அன்புள்ள ஜெயமேகனுக்கு,
எனக்கு மலையாளம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வெகுநாளாய் ஆசை உண்டு.
இந்திய மொழிகளில் தமிழைத் தவிர வேறெதுவும் தெரியாமல் இருபத்திரண்டு
வருஷங்கள் முடியப் போகிறது என்பதை நினைக்க வெட்கமாகவும் இருக்கிறது.
கன்னியாகுமரியில் பிறந்த புண்ணியத்தால் மலையாளம் ஓரளவுக்குத்
தடுமாறியேனும் பேசுகிறேன்; புரிந்து கொள்கிறேன்.
கல்லூரியில் மலையாளநண்பர்களிடம் மலையாளம் எழுத வாசிக்க பயன்படும் புத்தகங்களைப் பற்றிக் கேட்கும் போது அவர்களுக்கும் தெரியவில்லை. 30 நாட்களில் மலையாளம் என்கிற புத்தகத்தை வாங்கினேன். ஆனால் அதில் மலையாளத்தின் கூட்டெழுத்துருக்கள் கூட முழுமையாக இல்லை. சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போகும்போது குண்டர்ட்டின் மலையாளம் ஆங்கில டிக்ஷனரியைப் பார்த்தேன். அதை
வாங்குவதற்குக் காசில்லை. அதுவும் அது எவ்வளவு உதவும் என்பதும் தெரியாது.
இப்போதிருக்கும் சந்தர்ப்பத்தை விட்டால் மொழி கற்றுக் கொள்வது கடினம்
என்பதை அறிவேன். எனக்குத் தெரிந்து தமிழிலும், மலையாளத்திலும் எழுதும்
திறன் பெற்றவர் நீங்கள் தான். ஏதேனும் உதவ முடியுமா?
நன்றி
ஷைன்சன்
அன்புள்ள ஷைன்சன்
இன்றையநிலையில் இணையம் வழி மொழி கற்றுக்கொள்வதே மிக எளிது.
http://www.omniglot.com/writing/malayalam.htm
உதவக்கூடும். வேறு பல தளங்களும் உண்டு. இணையத்திலேயே அகராதி கிடைக்கிறது
உதவும் வழி முறை ஒன்றுண்டு . கூகிள் டிரான்ஸ்லிட்டரேட்டர் மலையாளம் வைத்துவிட்டு ஆங்கில உச்சரிப்பை அடித்து அதற்கு என்ன மலையாள் எழுத்து வருகிறது என்று பார்ப்பது. மலையாள சொற்களை அடித்து வாசிப்பது
என் நண்பர் மணவாளன் வெறும் எட்டு நாட்களில் மலையாள நூல்களை வாசிக்க ஆரம்பித்துவிட்டார். இப்போது கோவையில் சந்தித்தபோது சொன்னார். திகிலாக இருந்தது
ஜெ