‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 83

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 3

பாஞ்சால அரசி பிருஷதி இரவெல்லாம் துயிலவில்லை. ஐந்து அன்னையரின் ஆலயங்களிலும் வழிபட்டு மீண்டதுமே திரௌபதி தன் மஞ்சத்தறைக்குச் சென்று நீராடி ஆடைமாற்றி துயில்கொள்ளலானாள். பிருஷதியைக் காத்து யவனத்துப் பொலன்வணிகரும் பீதர்நாட்டு அணிவணிகரும் கலிங்கக் கூறைவணிகரும் காத்திருந்தனர். நாலைந்துமாதங்களாகவே அவள் பொன்னும் மணியும் துணியுமாக வாங்கிக்கொண்டிருந்தாலும் மணமங்கல நாள் நெருங்க நெருங்க அவை போதவில்லை என்ற பதற்றத்தையே அடைந்தாள். அவள் தவறவிட்ட சில எங்கோ உள்ளன என்று எண்ணினாள். மேலும் மேலும் என அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

பீதர்களின் மரகதக்குவைகள் அவளுக்கு அகக்கிளர்ச்சியை அளித்தன. ஆடகப்பசும்பொன்னை கையால் அளைய அளைய நெஞ்சு பொங்கிக்கொண்டே இருந்தது. இரவு நீள நீள சேடியர் வந்து அவள் அருகே நின்று தவித்தனர். அவள் ஆணைக்காக அந்தப்புரமே காத்திருந்தது. அவள் ஓரக்கண்ணால் தன்னருகே நின்ற சேடியை நோக்கி திரும்பி “என்னடி?” என்றாள். “மங்கலப்பரத்தையர் நூற்றுவர் அணிசெய்து வந்திருக்கிறார்கள். அரசி ஒரு முறை நோக்கினால் நன்று.” கடும் சினத்துடன் “அதையும் நானேதான் செய்யவேண்டுமா? இங்கு நீங்களெல்லாம் என்ன செய்கிறீர்கள்?” என்றாள் பிருஷதி. சேடி ஒன்றும் சொல்லவில்லை.

சற்று தணிந்து “சரி, நான் வருகிறேன். அவர்களை சற்று காத்திருக்கச் சொல்” என்றாள். கலிங்க வணிகர்களிடம் “மீன்சிறைப் பட்டு என ஒன்று உள்ளதாமே… அது இல்லையா?” என்றாள். நீல நிறமான பெரிய தலைப்பாகையும் நீலக்குண்டலங்களும் அணிந்த கரிய நிறமான கலிங்க வணிகன் புன்னகை செய்து “அரசி, சற்று முன் நீங்கள் மதுகரபக்ஷம் என்று சொல்லி வாங்கிக்கொண்ட பட்டைத்தான் அப்படி கூறுகிறார்கள்” என்றார். பிருஷதி “அது எனக்குத்தெரியும். மீன்சிறைப்பட்டு என்பது திருப்பினால் வானவில் தெரியவேண்டும்“ என்றாள். “அரசி, மதுகரபக்ஷமும் அப்படித்தான். வானவில் தெரியும்.”

பிருஷதி அப்படியே பேச்சை விட்டுவிட்டு திரும்பி “அவர்களை வந்து நிற்கச்சொல்” என்று ஆணையிட்டுவிட்டு “நான் எடுத்தவற்றை முழுக்க உள்ளே கொண்டு வையுங்கள்” என சேடியருக்கு ஆணையிட்டாள். எழுந்து புறக்கூடத்திற்கு சென்றாள். அவள் காலடியோசை கேட்டு அங்கே பேச்சொலிகள் அடங்குவதை கவனித்தபடி  நிமிர்ந்த தலையுடன் சென்று நோக்கினாள். நூற்றெட்டு மங்கலப்பரத்தையரும் முழுதணிக்கோலத்தில் நின்றனர். அழகியரை மட்டுமே தேர்ந்து நிறுத்தியிருந்தாள் செயலிகை. அவர்களைக் கண்டதுமே முதற்கணம் அவளுக்குள் எழுந்தது கடும் சினம்தான்.

“ஏன் இவர்கள் இத்தனை சுண்ணத்தை பூசிக்கொண்டிருக்கிறார்கள்? எத்தனை முறை சொன்னேன், நறுஞ்சுண்ணம் குறைவாகப்போதும் என்று. சுண்ணம் இடிக்கும் பணிப்பெண்கள் போலிருக்கிறார்கள்… “ என்றாள். செயலிகை “குறைக்கச் சொல்கிறேன் அரசி” என்றாள். “இவள் என்ன இந்த மணிமாலைகளை எங்காவது திருடிவந்தாளா? இப்படியா அள்ளி சுற்றுவது? முள் மரத்தில் கொடி படர்ந்தது போல் இருக்கிறாள்…” செயலிகை “அவளை சீர்செய்ய ஆணையிடுகிறேன் அரசி” என்றாள்.

அத்தனை விழிகளிலும் உள்ளடங்கிய ஒரு நகைப்பு இருப்பதாக பிருஷதிக்கு தோன்றியது. அவள் உள்ளே வருவதற்கு முன் அவர்களெல்லாம் சிரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். அச்சிரிப்பு தன்னைப்பற்றித்தான். தன் பெரிய உடலைப்பற்றியதாக இருக்கலாம். தளர்ந்த நடையைப்பற்றியதாக இருக்கலாம். இளமையில் அவளும் இவர்களைப்போல கொடியுடலுடன்தான் இருந்தாள். அந்தப்புரத்தில் எவரானாலும் உடல்பெருக்காமல் இருக்க முடியாது. ஒவ்வொருநாளும் இந்த மூடப்பெண்களுடன் அல்லாடினால் உடல் வீங்காமல் என்ன செய்யும்? செயலிகை மானினியின் விழிகளில் கூட சிரிப்பு இருந்ததோ?

பிருஷதி சினத்துடன் “அனைவரும் கேளுங்கள்! அணிவலத்தில் எவரேனும் ஒருவரோடு ஒருவர் பேசியதாகத் தெரிந்தால் மறுநாளே மீன்வால் சவுக்கால் அடிக்க ஆணையிட்டுவிடுவேன். இரக்கமே காட்டமாட்டேன்” என்றாள். வெறுப்புடன் ஒவ்வொரு முகமாக நோக்கியபின் “இந்த நாட்டில் அழகான பெண்களே இல்லை. பொன்னும் பட்டும் போட்ட குரங்குகளை நிரை நிறுத்தியதுபோலிருக்கிறீர்கள்… எனக்கு வேறுவழி இல்லை” என்றாள். செயலிகை “எவரையேனும் பிடிக்கவில்லை என்றால் ஆணையிடுங்கள் அரசி… அகற்றிவிடுகிறேன்” என்றாள். “நூற்றெட்டு பேரையும் அகற்றச் சொன்னால் செய்ய முடியுமா?” என்றாள். செயலிகை வெறுமனே நின்றாள்.

“காலையில் அத்தனைபேரும் புதியதாக விழித்தெழுந்தவர்கள் போலிருக்கவேண்டும். அமர்ந்து துயின்றீர்கள் என்றால் முகத்தில் தமக்கைதேவியின் வெறுமை தெரியும்…” என்றபின் “நீதான் பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படியே இவர்கள் இங்கே நின்றிருக்கட்டும்” என்றாள். “விடிவதற்கு இன்னும் சற்றுநேரம்தான் அரசி. துயிலாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் மானினி. நிறைவின்மையுடன் முகத்தைச் சுருக்கி அவர்களை நோக்கியபின் “உன்னிடம் ஒப்படைக்கிறேன்…” என்றாள்.

பிருஷதி மீண்டும் அணிவணிகர்களிடம் வந்தபோது அவர்கள் அவளை முதல்முறையாக பார்ப்பவர்கள் போல முகம் மலர்ந்து பரபரப்பு கொண்டு “வருக அரசி… புதிய மணிகளை இப்போதுதான் தெரிவுசெய்து வைத்தேன்… இவற்றை சமுத்ராக்ஷங்கள் என்கிறார்கள். கடலரசன் தன் பார்வையை இவற்றில் குடிகொள்ளச் செய்திருக்கிறான். இவற்றை சூடுபவர்கள் ஆழியின் அமைதியை அகத்தில் அறிவார்கள். சக்ரவர்த்திகள் அணியவேண்டிய மணி…” என்றார் முதியபீதர்.

பிருஷதி சலிப்புடன் அமர்ந்துகொண்டு அவற்றை நோக்கியபடி “அரண்மனைக் கருவூலமே உங்களிடம் வந்துகொண்டிருக்கிறது. இவை எங்கேனும் உதிர்ந்து குவிந்திருக்கின்றனவோ யார் கண்டது?” என்றபடி அவற்றை கையில் வாங்கிப்பார்த்தாள். ஒவ்வொன்றாக அள்ளி நோக்கிக் கொண்டிருந்தபோது அவளுக்குள் ஏதோ ஒன்று நிகழ்ந்தது. ஒரேகணத்தில் அவையனைத்திலும் அவள் ஆர்வத்தை இழந்தாள். அதை அவளே உணர்ந்து திகைத்தாள். உண்மையாகவா என அவள் அகம் மீள மீள நோக்கிக் கொண்டது. உண்மையிலேயே அவள் உள்ளம் அவற்றை விட்டு முழுமையாக விலகிவிட்டிருந்தது. வயிறு நிறைந்தபின் உணவை பார்ப்பதுபோல.

அவள் வேண்டுமென்றே மணிகளை அள்ளி நோக்கினாள். வண்ணக்கூழாங்கற்கள். பயனற்றவை, பொருளற்றவை. உள்ளம் விலகியதுமே அவற்றின் ஒளியும் குறைந்துவிட்டது போலிருந்தது. அவள் மெல்ல எழுந்துகொண்டு செயலிகை மானினியிடம் “இவர்களிடம் வாங்கியவற்றுக்கு விலைகொடுத்தனுப்பு” என்றாள். உடலின் எடை முழுக்க கால்களில் அமைந்ததுபோல் உணர்ந்தாள். அப்படியே சென்று படுத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. என்ன ஆயிற்று தனக்கு என அவள் அகத்தின் ஒரு முனை வியந்துகொண்டே இருந்தது.

தன் அறைக்குச்சென்று படுக்கையில் அமர்ந்துகொண்டு கால்களைத் தூக்கி மேலே வைத்தாள். அறையை அவள் சிலநாட்களுக்கு முன்புதான் முழுமையாகவே அணிசெய்திருந்தாள். புதிய மரவுரி விரிக்கப்பட்ட தரை. புத்தம்புதிய திரைகள். பொன்னென துலக்கப்பட்ட விளக்குகள். நீலத்தடாகம் போன்ற ஆடிகள். ஆனால் அனைத்தும் முழுமையாகவே அழகை இழந்துவிட்டிருந்தன. மிகப்பழகிய வெறுமை ஒன்று அங்கே நிறைந்திருந்தது. ஒவ்வொன்றிலும் அந்த வெறுமையை உணரமுடிந்தது. சித்திரச்சுவர்கள் வண்ணத்திரைச்சீலைகள் அனைத்தும் பொலிவிழந்திருந்தன. சுடர்கள் கூட ஒளியிழந்திருந்தன.

பிருஷதி இயல்பாக அழத்தொடங்கினாள். கண்ணீர் வழிந்து கன்னங்களின் வெம்மையை உணர்ந்ததுமே ஏன் அழுகிறேன் என அவள் உள்ளம் வியந்தது. ஆனால் அழுந்தோறும் அவள் வெறுமை மிகுந்து வந்தது. அவளுடைய விசும்பல் ஓசையை அவளே கேட்டபோது நெஞ்சு உடையும்படி கடுந்துயர் எழுந்தது. தலையில் அறைந்து கூவி அலறினால் மட்டுமே அதை கரைத்தழிக்க முடியும் என்பதுபோல, வெறிகொண்டு சுவரில் தலையை மோதி உடைத்தால் மட்டுமே நிறையழிந்து நிலைகொள்ள முடியும் என்பதுபோல.

காலையோசை கேட்டதும் அவள் கண்ணீரை துடைத்துக்கொண்டாள். ஆனால் நெடுநேரம் அழுதுகொண்டிருந்தமையால் கண்கள் சிவந்து மூக்கு கனிந்திருந்தது. மானினி வந்து ”முதற்சாமம் ஆகிறது அரசி” என்றாள். “எனக்கு சற்று தலைவலிக்கிறது” என்றாள் பிருஷதி. இதை இவளிடம் ஏன் சொல்கிறேன், இவளை ஏன் நான் நிறைவுகொள்ளச்செய்யவேண்டும்? “கிருஷ்ணை எழுந்துவிட்டாளா?” மானினி “ரூபதையிடம் இளவரசியை எழுப்ப ஆணையிட்டுவிட்டேன்” என்றாள். “ஆம், நேரமாகிறது” என பிருஷதி முகத்தை மீண்டும் ஒருமுறை துடைத்துக்கொண்டாள். “தாங்கள் நீராடலாமே?” என்றாள் மானினி. பிருஷதி “ஆம், அதற்கு முன் நான் அவளை நோக்கிவிட்டு வருகிறேன்…” என்றாள்.

நீராட்டறைக்குள் பேச்சொலிகள் கேட்டன. சேடி ஒருத்தி அவளை எதிர்கொண்டு “வருக அரசி… இளவரசி நீராடுகிறார்கள்” என்றாள். “என்னை அறிவி” என்றதும் தலைவணங்கி உள்ளே சென்றாள். அவள் மீண்டு வந்து தலைவணங்கியதும் பிருஷதி மணிகள் கோர்த்து அமைக்கப்பட்ட திரையை விலக்கி உள்ளே சென்றாள். நெய்விளக்குகள் சூழ எரிந்த நீள்வட்டமான நீராட்டறை திரௌபதிக்கு மட்டுமே உரியது. அதன் நடுவே முத்துச்சிப்பி வடிவில் செய்யப்பட்ட மரத்தாலான பெரிய வெந்நீர்தொட்டியின் அருகே நின்ற மருத்துவச்சியும் நீராட்டுச்சேடியும் தலைவணங்க அப்பால் தெரிந்த திரௌபதியைக் கண்டதும் பிருஷதி திகைத்து கால்நடுங்கி நின்றுவிட்டாள்.

தொட்டியில் நிறைந்து குமிழி வெடித்த செங்குருதியுள் மீன்மகள் போல திரௌபதி மல்லாந்து கிடந்தாள். அவளுடைய முகமும், கூர்கருமுனைகள் எழுந்த முலைகள் இரண்டும் நீருக்குமேல் பெருங்குமிழிகளாக தெரிந்தன. அவளைக்கண்டதும் திரௌபதி கால்களை நீருக்குள் உந்தி மேலெழுந்து கையால் தலைமயிரை வழித்து பின்னால் தள்ளி முகத்தில் வழிந்த செந்நீரை ஒதுக்கியபடி புன்னகை செய்தாள். பிருஷதி கால்களை நிலத்தில் இறுக ஊன்றி தன் நடுக்கத்தை வென்று “இதென்ன நீருக்கு இத்தனை வண்ணம்?” என்றாள். “கருசூரப்பட்டையும் குங்குமப்பூவும் கலந்த நன்னீர் அரசி… இன்றைய நீராட்டுக்கெனவே நான் வடித்தது” என்றாள் மருத்துவச்சி.

திரௌபதி சிரித்தபடி “குருதி என நினைத்தீர்களா அன்னையே?” என்றாள். “நானும் முதற்கணம் அப்படித்தான் எண்ணினேன்…” மூழ்கி கவிழ்ந்து கால்களை அடித்து துளிதெறிக்க திளைத்து மீண்டும் மல்லாந்து “உண்மையிலேயே குருதியில் நீராடமுடியுமா என்று எண்ணிக்கொண்டேன்” என்றாள். பிருஷதி “என்னடி பேச்சு இது? மங்கலநிகழ்வன்று பேசும் பேச்சா?” என்றாள். “ஏன்? பாஞ்சாலத்தின் தெய்வங்களுக்கு முதன்மை மங்கலம் குருதி அல்லவா?” என்றாள் திரௌபதி. “போதும்” என்றபடி பிருஷதி அருகே வந்து நின்றாள்.

திரௌபதியின் நிறையுடலை பார்ப்பதற்காகவே வந்தோம் என அவள் அப்போதுதான் புரிந்துகொண்டாள். “என்ன பார்க்கிறீர்கள் அன்னையே?” என்றாள் திரௌபதி. ”உன்னுடலை இறுதியாகப் பார்க்கிறேன் என்று எண்ணிக்கொண்டேன்” என்றாள் பிருஷதி. திரௌபதி புன்னகையுடன் நீரை வாயில் அள்ளி நீட்டி உமிழ்ந்தாள். அவள் தனக்கு ஆறுதலாக ஏதோ சொல்லப்போகிறாள் என ஒரு கணம் எண்ணிய பிருஷதி அவள் எப்போதுமே அப்படி சொல்வதில்லை என்பதை மறுகணம் உணர்ந்து பெருமூச்சு விட்டாள். “நெடுநேரம் நீராடவேண்டாம். நேரமில்லை” என்றாள். ”முதல்நாழிகைதான் ஆகிறது அன்னையே…” என்றாள் திரௌபதி. பிருஷதி கடும் சினத்துடன் “அணிசெய்துகொள்ள வேண்டாமா?” என்றாள். அந்தச்சினம் ஏன் என அகத்துள் அவளே திகைத்துக்கொண்டாள். ஆனால் திரௌபதி புன்னகைத்துக்கொண்டு நீருக்குள் புரண்டாள்.

மருத்துவச்சி “லேபனம் செய்துகொள்ளுங்கள் இளவரசி” என்றாள். திரௌபதி நீரில் எழுந்து நின்றாள். செந்நிற நீர் அவள் உடல் வழியாக வழிந்தது. அருவியருகே உள்ள கரும்பாறை அவள் உடல் என பிருஷதி எப்போதுமே எண்ணிக்கொள்வதுண்டு. உறுதியும் மென்மையும் இருளும் ஒளியும் ஒன்றேயானது. மென்குழம்பெனக் குழைந்து அக்கணமே வைரமானது. நீண்ட குழலை சேடி இரு கைகளாலும் அள்ளி மெல்ல நீர் வழிய சுருட்டினாள். நெற்றி அப்படி தீட்டப்பட்ட இரும்பு போல மின்னுவதை எவரிலும் அவள் கண்டதில்லை. கடைந்து திரட்டிய கழுத்து. ஒன்றுடன் ஒன்று முற்றிலும் நிகரான முலைகள். அவள் கைகளை தூக்கியபோது அவை உறுதியுடன் இழைந்தன. ததும்பும் நீர்த்துளிகள். கருநிறச் சங்குகள்.

மருத்துவச்சி அவளை பீடத்தில் அமரச்செய்து கால்களில் லேபனத்தை பூசத் தொடங்கினாள். தொப்புளில் வழிந்து தேங்கிய செந்நீர் மென்மயிர் பரப்பில் கலைந்து வழிந்து அல்குல் தடம் நோக்கி இறங்கியது. மருத்துவச்சியும் சேடியும்கூட அவள் உடலை சிவந்த விழிகளுடன் நோக்குவதாக, அவர்களின் உளம் விம்முவது முலைகளில் அசைவாக எழுவதாகத் தோன்றியது. ஒருகணம் பொருளற்ற அச்சம் ஒன்று எழுந்தது. அங்கே ஏன் வந்தோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம் என வியந்தாள்.

“கையை நீட்டு கிருஷ்ணை” என்றாள். திரௌபதி சிரித்தபடி தன் உள்ளங்கைகளை நீட்டிக்காட்டினாள். செண்பகமலர் நிறமான உள்ளங்கைகள். பிருஷதி குனிந்து அந்த ரேகைகளை பார்த்தாள். சங்கும் சக்கரமும். அவள் பிறந்த மறுகணம் கைகளை விரித்து நோக்கிய வயற்றாட்டி “அரசி!” என கூச்சலிட்டு குருதி வழியும் சிற்றுடலைத் தூக்கி அவளிடம் காட்டியபோதுதான் அவற்றை முதலில் நோக்கினாள். ஒன்றும் தெரியவில்லை. “சங்கு சக்கர முத்திரை! அரசி, விண்ணாளும் திருமகள் மண்ணில் வந்தால் மட்டுமே இவை அமையும் என்கின்றன நிமித்திக நூல்கள்!” என்றாள் வயற்றாட்டி.

அப்போதும் அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. சிந்தை நனைந்த துணிபோல ஒட்டிக்கிடந்தது. சேடியர் குனிந்து மகவின் கைகளை நோக்கி கூவினர். ஒருத்தி வெளியே ஓடினாள். அவளை நோக்கியபோதுதான் வெளியே நின்றிருக்கும் அரசரைப்பற்றி அவள் எண்ணினாள். அவரிடம் அவள் மகவின் கையில் உள்ள சங்குசக்கர வரிகளைப்பற்றி சொல்வதை உள்ளூர நிகழ்த்திக்கொண்டபோது சட்டென்று அவள் உடல் சிலிர்த்தது. அகம் பொங்கி எழுந்தது. குழவியை வாங்கி மடியில் மலரச்செய்து அந்த வரிகளை நோக்கினாள். அகம் உருகி கண்ணீர்விட்டு விம்மினாள்.

அதன்பின் எத்தனை ஆயிரம் முறை இந்த வரிமுத்திரைகளை அவள் நோக்கியிருப்பாள்! எத்தனை ஆயிரம் முறை முத்தமிட்டு விழிகளுடன் சேர்த்திருப்பாள்! அவள் அந்த முத்திரையை விரலால் தொட்டபின் “மீண்டும் உன் கைகளை எப்போது பற்றப்போகிறேன்?” என்றாள். பொருளற்ற சொற்களென்றாலும் எந்த அணிக்கூற்றைவிடவும் அகத்தை அவையே துல்லியமாக உணர்த்தின என்று தோன்றியது. “இன்றுமுதல் இவை என்னுடையவை அல்ல அல்லவா?”

மருத்துவச்சி புன்னகைத்து “தடாகம் தாமரையை உரிமைகொள்ள முடியாது என்பார்கள் அரசி” என்றாள். பிருஷதி அந்த அணிக்கூற்றை முற்றிலும் பொருளற்ற சொற்களாகவே அறிந்தாள். விழிகளை தூக்கி மருத்துவச்சியை உயிரற்ற ஒன்றைப்போல பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டாள். தன் சொற்களில் மகிழ்ந்த மருத்துவச்சி “பொன்னும் மணியும் சந்தனமும் மலரும் மகளிரும் பிறந்த இடம் விட்டு தகுதியுள்ள கரங்களுக்குச் சென்றபின்னரே பொருள்கொள்கின்றன” என்றாள். உண்மையாக எதையும் உணராதபோதுதான் அணிச்சொற்கள் அழகாக இருக்கின்றன போலும். பிருஷதி “நீராடி வா… நேரமாகிறது” என்றபின் திரும்பி நடந்தாள்.

அவள் நீராடி அணிசெய்யத் தொடங்கினாள். மானினி அவளுக்கு மணிநகைகளையும் பொலனணிகளையும் எடுத்து நீட்டியபோது ஒவ்வொன்றும் அவளுக்கு அகவிலக்கத்தையே அளித்தன. அவள் முகத்தில் எழுந்த சுளிப்பைக் கண்டு அவள் இன்னொன்றை எடுத்தாள். பலமுறை விலக்கியபின் அவள் ஒன்றை வாங்கிக்கொண்டாள். அந்த அணி படும்போதும் இறந்த உடல் ஒன்றைத் தொட்ட கூச்சத்தை அவள் உடல் உணர்ந்தது. அவற்றையெல்லாம் கழற்றி வீசிவிட்டு எளிய ஆடை ஒன்றை அணிந்தால் என்ன என்று எண்ணி மறுகணமே அது  ஆகக்கூடியதில்லை என அறிந்தாள்.

பட்டும் நகைகளும் அணிந்து சுண்ணமும் செந்தூரமும் பூசி மலர்சூடி அணிநிறைந்தபோது மானினி பேராடியை சற்றே திருப்பி அவளை அவளுக்குக் காட்டினாள். அதில் தெரிந்த உருவத்தைக் கண்டு அவள் திகைத்து மறுகணம் கசப்படைந்தாள். விழிகளை விலக்கிக்கொண்டு விரைந்து விலகிச்சென்று இடைநாழியை அடைந்தாள். அங்கே வீசிய இளங்குளிர் காற்று ஆறுதலளித்தது. தன் உடலில் அந்த ஆடிப்பாவையைத்தான் அத்தனை பேரும் பார்க்கிறார்கள் என எண்ணிக்கொண்டபோது கூச்சத்தில் உடல் சிலிர்த்தது. மானினி வணங்கி “சேடியர் ஒருங்கிவிட்டனர் அரசி” என்றாள்.

“இளவரசி அணிகொண்டுவிட்டாளா?” என்றாள். அவள் விழிகளை சந்திக்க நாணினாள். பெண் என்று இவ்வணிகளை, இவ்வாடைகளை, இம்முலைகளை சுமந்துகொண்டிருக்கிறேன். இவற்றுக்கு அப்பால் தனிமையில் நின்றுகொண்டிருக்கிறேன். அப்படி அவள் ஒருபோதும் உணர்ந்ததில்லை என்று தோன்றியது. முதல் அணியை அவள் பூண்டது எப்போது? ஆனால் முதிரா இளமையில் வனநீராட்டுக்குச் செல்ல அன்னையுடன் கிளம்பியபோது முழுதணிக்கோலத்தில் ஆடியில் தன்னைக்கண்டு வியந்து நின்றது அவளுக்கு நினைவிருந்தது. திரும்பித்திரும்பி தன்னை நோக்கிக்கொண்டிருந்தாள்.

தலைமுதல் கால்வரை. ஒவ்வொரு அணியையும். ஒவ்வொரு உறுப்பையும். திரும்பி முதுகை நோக்குவதற்காக உடலை ஒடித்து திருப்பினாள். கைகளை விரித்தும் தலையைச் சரித்தும் புன்னகைத்தும் சினந்து உதடு நீட்டியும் பாவாடையை அள்ளித் தூக்கியபடி மெல்ல குதித்தும் நோக்கிக்கொண்டே இருந்தாள். அவளை அரண்மனை எங்கும் தேடிய அன்னை கண்டடைந்ததும் பூசலிட்டபடி ஓடிவந்து அடித்து கைபற்றி இழுத்துச்சென்றாள். அவள் திரும்பி இறுதியாக ஆடியை நோக்கினாள். ஏங்கும் விழிகளுடன் பிருஷதி அவளை விட்டு விலகி ஆடியின் ஆழத்துக்குள் சென்று மறைந்தாள்.

அந்த ஆடிச்சித்திரம் வெறும் நினைவு அல்ல. மீள மீள உள்ளே ஓட்டி ஓட்டி அச்சித்திரத்தை மேலும் மேலும் தீட்டிக்கொண்டிருந்தாள். கனவுகளில் மீட்டுக் கொண்டு ஒளிஏற்றிக்கொண்டிருந்தாள். அந்த ஆடியில் அன்று தெரிந்த பிருஷதி என்றும் அவளுக்குள் இருந்தாள். அவள்தான் தான் என என்றும் அவள் உணர்ந்தாள். அந்த பிருஷதியின் மேல் குடிகொண்ட உடல் முதிர்ந்து தளர்ந்து எடை மிகுந்து வலியும் சோர்வும் கொண்டு விலகிச்சென்றபடியே இருந்தது. அவள் தனித்து திகைத்து நின்றிருந்தாள்.

இப்போது சென்று சத்ராவதியின் அரண்மனையில் அவளுடைய பழைய அறையின் அந்த ஆடியில் நோக்கினால் அதில் அவளை காணமுடியும். அழியா ஓவியமென அங்கே அவள் தேங்கி நின்றிருப்பாள். என்னென்ன எண்ணங்கள். இப்படி என்னுள் எண்ணங்கள் குலைந்து சிதறியதே இல்லை. இவ்வெண்ணங்களை என்னுள் ஏதோ ஒன்று செலுத்திவிட்டிருக்கிறது. இத்தனை வருடங்களில் பொன்னும் மணியும் சலித்ததில்லை. ஆடி பொருளிழந்ததில்லை. என்ன ஆகிறது எனக்கு? என்னை ஆண்ட தெய்வமொன்று கைவிட்டுச் சென்றுவிட்டதா? நானறியாத தெய்வம் என்னுள் குடிகொண்டுவிட்டதா?

திரௌபதியின் அணியறைக்குள் ஏழு சேடியர் அவளை மணிமங்கலம் கொள்ளச்செய்துகொண்டிருந்தனர். சந்தனபீடத்தில் கிழக்குமுகமாக அவள் அமர்ந்திருக்க செந்நிறமான காரகிற் சாந்தை ஆமையோட்டில் குழைத்து கையிலெடுத்தபடி நின்றிருந்த தொய்யிற்பெண்டு செங்கழுகின் இறகின் முனையை பளிங்குக் கல்லில் மெல்லத்தீட்டி கூர்படுத்திக் கொண்டிருந்தாள். சேடி திரௌபதியின் முலைகளில் இருந்து மென்பட்டாடையை விலக்கினாள். இரு கைகளையும் பின்னால் ஊன்றி மார்பை மேலே தூக்கி முலைக்குமிழ்களை விம்மச்செய்து அவள் அமர்ந்திருக்க செஞ்சாந்தில் இறகுமுனையால் தொட்டு இருமுலைகளுக்கும் மேல் கழுத்துக்குழியின் நேர்கீழாக ஒரு சுழியை போட்டாள்.

தொய்யிற் கோடுகள் உயிர் கொண்டு பிறந்து வந்து வழிந்து சுழித்துச் சுழன்று அவள் மெல்லிய கருமேனியில் படிந்து பரவின. ஒன்றுடன் ஒன்று பின்னி விரிந்துகொண்டே இருந்தன. மகரிகா பத்ரம் என்னும் இலைத்தொய்யில். அவள் உடல்வெம்மையில் காரகில் உலர்ந்ததும் மாந்தளிர் நிறத்தில் மின்னத்தொடங்கியது. முலைக்கண்களைச்சுற்றி கோடுகள் செறிந்து வளைந்து மீண்டும் விரிந்து தோளுக்கு மேல் ஏறின. நோக்கியிருக்கவே அவள் முலைகள் இரண்டும் இரு அணிச்செப்புகளாக ஆயின. கூர் அலகு கொண்ட இரு மாந்தளிர்ப் பறவைகள். ஆழ்கடலின் சித்திரம் பதிந்த சிப்பிகள். நீர்க்கோலம் செறிந்த இரு பெரும் சாளக்கிராமங்கள். தொய்யில் இளந்தளிர்க்கொடிகளாக அவள் வயிற்றை நோக்கி இறங்கியது. படர்ந்து இடையின் விரிவை மூடி அல்குல் நோக்கி இறங்கியது. அவள் அசைந்தபோது சித்திரமுலைகள் ததும்பின.

“சக்கரவாகங்கள் நீந்தும் குளிர்ந்த நதி” என்று ஒரு சூதப்பெண் சொல்ல திரௌபதி அவளை நோக்கி சிரித்தாள். அவள் உடலை சுண்ணமும் சந்தனமும் சேர்த்திடித்த பொடி பூசி மென்பட்டால் துடைத்து ஒளிகொண்டதாக ஆக்கினர். உள்ளங்கைகளிலும் கால்வெள்ளையிலும் செம்பஞ்சுக்குழம்பு. மருதாணிச் சிவப்பால் கைவிரல்கள் காந்தள் மலர்கள் என மாறின. கால்விரல்கள் சற்றே சுருண்ட கோவைப்பழங்கள்.

அணிப்பெட்டிகளை சேடியர் திறந்தனர். ஒளியா விழிமயக்கா ஒளியெனும் எண்ணம் தானா என ஐயுறச்செய்தபடி பெட்டிக்குள் அணிகள் மின்னின. ஒவ்வொன்றாக ஒருத்தி எடுத்துக்கொடுக்க இருவர் அணிபூட்டத்தொடங்கினர். வலது காலின் சிறுவிரலில் முதல் விரல்மலரைப் பூட்டி அணிசெய்யத்தொடங்கினர். கால்விரல்கள் பத்திலும் முல்லை, அரளி, தெச்சி, முக்குற்றி, செந்தூரம், ஆவாரம், சிறுநீலம், கூவளம், செம்மணி, பாரிஜாதம் என சிறுமலர்களின் வடிவில் செய்யப்பட்ட அணிகளை பூட்டினர். கணுக்கால்களில் தழைந்த பொற்சிலம்பு. அதன்மேல் தொடுத்து மேற்பாதங்களில் வளைந்த வேம்பின் இலையடுக்குகள் போன்ற செறிமலர்.

இடையில் அணிந்த பொன்னூல்பின்னலிட்ட செம்பட்டுச் சேலைக்குமேல் நூற்றெட்டுத் தொங்கல்கள் கொண்ட மேகலை. அதன் முன்படாம் அவள் இடையில் தழைந்து அல்குலை மூடிப்பரந்து சிறுமணிகளுடன் தொங்கியது. முதல் பெருமணி அனல் என தொடைகள் நடுவே நின்றது. ஆடைக்குமேல் வலத்தொடையில் பதினெட்டு இடத்தொடையில் ஒன்பது வளைவுகளாக தொங்கிய தொடைச்செறி. அணிக்கச்சையின் இடப்பக்க முடிச்சில் செவ்வைரங்களை விழிகளாகக் கொண்ட பொற்சிம்மம் வாய்திறந்திருந்தது.

இளமுலைகளை அணைத்து ஏந்தியிருந்த பட்டுக்கச்சைக்குமேல் ஆயிரத்தெட்டு தளங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட சரப்பொளி மாலை யானையின் நெற்றிப்படாம் என தழைந்து கொப்பூழை தொட்டது. அதன்நடுவே அனல்வரி என செம்மணிமாலை. விண்மீன் வரி என நீலமணி மாலை. பன்னிரு செண்பகமலர்களைத் தொடுத்ததுபோல பதக்கமாலை. கண்மணித்தாலி. கருகுமணித்தாலி. நாகபடத்தோள்வளைகள். நாகவிழிகளில் எழுந்த நீலமணிக் கற்கள். காதுகளில் ஆடிய செம்மலர் தோடுகள். அவற்றின் அல்லிவட்டமாக இளஞ்சிவப்புவைரங்கள் புல்லிவட்டமாக எரிவைரம். மேல்காதில் காதுமலர்.

மூக்கில் தொங்கிய புல்லாக்கின் செம்மணி அவள் இதழ்களின் ஈரச்செம்மைக்குமேல் ஒளித்துளியென நின்றாடியது. இருபக்கமும் தட்டாரபூச்சியின் விழிகளென நுண்வைரங்கள் செறிந்த மூக்குத்திகள். நெற்றிமேல் ஆடிய சுட்டியில் ஒளியுமிழும் இளநீல வைரங்கள். கூந்தலைத் தழுவிச் சரிந்தது ஆரச்செறி. அதிலிருந்து ஒரு சரடு சென்று செவிமலரை தொட்டது. கூந்தலை ஐந்து சரடுகளாகப் பகிர்ந்து பொன்மலர்கள் பூட்டிப்பின்னி கூட்டிய பிணைவில் வைரம் பொறித்த மலர்க்குவையை அமைத்தனர். கடகங்கள் செறிந்த கைகள் நெளியும் கருநாகங்கள். மோதிரங்கள் வளைத்த கைவிரல்கள் கருநாகக் குழவிகள். நகங்களின் ஒளி பொன்னகையை வெல்கின்றதா?

பிருஷதி விழிமலர்ந்து நோக்கிக்கொண்டே இருந்தாள். தொண்டை உலர்வதுபோல, வயிறு முரசுத்தோல் என அதிர்வதுபோல, கால்கள் குளிர்ந்து தொய்வடைவதுபோல, அவ்வப்போது விழியொளியே குறைந்து மீள்வதுபோல உணர்ந்தாள். அணிசெய்த சேடியர் பின்னகர்ந்தபின் ஆடியை கொண்டுவந்து திரௌபதியிடம் அளித்தனர். அவள் அதை வாங்கி தன்னை நோக்கியபோது அவள் விழிகளை பிருஷதி நோக்கினாள். அவை அவளறிந்த விழிகள் அல்ல. வாளெடுத்து பலிக்களம் வரும் பூசகனின் தெய்வ விழிகள். அணங்கெழுந்த விழிகள். குருதி மணம் பெற்ற கானுறை வேங்கையின் எரி திகழ் விழிகள்.

பிருஷதி அச்சத்துடன் சற்று பின்னடைந்து அவ்வசைவு தன் உடலில் நிகழவில்லை என உணர்ந்தாள். “எழுக இளவரசி” என்றாள் அணிச்சேடி. “இன்று எட்டாவது தாராபலம் பொருந்திய மைத்ர நன்னாள். அணிகொண்டு எழுந்த பெண்ணைச்சூழ்ந்து விண்ணகத்தின் கந்தர்வர்கள் காவல் காக்கும் நேரம்…” திரௌபதி எழுந்து தன் கைகளை தொங்கவிட்டபோது எழுந்த வளையலோசை கேட்டு பிருஷதி திடுக்கிட்டாள். அந்த அதிர்வை அறிந்தவள் போல திரௌபதி திரும்பி நோக்கினாள். சற்றும் அறிமுகம் அறியா விழிகள் உடனே திரும்பிக்கொண்டன. மங்கலச்சேடியர் வெளியே குரவையொலி எழுப்பினர். சேடியர் இருவர் அவளை கைபிடித்து அழைத்துச்சென்றனர். அவள் மேகத்திலேறிச்செல்பவள் போல நடந்து சென்றாள். அவள் அறைநீங்கியபோது மறுபக்கச் சுவரில் விழுந்த நிழலைக் கண்டு தன் நெஞ்சை பற்றிக்கொண்டாள். அது முற்றிலும் புதிய ஒருத்தி.

வெளியே வாழ்த்தொலிகளும் மங்கலஇசையும் சேர்ந்து எழுந்தன. மானினி வந்து “அரசி, வருக” என்றாள். அவள் வியர்த்த கைகளால் தன் ஆடையைப்பற்றி முறுக்கியபடி உலர்ந்த தொண்டையை வாய்நீரை விழுங்கி ஈரப்படுத்தியபடி அவளுடன் நடந்தாள். அந்தப்புரத்து மாளிகையின் சுவர்களும் மரப்பொருட்களும் கூரையும் திரைகளும் எல்லாம் வாழ்த்தொலி எழுப்பிக்கொண்டிருந்தன. திரௌபதி மாளிகையைவிட்டு வெளியே சென்றகணம் வெளியே பெருமுரசு இடிவரிசை என முழங்க கொம்புகளும் குழல்களும் இணைந்துகொண்டன. அந்தப்புர முற்றத்தில் கூடி நின்றிருந்த மக்கள் திரள் பொங்கி ஆரவாரித்தது.

வாயிலை அடைந்து நிலையைப்பற்றியபடி பிருஷதி நின்றாள். பெருமுற்றத்தில் பதினெட்டு வெண்குதிரைகள் அணிக்கோலத்தில் நின்றிருக்க அவற்றின்மேல் வெள்ளிக்கவசமணிந்த வீரர்கள் ஒளிவிடு வாள்கள் ஏந்தி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னால் பெரிய வெண்புரவியில் உருவிய வாளுடன் திருஷ்டத்யும்னன் அமர்ந்திருந்தான். தொடர்ந்து நூற்றெட்டு மங்கலப்பரத்தையரும் கைகளில் தாலங்கள் ஏந்தி நிரை நின்றனர். மங்கலவாத்தியமேந்திய சூதர்களின் நிரைகளுக்குப் பின்னால் பொன்னூல் குச்சங்களும் பூவேலைகளும் அணிசெய்த செம்பட்டு முதுகை மூட, கொம்புகளில் பொற்குமிழ்களும், உருகிவழிந்த பொன்னருவி என நெற்றிப்பட்டமும் அணிந்து பட்டத்துயானை செவியாட்டி நின்றது.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

திரௌபதி யானையை அணுகியதும் பாகன் கையசைக்க யானை பின்னங்கால் மடித்து பாதி அமர்ந்தது. அவள் அதன் விலாவில் தொங்கிய பட்டுச்சரடின் முடிச்சுகளில் கால்வைத்து ஏறி அதன் முதுகின் மேல் செம்பட்டுப் பீடத்துடன் இருந்த பொன்பூசிய அம்பாரிமேல் அமர்ந்துகொண்டாள். முன்னங்கால் இழுத்து பின்னங்கால் தூக்கி யானை எழுந்ததும் அவள் விண்ணகமேறும் விமானத்தில் அமர்ந்திருப்பவள் என மேலெழுந்தாள். முற்றத்திலும் அப்பால் அரசவீதியிலும் செறிந்திருந்த பெருங்கூட்டம் அவளைக் கண்டதும் கைவீசிக் கொந்தளித்து கூச்சலிட்டு ஆர்ப்பரித்தது. அந்த கொந்தளிக்கும் மானுட உடல்களின் அலைகளுக்குமேல் மிதப்பவள் போல அவள் விண்ணில் அசைந்தாடிச் சென்றாள்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைசர்ச்சைகள்
அடுத்த கட்டுரைநம்பிக்கை மனுஷிகள்