மதிப்பிற்குரிய ஜெ ,
நேற்று சென்னை புத்தகக்காட்சிக்குச் சென்றிருந்தேன்.நான் அங்கு கண்ட நிகழ்வைக் கூறவே இதை எழுதுகிறேன்.\
அனைத்து முக்கிய அரங்குகளுக்கும் சென்றேன்.நற்றிணை அரங்கில் இரண்டு கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஜெயமோகனின் அறம் வாங்கு ,அவர் இதுல நிறைய எழுதியிருக்கிறார்.அந்தப் பெண் நான் முதற்கனல் வாங்கட்டுமா என்றாள்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் வேறொரு இளைஞர் கூட்டம் வந்தது.அவர்கள் மிக சகஜமாக ரப்பர் நாவல் தான் ஜெயமோகனின் முதல் புக் ,ஏழாம் உலகம் நல்லாருக்கும் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர்.இளைஞர்களும்,இளைஞிகளும் நிறைந்த கூட்டம் அது அவர்களில் ஒரு மாணவன் ஜெ எழுதும் வெண்முரசை தினமும் படிக்கிறேன் என்றான்.இன்னொரு பெண் வெள்ளை யானை பற்றி சொன்னாள். பனிமனிதன்,ஊமைச்செந்நாய் பற்றியெல்லாம் மிகத் தெளிவாய்,விரிவாய் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் புத்தகம் வாங்கினார்களா என்று தெரியவில்லை.ஆனால் ஓரமாக நின்று அவர்கள் பேசியதைக் கேட்ட எனக்கு மனம் நெகிழ்ந்தது.இவர்களெல்லாம் இப்பொழுதே ஜெவைப் படிக்கிறார்கள் என்று மகிழ்ந்தேன்.என்னுடைய கல்லூரி நாட்களில் எனக்கெல்லாம் உங்கள் எழுத்துகள் கிடைத்ததில்லை.உண்மையில் இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
மற்ற பிரபல அரங்குகள் எங்கும் நான் இத்தகைய உரையாடல்கள் ,இலக்கிய பேச்சுகள் எதையும் கேட்கவில்லை.எல்லாரும் புத்தகங்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவ்வளவுதான்.உங்களால் உருவாகும் வாசகர்கள் பற்றி எனக்கு பெருமையாக இருந்தது.அந்த மன நிறைவுடன் இதை எழுதுகிறேன்.
நன்றி
மோனிகா.
அன்புள்ள மோனிகா
ஒவ்வொரு சந்திப்பு நிகழ்ச்சியிலும் ,கூட்டங்களிலும் நான் சந்திப்பவர்கள் அனைவரும் மிக இளம் வயதினர். என் எழுத்தை அனைவரும் வாசிக்க முடியாது. சொல்லப்போனால் தமிழின் பிற எழுத்துக்கள் வழியாக சிறிதுகாலம் கடந்து வராமல் என் படைப்புகளுக்குள் நுழைய முடியாது. அப்படியும் பலர் வந்திருப்பது நிறைவளிக்கிறது.
ஆனால் கடைசியான சந்திப்பில் ஒர் இளைஞர் நான் வெள்ளையானை வந்ததே அப்போதுதான் உங்களை வாசிக்க ஆரம்பித்தேன் என்று இறந்தகாலத்தில் சொன்னது அதிர்ச்சி அளித்தது. இரண்டாண்டுகளுக்குள்ளாகவா ஒரு நாவல் ‘வரலாறு’ ஆக மாறும் என்று கேட்டேன்
ஜெ