரிந்து கொள்ள முடியாத, பல பேருக்கு நேர்ந்திருக்காத அனுபவம் என்று எண்ணியதை எழுத்தில் பார்த்தது அத்தனை அதி உன்னதமான ஆச்சரியம்.

இன்றுவரை வெண்முரசு வாசித்தபின் தான் என் இரவு முடிவதோ துவங்குவதோ.
அலையில் கால் நனைத்தேன் என கடலிடம் சொல்வது போலத்தான் இந்த மின்னஞ்சல் என்று உணர்ந்த போதும் சொல்லிவிட வேண்டுமென்ற என் தவிப்பைத் தவிர்க்க இயலவில்லை.

விஷ்ணுபுரம் கலந்துரையாடல் அன்றும் எப்போ வருவாரோவின் போதும் தங்களைச் சந்தித்த போதும் அறிமுகப்படுத்திக் கொள்ளும் தைரியம் வரவில்லை. அடுத்த முறையாவது என் பதட்டம் குறையுமென எண்ணுகிறேன்.

நன்றி
மீனாம்பிகை
கோவை
NEELAM__wrapper-Paper-pack-600x600
அன்புள்ள மீனாம்பிகை

நேரடியாக வெண்முரசிலேயே என்னை வாசிக்க ஆரம்பித்த வாசகர்கள் நிறைய இருக்கிறார்கள். பெரும்பாலும் இலக்கியவாசிப்புக்கு ஒரு தொடக்கம் தேவைப்படுகிறது. ஏற்கனவே உள்ளே இருக்கும் ஒன்றில் இருந்து புதியவற்றுக்குச் செல்வது எளிது. மகாபாரதக்கதையில் ஆர்வமிருக்கும் ஒருவரால் வெண்முரசுக்குள் எளிதில் வந்துவிடமுடியும். அதன் நுட்பங்கள் எவையும் இலக்கியவிளையாட்டுக்கள் அல்ல, வாழ்க்கை நுட்பங்கள். அவற்றை சொந்த வாழ்க்கையை வைத்தே வாசகர் புரிந்துகொள்ள முடியும்

சந்திப்புகளில் பொதுவாக உடனடியாகப் பேசிவிடமுடிவதில்லை. பேசுவதற்கான ஒரு தருணத்தை பேசுபவர் உருவாக்கிக்கொள்ளவேண்டும். அந்தத் தயக்கத்தை பலரும் கடப்பதில்லை. கொஞ்ச நாள் ஆகலாம். மீண்டும் அடுத்த கோவைச்சந்திப்புகளில் சந்திக்கலாம். பேசலாம். கண்டிப்பாக வாசிப்பின் அடுத்த கட்டம் உரையாடல்தான்

ஜெ

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 92
அடுத்த கட்டுரைநகைச்சுவையும் வன்முறையும்