மத்தியில்பாஜக ஆட்சிக்கு வந்தபின்பு எழும் இந்துத்துவ முழக்கங்களும் பரப்புரைகளும் எல்லாம் ஏதோ சில குறுங்குழுக்களின் குரல்கள் என நீங்கள் சொல்வதை நம்பக் கடினமாக உள்ளது. குறிப்பாக சிறுப்பன்மை மக்களின் பார்வையில் இவை அனைத்தும் ஒரே தரப்புகளாகவே தோற்றமளிக்கின்றன. அதேபோலவே நீங்கள் சொல்லும் காந்தி எதிர்ப்பு இஸ்லாமிய, மார்க்ஸிய கமூனிஸ, கிறித்துவ தரப்புகளும் சிறு குழுக்களே அன்றி எல்லோருக்கும் பொதுவானவை அல்ல என்றும் நம்மால் உணர முடியும்.
கடந்த வருடம் நம்வாழ்வு கத்தோலிக்க இதழில் காந்தியின் சில கொள்கைகளை விமர்சித்து கொஞ்சம் கடினமான வார்த்தைகளில் வெளிவந்த தொடர் ஒன்று கிறித்துவ மக்களின், பாதிரியார்களின் எதிர் குரலால் இடையிலேயே நிறுத்தப்பட்டது நினைவில் வருகிறது. இன்றைய கோட்சே சிலை விவகாரத்துக்கும் இவற்றிற்கும் உள்ள மிக முக்கியமான வித்தியாசம் இது பொதுவெளியில் நடைபெறுகிறது என்பதே. காந்திய மறுப்பு என்பது நீங்கள் குறிப்பிட்ட பிற குழுக்களில் ஒரு ஐடியலாஜிக்கல் தளத்தில் நடைபெறுகிறது. அதற்கு ஐம்பது வருடகால வரலாறு உள்ளதென்றால் இதுவரை அவர்கள் பொதுவெளியில் காந்தியை வசைபாடியதாகவோ, அவரது சிலைகளை உடைத்து அவமதித்ததாகவோ அல்லது தற்போது டி.வி ஷோக்களில் சர்வசாதாரணமாக ’காந்தி தேசத் தந்தை அல்ல’ என்று இந்துத்துவர்கள் முழங்குவதைப்போலவோ நான் எதையும் கண்டதில்லை.
காந்திக்கு எதிராக பரப்புரைகள் நிகழ்ந்தன என்றுகூட எனக்குத் தெரியாது. அவரவர் உள்கூட்டங்களில் உரையாடல்களில் சில பிரசுரங்களிகூட நிச்சயம் இது நடந்திருக்கும். காந்தி அறிவார்ந்த விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அதே நேரம் நம் நாட்டில் மட்டுமல்ல உலகளவில் அவருக்கிருக்கும் புனிதத்தன்மைக்கு மதிப்பு தர வேண்டிய அவசியமும் உள்ளது.
பாஜக ஒரு குறிப்பிட்ட ஐடியாலஜியின் அரசியல்முகம். அது அரசியல் பலத்தை அடையும்போது அந்த ஐடியாலஜியின் எல்லா தரப்புகளும் வலிமைபெற்றெழுகின்றன. பாஜக ‘டெவலப்மெண்ட்’ குறித்து முன்வைத்த தேர்தல் விளம்பரங்கள், அறிக்கைகளின் கூடவே இந்துத்துவா மற்றும் இந்திய கலாச்சார மைனாரிட்டிகள் குறித்த நிலைப்பாட்டையும் விரிவாக முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் அது அடிப்படைவாதிகளின் ஆதரவை குறைக்கும் என்பதால் எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்கிற குறிக்கோளில் அது தவிர்க்கப்பட்டது. இன்றும் பாஜக தினசரி சமாளிப்புகளின் மூலம் இவற்றை கடந்து சென்றுகொண்டிருக்கிறதே அல்லாமல் திட்டவட்டமாக எதையும் சொல்லிவிடவில்லை.
குஜராத்திற்கு பயணித்து திரும்பும் என் நண்பர்கள் ஒவொருவரும் குஜராத் கலவரங்கள் ஒரு கலாச்சார விளைவு என்று கூறுகிறார்கள். அது என்ன என்றால். குஜராத்தின் மைனாரிட்டி இஸ்லாமியர்கள் அதிக திமிரானவர்கள், அவர்களிடமே அதிக சொத்தும், தொழில்களும் உள்ளன அங்குள்ள இந்துக்களை விட வாய்ப்பும் வசதியும் இவர்களுக்கே அதிகம் இருந்தன எனும் மனப்பதிவு குஜராத் இந்துக்களிடமிருந்தது. அவர்கள் திருப்பியடிக்க திமிருக்கு பாடம் புகட்ட ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தனர்.
நாஜி ஜெர்மெனியில் யூதர்களுக்கு எதிராக கூறப்பட்ட அதே வாதங்களாகவே இவை எனக்குத் தோன்றின. இவற்றில் உண்மை இருந்தாலும் அதை அதன் கொடூர விளைவுக்கு இட்டுச் செல்வதின் பின்னணியில் ஒரு அரசியல் நிச்சயம் இருக்கிறது. ஜெர்மெனியில் பிரச்சாரங்களும் பிரசுரங்களும் யூதர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டன. அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் எனும் எண்ணத்தை ஜெர்மானியர்களின் மனதில் விளைக்க பல முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டன. இறுதி விளைவுகள் ஒப்பிடக்கூடியவையே.
இன்றைக்கும் தேசிய அளவில் இப்படி ஒரு முயற்சி நடந்துகொண்டிருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. தொடர்ந்து இந்துத்துவ கடுங்கூற்றுக்கள், அடிப்படைவாத கோஷங்கள் ஊடகங்கள் எங்கிலும் பரவிக்கிடக்கின்றன. பாஜக பேச்சாளர் ஒருவர் நாமே பல்லாயிரக்கணக்கான வருடங்கலாக சர்வைவ் ஆகிவரும் இனம் ஆக இங்குள்ள வழிமுறைகளே டார்வினின் கோட்பாட்டின்படி சிறந்தவை என்று உளறுகிறார். அவருக்கு யாராவது நாம் மட்டுமல்ல இன்று உயிருடன் வாழும் ஒவ்வொருவருமே டார்வினின் கூற்றின்படி இந்த வழியில் வந்தவர்களே என்று சொல்லலாம். இதுபோன்ற அறிவியலைப்போன்ற கதையாடல்கள் தொடர்ந்து பாஜகவின் பேச்சாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
நம் பாரம்பரியங்களின் மீது மிகுந்த பெருமிதம் நம் எல்லோருக்கும் நிச்சயம் தேவை ஆனால் நம் பார்வை பின்னோக்கி அல்ல முன்னோக்கியே செல்ல வேண்டும். கிரேக்க தத்துவமும், அறிவியலும் நவீன அறிவியலால் வெறும் புராணங்களின் நிலைக்கு தள்ளிவிடப்பட்டு இன்று நவீன அறிவியல் சென்று கொண்டிருக்கும் தொலைவை நாம் பின்னோக்கிச் சென்று எட்ட முடியுமா தெரியவில்லை. நாம் நம் வரலாற்றின் மீதும் கலாச்சாரத்தின்மீதும் நமக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிற தாழ்வுமனப்பான்மையை களைய வேண்டும் என்பது உண்மை. இதை இன்று பல்வேறு அறிவுத் துறைக்ளிலும் சாதித்துக்கொண்டிருக்கும் இந்தியர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தச் சமூகம் அவர்களை நோக்கிச் சென்றாலே போதுமானதாய் இருக்கும்.
நம் கலாச்சாரத்தில் ஓங்கி நின்ற பல அறிவுத்துறைகள் ஏதோ வகைகளில் இந்த மண்ணில் தொடர்ச்சியற்று போயின. இன்று நம் வாழ்கை முறை மேறிகின் அறிவியலை பின்பற்றியதாக இருக்கிறது. இந்தியாவின் பல “பின்தங்கிய” இடங்களிலும் இன்றைக்கும் நாம் பழைய வாழ்கை முறைகளை பின்பற்றுகிறோம் என்றாலும், அங்கேயும் நாம் வழங்க விரும்புவது ‘டெவலப்மெண்ட்’ எனும் மேற்கின் போக்கையே. இன்றைய நிலையில் நவீன அறிவியல் ஒன்றே எல்லோருக்கும் ஓரளவேனும் சமமான நல்வாழ்கை ஒன்றை தரமுடியும். நாம் சிறந்து நின்ற அறிவுத்துறைகளிலிருந்து அவற்றை இன்றைய காலகட்டத்தின் வாழ்கைக்கு பொருத்திச் சொல்லவேண்டிய தேவை நமக்குள்ளது. கட்டடக்கலை, கணிதம், உயர்தத்துவம், போன்றவை இன்றைக்கும் நம்மால் மீட்டெடுக்க முடியக்கூடியவை.
ஆனால் வெற்றுப் பெருமிதங்களை திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் நாம் இதை ஒரு கேலிப்பொருளாக்கிக்கொண்டிருக்கிறோம். இதற்குப்பதில் நாங்கள் இதுவரை ஒன்றும் செய்துவிடவில்லை ஆனால் இனிமேல் செய்கிறோம் என்று சொல்லிவிடலாம். நம் கலாச்சாரமும் வரலாறும் ஒருசில கதைகளை மட்டுமே முன்வைத்து சொல்லப்படுகின்றன என்றே தோன்றுகிறது. கூடவே இதில் ஒளிந்திருக்கும் சாதியப் பெருமிதமும் கணக்கில் கொள்ள வேண்டியது. ஆக ஒரு அசலான, உண்மையான, இன்றுவரைக்கும் மொத்த மனித இனமும் கண்டுவந்திருக்கும் நுண்ணறிவியலுக்கும் பொருந்தக் கூடிய விஷயங்களன்றி வேறெதையும் நாம் உலகின் முன்வைக்க முடியாது.
ஆனால் தொடர்ந்து நாம் இந்த பிளாஸ்டிக் சர்ஜரி, சூப்பர் சானிக் கதைகளை கேட்டு வருகிறோம். இந்துத்வ சிந்தனையில் இருக்கும் வெற்றுப் பெருமிதமும் பழமைவாதம் மட்டுமே இதன் மூலம் தெரியவருகிறது. நாம் நம் பாரம்பரியத்திலிருந்து இந்த நவீன உலகிற்கு அளிக்க விரும்புவது என்ன என்பதைத் தேடியடையவேண்டிது அவசியமேயன்றி நம்மை ஒட்டுமொத்தமாக பல நூற்றாண்டுகள் பின்னிழுத்துச் செல்வதல்ல இன்றைய தேவை.
ஊடகங்களை கவனித்தால் தொடர்ந்து இந்த போலி அறிவியல் கூற்றுகளும், சிறுபான்மையினருக்கு எதிரான கோஷங்களும் அவதூறுகளும், இந்திய ஜனநாயகத்தின் மீதான மட்டையடி விளாசல்களும் வந்துகொண்டேயிருக்கின்றன. இதை ஒரு சில ஃபிரிஞ் அமைப்புகளின் வேலை மட்டும் என்று எடுத்துவிடாமல் இதை தொடர்ந்து அனுமதிக்கும் ஒரு அமைப்பை நாம் உருவாக்கியுள்ளோம் என்பதையும் உணரவேண்டியுள்ளது.
அது ஊடகங்களில் தன் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது, இந்திய அறிவியல் நிறுவனங்களில் நுழைந்துள்ளது, கல்வியமைப்பில் கைவைக்கத் தவறவில்லை. கிறித்துவர்களுக்கென இந்த நாட்டில் இப்போது வழக்கத்தில் இருக்கும் ஒரே விடுமுறையான கிறிஸ்துமஸையும் இது கிட்டத்தட்ட அதிகாரபூர்வமாக மறுக்கிறதென்றால். இதை எப்படி ஒரு சில அமைப்புகளின் செயல்பாடு என்று ஒதுக்க முடியும்? இந்து முஸ்லிம்,. கிறித்தவர் இன்னும் எத்தனையோ கலாச்சார பிரிவுகளும் இந்தியனாக ஒன்று நின்று பெற்ற சுந்திர இந்தியாவில் ஒரு ஜனநாயக அரசாங்கம் இப்படி செய்யுமென்றால் பிற அமைப்புகளை குறை சொல்வானேன்.
Tyranny of the majority எனும் ஒரு கருத்து ஜனநாயகம் துவங்கப்பட்ட காலத்திலிருந்தே விவாதிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் அடிப்படை கோளாறு (Flaw) இது. அதாவது ஆட்சி அதிகாரம் ஒரு கலாச்சார மெஜாரிட்டியின் கையில் செல்லுமானால் அந்த கலாச்சார பெரும்பான்மையினர் பிற கலாச்சார சிறுபான்மையினரை ஒடுக்குவார்கள். என்பதுவே அதன் அடிப்படை. இது அரசியலிலும் தத்துவத்திலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இன்று நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆட்சிக்கு இப்படி ஒரு முகம் உள்ளதோ எனும் சந்தேகம் இயல்பாக எழுகிறது. தொடர்ந்து சிறுபான்மையினர் மீது வெறுப்பை உருவாக்கும் பேச்சுக்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. ‘தாய்மதம்’ எனும் ஒரு போலி கருத்தாக்கம் உருவாக்கப்படுகிறது. எனது தாயையும் எனது தாய்மதத்தையும் நானல்லவா முடிவு செய்யவேண்டும்?
இன்றைக்கு செய்யப்படும் மதமாற்றங்களுக்கு முகலாயர் காலத்து வரலாறுகளைத் தேடி எடுத்து காரணம் கொடுக்கின்றனர். இதுதான் நாம் கட்டமைத்திருக்கும் ஜனநாயகமா? நாம் நம்மை கண்டடைய வரலாற்றின் எத்தனை பக்கங்கள் பின் சென்றால் போதுமானது எனும் வரையறைகள் ஏதேனும் உள்ளதா? சிறுபான்மை மக்களும் அவர்களின் கலாச்சாரமும் வாழ்கையும். தத்துவமும் இந்தப் பெரும் நாட்டுக்கு ஒரு துளி நன்மையையேனும் செய்துவிடவில்லையா என்ன? சிறுபான்மையினர் எல்லோரும் வேற்றுநாட்டிலுள்ள தாய்தந்தையருக்குப் பிறந்தவர்களா? திரும்பத் திரும்ப இந்தக் கேள்விகளைத் தூண்டும் விவாதங்களே ஊடகங்களிலும், சிலநேரங்களில் ஆட்சியிலுள்ளவர்களிடமிருந்தும் வந்துகொண்டிருக்கின்றனர்.
ஒரு ஜனநாயகத்தின் பலம் ஒரு கலாச்சார பெரும்பான்மை கலாச்சார சிறுபான்மையை பேணும் பாங்கிலேயே வெளிப்படுகிறது எனலாம். இந்திய ஜனநாயக அமைப்பை பல நூறாண்டுகள் பின்னோக்கி எடுத்துச் செல்லும் முயற்சிகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன. கலாச்சார சிறுபான்மையினருக்கு சமமான குரல் ஜனநாயகத்துக்குள் எழவேண்டும் என்பதால்தான் அவர்களுக்கு சில சலுகைகள் இருக்கின்றன.
மிக விரிவாக இவற்றை எழுதவும் விவாதிக்கவும் வேண்டியுள்ளது. உண்மையில் எனக்கு தனிப்பட்டமுறையில் இதில் மனக்குறை என்று ஒன்று உண்டென்றால் அது சிறுபான்மை நிறுவனங்களின் தார்மீகத் தோல்வியே. அவர்கள் இந்த நாட்டில் நியாயமான கேள்விகளை எழுப்பும் தகுதியை இழந்துவிட்டார்களோ என சந்தேகிக்கிறேன். அவர்களும் இந்த நாட்டின் அதிகார அமைப்புகளுடன் பல்வேறு சமரசங்களை செய்துகொண்டுள்ளார்களோ என சந்தேகிக்கிறேன். இல்லையென்றால் அவர்களின் செவுளில் அறையும் மௌனத்தை எப்படி புரிந்துகொள்வது.
இந்த கோஷங்களும் தொடர் அவதூறுகளும் கர் வப்ஸி போன்ற பெரும்பான்மையின் வன்செயல்களும் ஒரு பெரும் வன்முறையை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றன என்பது என் எண்ணம். இது ‘உடையு, இந்தியா’த்தனமான ஒரு கான்ஸ்பிரஸி தியரியாகத் தோன்றலாம். அல்லது அடிபடும் முன்பே எழும் அழுகுரலாகவும் புரிந்துகொள்ளப்படலாம். எப்படியானாலும் இந்த நாட்டின் நடுநிலையாளர்களும், அறிவின் மீதும் அறிவியலின் மீதும் நம்பிக்கையுடையவர்களும் இந்த நாட்டின் ஜனநாயக்த் தன்மைமீது மதிப்பும் நம்பிக்கையும் உடையவர்களும் தங்கள் மௌனங்களை சமரசமின்றி கலைக்க வேண்டும்.
உண்மையில் பாஜக மத்தியில் கொண்டுவந்துள்ளது அதே காங்கிரஸ் அரசாங்கமே. இந்துத்து அடிப்படைவாதம் இலவச இணைப்பாக இணைந்துள்ளது. அதை மடியில் கட்டிய ஓணான் என நீங்கள் சொல்கிறீர்கள் நான் அதை அவர்களின் செல்லப்பிள்ளை என சந்தேகிக்கிறேன். ஒருபுறம் பாக்கிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் மத்தியகிழக்கையும் விமர்சித்துக்கொண்டு இன்னொருபுறம் அவற்றைப்போன்றதொரு ஐடியாலஜியை இங்கே கொண்டுவர முயல்வது. இந்துத்துவா மட்டுமல்ல கலாச்சார தூய்மைவாதம், கலாச்சார அடிப்படைவாதம் எல்லாமே வேகமாக காலவதியாகிவருகின்றன நாமோ எல்லாவற்றையும் முதலிலிருந்து துவங்குகிறோம். உங்களிடமிருந்து ஒரு முழுமையான பதிலை எதிர்பார்க்கிறேன்.
இதை தளத்தில் வெளியிடும்பட்சத்தில் என் பெயரை சேர்க்க வேண்டாம். உண்மையில் இங்கிருக்கும் நிலவரங்களை என்னால் சரியாக எடைபோட முடியவில்லை.
அன்புடன்
x
அன்புள்ள நண்பருக்கு,
உங்கள் கடிதத்தின் கடைசி வரிதான் முக்கியமான விமர்சனம். மிகவும் சங்கடமளிக்க்க்கூடியது அது.
நான் கிறித்தவப்பெரும்பான்மை உள்ள ஒரு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். இங்கே இந்துத்துவம் கால்பதிப்பதற்கு முன்னரே கடுமையான காந்திவெறுப்பு கல்விமட்டத்திலேயே எனக்குக் கிடைத்தது. அதை இங்கே பரப்பியவர்கள் கிறித்தவ, கம்யூனிசக் கருத்தியல் கொண்டவர்கள். காந்தியை வசைபாடிய கிறிஸ்தவ ஆசிரியர்களிடமிருந்தே நான் காந்தியை அறிந்துகொண்டேன் என்றுகூட சொல்லலாம்.
இது இன்றும் தொடர்கிறது. என் மகனும் மகளும் படித்த பள்ளிகளில்கூட இது நிகழ்ந்தது. எட்டாம் வகுப்பு படித்தபோது காந்தி இரு பெண்களைக் கற்பழித்தவர் என்று அவளுக்கு ஓர் ஆசிரியர் கற்பித்தபோது என் மகள் அழுதுகொண்டே பள்ளியில் இருந்து வந்திருக்கிறாள். நான் என் மகள் படித்த கான்வெண்ட் பள்ளிக்கே சென்று காவல்நிலையத்தில் புகார்கொடுப்பேன் என்று மிரட்டியிருக்கிறேன். பள்ளி இறுதி படிக்கையில் இன்னொரு ஆசிரியர் காந்தி தீண்டாமையைக் கடைப்பிடித்தார் என்று பேசியபோது என் மகளே எழுந்து தட்டிக்கேட்டிருக்கிறாள்.
நான் பல கிறித்தவக் கல்விநிறுவனங்களில் கடுமையான காந்தி வெறுப்பு கற்றுக்கொடுக்கப்படுவதை நேரில் கண்டிருக்கிறேன். சுந்தர ராமசாமி மதுரை இறையியல் மையத்தில் ஒருமுறை தங்கியிருந்தபோது ‘கேடுகெட்ட நாயே’ என்று காந்தியை வசைபாடும் பாடல் ஒன்றை அங்குள்ள குழந்தைகள் அதிகாலையில் பாடுவதைக் கேட்டு கண்ணீர் விட்டதை சொல்லியிருக்கிறார். மிகப்புகழ்பெற்ற அதே கல்லூரியில் அதே பாடலை நான் மேடையில் கேட்டிருக்கிறேன்.[இங்குலாப் என்ற திராவிட இயக்கக் கவிஞர் எழுதியது] நாகர்கோயில் இறையியல் மையத்தில் புனித சவேரியார் கல்லூரியில் அதேபோன்ற வசைகளைக் கேட்டிருக்கிறேன்
கேரளத்தின் காந்திய வெறுப்பு என்பதும் அப்படி கம்யூனிஸ்டுகளால் பரப்பப்பட்டதே. கொஞ்சநாள் முன் அருந்ததி ராய் காந்தியை இந்தியா கண்ட மாபெரும் சாதிவெறியர் என்றும் அவரது பெயரை பல்கலையில் இருந்து நீக்கவேண்டும் என்றும் பேசியதை அறிந்திருப்பீர்கள். அருந்ததி இந்துத்துவர் அல்ல. கிறிஸ்தவர். அன்று அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நாராயணகுருவின் இயக்கத்தினர் மட்டுமே. கம்யூனிஸ்டுகளோ கிறிஸ்தவர்களோ அல்ல.
இங்குள்ள திராவிட இயக்கத்தினர் காந்தியை எந்தக் கொள்கை அடிப்படையிலும் எதிர்க்கவில்லை. அவர் பெண்களின் தோளில் கையிட்டு நடந்துசெல்வதைத்தான் மேடைமேடையாக அண்ணாத்துரை ஆபாசமாக நக்கல் செய்தார். அதற்கு ஜெயகாந்தன் அளித்த கடுமையான எதிர்ப்பும் பதிவாகியிருக்கிறது. இங்கே இந்துத்துவம் வேரூன்றுவதற்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே காந்தியை சாதிவெறியர், மதவெறியர் என முத்திரைகுத்தும் அரசியல் நிலைபெற்றுவிட்டது.
தமிழில் காந்தியைப்பற்றிய மிகக் கீழ்த்தரமான அவதூறு நூல்களை எழுதியவர்கள் எஸ்.வி.ராஜதுரை போன்ற இடதுசாரி – திராவிடவாதிகள்தான். எஸ்.வி.ராஜதுரையின் ‘இந்து இந்தி இந்தியாவை’ வாசித்துப்பாருங்கள். இங்குள்ள திராவிட இயக்கத்தவர் நடுவே மிகச்செல்வாக்குள்ள இந்நூல் இந்துத்துவத்தின் முதன்மைச் சிந்தனையாளரே காந்திதான் என வாதிட்டு நிறுவுகிறது! அவர் செய்ததெல்லாம் இந்தியாவில் அவரது பனியா சாதி ஆதிக்கம் பெறுவதற்கான உத்திகள் மட்டுமே என சொல்கிறது. கீழ்ந்த்தரமான தந்திரசாலி காந்தி என விவரிக்கிறது. இதுதான் காந்திமீதான கருத்தியல்சார்ந்த ஆக்கபூர்வமான விமர்சனம் என்கிறார்களா?
நான் ‘இன்றைய காந்தி’ எழுதியபோது எனக்கு காந்திபற்றி வந்த கடிதங்கள்,அவதூறுகள், வசைகளில் இந்துத்துவர் எழுதியவை சிலவே. பெரும்பாலானவை இடதுசாரிகளாலும், தலித்தியர்களாலும், திராவிட இயக்கத்தினராலும் எழுதப்பட்டவை. அவையெல்லாம் காலாகாலமாக இங்கே சொல்லப்பட்டவை. அவற்றுக்குத்தான் நான் பதில் சொல்லியிருக்கிறேன். அந்நூல் அவர்களிடமே உரையாட முயல்கிறது
சும்மா ஒருமுறை இணையத்தில் தேடி வாசித்துப்பாருங்கள். காந்தி பற்றிய வசைகள், அவதூறுகளை அதிகமாக யார் எழுதியிருக்கிறார்கள் என்று தெரியும். யாருக்கு காந்தி அவசியமோ, யார் காந்தியை தங்கள் பதாகையாகக் கொள்ளவேண்டுமோ அவர்கள்!
அவர்கள் செய்த அந்தபிழையின் மேலேயே இந்துத்துவத்தின் காந்திய வெறுப்பு ஏறி அமர்ந்திருக்கிறது என்பது தமிழகம், கேரளத்தைப் பொறுத்தவரை ஓர் உண்மை. இந்த அப்பட்டமான உண்மையை மழுப்பிக்கொண்டு மேலே பேசுவதில் பொருள் இல்லை.
இனிமேலாவது அந்த மனநிலையில் இருந்து வெளியே வரவேண்டும் என்பதே நான் சொல்வது. காந்தி இங்குள்ள ஜனநாயகவாதிகள் அனைவருடைய பதாகையாக ஆகவேண்டும். வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதர்களைத் தொகுக்க அவரால்தான் முடியும். இந்துக்களின் மனசாட்சியுடன் பேசிய நவீன இந்து அவரே. இந்துத்துவ அரசியலை இந்து எதிர்ப்பாளர்களால் ஒருபோதும் வெற்றிகரமாக நிகழ்த்த முடியாது. அதற்கு இந்துக்களின் மரபுடன், ஆன்மாவுடன் பேசும் காந்தியைப்போன்ற ஒருவராலேயே முடியும்.
நான் சொல்ல வருவது இதையே. கடந்த இருபதாண்டுக்காலமாக மீண்டும் மீண்டும் சொல்லிவருவதும் இதைத்தான்
*
காந்தியின் கொலையாளியை வீரவழிபாடு செய்ய முன்வந்திருப்பவர்கள் இந்துத்துவ உதிரி அமைப்புகள் என்றுதான் நான் சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா மட்டும் அல்ல காங்கிரஸ் கூட அதற்கு எதிராக பெரிய எதிர்ப்பை தெரிவிக்காமல் அடங்கியே செல்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ், பாரதியஜனதா இரண்டும் இவ்விஷயத்தில் உண்மையான நேரடியான நிலைபாடு எடுத்து கோட்சேயை அவர்கள் ஆதரிப்பதாகச் சொல்வார்கள் என்றால் இந்திய அரசியலிலேயே ஒரு தெளிவான துருவப்படுத்தல் உருவாகும் என்பதே என் கருத்து. அது ஜனநாயகத்தைப்பற்றிப் பேசுவதற்கு மிக உகந்தது. காந்தியா கொட்சேவா யார் தேவை என இந்தியா முடிவெடுக்கட்டும் என்று தான் எழுதியிருக்கிறேன்.
மற்றபடி அனைத்து ஊடகங்களிலும் மெல்லமெல்ல பரப்பபடும் இந்துத்துவ மூர்க்கம், ஆட்சியாளர் தரப்பில் உள்ள ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான ஆணவம் இந்த தேசத்தின் சிறுபான்மையினரை அன்னியப்படுத்தும் கண்மூடித்தனம் அச்சமூட்டுகிறது. பல தளங்களிலும் இந்தியா இந்துத்துவத் தாலிபானியம் நோக்கிச் செல்கிறது என்பதே என் எண்ணம்.
ஆரம்பம் முதலே இந்த மாற்றத்தை ஐயத்துடன் பயத்துடன் மட்டுமே நான் அணுகி வந்தேன். இன்று இந்துத்துவ தரப்பிலேயேகூட காந்திய நோக்கும், சற்று நிதானமும் கொண்ட குரல்கள் அமுக்கப்பட்டு மறைக்கப்பட்டு நாலாந்தர மேடைக்குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. நான் சுட்டிக்காட்டியிருப்பது இந்த மாற்றத்தையே.
ஆனால் அது இப்போது ஆரம்பித்தது அல்ல. அது தொடங்கி பல ஆண்டுகளாகின்றன. இந்துத்துவ தாலிபானியம் என நான் எழுதியதற்கு வந்த எதிர்வினைகளை நினைவுகூர்வீர்கள் என நினைக்கிறேன். இந்துத்துவ லும்பன் குழுக்களின் குரல் எழுவதும் செல்வாக்கு பெறுவதும் தான் உண்மையான சிக்கல் என நான் நினைக்கிறேன்
அதை எதிர்ப்பதற்கான வழி என்பது இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுடன் கைகோர்த்து அரசியல் பேசுவது அல்ல. இந்து மதத்தையும் இந்தியப் பண்பாட்டையும் இந்தியத் தேசியத்தையும் ஒட்டுமொத்தமாக எதிர்த்து சிறுமைப்படுத்தும் பொறுப்பற்ற அரசியலும் அல்ல.
இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் பேசுபவர்களின் இந்த கண்மூடித்தனமான மூர்க்கமே இந்தியப்பெரும்பான்மையை இந்துத்துவத் தீவிரவாதம் நோக்கி தள்ளுகிறது. காஷ்மீரின் தேசத்துரோக மதவெறிகொண்ட பிரிவினைவாதிகளை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒருவர் இந்துத்துவ அரசியலை விமர்சிக்கும்போது உண்மையில் அதற்கு ஆதரவாளர்களை உருவாக்கி அளிக்கிறார்.
நீங்களே இன்று இணையத்தில் எழுதப்படுவதை மட்டும் பாருங்கள். இந்துமதத்திலும் இந்தியதேசியத்திலும் நம்பிக்கை கொண்ட அனைவரையும் இந்துத்துவர் என இவர்கள் முத்திரை குத்தி வசைபாடுகிறார்கள். மகாபாரதத்தை ஒருவன் எழுதினாலே அது இந்துத்துவா. பகவத்கீதையை பேசினாலே அவன் இந்துத்துவா. இதுதான் இவர்களின் மொண்ணையான அரசியல்.
இந்துமதத்திலும் நவீன இந்தியதேசியத்திலும் நம்பிக்கை கொண்டவர்கள்தான் இந்த தேசத்தின் முக்கால்வாசிப்பேர். அவர்களை இந்துத்துவ அரசியல் நோக்கிச் செலுத்துவது இந்த மூர்க்கமே. இவர்களின் தேசவெறுப்பு அரசியலே இந்துத்துவத்தை வளர்க்கும் மிகப்பெரிய சக்தி. அவர்கள் அறுவடைசெய்வதெல்லாம் இங்குதான்.திரும்பத்திரும்ப இதையே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
நான் முன்வைக்கும் மாற்று காந்திதான். இப்போது நேருவும். போகிறபோக்கைப் பார்த்தால் ராகுல்காந்திக்கே போய்சேருவேன் என நினைக்கிறேன்.)))
பல கட்டுரைகளில் பலவாறாகச் சொன்ன விஷயங்களை மீண்டும் தொகுத்துச் சொல்கிறேன்
1. இந்துமதம் ,இந்துப்பண்பாடு, இந்து சிந்தனை ஆகியவை அழியவேண்டியவை என நான் நினைக்கவில்லை. அவற்றை அழிக்க முடியும் என்றும் எண்ணவில்லை. அவற்றை அழிப்பதன் வழியாகவே இந்த்துவத்தை அழிக்கமுடியும் என்றால் அதைப்போல இந்துத்துவத்தை வாழவைக்கும் சிறந்த வழியும் வேறில்லை
2 இந்துமதம், இந்துப்பண்பாடு, இந்துசிந்தனை ஆகியவை புனிதமானவை முழுமையானவை என நான் நினைக்கவில்லை. அவை இங்கே இருந்த பலநூறு தொல்குடிகளின் ஆன்மீகமும் வாழ்க்கைமுறைகளும் கலந்து உருவானவை. ஆகவே தொகுப்புத்தன்மை கொண்டவை. பல்வேறு வகையான சிந்தனைகள் அதில் உள்ளன. பல்வேறு புதியசிந்தனைகள் கிளைக்கவும் அதில் இடமுள்ளது
3. பல்லாயிரமாண்டுக்காலமாக நீடித்துவரும் ஓர் ஆன்மீக மரபை, மாபெரும் தொன்மத்தொகையை அவை முன்வைக்கின்றன. அது மானுடத்தின் சொத்து. அது அழியவிடப்படும் என்றால் மானுட நாகரீகத்துக்கே மாபெரும் இழப்பு
4 நீண்ட வரலாறு கொண்டவை என்பதானலேயே அவற்றில் எல்லாவகையான வரலாற்றுக்குப்பைகளும் இருக்கும். தன் குறைகளை திருத்திக்கொள்ள அது என்றுமே தயங்கியதில்லை. விவேகானந்தர், நாராயணகுரு , வள்ளலார் போன்ற மாபெரும் சீர்திருத்தவாதிகளினால் உருவாக்கப்பட்டது அதன் இன்றையவடிவம். இனியும் அது அவ்வண்ணமே தன்னை திருத்திக்கொண்டு மேலே செல்லும். ஏனென்றால் மாற்றமுடியாத, மறுவிளக்கம் கொடுக்கக்கூடாத எதுவுமே இந்துமரபில் இல்லை
5 ஆகவே இந்துமதத்திற்கு எதிரான சர்வதேச அளவிலான அவதூறுப்பிரச்சாரங்கள், வசைகள் ஆகியவற்றினூடாக இந்துமதத்தை அழிக்க நினைக்கும் சக்திகள், அதற்குக் கூலிபெற்று துணைபோகும் அறிவுஜீவிகள் ஆகியோரை நான் எதிர்க்கிறேன்.
6 இந்தியா என்ற இன்றைய அமைப்பு வரலாற்றின் ஒருகட்டத்தில் உருவாகி வந்தது. இந்தியாவின் நில்ப்பரப்பில் எல்லா பகுதியிலும் எல்லாவகையான மக்களும் வாழ்கிறார்கள். ஆகவே பிரிவினைவாதம் என்பது பிராந்திய பெரும்பான்மைவாதமாகவே இருக்கும். அது அழிவையே உருவாக்கும். இங்கே பேசப்படும் எல்லா பிரிவினைவாதங்களும் மதவாத, சாதியவாத, இனவாத அடிப்படைகொண்டவை
7 இந்தியா என்ற இந்த அமைப்பு காந்தி நேரு அம்பேத்கர் போன்றவர்களின் சிருஷ்டி. இதை எதிர்ப்பவர்கள் அழிவுச்சக்திகள்
8 இந்துமரபு, இந்தியா என்பவை வேறு இந்துத்துவ அரசியல் வேறு. இந்த வேறுபாட்டை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லவேண்டியிருக்கிறது. இந்தியா இந்துமதம் இந்துத்துவ அரசியல் மூன்றும் ஒன்றே என்று சொல்லி எதிர்ப்பவர்கள் மக்களை மெல்லமெல்ல இந்துத்துவ அரசியல் நோக்கி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமிய தாலிபானியர்களுடனும் பிரிவினைவாதிகளுடனும் குலாவுகிறார்கள் நிதிபெற்றுக்கொண்டு அவர்களின் குரலாக ஒலிக்கிறார்கள்.
9 அதாவது சாமானியனுக்கு இன்று இருக்கும் தெரிவு ஒருபக்கம் இந்துத்துவ அரசியல். மறுபக்கம் தேசவிரோத குறுகிய அரசியல். அவன் தெரிவு செய்வது இந்துத்துவமாக உள்ளது. இன்று தேவையாக உள்ளது நவீன ஜனநாயக தேசிய அரசியல்
10 நவீன தேசியவாதம் ஐரோப்பாவில் இருந்து நமக்கு வந்தது. அதற்கு இருமுகங்கள். ஒன்று பண்பாட்டுத் தேசியவாதம் இன்னொன்று நவீன தொகுப்புத் தேசியவாதம். பண்பாட்டுத்தேசியவாதமே மதம், இனம், மொழி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்துத்துவமும் சரி, திராவிட அரசியலும் சரி, இங்குள்ள பிரிவினை இயக்கங்களும் பண்பாட்டுத்தேசியவாதத்தை முன்வைப்பவைதான்.
11 பண்பாட்டுத்தேசியவாதம் ஐரோப்பாவில் ஃபாசிசத்தை உருவாக்கியது. அதன் அமைப்பிலேயெ பிறரை, எதிரிகளை உருவாக்கும் மனநிலை உண்டு ஆகவே அது வெறுப்பரசியலை நோக்கியே செல்லும்
12 நவீன தொகுப்புத் தேசிய வாதம் என்பது அனைத்துமனிதரையும் தொகுத்து பொதுவான அடையாளங்கள் வழியாக உருவாக்கப்படும் தேசியம். காந்தி நேரு அம்பேத்கர் முன்வைத்த தேசியவாதம் அதுவே.அதன அடிப்படையிலேயே இந்தியா உருவாக்கப்பட்டது
13 இந்திய அரசியலில் நமக்கு இருந்த மூன்று வாய்ப்புகள் 1. நவீன தொகுப்புத் தேசியவாதம் 2. பண்பாட்டுத்தேசியவாதம் 3 இடதுசாரி சர்வாதிகார தேசியவாதம். மூன்றாம் வாய்ப்பு இன்று இல்லை. ஆகவே இருப்பது இரண்டு. இன்றைய இந்தியா பண்பாட்டுத்தேசியவாதத்தை தேர்வுசெய்துள்ளது
14 மாற்று என்பது நவீனத் தொகுப்புத் தேசியவாதமே. காந்தியும் நேருவும் அம்பேத்கருமே. இன்று வலுவாக முன்வைக்கப்படவேண்டிய மாற்று அரசியல் அதுதான்
15 இங்கே நேற்றுவரை ஆட்சியில் இருந்தது காங்கிரஸின் நவீன தொகுப்புத் தேசியவாதம். அதை எதிர்த்த இடதுசாரி தேசியவாதம் அதை பலவாறாக உடைக்க முயன்று ஒரு கருத்தியல்போரை நிகழ்த்தியது. அதன் மையப்புள்ளியான காந்தியை அது சிதைத்தது. அதை அவதூறு வழியாகச் செய்தனர். ஏனென்றால் இடதுசாரிகள் உலகம் முழுக்க கைகொண்ட வழிமுறை அது. தங்களுக்குள் கூட அவர்கள் அவதூறுப்போரையே செய்துகொள்கிறார்கள்
16 இந்தியாவெங்கும் உள்ள பிரிவினை அரசியல்வாதிகள் முன்வைத்தது பண்பாட்டுத் தேசியவாதம். அவர்களும் இந்தியாவின் நவீனத் தேசியத்தையும் அதன் அடையாளமாகிய காந்தியையும் அவதூறு மூலம் உடைத்தனர்
17 இன்று அந்த இடைவெளியைப் பயன்படுத்தி பண்பாட்டுத்தேசியவாதம் ஆட்சியை அடைந்துவிட்டது. அதை வெல்ல ஒரே வழி என்பது நவீன இந்திய தொகுப்புத்தேசியத்தை மீண்டும் முன்வைப்பதே. காந்தியை நேருவை அம்பேத்கரை. ஆனால் தோற்றுப்போன இடதுசாரி சர்வாதிகார தேசியத்தையோ அல்லது பிரிவினைவாத ஃபாசிச அரசியலையோ முன்வைப்பதுதான் இங்கே நிகழ்கிறது
18 சாதி, மொழி, வட்டார, இனவாத ஃபாசிச பிரிவினை அரசியலை , அதன் வெறுப்புக்குரலைக்கொண்டு இந்துத்துவ அரசியலை எதிர்ப்பது அவர்களை மேலும் வலுப்படுத்தவே செய்யும்.
19 இந்தியாவுக்கும் இந்துமதத்துக்கும் எதிரான எந்த அரசியலும் இந்தியாவையும் இந்துமதத்தையும் காப்பாற்ற தாங்கள் மட்டுமே உள்ளோம் என்ற இந்துத்துவர்களின் நிலைபாட்டை வலுப்படுத்தவே செய்யும்
20 மட்டையடிகள், அதிரடிக்கூச்சல்கள் கொண்ட பேச்சுகளே இங்கே நிகழ்கின்றன. வெறுப்பின் குரலுக்குப் பதிலாக ஓங்கி ஒலிக்கவேண்டியது காந்தியின் நிதானமான குரல்
*
இந்த 20 கருத்துக்களையும் இதேபோல எண்ணிட்டு நான் முதன்முதலாக எழுதியது 1992 ல்! [அதே சிற்றிதழில் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் பற்றியும் எழுதியிருந்தேன்] பிறகு மருத்துவர் ஜீவா 1995 ல் ஈரோட்டில் நடத்திய கருத்தரங்கில் இக்கருத்துக்களை இதே போல எண்ணிட்டு பேசினேன். அதன்பின் பலமுறை. மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டே இருக்கிறேன். இங்கே அரசியல்பேச்சு என்றால் தொண்டை புடைக்க ஒற்றைப்படையாக கூச்சலிடுவதுதான். சமநிலைகொண்ட பேச்சுக்கு இடமே இல்லை
நான் சொல்லவருவது மிகவும் நுட்பமான ஒரு அரசியல் சிக்கல். ஒரு முக்கியமான வேறுபாடு. இந்துமரபு வேறு இந்துத்துவ அரசியல் வேறு. இந்துத்துவ அரசியல் நூறுவருட வரலாறுகூட இல்லாதது. இந்துமரபு பல்லாயிரம் வருடத் தொன்மை கொண்டது. மிகவிரிவான உள்ளடுக்குகள் கொண்டது. அடிப்படையா ஆன்மீகத்தையும் தத்துவத்தையும் கொண்டது. அது அரசியல் அல்ல. அதிலிருந்து அரசியல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவ்வரசியலை எதிர்க்க அதை எதிர்ப்பது மூடத்தனம்.அவ்வளவுதான்.
இதை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். மீண்டும் மீண்டும் மொண்ணைத்தனமாக ‘அப்டீன்னா நீ இந்துத்துவா, கீதைய பேசுறேல்ல?’ என்ற குரல் எழுந்தபடியே இருக்கிறது
சொல்லிச்சொல்லி எனக்கு கொஞ்சம் தெளிவான மொழி வந்துவிட்டிருக்கிறது. அதுதான் லாபம். சரிதான் காந்தி 75000 பக்கம் ஏன் எழுதினார் என்று புரிகிறது
ஜெ
நமது பேச்சாளர்கள் [காந்தி பற்றிய ஒரு விவாதம்]
ஃபெட்னாவும் காந்தியும் அமெரிக்காவில் காந்திக்கு ஒரு வசைத்திருவிழா