பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 4
அரங்கின் மறுமுனையில் அரசவீதி நோக்கி திறக்கும் பெருவாயிலுக்கு அப்பால் மக்களின் திரள்குரலும் முரசுகளின் ஓசையும் கலந்து எழுந்த முழக்கம் கேட்டு அனைவரும் திரும்பி நோக்கினர். கோட்டைமுகப்பின் பெருமுரசு கொம்புகள் இணைய முழங்கத் தொடங்கியது. அருகே இருந்த வைதிகர் அர்ஜுனனை நோக்கி “இளவரசி பட்டத்துயானைமேல் நகர்வலம் வருகிறார்கள். அரண்மனை முகப்பை அடைந்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது” என்றார்.
தருமன் திரும்பிப்பார்த்து “நகர்வலமா?” என்றான். “ஆம், இன்றுதானே இந்நகர் மக்கள் அவளை இறுதியாக காணமுடியும்? இளவரசியர் மணமுடித்தபின் தாய்வீட்டுக்குத் திரும்பி வரும் வழக்கம் ஷத்ரியரிடம் இல்லை அல்லவா?” என்றார். அறிந்த செய்தி என்றாலும் அப்போது அதை எண்ண அர்ஜுனனின் அகம் சற்று அதிர்ந்தது. திரும்பி பீமனை நோக்கிவிட்டு “ஆம், இன்றுடன் அவர் பாஞ்சாலத்திற்குரியவர் அல்ல” என்றான். “ஆம், அவர் இனி பாரதவர்ஷத்தையே வெல்லலாம். பாஞ்சாலத்தை இழந்துவிடுவார்” என்றார் வைதிகர். மீண்டும் தன்னுள் ஓர் அகநகர்வை அர்ஜுனன் உணர்ந்தான்.
”ஏழு ரதவீதிகளிலும் முழுதணிக்கோலத்தில் இளவரசி சுற்றிவரவேண்டும் என்பது முறைமை. அவர்களை குடிமக்கள் அனைவரும் இன்று பார்த்துக்கொள்ளலாம். அதற்காக அத்தனை வீதிகளிலும் மங்கலநிறைகள் அமைத்து மலர்க்குவைகளுடன் மக்கள் நின்றிருக்கிறார்கள்” வைதிகர் சொன்னார். “பாஞ்சாலத்தில் இருந்து பிறநாட்டுக்கு இளவரசியர் செல்வதில்லை. ஐங்குலங்களுக்குள்ளேயே மணமுடித்தல்தான் இங்கு வழக்கம். இளவரசி பாரதவர்ஷத்தையே ஆளக்கூடியவள் என்பதனால் துருபத மன்னர் இதை ஒருங்கமைத்திருக்கிறார்.” அவர் மேலும் பேச விழைவது தெரிந்தது. ஆனால் அர்ஜுனன் அவரை தவிர்க்க விரும்பினான். அப்போது எந்தக்குரலையும் கேட்கத் தோன்றவில்லை.
மீண்டும் அவன் விழிகள் அரசர்களின் நிரையை சுற்றிவந்தன. பெரும்பாலான அரசர்கள் அங்கு வருவதற்கு முன்னரே போட்டியில் அவர்கள் வெல்ல முடியாதென்று அறிந்திருந்தனர். வெல்லப்போவது யார் என்ற ஆவல் மட்டுமே அவர்களிடமிருந்தது. கிந்தூரத்தைக் கண்டதும் அவர்களின் எதிர்பார்ப்பு மேலும் கூர்மைகொண்டது. விழிகள் கிந்தூரத்தைத் தொட்டு பின் திரும்பி அரசரவையில் இருந்த கர்ணனையும் யாதவ கிருஷ்ணனையும் தேடிச்சென்று மீண்டன. அரசர்கள் அனைவரின் விழிகளும் கூடியிருந்த பெருந்திரளுக்குள் சுழன்று வருவதை அர்ஜுனன் கண்டான். அவன் எண்ணியதையே மெல்லிய குரலில் பீமன் சொன்னான். “அத்தனை பேரும் உன்னைத்தான் தேடுகிறார்கள் பார்த்தா!” அர்ஜுனன் தலையசைத்து புன்னகை செய்தான்.
ஜராசந்தன் இரு கால்களையும் விரித்து சாய்ந்து அமர்ந்து பெருந்தோள்கள் புடைக்க கைகளை மார்பின் மீது கட்டி ஆணவம் தெரிய நிமிர்ந்து அமர்ந்திருந்தான். ஜயத்ரதன் உடலெங்கும் பதற்றம் தெரிய சரியும் சால்வையைத் தூக்கி தோளில் போட்டபடி அமர்ந்திருக்க சிசுபாலன் தன்னருகே கர்ணன் அமர்ந்திருப்பதை உடலால் உணர்ந்தபடி விழிகளால் நோக்காது அமர்ந்திருந்தான். தன்னை முழுமையாகவே உள்ளொடுக்கி சிலையென அமர்ந்திருந்தார் சகுனி. வலியெழுந்த காலை சற்றே நீட்டி அதன்மேல் பொன்னூல் சித்திரங்கள் நிறைந்த சால்வையை போட்டிருந்தார். அருகே கணிகர் இருந்த பீடம் ஒழிந்திருப்பதாகவே தோன்றியது. அதன்மேல் போடப்பட்ட ஒரு மரவுரி போலத்தான் அவர் இருந்தார்.
துரியோதனன் ஜராசந்தனைப்போலவே கைகளை மார்பின் மேல் கட்டி கால்களை விரித்து அமர்ந்து தொடைகளை மெல்ல ஆட்டிக்கொண்டிருந்தான். அவனருகே துச்சாதனன் துரியோதனனின் நிழலென்றே தெரிந்தான். பின்பக்கம் கௌரவர்கள் துச்சாதனனின் நிழல்கள் போலிருந்தனர். ஒவ்வொருவரும் அமர்ந்திருக்கும் விதத்திலேயே அவர்களின் அகநிலை தெரிந்தது. எவர் எந்த உணர்வுடன் இருக்கிறார்கள் என்று. எவருடைய எதிரி எவர் என்று. அங்கே உடல்களே இல்லாமல் உள்ளங்கள் வந்து அமர்ந்திருப்பது போல.
அர்ஜுனன் கர்ணனை மீண்டும் நோக்கினான். கிந்தூரத்தை நோக்கிய கர்ணனின் விழிகள் முகங்களால் நிறைந்திருந்த பேரவையை சூழ்ந்து மீண்டன. மீண்டும் கிந்தூரத்தை நோக்கி திரும்பியபோது அர்ஜுனனின் விழிகளை கர்ணனின் விழிகள் சந்தித்தன. அவன் உடலில் அதிர்வறியும் நாகம் என ஓர் அசைவு நிகழ்ந்தது. அர்ஜுனன் உடலிலும் அவ்வசைவு நிகழ பீமன் திரும்பி நோக்கி “பார்த்துவிட்டானா?” என்றான். கர்ணனை நோக்கியபின் “ஆம், பார்த்துவிட்டான்” என்றான் அர்ஜுனன் புன்னகையுடன். “இத்தனை கூட்டத்தில் எப்படி பார்த்தான்?”
“உன் பார்வையால்தான்” என்றான் பீமன். ”உன் பார்வை வேல்முனை போல அவன் மேல் ஊன்றியிருந்தது. அவன் அமைதியிழந்தது அதனால்தான்.” அர்ஜுனன் “நான் யாதவனை நோக்கவே விழைகிறேன். விழிகள் கர்ணனை மட்டுமே நோக்குகின்றன” என்றான். பீமன் “அவன் அமர்ந்திருப்பதைப்போலவே நீ அமர்ந்திருக்கிறாய். இருகைகளையும் கால்முட்டுகள் மேல் ஊன்றி சற்றே முன்னால் குனிந்து” என்றான். அதன்பின்னர் அதை உணர்ந்த அர்ஜுனன் தன் கைகளை எடுத்து பின்னால் சாய்ந்து கைகளை மார்பில் கட்டிக்கொள்ள கர்ணனும் அதேபோல பின்னால் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டான். பீமன் சிரித்தபடி திரும்ப நோக்கினான். கர்ணன் பின்னால் சாய்ந்ததும் கைகளை முட்டில் வைத்து முன்னால் சாய்ந்து அமர்ந்திருந்த ஜயத்ரதன் பின்னால் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டான்.
பீமனும் அர்ஜுனனும் சேர்ந்து நகைக்க தருமன் திரும்பி “என்ன?” என்றான். பீமன் “ஒன்றுமில்லை மூத்தவரே” என்றான். “துரியோதனன் பதற்றமாக இருக்கிறான் பார்த்தா. அவன் கர்ணன் மேல் ஐயம் கொண்டிருக்கிறான். நீ வெல்லக்கூடும் என்று எண்ணுகிறான். ஆனால் கர்ணன் ஐயமே கொள்ளவில்லை” என்றான். பீமன் திரும்பி தருமனை நோக்க “கிந்தூரம் கொண்டு வைக்கப்பட்டபோது நான் கர்ணனின் முகத்தைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் முகத்திலோ உடலிலோ சற்றும் திகைப்பு எழவில்லை. முதற்கணத்துக்குப்பின் அவன் உவகை கொள்வதையே கண்டேன். இந்த வில்லை அவனன்றி எவரும் வளைக்க முடியாது என எண்ணுகிறான். அவன் வென்றுவிட்டதாகவே நம்புகிறான்” என்றான். சோர்ந்த விழிகளுடன் “பார்த்தா, நான் அவன் வெல்லக்கூடும் என அஞ்சுகிறேன்” என்றான்.
அவன் விழிகளை சந்திக்காமல் திரும்பிக்கொண்டு அர்ஜுனன் பேசாமலிருந்தான். “மந்தா, ஏதாவது நிகழாவிட்டால் கர்ணனே வெல்வான். ஐயமே இல்லை” என்றான். பீமன் ”இளையோனும் வெல்வான் மூத்தவரே” என்றான். “இல்லை. கிந்தூரம் அவை வந்தபோது நான் இவன் முகத்தையும் நோக்கினேன். இவன் உள்ளத்தில் தோன்றி அணைந்த ஐயத்தை உடலே காட்டியது.” பீமன் அர்ஜுனனை நோக்க அவன் திரும்பி நோக்காமல் ”மூத்தவரே, அந்த வில்லில் ஏதோ மந்தணப்பொறி உள்ளது. அது என்னவென்று தெரியாமல் முடிவாக ஏதும் சொல்ல முடியாது” என்றான். தருமன் எரிச்சலுடன் “அதைத்தான் நான் சொன்னேன். நீ முழு நம்பிக்கையுடன் இல்லை. அவன் நம்புகிறான்” என்றான்.
அர்ஜுனன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. அப்பால் அவையில் நகைப்பொலி எழுந்தது. தருமன் “யாரது?” என்றான். தெற்குவாயில் வழியாக வணிகர் அவையில் நுழைந்து விட்ட பலராமர் அங்கே நின்று கூவி சேவகரை அழைத்தார். துருபதன் அவரை கண்டுவிட்டு கைநீட்டி ஆணையிட அவர் மைந்தர்கள் ஜனமேஜயனும் சத்ருஞ்சயனும் ஆணையிட்டபடி முன்னால் சென்றனர். அவர்கள் பலராமரை அந்த நெரிசலில் இருந்து அழைத்து பந்தலின் ஓரமாக கொண்டுவந்து அரசரின் அவைக்குள் அழைத்துக்கொண்டனர். பலராமர் உரக்க கைநீட்டி கிருஷ்ணனை நோக்கி ஏதோ சொன்னபடி சென்று அவன் அருகே அமர்ந்துகொண்டார். அரசர் அவையில் சகுனியையும் கணிகரையும் தவிர பிறர் அவரை நோக்கி சிரித்தனர்.
ஒலி பருப்பொருள் போல பெருகி வந்து நிறைவதை அர்ஜுனன் அப்போதுதான் அறிந்தான். வாழ்த்தொலிகளும் வாத்தியஒலிகளும் இணைந்து உருவான பெருமுழக்கம் அரசவீதியில் இருந்து கிழக்குவாயில் வழியாக உள்ளே வந்தது. மாபெரும் குமிழிகளாக அது வெடித்தது. பெரும்பாறைக்கூட்டங்கள் போல ஒன்றை ஒன்று முட்டி உருண்டு வந்து உடைந்து பரவி அலையலையாக நான்கு பக்கமும் சுவர்களைச் சென்று முட்டியது. ஒலியாலேயே திரைச்சீலைகள் அதிரமுடியும் என்று அப்போதுதான் அர்ஜுனன் கண்டான். கிழக்குவாயிலினூடாக அணிப்பரத்தையர் மங்கலத்தாலங்களுடன் வண்ணங்கள் உருகி ஆறென வழிந்து வருவதுபோல வந்தனர். அவர்களுக்குப்பின்னால் பேரொலியில் முழுமையாகக் கரைந்துபோய் வெறும் அசைவுகளாகவே தெரிந்த வாத்தியங்களுடன் சூதர்கள் வந்தனர்.
அணிநிரைகள் அரங்கு நடுவே இருந்த பாதை வழியாக மணமுற்றத்தை நோக்கிச்சென்றன. அப்பால் விண்ணில் ஓர் அசைவு என தெரிந்தவள் திரௌபதி என மறுகணமே அவன் அகம் கண்டுகொண்டது. அவள் ஒளிரும் அணிகளுடன் வானில் அசைந்து நீந்தி வந்துகொண்டிருந்தாள். அவள் ஏறிவந்த பட்டத்துயானை ஒளிரும் முகபடாமும் பொற்குமிழ்கள் பதிக்கப்பட்ட மாபெரும் வெண்தந்தங்களுமாக நுழைந்து செவிகளை வீசியபடி அரங்கு நடுவே வந்து நின்றது. சில அரசர்கள் அவர்களை அறியாமலேயே இருக்கையில் எழுந்து நின்றுவிட்டனர்.
அக்காட்சியில் இருந்து சிலகணங்கள் கடந்தபின் விடுபட்டபோதுதான் அதைக் கண்ட கணங்களில் அவன் இல்லாமலிருந்தான் என்று உணர்ந்தான். நெஞ்சு அதிரும் ஒலி காதுகளில் கேட்டது. தொடர்பே அற்றதுபோல அவன் தொடை துடித்துக்கொண்டிருந்தது. முந்தைய கணத்தில் அவன் நெஞ்சில் இருந்த ‘பட்டத்து யானை’ என்ற சொல் உதிராத நீர்த்துளி போல அவன் சித்தநுனியில் நின்று தயங்கியது. ‘ஆம், பட்டத்து யானை’ என பொருளின்றி அவன் சொல்லிக்கொண்டபோது தன்னை உணர்ந்து பெருமூச்சுடன் சூழலை உணர்ந்தான். அவன் உடலில் இருந்தும் அந்தக் கணம் விலக தோள்கள் தளர்ந்தன.
”கருமுகில் மேல் கருநிறத்தில் சூரியன் எழுந்ததுபோல” என்று ஒரு பிராமணன் சொன்னதைக் கேட்டபோது பொருள்திரளாத நோக்குடன் திரும்பிவிட்டு மறுகணம் சினம் பற்றி எரியப்பெற்றான். மூடன், முழுமூடன். எங்கோ கற்ற வீண்மொழி ஒன்றை அத்தருணம் மீது போடுகிறான். மேலும் ஒரு கவிக்கூற்றை அவன் சொன்னான் என்றால் அவன் தலையை பிளக்கவேண்டும். எத்தனை எளிய சொற்கள். ஆனால் மீண்டும் அவளை நோக்கியபோது அவள் அப்படித்தான் தெரிந்தாள். பெண் சூரியன். அசைவுகளில் அவள் அணிந்திருந்த வைரங்கள் கதிர்கள் என சுடர்விட்டன.
வாழ்த்தொலிகள் பொங்கி எழுந்து அடங்கி மீண்டும் பொங்கின. அரங்கு முழுக்க களிவெறி நிறைந்த விழிகள், கூச்சலில் திறந்த வாய்கள், அசைந்துசுழலும் கைகள். யானை பின்னங்கால்களை மடித்து முன்னங்கால்களை நீட்டி தாழ்ந்து அமர்ந்தது. அவள் அதன் முன்னங்கால் மடிப்பில் மிதித்து கீழே இறங்கினாள். இரு சேடியர் அவளை அணுகி இருபக்கமும் நின்று அவள் மேலாடை நுனியை பற்றிக்கொண்டனர். பட்டத்துயானைக்குப் பின்னால் மணிகள் ஒளிவிட்ட வெண்புரவியில் வெண்ணிறத் தலைப்பாகையும் வெண்மணிக் குண்டலங்களும் ஒளிரும் பொற்கச்சையுமாக வந்த திருஷ்டத்யும்னன் இறங்கி அவளருகே வந்து அவள் வலக்கையைப் பற்றி அரங்கு நடுவே அழைத்துவந்தான்.
மணமுற்றத்தில் அரசனின் அருகே நின்றிருந்த பாஞ்சால இளவரசர்கள் மூன்றடி எடுத்து முன் வைத்து அவளை வரவேற்றார்கள். திருஷ்டத்யும்னன் அவளை கைபற்றி வேள்வி மேடைக்கு கொண்டுசென்றான். அவள் குனிந்து மூன்று எரிகுளங்களையும் வணங்கினாள். வைதிகர் எரிகுளத்துச் சாம்பலை துளி தொட்டு அவள் நெற்றியில் அணிவித்தனர். அரியணையில் அமர்ந்திருந்த துருபதனையும் அரசியரையும் முறைப்படி வணங்கி வாழ்த்து பெற்றாள். சத்யஜித்தையும் உடன்பிறந்த மூத்தவர்களையும் வணங்கிவிட்டு திரும்பி மூன்று பக்கமும் நோக்கி அவையை வணங்கினாள். அவையில் எழுந்த வாழ்த்துரைகளுக்கு தலை தாழ்த்தியபின் பின்னகர்ந்து நின்றாள்.
மங்கல இசை முழங்க திருஷ்டத்யும்னன் அவளை கைபற்றி அழைத்துச்சென்று மேடையில் இடப்பட்டிருந்த செம்பட்டுப்பீடத்தில் அமரச்செய்தான். இரு அணிச்சேடியரும் அவளுக்கு இருபக்கமும் துணை நிற்க அவன் அவளருகே நின்றான். கோல்காரன் எழுந்து கைகாட்ட இசை அவிந்தது. வாழ்த்தொலிகள் அடங்கி அவை விழிகளாக மாறியது. கோல்காரன் தன் வெள்ளிக்கோலை மேலே தூக்கி ”அவை அமர்ந்த அரசர்களே, பெருங்குலத்து மூத்தோரே, குடியீரே, அனைவரையும் பாஞ்சாலத்தின் மூதாதையரின் சொல் வாழ்த்துகிறது. இன்று இந்த மணமங்கல அவையின் பதினாறாவது விழவுநாள். எட்டு விண்மீன்களும் முழுமைகொண்டு முயங்கிய மைத்ரம் என்னும் விண்தருணம். இச்சபையில் பாஞ்சாலத்து இளவரசியின் மணத்தன்னேற்பு நிகழ்வு இப்போது தொடங்கவிருக்கிறது. தொல்நெறிகளின்படி இம்மணநிகழ்வு முழுமைபெறும். இளவரசியை மாமங்கலையாகக் காண விண்ணில் கனிந்த விழிகளுடன் வந்து நின்றிருக்கும் அன்னையரை வணங்குகிறேன். அவர்கள் அருள் திகழ்க!” என்றான்.
திருஷ்டத்யும்னன் பாஞ்சாலியிடம் குனிந்து ஏதோ சொல்ல அவள் அவனை நோக்கி புன்னகை செய்தாள். பீமன் அர்ஜுனனிடம் “அவள் இங்கில்லை பார்த்தா. அணங்குகொண்டவள் போலிருக்கிறாள்” என்றான். தருமன் புன்னகையுடன் “சுயம்வரம்தான் இவ்வுலகில் பெண்ணுக்கு அளிக்கப்படும் உச்சநிலை வாழ்த்து. சூதில் ஒரே ஒரு கணத்தில் அனைத்தையும் முடிவுசெய்வதாக பகடை மாறிவிடுகிறது. அப்போது அதில் ஆயிரம் கரங்களுடன் ஊழின் பெருந்தெய்வம் வந்து குடியேறுகிறது” என்றான். அர்ஜுனன் அச்சொற்களைக் கேட்டாலும் பொருள்கொள்ளாதவனாக திரௌபதியை நோக்கிக்கொண்டிருந்தான்.
அரசர் அவையில் எவரும் எழவில்லை. அவை நிறைந்திருந்த பல்லாயிரம் விழிகளும் அவர்கள் மேல் பதிந்திருக்க அதை உணர்ந்தமையால் சிலிர்த்த உடல்களுடன் அசைவில்லாது அமர்ந்திருந்தனர். எவருமே கிந்தூரத்தை நோக்கவில்லை என்பதை அர்ஜுனன் கண்டான். அது அங்கில்லாதது போல வேறெதையோ தீவிரமாக எண்ணி விடைகாணமுடியாதவர்கள் போல அவர்கள் முகத்தோற்றம் கொண்டிருந்தனர். காம்போஜ மன்னன் சுதட்சிணன் சரிந்த சால்வையை சற்று முன்னால் குனிந்து எடுத்தான். அவ்வசைவில் அனிச்சையாக அத்தனை அரசர்களும் அவனை நோக்கித்திரும்ப அவையின் அனைத்துவிழிகளும் அவனை நோக்கின. அவை மெல்லிய ஓசை ஒன்றை எழுப்பியது.
அந்த மாபெரும் பார்வையை உணர்ந்து திகைத்து இருபக்கமும் நோக்கிய சுதட்சிணன் அதை மேலும் தாளமுடியாதவனாக எழுந்து நடுங்கும் கால்களை நிலத்தில் அழுந்த ஊன்றி சால்வையை எடுத்து உடலில் சுற்றிக்கொண்டு முன்னால் நடந்தான். மணமேடையின் இடப்பக்கம் நின்றிருந்த சூதர்கள் முழவுகளையும் கொம்புகளையும் இசைத்து அவனை வரவேற்றனர். அவன் நிமிர்ந்த தலையுடன் மேலே சென்று துருபதனுக்கு தலைவணங்கி அவையை நோக்கி மீண்டும் ஒருமுறை வணங்கிவிட்டு கிந்தூரத்தை அணுகினான். அவன் உள்ளூர நடுங்கிக்கொண்டிருப்பதை அத்தனை தொலைவிலேயே அர்ஜுனனால் நோக்க முடிந்தது.
சுதட்சிணன் குனிந்து கிந்தூரத்தின் மையத்தைப் பற்றி அதை தூக்கினான். அது அசைக்கமுடியாதபடி எடைகொண்டிருக்கும் என அனைவரையும்போல அவனும் எண்ணியிருந்தமையால் அதை முழு ஆற்றலையும் செலுத்தி தூக்க அது சற்று எளிதாக மேலெழுந்ததும் தடுமாறி பின்னகர்ந்தான். இடக்காலை பின்னால் நீட்டி சற்றே கால்மடித்து நின்று நிலைகொண்டபின் அதை கைகளில் பிடித்துக்கொண்டான். கீழே சுருண்டுகிடந்த அதன் நாணை எடுக்கக் குனிவதற்குள் அது துள்ளி மறுபக்கமாக வளைந்து அவனைத் தூக்கி பின்னால் தள்ளியது. அவன் மல்லாந்து புழுதியில் விழ அவன்மேல் வில் விழுந்தது.
அவையில் வியப்பொலியும் பின் மெல்லிய நகைப்பொலிகளும் எழுந்தன. கைகளை ஊன்றி எழுந்த சுதட்சிணன் கிந்தூரத்தை அச்சத்துடன் நோக்கிவிட்டு தலைகுனிந்து தன் பீடம் நோக்கி சென்றான். அக்கணமே அவையிலிருந்து இன்னொருவன் எழுந்தான். அவனை திருஷ்டத்யும்னன் தன் தமக்கைக்கு அறிமுகம் செய்துவைத்தான். முன்னால் அமர்ந்திருந்த வைதிகர் திரும்பி தருமனிடம் “அவர் ஹ்ருதீகரின் புதல்வராகிய கிருதவர்மன். அவர் அக்னிவேசரின் மாணவர். வில்தேர்ந்தவர்” என்றார்.
கிருதவர்மனும் வில்லை தூக்கினான். நாணையும் கையில் எடுத்தான். அதைப்பூட்டுவதற்குள் கிந்தூரம் துள்ளி அவனை தூக்கி வீசியது. அவன் கீழே விழ வில் மேலுமொருமுறை நின்று அதிர்ந்து மறுபக்கம் விழுந்தது. “சேணமறியாத இளம்புரவி போலிருக்கிறது…” என்றான் ஒரு வைதிகன். “அது வெறும் வில் அல்ல. அதற்குள் ஏதோ மலைத்தெய்வம் வாழ்கிறது. அதைவெல்லாமல் அவ்வில்லை பூட்டமுடியாது” என்றான் இன்னொருவன். பூருவம்சத்து திருடதன்வாவும் அதனால் தூக்கிவீசப்பட்டான். மேலும் மேலும் ஷத்ரியர் எழுந்து வந்து அதை எடுத்துப்பூட்ட முயன்று மதம் கொண்ட எருதின் கொம்பால் முட்டப்பட்டவர்கள் போல தெறித்து விழுந்தனர்.
மாத்ரநாட்டு சல்லியன் எழுந்து தன் நீண்ட பெருங்கரங்களைப் பிணைத்து நீட்டியபடி நீளடி எடுத்துவைத்து மணமுற்றம் நோக்கிச்செல்ல பீமன் திரும்பி அர்ஜுனனை நோக்கினான். “மூத்தவரே, அதனுள் உள்ள பொறி மிக நுட்பமானது. முற்றிலும் வெல்லமுடியாதது என்பது தெரிந்தால் எவரும் அணுகமாட்டார்கள். அது முதலில் தன்னைத் தூக்கவும் ஏந்தவும் இடமளிக்கிறது. அதை நோக்குபவர்கள் வென்றுவிடலாம் என்ற எண்ணத்தை அடையச்செய்கிறது” என்றான். தருமன் புன்னகைத்து தாடியை நீவியபடி “மிகச்சிறந்த சூதாடி எப்போதுமே முதல் ஆட்டத்தை எதிரிக்கு அளிப்பான்…” என்றான்.
சல்லியன் கிந்தூரத்தை தூக்கி நிலைநாட்டி தன் இடக்கால் கட்டைவிரலால் அதன் கீழ்நுனியை பற்றியபடி வலக்கையால் அதன் மையத்தைப்பிடித்து நிறுத்திக்கொண்டு இடக்கையால் நாணை பற்றிக்கொண்டு தன் முழுதுடலாலும் அந்த வில்லை உணர்ந்தபடி சிலகணங்கள் அசைவற்று நின்றார். அவருடன் அவையும் சிந்தை அசைவிழந்து காத்து நின்றது. எச்சரிக்கை கொண்ட நாகம் போல சல்லியனின் இடக்கை நாணை வில்லின் மேல் நுனி நோக்கிக் கொண்டு சென்றது. எதிர்நோக்காத கணம் ஒன்றில் அவரது வலக்கால் வில்லின் நடுவளைவை மிதித்து அதை வளைக்க இடக்கை நாணை எடுத்து மேல்நுனிக்கொக்கியில் வீசி இழுத்தது. வண்டு முரளும் ஒலியுடன் வில் வளைந்து நாணை அணிந்துகொண்டது.
அவையில் வியப்பொலி முழங்க கையைவிட்டு வில்லை சற்றே அசைப்பதற்குள் வில் உலோக ஒலியுடன் முற்றிலும் நிமிர்ந்து நாணை அறுத்துக்கொண்டு அவர் கையில் சுழன்று தலைகீழாகி அவரை சுழற்றித்தள்ளியது, சல்லியன் காலை ஊன்றி விழாமல் நின்ற கணம் வில்லில் இருந்து தெறித்த நாண் அவர் தோளை ஓங்கி அடித்தது. அவர் அதை பிடித்துக்கொண்டாரென்றாலும் அந்த அடியில் அவர் தோளின் தசை கிழிந்து குருதி தெறித்தது. வில் குழைந்து கீழே விழ அவர் அதை பிடிக்க முயன்றபோது அதன் ஒரு முனை மேலெழுந்து மறுமுனை அவர் காலை அடித்தது. அவர் அதை விட்டுவிட்டு பின்னகர்ந்து குருதி வழிந்த தன் தோளை அழுத்திக்கொண்டு திகைப்புடன் நோக்கினார். அறுபட்ட நாகம் போல அது துள்ளிக்கொண்டிருந்தது.
“அதற்குள் விசைப்பொறி இருக்கிறது…” என்றான் அர்ஜுனன். “நாம் அதற்குக் கொடுக்கும் விசையை அது வாங்கிக்கொண்டு செயல்படுகிறது. ஆகவேதான் ஒவ்வொருவரையும் ஒவ்வொருமுறையில் வீழ்த்துகிறது. இன்னொருவரை அது வீழ்த்திய முறையைக் கொண்டு நாம் அதை புரிந்துகொண்டதாக எண்ணக்கூடாது.” பீமன் “அந்தப் பொறியை அறியாமல் அதை அணுகுவதில் பொருளில்லை” என்றான். அர்ஜுனன் “ஆம் மூத்தவரே, மேலும் மேலும் அரசர்கள் அதன்முன் தோற்கும்போது அதன் சூது புலப்படக்கூடும்” என்றான்.
ஜராசந்தன் எழுந்து சால்வையை பின்னால் சரித்து பெருந்தோள்களை விரித்து யானைநடையுடன் மணமுற்றம் நோக்கி சென்றான். சூதர்களின் வரவேற்பிசை அவன் கிந்தூரத்தை அணுகியதும் நின்றது. கிந்தூரத்தை நோக்கியபடி அவன் சில கணங்கள் அசைவற்று நின்றான். அவையில் வீசிய காற்றில் அவன் செந்நிறமான குழல் நாணல்பூ போல அசைந்தது. மிக மெல்ல குனிந்து வில்லை நடுவே வலக்கையால் பற்றி எளிதாகவே எடுத்தான். அதன் கீழ் நுனியை வலக்காலால் அழுந்த மிதித்து கையால் நடுவே பற்றி இறுக்கி வளைத்தான். வில் எழுப்பிய முனகல் ஓசை அவை முழுக்க கேட்டது.
அர்ஜுனன் திரௌபதியின் விழிகளை நோக்கினான். அவள் எதையும் பார்க்காதவளாக அமர்ந்திருந்தாள். ஜராசந்தன் கிந்தூரத்தின் நாணை இடக்கையில் எடுத்து மேல் வளைவின் முதல் கொக்கியை நோக்கி நீட்டுவதற்குள் அது அவன் வலக்காலை தட்டி விட்டபடி மண்ணிலிருந்து எழும் பருந்து போல விம் என்ற ஒலியுடன் துள்ளி அவன் தலைக்குமேல் விரிந்தது. அவன் அதை பிடிக்கச்செல்ல நிலைகுலைந்து மண்ணில் விழுந்தான். அவனுடைய பேருடல் மண்ணை அறைந்த ஒலியை அர்ஜுனன் கேட்டான். அவையெங்கும் மெல்லிய நகைப்பொலி எழுந்தது. அவன் அனிச்சையாகத் திரும்பி திரௌபதியை நோக்கினான். அவளது எதையும் பாராத விழிகள் அவ்வண்ணமே இருந்தன.
ஓர் எண்ணம் அவனுள் எழுந்தது. அவளுக்குத் தெரியும், எவர் வெல்வார் என. ஜராசந்தனை அவள் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. அரைக்கணம் கூட அவனையோ வில்லையோ நோக்கவில்லை. அவன் அவள் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் விழுந்ததை அவள் முன்னரே அறிந்தவள் போலிருந்தாள்.
துரியோதனன் எழுந்து மாதுலரை வணங்கிவிட்டு மணமுற்றம் நோக்கி வந்தபோதும் அவள் விழிகள் அவனை நோக்கவில்லை. துரியோதனனை திரும்பி நோக்கியபோது அவன் அதை அறிவான் என்பதை அர்ஜுனன் உணர்ந்தான். அவன் திமிர்த்த பெருநடையில் வந்துகொண்டிருந்தபோதும் விழிகள் அவளையே நோக்கிக்கொண்டிருந்தன. முற்றத்தை அணுகியதும் அவள் தன்னை சற்றும் பொருட்படுத்தவில்லை என்று அவனுக்கு புரிந்துவிட்டது, மிகமெல்லிய ஒரு தயக்கம் அவன் கால்களில், உடலில் தெரிந்தது. அத்தனை சிறிய உளநகர்வை எப்படி உடல் காட்டுகிறது? அதை எப்படி அத்தனை தொலைவில் அறியமுடிகிறது?
ஏனென்றால் அந்த மணமுற்றத்தில் வந்து நிற்கும் ஒவ்வொருவராகவும் அவனே நடித்துக்கொண்டிருக்கிறான். மீண்டும் மீண்டும் வந்து தூக்கி வீசப்படுகிறான். துரியோதனன் மேல் வந்த இரக்கத்தை அவனே வியப்புடன் எண்ணிக்கொண்டான். கிந்தூரம் அவனை தூக்கி வீச அவன் மல்லாந்து மண்ணில் விழுந்து சினத்துடன் ஓங்கி தரையை கையால் அறைந்தபடி எழுந்துகொண்டான். கைகளை ஒன்றுடன் ஒன்று தட்டியபடி உடலெங்கும் தசைகள் கொப்பளித்து அசைய மூச்சிரைத்தபடி நின்றான். தன் முழு அக ஆற்றலாலும் சினத்தை அவன் அடக்கிக் கொள்வதை காணமுடிந்தது. பின்னர் பெருமூச்சுடன் தோள்களை தளர்த்தினான். தலைகுனிந்து நடந்து விலகினான். அவன் தன் முழு உடலாலும் திரௌபதியை உணர்ந்துகொண்டிருக்கிறான் என அர்ஜுனன் உணர்ந்தான்.
சேதிநாட்டரசன் சிசுபாலன் வில்லை நாணேற்றிவிட்டான். அதை தூக்கி அந்த நீர்த்தொட்டி நோக்கி சென்று நிறுத்தி அம்பு பூட்டும்போது தூக்கி வீசப்பட்டான். சிந்து தேசத்து அரசன் ஜயத்ரதன் வந்தபோது அவை எங்கும் எதிர்பார்ப்பின் ஒலி ரீங்கரித்தது. அவன் வந்து அவையை வணங்கி கிந்தூரத்தை எடுத்து நாணேற்றி கையில் ஏந்திக்கொண்டான். அவையில் திகைப்பும் பின் எதிர்பார்ப்பும் எழுந்தது. அர்ஜுனன் திரௌபதியின் விழிகளை நோக்கினான். அவள் இமைகள் பாதி சரிந்திருந்தன.
ஜயத்ரதன் வில்லுடன் சென்று நின்றான். மூச்சிரைக்க நின்று தன்னை அமைதிப்படுத்திக்கொண்டு அம்பை நாணேற்றினான். வில் அவன் தலைக்குமேல் புடைத்து விம்மும் பாய்மரங்களை ஏந்திய கொடிமரம் போல நின்று அதிர்ந்தது. அவன் எய்த அம்பு மேலெழுந்து கிளிக்கூண்டை அடைந்தது. அடுத்த அம்பை எடுக்க அவன் திரும்பிய கணம் அவன் வில்லின் கீழ்நுனியை மிதித்திருந்த காலின் வலு விலக வில் அவனை தூக்கி அடித்தது. அவை எங்கும் அவனை பாராட்டுவதுபோன்ற ஒலிகள் எழுந்தன. ஒரு வைதிகன் “இந்த வில்லை எவனும் பூட்டிவிடமுடியாது” என்றான்.
பீமன் திரும்பி அர்ஜுனனிடம் “பார்த்தா, அந்த வில் அவள் அகம். அவளை அறியாமல் அதை வெல்ல முடியாது” என்றான். தான் எண்ணிக்கொண்டிருந்ததையே சொற்களாகக் கேட்டு அர்ஜுனன் திகைத்து திரும்பிப்பார்த்தான். ”எவர் வெல்வதென்று அவள் முடிவெடுக்கிறாள்… ” என்றான் பீமன். அர்ஜுனன் “ஆம் மூத்தவரே” என்றான்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்