பெருமாள் முருகன் கடிதங்கள் 9

பெருமாள் முருகன் மீது திருசெங்கோட்டை சேர்ந்த ஜாதி அமைப்புகளும் மத தீவரவாதிகளும் , அரசு இயந்திரமும் நடத்திய அடக்குமுறை தமிழ் மீதும் தமிழ்நாட்டின்மீதும் , இந்திய கலாச்சாரத்தின் மீதும் அக்கறை உள்ளவர்கள் கண்டனம் செய்ய வேண்டிய ஒன்றாகும்.

இன்று உங்கள் தளத்தில் திருசெங்கோட்டை சேர்ந்த ஒரு அன்பர் எழுதிய கடிதம் வாசித்தேன். அரசு அதிகாரிகள் நடத்திய சமரச (!) கூட்டம் எப்படி நடந்தது என்று பெருமாள் முருகனுடன் சென்ற நண்பர் கொடுத்த பேட்டியை Hindu -வில் படித்தாலே தெரியும். இது கட்டை பஞ்சாயத்து இல்லாமல் வேறு என்ன ?

திருசெங்கோட்டில் பணி புரிந்த ஒரு முன்னாள் அரசு அதிகாரி இன்றைய Hindu -வில் அந்த மாதிரி ஒரு சடங்கு முன்காலங்களில் நடந்ததாக கேள்விப்பட்டதாக எழுதியிருக்கிறார். அந்த சடங்குக்கு இந்து மதத்தில் இடம் இருப்பதாக பல நிபுணர்களும் சொல்கிறார்கள். அந்த சடங்கை பயன்படுத்தி குழந்தையில்லாத ஒரு தம்பதி குழந்தை பெற்று கொள்வதாக எழுதுவது எப்படி திருசெங்கோட்டை அவமதிப்பதாகும் ?

நல்லவேளை திரௌபதி ஐந்து பேரை கல்யாணம் செய்வதாக இப்போது ஜெயமோகன் நாவல் எழுதினால் சாத்தி விடுவார்கள். வியாசர் இந்த கலாசார காவலர்கள் வருவதற்கு முன்பே மகாபாரதம் எழுதிவிட்டார் . பெருமாள் முருகன் திருசெங்கோட்டை அவமதிக்கவில்லை. இவர்கள் தான் அவமதிக்கிறார்கள் . இவர்கள் புரிந்து கொள்ளாத விஷயம் மாதொரு பாகன் அழிந்து போகாது. பெருமாள் முருகன் எழுதுவதை நிறுத்தினாலும் , எல்லா புத்தகங்களையும் எரித்து விட்டாலும் அது மீண்டும் உயிர்த்து எழும் . எழுத்தின் சக்தி அது.

பெருமாள் முருகன் புத்தகத்தை பல நூறு பேர்தான் படித்திருப்பார்கள். இவர்களே அதை உலகளாவிய அளவில் பரப்பி விட்டார்கள். இன்னும் ஓன்று சில அறிவு ஜீவிகள் சென்னையில் இருந்துகொண்டு பெருமாள் முருகன் எடுத்த முடிவை விமர்சிக்கிறார்கள். அவர் சூழ்நிலை அவருக்குத்தான் தெரியும். அவர் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிற உரிமை அவருக்கு இருக்கிறது.

அன்புடன்

ராமகிருஷ்ணன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உலகத்தின் எந்த எழுத்தாளருக்கும் உலகத்தின் எந்த மூலையிலும் நடக்கக்கூடாதது பெருமாள் முருகனுக்கு நேர்ந்திருப்பது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை. பிரச்சினைக்குரிய நாவலில் வரும் சம்பவங்களின் வரலாற்று மற்றும் சாதியின் பின்னணி அதை வைத்து தற்குறிகள் நடத்தும் நாடகங்கள் அரசியல் அருவருப்புகள் இவைகளைத்தாண்டியது நான் கேட்க விரும்புவது. என் கேள்வி முழுக்கவும் மாதொருபாகன் நாவலின் கலை வடிவின் நேர்த்தியை மையமாகக்கொண்டது.

தமிழ் இலக்கிய உலகில் இது போன்ற நிகழ்வுகள் புதியதல்ல. என்றாலும் உடனடியாக என் நினைவுக்கு வரும் சம்பவங்கள் இரண்டு. முதலாவது நீல.பத்மநாபன் அவர் நாவல் ஒன்றில் அவரின் அலுவலக சக ஊழியர் ஒருவரை சாதி, மற்றும் இன்ன பிற அடையாளங்கள் உட்பட அப்படியே அப்பட்டமாக வர்ணித்து எழுதி, அது சம்பந்தப்பட்டவரின் கவனத்துக்கு வந்து அந்த நபர் நீல.பத்மநாபனை தாக்கியது. இரண்டாவது தன் உயரதிகாரியின் பெயர், அடையாளங்களை முன்வைத்து நாவலில் எழுதியதால் விருப்ப ஓய்வு பெற நிர்ப்பந்திக்கப்பட்டு அந்த எழுத்தாளர் பணி ஓய்வு பெற்றது. இராண்டாவது சம்பவம் செவி வழிச்செய்தி மட்டுமே என்பதால் உண்மையா என்று உறுதியாக தெரியாது என்பதால் அந்த எழுத்தாளரின் பெயரை குறிப்பிடவில்லை.

இப்போது பெருமாள் முருகன். முதலில் மாதொருபாகன் ஒரு ஆய்வுக்கட்டுரை அல்ல. எந்த ஒரு குறிப்பிட்ட ஆதாரத்தை சுட்டி, அதை முன்வத்து சொல்லப்படுவதும் அல்ல. தன்வரலாற்று நாவல் போல, சரித்திர நாவல்போல இந்த தகவல்களை குறிப்பிட்டு நிறுவும் எந்த முக்கியமான தேவையும் நாவலில் இருப்பது போலத் தெரியவில்லை.

அப்படியிருக்க, திருச்செங்கோடு என்று ஊரின் பெயரையும், ஒரு தனி சாதியின் பெயரையும் மிகவும் குறிப்பிட்டு சொல்லவேண்டியது எளிதில் தவிர்க்கக்கூடிய ஒன்றுதான் இல்லையா? நான் கேட்பது எழுத்தாளனின் உரிமை பற்றியதல்ல. இவ்விபரங்களை ஊர் சாதி பெயர் குறிப்பிடாமல் அல்லது கற்பனையான ஒரு ஊரை, முன்வைத்து எழுதினால் நாவலில் படைப்பின் தரம் அல்லது வாசக அனுபவம் எவ்வகையிலும் குறைந்துவிடப்போவதில்லை என்பதால் சொல்கிறேன். இது போன்ற தர்மசங்கடங்களை மறைக்கத்தானே நாவலந்தீவு, கண்ணகி தீவு என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதுகிறார்கள்?

ஆகவே இவ்விஷயம் நாவலின் முக்கியமான கலைக்குறைபாடு என்றும் இந்த பிரச்சினைகள் அனைத்துமே எளிதில் தவிர்க்க மு்டிந்திருக்கக்கூடிய இந்த ஒரு எளிய குறைப்பாட்டினால் விளைந்தது மட்டுமே என்றும் ஏன் சொல்லக்கூடாது?

-பூதத்தாழ்வார்.

==

உண்மைப்பெயரைப்போட வேண்டாம் :)
நன்றி.

அன்புள்ள பூதம்

சரிதான். இப்போது இந்தப்பக்கம் பேரை மறைக்க ஆரம்பித்துவிட்டீர்கள்.

நீங்கள் சொல்வதை இலக்கிய வாசிப்பே மறுக்கும். இலக்கியப்படைப்பு என்பது விரிந்த பார்வையில் நினைவுகளின் பெருந்தொகை. வரலாற்றுக்குச் சமானமாக ஓடும் ஒரு அந்தரங்க வரலாறு. நீங்கள் சொன்னதுபோல எழுதினால் நினைவு அல்ல சமையல்

ஜெ

முந்தைய கட்டுரைபெருமாள் முருகன் கடிதம் 8
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 89