இரண்டு வானோக்கிய சாளரங்கள்

ராமாயணம் பெரும் காவியம்தான். இந்திரஜித்தும், ஹனுமனும், லக்ஷ்மணனும், கும்பகர்ணனும், ராவணனும் மாபெரும் ஆளுமைகள்தான். ஆனால் மகாபாரதத்துக்கு அதை சமமாக சொல்ல முடியாது. உண்மையில் பாரதத்துக்கு ஈடான இலக்கியம் இது வரையில் வரவில்லை. யாரோ சொன்னது (நீங்கள்தானா?) நினைவுக்கு வருகிறது – இன்று வரை வந்த ஒவ்வொரு கதைக்கும் வேர் மகாபாரதத்தில்தான் இருக்கிறது!

RV
koottanchoru.wordpress.com

அன்புள்ள ஆர்வி,

மகாபாரதம் ராமாயணம் இரண்டையும் கொஞ்சம் நுட்பமாகவே ஒப்பிட வேண்டும். அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு என்பது புனைகதை இலக்கியத்தில் எப்போதுமே இருக்கும் அடிப்படையான ஒரு வேறுபாடாகும். தரிசனம், வெளிப்பாடு, பண்பாட்டுத்தொடர்ச்சி மூன்றிலுமே உள்ள வேறுபாடு என்று அதனைச் சொல்லலாம்.

ராமாயணத்தின் இயல்புகள் என்ன? நான் வான்மீகி ராமாயணத்தை வைத்தே ஆரம்பிக்கிறேன்

1. ராமாயணம் ஆதிகாவியம். மகாபாரதத்துக்கு காலத்தால் முற்பட்டது. பேரரசுகள் உருவாகாத ஒரு காலகட்டத்தைப்பற்றிப் பேசுவது. அதில் உள்ள கதை யதார்த்தத்தை விட தொன்மத்துக்கே நெருக்கமானது.

2  வான்மீகி ராமாயணத்தின் அமைப்பு மொழி இரண்டுமே எளிமையானவை. காரணம் அது அதிகமும் நாட்டார் [·போக்] பண்புநலன்களைக் கொண்டுள்ளது. அது நாட்டார் வாய்மொழி மரபில் இருந்து வந்திருக்கலாம் என்பதற்கான எலல ஆதாரங்களும் அதில் உள்ளன. அதன் வர்ணனைகள் நாட்டார் பாடல்களில் வருபவை போல எளிமையான மகத்துவமான கவித்துவம் கொண்டவை. அதன் விவேகம் நேரடியானது.ஆதிகாவியமான ராமாயணம் ஒரு வயதான நாட்டுப்புற கவிஞன் சொல்லும் தன்மை கொண்டது.

3 அதன் நாட்டார்த்தன்மை காரணமாகவே அது இலட்சியவாதத்தன்மை கொண்டது. ராமன் என்ற இலட்சியபுருஷனின் இயல்புகளைச் சொல்வது அது. பரதன், இலட்சுமணன் என எல்லா கதாபாத்திரங்களும் அவர்களின் இயல்பின் சிறந்த அம்சங்களால் காட்டப்படுகிறார்கள். ஒவ்வொரு விழுமியமும் ஒவ்வொரு இலட்சியமும் அதன் உச்சநிலைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.

4 எல்லா நாட்டார் காவியங்களையும்போல தீமைக்கும் நன்மைக்கும் நடுவே நிகழும் மோதலே வான்மீகி ராமாயணம். அதில் ராவணனுக்கு நாம் பிற்கால ராமாயணங்களில் காணும் சிறப்பெல்லாம் இல்லை. அவன் ஆசையாலும் அகந்தையாலும் அழிந்த அளவிலா வல்லமைகொண்ட அரக்கன் மட்டுமே. ராவணனின் மேன்மை குறித்த கதைகள் எல்லாமே பிற்காலத்தில் வந்த உத்தர ராமாயணத்தில் சொல்லப்பட்டவை.

5 இக்காரணத்தால் ராமாயணத்தில் ஒரு பாட்டிக்கதை தன்மை உண்டு. அதன் கவித்துவம், அதன் தத்துவ வீச்சு ஆகியவற்றுக்கு அப்பால் அது குழந்தைகளுக்குச் சொல்லப்படவேண்டிய எளிமையான கதையும் கூட.

6 விழுமியங்களை , அறங்களை வலியுறுத்தும் காவியம் ராமாயணம். அவற்றை ஒரு பண்பாட்டின் ஆரம்பகாலத்திலேயே அம்மக்களின் அடிநெஞ்சில் ஆழ நிலைநாட்டும் தன்மை கொண்டது.

7. ராமாயணம் என்னென்ன பேசினாலும் அதன் மையம் என்பது குடும்ப உறவுகள், நட்பு போன்ற தனிப்பட்ட உறவுகளைச் சார்ந்தது.

மகாபாரதம் அப்படியல்ல. அதன் இயல்புகள் வேறானவை

1. அது காலத்தால் பிற்பட்டது. ஆகவே பேரரசுகளும் அதிகாரப்போட்டிகளும் உருவான பிறகுள்ள வாழ்க்கையைக் காட்டுவது.

2. மகாபாரதம் மிகமிகச் சிக்கலான ஒரு நூல். வியாச பாரதத்தை ஒருவன் வாசிக்கும்தோறும் அதன் உட்சிக்கல் பெருகிக்கொண்டே செல்லும். உறவுச்சிக்கல்கள்,  அரசியல் சிக்கல்கள், மறுபிறப்பு மூலம் உணர்த்தப்படும் விதியின் சிக்கல் என அது ஒரு அதிபிரம்மாண்டமான வலை. அந்த மகத்தான வலைப்பின்னலை நாம் உணரும்போது ஏற்படும் மலைப்பே அதன் தரிசனம்.

3 மேலும் மகாபாரதத்தின் தொகுப்புத்தன்மை காரணமாக பிற்காலத்தைய கதைகள் அதில் சேர்க்கப்பட்டன. துதிநூல்கள், சிறிய உபநிடதங்கள், நீதி நூல்கள் போன்றவை அதில் வந்துசேர்ந்துகொண்டே இருந்தன. அவற்றை இணைப்பதற்கான கதைகள் உருவாயின. விளைவாக அது ஒரு குட்டி கலைக்களஞ்சியம் போல ஆகியது.

4 அதாவது மகாபாரதம் முழுக்க முழுக்க ஒரு செவ்வியல் [கிளாஸிக்] ஆக்கம். செவ்வியலுக்கே உரிய எல்லா பண்புகளும் அதற்கு உண்டு.  உட்சிக்கல், முடிவிலா மறைபிரதி [சப் டெக்ஸ்ட்] தன்மை, பல்வேறுபிரதிகளை தொட்டு விரியும் இயல்பு, பல்வேறு வகையான மொழிபுகளை [நெரேஷன்] தொகுத்துக்கொள்ளும் தன்மை போன்றவை. அதாவது ராமாயணம் செவ்வியல் தன்மையை அடைந்த  ஒரு நாட்டார் பிரதி. மகாபாரதம் ஒரு தூய செவ்வியல்பிரதி.

5 மகாபாரதத்தில் முழுமையான இலட்சியக் கதாபாத்திரமே இல்லை. ராமாயணம் இலட்சியங்களைச் சொல்கிறது. மகாபாரதம் அந்த இலட்சியங்களின் நடைமுறைச் சாத்தியங்களை பற்றி பேசுகிறது. ராமாயணம் தர்மத்தை முன்வைக்கிறது. மகாபாரதம் அந்த தர்மத்தின் உட்சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறது

6 மகாபாரதம் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குள்ளும் தர்மமும் அதர்மமும் எப்படி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் கொள்ளும் அகமோதல்களையே அது சித்தரிக்கிறது. அக மோதல் இல்லாத ஒரே கதாபாத்திரமான யாதவ மன்னன் கண்ணன் ஒரு அச்சு போல இந்த சுழற்சியின் நடுவே நின்றிருக்கிறான்.

7 மகாபாரதம் தேர்ந்த இலக்கிய வாசகனை கோருவது. வாழ்க்கையில் ஒருவன் அனுபவம் மூலம் பண்படாவிட்டால் மகாபாரதக் கதாபாத்திரங்களை சரிவரப் புரிந்துகொள்ள இயலாது. அதிலும் ஏராளமான பாட்டிக்கதைகள், சாகசக்கதைகள் உண்டு. ஆனால் அவையெல்லாமே ஒரு செவ்வியல்தன்மையால் தொகுக்கப்பட்டிருக்கும்.

8 மகாபாரதம் விழுமியங்களை விவாதித்து புரிந்துகொள்ள முயலும் செவ்வியல் நூல். மகாபாரதத்துக்கும் ராமாயணத்துக்கும் உள்ள முக்கியமான வேறுபாடே இதுதான். ராமாயணத்தில் தர்மபிரபோதனம் [அற அறிவுரை] ஓடிக்கொண்டே இருக்கும். மகாபாரதத்தில் தர்மஸம்வாதம் [அற விவாதம்] ஓடிக்கொண்டே இருக்கும்

9 மகாபாரதத்தின் மையம் அரசியல். குடும்பக்கதை என்பது அந்த அரசியலின் ஒரு பகுதியே ஆகும்.

10. முக்கியமான ஒப்புமை இது. ராமாயணத்தின் மையம் தர்மத்தின் சிக்கல்களை தன் வாழ்வில் எதிர்கொள்பவனும்  உணர்வுபூர்வமானவனும், சுத்தவீரனுமாகிய ராமன். மகாபாரதத்தின் மையமோ தர்மச்சிக்கல்களுக்கு அப்பாற்பட்ட அகத்தெளிவுள்ளவனும், உணர்வெழுச்சிகள் இல்லாத சமநிலை கொண்டவனும், தத்துவ ஞானியுமான கிருஷ்ணன்.

இந்த வேறுபாடுகளை இன்று வரை உலகத்தில் உள்ள எல்லா பேரிலக்கிய மரபுகளிலும் காணலாம். தல்ஸ்தோயை ராமாயணத்தின் தரப்பைச் சேர்ந்தவர் என்றும் தஸ்தயேவ்ஸ்கியை மகாபாரதத்தின் தரப்பைச் சேர்ந்தவர் என்றும் சொல்லலாம். விக்தர் யூகோ ராமாயணத்தன்மை கொண்டவர் என்றால் மார்ஷல் புரூஸ்த் மகாபாரதத்தன்மை கொண்டவர். [நான் இங்கே கலைஞர்களை முற்றாக பகுத்து பட்டியலிடவில்லை. இது அவர்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு அணுகுமுறை மட்டுமே]

ஒன்று உணர்வுபூர்வமானது, நேரடியானது, எளியது, வாழ்க்கையில் இருந்து எழுந்த விவேகத்தின் பலத்தில் நிற்பது. இன்னொன்று அறிவார்ந்தது, சிக்கலானது, தத்துவத்தின் அடித்தளம் மீது நிலைகொள்வது.

நவீன காலகட்டத்தில்  இலக்கிய வாசகர்களுக்கு இரண்டாவதே முக்கியமானதாக தோன்றும். அறமையத்தை விட அறச்சிக்கல் மையமாவதே கொஞ்சம் அருகே உணரச் செய்கிறது. ஆனால் கலைக்கு அது எந்த தனிச்சிறப்பையும் அளிப்பதில்லை. அந்தக் கலைஞன் அவ்வியல்புக்குள் எந்த அளவுக்கு உள்ளே செல்கிறான் என்பது மட்டுமே முக்கியம்.

நான் எழுதும் கதைகள் மகாபாரதத்தன்மை கொண்டவை என்றும் ஆனால் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் ராமாயணத்தன்மை கொண்டவர்கள் என்றும் நான் நினைப்பதுண்டு. தல்ஸ்தோய், விக்தர் யூகோ, நிகாஸ் கசந்த் ஸகிஸ், ஐசக் பாஷவிஸ் சிங்கர்  அவர்களின் எளிமையின் மகத்துவம் என்னை எப்போதுமே பிரமிக்கச் செய்கிறது.

கம்பன்

இனி கம்பராமாயணம். கம்பனுக்கு முன் நூல் வான்மீகி ராமாயணம். எளிமையின் பேரழகு கொண்ட ஆக்கம். நாட்டார்தன்மையின் கவித்துவம் முற்றியது.. ஆனால் கம்பன் அதில் இருந்து மகாபாரதத்துக்கு நிகரான ஒரு செவ்வியல் படைப்பை உருவாக்கிவிட்டான். ஆகவேதான் வான்மீகி ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் கம்பராமாயணத்தில் பேருருவம் கொள்கிறார்கள்.

வான்மீகி ராமாயணத்தில் இல்லாத அகமோதல்கள் கொண்டவை கம்பனின் கதாபாத்திரங்கள். மிகச்சிறந்த உதாரணங்கள் கம்பராமாயணத்தின் கும்பகர்ணனும் விபீஷணனும். அவை முன்னுதாரணமான செவ்வியல் கதாபாத்திரங்கள். கம்பராமாயணம் அதன் வர்ணனையின் விரிவு மற்றும் ற்றோருக்கு மட்டுமே திறக்கும் அதிநுட்பங்கள், உக்கிரமான நாடகமோதல்கள், விழுமியங்கள் மீதான ஆழமான விசாரணைகள், ஒவ்வொரு செய்யுளிலும் நிகழ்ந்திருக்கும் முடிவிலாத மறைபிரதித்தன்மை ஆகியவற்றால் வியாச மகாபாரதத்துக்கு நிகரான ஒரு செவ்வியல் ஆக்கம். ஐயமே இல்லை.

இதற்கு நேர்மாறான ஒரு நிகழ்வும் உண்டு. மலையாளத்தில் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனின் மகாபாரதம் கிளிப்பாட்டு வியாசமகாபாரதத்தை ஒட்டிய ஒரு ஆக்கம். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால் இது ஒரு நாட்டார்தன்மை மேலோங்கியது. வியாசபாரதத்தின் செவ்வியல்தன்மை முழுக்க கைவிடப்பட்டு அது ஒரு எளிய, இனிய நாட்டார் காவியமாக உருமாறிவிட்டது. அந்த அளவிலேயே அதற்கு அழகு உண்டு.

கோவை கம்பன் அறநிலை வெளியிட்ட  கம்பராமாயணத்தில் பேராசிரியர் அ.அ.மணவாளன் கம்பராமாயணத்தையும் பிற ராமாயணங்களையும் ஒப்பிட்டு மிக விரிவாக ஓர் ஆய்வு எழுதியிருக்கிறார். அதை வாசித்தால் பல திறப்புகள் கிடைக்கும். என்னுடைய பின் தொடரும் நிழலின் குரலில் வீரபத்ர பிள்ளை தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி இருவரையும் ஒப்பீட்டு எழுதிய ஒரு கட்டுரை உள்ளது. அதுவும் இந்த தளத்துடன் பொருந்துவதே

பொதுவாக இலக்கிய ஆக்கங்களை ஒப்பிடும் போது அவற்றின் அடிப்படையான வகைமைகளையும் கருத்தில்கொள்ளலாமென நினைக்கிறேன். வான்மீகி ராமாயணத்துக்கு அதன் எளிமையே மகத்துவம் என்றால் வியாச பாரதத்துக்கு அதன் சிக்கலே மகத்துவம். கம்பராமாயணத்துக்கு அதன் விரிவே மகத்துவம் என்றால் சிலப்பதிகாரத்துக்கு அதன் சுருக்கமே மகத்துவம்.

ஜெ

[மறுபிரசுரம் / முதற்பிரசுரம் 2010 ]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 9
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 10