இந்த ஒரு வாரமும் எங்கிருக்கிறேன் என்றே தெரியாதபடி அலைச்சல், உள்ளும் புறமும். ஆறாம் தேதி மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பினேன். அதற்கு முன் ஏழெட்டு கட்டுரைகள் எழுதவேண்டியிருந்தது. சினிமாக்குறிப்புகள் இரண்டு. மலையாள இதழான பாஷாபோஷிணிக்கு ஒரு கட்டுரை. கூடவே சி.சரவணக்கார்த்திகேயன் கொண்டுவரும் மின்னிதழுக்கு ஒரு நீளமான பேட்டி
வெண்முரசு அத்தியாயங்களை வீட்டில் இருந்தால் தொடர்ந்து எழுதுவது என் வழக்கம். தினம் இரண்டு அத்தியாயங்கள் சாதாரணம். அபூர்வமாக மூன்று. ஆனால் புனைவின் ஓட்டத்தில் இடைவெளி விழுந்தால் வருவது வரை காத்திருக்கவேண்டியதுதான். ஒன்றுமே செய்யமுடியாது. முட்டிப்பார்த்தால் எரிச்சலும் அவநம்பிக்கையும் எழுந்து மேலும் தாமதமாகும்.
ஆகவே அதை அப்படியே விட்டுவிட்டு மற்ற அனைத்தையும் எழுதி முடித்தேன். கிளம்பும்போது பார்த்தால் மறுநாளைக்குரிய வெண்முரசு மட்டுமே இருந்தது. ஏழாம் தேதி காலையில் சென்னையில் விடுதியில் தங்கினேன். மலையாளத் திரைத்தயாரிப்பாளருடன் காலையில் சந்திப்பு. அதன்பின் கௌதம் சன்னாவும் நண்பர் பிரேமாவும் வந்திருந்தனர்.
சமீபத்தில் நான் சந்தித்த முக்கியமானவர்களில் ஒருவர் பிரேமா. அவரது வாசிப்பின் வீச்சும் விமர்சனங்களும் பெருமதிப்பை உருவாக்கின. பொதுவாக அவை அரசியல்சார்ந்தவை .ஆனால் இங்கே அரசியல் சார்ந்த விமர்சனங்கள்கூட எளிமையான அரசியல்சரிகளை தேடிக்கண்டடைவதுதான். கோட்பாட்டுத்தெளிவோ நிலைப்பாடோ மிக மிக அபூர்வம். மாணவர்களை பயிற்றுவிப்பதில் ஆர்வம் கொண்ட பிரேமா தமிழில் நிறைய எழுதலாம் என்று தோன்றியது
அவர்கள் சென்றதுமே நண்பர் அன்புவும் சிறில் அலெக்ஸும் வந்துவிட்டனர். பேசிக்கொண்டிருந்துவிட்டு குளித்துவிட்டு நேராக எழும்பூர் அருங்காட்சியக அரங்குக்குச் சென்றேன். கௌதம் சன்னாவின் குறத்தியாறு நாவல் வெளியீட்டு விழா.
நெடுநாளுக்குப்பின் கோணங்கியைச் சந்தித்தேன். நெருக்கமாக இருந்த அந்தப் பழைய காலம் நினைவில் எழுந்தது அதேபோல உற்சாகமாகச் சிரித்துக்கொண்டு இருந்தார். தலைநரைக்காமலிருப்பது ஓர் ஆச்சரியம். எப்போதுமே அவரிடம் புனிதமான கள்ளமின்மை ஒன்று உண்டு. அவரினிடம் எதிர்மறைத்தன்மை என்பதே இல்லை. இந்த உலகைச் சார்ந்தவரல்ல என்று எப்படியோ எண்ணவைக்கும் ஓர் அம்சம் அது என்று தோன்றுகிறது
வேறு ஒருவகையில் கோணங்கியைப்போன்றவர் ஓவியர் சந்துரு. ஓய்வுபெற்றபின் சங்கரன்கோயில் அருகே ஓர் ஓவியப்பள்ளியை நிறுவ அங்கே நிலம் வாங்கி தங்கியிருக்கிறார் என்றார்கள். சங்கரன்கோயில் சென்றபோது கேள்விப்பட்டேன். அவரது ஓவியங்கள் குறத்தியாறு நாவலின் முக்கியமான கவர்ச்சி. சிற்பங்களைப்போன்ற ஓவியங்கள். அட்டையில் நாயிடம் பாலருந்தும் மனிதக்குழந்தைகளின் விரைவான கோடுகளாலான ஓவியம் கனவுகளில்கூட மீண்டு வந்தது
சந்துருவிடம் சற்று நேரம் பேசினேன். இந்தியச்சிற்பங்களைப்பற்றி. அவர் யானைத்தோல்போர்த்தி நடமிடும் சிவன் சிற்பம் பற்றிச் சொல்லி அதை சொல்லமுடியாமல் உடனே ஒரு பேனாவை வாங்கி தாளில் அப்படியே வரைந்து காட்டிவிட்டார். யானைத்தோலை பற்றியபடி நிற்கும் சிவன் பெரும்பாலான கோயில்களில் இருக்கும். சுழன்று உச்சநிலையில் கால்தூக்கி நின்றிருக்கும் சிற்பத்தையே அழகுமிகுந்ததாக அவர் சொன்னார். அந்த பரபரப்பிலும் சற்றுநேரம் பேசமுடிந்தது
கூட்டத்தில் திருமாவளவன் பேசினார். நான் இருமுறை முன்னரே சந்தித்திருக்கிறேன். என்னை அடையாளம் கண்டுகொண்டார். தமிழக அரசியல்தலைவர்களிலேயே இவர்தான் அழகானவர் என்றும் கோணங்கியிடம் சொன்னேன். ‘டேய், நானும் இப்ப இதைத்தாண்டா நினைச்சேன்’ என்றார்
மறுநாள் அறையைக் காலிசெய்துவிட்டு கே.பி.வினோத் வீட்டுக்குச் சென்று எவரிடமும் பேசாமல் அமர்ந்து மறுநாளை வெண்முரசை எழுதி அப்போதே அனுப்பினேன். தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக. நான் சென்னையில் இருப்பது தெரிந்திருந்தது. ஆனால் தொலைக்காட்சிகளில் தோன்றுவதை எப்போதும் தவிர்ப்பவன் நான். காரணம், இதுதான். நான் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்பவன். என்னை தெருவில் எவரும் அடையாளம் காண்பதை நான் விரும்புவதில்லை.
மாலையில் விமானத்தில் கோவை வந்தேன். பிரின்ஸ் கார்டன் விடுதியில் அரங்கசாமியும் செல்வேந்திரனும் இருந்தனர். விஜய்சூரியன், ஸ்டீல் சிவா ஆகியோர் வந்தார்கள். பின்னர் ஈரோட்டில் இருந்து கிருஷ்ணன். பின்னர் மேலும் நண்பர்கள். வந்ததுமே ஆரம்பித்த அரட்டை விரிந்து விரிந்து சென்றுகொண்டே இருந்தது. ஒருபோதும் எளியபேச்சாக உரையாடல் ஆகிவிடக்கூடாது, அதேசமயம் சிரிப்பும் வேடிக்கையும் இல்லாமலும் ஆகிவிடக்கூடாது, அதுவே என்னுடைய கொள்கை
இரவு இரண்டு மணிக்குத்தான் தூங்கத் தொடங்கினேன். காலை ஆறுமணிக்கே எழுந்து வியாசரைப்பற்றி அன்று மாலை நான் ஆற்றவிருந்த உரையை எழுதினேன். முன்பெல்லாம் விரிவான கட்டுரையாகவே எழுதுவது. வெண்முரசுக்குப்பின் குறிப்புகள் மட்டும்தான். கை சலிக்கிறது. வெண்முரசு ஓர் அத்தியாயம் எழுதினேன்
இரண்டு சினிமாச்சந்திப்புகள். மலையாள தயாரிப்பாளர்கள். அவர்களுக்கு பாலக்காட்டில் இருந்து அங்கே வருவது அண்மை. அவர்கள் சென்றபின் மதியம் அறைமுழுக்க நண்பர்கள். மணவாளன், விஜயராகவன். மாலை ஐந்தரைக்கு கிக்கானி மேல்நிலைப்பள்ளி அரங்கில் நிகழ்ச்சி
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி இது. பக்தி இலக்கியச் சொற்பொழிவு. பெரும்பாலும் மாபெரும் பேச்சாளர்கள் பேசுவது. ஆகவே பெருங்கூட்டம் கூடும். ஓர் அறிமுகம். அதன்பின் ‘பேருரை’தான். நான் செல்லும்போதே அரங்கு நிறைந்திருந்தது. இரண்டாயிரம்பேர் இருப்பார்கள். எனக்கு உள்ளூர நடுக்கம். ‘சார், அடுத்த காக்காக்கூட்டம்!’ என ஒருவர் ஈரோட்டை நினைவுறுத்தினார்
முதலிலேயே சொல்லிவிட்டேன், நான் ஆற்றப்போவது பக்தி உரை அல்ல என்று. முன்வரிசையில் கோவையின் பெரும்புள்ளிகள். மெல்ல ஆரம்பித்தபின் அரங்கு கூர்ந்து கவனிப்பதைக் கண்டேன். எனக்கு எப்போதுமே அது போதும். முன்வரிசை விழிகளில் கவனம். அரங்கில் ஓரிருவர் எழுந்து சென்றுகொண்டும் வந்துகொண்டும் இருப்பது, பேசுவது போன்றவை என்னை மேலே பேசவிடாமல் செய்துவிடும். தொழில்முறைப்பேச்சாளர்கள் அப்படி அல்ல. அவர்கள் எதையும் பாராமல் ‘காலத்தை’ எதிர்கொண்டு முழங்கக்கூடியவர்கள்.
மேலும் பேச்சாளர்கள் ஓரிரு விஷயங்களையே நீட்டி நெடுநேரம் பேசமுடியும். நான் செறிவாகத்தான் பேசுவேன். எனக்கே பேசப்பேச விஷயம் எழுந்து வரவேண்டும். அன்று அவ்வாறு நிகழ்ந்தது. மிகச்சிறந்த பேச்சு என்றார்கள். வியாசரைப்பற்றிய பலகோணங்களிலான ஓர் ஆய்வு அவ்வுரை
அன்றிரவு மீண்டும் விடியும்வரை உரையாடல். பின்னிரவில் தூங்கி அதிகாலையிலேயே எழுந்து காரில் விமானநிலையம் சென்றேன். விமானநிலையத்தில் வெண்முரசு சற்று எழுதினேன். விமானத்தில் எஞ்சியதை. பொதுவாக நெருக்கடியில் எழுதுவதெல்லாமே சிறப்பாக அமையும். சினத்தில் அறைந்தால் சரியாகச் சென்று விழுவதைப்போல.
வளசரவாக்கத்தில் நண்பர் தனாவின் பெரிய பங்களாவில் தங்கிப்பேச ஏற்பாடாகியிருந்தது. சுரேஷ் வந்து கூட்டிச்சென்றார். செல்லும் வழியிலேயே சைதன்யாவை கூட்டிச்சென்றோம். செல்லும்போதே பதினைந்து பேர் இருந்தனர். சென்றதுமே பேச்சுதான். பெரும்பாலும் வெண்முரசு பற்றி
அந்தப்பரபரப்புக்குள் வெண்முரசு அத்தியாயத்தை முடித்தேன். நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். கிட்டத்தட்ட விஷ்ணுபுரம் நண்பர் சந்திப்பு போலவே ஆகிவிட்டது. பெருங்கூட்டமாக சாப்பாடு. அரட்டை சிரிப்பு. கூடவே விவாதம். சைதன்யா இருந்தாள். இரவில் அஜிதன் வந்தான். இலக்கியப்பேச்சில் இருவருக்குமே போதை உண்டு. சைதன்யா இப்போது அண்ணனை மீறிச்செல்லும் பெண்ணிய வெறி கொண்டு வாசித்துக்கொண்டிருக்கிறாள்.
நள்ளிரவுக்குப்பின் தூக்கம். காலையில் ஆறு மணிக்கு எழுந்து வெண்முரசு ஓர் அத்தியாயம் எழுதினேன். நண்பர்கள் வெளியூரில் இருந்தெல்லாம் வந்து கூடினர். பூமணி வந்து விட்டார். துளசி பார்க்கில் அவருக்குப் போடப்பட்ட அறையில் தங்கவைத்தோம் என்றார் சுரேஷ். அவரது குடும்பமும் கூடவே இருந்தமையால் நண்பர்கள் அவரைச் சந்தித்து பேசமுடியவில்லை
மாலையில் பிட்டி தியாகராசர் அரங்கில் கூட்டம். கூட்டம் கூடுமா என்ற உதைப்பு இருந்தது. காரணம் புத்தகக் கண்காட்சி தொடங்கிவிட்டது. பெரும்பாலானவர்கள் சென்றாகவேண்டிய நிலை. அங்கே இரண்டு இலக்கியக் கூட்டங்கள். ஆனால் பூமணி புத்தகக் கண்காட்சிக்காக வருவதாக இருந்தது. முன்னரே வர அவர் விரும்பவில்லை. அச்சப்பட்டதுபோல் இல்லாமல் கூட்டம் வந்தது. பெரும்பாலும் நண்பர்கள்.
பூமணி பாராட்டுக்கூட்டம் இரண்டே மணிநேரத்தில் செறிவாக முடிந்தது. இந்தமுறை ஆச்சரியப்படுத்தியவர் கவிதா சொர்ணவல்லி. இயல்பான சிரிப்பும் உற்சாகமுமாக சிறப்பாக தன் வாசிப்புப் பதிவை முன்வைத்தார். மேடையில் பொய்யாக ஏதும் சொல்லாமலிருந்தாலே அப்பேச்சு அழகாக ஆகிவிடுகிறது. கவிதா சொர்ணவல்லியிடம் மேடை அச்சம் இருக்கவில்லை. பேசுவதற்கு முன்புதான் பதைத்துக்கொண்டே இருந்தார்
நண்பர் ராஜகோபாலன், சா.கந்தசாமி, யுவன் சந்திரசேகர் ஆகியோர் பேசினர். நானும் பேசினேன். பதினைந்து நிமிடம் பேசத்தான் எண்ணியிருந்தேன். ஆனால் மற்றவர்கள் சுருக்கமாக முடித்துக்கொண்டதனால் அரைமணிநேரம் பேசினேன்.
இரவில் மீண்டும் வளசரவாக்கம். அஜிதன் கடலூர் சீனு அரங்கசாமி கார்த்திக் என ஏராளமான நண்பர்கள். அன்றிரவும் தூக்கம் பின்னிரவில். மறுநாள் காலையின் வெண்முரசு ஓர் அத்தியாயத்தை முடித்துவிட்டு மணி ரத்தினத்தைச் சென்று சந்தித்தேன்
மாலையில் புத்தகக் கண்காட்சிப்பக்கம் செல்லலாமா என்ற எண்ணம் இருந்தது. ஆனால் பாரதிமணி அவரது நூலை வெளியிடவேண்டும் என்று கேட்டார். வம்சிபதிப்பகம் வெளியிட்ட புள்ளிகள் கோடுகள் கோலங்கள். நான் தொலைக்காட்சிகளில் தோன்றுவதை தவிர்ப்பவன். அதிலும் சன் டிவியில் வந்ததே இல்லை. ஆனால் பாரதிமணி என் பெருமதிப்புக்குரியவர். ஆகவே சன் டிவிக்கு சென்று நூலை வெளியிட்டேன்.
மாலையிலேயே திரும்ப நாகர்கோயிலுக்கு. ஆறுநாள் தூக்கத்தை முழுக்க ம். தூங்கிக்கொண்டே சென்றேன். இத்தனைக்கு நடுவே வெண்முரசின் கனவுதான் ஆழத்தில் இருந்துகொண்டிருக்கிறது என உணர்ந்தேன்.
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது படங்கள்
https://plus.google.com/u/0/photos/110923881849901975787/albums/6104166527710608449#photos/110923881849901975787/albums/6104166527710608449