பகுதி பதினைந்து : அன்னைவிழி – 6
சரஸ்வதி ஆலயத்தின் முகப்பில் ரதம் நின்றபோது திரௌபதி திடமான கால்களுடன் இறங்கி வாழ்த்துக்குரல்களும் முரசொலியும் சங்குமுழக்கமும் சூழ சற்று நின்றாள். அவள் ஆடையில் குழலில் எங்கும் சிறு குலைவும் இருக்கவில்லை. வரையாட்டின் அடிபிறழாத நேர்நடை என ரதத்திரைச்சீலை விலக்கி வலப் பாதத்தை படியில் எடுத்துவைத்து இறங்கிய மாயை எண்ணிக்கொண்டாள். அவள் தொடைகள் வலுவிழந்து நடுங்கிக்கொண்டிருந்தன. இறங்கியபின் ஒருகையால் ரதத்தூணைப்பற்றிக்கொண்டு சமநிலையை மீட்டு சேவகர் நீட்டிய தாலத்தை பெற்றுக்கொண்டு திரௌபதிக்கு முன்னால் சென்றாள்.
ஆலயத்தின் வலப்பக்க தேர்முற்றத்தில் அரசரதம் கிடந்தது. அதனருகே நின்ற காவலரைக் கண்டதும் அது துருபதனுக்குரியது என மாயை உணர்ந்தாள். அவள் அதை எண்ணியதுமே திரௌபதியின் வளையலோசை கேட்க, அவளும் அதை கண்டுவிட்டாளென்று தெரிந்துகொண்டாள். அவர்கள் படிகளில் ஏறியதும் உள்ளிருந்து ஸ்தானிகர்கள் இருவர் தொடர அமைச்சர் கருணர் அவர்களை நோக்கி ஓடிவந்தார். மேலெழுந்த பெரிய வெண்நெற்றியில் வியர்வை ஊறி ஊர்த்துவதிலகம் கசிந்து மூக்கில் வழிந்து குருதித்துளியாக நின்றது. முகமன் சொல்லி வாழ்த்தியபடியே கைகூப்பி நின்றார்.
மாயை அவரைக் கடந்து சென்று பின்னால் திரும்பாமல் நின்றாள். கருணர் பிருஷதியிடமும் திரௌபதியிடமும் முறைமைசார்ந்த வரவேற்புச்சொற்களை சொன்னபின்னர் “அரசர் வந்து இரண்டுநாழிகையாகிறது. நீங்கள் வரவில்லையா என்று வினவினார்” என்றார். பிருஷதி அவர்கள் கிளம்ப சற்று நேரமாகியது என்றாள். “அத்தனை பாஞ்சாலமக்களும் ரதவீதிகளில்தான் நின்றுகொண்டிருக்கிறார்கள்” என்றாள். “ஆம் அரசி. என்ன செய்ய முடியும் அதற்கு? இது அவர்கள் வாழ்க்கையின் பெருநிகழ்வு அல்லவா?” என்றார் கருணர். “மேலும் நூற்றெட்டு நாடுகளின் ஷத்ரியர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களின் அரசப்படையினர் காம்பில்யத்தின் விழாக்கோலம் காண தெருக்களில் நிறைந்திருக்கிறார்கள்.”
அவர்கள் பேசிக்கொண்டே படிகடந்ததும் கருணர் மெல்ல “தாங்கள் இங்கே துணைமண்டபத்தில் சற்று ஓய்வெடுக்கலாமே” என்றார். பிருஷதி “இல்லை, இன்னும் இரு ஆலயங்களையும் தொழுதுவிட்டால் அரண்மனைக்கு மீள்வோம். அங்கே என்னைக்காத்து ஒப்பனைச்சேடியரும் அணிவணிகரும் அமர்ந்திருக்கின்றனர். நான் சென்றுதான் முடிவெடுக்கவேண்டும்” என்றாள். அதற்குள் திரௌபதி “ஆம் அமைச்சரே, சற்று ஓய்வெடுப்போம்” என்றாள். ”எதற்கடி? இதோ, இன்னும் இரு ஆலயங்கள் மட்டும்தானே?” என்றாள் பிருஷதி. திரௌபதி அதற்கு மறுமொழி சொல்லாமல் நடக்க கருணர் வணங்கி “இவ்வழி அரசி” என்று கைகாட்டினார்.
துணைமண்டபம் ஒருபக்கம் மட்டும் திறந்த மரக் கட்டுமானம். அதற்குள் இருந்த மரத்தாலான நான்கு பீடங்களில் ஸ்தானிகர்கள் விரைவாக வெண்பட்டை விரித்துக்கொண்டிருந்தனர். இரு சேவகர் சுவர்களில் இருந்த கல்லகல்களில் நெய்விட்டு விளக்கேற்றினார்கள். கருணர் “அமர்க அரசி… தாங்கள் அருந்த சற்று இன்நீர் கொண்டு வருகிறேன்” என்றார். “தேவையில்லை…” என்று பிருஷதி சொல்ல திரௌபதி “கொண்டுவாருங்கள் அமைச்சரே” என்றாள். அவர் தலைவணங்கி திரும்பிச்செல்ல திரௌபதி சென்று ஒரு பீடத்தில் அமர்ந்துகொண்டாள்.
பிருஷதி சலிப்புடன் அருகே அமர்ந்தபடி “எதற்கடி இங்கே? உனக்கென்ன களைப்பு? தேரில் அமர்ந்திருக்கத்தானே செய்தாய்?” என்றாள். சேவகர் தலைவணங்கி வெளியேறுவதை நோக்கியபின் திரும்பிய திரௌபதி “அங்கே அரசரும் பட்டத்தரசியும் நின்றிருக்கிறார்கள்” என்றாள். பிருஷதி புரிந்துகொண்டு மறுகணம் திரும்பி மாயையை நோக்கினாள். அவ்விழிகளை சந்திக்காமலிருக்கும் காலம் மாயைக்கு அமையவில்லை. தன் விழிகளில் அரசி எதைக் கண்டாள் என்று மாயைக்குப் புரியவில்லை. அவள் கடும் சினத்துடன் “ஏன் அரசரின் மறுபக்கம் நான் நின்றால் என்ன? நானும் பட்டத்திற்குரியவளே” என்றாள்.
திரௌபதியின் நகை ஒளிர்ந்த விழிகள் வந்து மாயையை தொட்டுச்சென்றன. மாயையின் தோள்கள் மெல்லத் தளர்ந்தன. “அன்னையே, தொல்பெருந்தாயின் ஐந்து ஆலயங்களும் ஐந்து பாஞ்சாலக்குடிகளுக்குரியவை. துர்க்கை ஆலயம் சிருஞ்சயர்களுக்கும் லட்சுமி ஆலயம் கிருவி குலத்திற்கும் சாவித்ரியின் ஆலயம் துர்வாசகுலத்திற்கும் பிருதிவி ராதையின் ஆலயம் கேசினி குலத்திற்கும் உரியது. இந்த ஆலயம் சோமக குலத்திற்குரியது… சோமககுலத்து பட்டத்தரசி அகல்யைக்கே இங்கு முதலிடம்.”
அவள் வேண்டுமென்றே அதைச் சொல்கிறாள் என்று மாயைக்கு புரிந்தது. ஆனால் பிருஷதி சினம் கொண்டு “அப்படியென்றால் அரசரை என்னுடன் மீண்டும் துர்க்கை ஆலயத்திற்கு வரச்சொல். அது எங்கள் குலத்திற்குரியது” என்றாள். திரௌபதியின் விழிகள் மாயையை வந்து தொட்டுச்சென்றன. ஊசிமுனையால் தொட்டு எடுக்கப்பட்ட ரசத்துளி போல அவற்றிலிருந்த சிரிப்பைக் கண்டு மாயை அணிகள் ஒலிக்க உடல் ஒசிந்து விழிவிலக்கிக் கொண்டாள். “நான் கருணரிடம் சொல்கிறேன்… இப்போதே” என்றாள் பிருஷதி.
“அன்னையே, நாம் திரும்பச்செல்லமுடியாது. அது முறைமை அல்ல” என்றாள் திரௌபதி. பிருஷதி தளர்ந்து “அப்படியென்றால் இதை வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள்… யார் செய்தது?” என்றபின் விம்மல் கலந்த குரலில் “வேறுயார் அவள் மைந்தன் அல்லவா இப்போது பட்டத்து இளவரசன்? இந்த முதியவர் அந்தப்புரத்தை விட்டு நீங்குவதே இல்லை. சென்ற பலவருடங்களாக இங்கே அவன் கோல் அல்லவா திகழ்கிறது. எனக்கு நிகழும் அவமதிப்புகள் ஒவ்வொரு நாளும் ஏறித்தான் வருகின்றன” என்றாள். கைவளை ஒலிக்க உச் என ஒலியெழுப்பி மேலாடையை இழுத்து தன்மேல் போட்டுக்கொண்டாள்.
“அன்னையே, முற்காலத்தில் பாஞ்சாலத்தை அன்னை அரசியர் ஆண்டதாக சொல்கிறார்களே?” என்றாள் திரௌபதி. பிருஷதி முகம் மலர்ந்து “ஆம், அதெல்லாம் கதைகள். இளவயதில் என் மூதன்னை என்னை மடியில் அமரச்செய்து அக்கதைகளை சொல்லியிருக்கிறார்கள். பாஞ்சாலத்தின் அரசகுலம் பிறந்தது மாமன்னர் புருவின் குருதியில் இருந்து. அதற்கு முன்பு பாஞ்சாலத்தை ஆண்டவர்கள் மூதன்னையர். அன்னையரின் அவை ஒன்றுக்குத்தான் முழு மண்ணுரிமை. அவர்களில் மூத்தவரை அவை தங்கள் தலைவியாக தேர்ந்தெடுக்கும். அவளே அரசி. ஆண்களெல்லாம் அன்னையருக்கு மைந்தர்களாகி சொல்பணிந்து நடந்தனர்” என்றாள்.
“அன்று இங்கே போர்கள் இல்லை. எவரும் மேல்கீழ் என்றில்லை. முற்றறம் திகழ்ந்தது என்கிறார்கள். அரசாளும் மூதன்னை ஒவ்வொருநாளும் புலர்காலையில் கங்கைக்கரைக்குச் சென்று கை நீட்டி அன்னையே, இங்கு அறம் திகழ்கிறதென்றால் அசைவற்று நில் என்று சொல்வாள். கங்கை குளமாகத் தேங்கி அசைவிழக்கும். அந்த நீரில் இறங்கி நீராடி மீள்வாள். அன்று இங்கே வழிபடப்பட்டவள் தெற்குத்திசையை ஆளும் உக்ரசண்டி தேவி மட்டுமே. அவள் ஆலயத்திற்குச் சென்றதும் மூதன்னை கைகாட்டும்போது காற்று நின்றுவிடும். தன் கைவிரல் நுனியால் அவள் தொட்டதும் அகநெருப்பால் சுடர் பற்றிக்கொள்ளும். அச்சுடர் ஏற்றி தேவியை வணங்கி மீள்வாள்.”
“அன்னை அமர்வதற்கு கல்லால் ஆன பேரிருக்கை ஒன்று இருந்தது. அவள் ஏந்த பச்சை மரக்கிளையால் ஆன கோல். அவள் மணிமுடி ஒவ்வொருநாளும் புதுமலர்களைக் கோர்த்து அமைக்கப்படுவது. முடிசூடி கோலேந்தி பீடம் கொண்டு அவள் ஆணையிட்டால் வான் மழை இறங்கியது. மண் முப்போகம் விளைந்தது. ஐந்து பெரும்பருக்களும் அவள் ஆணைக்குக் கீழே அமைந்தன” என்றாள் பிருஷதி. திரௌபதி புன்னகையுடன் “அவளுக்கு உடைவாள் இல்லை அல்லவா?” என்றாள். “ஆம், நான் சொல்லியிருக்கிறேன் அல்லவா? அன்னையின் சொல்லுக்கே காட்டுவிலங்கும் கடும்பகையும் அஞ்சி கட்டுப்பட்டன. பேரன்னை ஒருபோதும் படைக்கலம் தொடுவதில்லை” என்றாள் பிருஷதி.
”இறுதி அன்னையின் பெயர் கிருஷ்ணை. உக்ரசண்டிகை போன்று எரிவிழிகளும் கரிய உடலும் கொண்டவள். அவளுக்கு நூறு மைந்தர் பிறந்து அனைவரும் இறந்தனர். முலைப்பாலும் கண்ணீரும் ஒழுக அவள் மெலிந்து ஒடுங்கினாள். எஞ்சிய ஒரே மைந்தனை அவள் நெஞ்சோடு சேர்த்து வளர்த்தாள். மைந்தன்மேல் கொண்ட பேரன்பால் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டாள். ஒருநாள் அவன் மூதன்னையின் கல்லிருக்கையில் கோலேந்தி மணிமுடிசூடி அமர விழைந்தான். அது விலக்கப்பட்டது என்றாள் அன்னை. அவன் அவளிடம் கெஞ்சி மன்றாடினான். உணவொழிந்து ஊடினான். அன்னை அகம் இரங்கி அவ்வாறே ஆகட்டும் என்றாள்.”
“அதன்படி ஒருநாள் இரவில் எவரும் அறியாது அவன் அன்னையின் கல்லிருக்கையில் அமர்ந்து முடிசூடி கோலேந்தினான். அப்போது விண்ணில் மேல்திசையில் இடியோசையுடன் பெருமின்னல் எழுந்தது. இந்திரனின் வீரியம் மென்மழையாக அவன் மேல் பொழிந்தது. விண்ணவர்க்கரசன் அவனை மன்னனாக ஏற்றுக்கொண்டான். அதன்பின் அன்னை அவ்வரியணையில் அமர்ந்தால் மேகங்கள் விலகிச்சென்றன. மைந்தன் கோலேந்தினால் மட்டுமே மழை விழுந்தது. ஐந்து குலமும் கூடி நிமித்திகரை அழைத்து நெறி தேர்ந்தபின்னர் அன்னையின் மைந்தனையே அரசனாக ஆக்கின. பாஞ்சாலத்தை ஆண்ட அன்னையரின் ஆட்சி முடிந்தது” பிருஷதி சொன்னாள்.
மாயை திரௌபதியையே நோக்கிக்கொண்டிருந்தாள். பாஞ்சாலத்துப் பெண்களெல்லாம் பலமுறை கேட்ட கதையை ஏன் மீண்டும் அன்னையைக்கொண்டு சொல்லவைக்கிறாள் என்று எண்ணியபோதே திரௌபதியின் விழிகள் அவள் விழிகளை மீண்டும் வந்து தொட்டுச்சென்றன. எளிய அன்னையரைப்போல நூறுமுறை சொன்ன கதையையே மீண்டும் முழு ஈடுபாட்டுடன் சொல்லவும் அவ்வுணர்ச்சிகளில் முழுமையாக மூழ்கவும் பிருஷதியால் முடிந்தது. அவள் துயர் நிறைந்த பெருமூச்சுடன் “மைந்தரிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள் அன்னையர்” என்றபின் விழிகளை துடைத்துக்கொண்டாள்.
“இல்லை இந்திரனிடமா?” என்றாள் திரௌபதி. ”இந்திரன் என்னடி செய்வான்? அரியணையில் அமரச்செய்தவள் அன்னை அல்லவா?” என்றாள் பிருஷதி. மாயை உதடுகளைக் கடித்து சிரிப்பை அடக்கி வேறுபக்கம் நோக்கினாள். “அன்னையே, அன்றெல்லாம் மூதன்னையர் ஐந்து குலங்களில் இருந்தும் ஐந்து கணவர்களைக் கொள்ளும் வழக்கமிருந்தது அல்லவா?” என்றாள் திரௌபதி. மாயை அறியாமல் விழிதிருப்பி திரௌபதியை நோக்கி உடனே விலக்கிக்கொண்டாள். அவள் அதைச் சொல்லவைத்தது அதற்காகத்தான் என்று புரிந்துகொண்டாள்.
பிருஷதி கண்களைச் சுருக்கி நோக்கி “அதில் ஏளனத்திற்கு என்ன இருக்கிறது? பாஞ்சாலப் பெருங்குடிகளில் அன்றும் இன்றும் அன்னையர் பல கணவர்களைக் கொள்ளும் வழக்கம் உண்டு. வடக்கே ஹிமவானின் மடி முழுக்க இவ்வழக்கம்தான். பால்ஹிக, திரிகர்த்த, லோமச, கின்னர, குலிந்த, உசிநார, பாஞ்சாலம் என்று ஏழு அன்னையர்நாடுகளை சொல்வார்கள். இங்கெல்லாம் குடியும் குலமும் அன்னையரால்தான் அமைக்கப்பட்டன. தெய்வங்கள் அன்னையரால் ஊட்டப்பட்டன. மைந்தர் அன்னையரின் அடையாளத்தையே கொண்டனர். அன்னையரெல்லாம் அரசியராகவே அறியப்பட்டனர். ஒவ்வொருகுடியிலும் ஒன்றுக்குமேற்பட்ட தந்தையர் இருந்தனர்” என்றாள் பிருஷதி.
“நம்குடியில் அப்படி இருந்ததா?” என்றாள் திரௌபதி. பிருஷதி “ ஏன்? என் மூதன்னைக்கே நான்கு கணவர்கள் இருந்தனர். நான் இளமையில் மூன்று கணவர்களுடன் மூதன்னை தன் மலையடிவாரத்து கான்வீட்டில் வாழ்வதை கண்டிருக்கிறேன்… இன்று பால்ஹிகர்களும் திரிகர்த்தர்களும் அன்னைவழி ஆட்சிமுறைமையை விட்டுவிட்டார்கள். ஆனால் உசிநாரர்களிடமும் குலிந்தர்களிடமும் அவ்வழக்கம் சிறுகுலங்களில் நீடிக்கிறது. கின்னரர்களிலும் லோமசர்களிலும் அரியணை அமர்பவளும் அன்னையே. நம் குடிகளில் கூட சத்ராவதிக்கு வடக்கே உசிநாரபூமியின் எல்லைகளில் வாழும் கிருவிகளிலும் துர்வாசர்களிலும் பலகணவர்களை மணந்த பலநூறு அன்னையர் உள்ளனர்” என்றாள் பிருஷதி. “இப்போதுதான் எல்லா பெண்களும் தங்களை நேரடி ஷத்ரிய குலம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இதையெல்லாம் சொல்லிக்கொள்ள நாணுகிறார்கள்.”
திரௌபதி நாக்கால் கன்னத்தை உள்ளிருந்து உப்பச்செய்து உதட்டைக் குவித்து மாயையை நோக்கி புருவம் தூக்கி “இப்போது என்னடி சொல்கிறாய்?” என்றாள். பிருஷதி திரும்பி மாயையை நோக்கியபின் “என்ன?” என்றாள். “எனக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்கள் வேண்டும் என்றேன். பதறுகிறாள்” என்றாள் திரௌபதி. பிருஷதி அந்தக்கேலியை புரிந்துகொள்ளாமல் “அவ்வழக்கம்தான் இன்று இல்லையே. இன்று நாமும் கங்காவர்த்தத்தின் பிற ஷத்ரியர்களைப்போல அரசனுக்கு அடங்கி அந்தப்புரங்களில் வாழ்கிறோம்” என்றாள்.
“அதைத்தான் நான் பேசிக்கொண்டு வந்தேன் அன்னையே. இந்த மணத்தன்னேற்பில் நான் ஏன் ஒருவரை மட்டும் தெரிவுசெய்யவேண்டும்? ஏன் என் மூதன்னையைப்போல ஐந்துபேரை தேர்வு செய்யக்கூடாது? இதோ இந்த ஐந்து ஆலயங்களிலும் ஆலயத்திற்கு ஒரு கணவன் எனக்காக நின்றிருந்தால் நம் குலத்திற்கே அது சிறப்பல்லவா?” மாயை சிரிப்பை அடக்கி மேலும் பின்னகர்ந்தாள். பிருஷதி அந்த எள்ளலையும் புரிந்துகொள்ளாமல் “ஆனால் நாளை வில்வித்தை அல்லவா ஒருங்கமைத்திருக்கிறார்கள்? அஸ்தினபுரியின் பார்த்தன் வந்து அதை வென்று உன்னை மணம் செய்துகொள்ளவேண்டுமென்றல்லவா உன் தந்தை எண்ணுகிறார்?” என்றாள்.
“ஆம். ஆனால் அவன் தோள்கள் சிறியவை அல்லவா? பெருந்தோள் கொண்ட வீரனை நான் விழையலாகாதா?” என்றாள் திரௌபதி. “அய்யோடி, உன் விருப்பத்தை முன்னரே சொல்லியிருக்கலாமே? நான் வேண்டுமென்றால் தந்தையிடம் சொல்லி போட்டியை மாற்றச் சொல்கிறேன். கதாயுத்தம் வைப்போம். பீமனோ துரியோதனனோ ஜராசந்தனோ அதில் வெல்வார்கள்” என்றாள் பிருஷதி. “அப்படியென்றால் நான் அர்ஜுனனை நோக்கி காதல் கொள்வேனே? விழிகூர்ந்த வில்லவனையும் எனக்குப் பிடித்திருக்கிறதே?”
பிருஷதி சினத்துடன் “என்னடி சொல்கிறாய்? விளையாடுகிறாயா என்ன?” என்றாள். ”அன்னையே, உங்களுக்கு என்னைத் தெரியும். நான் ஒற்றைத்திறன் மட்டும் கொண்ட பெண்ணா என்ன? வீரர்களை எனக்கு கண்டடைகிறீர்கள். ஆனால் என் அகம் முழுக்க நிறைந்திருப்பவை அரசுசூழ்நெறிகளும் அறநூல்களும் அல்லவா? என்னுடன் நூலுரைத்து அமர்ந்திருக்காத ஒரு வீரனை நான் எப்படி பகலில் பொறுத்துக்கொள்ள முடியும்?” பிருஷதி வாய் சற்று திறந்திருக்க சிலகணங்கள் மகளை நோக்கிவிட்டு திரும்பி மாயையை அனிச்சையாக நோக்கி உடனே கடும் சினம் கொண்டு “வாயை மூடு… என்ன பேச்சு இது? ஷத்ரியர் காதில் விழுந்தால் உன்னை பரத்தை என்பார்கள்” என்றாள்.
“அன்னையே, பரத்தையரைக் கண்டு பொறாமை கொள்கிறேன்.” பிருஷதி பதறிப்போய் மீண்டும் மாயையை நோக்கிவிட்டு “என்னடி சொல்கிறாய்?” என்றாள். “ஆணை அறியத் துடிக்காத பெண் உண்டா? அவர்களல்லவா ஆணை அணுகி உள்ளும் புறமும் அறிகிறார்கள். அத்தனை வகை ஆண்களையும் அறிகிறார்கள்?” பிருஷதி சினத்துடன் கையை வீசி எழுந்துகொண்டு “நீ என்னை சீண்டுகிறாய்… என்னைப்பார்த்தாலே உனக்கு இப்போதெல்லாம் ஏளனம்தான்…” என்றாள். திரௌபதியும் சிரித்தபடி எழுந்துகொண்டு “உங்களை சினம் கொள்ளவைக்கவே கேட்டேன்… விளையாட்டுக்கு” என்றாள். “இதிலெல்லாமா விளையாடுவது?” என்றாள் பிருஷதி. திரும்பி மாயையை நோக்கி “என்னடி சிரிப்பு? வெளியே சென்று அரசர் வழிபட்டுவிட்டாரா என்று பார்” என்று சீறினாள்.
மாயை வெளியே சென்றபோது கருணர் ஓடிவந்து “அரசர் இளைய அரசியை அழைத்தார். அவர்கள் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். மாயை உள்ளே சென்று வணங்கி “அரசர் பார்க்கவிழைகிறார்” என்றாள். பிருஷதி மேலாடையை சரிசெய்து “அந்த பட்டத்துக்காரி சென்றுவிட்டாளா?” என்றாள். “தெரியவில்லை அரசி” என்றாள் மாயை. “சென்று பார். அவள் அருகே நின்றாள் என்றால் நான் என்ன செய்வேன் என்றே எனக்குத்தெரியாது… அவள் முகத்தைப்பார்த்தாலே…” என்றபின் திரும்பி திரௌபதியிடம் “என்ன சிரிப்பு? அவள் முகம் என்ன அரசியின் முகம் போலவா இருக்கிறது? யார் அவள்? மலையடிவாரத்தில் கொடி கொய்து கூடைசெய்துகொண்டிருந்தவள்…” என்றாள்.
அவர்கள் வெளியே வந்ததும் கருணர் வணங்க பிருஷதி “என்ன வேண்டுமாம் உங்கள் அரசருக்கு? அவளுடன் கிளம்பி அடுத்த ஆலயத்திற்குச் செல்லவேண்டியதுதானே” என்றாள். கருணர் “தங்களைப் பார்க்கவேண்டுமென அரசர் விழைகிறார் அரசி” என்றார். “என்னைத்தான் தினம் அந்தப்புரத்தில் பார்க்கிறாரே. அவையில் பார்ப்பதற்கு நான் தேவையில்லை. சோமக குலத்தின் கூடைமுடைபவள்தான் தேவை…” என்றாள். கருணரின் விழிகள் ஒருகணம் மாயையை வந்து தொட்டுச்சென்றன.
மண்டபத்தின் அருகே துருபதன் நின்றிருந்தார். அவர் அருகே சற்று கூன்விழுந்த தோள்களுடன் ஏற்றிக்கட்டிய குடுமி கொண்ட முதிரிளைஞன் ஒருவன் நின்றிருந்தான். அந்தணன் என்பது முப்பிரிநூலில் இருந்து தெரிந்தது. அரசருக்கு அப்பால் அகல்யை மேலாடையை கையில் பற்றியபடி நின்றிருக்க அவள் விழிகள் திரும்பி பிருஷதியைப் பார்ப்பதை தொலைவிலேயே காணமுடிந்தது. “கண்களைப்பார். கழுகின் கண்கள். எங்கிருந்தாலும் என்னை பார்த்துவிடுவாள். என் உதட்டசைவைக் கொண்டே நான் பேசுவதை கேட்டுவிடுவாள்…” என்றாள் பிருஷதி.
”அப்படியென்றால் பேசவேண்டாமே” என்றாள் திரௌபதி. ”ஏன் பேசக்கூடாது? நான் என்ன அவள் அடிமையா? என் குடிக்கும் இங்கே ஐந்தில் ஒருபங்கு இடமிருக்கிறது” என்றாள் பிருஷதி. திரௌபதி சிரித்துக்கொண்டு முன்னால் சென்றாள். முதிரிளைஞனிடம் பேசிக்கொண்டிருந்த துருபதன் திரும்பி அவள் வருவதைக் கண்டு முகமன் சொன்னார். அவள் அருகே சென்று தலைவணங்கி விலகி நின்றாள். முதிரிளைஞன் தலைவணங்கி “பாஞ்சாலத்தின் இளவரசியை வணங்குகிறேன். என்பெயர் கல்பகன். காம்போஜத்திலிருந்து இங்கே வந்திருக்கும் வைதிகன். தங்களை சந்தித்தமை என் மூதாதையர் வாழ்த்தால் நிகழ்ந்த பேறு” என்றான்.
திரௌபதியின் பார்வை அவன் விழிகளை சந்தித்தபோது அவை ஒரு கணம்கூட பதறி விலகவில்லை என்பதை மாயை கண்டாள். மிக இயல்பாக அவை திரும்பி தன் விழிகளை நோக்கி புன்னகைத்து தலைவணங்கியபோது அவளும் தலைவணங்கி புன்னகை செய்தாள். அவன் அரசரிடம் “என் போன்ற குடிகள் இளவரசியரை வெளியே விழி பார்த்துப் பேசும் வழக்கமே பிற ஷத்ரியநாடுகளில் இல்லை அரசே” என்றான். துருபதன் “ஆம், தெற்கே வங்கத்தில் அவர்கள் முகபடாமிட்டுக் கொண்டுதான் வெளியே வருகிறார்கள்” என்றார். “ஆனால், பாஞ்சாலம் என்றுமே பெண்களின் நாடு.”
“கல்பகரே, நீங்கள் வேள்விகள் செய்வதுண்டோ?” என்றாள் திரௌபதி. துருபதன் “இல்லை, இவர் நெறிநூல் அறிஞர். நான் வந்ததுமே ஸ்தானிகர் வந்து சொன்னார். காம்போஜத்தில் இருந்து நெறிநூல் முழுதறிந்த வைதிகர் ஒருவர் வந்திருக்கிறார், சிலநாட்களாக இங்கே மாலையில் அவர் நூலுரை நிகழ்த்துகிறார் என்று. பார்க்க விழைந்தேன்” என்றார். திரௌபதி அவனை நோக்கி புன்னகையுடன் “எந்த குருமரபு?” என்றாள். “தைத்ரிய ஞானமரபில் பிங்கல குருமரபு. என் ஆசிரியர் வசிஷ்டரின் வரிசையில் வந்தவர்.”
“என்னென்ன நூல்கற்றிருக்கிறீர்?” என்றாள் திரௌபதி விழிகளை விலக்காமல். அவள் விழிகளை அவ்விதம் சஞ்சலமின்றி நோக்கும் முதல் ஆண்மகன் அவன் என மாயை எண்ணிக்கொண்டாள். ”பராசர சம்ஹிதையும் வசிஷ்டநீதியும் முதன்மை நூல்கள். அரிதான பிரஹாஸ்பத்யம் உட்பட அனைத்து நூல்களையும் கற்றிருக்கிறேன். இளவரசி கனிந்தால் விரும்பிய நூலை நினைவிலிருந்தே பாடம் சொல்லவும் முடியும்.” துருபதன் “அவளுக்கும் முதன்மை ஈடுபாடு நெறிநூல்களிலேயே. துர்வாசகுருமரபில் இருந்து ஏழு ஆசிரியர்களிடம் கற்றிருக்கிறாள்” என்றார்.
திரௌபதி புன்னகைத்தபடி “நெறிகளைக் கற்கும்தோறும் மேலும் கற்கவேண்டியிருக்கிறது” என்றாள். அவன் “நெறிகற்று முழுமைகொண்ட எவரும் மண்ணில் இருக்கமுடியாது. கணந்தோறும் மாறும் இவ்வுலகுக்கு ஏற்ப நெறிகளும் மாறவேண்டியிருக்கின்றது” என்றான். “ஐயமற்ற நீதி என ஒன்றை நூல்கற்ற ஒருவர் சொல்லவே முடிவதில்லை…” என்றாள் துரௌபதி. “ஆம் இளவரசி, அதுவே நெறிநூல்களின் இயல்பு” என்றான் கல்பகன்.
“அது ஏன் என நினைக்கிறீர்கள்?” என்றாள் திரௌபதி. “இளவரசி, மானுடரை தொகுத்து பொதுமைப்படுத்தி அதன் வழியாகவே நீதிகளை நாம் உருவாக்குகிறோம். மானுட இயல்பையும் வாழ்க்கைத்தருணங்களையும் அவற்றின் பொதுக்கூறுகளின் அடிப்படையில் தொகுத்து மையத்தை உருவகித்து அம்மையத்தை அனைவருக்குமாக வகுத்துரைப்பதன் பெயரே நீதி” என்றான் கல்பகன். “எல்லா நீதிகளும் பொதுக்கூற்றுக்களே. அவை மனிதன் என்கின்றன, ஆண் என்கின்றன, பெண் என்கின்றன. அன்னை என்பதில்லை, மைந்தன் என்பதில்லை. எவர் குலத்தையும் பெயரையும் சொல்வதில்லை.”
“பொதுமைப்படுத்தி பெறப்படும் அந்த மையப்புள்ளி என்பது ஒரு உருவகமே. நெறிவகுப்பவனின் கற்பனையில் உள்ள அம்மையத்தில் மட்டுமே எந்த நீதியும் முழுமையாக பொருள் பெறுகிறது. எனவே நீதியை நூல் சொல்லும் வரிபிறழாது நடைமுறைப்படுத்தும் அரசன் மொத்த மானுடத்தையே குற்றவாளிகளாக்கி தண்டிக்கவேண்டியிருக்கும். மானுடவரலாற்றில் பெரும் கொடுமைகள் நீதியின் பெயரால்தான் நிகழ்த்தப்பட்டுள்ளன” கல்பகன் தொடர்ந்தான்.
“எனவே நெறிவகுக்கும் முனிவனின் பணியும் நீதிவழங்கும் அரசனின் பணியும் முற்றிலும் எதிரெதிரானவை இளவரசி. ஒவ்வொரு வகுக்கப்பட்ட நீதியில் இருந்தும் பல்லாயிரம் விலக்குகள், பிறழ்வுகள், கழிவுகள் வழியாக ஒவ்வொரு தனிமனிதருக்கும் உரிய தனிநீதியை கண்டடைதலே அரசனின் கடமை. நெறிவகுப்பாளன் கடந்து வந்த தொலைவை முழுக்க நேர்எதிராக திரும்பிச்செல்லும் பயணம் அது. ஒவ்வொரு தனிவழக்கிலும் அது நிகழ்ந்தாகவேண்டும். அவ்விரு பயணங்களும் முற்றிலும் நிகர் செய்யப்பட்டிருக்கவேண்டும். அது ஓயாத பெருஞ்செயல்பாடு.”
திரௌபதியின் முகம் மாறியது “ஆம்“ என்றாள். எண்ணச்சுமையுடன் அவள் விழிகள் சரிந்தன. பின் காதணி கழுத்தில் மோத நிமிர்ந்து “கல்பகரே, இத்தனை செறிவாக எவரும் என் வினாவுக்கு இன்றுவரை விடை சொன்னதில்லை” என்றாள். “நான் இளமையில் நீதி என்பது சமரசமற்றதாகவே இருக்கமுடியும் என நம்பிக்கொண்டிருந்தேன். ஒவ்வொருமுறை அவ்வாறு நீதி வழங்கியபோதும் அது சற்று பிழையாகவும் இருப்பதையே கண்டேன். அப்பிழை என் தேர்ச்சிக்குறைவால் என்றெண்ணி ஒவ்வொரு தீர்ப்புக்குப்பின்னரும் கலக்கம் கொண்டேன்.” கல்பகன் “இளவரசி, மாற்றமற்ற நீதி என்பது தெய்வங்களுக்குரியது. அதன்படி தெய்வங்களை மட்டுமே விசாரணைசெய்து தண்டிக்கமுடியும்” என்றான். திரௌபதி சட்டென்று சிரித்து விட்டாள்.
“மானுடர் காமகுரோதமோகங்களால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அக்காமகுரோதமோகங்கள் கொண்ட நாம் அரியணை அமர்ந்து நீதிவழங்க முற்படுகையில் ஒவ்வொரு குற்றத்தையும் அவ்வடிப்படை இச்சைகளைக் கொண்டே புரிந்துகொள்ளவேண்டும். மாறாத நீதி என்பது கருணை அற்றது. அன்பின் விளைவாக மெல்ல கூர்மழுங்கும் நீதியையே மானுடம் கோரி நிற்கிறது. அன்பின் பொருட்டு எங்கே எவ்வண்ணம் நீதியை சமரசம் செய்துகொள்ளலாம் என்பதே அரசன் அறிந்தாகவேண்டியது.”
“அப்படியென்றால் எதற்கு இத்தனை நூல்கள்? தன் அகச்சான்றின்படி அரசன் ஆணையிடலாமே?” என்றார் துருபதன். ”அரசே, அகச்சான்று என்பது வாள். அதை நெறிநூல்களில் ஓயாது தீட்டிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் அதில் நம் தன்னலம் துருவாகப்படிந்துவிடும்” என்றான் கல்பகன். திரௌபதி “ஆம்… அது ஓர் அணிச்சொல். ஆனால் எனக்குள் அது பெரும் பொருள் கொள்கிறது” என்றாள்.
கருணர் அப்பால் பந்த ஒளியில் வந்து நின்றார். துருபதன் அவரை நோக்கியபின் “மீண்டும் நாம் சந்திப்போம் கல்பகரே. அரண்மனைக்கு வருக” என்றபின் தலையசைத்தார். கல்பகன் துருபதனையும் பிருஷதியையும் திரௌபதியையும் முறைப்படி வணங்கிவிட்டு மாயையை நோக்கி அன்புடன் புன்னகைத்து வணங்கி பின்னகர்ந்தான்.
திரௌபதி கருவறைக்குள் வெண்தாமரையின் ஒன்பது இதழடுக்குகளுக்கு மேல் வெள்ளைக்கலையுடுத்தி யாழ் ஏந்தி நின்றிருந்த சரஸ்வதியை நோக்கி வணங்கினாள். இடதுமேல் கையில் விழிமணிமாலையும் வலது கீழ்க்கையில் ஏடும் அமைந்திருந்தன. இருபக்கமும் நெய்விளக்குகள் அசையாச்சுடர்களுடன் நின்றிருக்க எங்கும் நோக்காத நோக்குடன் தேவி கனவில் ஆழ்ந்திருந்தாள்.
அவள் கைகூப்பி கண்மூடி ஆழ்ந்து மீண்டு திரும்புகையில் அருகே நின்றிருந்த கல்பகன் விழிகளை சந்தித்தாள். அவளை அதுவரை கூர்ந்து நோக்கி நின்றிருந்த அவன் அவள் நோக்கின் முன் சற்றும் நிலையழியாமல் புன்னகைத்து “தங்கள் விருப்பத்தெய்வம் சொல்மகள் என்று எண்ணுகிறேன் இளவரசி” என்றான். திரௌபதி புன்னகைத்து “இல்லை… ஐந்து தேவியர் முன்னரும் ஒன்றையே உணர்கிறேன்” என்றாள். அவன் புன்னகைசெய்தான்.
அவள் வாயில் நோக்கி நடக்கையில் துருபதன் அகல்யையை நோக்கி “அடுத்து நாம் செல்லவிருப்பது சாவித்ரி தேவியின் ஆலயம் அல்லவா?” என்றார். அவள் பிருஷதியை ஓரக்கண்ணால் பார்த்தபடி தலையசைத்தாள். “செல்வோம்” என்றார் துருபதன். அவள் பிருஷதி மேல் விழி நாட்டி தலையாட்டியபின் முன்னால் செல்ல அவளுடன் துருபதனும் நடந்தார். பிருஷதி மெல்ல ஒரு எட்டு பின்னால் வந்து திரௌபதியிடம் “அவள் பார்வை முழுக்க என்னிடமே இருந்தது… பார்த்தாயா?” என்றாள். “தங்கள் பார்வை முழுக்க அவர்கள் மேல்தான் இருந்தது அன்னையே” என்றாள் திரௌபதி. மாயை புன்னகைத்தாள்.
துருபதன் நின்று திரௌபதி அருகணைந்ததும் மெல்ல “யாரென்று தெரிகிறதா?” என்றார். திரௌபதி ஆம் என தலையசைத்து புன்னகை செய்தாள். அப்பால் அகல்யை நின்று அவர் பிருஷதியை அணுகவே பின்னடைந்தார் என்று எண்ணி முகம் சிவந்து கழுத்தைச் சொடுக்கி மேலாடையை விரைவாக இழுத்துக்கொண்டாள். பிருஷதி அதைக்கண்டு புன்னகைத்து திரௌபதியை நோக்கி உதட்டைக் குவித்துக்கொண்டு திரும்ப திரௌபதி திரும்பி மாயையை நோக்கி புன்னகை செய்தாள்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்