30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் வழக்கம். ஆனால் நீங்கள் உணர்ச்சிவசப்படாது உண்மையை எழுதுகிறீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது? இதனால் அவப்பெயரை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறதா? உங்கள் அஞ்சலிக் குறிப்புகளை எல்லாம் நூலாய்த் தொகுத்து வெளியிடும் எண்ணம் உண்டா?
பதில்
இன்று இணையத்தில் எதையுமே நக்கலாக்கி தங்களுக்கென எளிய அடையாளம் தேடுபவர்களுக்கு இதைச் சொல்லி புரியவைக்க முடியாது. இணையத்தில் எழுதுவதென்பது அடிப்படையில் தமிழின் மொண்ணைத்தனத்தை நேருக்குநேர் சந்திப்பது
எண்பதுகளில் கலையிலக்கிய தளங்களில் ஆளுமைகள் மறைந்தால் ஒரு சிறிய செய்திகூட நாளிதழ்களில் வெளிவராது. பல எழுத்தாளர்கள் மறைந்து பலமாதம் கழித்து சிற்றிதழ்களில் வரும் குறிப்புகள் வழியாகவே நண்பர்கள் அச்செய்தியை அறிவார்கள்
நான் எழுத வந்தபோது இடைநிலை இதழ்கள் வெளிவரத் தொடங்கின. தினமணியில் இராம சம்பந்தம் ஆசிரியரானார். அவர் அஞ்சலிக்கட்டுரைகள் எழுத இடமளித்தார். சுபமங்களா வந்தது. இந்தியா டுடே வந்தது. அவர்கள் அளித்த இடத்தை பயன்படுத்திகொண்டு இலக்கியவாதிகளைப்பற்றி அஞ்சலிகளை எழுத ஆளில்லை. ஏனென்றால் சிற்றிதழாளர்கள் ஒரு குறிப்பு எழுத ஒருவாரமாகும்
இராம சம்பந்தம் என்னிடம் எழுதும்படி சொன்னார். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன். செய்திகேட்ட ஒரு மணிநேரத்தில் எழுதி தினமணி நிருபரிடம் கொடுத்து டெலிபிரிண்டரில் அனுப்பி செய்தியுடன் அஞ்சலிக் கட்டுரை வெளியிட்டேன். எழுத்தாளர்களும் அஞ்சலிக்கட்டுரைக்குத் தகுதியானவர்களே என தமிழ் செய்தி ஊடகங்கள் அதன்பின்னரே உணர்ந்தன.
இணையம் ஓரு வாய்ப்பு. பல அஞ்சலிக்கட்டுரைகளை நான் அன்றி பிறர் எழுதியிருக்க மாட்டார்கள். உதாரணம் ஐராவதம் சுவாமிநாதன். ஒரு பண்பாட்டுச் செயல்பாட்டாளர் ஒரு அஞ்சலிக் குறிப்புகூட இல்லாமல் மறைவது என்பது ஒரு பெரிய அவமதிப்பு.
ஏனென்றால் எழுத்தாளனின் மரணம் ஒரு முக்கியமான நிகழ்வு. அவனுடைய பணி முழுமை அடைகிறது. அவன் அதுவரை எழுதியவை அனைத்தும் அவன் இறந்ததுமே ஒன்றாகச் சேர்ந்து ஒற்றை ‘டெக்ஸ்ட்’ ஆக மாறிவிடுகின்றன. அவனைப்பற்றி எழுதப்படுபவை வெறும் இரங்கல்கள் அல்ல. அவை ஓர் எழுத்தாளனின் முழுமையை சமூகம் உணரும் கணங்கள். அஞ்சலி கட்டுரைகள் இல்லாமல் மறையும் எழுத்தாளன் அச்சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவன். இழிவு செய்யப்பட்டவன்.
முக்கியமான படைப்பாளிகளுக்கு, சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்களுக்கு, அதுதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. அது மேலும் நிகழலாகாது என்பதே என் எண்ணம். ஆகவே தான் அஞ்சலிக்கட்டுரைகளை எழுதுகிறேன். இன்று என் இணையதளம் தமிழின் மிக அதிகமான பேர் வாசிக்கும் ஒரு ஊடகம். அதில் வரும் அஞ்சலி வழியாகவே பலர் இறப்புச்செய்தியையே அறிகிறார்கள்.
என் அஞ்சலிக்குறிப்பு அவ்வாசிரியனைப்பற்றிய ஒரு மதிப்பீட்டுக்கு வழிகாட்டுவதைக் காணலாம். அதையொட்டி அல்லது வெட்டிதான் அதன்பின் அவன் அஞ்சலிக்கட்டுரைகள் வருகின்றன. சமீபத்தில் எஸ்.பொன்னுத்துரை பற்றிய குறிப்பை உதாரணமாகச் சொல்வேன். இல்லையேல் ‘பாவம் நல்ல மனுஷர் போய்ட்டார்’ என்ற வகை கட்டுரைகளே இங்கே வந்துவிழும்
அஞ்சலிக்கட்டுரை எழுதுவதில் எனக்கு சில விதிகள் உண்டு. எனக்கு நேரடியாகத் தெரிந்தவர்கள், அல்லது நான் தனிப்பட்ட முறையில் பெருமதிப்பு கொண்டிருப்பவர்கள் பற்றியே அஞ்சலிக் கட்டுரைகளை எழுதுவேன். அவர்களைப்பற்றி ஒரு பேச்சு தொடங்கவேண்டும் என விரும்புவேன். ஒரு மரணம் பற்றி ஏற்கனவே நிறைய அஞ்சலிகள் வந்துவிட்டால் என் கணக்கில் ஒன்றைச் சேர்க்கவிரும்பமாட்டேன்
உதாரணமாக மறைந்த கே.பாலசந்தர் எனக்கு நன்றாக அறிமுகமானவர். பலமுறை நேரில் சந்தித்திருக்கிறேன்.கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் அவருடன் ஒரே அறையில் தங்கி இரவெல்லாம் பேசியிருக்கிறேன். எனக்கு அவர் நடித்துக் காட்டியிருக்கிறார். அவ்வப்போது தொலைபேசியில் பேசுவார். ஆனால் எங்கும் அஞ்சலிக்கட்டுரைகளாக குவிகையில் மேலும் ஒன்றை நானும் எழுத விரும்பவில்லை. தேய்வழக்குகளை ஏன் எழுதவேண்டும் என்றுதான்
சுந்தர ராமசாமி க.நா.சு பற்றி எழுதிய க.நா சு நட்பும் மதிப்பும் என்ற அஞ்சலிக்கட்டுரை எனக்கு அக்காலத்தில் ஒரு பெரிய திறப்பு. அதில் க.நா.சுவின் நினைவுகளை விரிவாக எழுதி கூடவே கறாரான மதிப்பீட்டையும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தார். நான் அதைப்பற்றி அவரிடம் கேட்டேன். அது மரியாதைதானா என்று
சுந்தர ராமசாமி சொன்னார் ‘ஓர் எழுத்தாளன் இறப்பது என்பது பிற இறப்புகள் போல அல்ல. அது ஒரு தொடக்கம். அவனை நாம் தொகுத்துக்கொள்ளவும் மதிப்பிடவும் ஆரம்பிக்கிறோம். அவனைப்பற்றிய ஒரு விவாதமாக அந்த அஞ்சலி நிகழவேண்டும். அப்போதுதான் அவன் பிறந்தெழ முடியும்.வெறும் சம்பிரதாயமான சொற்களால் அந்த மறுபிறப்பு தடுக்கப்படும். அது அவனுக்குச் செய்யப்படும் அநீதி’.
என் கொள்கையும் அதுவே. கறாரான உண்மையான மதிப்பீட்டை முன்வைத்தே என் அஞ்சலியை எழுதுகிறேன். எனக்கும் அப்படி எழுதப்பட்டால் போதும்.
31. உங்கள் விமர்சன அளவுகோலில் படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்வையும் உளவியல் ரீதியாய்க் கணக்கில் கொள்கிறீர்கள். உதாரணமாய் கமலாதாஸின் புறத் தோற்றம், மனுஷ்ய புத்திரனின் உடற் குறைபாடு. அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் எழுத்துக்களை மதிப்பீடு செய்ய ஒருவர் உங்கள் தனி வாழ்க்கையை எடுத்துக் கொள்வதை ஏற்கிறீர்களா?
பதில்
இலக்கியம் தத்துவம் போன்றவை உயர் அறிவுத்துறைகள். அங்கே நடுத்தரவர்க்க மனநிலைகள் உருவாக்கும் சம்பிரதாயங்கள், இடக்கரடக்கல்களுக்கு இடமில்லை. ஆனால் இங்கே இந்த இலக்கிய மதிப்பீடுகள் பரவலாகச் சென்றடையாத காரணத்தால் ‘அப்பாவி’ வாசகர்கள் அந்த மனநிலையிலேயே எப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் விமர்சனங்களை எல்லாம் திட்டுவது என்றே எடுத்துக்கொள்வார்கள். ‘செத்துப்போனவங்களை குறை சொல்லக்கூடாது’ ‘பொம்புளைங்கள மதிக்கணும் சார்,அவங்கல்லாம் பாவம்’ என்பது போன்ற அசட்டு சம்பிரதாயங்களை சொல்வார்கள்
எலியட் சொல்கிறார் ஓர் எழுத்தாளன் முதலில் அவனைத்தான் வாசகன் முன் வைக்கிறான் என. அவன் அந்தரங்கத்தை வைக்கிறான். சடலம் என்கிறார், அதை நம்மிடம் அறுத்து ஆராயச் சொல்கிறான் ஆசிரியன் என்கிறார். தன் வாழ்க்கையை அவன் நமக்கு சான்றுகளாக அளிக்கிறான். ஆகவேதான் உலகம் முழுக்க எழுத்தாளர்களின் ஆளுமையும் தனிவாழ்க்கையும் ஆராயப்படுகிறது.
மேலைநாடுகளில் எழுத்தாளனின் அத்தனை அந்தரங்கங்களும் விரிவாக ஆராய்ந்து நூல்களாக வந்திருப்பதை நீங்கள் காணலாம், அந்தரங்கம் புனிதமானது என நம்புபவர்கள் அவர்கள். ஆனால் பொதுவாழ்க்கையில் வந்த ஒருவன், தன்னை முன்வைக்கும் எழுத்தாளன் அப்படி ஒரு அந்தரங்கத்துக்குச் சொந்தம் கொண்டாடமுடியாது.
எழுத்தாளன் சொல்வதெல்லாம் அவனுடைய சொந்த மனப்பதிவுகளை, அகவெளிப்பாடுகளை. அவன் ஆய்வுண்மையைச் சொல்வதில்லை. புறவய உண்மையைச் சொல்வதில்லை. அந்தரங்க உண்மையைச் சொல்கிறான். அவனிடம் அவன் சொல்லும் ஒரு கருத்துக்கு புறவய ஆதாரமிருக்கிறதா என நாம் கேட்பதில்லை. அது ஆத்மார்த்தமாகச் சொல்லப்படுகிறதா என்றுதான் கேட்கிறோம்.
ஆகவே அது எந்த அளவு உண்மையானது என்று அறிய வேண்டுமென்றால் அந்த எழுத்தாளனை நாம் அறிந்தாகவேண்டும். இதை அவன் மறுக்க முடியாது. எழுத்தைப்பார், எழுத்தாளனைப்பாராதே என்ற வரிக்கு உலக இலக்கியத்தில் எங்கும் இடம் இல்லை அப்படி ஒரு எழுத்தாளன் கூட விடப்பட்டதில்லை. ஷேக்ஸ்பியரின் காதலிகளை நாம் இப்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறோம் சில்வியா பிளாத் என்ன டிரக் எடுத்துக்கொண்டார் என்று நமக்குத் தெரியும். டெட் ஹுயூக்ஸின் காதலிகளை தெரியும்
நாம் ஒரு கவிதையை ஆராய்வது எதற்காக? அதன் அனைத்துத் தளங்களையும் அறிவதற்காக. அதில் அந்த படைப்பாளியின் அந்தரங்கமும் முக்கியமாக இருந்தால் அதை அறிவதில் எந்தப்பிழையும் இல்லை. உலகம் முழுக்க அப்படித்தான். அன்னா கரீனினாவை ஆராய தல்ஸ்தோயின் மனைவிக்கும் அவருக்குமான உறவு முக்கியமான பின்புலமாக இருக்கிறது அல்லவா? யோசித்துப்பாருங்கள், எவ்வளவு எழுதப்பட்டிருக்கிறது!
கமலாதாஸ் அவரே தன்னுடைய தோற்றம் மீதான தாழ்வுமனப்பான்மையை, அதுவே தன்னை எழுத்துக்குக் கொண்டுவந்தது என்பதை எழுதியிருக்கிறார். ‘என் கதை’ என்னு சுயசரிதையில் அவரே அவரது பாலுறவுகளை விரிவாக எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்களை ஆராயும் விமர்சகன் அதை குறிப்பிட்டால் ‘அய்யய்யோ கமலாதாஸின் அந்தரங்கத்தை அலசுவதா?” என பெண்ணுரிமையாளர் கொந்தளிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இங்கே பெணியர்கள் வெறும் பேதைகள். அவர்களின் மதிப்பீடுகள் சமையற்கட்டு நம்பிக்கை சார்ந்தவை. சும்மா வந்து மேடைகளில் பாவ்லா காட்டுகிறார்கள். அறிவார்ந்த நிமிர்வும் திமிரும் இல்லாமல் இருந்தால் இவர்களெல்லாம் என்ன இலக்கியவாதிகள்?
மனுஷ்யபுத்திரன் கவிதைகளின் தொடக்கம் அவரது உடல்குறைபாடு பற்றிய தன்னிரக்கக் கவிதைகள். அதிலிருந்து திட்டமிட்டு வெளியே வந்ததை அவரே எழுதியிருக்கிறார். அவரது உள்ளம் பல்வேறுவகையில் புறந்தள்ளப்பட்டவர்களை நோக்கிச் செல்ல அவர் உடல்குறைபாட்டால் ஒதுக்கப்பட்டவராக இருந்த அனுபவம்தான் காரணமா என ஆராய்வதில் என்ன பிழை? அவை அப்படைப்புகளை ஆராய சில புதிய வாயில்களைத் திறக்கின்றன அவ்வளவுதான்.
எழுத்தாளனை மேலே இருந்து இரக்கத்துடன் பார்ப்பவர்க்ள்தான் அய்யோ உடல்குறைபாட்டை நோக்குவதா என்றெல்லாம் பரிதாபப்படுகிறார்கள். அவன் சமகாலத்தின் ஒரு ‘சாம்பிள்’ எந்த ஈவிரக்கமற்ற சோதனைக்கும் தாக்குப்பிடிப்பான் என்றே நான் நம்புகிறேன்
32 ஆரம்பத்தில் கம்யூனிஸ்டாக இருந்தீர்கள். பின் உங்கள் மீது வலதுசாரி முத்திரை விழுந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஊழலெதிர்ப்புக்கட்சியாக தம்மை முன்வைக்கும் ஆம் ஆத்மியை ஆதரித்தீர்கள். அவர்கள் ஓர் எல்லை வரை வலதுசாரிகளே. இன்று கட்சிகளை விடுத்து கோட்பாட்டுரீதியாக உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன?
பதில்:
கோட்பாடு என்ன என்று சொல்லத் தெரியவில்லை. நான் அரசியலில் ஒரு ஜனநாயக மிதவாதப்போக்கை விரும்புகிறேன். லிபரல் டெமாக்கிராட் என்று சொல்லலாமா?
பொதுவாக எல்லாவகையான தீவிரக்குரல்களையும் சந்தேகப்படுகிறேன். அவை சமநிலை இல்லாத மனிதர்களால் முன்வைக்கப்படுபவை. பெரும்பாலும் எதிரிகளைக் கட்டமைத்து வெறுப்பைக் கக்குபவை. அவர்களை கூர்ந்து நோக்கினால் தெரியும், அவர்கள் பேசும் தீவிரமான அரசியல் என்பது அந்தரங்கமான வெறுப்புகளின் வடிகால் மட்டுமே. இதெல்லாம் முன்னால் கொஞ்சம் புகைமூட்டமாக இருந்தது. இப்போது ஃபேஸ்புக் வந்தபின் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
தீவிரப்போக்குகள் பெரும்பாலும் எதிர்மறை விளைவுகளையே உருவாக்குகின்றன. மக்களின் கூட்டான அகம் திரண்டு ஒரு ஆற்றலாக ஆகி செயல்பட வாய்ப்பளிக்கும் நிதானமான அரசியலையே நான் ஏற்கிறேன். எல்லா குரல்களும் எழவேண்டும். எல்லா சமூக விசைகளும் முட்டி மோதி சமநிலையை அடையவேண்டும். வலதுசாரி என்று உறுதியாக என்னைச் சொல்லமாட்டேன். சில இடதுசாரி கொள்கைகளும் பிடிக்கும். இன்று நான் மிக விரும்பும் அரசியல் தலைவர் அச்சுதானந்தன்தான்.
சமகால அரசியலில் எழுத்தாளன் ஈடுபடக்கூடாது என நினைக்கிறேன். அது பெரும்பாலும் சார்புநிலை கொண்டவர்களின் வெட்டிப்பேச்சுகளால் ஆனது. அதில் மாட்டிக்கொண்டால் சொற்கள்தான் விரயமாகும். ஆகவேதான் மொத்த பாராளுமன்ற அரசியலிலும் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.
அரசியலை மனச்சிக்கல்கள் தீர்மானிக்கக் கூடாது. உணர்வெழுச்சிகள் தீர்மானிக்கக் கூடாது. ஆகவே உணர்ச்சிக்கொந்தளிப்பான அரசியல் பேச்சை நான் ஒருவகை வாந்தியாகவே பார்க்கிறேன். எவர் பேசினாலும். இதனால் இந்துத்துவ வாந்தி எடுப்பவர்களும் என்னை திட்டுகிறார்கள். முற்போக்கு திராவிட வாந்தி எடுப்பவர்களும் திட்டுகிறார்கள். மின்னஞ்சலைத் திறந்து எல்லா தரப்பினரின் வசைகளும் மாறி மாறி வாசிக்கையும் சிரித்துக்கொள்வேன்.
33. தமிழ் வாசகப் பரப்பு என்பது ஆரம்பம் முதலே சோகையாகத்தான் இருக்கிறது. இங்கே எழுத்தாளன் எழுதி மட்டும் ஜீவிக்க முடியாது. அடுத்து எழுத்தாளனுக்கு மரியாதையும் இல்லை. சாதாரணர்கள் மத்தியில் மட்டுமின்றி பேரசிரியர்களிடமே இது தான் இடம். பத்துக் கோடி தமிழர்களில் அதிகபட்சம் பத்தாயிரம் பேர் தான் உங்களை வாசித்திருக்கக்கூடும். இச்சூழலில் எது உங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது? வரலாறு உங்களை நினைவிற் கொள்ளும் என்பது தான் உந்துதலா?
பதில்:
எழுத்தை கொஞ்சமேனும் அறிந்தவர்களுக்குத் தெரியும் உண்மையிலேயே எழுதுவதில் உள்ள பெரும் கனவே எழுதவைக்கிறது என. மிச்சமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. நான் எழுதவந்தபோது 500 வாசகர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்ததில்லை. 200 பிரதிகள் அச்சிடும் சிற்றிதழ்களில்தான் எழுதினேன். இதேயளவு தீவிரத்துடன். எனக்கு இன்றிருக்கும் இந்த எண்ணிக்கையே பெரியது.
எழுதுவது என்னை நான் கண்டுபிடிக்க. என் ஆழ்மனதை மொழியால் மீட்டி எழுப்ப. கனவு ஒன்றில் சமாந்தரமாக வாழ்ந்துகொண்டிருக்க. சமான இதயமுள்ள நண்பர்களுடன் அதைப்பகிர்ந்துகொள்ள. அதற்காக மட்டும்தான். எனக்கு உண்மையிலேயே ஐம்பது வாசகர்கள் போதும். அதற்குமேல் ஆசைப்படுவது புத்தகம் விற்று பதிப்பகம் நஷ்டமில்லாமல் தப்பவேண்டும் என்பதற்காக மட்டுமே.
34. இங்கே வாசிப்பு என்பது லௌகீக எதிர்பார்ப்பு சார்ந்ததாகவே உள்ளது. அதனால் என்ன பயன் என்பது தான் முதல் கேள்வி. சமையல், கணிப்பொறி, ஜோதிடம், கலவி, ரைம்ஸ் நூல்கள் அதிகம் விற்க இந்த மனநிலை தான் காரணம். மாறாய் இந்திய ஆங்கில இலக்கியம் ஒப்பீட்டளவில் ஓரளவேனும் மேம்பட்ட நிலையில் இருக்கிறது. இங்கும் அதுபோல் நிகழ என்ன செய்யலாம்? ஓர் எழுத்தாளனாய் உங்கள் பங்களிப்பு?
பதில்:
வாசிப்பு என்பது ஒரு கலாச்சாரச் செயல்பாடு. கலாச்சார ரீதியான மாற்றம் வழியாகவே வாசிப்பு பெருகும். வணிக நடவடிக்கை வழியாக அல்ல. கேரளத்திலும் வங்கத்திலும் கர்நாடகத்திலும் விரிவான வாசிப்பு இருக்கிறது என்றால் நாராயணகுரு போன்றவர்களின் சமூகமறுமலர்ச்சி இயக்கங்களும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி இயக்கங்களும்தான் காரணம்
இங்கே இடதுசாரி இயக்கம் முளையிலேயே குறுகிவிட்டது.திராவிட இயக்கம் நாடகம் சினிமா மேடைப்பேச்சு என வளந்தது. அது அறிவார்ந்த இயக்கம் அல்ல, பரப்பியல் [பாப்புலிஸ்ட்] இயக்கம். அது உண்மையன கலாச்சார மாற்றத்தை உண்டுபண்ண முடியாது. ஏற்கனவே இருக்கும் கலாச்சார இயக்கங்களின் கொள்கைகளை எடுத்து எளிய கோஷங்களாக்கி அரசியல் நடத்தும். திராவிட இயக்கம் அதற்கு முன்பிருந்த தமிழியக்கத்தில் இருந்து சிலகோஷங்களை கையிலெடுத்து மேடைமேடையாக முழங்கியது. அதன் சாதனைகளை இன்று தன்னுடையது என்கிறது.
தமிழில் நிகழ்ந்த கடைசிப் பெரிய அறிவியக்கம் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம். அதன் மூன்று முகங்களான தமிழ் பதிப்பியக்கம், தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம். அதன் அலை இன்றும் நீடிக்கிறது. இன்றும் கூட தமிழகத்தில் உள்ள மிக அதிகமான இலக்கிய அமைப்புகள் தமிழ் மறுமலர்ச்சிக்காலத்தில் உருவானவைதான். இன்றும் அவை ஏதோ வகையில் செயல்படுகின்றன. உதாரணமாக கம்பன் கழகங்கள், வள்ளுவர் மன்றங்கள். நவீன இலக்கியத்திற்கு அப்படி ஒர் அறிவியக்கம் இங்கே நிகழவில்லை. அதன் குறைபாடு இங்குள்ளது.
அத்துடன் நவீனக் கல்வி நவீன சிந்தனைகளுக்கும் இலக்கியத்திற்கும் எதிரானதாக, தொழில்நுட்பப் பயிற்சி என்ற அளவில் மட்டுமே இங்குள்ளது.மொழிக் கல்வி தேங்கியிருக்கிறது. ஒட்டுமொத்தமாகவே கல்வித்துறை அறிவார்ந்த தன்மையை இழந்து ஊழலால் சீரழிந்துள்ளது. ஆகவே இங்கே வாசிப்பியக்கம் ஆரம்பிக்கவே இல்லை
சமூக அளவில் பெரிய வாசிப்பியக்கம் ஆரம்பிக்கவேண்டும் என்றால் நவீனத் தொழில்நுட்பம் மூலமோ அல்லது வேறு அரசியல் எழுச்சிகள் மூலமோ ஒரு பண்பாட்டு இயக்கம் நிகழவேண்டும். அதுவரை இங்கே அது ஒரு மிகச்சிறிய வட்டத்திற்குள்தான் இருக்கும்.
35. இணைய தளத்தில் எழுதுத் தொடங்கியது உங்கள் எழுத்தை எந்த வகையில் மாற்றி இருக்கிறது? இதை விரும்புகிறீர்களா? இதன் சாதக பாதகங்கள் என்னென்ன? பிரசுர சம்மந்தமான பதற்றத்தை இணைய தளம் அகற்றி இருக்கிறது அல்லவா?
பதில்
இணையதளத்தில் வருவதற்கு முன்னரே நான் தொடர்ந்து எழுதிவந்தவன் சொல்லப்போனால் சொந்தமாக சிற்றிதழ் நடத்தினேன். அது நின்றதுமே இணையம் வந்துவிட்டது. இணையம் வந்த ஆரம்பகாலத்திலேயே நான் மருதம் என்ற இணைய இதழை ஆரம்பித்துவிட்டேன். தமிழின் மிக ஆரம்பகால இணைய இதழ்களில் ஒன்று அது. அதன் பிரதிகள் அழிந்துவிட்டன.
நான் எந்த பிரசுர அமைப்பையும் சார்ந்து எப்போதும் செயல்பட்டதில்லை. ஆனால்பிரசுரம் சார்ந்த பதற்றமும் எனக்கு இருந்ததில்லை. என் நூல்களில் விஷ்ணுபுரம் மட்டுமே பிரசுரத்திற்கு சற்று சிக்கலை அளித்தது. அன்று அவ்வளவு பெரிய புத்தகங்கள் எளிதில் வருவதில்லை. என் வாசகர்களிடமே முன்பணம் திரட்டி அதை வெளியிட்டேன். 1997இல். விஷ்ணுபுரத்தின் வெற்றிக்குப்பின் எப்போதும் பிரசுரம் ஒரு சிக்கலாக இருந்ததில்லை. எல்லா வருடமும் என் நூல்கள் வெளிவந்து கவனத்தைப் பெற்றன
இணையம் எனக்கே உரிய ஒரு எளிய ஊடகமாக ஆகியது. இணையம் இல்லாமலிருந்தால் எனக்கு இத்தனை பெரிய வாசகர் பரப்பு உருவாகியிருக்காது. அவர்களை இணைத்து ஓர் அமைப்பாகச் செயல்பட முடிந்திருக்காது. நான் எழுதும் அனைத்து எழுத்துக்களும் ஒன்றாகத் தொகுத்திருக்க முடியாது
.
36. எல்லோர் மனதிலும் இருக்கும் ஓர் ஆச்சரியக் கேள்வி. எப்படி இவ்வளவு எழுதிக் குவிக்கிறீர்கள்? அதுவும் தொடர்ச்சியாகவும் கொஞ்சமும் தரம் குன்றாமலும்? சுந்தர ராமசாமியின் பாணிக்கு நேர் எதிரான பாணி இது. அதிகமாய் எழுதுவது தரத்தைப் பாதிக்கும் என்ற நெடுங்கால நம்பிக்கையை உடைத்திருக்கிறீர்கள்.
பதில் :
இங்கே ஏதேனும் எழுதுபவர்களில் பெரும்பாலானவர்களுக்குத்தெரியும் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான நேரம் மிக எளிய அன்றாட மனநிலையில் லௌகீக வாழ்க்கையின் கடமைகளை செய்து லௌகீக கேளிக்கைகளில் மூழ்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு படைப்புமனநிலை மிக அபூர்வமாகவே வாய்க்கிறது. உலகியலில் இருந்து அங்கே செல்ல பலவகையான சிக்கல்கள் இருக்கின்றன. ‘தொடங்கிட்டா போரும் எழுதிருவேன்’ என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களை வருடக்கணக்காக பார்க்கிறேன்.
எழுத்தின் தரம் என்பது எழுதும் மனநிலையின் தீவிரத்தை மட்டுமே சார்ந்தது. படைப்புமனநிலையைத் தக்கவைத்துக்கொள்வது தான் முக்கியம். நான் படைப்புமனநிலையில் எப்போதுமே இருந்துகொண்டிருப்பவன். அதை ஒரு யோகமாக பயில்பவன். அதை அறிவியல் பூர்வமாக அறிந்து செயல்படுத்துபவன். எனக்கு எழுத்து தற்செயல் அல்ல.
எனக்கு சுந்தர ராமசாமியை நன்றாகத் தெரியும். அடிப்படையில் அவர் ஒரு சுகவாசி. பேசிக்கொண்டிருப்பதை விரும்புபவர். உரையாடல் நிபுணரும் கூட. எழுதுவதை முடிந்தவரை ஒத்திப்போடுவார். ஒரு கதை தோணுது என ஒருவருடம் சொல்லியிருக்கிறார். ஓரிரு பத்திகளை எழுதி விட்டுவிடுவார். ஒவ்வொருநாளும் நூறுவரி எழுதுவார். யோசித்து யோசித்து மாற்றி மாற்றி எழுதுவார்.
அத்துடன் அவர் எழுதுவதும் இல்லை. அவர் சொல்ல ஓர் உதவியாளார் தட்டச்சு செய்வார். அவர் சொல் சொல்லாகவே சொல்வார். சொற்றொடராகக் கூட அல்ல. ஆகவே சொற்றொடரின் ஒழுக்கு அவரில் இருக்காது. ஆகவே எழுதியபின் சத்தமாக வாசித்து திருத்தங்கள் போட ஆரம்பிப்பார். அது எழுதும்முறையே அல்ல. எழுத்து அப்படி பிரக்ஞைபூர்வமாகச் செய்வது அல்ல
சொல்லப்போனால் அவர் கடைசிக்காலத்தில் பேசி பதிவுசெய்து பிரசுரித்த நினைவோடை நூல்கள் சரளமானவையாக , நுட்பமானவையாக இருப்பதைக் காணலாம். குறிப்பாக பி.ஆர்.மகாதேவன் எழுதியவை. அப்போது நிறையவும் எழுதினார். அதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம், எழுதும்போது எழுதுவதாக உணர்ந்தால் அது எழுத்தே அல்ல.
அத்துடன் அவர் வணிகத்தில் தீவிரமாக இருந்தார்.அதற்கான பயணங்களில் இருந்தார். ஆகவேதான் குறைவாக எழுதினார். அன்றைய சிற்றிதழ்சூழலில் அவ்வளவு எழுதினாலே போதும்
சமீபத்தில் விஷ்ணுபுரம் விழாவில் ஓர் இளம் நண்பர் கேட்டார். சார் கசடதபற என்கிறீர்களே அது எத்தனை பக்கம்? அந்தக்கேள்வி துணுக்குறச் செய்தது. மொத்த கசடதபற இதழ்களையும் ஒன்றாகச்சேர்த்தால் கூட ஒருமாதம் www.jeyamohan.in தளத்தைவிட சின்னதாகவே இருக்கும். சொல்புதிதின் ஒரு இதழ் அளவுக்கு சற்று மேலே இருக்கும். அதில் பெரும்பகுதி சாதாரணமான குறிப்புகளாகவும் இருக்கும்.
தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம் என்பது ஒரு உண்மையான அறிவியக்கம் அல்ல. அது கலைமகள், மணிக்கொடியில் தொடங்கி உடனே முடிந்துவிட்டது. டி.எஸ்.சொக்கலிங்கத்தின் மணிக்கொடி சிற்றிதழ் அல்ல, அக்காலத்திற்கு ஒரு பெரிய இதழ்தான். க.நா.சுவும் செல்லப்பாவும் தொடங்கியதுதான் சிற்றிதழ் மரபு
சிற்றிதழ் இயக்கம் என்பது நவீன இலக்கிய மரபு அறுபடாமல் பார்த்துக்கொண்ட ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. சுந்தர ராமசாமி அது போதும் என அமைந்துவிட்டவர். ஆகவேதான் குறைவாக எழுதுவது, அபூர்வமாக எழுதுவது, எழுதாமலேயே இருப்பது எல்லாம் உயர்வான இலக்கியச்செயல்பாடுகள் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டார். அதைச் சொல்லிக்கொண்டே இருந்தார்
உலகமெங்கும் முக்கியமான படைப்பாளிகளில் கணிசமானவர்கள் எழுதிக்கொண்டே இருந்தவர்கள்தான். என் ஆதர்சம் டால்ஸ்டாய் போன்றவர்கள். கலைக்களஞ்சியங்களையே உருவாக்கிய சிவராம காரந்த் போன்றவர்கள். பாரதி, புதுமைப்பித்தன் போன்றவர்கள் எழுதிய கால அளவை வைத்துப்பார்த்தால் எழுதிக்குவித்தவர்கள் அவர்கள்.
ஏற்கனவே சொன்னதுபோல அச்சு ஊடகத்தைக் கடந்துவிட்டோம். ஓலையில் இருந்து அச்சு வந்தபோது எழுத்து பெருகியது போல அச்சிலிருந்து மின்னணு ஊடகம் வந்தபோதும் எழுத்து மேலும் பெருகுகிறது. அச்சு ஊடகத்தை பார்த்து ஓலையில் எழுதிய கவிராயர்கள் திகைத்திருப்பார்கள். அதைப்போல இன்று காகித எழுத்தாளர்கள் திகைக்கிறார்கள்.
இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும். கடந்தகாலத்தில் மேலைநாட்டு எழுத்தாளர்களே நிறைய எழுதினார்கள். அவர்களுக்கு அதற்கான வாழ்க்கைவாய்ப்புகள் இருந்தன. தமிழ் எழுத்தாளர்கள் வறுமையில் அடிபட்டு, வேலைசெய்து களைத்து எஞ்சிய நேரத்தில் எழுதியவர்கள். இப்போது இங்கும் அவ்வாய்ப்பு வந்துள்ளது
37. சமூக வலைதளங்களின் வழி இன்று நிறையப்பேர் தமிழ் எழுதவும் வாசிக்கவும் தொடங்கி இருக்கிறார்கள். 12ம் வகுப்புக்குப் பின் தமிழ் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே மாறிப்போய் விடும் சூழலில் ஓர் எல்லை வரை இது முக்கியமான மாற்றமே. ஆனால் தமிழ் எழுத்து மற்றும் வாசிப்புச் சூழலில் இது ஏதேனும் வரவேற்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறதா? குறிப்பாய் உங்கள் வாசகப் பரப்பில் எண்ணிக்கையிலும் தரத்திலும் இதனால் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா?
பதில்
முந்தைய வினாக்களில் இதற்கான பதிலைச் சொல்லியிருக்கிறேன். ஒரு முன்னகர்வும் ஒரு பின்னடைவும் இன்று உள்ளது. மின்னணு ஊடகமும் இணையமும் இணைந்து எழுத்து-வாசிப்பை பலமடங்கு பெருக்கிவிட்டன. விளைவாகவே நூல்களும் அதிகளவில் விற்கப்படுகின்றன
ஆனால் பள்ளிகளில் தமிழ்க்கல்வி இல்லாமலாகி வருவதனால் தமிழ் வாசிப்பு பின்னடைவு கொள்கிறது. புதியதலைமுறையில் தேர்ந்த மாணவர்கள் தமிழில் வாசிக்கும் வழக்கமோ பயிற்சியோ அற்றவர்களாக உள்ளனர்.
ஆகவே ஒட்டுமொத்தமாக தற்காலிகமான ஒரு வளர்ச்சி உள்ளது. இன்று எனக்குள்ள வாசகர்கள் தமிழில் எந்த தீவிரமான எழுத்தாளருக்கும் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இந்த வாசகர் வட்டம் அடுத்த தலைமுறையில் நீடிக்குமா , தமிழ் வாசிப்பு இருக்குமா என்பதெல்லாம் குழப்பமாகவே இருக்கிறது. இப்படியே போனால் நீடிக்காது. தமிழ் வெறும் பேச்சுமொழியாகச் சுருங்கிவிடும் வெறுமே தமிழ்வாழ்க என்று கூச்சலிட்டு பயனும் இல்லை. ஆனால் வேறேதும் ஒரு அலை கிளம்பும் என்று ஒரு நம்பிக்கையும் இருக்கிறது.
[மேலும்]