பெருமாள் முருகன் கடிதங்கள் 4

இனிய ஜெயம்,

பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எனும் உங்கள் பதிவு வாசித்தேன். ஒரு இலக்கிய வாசகனாக மிக மிக மனச் சோர்வு அளிக்கும் சம்பவம் இது.

பெருமாள் முருகன் அவர்களை விட்டுவிடுவோம், எழுத்தாளன் என்பவன் எப்போதும் அதிகார பீடத்துக்கு அதன் அறப்பிழைகளுக்கு எபோதுமே எதிரானவன்.

ஆக எந்த தீவிர எழுத்தாளனும் எந்த தருணத்திலும், பாசிசத்தின் கரத்தால் வேட்டையாடப் படும் இக்கட்டில்தான் வாழ்கிறான். எனில் தீவிர எழுத்தாளன் அவன் அறிந்திரிந்தாலும் அறியா விட்டாலும் அவன் ‘விதி சமைப்பவன்’ தான்.

தனது சரிவுக்கு சூழலையும், வீழ்ச்சிக்கு விதியையும் ஒரு எழுத்தாளன் காரணம் காட்டினால், அவன் அளித்த விழுமியங்களை ஆதர்சமாக வரித்த என்னைப் போன்ற வாசகன் எங்கே போவான்?

‘நாய் நல்லரசு தர அதை சிங்கம் கொள்ளுமோ’ என்று சொன்னவனின் ரௌரத்தை பழகி எனை கவியும் கீழ்மைகளை கடந்து வந்தேன். அப்படி சொல்லித் தந்தவன் அதிகாரத்தின் முன் அடி பணித்தால் . நான் என்ன செய்வேன்?

அடி பணிய ஒரு எழுத்தாளனுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம், ஆனால் ஒரு எழுத்தாளன் என் நிலையிலும் நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே அதன் மறுபக்கம் வாசகனாகிய நான்.

‘தமிழ்ப்’ பெண்களின் கற்பையும், சாதிஎனும் மலத்தையும் பேணப் புறப்பட்டுவிட்ட பெருந்தயகயாளர்கள் வசம் நான் என் மண்டி இட வேண்டும்.

நீங்கள் எனக்குள் விதைத்த கனவுகளை என்ன செய்ய? விழுமியங்களை என்ன செய்ய? முச்சந்தியில் கழு ஏற வேண்டுமா?
இனிய ஜெயம், ஒன்றுமே விளங்க வில்லை. நீங்களே சொல்லுங்கள் ஒரு வாசகனாக நான் என்ன செய்ய வேண்டும்?

ஒரே ஒரு வேண்டுகோள் எழுத்தாளர் அழும் படத்தை உங்கள் தளத்திலிருந்து நீக்கி விடுங்கள் அது எதோ ஒரு சாபம் போல இருக்கிறது அது வேண்டாம்.

கடலூர் சீனு

அன்புள்ள ஜெ,

காலை தமிழ் இந்துவில் இந்த செய்தியைப் படித்ததிலிருந்தே மனது சரியில்லை. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள நமக்குத் தெரியவில்லை என்பது எவ்வளவு பெரிய இழிவு. இங்கே பாரீசில் கருத்துரிமைக்காக மாபெரும் பேரணி நடைபெறுகிறது. பெரிய அளவில் மக்கள் திரள்கிறார்கள். சமூகமும் முன்னேறி செல்கிறது. நமது அழிவை நாமே பார்க்கப் போகிறோமா என்ன?

புத்தகத்தைக் கொளுத்துவது ஒன்றும் நம் சமூகத்துக்குப் புதிதில்லையே. உண்மையில் எனக்கு பெருமாள் முருகன் மீது தான் கோபம் வருகிறது. அவரின் பின்வாங்கல் அவசரப் பட்டு எடுத்த முடிவு போலத் தெரியவில்லை. அத்தகைய ஓர் முடிவை எடுக்கும் படிக்கு அவருக்கு அழுத்தம் இருந்திருப்பது கண்கூடு. ஆனால் இதற்கெல்லாம் பின்வாங்குவது ஒரு எழுத்தாளராக அவரது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகத் தான் எனக்குப் படுகிறது. கொஞ்சம் தாக்கு பிடித்திருந்தால் அந்த சமூகத்தில் ஏதேனும் சிறு மாறுதலையாவது நிகழ்த்தியிருக்கலாம். இதெல்லாம் ஏன் அவர் செய்யவேண்டும் என்று கேட்டால் அவர் தேர்ந்தெடுக்கப் பட்டவராக இருப்பதால் தான் என்பேன். இது யாரவது வந்து சமூகத்தைச் சரி செய்யட்டும் என்ற உளுத்துப்போன தமிழ் மனநிலையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு பொறுப்புள்ள எழுத்தாளன் அப்படித்தான் செய்திருக்க வேண்டும். நீங்கள் அப்படித்தான் செய்திருக்கிறீர்கள். செய்து வருகிறீர்கள். இவர் இப்படி பின்வாங்குவது இவர் IFA (இந்திய கலைகளுக்கான மையம்) சார்பாகச் செய்த சமூக ஆராய்ச்சி என்ற கோணத்துக்கு மேலும் மேலும் வலு சேர்க்கிறது!!!

கைகள் கட்டப்படாத கலைஞன் தான் எவ்வளவு பலமுள்ளவன்.

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்.

நீங்கள் சொல்வது சரி தான் இது கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயல் தான் இது. புத்தகத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கலாம் விவாதம் நடத்தலாம் 4 ஆண்டுகள் முன்பு எழுதப்பட்ட புத்தகத்திற்கு எதிராக இப்போது போராடுவது அதை எரிப்பது கண்டனத்திற்குரிய செயல் தான். நாளை தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை வரும். இது அனைவருக்கும் கேடு தான் ஆனால் இதை குஷ்பு பிரச்சனை உங்கள் பிரச்சனை விஸ்வரூபம் பிரச்சனை போதே கையில் எடுத்து இருக்கவேண்டும் இப்பொது எல்லை மீறிய பிறகு என்ன பேசி என்ன.இப்போதும் அனைத்து படைப்பாளிகளும் இணைந்து போராடலாம் ஆனால் அந்த porattangal எல்லா அடிப்படைவதிகளுக்கும் எதிராக இருக்க வேண்டும் charlie hebdo தாக்குதலுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கவேண்டும் davinci code தடையை எதிர்த்தும் குரல் கொடுக்க வேண்டும்

http://timesofindia.indiatimes.com/entertainment/Malayalam-film-waiting-for-censor-certificate/articleshow/45784994.cms
இதற்கும் குரல் கொடுக்க வேண்டும்.

வந்தியத்தேவன் இருந்தது உண்மை தான் அதற்கு தென்னிந்திய கல்வெட்டு தொகுதிகளே சான்று மற்றவை கல்கியின் கற்பனைகளே அதற்கு எழுத்தாளனுக்கு உரிமை உண்டு.உங்கள் தளத்தில் பிரசுரமான கடிதம் ஏதோ வந்தியத்தேவனே கற்பனை போன்று எழுதப்பட்டுள்ளது அல்லது நான் தான் தப்பாக புரிந்து கொண்டேனா?

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=101

கோபிநாத்

முந்தைய கட்டுரைபெருமாள் முருகன் கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைபெருமாள்முருகன் கடிதங்கள்- 5 ‘பொங்கும் பெரியாரியர்களுக்கு’