அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு
நான் தங்களின் படைப்புகளத் தொடர்ந்து படித்து வருபவர்களில் ஒருவனாயிருந்தும் இதுவரை உங்களுக்கு கடிதங்கள் எதையுமெழுதியதில்லை. ஆனால் மாதொரு பாகன் எதிர்ப்பு தொடர்பாக நீங்கள் முன் வைத்திருக்கும் வாதங்கள் தொடர்பாக என்னுள் இர்ண்டு வினாக்கள் எழுகிறது.
புனைவு என்றாலும் கூட ஒருவர் ஒரு ஊரிலுல் உள்ள அனைத்துப் பெண்களும் விபச்சாரிகள் என்று எழுதுவார் ஆனால் அதனை எதிர்த்து யாரும் போராடக் கூடாது வழக்குத் தொடரக் கூடாது மாறாக தாங்கள் விபச்சாரிகள் இல்லை என்பதை அவர்கள்தான் நிரூபிக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்?
இரண்டாவதாக இது மாதிரியான போராட்டங்களை நடத்துபவர்கள் சாதியக் குழுக்கள் மட்டும்தான் என்பதையும் என்னால் ஏற்க முடியவில்லை. எம்ஜியார் ஆட்சியில் ஒரு கார்டூனுக்காக ஆனந்த விகடன் ஆசிரியர் சிறை வைக்கப்பட்டார். அதற்கு ஒரு அரசியல்கட்சியின் கோபம் தானே காரணம்? தின மலரில் நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவது தொடர்பாக ஒரு நடிகை பேட்டி வெளியாக, தமிழ்த் திரையுலகமே அதனை எதிர்த்து போராடி அந்த நாளிதழில் சிலரை கைது செய்ய வைத்தார்களே!அந்த கோபத்தில் நியாயம் இல்லையா? ஒரு மதத்தை சார்ந்தவர்களின் மனம் புண்படுமே என்பதற்காக Satanic Versus” நூலினை மத்திய அரசே தடை செய்ய வில்லையா? கருத்து கணிப்பு வெளியிட்டதன் காரணமாக ஒரு நாளிதழின் அலுவலகம் தாக்கப்பட்டு இரண்டு ஊழியர்களின் உயிர் போனதே! ஆனால் இவையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த சம்பவபங்கள் மட்டுமே.சாதிய ரீதியான நிகழ்வுகளே அதிகம் என்று நீங்கள் வாதிடலாம். அதற்கு காரணம் இவ்வாறான விமர்சனங்கள் அதிகமாக வைக்கப்படுவது சாதி மதங்களுக்கு எதிராகத்தான்.. அதிலும் குறிப்பாக இந்து மதத்திற்கு எதிராக மட்டும்தான். satanic versus புத்தகமும் விஸ்வரூப படமும் தடை செய்யப்படும் நாட்டில் இந்து மத நம்பிக்கைகளையும் வழிபாடுகளையும் மிகவும் கீழ் தரமாக எழுதுவதோடு பொது கூட்டம் நடத்தி ஆபாசமாகவும் பேச முடிகிறதே! இது என்ன வகையான ஜனநாயகம்? கருத்து சுதந்திரம்?
எல்லோருக்கும் அவர்கள் கைத் தடியை சுற்றுவதற்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் அது அடுத்தவர் மூக்கை காயப் படுத்தக் கூடாது என்ற ஆங்கிலப் பழ மொழிதான் நினைவுக்கு வருகிறது.
கொ. வை . அரங்க நாதன்,கொந்தகை