காந்தி , கோட்ஸே- கடிதம்

download
மதிப்பிற்குரிய ஜெ,

கோட்சே வீரவழிபாடு, காந்தி கோட்சே இந்துத்துவம், கடிதங்களை வாசித்தேன்

இந்துத்துவம் குறித்த சர்ச்சைகள் இன்று முக்கியத்துவம் பெற்றதற்கு மத்திய பிஜேபி அரசின் நிறமே காரணம்.மற்றபடி இவை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கின்றன.

நீங்கள் வசிப்பதற்கு நேர்மாறான கிறிஸ்தவர்கள் குறைவாக உள்ள பகுதியில் இருப்பவள் நான்.நான் படித்ததெல்லாம் கிறித்தவ கல்வி நிலையங்களிலேயே.சில காலங்கள் கிறித்தவ மரபில் வாழ்ந்தும் இருக்கிறேன்.

இந்து மதத்தையும் காந்தியையும் இவர்கள் வசைபாடுவதைக் கேட்டுமிருக்கிறேன்.ஹரிஜன் என்ற வார்த்தையை உருவாக்கியதே காந்தியின் சாதிவெறி தான் என்று கிறித்துவ மேடைகளில் ,இளைஞர் கூடுகைகளில் பேசுவார்கள்.

நான் என் எட்டாம் வகுப்பிலேயே சத்திய சோதனையை வாசித்துள்ளேன்.காந்தியைஎன் மனதிற்கு மிக நெருக்கமாய் உணர வைத்த நூல் அது.கல்வி நிறுவனங்களில் இவர்கள் காந்தியை வசைபாடுவதைக் கேட்டு என் மனதில் தோன்றிய கருத்துகளையே நீங்களும் எழுதுகிறீர்கள்.நான் எண்ணுவதுண்டு காந்தியே இல்லையென்றால் நீங்கள் இத்தனை தைரியமாக மேடையேறி உங்கள் கருத்துகளைக் கூற இயலுமா?சிறுபான்மையினரையும்,தாழ்த்தப்பட்டவர்களையும் காந்தியைப் போல் நேசித்த தலைவர் எவருண்டு?

இவற்றையெல்லாம் அங்கு பேசவே இயலாது.அத்தனை சர்வாதிகாரமான மேடைகளும் கூடுகைகளுமாக அவை நடக்கின்றன.இன்று அவை இன்னும் ஆவேசமாக நடக்கக்கூடும்.

கர் வாபசி என்ற ‘இந்து மதத்திற்கு திரும்புவோம்’ என்ற அழைப்பிற்கு இன்று சிறுபான்மையினர் எழுப்பும் குரல்களை நேரடியாகப் பார்க்கிறேன்.தேவாலயங்களில் நேரடியான தாக்குதல்கள் ,பிரார்த்தனைகள்.ஜெ சார் மோடியை அந்திக்கிறிஸ்து என்று பிரசங்கிப்பதையும் கேட்டேன்.அதே போல நான் பணியாற்றுவது முஸ்லீம்கள் நிறைந்த பகுதியில்,இப்பொழுது சிறு குழந்தைகள் கூட சிறுபான்மையினர் நசுக்கப்படுவதாக எண்ண வைக்கப்படுகிறார்கள்.என் மாணவர்கள் என்னிடம் எதையும் பகிர்ந்து கொள்பவர்கள்.மசூதிகளிலுமே இந்துக்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

உண்மையில் எனக்கு எந்த மத நம்பிக்கையும் இல்லை.அதனால் இவைகளை உற்று கவனிக்கிறேன்.

மகாத்மாவின் கொள்கைகளைப் பற்றி இந்நாட்டில் சரியாகப் புரிந்தவர்கள் மிகக் குறைவு.காந்தியைப் பற்றிய ,அவரது இந்துத்துவ கொள்கைகளைப் பற்றிய கிறித்துவ நிறுவனங்களின் நிலைப்பாட்டினை நேரில் அறிந்தவள் என்பதாலேயே எழுதுகிறேன்.கிறித்துவ கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரம் நன்றாக இருப்பது உண்மைதான்.ஆனால் அங்கு அவர்கள் செய்யும் பிற செயல்களால் பலமுறை மனம் வருந்தியிருக்கிறேன்.மாணவிகள் பொட்டு வைக்கக்கூடாது என்பது முதல் பள்ளிகளிலே விஜயதசமி,சரஸ்வதி பூஜை கூடாது வரை எத்தனையோ.இவை சிறிய செய்திகளாக இருந்தாலும் கொஞ்சங்கொஞ்சமாக இந்து குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதே அடிப்படை.

மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுவதையும்,ஐயப்ப பஜனைகளையும் அவர்கள் கீழ்த்தரமாக விமர்சிப்பார்கள்.அதே போன்று நம் திருமண சடங்குகளும் மட்டமாகவே கூறப்படுகின்றன.

இவர்கள் நேரடியாக ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் போன்று கிறிஸ்துமஸ்,மற்றும் அவர்களின் திருமண முறைகளே சிறந்தவை நாகரீகமானவை என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.

காந்தியைப் பற்றி பெண்பித்தர் என்று மிக வலுவான பிரச்சாரங்களைக் கேட்டுள்ளேன்.காந்தி கஸ்தூரிபாயை அடிமையாக நடத்தினார் என்பது இவர்களின் மற்றோர் பாமரதெதனமான பிரச்சாரம்.நான் ஆசிரியப் பயிற்சி படிக்கையில் திண்டுக்கல் காந்திகிராம் பல்கலையால் நடத்தப்படும் காந்தி நினைவுத் தேர்வுகளில் பங்கேற்காத பல கிறித்தவ மாணவர்களைக் கண்டேன்.(அது விருப்பத்தேர்வு)அவர்கள் கூறிய காரணம் காந்தி பொய்யாக அகிம்சை என்று ஏமாற்றியவர் என்பதே.இத்தகைய காந்திய வெறுப்புணர்வுகள் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன என்பதே நான் கண்டது.சாந்தி நிலவ வேண்டும்,வைஷ்ணவ ஜனதோ ,ரகுபதி ராகவ போன்ற பாடல்களைக் கூட அவை காந்தி விரும்பியதால் ,இந்துத்துவம் என்றுவசைபாடி புறக்கணித்ததை நான் பார்த்ததுண்டு.

உண்மை என்னவென்றால் சனாதன வெறி கொண்டவர் என்று காந்தியைப் புறக்கணிக்கும் இவர்கள் கிறிஸ்துவைப் பற்றியுமே பாமரத்தனமான புரிதல்கள் கொண்டவர்களே.கிறிஸ்தவனாக மாறினால் இந்து மத தீண்டாமையிலிருந்து விடுபடலாம் என்பவர்கள் மேட்ரிமோனியல் தளங்களைப் பார்க்கட்டும்.தெளிவாக கிறித்துவ நாடார்,கிறித்துவ வன்னியர் என்று சாதியுடனே iருக்கிறார்கள்.திருச்சபைகளிலும் சாதிய வேறுபாடுகள் அப்படியேத் தான் உள்ளன.

தாழ்த்தப்பட்ட,சிறுபான்மையின மக்களை உண்மையில் தன்னருகே வைத்தவர் காந்தி மட்டுமே.இன்று இவர்கள் அடைந்துள்ள நிலை காந்தியால் அளிக்கப்பட்டதே.

கோட்சே வீரவணக்கம் என்றதும் பொங்குகிறார்கள்.கோட்சேவை யாரும் நியாயப்படுத்தவில்லை.நீங்கள் கூறுவது போன்று அது அரசியல் ஸ்டன்ட்.

முதலில் காந்தியை ஏசுவதை அறிவுஜீவி சமூகங்கள் நிறுத்தட்டும்.இங்கு பேசப்படும் முற்போக்கு,பகுத்தறிவு வாதிகள் முதலில் தங்கள் கொள்கைகள் பற்றி தாங்களே அறிந்து கொள்ளட்டும்.

இவர்கள் மதத்தைப் பற்றி கூறி மதம் மாற்ற இவர்களுக்கு உள்ள உரிமை ,இந்துக்களுக்கும் உண்டு என்று உணரட்டும்.இந்து மதத்தில் இத்தகைய மதமாற்றமெல்லாம் இல்லை என்று அறிவேன்.இருந்தாலும் சிறுபான்மையினருக்கு அரசியல் வாதிகளால் தரப்படும் வாக்கு முக்கியத்துவத்தையும்,அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வதையும் பார்த்துப் பார்த்து சலித்து போன நிலையில் ,கொஞ்சமாவது இவர்கள் உணரட்டுமே என்றே தோன்றுகிறது.

சில தலைமுறைகளுக்கு முன் வறுமையில் மதம் மாறியவர்களின் சந்ததிகள் இன்று அதை அறிந்து கொள்ளட்டுமே.குற்ற உணர்வின்றி இம்மண்ணின் ஞான மரபையும்,பல நூற்றாண்டு பழமை வாய்ந்த யோக வழிகளையும்,பண்பாட்டையும் எந்த புரிதலுமின்றி வசைபாடுபவர்கள் உணரட்டுமே,இவர்களின் ஆதாரம் இம்மண்ணே,ஐரோப்பாவோ,இஸ்ரேலோ,எகிப்தோ அல்ல என்று நினைத்துப் பார்க்கட்டுமே.

இங்கு தான் வரலாறு என்பதே மறக்கப்பட்டு ,மறைக்கப்படுகிறதே.
குறைந்த பட்சம் இந்து மத வழிகளை மட்டமாகப் பேசுவதையாவது குறைத்துக் கொள்ளட்டும்.

இத்தனை ஆண்டுகளாக இந்த நாட்டிலே சிறுபான்மையினர் பாதுகாப்பாகத்தான் உள்ளனர்.இந்திய ஜனநாயகத்தில் அது தொடரும்.அதற்கு ஆதாரம் காந்தியெனும் மாமனிதரே என்று உணர்ந்து கொள்ளட்டும்.
நன்றி
மோனிகா மாறன்.

கோட்சே

காந்தி வெறுப்பு

கோட்சே கடிதம்

இந்துத்துவம் காந்தி

காந்தி கோட்சே ஐயங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91
அடுத்த கட்டுரைபூமணி விழா -மதி