வலி

என் வீட்டு மாடியில் மூன்று அறைகள் கட்டிக்கொண்டிருக்கிறேன். படுக்கை அறை வாசிப்பறை மற்றும் ஒரு சிறிய வரவேற்பறை. செங்கல்கட்டு நடந்துகொண்டிருக்கிறது. நேற்றுமாலை தண்ணீர் விடுவதற்காக மேலே சென்றேன். சுவரில் ஒரு ஏணி. எளியமுறையில் மரப்பட்டைகளை ஆணிகளால் அடித்து செய்தது. கொத்தனார்கள் அதைத்தான் பயன்படுத்திவந்தார்கள். அதில் ஏறி மேலே தண்ணீர் ஊற்றுவதற்காகச் சென்றேன். அதன் படி உடைந்து கீழே விழுந்தேன். விழுந்த இடத்தில் மண்வெட்டி இருந்தது. என் வலதுகாலின் மேல்பகுதியில் அதுவெட்டி நீளமானகாயம். ரத்தப்பெருக்கு

துணியால் இறுகக்கட்டிக்கொண்டு டாக்டரிடம் சென்றேன். கொக்கியால் குத்தி தையல் போட்டார். ஊசி போட்டு மாத்திரைகள் கொடுத்தார். ரத்தம் கசிய வீடுவந்து சேர்ந்தேன். சற்றுநேரம் வரை வலி ஏதும் இல்லை. ஆனால் இரவு படுத்து தூங்க முயன்றபோது சற்று நேரம் ஒரு மயக்கத்துக்குப் பின்னர் விழிப்பு. உடனே கடுமையான வலி ஆரம்பித்தது. வலி காயத்தின் மேல் நின்று துடிப்பது போல் இருந்தது. வலியின் அதிர்வுக்கும் இதயத்தின் அதிர்வுக்கும் தொடர்பு இருப்பது போல் இருந்தது.

வலியை எதிர்கொள்ள சிறந்த வழி என்பது வலியை கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்பதே. வலியில் நாம் நினைப்பவை எல்லாமே வலியுடன் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. எதையும் கூர்ந்து நோக்கும்போது நம்முடைய மனம் அதில் இருந்து மெல்ல விலகிவிடுகிறது. அதை வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கிறது. அந்த வேடிக்கை அவ்வனுபவத்தில் உள்ள அச்சம், துயரம், வலி போன்றவற்றை பெருமளவுக்குக் குறைத்து விடுகிறது

வலியை ஒரு தாளம்போல கவனித்தபடிக் கிடந்தேன். வலி என்று நாம் சொல்வது நம் மனம் உணரும் ஒரு பொறுக்க முடியாத நிலையை. அந்த நிலை உடல் உறுப்பில் இருந்து மனதுக்கு செல்கிறது. வலி மனிதர்களை அவர்கள் தங்களைப்பற்றி கொண்டிருக்கும் கற்பனைகளை எல்லாம் களைந்துவிட்டு, எளிய விலங்குகள்தான் அவர்கள் என்று தெரிவிக்கிறது. வலி மனிதர்கள் உண்மையில் எத்தனை தனியர்கள் என்று அவர்களுக்குக் காட்டுகிறது. வலி மனிதர்களுக்கு மனம் என்பது உடலில் இருந்து எத்தனை தூரம் விலகி இருக்கிறது என்று தெளிவாக்குகிறது.

கோமல் சுவாமிநாதன் கடுமையான முதுகுத்தண்டு புற்றுநோயால் அவதிப்பட்டு மரணம் அடைந்தவர். புற்றுநோய் கண்டபின் அவர் நாடகம் போடுவதை நிறுத்திவிட்டார். அவரது நண்பர் ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் தியாகராஜனிடம் போய் தனக்கு ஒரு மாத இதழ் நடத்த உதவும்படிக் கேட்டார். தியாகராஜன் அவரிடம் ‘சுபமங்களா’வை எடுத்து நடத்தும்படிச் சொன்னார். அனுராதா ரமணால் ஒரு பெண்கள் இதழாக நடத்தப்பட்டு நஷ்டம்வந்த இதழ் அது. கோமல் அதை ஓர் நடுவாந்தர இலக்கிய இதழாக நடத்தினார். அதன் வழியாக நவீனத் தமிழிலக்கியத்தின் ஒரு புதிய காலகட்டத்தையே தொடங்கி வைத்தார்.

சுபமங்களாதான் ஓர் எழுத்தாளனாக என்னை வடிவமைத்த இதழ். அதில் நான் எழுதாத இலக்கமே இல்லை. கதைகள், பல பெயர்களில்  கட்டுரைகள், மதிப்புரைகள்… கோமல் இனிய சமவயது நண்பரைப்போல என்னிடம் பழகியவர். என் சிறுகதைத்தொகுதி ‘மண்’ அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்யபப்ட்டிருக்கிறது. அந்நூல் வெளிவந்தபோது அவர் இல்லை. அவருடன் சுபமங்களாவும் நின்றுவிட்டது.ஆனால் தமிழில் நடு இதழ்களின் ஒரு காலகட்டத்தை அது தொடங்கிவைத்தது.

மிக மிகக்கடுமையான வலியுடன் வாழ்ந்தபடி கோமல் அந்த இதழை நடத்தினார். ஒருமுறை பார்க்க வந்த ஒரு நண்பர் ”வலி எப்டி இருக்கு?” என்று கேட்டபோது ”அந்த கதவிடுக்கிலே வெரலை வையுங்க. கதவை  வேகமாகா மூடுங்க…அப்டியே இறுக்கிப்புடிச்சுகிட்டு நாள் முழுக்க இருங்க.அப்டி இருக்கு” என்று கோமல் சொன்னதாகச் கோமலே சொன்னார். நான் தொலைபேசியில் அ¨ழைக்கும்போது அவர் படுக்கையில் எழுந்து அமரும் வலி முனகல் கேட்கும். ”சிரமப்படுத்தறேனா சார்?” என்று நான் கேட்பேன். ”இல்லவே இல்லை…உங்க குரலே எனக்கு மருந்து” என்பார். எந்த இளம் எழுத்தாளர் கூப்பிட்டாலும் அவருக்கு உற்சாகம்தான்.

கோமலுக்கு என்னைப்பற்றி மிகமிக மதிப்பிருந்தது. நான் தொடர்ந்து என் வாசகர்களால்  மனம் நிறைந்து பாராட்டப்படும் அதிருஷ்டம் கொண்ட எழுத்தாளன். ஆனால் என் வாழ்நாளிலேயே என்னைப்பற்றி ஒருவர் சொன்ன உச்சக்கட்ட பாராட்டு அவர் வாயில் இருந்து உணர்ச்சிகரமாக நான் கேட்டதுதான்.

கோமலுக்கு வைணவ உரை இலக்கியத்தில் ஆர்வம் இருந்தது. அவர் சைவமரபைச் சார்ந்தவர், சைவ நம்பிக்கை கொண்டவர் என்றாலும் அந்த தமிழ் அவரை ஈர்த்தது. வைணவ உரை சார்ந்து ஏராளமான நல்ல நூல்கள் அவரிடம் இருந்தன. நான் விஷ்ணுபுரம் எழுதும் நாட்கள் அவை. ஆகவே வைணவம் பற்றி நிறையவே பேசினோம். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தார் கோமல். ஆகவே அந்த மரபுசார்ந்த முகத்தை அவர் வெளிக்காட்டிக் கொண்டதே இல்லை. கோமல் ஓர் நாடக ஆசிரியராக வாழ்க்கையை நடத்த முற்போக்கு இலக்கியச் சூழல் பேருதவி புரிந்தது. மேலும் அவர் கடைசிவரை ஒரு மார்க்ஸிய நம்பிக்கையளர். அதாவது சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியைப்பற்றிய எந்தத் தகவலையும் கேட்கவே விரும்பாதவர்.

ஆனால் கடைசிக்காலத்தில் அவர் இமயமலைக்குச் சென்றுவரவேண்டும் என்று விரும்பினார். அவரது குடும்பம் சம்மதிக்கவில்லை. அவரது நோய் முற்றி முதுகெலும்பு உளுத்து விட்டிருந்தது அப்போது. தாளமுடியாத வலியை ‘தேள்கடி’ என்று சொல்லி சிரிப்பது அவரது வழக்கம். ஆனால் இமயத்தை, குறிப்பாக கைலாயத்தைப் பார்க்காமல் இறந்தால் தனக்கு வீடுபேறு இல்லை என்று அவர் நம்பினார். அந்த உணர்ச்சியைப் புரிந்துகொள்ளக்கூடியவன் என்று அவர் என்னை எண்ணியமையால் என்னிடம் அவர் அதைப்பற்றிப் பேசினார். நான் முதலில் அதை ஆதரித்தாலும் அவரது வலியால் சுண்டிய உடலைக் கண்டதும் ”எதுக்கு சார்?”என்றேன். ”சும்மா இரு”என்று சொல்லிவிட்டார்.

ஆகவே உடலை வதைக்கும் கொடும் வலியுடன் கோமல் இமயத்துக்குக் கிளம்பிச்சென்றார். பத்ரிநாத்துக்கும் கேதார்நாத்துக்கும் கைலாயத்துக்குமாக நாற்பதுக்கும் மேல் கிலோமீட்டர்களை அவர் நடத்தே கடந்தார். அந்தப்பயணம் பற்றி அவர் சுபமங்களாவில் எழுதினார். ஒன்றரை மாதப் பயணம் முடிந்து மீண்டுவந்தபோது நான் பிரமிப்புடன் கேட்டேன். ”எப்டி சார் முடிஞ்சது?வலிக்கலியா?” கோமல் அவருக்கே உரிய மெல்லிய வாய்கோணலுடன் சிரித்து ”ஈசனருளாலே வலியே இல்ல” என்றார்

”நெஜம்மாவா?”என வாய் பிளந்தேன். ”போய்யா யோவ்… ஈசனுக்கு இப்ப அம்மைகூட போட்டிபோட்டு ஆடவே நேரமில்லை. அம்மையும் பெண்ணியம் கத்துக்கிட்டிருக்கா தெரியுமோ?” என்று சிரித்தார்.”வலிச்சுதா சார்?” . ”வலின்னா அப்டி ஒரு வலி…எலும்ப கொக்கி போட்டு உடைச்சு எடுக்கிற மாதிரி… முதுகுவலி அப்டியே கழுத்து தோள் கை எல்லா எடத்துக்கும் வந்திட்டுது… பத்து நிமிஷம் நடந்தா பத்து நிமிஷம் நிப்பேன். அப்டியே மெல்ல மெல்ல ஏறிப் போனென்.. திரும்பிவராட்டிகூட பரவால்லைன்னு நெனைச்சா எங்கயும் போயிடலாம்…”

”நின்னப்ப வலி கொறைஞ்சுதா சார்?”. ”யோவ், இந்த வலி கொறையணுமானா நல்ல வெறகுக்கட்டைய அடுக்கி தீய வச்சுட்டு அதில ஏறி சொகமா காலை நீட்டி படுக்கணும்… நடந்தா ஒருமாதிரி வலின்னா நின்னா வேற மாதிரி வலி… ஒரு சேஞ்ச் நல்லதுதானே, அதுக்குத்தான் நிக்கிறது. அப்றம் திருப்பியும் நடக்கத் தொடங்கறப்பதான் உச்சகட்ட வலி…நடக்க வேணாம், நடக்கணும்னு நெனைச்சாலே போரும்… வலிதான்”

நான் பெருமூச்சு விட்டேன்.கோமல் ”சரி, நான் இப்டி வரணும்னு நீ நெனைச்சிருந்தா அது உன் கணக்குன்னு அவன்கிட்ட சொன்னேன். கோயிலுக்குப்போயி சும்மா கும்பிடறதுக்கும்  அங்கப்பிரதட்சணம் செஞ்சு கும்பிடறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல… என் கூட நாநூறுபேரு கைலாசத்த பாத்தாங்க. நான் பாத்த கைலாசம் வேற… வலியெல்லாம் அப்டியே வெலகி ஒரு அஞ்சு நிமிஷம்…காலம்பற விடியுற வானத்துக்கு கீழே பொன்னை உருக்கி செஞ்ச கோபுரம்மாதிரி தகதகன்னு…அவ்ளவுதான் கடனை அடைச்சாச்சு… ” என்றார்

கடைசியாக போனில் அவரிடம் பேசினேன். சோந்து நைந்த குரலில் சொன்னார். ”அந்த நீச்சலடிக்கிற கதையை எழுதிட்டியா?” ”ஆமா சார்” ”அனுப்பு அதை” அவர் பேச்சு ஒருவகை முனகலாகவே இருந்தது. பேச்சுக்கு முன்னும் பின்னும் நீண்ட முக்கல்கள். ”பேசமுடியல்லை..வலி..பாப்பம்”

அந்தக்கதையை அவர் சுபமங்களா இதழுக்கு அச்சுக்குக் கொடுத்துவிட்டு இறந்தார். அவரது மரணத்துக்குப் பின்னர் அவரது அட்டைப்படம் போட்டுவந்த கடைசி சுபமங்களாவில் அந்தக்கதை பிரசுரமாயிற்று.

வலி தெறிக்கிறது காலில். இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும். வலியை ஒன்று இரண்டு என்று எண்ண முடியும் போலிருந்தது. அப்படி எத்தனை வரை எண்ணுவது? என் வலியை இந்தக்கணம் இப்பூமியில் பல்லாயிரம், பல லட்சம், பலகோடி படுக்கைகளில் வலித்துக்கிடக்கும் மக்களின் வலிகளுடன் சேர்த்து எண்ணினால்? முடிவிலி வரை எண்ணலாமா என்ன?

பிரபஞ்சம் தன் அணுக்கள் தோறும் ஒவ்வொரு கணமும் அழிவை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்று ரிக்வேத ரிஷி கண்டார். அழிவின் அதிபன் அரன். வலி என்பது அழிவை நம் அறியும் ஒரு விதம். மெல்லமெல்ல சீராக ஒலிக்கும் அழிவின் மந்திரம் அது. என் காலில் இப்போது துடித்துக் கொண்டிருப்பது பிரபஞ்ச அழிவின் ஒரு துளி. ஒரு துளி சிவம். [மறுபிரசுரம். முதல் பிரசுரம் 2008 அக்டோபர் 12]

பெருவலி சிறுகதை

முந்தைய கட்டுரைநோயும் அடைக்கலமும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇடவப்பாதி