கருத்துரிமை இருக்கவேண்டும், ஆனால் அது எவர் மனதையும் புண்படுத்தாமல் இருக்கவேண்டும் என்கிறார்கள். உலகில் எங்கும் அப்படி ஒரு கருத்து இருக்க முடியாது. கருத்துக்கள் என்பவை எப்போதுமே மாற்றுக்கருத்துக்களை உருவாக்கக் கூடியவை. மாற்றுக்கருத்துக்களை முன்வைத்து மட்டுமே அவற்றை எதிர்க்கவேண்டும்
எழுத்தாளன் சமூகத்தின் மீதான விமர்சனத்தால்தான் அவன் எழுதவே ஆரம்பிக்கிறான். அதைச் சொல்லக்கூடாது, மனம் புண்படுகிறது என்பதைப்போல அறியாமை அல்லது திமிர் வேறேதும் இல்லை.
பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி என தமிழின் அனைத்து எழுத்தாளர்களும் கடுமையான சமூக விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். அவை மிகக்கடுமையாக எதிர்விமர்சனத்திற்கும் ஆளாகியிருக்கின்றன.
நெடுங்காலமாகவே அரசியல்குழுக்களும் சாதியமைப்புகளும் எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு மிரட்டல் விடுப்பது நடந்து வருகிறது. குஷ்பு பாலியல் ஒழுக்கம் பற்றி சொன்ன ஒரு சாதாரணமான கருத்துக்காக அவர்களை தமிழ்த்தேசியம் பேசும் சாதியவாதிகள் தெருத்தெருவாக ஆபாசமாக வசைபாடி கருத்துரிமையை வாக்களிக்கும் இந்திய அரசியல் சட்டத்த்தை அவமதிக்கும் வகையில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்து வதைத்தபோது அந்தப் போக்கு ஒரு பரவலான அங்கீகாரத்தை அடைந்தது
லீனா மணிமேகலை மார்க்ஸிய ஆசிரியர்களை ஒரு கவிதையில் பகடி செய்தமைக்காக இடதுசாரி தீவிர அமைப்புகளால் அவர் தனிப்பட்ட முறையில் அவமதிக்கப்பட்டு வசைபாடப்பட்டதும் இவ்வகை வன்முறையே.
எம்.எஃப்.ஹூசெய்னுக்கு எதிராக இந்துவெறியர்கள் ஆடிய வெறியாட்டம். புதுமைப்பித்தன் சிறுகதையை சென்னை பல்கலைகழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கும்பொருட்டு தலித்துக்கள் செய்த போராட்டம், சினிமாக்களுக்கு எதிராக சீமான் போன்ற தமிழ்த்தேசிய வெறியர்கள் நிகழ்த்தும் போராட்டங்கள், இஸ்லாமிய அமைப்புகள் விஸ்வரூபம் சினிமாவுக்கு எதிராகச் செய்த போராட்டம் போன்ற அனைத்துமே தவறான முன்னுதாரணங்கள்.
இவை அனைத்துமே ஒரே சாராம்சம் கொண்டவை. எதையும் பேசும் உரிமை இங்கே அரசியல், மதக்குழுக்களுக்கு மட்டுமே உள்ளது. அக்குழுக்கள் சிந்தனையாளனை எழுத்தாளனை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளன. சென்ற பத்தாண்டுகளில் நான் இத்தகைய ஏழு மிரட்டல்களைச் சந்தித்திருக்கிறேன். தலைமறைவாக இருந்திருக்கிறேன். எனக்கு எவரும் துணைவரவில்லை.
எழுத்தாளன் தனிமனிதன். அவனை ஆதரிப்பதனால் எந்த கட்சிக்கும் அமைப்புக்கும் இலாபம் இல்லை. ஆகவே அத்தனை அரசியல் கட்சிகளும் எழுத்தாளனை எதிர்க்கின்றன. அல்லது கண்டும் காணாமல் இருக்கின்றன. பெருமாள்முருகனுக்கு எதிராக இந்துத்துவக் குழுக்கள் இருந்தன. ஆனால் ஆதரவாக எந்த அரசியல் அமைப்பும் திருச்செங்கோட்டில் களமிறங்கவில்லை
தனிமனிதனின் எழுத்து பேச்சுரிமைக்கு அரசியல் சட்டம் வாக்களிக்கிறது.ஆனால் சட்ட ஒழுங்கை பராமரிக்கிறோம் என்ற பேரில் வன்முறைக் கும்பல்களை வளர்ப்பதே அரசு அதிகாரிகள்தான். பெருமாள் முருகனை திருச்செங்கோட்டின் அதிகாரிகள் கும்பல்களிடம் இருந்து காப்பாற்றவில்லை என்பதையே அவரது விலகல் கடிதம் காட்டுகிறது
கருத்துரிமை என்பது அனுமதிக்கப்பட்டதைச் சொல்வதற்கான உரிமை அல்ல. எதையும் சொல்வதற்கான உரிமை. நினைவில் கொள்ளுங்கள்,பெண்கள் பள்ளிசென்று படிக்கவேண்டும் என்று சொன்னதற்காக அ.மாதவையா இதேபோல சாதிவிலக்கம் செய்யப்பட்டார். அவரது கனவு பலித்ததனால்தான் நாம் நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம்
எப்போதும் வெறியர்களால் மூடர்களால் வரலாறு உருவாக்கப்படுவதில்லை. மீறிச்செல்லும் சிந்தனையாளர்களால், எழுத்தாளர்களால் உருவாக்கப்படுகிறது. இந்த வேறுபாட்டை உணராத சமூகம் அழியும்
[இந்தியா டுடே இதழுக்காக எழுதியது ]