சார்லி ஹெப்டோ – அரசின்மைவாதத்தின் சிரிப்பு

2222

ஜெ சார்,

“சார்லி ஹெப்டோ” தாக்குதல் நடந்தபோது, லூசி பாரீஸ் ஏர்போர்ட்டில்; கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து கென்யா திரும்புவதற்காக, புறப்பாடில் check-in முடிந்து காத்திருந்ததாக சொன்னார்.

ஏர்போர்ட்டும், விரைவாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பரபரப்படைந்திருக்கிறது.

லூசி கென்யாவில் ஒரு Rose Breeding கம்பெனியில் வேலை செய்கிறார். அந்நிறுவனம், எங்களிடம் 2500 square meters Greenhouse வாடகைக்கு எடுத்திருக்கிறது. இரண்டு வாரங்களுக்கொருமுறை மேற்பார்வையிட வருவார்.

இம்முறை வந்தபோது, வருத்தம் தெரிவித்துவிட்டு, பத்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். சில விஷயங்கள் ஆச்சரியமாயிருந்தது.

ப்ரான்ஸில் முஸ்லிம் மக்கள்தொகை எவ்வளவு இருக்கும் என்று கேட்டதற்கு, அங்கு மதவாரி கணக்கெடுப்பு அரசு நடத்துவதில்லை என்றார். மற்றவரிடம் மதம் கேட்பது குற்றமாகும் என்றும், யாரேனும் உங்களிடம் மதம் கேட்டால், நீங்கள் அவர்மேல் கோர்ட்டில் வழக்கு தொடரலாமென்றும் சொன்னார்.

வேண்டுமென்றேதான் கேட்டேன் – “லூசி, இந்த சம்பவத்திற்குப் பின், அரசு யோசிக்கிறதா, கணக்கெடுப்பு அவசியம் என்று?; மக்கள் இஸ்லாம் மதத்தின் மேல் அவநம்பிக்கை கொள்கிறார்களா?”.

உடனே மறுத்தார். “இல்லை. இஸ்லாம் மதத்திற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. இவர்கள் தலையில் மறை கழன்ற குழுக்கள்”

பாரீஸ் பேரணியைப் பற்றி பெருமையாக சொன்னார்.

வெங்கடேஷ்

1111

அன்புள்ள வெங்கடேஷ்

இணையத்தில் சார்லி ஹெப்டோ பற்றி தாறுமாறாக எழுதப்படுவதை வாசித்து ஒருமாதிரி சுஸ்த் ஆகி இருக்கும் நிலை. ஆகவே அதிகம் பேச முடியவில்லை

ஐரோப்பியநாடுகள் நம்மைப்போன்றவை அல்ல. அவை நவீன ஜனநாயகம், மதச்சார்பின்மை, பேச்சுரிமை ஆகியவற்றுக்கு வந்துசேர்வதற்காக நூறாண்டுகளுக்கும் மேல் குருதி சிந்தியவை. அவ்விழுமியங்களின் வல்லமையும் மதிப்பும் அவர்களுக்குத் தெரியும்

இருநூறாண்டுக்கால ஜனநாயகப் பரிசோதனையின் உச்சமே ஐரோப்பாவின் பண்பாட்டுக்கொடை என்று சொல்லலாம். ஐரோப்பாவின் வணிக நோக்குள்ள, கருத்தியல் மேலாதிக்க நோக்குள்ள அரசியலை அதனுடன் ஒருபோதும் கலந்துகொள்ளக் கூடாது.பலர் செய்வது இதைத்தான்

உண்மையில் இரண்டு ஐரோப்பாக்கள் உள்ளன. ஆதிக்க ஐரோப்பாவை எதிர்க்கையிலேயே நவீன ஜனநாயகத்தின் மடித்தொட்டிலான ஐரோப்பாவை நாம் மதித்தாகவேண்டும். அவை ஒன்றை ஒன்று எதிர்ப்பவை. ஜனநாயக ஐரோப்பா உருவாக்கி அளிக்கும் சிந்தனைகளைக் கொண்டுதான் நாம் ஆதிக்க ஐரோப்பாவை இன்றும் எதிர்கொண்டபடி இருக்கிறோம்

இன்றைய உலகுக்கு ஜனநாயக ஐரோப்பாவே முதன்மையான முன்னுதாரணம் என்பதே என் எண்ணம். இன்றும் நாம் வழிபடும் எழுத்தாளார்களும் சிந்தனையாளர்களும் அங்கிருந்தே வருகிறார்கள். நாம் அவர்களுடன் முரண்படலாம். எதிர்க்கலாம். அவர்களின் முன்முடிவுகளை எதிர்கொள்ளலாம். ஆனால் அவர்களே நம் முன்னோடிகள்.

அந்த முன்னேறிய ஜனநாயகப்போக்கில் பல தளங்கள் உண்டு. அதில் இரு அம்சங்கள் நமக்கு இன்னமும் கூட பிடிபடாதவை. ஒன்று உச்சகட்ட தனிமனிதவாதம். இரண்டு , அரசின்மைவாதம். நாம் அங்கே சென்றுசேர இன்னும்கூட ஒரு நூற்றாண்டு ஆகலாம். [போகிற் போக்கைப்பார்த்தால் அதுவே சந்தேகமாக இருக்கிறது]

தனிமனிதசுதந்திரம் என்ற நோக்கின் உச்சமே அரசின்மைவாதம் என்று சொல்லலாம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தன் இன்பவிழைவை அடையவும், தன் அறிவுநாட்டத்தை நிறைவேற்றவும், ஆன்மீகமுழுமை பெறவும் முழுமையான உரிமை உள்ளது என்பது முதல் கொள்கை.

அப்படி தனிமனிதன் முழுமையடையத் தடையாக இருப்பவை அவனை சாதி, மதம், இனம், மொழி, பண்பாடு, ஒழுக்கம்,அரசாங்கம் என்றெல்லாம் அடையாளப்படுத்தும் அமைப்புகள். அவை தேவையான அளவுக்கு இருந்தாகவேண்டும். இல்லையேல் தனிமனிதனே பாதுகாப்பற்றவன் ஆகிவிடுவான். ஆனால் அவை நிகரான வல்லமைகளால் தடுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படாவிட்டால் தனிமனிதன் சுதந்திரமாக இருக்கமுடியாது

ஆகவேதான் அங்கே அராஜக சிந்தனைகள் [Anarchism ] வலுவாக உள்ளன. [அராஜகம் என்ற சொல்லை நான் அரசின்மைவாதம் என்று மொழியாக்கம் செய்வேன். அராஜகம் என்பது பேச்சுவழக்கில் அழிவுத்தன்மை கொண்டது என்னும் எதிர்மறைப்பொருளில் பயன்படுத்தப்படுவது என்பதனால்]

அரசின்மைவாதம் என்பது மிகப்புனிதமான ஓர் மனநிலை. நிறுவப்பட்ட அனைத்தையும் எதிர்க்கும் ஒரு நிலை அது. கட்டமைக்கப்பட்ட அனைத்தையும் துறக்கும் நிலை. அது அனைவருக்கும் சாத்தியமல்ல. அரசின்மைவாதி என்ற பாவனை மேற்கொள்பவர்களை நிறையவே காணமுடியும். ஆனால் அவர்களின் நம்பிக்கைகள் புண்பட்டால் அவர்களின் அரசின்மைநிலை மாறும்.

[உதாரணம், ஈவேரா அவர்களின் பக்தர்கள். அவர்கள் அவரை அரசின்மைவாதி என்பார்கள். தங்களையும் அப்படிச் சொல்லிக்கொள்வார்கள். ராமனுக்கு செருப்புமாலை அணிவிப்பார்கள். ஆனால் ஈவேராவை ஒரு மதவெறியன் செருப்பால் அடிப்பேன் என்று சொன்னால் கொதித்துக்கிளம்பிவிடுவார்கள். இவர்கள் இன்னொருவகை மதவாதிகள். இன்னொரு சாமியை கும்பிடுகிறார்கள், அவ்வளவுதான்]

உண்மையான அரசின்மைவாதி என்பவன் அனைத்தையும் விமர்சிப்பவன். அனைத்தையும் என்பதை மும்முறை அடிக்கோடிடவும். அதன் மொழி என்பது எப்போதும் எள்ளல்தான். பிறரை எள்ளிநகையாடுபவன் தன்னையும் எள்ளிநகையாட அனுமதிப்பான். புனிதமான அனைத்தையும் கவிழ்ப்பான். அதிர்ச்சியடையச் செய்வான். [நமக்கு இங்கே சார்லி ஹெப்டோவின் பல கார்ட்டூன்கள் ஆபாசமாகத் தெரிவதற்கான காரணம் அங்கே அதிர்ச்சியின் எல்லை நமது தலைக்கு வெகுவாக மேலே உள்ளது என்பதுதான்]

எந்தக் கட்டுப்பாடுகளும், எல்லைகளும் இல்லாத எள்ளலே அரசின்மைவாதமாக இருக்கமுடியும். ஏனென்றால் கட்டுப்பபாடு என்றாலோ எல்லை என்றாலோ அதை விதிக்கும் ஒரு நெறியோ அமைப்போ அவசியமாகிறது. அதை ஏற்றுக்கொண்டதுமே அரசின்மைவாதம் காலியாகிவிடுகிறது. அந்த உரிமையை முன்னேறிய ஜனநாயக நாடுகள் அனுமதிக்கின்றன. பாதுகாக்கின்றன.

ஜனநாயகப் பண்பாட்டின் தவிர்க்கமுடியாத ஓர் உச்சம் அது. நமக்கு இன்னும் அது அறிமுகமாகவில்லை. இந்திய அரசியல் சட்டமே நமக்கு அதை அனுமதிக்கவில்லை.நாம் இன்னமும் ஜனநாயகமாக உருத்திரளாதவர்கள். இங்கே தனிமனிதர்கள் மிகமிகக்குறைவு. பெருந்திரள் மனநிலையே நம்மை ஆள்கிறது. ஆகவே இங்கே நவீன அரசின்மைவாதம் இப்போதைக்கு சாத்தியமும் அல்ல.

ஆகவேதான் நாம் அரசின்மைவாதியிடம் போய் ‘அடிப்படை நாகரீகம்’ பேணவேண்டும் என்று உபதேசம் செய்கிறோம். இடக்கரடக்கல்களை கோருகிறோம். சமூக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக்கூடாது என்கிறோம். அதையெல்லாம் செய்தால் அவர்கள் அரசின்மைவாதிகளே அல்ல என்ற எளிய விஷயமே நமக்குப்புரிவதில்லை.

நான் மதிக்கும் பல பெரும் கலைஞர்கள் அரசின்மைவாதிகள் தான். பெரும் சிந்தனையாளர்கள் அரசின்மைவாதிகளே. காந்தியிடம் ஓர் அளவு வரை அரசின்மைவாதம் எப்போதும் உண்டு. ஆகவேதான் அவர் கணிசமானவர்களால் சாத்தியமற்றவைகளைப் பேசும் கிறுக்கர் என்று கருதப்பட்டார். காந்திக்கு அன்று உருவாகி வந்த ஐரோப்பிய அராஜக சிந்தனையாளர்கள் கணிசமானவர்களிடம் நேரடியாக தொடர்பிருந்தது.

எம்.கோவிந்தனை ஓர் அரசின்மைவாதி என்றே நான் மதிப்பிடுவேன். அவரது அவ்வியல்பு பி.கே.பாலகிருஷ்ணனிலும் ஆற்றூர் ரவிவர்மாவிலும் உண்டு. கோவிந்தனும் பாலகிருஷ்ணனும் அதனால் தனிமைப்பட்டு சொந்த நரகங்களுக்குள் சென்று சேர்ந்தனர். ஆற்றூர் அவரது cynicism த்தின் குகைக்குள் சுருண்டுகொண்டு வாழ்கிறார். இந்தியாவில் அவ்வளவுதான் சாத்தியம்

ஆனால் நடராஜகுருவுக்கும், நித்ய சைதன்ய யதிக்கும் அவர்களின் அராஜகவாதத்துடன் வாழ இந்து மதத்துக்குள் இடமிருந்தது. அவரது அத்தனை நக்கல்களையும் இந்து மனம் ஏற்றுக்கொண்டது. அவரது மாணவரான வினய சைதன்யா போல பரிபூர்ணமான பொறுக்கியை அல்லது உலகப்பொறுக்கியான காரி டேவிஸை அது அனுமதித்தது.

காரணம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ முதல் ‘நாமார்க்கும் குடியல்லோம்’ வரை இங்கே இருந்த தத்துவ நிலைதான் இது. இன்றும் நம்முள் வாழும் சித்தர்களின் வாழ்க்கைதான். ஒரு அடையாள அட்டையையோ ஒரு பேருந்தில் பயணச்சீட்டையோ எடுப்பதே தனக்குரியதல்ல என நினைப்பவர்களின் உலகம் ஒன்று நம்மைச்சுற்றியும் உண்டு. அது இந்தியப்பண்பாட்டின் சாராம்சமான ஒரு மெய்நிலை. அதை நம் மனம் மதத்துக்குள் மட்டுமே அனுமதிக்கிறது. ‘அவங்கள்லாம் சித்தர்’ என்று நாம் கடந்துசெல்கிறோம்.

என் புனைவுலகில் அத்தகைய முழுமையான அரசின்மைவாதக் கதாபாத்திரங்களை படைத்திருக்கிறேன். விஷ்ணுபுரத்தில் சுடுகாட்டுச் சித்தர், கொற்றவையில் நீலி, காடு நாவலில் அய்யர்.

சார்லி ஹெப்டோ ஓர் அரசின்மைவாத இதழ். அதில் கேலிசெய்யப்படாத எதுவுமே இல்லை. இனவாதம் மட்டும் அல்ல இனவாதத்துக்கு எதிரான இலட்சியவாதமும் கேலிசெய்யப்படும். வலதுசாரிகளும் இடதுசாரிகளும் கேலிசெய்யப்படுவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் மறுதரப்பின் குரலாக அதை முத்திரைகுத்துவார்கள். அது பிரான்ஸின் மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் மட்டும் அல்ல அரசின்மைவாதத்தையும்கூட கேலி செய்கிறது

தமிழகத்தில் பலரையும்போல இந்நிகழ்வின் வழியாக நான் இவ்விதழை அறியவில்லை.இந்தியாவில் ஓரளவிலேனும் அரசின்மைவாதத்திற்கும் அதன் முழுஏளன நிலைபாட்டுக்கும் இடமுள்ள மாநிலம் கேரளம்தான். அல்லது தொண்ணூறுகள் வரை இடமிருந்தது. வங்காளிகள் மலையாளிகளை விட அறிவார்ந்த சூழல் கொண்டிருந்தாலும் அங்கே கேலிக்கு இடமே இல்லை — இடதுசாரி மூர்க்கத்தால்.

எண்பதுகளில் கேரளத்தில் பாக்கனார் என்ற இதழ் வெளிவந்தது. முழுக்கமுழுக்க நையாண்டி. இடது, வலது, நடு, குறுக்கு, நெடுக்கு எல்லாரையும் நையாண்டி செய்தது. கேரளத்தின் இரு முக்கியமான கோஷங்களை கலந்துகட்டி அது போட்ட ஒரு கார்ட்டூன் நினைவில் இருக்கிறது. முன்னால் இருமுடிக்கட்டுடன் ஒருவர் “இங்கிவிலாப்!’ என்று கூவுகிறார். பின்னால் செங்கொடியுடன் ஒருவர் ‘சரணமய்யப்பா” என்கிறார். பல கேலிகள் இடுப்புக்குக் கீழே செல்பவை.

பாக்கனாரின் முள் குத்தியபோது ‘யாரையும் புண்படுத்தாத நகைச்சுவையே உயர்ந்தது’என்பது போன்ற உபதேசங்கள் வெளிவந்தன. அப்போது சார்லி ஹெப்டோ சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் பாக்கனார் நின்றுவிட்டது. ஆனால் இன்று பாக்கனாரின் மரபு டிவியில் தொடரத்தான் செய்கிறது.

பாக்கனார் என்ற பெயரையே நல்ல உதாரணமாகச் சொல்லலாம். அவர் கேரளத்தின் 12 சித்தர்களில் ஒருவர். கேரளத்தின் பண்பாட்டு நாயகர்களாகிய இவர்களை பறைச்சி பெற்ற பன்னிருவர் என்பார்கள். வரிசையில் இவர் இரண்டாமர். மலையாளச் சொல் ஒன்று அற்புதமாக இவரைச் சுட்டும், ‘தாந்தோநி’ [தனக்குத் தோன்றியமாதிரி நடப்பவர்]

இரு வகை கதைகள் இவரைப்பற்றி உள்ளன. தத்துவ கனமுள்ள உயர்தரக் கதைகள் ஒருவகை. உதாரணம் அவர் நான்கு அழகான முறங்கள் செய்தார். நான்கு எதற்கு என்றனர் ஊரார். அவர் சொன்னார். ஒன்று ,விற்று கடன்களை அடைப்பதற்காக. இரண்டாவது, விற்று சாமான்களை வாங்கி சாப்பிட. மூன்றாவது, அவருக்கும் மனைவிக்கும் பயன்படுவதற்காக. நான்காவது சும்மா தூக்கி தூரப்போடுவதற்கு.

[வேடிக்கை என்னவென்றால் இந்த முறம் கதை ஒரு சடங்காகவே கேரளத்தில் சில பகவதி ஆலயங்களில் பாக்கனாருக்காகச் செய்யப்படுகிறது. நான்கு முறங்களில் ஒன்று சிரித்துக்கொண்டே தூக்கி வீசப்படும்]

இன்னொரு வகை கதை வாய்மொழி வட்டத்தில் உலவுவது. பாக்கனாருக்கு அருள்புரிய பகவதி முக்கண்ணும் பதினாறு கைகளும் மண்டையோட்டு மாலையுமாக அதிபயங்கர கோலத்தில் எழுந்தருளினாள். ‘அடேய் பக்தா, என்னடா வரம் வேண்டும்?’ என்றாள். ‘இதுவரை நான் சரியான பெண்ணை பார்த்ததில்லை. உன் இடுப்புக்கு சுற்றும் பெண்குறி இருக்கும்படி காட்டு’ என்றார் பாக்கனார். தேவி நாணம் தாளமுடியாமல் ஒடிப்போய்விட்டாள்

[அரைக்கு சுற்றும் பூறு என்பார்கள் இதை நாட்டார் வழக்கில். பூறு என்றால் பெண்குறி. பெண்களுக்கு உண்மையில் அப்படி உண்டு என்றும் ஒன்றுமட்டும்தான் பிறர் கண்ணுக்குத்தெரியும் என்றும் பகவதிக்கு அவை வெளியே தெரியும் என்றும் கிராமப்புற சொலவடை. சுருக்கமாக கேரளத்தில் acp என்று இது சான்றோரால் சொல்லப்படுகிறது]

பாக்கனார் என்ற பெயரை சூட்டிக்கொண்ட அந்த இதழ் மிகச்சரியாகவே ஒரு தொடக்கத்தை நிகழ்த்தியது. அந்த அளவுக்கு கேரளச் சமூகமேகூட முதிர்ந்திருக்கவில்லை. ஆனால் மலையாள இலக்கியத்தில் வி.கெ.என் போல முழுமுற்றான அராஜக நகைச்சுவையாளர் நிகழ முடிந்திருக்கிறது. விகெஎன் போல ஓர் எழுத்தாளர் இருந்தால் உணர்ச்சிப்பிழம்புகளாக எப்போதுமிருக்கும் தமிழர் அடித்தே கொன்றிருப்பார்கள்.

சார்லி ஹெப்டோ நாம் சென்றடையவேண்டிய தொலைவில் இருக்கும் ஓர் இதழ். பிரான்ஸ் அதன் மகத்தான ஜனநாயகப் பரிசோத்னைகள் வழியாக மெல்லமெல்ல அடைந்த ஓர் உச்சம். அதை இங்கே நம்முடைய பின்தங்கிய ஜனநாயகத்தில் இருந்துகொண்டு, அரைப்பழங்குடி மனநிலைகளில் உலவிக்கொண்டு மதிப்பிடுகிறோம். ஆலோசனைகள் சொல்கிறோம்.

சார்லி ஹெப்டோ மீதான தாக்குதல் என்பது மானுடத்தின் பின்தங்கிய பகுதியில் இருந்து மானுடத்தின் உச்சநிலை நோக்கி செய்யப்பட்ட தாக்குதல். இந்தியர்களாகிய நாமும் [ இந்து முஸ்லீம் கிறிஸ்தவர் அனைவரும்தான்] அந்த இருண்டவெளியில்தான் இருந்துகொண்டிருக்கிறோம்

இன்று தங்களை கீழைத்தேயவியலாளர் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் தாரிக் அலி போன்றவர்கள் வகைவகையாக எழுதுகிறார்கள். அடிப்படைவாதத்தை சப்பைக்கட்டு கட்டும் முக்கியமான வார்த்தை ‘ஆனால்’ என்பது. கண்டிக்கிறோம் ஆனால் என்பதைப்போல அயோக்கியத்தனம் வேறில்லை

பிரான்ஸில் ஐம்பது லட்சம் முஸ்லீம்கள் வாழ்கிறார்கள், அவர்கள் புண்படுகிறார்கள் என்பது ஒரு வாதம். அவர்கள் தாங்கள் வாழும் நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் உணர்ந்துகொண்டு அந்த உயரத்தை அடையவேண்டுமென்பதே நியாயமானது. பிரான்ஸ் தன் இருநூறாண்டுக்கால ஜனநாயகப் பரிசோதனைகள் வழியாக ரத்தமும் கண்ணீரும் சிந்தி அடைந்துள்ள உச்சத்தை இவர்களுக்காக விட்டுக்கொடுக்கவேண்டும் என்பதைப்போல அபத்தமானது ஏதுமில்லை

இன்னும் அசிங்கமான ஒரு கட்டுரை பார்த்தேன். தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்லாமிய காவலர் ஒருவரை புகழ்ந்து அவரது நம்பிக்கையை சார்லி ஹெப்டோ புண்படுத்தியும் அவர் அவ்விதழின் கருத்துரிமைக்காக உயிர்கொடுத்தார் என்றும் அவர் மட்டுமே ‘ஹீரோ’ என்றும்.அவர் காவலர், அவ்வேலையைச் செய்தவர், பணியில் கொல்லப்பட்டார். அவருக்கே என்னவென்று தெரிந்திருக்க்காது. அவரை திருவுரு ஆக்கி பிரான்ஸின் மதிப்பீடுகளை இழித்துரைக்கிறார்கள்.

என்னென்ன பசப்புகள் வழியாக நம் சிந்தனை செயல்படுகிறது. நாம் தின்னும் சோறு பெரும்பாலும் இதிலேயே செலவாகிவிடுவதனால்தான் நம்மால் எதையுமே உருப்படியாக செய்யமுடியவில்லை போலும்.

இன்னமும் கூட மதவாரிக் கணக்கெடுப்பு நிகழக்கூடாதென அவர்கள் சொல்வதிலுள்ள பெருந்தன்மை அவர்கள் கொண்டுள்ள ஜனநாயக நம்பிக்கையின் வெளிப்பாடே. காந்தி அதையே சொல்லியிருப்பார். அது ஒருவேளை தற்காலிகச் சிக்கல்களை உருவாக்கலாம். ஆனால் அது noble என்று மட்டுமே சொல்லத்தக்க மனநிலை. அது ஒருபோதும் தோற்காது.

சார்லி ஹெப்டோவுடன் இணைந்து நின்ற ஐரோப்பிய சமூகம் உலகுக்கு ஒரு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. பதினேழாம் நூற்றாண்டில் உலகை நோக்கி நவ ஐரோப்பா அளித்த வாக்குறுதிக்கு நிகரான ஒன்று அது

ஜெ

முந்தைய கட்டுரைமலையாளம் கற்பது
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91