[சி சரவணக் கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் மின்தமிழ் இதழில் வெளியான பேட்டி]
1. நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப் போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து விட்டதாகத் தோன்றுகிறதா?
பதில். எழுதவந்து 30 ஆண்டுகள் என்று சொல்வதைவிட அறியப்பட்டு முப்பதாண்டுக்காலம் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. நான் எழுத ஆரம்பித்தது எழுத்துக்கள் தெரிந்த நாளில் இருந்தேதான். என் அம்மா என்னிடம் கதை எழுதிக்காட்டும்படி சொல்வதுண்டு. பிரசுரமானது எட்டாம் வகுப்பில் படிக்கையில். ஒருபோதும் எழுத்தாளன் அன்றி பிற அடையாளங்களை நான் ஆசைப்பட என் அம்மா விரும்பியதில்லை. நான் அவரது கனவின் உருவாக்கம்.
சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் முதலிடம் என நான் நினைக்கவில்லை. எழுத்து என்பது அப்படி கறாராக வகுக்கப்படத்தக்கது அல்ல. வெவ்வேறு எழுத்தாளர்களால் வெவ்வேறு இடங்கள் நிரப்பப்படுகின்றன. அது ஒரு கம்பளம் போல பலநூறுபேரால் நான்குதிசையிலும் பின்னி விரித்துச்செல்லப்படுகிறது. நான் என் இடத்தை நிறைக்கிறேன்
எழுத்தில் சாதித்துவிட்டதாகத் தோன்றியபின் எழுதவே முடியாது. இதை ஒப்புக்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே ஐம்பதுக்கும் மேல் வயதாகும்போது உங்களுக்கும் இது தெரியும். எழுத எழுத எழுதுவதற்கான இடம் தெரிந்துகொண்டே இருக்கும். அப்படித் தெரியாமலாகும்போது நின்று விடுகிறோம். அப்போதுதான் திரும்பிப்பார்க்கிறோம்.
அதுவரை எழுத்து என்பது மொழிவழியாக மெல்லமெல்ல உருவாக்கிக்கொள்ளும் ஒரு கனவில் வாழ்ந்திருப்பதுதான். வாசகர்களுடன் சேர்ந்து நிகழும் ஒரு கூட்டுக்கனவு அது. எழுத்து உருவாகி வரும்போது நாம் நம்மை இழந்து அதற்குள் நுழையும்போது வாழ்க்கை பலமடங்கு ஒளியும் விரிவும் கொண்டதாக ஆகிறது. அந்த இன்பமே எழுதுவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது. மற்றபடி அதில் சாதனை என ஏதுமில்லை.
ஆனால் இளம் வயதில் இருப்பவர்களிடம் அதைச் சொல்லிப்புரியவைக்க முடியாது. அவர்கள் சாதனைகளையே குறிவைப்பார்கள். அவர்களே எழுதி எழுதி அதைக் கண்டுபிடிக்கவேண்டியதுதான்
2. உங்கள் இளமை வாழ்க்கை, இலக்கியத்தில் நாட்டம் வந்தது எப்படி என்பது குறித்து சுருக்கமாகச் சொல்லுங்கள். உங்கள் நண்பன் மற்றும் பெற்றோரின் தற்கொலை உங்கள் வாழ்க்கையை எப்படி பாதித்தது? எழுத அது காரணமா?
பதில். நான் எப்போதுமே எழுத்தாளனாகவே உணர்ந்திருக்கிறேன் என்று சொன்னேன். அது என் அம்மாவால் எனக்கு அளிக்கப்பட்ட இலக்கு. எழுத்தாளன் ஆகவேண்டுமென்றால் வாசிக்கவேண்டும் என அம்மா சொன்னார்கள். சுட்டுவிரல் தொட்டு வாசிக்கும் வயதிலேயே நூல்களை அறிமுகம் செய்தார்கள்.
மிக இளம்வயதிலேயே நான் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். எப்போதுமே மிகச்சிறந்த வாசகனாகவே என்னை உணர்ந்திருக்கிறேன். இளம்வயதில் எல்லாவற்றையும் வாசித்துத் தள்ளவேண்டுமென்ற வெறி இருந்தது. இன்று அது இல்லை. அப்போது புனைவுகளை வாசித்துக்கொண்டே இருந்தேன். அக்கனவு அறுபடாமல் தேவைப்பட்டது. இன்று நானே புனைவுகளை உருவாக்கிக் கொள்கிறேன். ஆகவே வரலாறு, தத்துவம் தான் நான் இன்று அதிகமாக வாசிப்பவை.
வாசிப்பே என்னை எழுத்தாளனாக உருவாக்கியது. மொழிக்குள் வந்து விழுந்தேன். எழுதத் தொடங்கினேன். நடுவே அலைச்சலில் இருந்த சிலவருடங்கள் தவிர எப்போதுமே எழுதிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். எழுத்து என்னை எப்போதும் பேணியிருக்கிறது. பட்டினி கிடக்கவிட்டதில்லை. இளவயதில் அற்புதமான பாலியல்கதைகளை எழுதியிருக்கிறேன் என நினைக்கையில் புன்னகை வருகிறது. எழுத்து ஒரு நிகர்வாழ்க்கை எனக்கு
நண்பன் ராதாகிருஷ்ணன் தற்கொலைசெய்துகொண்டதும் சரி அம்மாவின் தற்கொலையும் சரி அடிப்படை வினாக்களை நோக்கிச் செலுத்தின. மரணம் பற்றி, வாழ்க்கையின் சாரம் பற்றி. அவை நிகழாமலிருந்திருந்தால் என் எழுத்திலும் எளிய சமூகவியல் வினாக்களும் வாழ்க்கைச் சித்திரங்களும் மட்டும் இருந்திருக்கலாம். அவ்வினாக்கள் வழியாக நான் ஆன்மீகம் நோக்கிச் சென்றேன். தத்துவத்தைக் கற்றேன். ஆழ்படிமங்களை தியானித்தேன். இன்றுள்ள அகநிலையை அடைந்தேன்
இன்று எழுதுவதற்கு எது காரணம்? பிச்சையெடுக்கும் துறவியாக திருவண்ணாமலையில் இருந்த நாட்களில் என்னுடன் ஒரு முதிய துறவி இருந்தார். பேசமாட்டார். ஒருவேளை பிச்சை எடுத்து உண்பார். தனியாகவே இருப்பார். ஒருநாள் அவர் என்னிடம் நல்ல ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினார். நான் ஒருபோதும் துறவையோ யோகமார்க்கத்தையோ தேர்ந்தெடுக்க முடியாது என்றார். ’நீ கற்பனை உள்ளவன். கற்பனை யோக மார்க்கத்திற்கு உரியது அல்ல. அது பெருகிப்பெருகி யோக அனுபவத்தையே கற்பனையில் அடையத் தொடங்கிவிடும். சென்றுவிடு’ என்றார்
‘நான் என்ன செய்யவேண்டும்?’ என்றேன். ‘கற்பனைதான் உன் வழி. தேடுவதும் கண்டடைவதும் அதன் வழியாகவே நிகழமுடியும்’ என்றார். அதுதான் நான் இன்று எழுதிக்கொண்டிருக்க காரணம். எனக்கு இது ஒருவகை யோகம். ஞானயோகம் என இன்னும் கச்சிதமாகச் சொல்வேன்
3. உங்கள் குரு நித்ய சைதன்ய யதி பற்றிக் கூறுங்கள். எந்த வகையில் அவர் உங்கள் ஆளுமையின் உருவாக்கத்தில், சிந்தனை முறைகளில் பங்கு வகித்தார்? (குருவும் சீடனும் நூல் முன்னுரையிலும் உங்களின் வெவ்வேறு கட்டுரைகளிலும் இது ஓரளவு காணக் கிடைக்கிறது எனினும் இங்கே சுருக்கமாக விவரிக்கலாம்.)
பதில் எப்போதுமே ஆசிரியர்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தவன் நான். இளமையிலேயே நல்ல ஆசிரியர்களும் எனக்கு அமைந்தார்கள். ‘குருசாகரம்’ என ஓ.வி.விஜயன் ஓரு நாவல் எழுதியிருக்கிறார். குரு என்பவர் ஒரு கடல். அலைகளைத்தான் தனிமனிதர்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனக்கு இளமையில் தமிழ்கற்றுத்தந்த தமிழாசிரியர்கள், நான் பயணங்களில் கண்டடைந்த துறவிகள் அனைவருமே ஆசிரியர்களே
நான் மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவை என் முதன்மையான ஆசிரியராகச் சொல்வேன். நவீன இலக்கியத்திற்கு என்னை அவர்தான் வழிநடத்தினார். பி.கே.பாலகிருஷ்ணன், எம்.கோவிந்தன் போன்றவர்களும் எனக்கு முக்கியமானவர்கள். சுந்தர ராமசாமி, ஞானி இருவரையும் அக்காலத்தில் சந்தித்தேன். இருவருமே எனக்கு இருவகையில் ஆசிரியராக அமைந்தவர்கள். நவீன இலக்கியத்தின் நெறிகளை சுந்தர ராமசாமியிடமிருந்தும் கோட்பாடுகளை ஞானியிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். பேராசிரியர் ஜேசுதாசன் செவ்வியல் நூல்களை அணுகுவதற்கு கற்பித்தவர். அவரது மாணவரான வேதசகாயகுமார், அ.கா.பெருமாள் ஆகியோரும் என் ஆசிரியர்களே.
ஆசிரியர் என்பதிலிருந்து ஒரு படி மேலானவர் குரு. ஆசிரியர் ஒரு துறையில் நமக்கு கல்வியளிப்பவர். குரு நம்மை முழுமை நோக்கி வழிநடத்துபவர். ஆசிரியர்கள் கல்வியை அளிக்கிறார்கள். குரு நம்முள் உள்ள கற்கும் அகத்தை முழுமை செய்கிறார். ஆசிரியர்கள் பாடங்களைச் சொல்லித்தருகிறார்கள். குரு படிப்பதைச் சொல்லித்தருகிறார். நித்யா எனக்கு அப்படிப்பட்டவர்
நான் தொடர்ந்து பல துறவிகளை ஞானிகளை சென்று சந்தித்துக்கொண்டே இருந்தவன், பெரும்பாலும் ஏமாற்றம். சிலர் எனக்குரியவர்கள் அல்ல என்று உணர்ந்தேன். எனக்குரிய குரு இலக்கியமும் தத்துவமும் இசையும் அறிந்தவராக, அறிவார்ந்தவராக, சிரிப்பவராகவே இருக்கமுடியும் என நித்யாவைச் சந்தித்தபின்னரே உணர்ந்தேன்
நித்யாவை முதன்முதலாகக் கண்ட ஐந்தாவது நிமிடத்திலேயே அவரை அடையாளம் கண்டுகொண்டேன் . ஊட்டி நாராயணகுருகுலத்தில் அதிகாலையில் மலர்களை பார்த்தபடி நடைசெல்லக் கிளம்பிக்கொண்டிருந்த முதிய மனிதர் அப்போது பிறந்த குழந்தை போல புத்தம்புதியவராக இருந்தார். அந்தக்கணத்தை இப்போது கண்மூடினாலும் பார்க்க முடிகிறது.
ஆனாலும் நான் அவரைச் சோதனை செய்தேன். அவரது கல்வியை, நேர்மையை, சமநிலையை, விவேகத்தை, ஆன்மஞானத்தை. அது அவருக்கும் தெரியும்,வேடிக்கையாக அவர் அதற்கு தன்னை ஒப்புக்கொடுத்தார். ஒருகட்டத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்ற வியப்பு ஏற்பட்டது. நான் அவருக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன்
என் ஆசிரியர்கள் எனக்குக் கற்பித்தார்கள், என்னை வளர்த்தார்கள். குரு என்னை உடைத்தார். அவமதிப்பும் சிறுமையும் கொண்டு கண்ணீர் சிந்தியிருக்கிறேன். இனி இவருடன் இல்லை என பாதியில் கிளம்பிச் சென்றிருக்கிறேன். எனக்கு பேச்சை கவனிக்கத் தெரியவில்லை என அவர்தான் காட்டித்தந்தார். நினைவில் நிறுத்தத் தெரியவில்லை என்பதை காட்டித்தந்தார். திட்டமிட்டுச் செயல்படவும் எடுத்த காரியத்தை முடிக்கவும் அவர்தான் கற்றுதந்தார். அதைவிட முக்கியமாக சீராக தொடர்ச்சியாக தர்க்கபூர்வமாகச் சிந்திக்க பயிற்றுவித்தார். அத்துடன் புனைவுலகில் அந்த தர்க்கம் மீது ஏறி மேலே தாவிச்செல்லவும் வழிகாட்டினார்
நித்யா எதையுமே சொல்லித்தரவில்லை என்றும் தோன்றுகிறது. அவருடன் நான் இருந்தேன். அவர் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் காடுகளில் உலவிக்கொண்டும் இருந்தார். அவரிடமிருந்து அவரது சாரம் எனக்கு வந்துகொண்டிருந்தது. நான் மிகமிக ஒழுங்கற்றவன். கட்டற்றவன்.முழுப்பித்தன். இன்றும் அப்படித்தான். அது என் நண்பர்களுக்கு தெரியும். ஆனால் என் கலையில் அப்படி அல்ல. அங்கே நான் பேரரசுகளை ஆளும் சக்ரவர்த்திகளுக்கு நிகரானவன். அது நித்யா கற்பித்தது
4. உங்கள் பிரியத்துக்குரிய சுந்தர ராமசாமி பற்றிச் சொல்லுங்கள். உங்களிடையே ஆன உறவு, உங்கள் எழுத்தை அவர் எப்படி பாதித்தார் என்பது பற்றிச் சொல்லுங்கள் (சுரா – நினைவின் நதியில் எனத் தனி நூலிலும் வெவ்வேறு கட்டுரைகளிலும் அவர் பற்றி விரிவாய்ச் சொல்லி இருக்கிறீர்கள் என்றாலும் இங்கே சுருக்கமாகப் பேசுங்கள்.)
பதில்: சுரா பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அவர் நான் நெருங்கிப்பழக நேர்ந்த மூத்த தலைமுறை தமிழ் எழுத்தாளர். தமிழ்ச்சிற்றிதழ் சார்ந்த எழுத்தின் அடையாளமாக அன்று அவர் இருந்தார். க.நா.சுவின் சிந்தனைமரபின் சமகால நீட்சியாக விளங்கினார்.. எண்பதுகளில் நான் அவரைச் சந்தித்தபோது அவர் வாழ்ந்த அந்த உலகம் மிக வசீகரமாக இருந்தது. மிகச்சிறிய வாசகர் வட்டம். அங்கே எந்தப்பிரதிபலனையும் எதிர்பாராமல் தன் கலைக்காகவே வாழும் சிலர். அவர்களின் கோபதாபங்கள், வம்புகள்.அவர்களில் ஒருவனாக ஆக ஆசைப்பட்டேன்.
சிற்றிதழ் என்பது அளித்த பரவசத்தை இன்று ஆச்சரியத்துடன் நினைத்துக்கொள்கிறேன். வெளியே இருந்த உலகம் மிக மேலோட்டமானது என்றும், நாங்கள் அதி தீவிரர்கள் என்றும் கற்பனைசெய்துகொண்டோம். குறைவாக எழுதுவது மட்டும் அல்ல எழுதாமலிருப்பதேகூட படைப்புச்செயல்பாடு என நம்பினோம். தோற்றுப்போவது போல, புறக்கணிக்கப்படுவது போல வசீகரமான இன்னொன்று இல்லை என எண்ணினோம் ஜெ.ஜெ.சிலகுறிப்புகள் இந்த மனநிலைகளின் மிகச்சரியான ஆவணம். அது தோல்வியைக் கொண்டாடுகிறது. தோல்வியடைவதில் புனிதமானதாக ஏதோ உள்ளது, அதுவே வரலாற்றில் வாழக்கூடியது என அது முன்வைக்கிறது
சுந்தர ராமசாமி அந்த சிற்றிதழ் மனநிலையின் அப்போஸ்தலர். எவருக்காகவும் இல்லாமல் தனக்காக மட்டுமே எழுதுவதில் உள்ள பேரின்பத்தை அவர் கற்றுத்தந்தார்.தனித்து நிற்பதிலும் நிமிர்ந்து நிற்பதிலும் உள்ள பெருமிதத்தை காட்டித்தந்தார். மிகச்சிறிய வட்டத்திற்குள் செய்யப்பட்டாலும் அறிவார்ந்த செயல்பாடுகள் அவற்றின் தீவிரம் வழியாகவே பெரும் விளைவுகளை உருவாக்கும் என்று கற்பித்தார். அவர் உருவாக்கிய உத்வேகம் அபாரமானது. இளம் வாசகனாக, எழுத்தாளனாக அவருடன் பேசிக்கொண்டு நாகர்கோயில் நகரத்தெருக்களில் நடந்தகாலங்களை நினைவுகூர்கிறேன். ஒவ்வொரு சொல்லையும் நினைவிலிருந்து எடுக்கமுடிகிறது.
ஆனால் மெல்லமெல்ல எனக்கு அவரது உலகம் சலிப்பூட்டத் தொடங்கியது. நான் என்னை ஒடுக்கிக்கொள்ள விரும்பவில்லை. என்னை வெடித்துப்பரப்ப விரும்பினேன். நினைத்ததை எல்லாம் எழுத, எழுதி எழுதி என்னைக் கண்டுபிடிக்க என் அகம் விம்மியது. சொற்களை எண்ணி எண்ணி யோசித்து எழுதும் அவரது எழுத்துமுறை எனக்குச் சரியாகப் படவில்லை. வரலாற்றை இலக்கியத்திற்கு அன்னியமாகக் கருதி அனைத்தையும் தனிமனித அனுபவத்தை மட்டுமே கொண்டு அளக்கும் நோக்கை குறுகியது என நினைத்தேன்
எழுத்தாளன் நிகர்வரலாற்றை உருவாக்கவேண்டும் என்றும் பண்பாட்டையே திருப்பி எழுதிவிடவேண்டும் என்றும் சமகாலச்சிந்தனையை முட்டி உடைக்கவேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். எழுத்து சிலவரிகளுக்குமேல் கட்டற்று தன்னிச்சையாகப் பெருகவேண்டும் என்ரும் கச்சிதமான மொழி அப்போதுதான் நிகழும் என்றும் கருதினேன். அவரது எண்ணிக்கோர்த்த மொழி மிகவும் பரந்து கிடப்பதாகத் தோன்றியது. அதை பாதிக்குமேல் சொற்களில் என்னால் சொல்லிவிடமுடியும், அதற்கான உத்வேகம் நிகழுமென்றால் என்று கண்டுகொண்டேன். நான் என் பித்தையும் கட்டற்றவேகத்தையும் எழுத்தாக்க விரும்பினேன்
சிற்றிதழ்ச்சூழலின் காலம் முடிந்துவிட்டது என உணர்ந்தேன். தகவல்தொடர்புப் புரட்சியின் காலம் வந்துவிட்டது. புதிய கருத்துக்கள் புதிய எழுத்துமுறைகள். சிற்றிதழ் மனநிலைகள் அறைக்குள் உள்ளே தாழிட்டுக்கொள்ளவே உதவும். எழுத விஷயமில்லாதவர்கள் அந்தப் பாவனையுடன் சாராயம் குடித்து கலகக்காரர்களாக வாழ்ந்து கொள்ளலாம். அது பெரிய சுய ஏமாற்று, எனக்குரியதல்ல என்று தோன்றியது.
அத்துடன் எனக்கு அவரது ஐரோப்பியச் சார்பு அலுப்பூட்டியது. இந்திய மரபின் மீதான உதாசீனமும் அறியாமையும் ஏமாற்றம் அளித்தது. தத்துவம் அற்ற அவரது யதர்ர்த்தவாதம் பொருளற்றிருப்பதாகப் பட்டது. அதை அவரிடமே விவாதித்தேன் மெல்லமெல்ல விலகிச்செல்லத் தொடங்கினேன். புராணத்தையும் தொன்மத்தையும் நாட்டார் மரபுகளையும் கொண்டு எழுதப்பட்ட என் கதைகள் ஒவ்வொன்றும் அவருக்கு திகைப்பளித்தன.
விஷ்ணுபுரம் அவரிடமிருந்து நான் அடைந்த விலகலின் திட்டவட்டமான புள்ளியாக அமைந்தது. அதை அவரால் உள்வாங்க முடியவில்லை. அதேசமயம் அது அடைந்த பெரும் வரவேற்பு அவரை .பதற்றமும் எரிச்சலும் அடையச்செய்தது. அவரால் தன் தன்னம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.. ஒருகட்டத்தில் அவர் தனக்குச் சௌகரியமான நட்புச்சூழலை உருவாக்கிக்கொள்ளத் தொடங்கினார். விலகல் முழுமை அடைந்தது
இன்று யோசித்தால் நான் சற்று பொறுப்பில்லாமல் நடந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. நான் ஒருகட்டத்தில் என் வழியைக் கண்டுகொண்டேன். நித்யாவை நெருங்கினேன். அதன்பின் நேர்ப்பேச்சில் அவர் மீதான விமர்சனங்களை குறைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவரேதான் விமர்சனங்களை ஊக்குவித்தார். அதை நான் உண்மை என நம்பினேன். உள்ளூர மனிதர்கள் நொய்மையானவர்கள் என பின்னர் தெரிந்தது. அவர் இறந்து பத்தாண்டுகளுக்குப்பின். என் நடுவயதில். ஒன்றும் செய்யமுடியாது
இப்போது யோசித்தால் புன்னகை வருகிறது. அவர் அமெரிக்கா மேல் பெரும் பக்தி கொண்டவர். அமெரிக்கா பற்றி அவர் சொன்னதெல்லாமே குழந்தைத்தனமானவை. அங்கே தேவையான சூடில் காபி கிடைக்கும், எத்தனை டிகிரி சூடு தேவை என்று சொல்லி வாங்கலாம் என்றார். சமையல் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லி கேட்டுச் சாப்பிடலாம் என்றார். அங்கே காலம் தவறுதலும் பிழைகளும் அனேகமாக இல்லை என்றார்
ஒருமுறை சொன்னார். ‘நான் அங்க மால்களிலே ஜாலியா நான் பாட்டுக்கு படுத்துண்டிருப்பேன். பிள்ளைகள் விளையாடிண்டிருக்கும். யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டா. வேடிக்கை பாக்க மாட்டா. இன்னொருத்தர் சுதந்திரத்துக்கு அந்த மாதிரி எடமிருக்கு அங்க. எப்டி வேணா இருக்கலாம். இங்க எங்கபாத்தாலும் உத்துப்பாத்து உச்சு கொட்டுவா”
அவர் மறைந்து பல வருடம் கழித்து நான் அமெரிக்கா சென்றேன். அவர் இருந்த கலிஃபோர்னியா ஃப்ரீமாண்ட் நகரில் ஒருவர் சொன்னார். அவர் சுந்தர ராமசாமியை எப்படி அறிமுகம் செய்துகொண்டார் என்று. அவர் மால்களில் படுத்திருப்பார். “இங்கே அப்டி யாரும் செய்ய மாட்டாங்க. ரொம்ப வேடிக்கையா இருக்கும். வெள்ளைக்காரங்க விசித்திரமா பாத்துட்டு போவாங்க. எங்கிட்ட என்னோட வெள்ளைக்கார முதலாளிதான் அவரைச் சுட்டிக்காட்டி அவர் உங்க ஊரான்னு கேட்டார். அப்டித்தான் அவரை கவனிச்சேன். ஏதாவது மெண்டல் பிராப்ளம் இருக்கும்னு நினைச்சேன். அப்பதான் அவர் ரைட்டர்னு சொன்னாங்க”
சிரித்துக்கொண்டேன். பாவம் சுந்தர ராமசாமி என்று தோன்றியது அப்போதுதான்
6. உங்கள் தாய்மொழி மலையாளம். கேரளச்சூழல் எப்போதுமே எழுத்தாளர்களைக் கொண்டாடுவதில் பேர் போனது. அப்படி இருந்தும் அதை மறுதலித்து தமிழில் எழுதத் தொடங்கியதும், தொடர்வதும் ஏன்? நீங்கள் உங்களை ஒரு தமிழனாக உணர்கிறீர்களா அல்லது தமிழில் எழுத நேர்ந்து விட்ட மலையாளியாக மட்டுமா? உங்கள் மனம் எந்த மொழியில் சிந்திக்கிறது? (இதைக் கேட்பதன் காரணம் அவ்வப்போது உங்கள் மீது மலையாளி என்ற முத்திரை குத்தி, அவர்களோடு ஒப்பிட்டு நீங்கள் தமிழர்களை மட்டம் தட்டுவதாக எழும் விமர்சனங்களினால்)
பதில்: என் தாய்மொழி மலையாளம். ஆனால் என் குடும்பத்திலேயே தமிழறிஞர்கள் உண்டு. ஏனென்றால் குமரிமாவட்டம் திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. அதில் இருநூறாண்டுக்காலம் முன்புவரை அரசாணைகள் எல்லாமே தமிழில்தான் இருந்தன. பழைய சேரநாடு அது. தமிழ் ஆட்சிமொழியாக, செவ்வியல் மொழியாக இருந்தது. மலையாளம் பேச்சுமொழியாக. நான் பள்ளியில் கற்றது தமிழ். பதினைந்து வயதுக்குள் உரையில்லாமல் எந்தச்செய்யுளையும் வாசிக்கும் அளவுக்குத் தமிழ் கற்றவன். நவீனத் தமிழிலக்கியவாதிகளில் என் தலைமுறையில் முறையாக பழந்தமிழ் கற்றவர்கள் சிலரே.
என் சிந்தனை மொழி தமிழே. இதுதான் என் சிக்கல். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். எல்லாமே அனிச்சையாக தமிழில் இருந்து மொழியாக்கம் செய்து எழுதுபவை. ஆகவே என்னால் மலையாளத்திலோ பிறமொழிகளிலோ எழுதுவதன் இன்பத்தை அடைய முடிவதில்லை. என்னிடம் மலையாளத்தில் கட்டுரை கேட்டுக்கொண்டே இருப்பார்கள். எழுதவேண்டும் என நினைத்தாலே சோர்வாக இருக்கும். தமிழில் பேனா எடுத்தாலே போதும். என் மனம் நேரடியாகவே மொழியாகி எழுத்தாகிவிடும்..
நல்ல எழுத்தாளன் புகழ், அங்கீகாரம் எதற்காகவும் எழுதுவதில்லை. நான் எழுதவந்தபோது மலையாளத்தில் எழுத்தாளனுக்குக் கிடைத்த புகழும் அங்கீகாரமும் மிகப்பெரிது. தமிழில் அதற்கான வாய்ப்பே இருக்கவில்லை.ஆனால் அப்படி வாய்ப்பே இல்லை என்பதுதான் எனக்குக் கிளர்ச்சி அளித்தது. என்னை ஒரு தலைமறைவுப் போராளியாக தற்கொலைப்படையாகக் கற்பனைசெய்து உத்வேகம் அடைந்தேன். சிற்றிதழ்மனநிலை அது.
தமிழன், மலையாளி என்பதெல்லாம் நம்மைச்சுற்றி உள்ள அரசியல்வாதிகளால் உருவாக்கப்படும் அடையாளங்கள். அவர்களின் அதிகாரத்துக்காக அந்த அடையாளங்களை அவர்கள் உருவாக்கி அதனடிப்படையில் மக்களைத் திரட்டுகிறார்கள்.அத்தகைய அடையாளங்களை ஓர் எழுத்தாளன் தனக்காகச் சூடிக்கொள்வான் என்றால் அவனைப்போல உதவாக்கரை வேறில்லை.
திரும்பத்திரும்ப அந்தக் கும்பல் என் வீட்டு வாசலில் நின்று ‘நீ தமிழனா மலையாளியா சொல்லு’ என்று கூவிக்கொண்டிருக்கிறாள். ‘ போய் வேலையைப் பாருடா முட்டாள். என் எழுத்தின் முற்றத்தில் கால்வைக்கவே தகுதியற்றவன் நீ. உன்னைப்போன்றவர்களை மீறித்தான் எங்கும் எப்போதும் இலக்கியம் எழுதப்படுகிறது’ என்பதே என் பதில்.
நான் சில விஷயங்களில் என்னை மலையாளப்பண்பாட்டின் தொடர்ச்சியாக உணர்வதுண்டு. சில விஷயங்களில் தமிழ் பண்பாட்டின் கண்ணியாக. மலையாளப்பண்பாட்டையே தமிழ்ப்பண்பாட்டின் ஒரு சிறு பகுதியாகவே எண்ணிக்கொள்கிறேன். அப்படித்தான் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். கட்டுரைகளில். கொற்றவையில்.
தமிழ் மலையாளம் என்ற இந்தப்பிரிவினை அதிகபட்சம் முந்நூறு வருட வரலாறுள்ளது. இலக்கியத்திற்கு இதெல்லாம் ஒரு காலமே அல்ல. இதையெல்லாம் அது பொருட்படுத்தவும் முடியாது. அது கையாளும் பண்பாட்டுக் குறியீடுகள், ஆழ்படிமங்கள் பல்லாயிரம் வருடத் தொன்மை கொண்டவை. இந்துவாக, இந்தியனாக, கீழைநாட்டவனாக எல்லாம் நான் என்னை உணரக்கூடும். ஆனால் இந்த அடையாளங்கள் எல்லாமே நான் எனக்கு சூட்டிக்கொள்பவை. நானே அடையாளம் காண்பவை. அவ்வடையாளங்கள் வழியாக என்னைச்சூழ்ந்திருக்கும் இந்த வாழ்க்கையுடனும் இதன் நேற்றைய வரலாற்றுடனும் தொடர்புகொள்கிறேன். பிறர் என்னை அப்படி வகுத்தால் ஏற்றுக்கொள்ளமாட்டேன்
இவ்வடையாளங்களுக்கு மேலாக ஏதோ ஒன்று உள்ளது. அடையாளங்களுக்கு அப்பால் திமிறிக்கொண்டு நிற்பது. அதுதான் இலக்கியத்தை உண்மையில் உருவாக்குகிறது. தமிழனாக மலையாளியாக இந்துவாக இந்தியனாக எல்லாம் ஆரம்பிக்கலாம். முடிப்பது அவ்வடையாளத்தில் அல்ல. அது நிகழ்ந்தால்தான் அது இலக்கியம்
7. இன்றைய தேதியில் விஷ்ணுபுரம் தான் உங்களின் ஆகச் சிறந்த படைப்பு. அது தன் உயரத்திற்கேற்ப வாசகர்களைச் சென்றடைந்ததாக நினைக்கிறீர்களா? என் வரையில் பொன்னியின் செல்வன் போல் அது விற்றிருக்க வேண்டும். ஆரம்பம் முதல் இன்று வரை அந்த நாவல் எதிர்கொள்ளப்படும் விதம் பற்றிக் கூறுங்கள்.
பதில்: விஷ்ணுபுரம் என் சிறந்த படைப்பு என்பது உங்கள் விமர்சனக் கருத்தாக இருக்கலாம். பின் தொடரும் நிழலின் குரல்,கொற்றவை இரண்டும் வேறுவேறு வகையில் அதற்கு நிகரானவை என நினைக்கிறேன்.
பொன்னியின் செல்வன் போல விஷ்ணுபுரம் விற்றிருக்க முடியாது. எப்போதும் விற்கவும் விற்காது. பொன்னியின்செல்வன் தமிழில் கல்வியறிவு மிகக்குறைவாக இருந்த காலகட்டத்தில் ஆரம்பப்பள்ளிக் கல்வி மட்டுமே இருந்த பெண்களையும் உத்தேசித்து எழுதப்பட்டது. ஆகவே மிகமிக எளிய நடையில், நேரடியான அர்த்தம் மட்டுமே கொண்டு, குழந்தைக்கதை போல எழுதப்பட்டது. இன்று அது ஒரு குழந்தைக்கதை. ஐந்தாம் வகுப்பு மாணவர்களால் பெரிதும் வாசிக்கபப்டுவது.
பொன்னியின்செல்வன் விற்ற அளவுக்கு ஏன் சிவகாமியின் சபதம் விற்கவில்லை என்று கேட்டுக்கொண்டால் அடுத்த பதில் கிடைக்கும். பொன்னியின்செல்வன் தமிழகத்தின் ஒரு பொற்காலத்தைக் கற்பனைசெய்கிறது. எளிய ராஜாராணி சாகஸக்கதையாக அதை முன்வைக்கிறது. தமிழ்ப்பொற்காலக் கற்பனைகள் உருவான காலகட்டத்தைச் சேர்ந்தது அது
விஷ்ணுபுரம் நேரடியாக வாழ்க்கையைச் சொல்லவில்லை. அது மெய்மையைத் தேடுபவர்களின் கதையை மட்டுமே சொல்கிறது. ஆகவே அந்தத் தளத்தில் ஒரு தேடல் கொண்டவர்களே அதன் வாசகர்கள். நேரடியாகவே தத்துவத்தைக் கையாள்கிறது. ஆகவே தத்துவத்தைக் கற்கும் மனநிலைகொண்டவர்களுக்குரியது அது., ஆழ்படிமங்களையும் தொன்மங்களையும் உருவகங்களையும் கையாள்கிறது. முன்பின் பின்னிச்செல்லும் கதையோட்டம் கொண்டது அது. ஆகவே கற்பனைமூலம் நாவலை விரித்தெடுக்கும் நல்ல இலக்கியவாசகனே அதை வாசிக்கமுடியும்
அவ்வகையில் பார்த்தால் விஷ்ணுபுரம் பெற்ற வெற்றி, அடைந்திருக்கும் வாசிப்பு, வியப்பூட்டுவதே. அதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.அந்த வெற்றிக்குக் காரணம் அதன் செறிவும் தீவிரமும் தமிழின் பொதுவாசகனுக்கு அச்சமூட்டுவதாக இருந்தாலும் அது பேசும் விஷயம் தமிழ் மனதுக்கு நெருக்கமானது என்பதே. ஒவ்வொரு ஊரிலும் தலைக்குமேல் கோபுரம் எழுந்து நிற்கிறது. தெய்வங்கள் நெருக்கியடித்து நின்றிருக்கின்றன. அவற்றின் பார்வை தலைமேல் கவிந்திருக்கிறது. தமிழ் மனம் ஒவ்வொரு கணமும் மரபின் நெருக்கடியை உணர்கிறது. அதை விஷ்ணுபுரத்தில் அது அடையாளம் கண்டுகொள்கிறது.
விஷ்ணுபுரம் வெளிவந்த நாள் முதலே நல்ல வாசகர்களால் உத்வேகத்துடன் எதிர்கொள்ளப்பட்ட ஆக்கம். ஆரம்பத்தில் மேலோட்டமாக சில தகவல்பிழைகளைச் சுட்டிக்காட்டி சில எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. அவற்றில் உண்மையான எந்தப்பிழையும் சுட்டிக்காட்டப்படவில்லை. சக எழுத்தாளர்களின் சில்லறைக் காழ்ப்புகள் சில வந்தன. அத்துடன் இலக்கியம் என்றால் என்ன என்றே புரியாத அரசியல் விமர்சனங்கள் இருந்தன. பெரும்பாலும் விஷ்ணுபுரம் என்ற பெயரை மட்டுமே வைத்துச் செய்யப்பட்ட விமர்சனங்கள்.
ஆனால் வாசகர்கள் அவற்றைக் கடந்து அதில் தங்கள் தேடலைக் கண்டடைந்துகொண்டே இருந்தனர். மிகச்சிறந்த வாசிப்புகள் வந்தன. தொடர்ந்து விஷ்ணுபுரம் பற்றி கடிதங்கள் வந்துகோண்டே இருக்கின்றன. இத்தனை வருடங்களில் அது எப்போதுமே வாசகக் கவனத்தில் இருந்துகொண்டிருக்கிறது. .
அடுத்தடுத்த தலைமுறை வாசகர்கள் வர வர மிகச்சிறந்த வாசிப்புகள் நிகழ்கின்றன. சமீபத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றபோது தலித் விமர்சகரான பால்ராஜ் பல ஆண்டுகளாக விஷ்ணுபுரத்தை இடதுசாரிகள் வாசிக்காமல் செய்த விமர்சனம் வழியாகவே அறிந்துகொண்டிருந்ததாகவும் அதை வாசித்தபோதுதான் அதன் உண்மையான சாரம் தெரிந்ததாகவும் சொன்னார்.
தமிழ்வாசகனுக்கு இன்றுள்ள மிகப்பெரிய சவால் விஷ்ணுபுரத்தையும் கொற்றவையையும் எதிர்கொள்வதுதான். படைப்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளில் எளிதாகக் கடந்துசெல்லப்படும். அவையிரண்டும் அப்படிக் கடந்துசெல்லப்படாதவையாகவே இன்றும் உள்ளன என்பதை அவற்றைப்பற்றி எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான விமர்சனங்களை வாசிக்கும் எவரும் உணரமுடியும்.
8. பரவலாய் நிராகரிக்கப்பட்ட பின்தொடரும் நிழலின் குரல் நான் ரசித்த நாவல். அதன் craft பிடித்தமானது. அதை ஒரு தோல்வியுற்ற நாவல் எனக் கருதுகிறீர்களா?
பின் தொடரும் நிழலின் குரல் தொகுப்புவடிவம் கொண்டது. நேர்கோடற்ற கதையோட்டம். அத்துடன் அது பேசும் சிக்கல் அனைவருக்கும் உரியது அல்ல. அரசியலின் அறம் பற்றி, கருத்தியலின் வன்முறை பற்றி தனிப்பட்ட முறையில் கேள்விகள் உடையவர்களுக்கு உரிய நாவல் அது. அது உண்மையில் இடதுசாரிகளை நோக்கிப் பேசுகிறது. அவர்கள் அதைப்பற்றி வெளியே பேசமுடியாது.
பின் தொடரும் நிழலின் குரல் வெளிவந்தபோது இடதுசாரிகள் அது முன்வைக்கும் அறக்கேள்விகளால் நிம்மதி இழந்தனர். ஆகவே அதை புறக்கணிப்பதன்மூலம் வெல்ல முயன்றனர். நிராகரிப்புகள் எல்லாமே வாசிக்காமல் செய்யப்பட்டவை என்பதை அந்நாவலை வாசித்த ஒருவர் எளிதில் காணமுடியும். அது அனைத்துத் தரப்பு வினாக்களையும் முன்வைக்கிறது. ஆகவே அதை எளிய அரசியல் சமவாக்கியங்கள் அல்லது கோஷங்கள் கொண்டு விமர்சிக்க முடியாது. இங்குள்ள மார்க்ஸியர்களிடம் அதை விமர்சிக்கும் கருத்தியல் கருவிகள் என ஏதும் இல்லை.உண்மையில் இந்நாவல் ஸ்டாலினியத்தை நிராகரிக்கையில் மார்க்ஸிய இலட்சியவாதத்தை ஏற்கிறது என்றே கூட அவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை
பின் தொடரும் நிழலின் குரலை இடதுசாரிகள் எதிர்கொண்ட விதம் ஆச்சரியமூட்டுவது. அவர்கள் அதன் ஆசிரியனை அவதூறு செய்யத் தொடங்கினர். என் மீது இன்றிருக்கும் மத, சாதிய, பிற்போக்கு முத்திரைகளெல்லாம் இந்நாவல் காரணமாக இடதுசாரிகளால் போடப்பட்டதே. அதன் வழியாக நாவலை பரவலாகச் சென்றடைய முடியாமலாக்க அவர்களால் முடிந்தது
ஆனால் அது முதல்பதிப்புக்கு மட்டுமே. சென்ற வருடங்களில் இரண்டு வருட்ங்க்ளுக்கொருமுறை அது மறுபதிப்பாக வந்துகொண்டே இருப்பதைக் காணலாம். அதை வரிவரியாக ஊன்றி வாசித்த வாசகர்களைக் காண்கிறேன். இலங்கைப்போராட்டத்தின் வீழ்ச்சியின் போது, டபிள்யூ ஆர் வரதராஜனின் தற்கொலையின்போதெல்லாம் பின் தொடரும் நிழலின் குரலை தேடிவந்து வாசித்தவர்கள் பலர். அது ஒரு பொழுதுபோக்கு நாவல் அல்ல. அதன் இடம் அடிப்படையான கேள்விகளுடன் தேடிவருபவர்களுக்கு உரியது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றதைச் சொன்னேன் அல்லவா? அதே நாளில் ஒரு தொழிற்சங்கவாதியைச் சந்தித்தேன். வேலையை விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு வழக்கறிஞராக தொழில்செய்யப்போவதாகச் சொன்னார். ஏன் என்றேன். “பின் தொடரும் நிழலின் குரல் கதைதான் தோழர். அச்சு அசலாக. அதே மாதிரி’ என்றார்.
9. ஆர்த்தர் சி. க்ளார்க், ஐஸக் அஸிமோவ் பாணியிலான விஞ்ஞானக் கதைகளையே பெரும்பாலும் தமிழ் கண்டிருக்கிறது. பிரதான உதாரணம் சுஜாதா. விசும்பு சிறுகதைத் தொகுப்பின் மூலம் நீங்கள் நம் கலாசாரத்தில் வேரூன்றிய ஓர் இந்திய மரபார்ந்த விஞ்ஞானப் புனைவை முன்வைத்தீர்கள். அது முக்கியமான பங்களிப்பு. அதைப் பற்றிச் சொல்லுங்கள். விஞ்ஞான நாவல் ஏதும் எழுதும் திட்டமிருக்கிறதா?
பதில்: அமெரிக்க ஐரோப்பிய அறிவியல்புனைகதைகளின் அடிப்படைகள் மூன்று. ஒன்று, அவர்களுக்கிருக்கும் நவீன அறிவியல் கல்வி. இரண்டு, அவர்கள் ஆழ்மனதை ஆண்டுகொண்டிருக்கும் கிரேக்க தொன்மவியல் மூன்று, அவர்களின் நிறுவன மதமும் அதற்கு எதிரான நாத்திகவாதமும் உருவாக்கும் தத்துவக்கேள்விகள்
இம்மூன்று அடிப்படைகளையும் கலந்துதான் அவர்களின் அறிபுனைகள் உருவாகின்றன.அங்கே நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் பெரியதாக வளர்ந்துள்ளன. அவற்றை ஒட்டி புனைகதை எழுதவும் வாசிக்கவும் ஏராளமானவர்கள் வந்துவிட்டனர். அந்த வசதி இங்கே நமக்கு இல்லை. நாம் அறிவியலை முறையாகக் கற்றவர்கள் அல்ல. அறிவியலை தகவல்கல்வியாகவே நாம் கற்கிறோம். அறிவியல்கொள்கைகளை புரிந்துகொள்வதற்கும் தொடர்ந்து சிந்திப்பதற்கும் இங்கே நமக்குப் பயிற்சியே இல்லை.
மேலைநாட்டு அறிபுனைகளில் கிரேக்கத் தொன்மங்களின் கட்டமைப்பு ஒளிந்திருப்பதைக் காணலாம். ஆர்தர் சி கிளார்க்கின் கதையை ஒட்டிய திரைப்படத்தில் தலைப்பே ஸ்பேஸ் ஒடிஸி என்றிருக்கிறது. யுலிஸஸ் அல்லது ஹெர்குலிஸின் சாகஸங்கள். விதவிதமான பயங்கர மிருகங்கள். பேருருவம் கொண்ட தெய்வங்கள். அவற்றின் அடிப்படையான படிம அமைப்பையே அறிபுனைகள் மறு ஆக்கம் செய்கின்றன
அத்துடன் அங்குள்ள அறிபுனைகளின் சாராம்சமாக உள்ளவை செமிட்டிக் மதங்கள் உருவாக்கிய தத்துவநிலைப்பாடுகளின் அவற்றின் மீதான கேள்விகளின் பல்வேறு வளர்ச்சி நிலைகள். உதாரணமாக இயந்திரர்கள் பற்றிய ஐசக் அசிமோவின் கதைகள் அனைத்திலுமே ஆன்மா என்பது என்ன, அறிவு மட்டும்தானா என்ற வினா உள்ளது. சுதந்திரம் அன்பு போன்ற விழுமியங்கள் முழுமையாகவே அறிவில் இருந்து வரமுடியுமா, வரமுடியாதென்றால் அவற்றின் ஊற்றுக்கண் எது என்ற கேள்வி உள்ளது.
நாம் முற்றிலும் வேறான ஒரு சூழலில் வாழ்கிறோம். நாம் கீழைமதங்களான இந்துமதம், பௌத்தம், சமணம் வழியாக அடையும் வினாக்கள் வேறு. நம் சிக்கல்களும் முற்றிலும் தனித்தவை. நம்முடைய புராண மரபும் வேறுபட்டது. ஆகவே நம் அறிபுனைகள் வேறுபட்டவையாகவே இருக்கமுடியும்.
ஆனால் இங்கே எழுதப்படும் அறிபுனைகள் மேலைநாட்டு அறிபுனைகளின் தழுவல்கள் அல்லது மறுவிளைவுகளாகவே உள்ளன. ஆகவேதான் ஒரு விண்வெளிக்கதையில் இந்தியப்பெயர்களும் உரையாடல்களும் வந்ததுமே நமக்கு அது அன்னியமாகத் தெரியத் தொடங்குகிறது.
மேலும் நாம் இங்கே அறிபுனைகளாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பல படைப்புகள் அறிவியலை அல்ல தொழில்நுட்பத்தையே கருவாகக் கொண்டவை. வழக்கமான ஒரு கதையில் நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த சில விந்தைகளைக் கலந்துகொண்டு வியப்போ பிரமிப்போ பரபரப்போ உருவாக்கப்படுமென்றால் அதுவே அறிபுனைவு என நாம் நம்புகிறோம். உதாரணமாக சுஜாதா எழுதிய ஆக்கங்கள்
அறிபுனைவு என்பது அறிவியல் கொள்கைகளையே முதன்மையாக புனைவுக்கு ஆதாரமாகக் கொள்கிறது. அறிவியலில் இருந்து படிமங்களை எடுத்துக்கொள்கிறது. அவற்றின் வழியாக அது வாழ்க்கையின் அடிப்படையான தத்துவ வினாக்களைத்தான் பரிசீலிக்கிறது. அது இங்கே நிகழ்வதில்லை.
நான் அறிபுனை எழுதியதற்குக் காரணம் ஒன்றே. நவீன அறிவியலில் எனக்கு அதிக அறிமுகம் இல்லை. ஆனால் விஷ்ணுபுரத்திகாக ஆய்வுசெய்தமையால் ரசவாதம், யோகமரபு, ஆயுர்வேதம் போன்றவற்றைப்பற்றி அறிவேன். ஆகவே நான் அறிந்தவற்றில் இருந்து அறிபுனைகளை உருவாக்கினேன். அவற்றில் வாழ்க்கை சார்ந்த அடிப்படை வினாக்களையே எழுப்பிக்கொண்டேன்.
அறிபுனை நாவல் ஒன்று எழுதவேண்டுமென ஆசை உள்ளது. ஒரு முன்வரைவும் கையில் இருக்கிறது. எதிர்காலத்தில். யோகமரபு பற்றியது. மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு பற்றி. மூளை உடல்வழியாக உலகை உருவாக்குவது பற்றி. அடிப்படையில் அதன் வினா வேதாந்த ஞானமரபு கேட்பதுதான். இவ்வுலகென இங்குள்ள இவை எப்படி எனக்குள் உருவாகி வருகின்றன?
10. அறம் சிறுகதைத் தொகுப்பு உங்களின் முந்தைய சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து வேறுபட்டது. முக்கியமாய் அதன் எளிமையான நேரடியான கதை சொல்லல் முறை. கதைகளின் இலக்கிய ஸ்தானத்தை இந்த மாற்றம் பாதிக்கவில்லை என்ற போதும் உங்கள் எழுத்தின் அணுகுமுறையில் ஒரு முக்கிய மாற்றம். இது வெகுஜன / ஆரம்ப நிலை வாசகர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக ப்ரக்ஞைப்பூர்வமாக dilute செய்தீர்களா, அல்லது அந்தக் கதைகள் அதைக் கோரின எனக் கருதுகிறீர்களா?
பதில்: அறம் கதைகள் பிரக்ஞை பூர்வமாக எழுதப்பட்டவை அல்ல. அவற்றை எழுதுவதற்கான ஒரு தேவை எனக்கிருந்தது. நானே எழுதிக்கொண்டுபிடிக்கவேண்டிய ஒன்று. நானே சொல்லியிருக்கிறேன். மானுட வாழ்க்கையில் விழுமியங்களின் இடமென்ன என்ற ஐயம் எனக்கிருந்தது. இடமே இலலையோ என்ற சோர்வு இருந்தது. ஒரு உடைவுக்கணத்தில் ஒரு கதையை எழுதினேன். அறம். அது ஒரு தொடக்கம். கதைகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன
அக்கதைகளுக்கு பொதுவாக ஒரு சட்டகம் இருந்தது. உண்மையான மனிதர்களின் கதைகள். அம்மனிதர்களைப் பார்க்கும் இன்னொருவரின் கோணம். பொதுவாக சிறுகதைகள் ஒருசில கணங்களை மட்டும் சுட்டிக்காட்டி நின்றுவிடும். குறிப்புணர்த்தும். ஆனால் இக்கதைகளுக்கு அவை போதாது. அவை அந்த இலட்சிய மனிதரை முழுமையாகக் காட்டிவிடவேண்டியிருந்தது. அதற்கான வடிவம் அவற்றில் அமைந்தது. ஒரு புள்ளியில் நிகழ்ந்து முடிவதற்குப் பதிலாக பல தளங்களிலாக தொடர்ந்து சென்று முடியும் கதைகள் அவை
இக்கதைகளில் கணிசமானவை உணர்ச்சிபூர்வமானவை. ஆகவே அவை வாசகர்களால் எளிதில் வாசிக்கப்படுகின்றன. ஆனால் அவை எளியவை அல்ல. நீர்த்த வடிவிலும் அவை இல்லை. அவற்றை வாசகர்கள் பலவகைகளில் வாசித்து எழுதிய கடிதங்களிலேயே அதைக் காணலாம். மயில்கழுத்து, தாயார்பாதம் போன்ற கதைகளைப்பற்றி இன்றும் கூட புதிய வினாக்கள் எழுப்பப்படுகின்றன. இன்னமும்கூட அக்கதைகள் முழுமையாக வாசிக்கப்படவில்லை. அவற்றின் பல விஷயங்கள் தொடாமலேயே கடந்து செல்லபடுகின்றன.
பொதுவாக இங்கே சிறுகதைகளுக்கு என ஒரு வடிவம், ஒரு முன்வரைவு உருவாகி இருக்கிறது. நவீனத்துவச் சிறுகதைகளின் வடிவம் அது எனலாம். எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாத உணர்ச்சியற்ற நடையில் சுருக்கமாகச் சொல்லப்படும் ஒரு கதை. சிலநிகழ்வுகள் மட்டும். அதில் பூடகமாக ஒரு விஷயம் ஒளிக்கப்பட்டு ஒரு கோடி காட்டப்பட்டிருக்கும். வாசகன் அதை ஊகித்துக் கண்டுபிடிக்கவேண்டும். இது ஆசிரியனுக்கும் எழுத்தாளனுக்குமான ஓரு விளையாட்டு. மூன்றுசீட்டு விளையாடுவதுபோல
ஒளித்துவைத்ததை வாசகன் கண்டுபிடித்துவிட்டால் மகிழ்ச்சி அடைகிறான். அதை இலக்கிய அனுபவம் என நினைத்துக்கொள்கிறான். கொஞ்சகாலம் வாசித்துக்கொண்டிருப்பவன் எளிதில் அதைக் கண்டுபிடித்துவிடுவான். அவன் கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது. பல கதைகளில் எளிய சமூகவியல் உண்மைகள்.அவ்வப்போது சில பாலியல் மீறல்கள்.அவ்வளவுதான்
இது எனக்கு சலிப்பூட்டியது. நான் அடிப்படைக்கேள்விகளை நோக்கி வாசகனைச் செலுத்த விழைந்தேன். ஆகவேதான் அறம் கதைகள் வெளிப்படையாக அமைந்தன. அவற்றில் பூடகமாக ஏதும் ஒளிக்கப்படவில்லை. அவற்றில் அப்பட்டமாகவே இருந்தது வாழ்க்கை பற்றிய ஒரு கேள்வி. அந்தக் கேள்வியைச் சந்தித்தவர்களுக்கு அவை எளிமையான கதைகள் அல்ல. விரிந்து விரிந்து செல்லும் கதைகள். கதையின் உடலுக்குள் ஒளித்துவைக்கப்பட்ட ஒரு சிறிய விஷயத்தைத் தேடுவதையே வாசிப்பு என நினைப்பவர்களுக்கு கதை எளிமையானது. அது சொல்வது முன்னால் வந்து நிற்கிறது அல்லவா?
உதாரணமாக நூறுநாற்காலிகள். ‘எனக்கு வேண்டும் நூறு நாற்காலிகள்’ என்பது அப்பட்டமான நேரடியான முடிவு. பூடகம் தேடும் வாசகனுக்கு அங்கே கதை முடிந்துவிடுகிறது. ஆனால் அந்த முடிச்சை வாழ்க்கையாக காண்பவனுக்கு அது பெரிய தொடக்கம். காப்பனின் குரு நாற்காலிகளை வெல்லும்படி சொல்கிறார். அம்மா நாற்காலி வேண்டாம் என்கிறார். அவன் குருவை தேர்ந்தெடுக்கிறான். ஆனால் அது சரியான முடிவுதானா? அம்மா ஏதேனும் உள்ளுணர்வில் அதைச் சொன்னாளா? அவ்வினாக்களை கேட்க ஆரம்பித்தால் முதல் வரிமுதல் கதை மீண்டும் விரியத்தொடங்கும்.
அதன் பின் எழுதிய முள் அல்லது பிழை போன்ற கதைகளில் இந்த அளவு வெளிப்படைத்தன்மை இல்லை. அவை பூடகமாக எதையும் ஒளிக்க முயலவில்லை.ஆனால் அவை முன்வைக்கும் அடிப்படையான சிக்கல் என்பது வாழ்க்கையின் அன்றாடத்தளம் சார்ந்தது அல்ல. ஆன்மீகமானது. அதற்குரிய வாசகர்களுக்கானது.