அங்காடித்தெரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

நேற்றி இரவுக்காட்சியாக ‘அங்காடித்தெரு’ பார்த்தேன். சமீபகாலத்தில்லே நான் பார்த்த மிகச்சிறப்பான சினிமா இது. நேத்து இரவு முழுக்க என்னால் தூங்கவே முடியவில்லை. என்னை இந்த அளவுக்கு மனதை உருக்கிய ஒரு சினிமா இப்போது நினைவுக்கே வரவில்லை. மன்னிதர்கள் வாழ்க்கைக்காக உசிரைக்கொடுத்து போராடுவதை பார்க்கும்போது மனம் அப்படியே உருகி போகிறது. வசந்தபாலன் காலைத்தொட்டு கும்பிடவேண்டும் என்று நினைத்தேன். எல்லாரும்தான் சினிமா எடுக்கிறார்கள். பணம்பண்ண வேண்டும் புகழ்பெற வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஒரு மனிதகதையை சொல்லவேண்டும் மனிதர்களின் துக்கத்தை சொல்லவேண்டும் என்று யாருக்கு தோன்றுகிறது. எப்பேர்ப்பட்ட படம். நிபுணர்கள் குறைகளை எல்லாம் சொல்வார்கள். உலகசினிமாவுடன் ஒப்பிட்டால் சில குறைகளை சொல்லவும் முடியும் என்று படுகிறது. ஆனால் நம்முடைய கண்ணுக்கு முன்னால் உள்ள வாழ்க்கையினை நம்மிலே ஒருத்தர் தானே  சொல்ல முடிகிறது. அதுதானே நமக்கு முக்கியம்? படத்தைப் பார்த்துவிட்டு கனத்த மனசுடன் வெளியே வந்தேன்..

ரொம்ப நல்ல படம் என்பதற்கு மேலாக என்ன சொல்ல? சினிமா அப்படித்தான். அது மனசுக்குள்தான் நேரடியாக செல்லுகிறது. மூளை எல்லாம் அப்புறம்தான். படத்திற்கு வசந்தபாலனுடன் சேர்ந்தே நீங்கள் வந்துகொண்டிருக்கிறீர்கள். ஒரு எழுத்தாளனை எப்படி சினிமாவிலே பயன்படுத்துவது என்று வசந்தபாலன் காட்டியிருக்கிறார். எங்களுக்கு தெரிந்த ஜெயமோகனை இந்தப்படத்திலேதான் பார்க்கிறோம்.

யானை வாழும் காட்டிலேதான் எறும்பும் வாழுது

பெண்நாய் ஆண்நாய்க்கு போக்கு காட்டுவது மாதிரி அவனை பின்னாலே சுத்த விடுறே

இந்த ஒரு ஆண்பிள்ளைக்கிட்ட மட்டுமாவது மானரோசத்துடன் இருந்துக்கிறேனே

விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்ச்வன்

மனுஷன நம்பி கடவிரிச்சேன். குறையொன்றுமில்லை

இனிமே இது குள்ளனுக்கு பொறக்கலைண்ணு யாரும் சொல்ல மாட்டாங்கள்ல?

நாயி குட்டிகளை கொண்டாந்து போடுற மாதிரி கொண்டு போயி போட்டுட்டு போறவன் நான். நாயி சென்மம் தம்பி

போன்ற நுட்பமான வசனங்கள்  நீங்கள் எழுதியவை என்று காட்டுகின்றன. ஆனால் சாதாரணமான வசனங்களை துணிந்து போட்டிருக்கும் இடத்திலும் நீங்கள் தெரிகிறீர்கள்.

”இங்க யாருன்னு தங்கச்சி கேட்டுட்டே இருந்தா

நீ என்ன சொன்னே

சிரிச்சேன்”

அதேபோல நக்கல் கிண்டல்களிலும் நீங்கள் தெரிந்துகொண்டே இருக்கிறீர்கள்

”ஏலே  நில்லுலே ராகு காலத்திலே பொறந்தவனே

நீருல்லாவே நேரம் பாத்திருக்கணும்?”

இந்த வசனம் போல எத்தனையோ வசனங்களை நாங்கள் உங்கள் கட்டுரைகளிலே வாசித்திருக்கிறோம்.

கவிஞர் முகத்தை பாத்தியா, அடுத்து பத்தாம் கிளாச் கடவுள் வாழ்த்தை எழுதி வச்சிருக்க போறாரு

என்ற வசனம். அதே மாதிரி அந்த கிழவி.

”ஏலே சிங்கப்பூர்ருக்கா போறா இங்கதானே” என்று கேட்கும் குசும்புக்கிழவியும் நமக்கு தெரிந்தவர்தான்

அற்புதமான படம் ஜெயமோகன். சினிமாவில் நீங்கள் இதுவரை செய்த எல்லா வேலைகலும் ஒன்றுக்கொன்று மேலே சென்று கொண்டுதான் இருக்கிறது.

இயக்குநர் நுட்பங்களை வாரி இறைத்துக்கொன்டே போகிறார்

1 முஸ்லீம் பெண் பர்தாவுக்கு மேலே பட்டுப்புடவையை வைத்து பார்ப்பது

2 வாயிலே இருந்து நிப்பிளை எடுத்ததுமே வையும் குழந்தை

3 மொட்டைகளை பார்த்ததும் ஏடுகொண்டலவாடா சரி என்று மாரி கத்துவது

4 அண்ணன் வேலைசெய்யும் கடையின் பையை தங்கச்சி அப்பா படத்துக்கு சமமாக மாட்டுவது

5 அண்ணாச்சியின் செல்போனில் உள்ள ரிங் டோன்

6 அதேசமயம் சோபியா வைத்திருக்கும் ரிங்டோன்

7 அண்ணாச்சி செய்யும் பூசை அவரை வாழ்த்த வந்திருக்கும் சாமியார்

8 சோற்றுக்கான அத்தனை அடிதடிகளுக்கு நடுவிலேயும் நம்மூராலே என்று கேட்டதும் சௌந்தர பாண்டி முகம் மலர்வது

9 கக்கூஸ் கழுவியே முன்னேற ஆரம்பிக்கும் அந்த ஆசாமி

10 மாமூல் போலீஸ் , குப்பை பொறுக்கும் பாய், குள்ளன், சின்னம்மா, தெருவிலே காலையிலே குவியும் குப்பை. அந்தக்குப்பைக்குள் தூங்கும் மனுஷர்கள்

11 கர்கள் ஓடும் சாலையின் விளிம்புவரை வரும் கைக்குழந்தை. அதை அறியாமல் உறங்கும் அம்மா

12 தங்கச்சிக்காரியின் எஜமானியம்மாவின் கதாபாத்திரம்.

என்று சொல்லிக்கொன்டே போகலாம்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்

  kalyaanan on Mar 27, 2010 

அன்புள்ள ஜெ

அங்காடித்தெரு படம் பார்த்தேன். மனசை பிழிந்துவிட்டது. நான் கடவுளை மாதிரியே இதுவும் சொல்லப்படாத வாழ்க்கைஅயிச் சொல்கிறது. ஆனால் இது இன்னமும் நமக்கு தெரிந்த யதார்த்தமாக இருக்கிறது. இந்த ஒரு படத்தில் இயக்குநர் எங்கேயோ போய்விட்டார். இதுமாதிரி படத்தில் அத்தனை விஷயங்கலும் கவனமாகப் பார்த்துச்செய்யப்பட்ட ஒரு படம் மிகவும் குறைவாகவே வருகிறது ஜெயமோகன். நான் நேற்று பகல்காட்சியும் இரண்டாவது ஆட்டமும் தொடர்ந்து பார்த்தேன். இரண்டாம் முறை எங்காவது கவனக்குறைவு தெரிகிறதா என்று பார்த்தேன். நான் சினிமாவிலே உதவி இயக்குநராக இருக்கிறேன். இந்தப்படம் எங்களுக்கெல்லாம் ஒரு பாட புஸ்தகம் மாதிரி.

சினிமா என்றாலே காஸ்டிங் தான் என்பதற்கு காதல், அங்காடித்தெரு இரண்டும்தான் சரியான உதாரணம். எல்லாமே  அசல் உடங்குடி பணகுடி முகங்கள். நானும் இந்தப்பகுதிதான். கோட்டையூர். ஒரு முகம்கூட சோடை போகவில்லை. செல்வராணி முகம் சரியான நெல்லை முகம். சௌந்தர பாண்டி முகமும் அப்படித்தான். எல்லாரையுமே பார்த்துப் போட்டிருக்கிறார். மாரிமுத்துவின் அப்பா, லிங்குவின் குடும்ப முகங்கள் எல்லாமே மிகவும்  சரியாக இருக்கின்றன. ஆளெடுக்கும் நெல்லை முகங்கள் கூட சரியாக இருக்கின்றன. வேலைக்கு வருபவர்கள் வேரு ஆளெடுப்பவர்கள் வேறு ஏரியா என்று தெரிகிறது

அதேபோல நடிப்பு. புதுமுகங்களை இந்த அளவுக்கு சரியாக வேலை வாங்கிய படம் மிகவும் அபூர்வம். எழுதப்படிக்க தெரியாது என்று ஒரு பையன் சொல்லும் இடத்திலே எக்ஸ்பிரஷன் எல்லாம் எத்தனை கச்சிதமாக இருக்கின்றன. அந்த மாமி அப்படியே ஒரு பணக்காரவீட்டு அல்பம் என்பதை சும்மா வந்தாலே தெரிகிறது. காஸ்டிங் சரியாக இருந்து நடிப்பையும் வாங்கிவிட்டால் பாதிப்படம் முடிந்துவிட்டது என்று தெரிகிறது.

கரன்

முந்தைய கட்டுரைகர்மயோகம் : செயலெனும் விடுதலை
அடுத்த கட்டுரைஅங்காடி தெரு கடிதங்கள் 2