பகுதி பதினைந்து : அன்னைவிழி – 5
லட்சுமிதேவியின் ஆலயத்தின் படிகளில் ஏறி உள்ளே நுழைகையில் திரௌபதி மெல்ல ஒரே ஒரு அடி எடுத்துவைத்தாள். அவள் அணிகள் அசைந்த ஒலியில் உருவான மாறுதலை உணர்ந்த அணுக்கச்சேடியான மாயை மெல்ல தன் விரைவைக் குறைத்து அவள் குரல் கேட்கும் அண்மைக்கு வந்து செவியை மட்டும் அவளை நோக்கி திருப்பினாள். திரௌபதி மெல்லியகுரலில் “உள்ளே வருகிறாரா?” என்றாள். மாயை கூந்தலை சரிசெய்தபடி தலைதிருப்பி விழியோட்டித் திரும்பி இதழ்களை மட்டும் அசைத்து “இல்லை இளவரசி. அவர்களின் ரதம் உள்ளே நுழையவேயில்லை” என்றாள்.
திரௌபதியின் இதழ்களில் விரிந்த மெல்லிய புன்னகையை மாயை கண்டாள். அவள் அதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் திரௌபதியின் செயல்கள் எப்போதுமே அவள் எண்ணியிருக்காதபடி செல்பவை என அறிந்திருந்தாள். ஆலயத்திற்குள் நுழைந்து பூசெய்கைத் தாலத்தை ஸ்தானிகரிடம் அளித்துவிட்டு கருவறைக்கு முன்னால் பெண்களின் இடத்தில் அவள் விலகி நின்றுகொள்ள திரௌபதி வந்து அருகே இளவரசியின் பீடத்தில் நின்றாள். அப்பால் பட்டத்தரசியின் பீடத்தில் பிருஷதி நின்றதும் ஸ்தானிகர்கள் இருவர் அவளுக்கு மங்கலத்தாலம் அளித்து முறைமை செய்தனர்.
அவர்களைச் சுற்றி ஆலயத்தின் மங்கலவாத்தியங்கள் முழங்கிக்கொண்டிருந்தன. ஒரு பெரிய பட்டுத்திரைபோல அவ்வொலி அவர்களை சூழ்ந்துகொள்ள மிகத் தனிமையாக அங்கே நிற்பதுபோல் தோன்றியது மாயைக்கு. பிருஷதி குனிந்து திரௌபதியிடம் ஏதோ கேட்க அவள் கழுத்தை வளைத்து அதைக்கேட்டு இல்லை என தலையசைத்து ஏதோ சொன்னாள். மாயை அவளை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தாள். சின்னஞ்சிறிய பறவைகளுக்குரிய எச்சரிக்கையும் கூர்மையும் அவள் அசைவுகளில் எப்போதுமிருக்கும். கூடவே வேங்கையின் விரைவற்ற தோரணையும் கூடுவதன் விந்தையே திரௌபதி, பாஞ்சால இளவரசி. பாரதவர்ஷத்தை ஆள்வதற்கென்றே அனலிடை எழுந்த மகள்.
கருவறை முன் குவிக்கப்பட்டிருந்த அன்னப்படையலின் மீது மலர்களை அள்ளி வீசி சைகைகளும் மந்திரங்களுமாக பூசை செய்தபின் பூசகர் உள்ளே சென்றார். திரௌபதியின் உதடுகளின் அசைவில் அவள் குரலை மாயை பார்த்தாள். “யார் அவர்?” மாயை “நான் விசாரித்துச் சொல்கிறேன் இளவரசி” என்றபின் மேலும் சற்றுநேரம் ஆலயத்திற்குள் தேவிக்கு நிகழும் பூசனையை நோக்கி நின்றாள். பின்னர் இயல்பாக நடந்து மேலாடையை சரிசெய்தபடி விலகிச்சென்றாள். ஆலயமுற்றத்திற்குச் சென்று அங்கே தேர்களை ஒழுங்கு செய்து கொண்டிருந்த நூற்றுக்குடையவனிடம் பேசிவிட்டு திரும்பிவந்து மீண்டும் திரௌபதி அருகே நின்றாள்.
திரும்பியபோது திரௌபதியின் விழிகள் வந்து அவள் விழிகளை தொட்டுச்சென்றன. திரௌபதி தன் விழிகளை வைரம்போல உறுதியின் ஒளியாக மாற்றிக்கொண்டிருந்தாலும் முதல்முறையாக அவற்றுக்குள் ஓர் எண்ணத்தின் உயிரசைவு தெரிந்தது. ஒருபோதும் அவளில் வெளிப்படாதது. மாயை தனக்குள் புன்னகைசெய்துகொண்டாள். இதோ நீ சக்ரவர்த்தினி அல்லாதாகிவிட்டிருக்கிறாய். இதோ எளிய கன்னியாக என் முன் நின்றிருக்கிறாய். இதையல்லவா நான் இத்தனை நாள் எதிர்பார்த்திருந்தேன். இப்போது நீ எதுவாக எஞ்சுகிறாயோ அதுவே நீ.
மாயை தன் உள்ளத்தின் இளநகை விழிகளிலோ முகத்திலோ திகழாதபடி முற்றிலும் இறுக்கிக்கொண்டாள். அந்தச்சிறிய கால அளவைக்கூட அவளால் காத்திருந்து கடக்கமுடியவில்லை என்றால் அவளுக்குள் என்ன நிகழ்கிறது? மிக மென்மையான ஒன்று. மொட்டின் இதழ்கள் அல்லிப்பொதியை உடைத்து மணத்துடன் வெளிவருவதுபோன்றது. மிக மெலிந்தது. ஆமுகத்து கங்கை போல. ஆனால் அணைகட்டமுடியாத பெருவல்லமை கொண்டதும் கூட.
மாயை தன் எண்ணத்தை அடக்கியபோது உருவான சிறிய உடல் மாறுதல் வழியாகவே அதை அறிந்தவள்போல திரௌபதியின் விழிகள் பின்வாங்கின. அனல் பட்ட மலரிதழ்போல அவை சுருண்டு விலகுவதாக மாயை எண்ணினாள். அவள் விழிகளை சந்திக்க மூன்றுமுறை முயன்றாள். அவை முழுமையாகவே தேவியில் நிலைத்திருந்தன. சுடராட்டுகளின் சுழல்தல்களை கரிய மென்முகத்தின் கன்னக்கதுப்பின் வளைவின் ஒளியாகவே காணமுடிந்தது. ஒருவரை தவிர்ப்பதற்கு மிகச்சிறந்த வழி உண்மையிலேயே பிறிதொன்றில் மூழ்கிவிடுதல் என்று அறிந்த சூழ்மதி அவள். அப்போது அவள் சுடராட்டன்றி எதையும் அகத்தாலும் அறியவில்லை.
மாயை ஓர விழிகளால் அவளையே நோக்கிக் கொண்டிருந்தாள். பளபளக்கும் கருங்குழலின் அலைநெளிவு படிந்த சிறிய நெற்றிக்குக் கீழ் நீரலையென வளைந்தெழுந்த சிறு மூக்கு. சற்றே குமிழ் கொண்ட முகவாய். கைக்குழந்தைக் கன்னங்கள். கனத்தபீலிகள் கொண்ட பெரிய விழிகள். அவற்றில் எப்போதுமிருக்கும் கூர்மையின் ஒளி. நோக்குகையிலும் நோக்கவில்லை என எண்ணச்செய்யும் நிமிர்வு .
ஆனால் அவளை பேரழகியாக்கியது அவள் இதழ்கள். மிகச்சிறியவை. மேலுதடு அப்போது பொதியவிழ்ந்த மலரிதழ் என சற்று வளைந்து கனத்து மடிந்த கீழுதடுகள். ஆழ்ந்த கருஞ்செந்நிறம் கொண்டவை. சற்று முந்தைய கணத்தில் குருதி உண்டு எழுந்தவை போல அவற்றின் உள்குழிவில் ஈரச்செம்மை. மாயை தன் உள்ளத்தை திருப்பிக் கொண்டாள். எப்போதுமே அந்த எண்ணம் வந்து திகழ்ந்துவிடுகிறது. பசுங்குருதி. மானுடக்குருதி. அவ்வுதடுகளில் ஊறிக்கனிந்து ஒளிர்ந்து நிற்பது அதுதான்.
திரௌபதி விழிகளை அப்பால் திருப்பிக்கொண்டு மெல்லிய குரலில் “யார்?” என்றாள். மாயை சற்று உள்ளதிர்ந்தாள். முதல்முறையாக திரௌபதி தன் நிமிர்வை இழந்து இறங்கிவந்திருப்பதை உணர்ந்தபோது அது நிகழக்கூடாதென்றே தன் அகம் விழைகிறதென்று உணர்ந்தாள். நழுவிச்சரியும் மதிப்புமிக்க ஒன்றைப் பற்ற பதறும் கை போல தவித்தது உள்ளம். அவள் எங்கு வழுக்குகிறாள் என்று எக்கணமும் காத்திருக்கும் என் அகம் அது நிகழும்போது ஏன் ஏமாற்றம் கொள்கிறது. இது நான் என் ஆழத்துச் செப்புக்குள் பொத்தி வைத்திருக்கும் கருமுத்து. இதன் மதிப்பைத்தான் ஒவ்வொரு கணமும் கணித்துக்கொண்டிருக்கிறேன்.
தழல் மலரானது போல. தசையாகி உயிர்துடிப்பது போல. அவள் திரும்பிய முகத்தில் சிறிய இதழ்கள் ஒன்றுடன் ஒன்று அழுந்தி கன்னக்குவை சற்றே மடிந்திருந்தது. அவள் கழுத்தின் குழியில் இதயம் துடிப்பது தெரிந்தது. கன்னத்தில் சரிந்திருந்த சுருள்மயிர்க்கற்றை நிழலுடன் சேர்ந்து ஆடியது. இடைகடந்து விழுந்திருந்த நீள்கூந்தலில் அலைகள் எழ மெல்ல அசைந்து நின்றாள்.
மாயை மெல்லிய குரலில் “அவர் பெயர் கர்ணன்” என்றாள். திரௌபதியின் நீண்ட மென்கழுத்தில் ஒரு சிறிய அசைவாக மூச்சு கடந்துசென்றது. அவளுக்கு கர்ணன் யாரென்று தெரியும், உறுதிசெய்யத்தான் கேட்கிறாள் என்று மாயை அறிந்துகொண்டாள். “அஸ்தினபுரியின் இளவரசர் அருகே நின்றிருந்த பெருந்தோளர். சுயோதனர். அவர் இளவல் அருகே நின்றவர், துச்சாதனர். அஸ்தினபுரியின் இளவரசரால் அங்கநாட்டரசராக முடிசூட்டப்பட்டவர் கர்ணன். சூதரான அதிரதனுக்கும் ராதைக்கும் பிறந்தவர். வசுஷேணன் என்று பிறவிப்பெயர்” என்றாள்.
“நெடுநாள் ஆரியவர்த்தத்தில் இல்லை என்றார்களே?” என்றாள் திரௌபதி நெற்றிக்கூந்தலை திருத்தியபடி இயல்பாகத் திரும்பி. எதையும் சொல்லாத விழிகள் அல்லவா என மாயை அகநகையுடன் எண்ணிக்கொண்டாள். “ஆம், அவர் துரோணரிடம் வில்பயின்றார். துரோணரால் அவமதிக்கப்பட்டார் என்கிறார்கள். அதன்பின் நிஷாதர்களிடமோ கந்தர்வர்களிடமோ வில்தேர்ந்து வந்து பாண்டவனாகிய அர்ஜுனனை களத்தில் வென்றார். மேலும் திறன் தேடுவதற்காக தென்திசை சென்று அகத்தியரிடம் கற்றுத்தேர்ந்தார் என்கிறார்கள்.”
திரௌபதி “பரசுராமரிடம் என கேள்விப்பட்டேன்” என்றாள். மாயை புன்னகையுடன் தலையசைத்தாள். ஆலயத்தின் உள்ளிருந்து மணியோசையுடன் பூசகர் வெளியேவந்து பலியேற்புச் சடங்குகளை செய்யத் தொடங்கினார். ஊண்கொள்ளலும் மலர்கொள்ளலும் முடிந்ததும் திரௌபதி கைகூப்பி வணங்கி விட்டு திரும்பினாள். அவள் வெளியே செல்வதைச் சுட்டும் சங்கு முழங்கியது. திரௌபதி அவள் இயல்புக்கேற்ப மிதந்து செல்பவள் போல வாயிலை நோக்கி சென்றாள்.
அருகே நடக்கையில் திரௌபதியின் உடல் அதிர்ந்துகொண்டிருப்பதை மாயை தன் உடலால் உணர்ந்தாள். அதெப்படி உணரமுடிகிறது, வெறும் உளமயக்கா அது என ஐயம் கொண்டு சற்று விலகியபின் மீண்டும் அருகே சென்றாள். அதை தெளிவாகவே உணரமுடிந்தது. கண்களை மூடிக்கொண்டபோதும் இன்னும் தெளிவாகத் தெரிந்தது. அப்பால் எவரோ வந்து நிற்கையில் மூடப்பட்ட கதவு கொள்ளும் அதிர்வு அது. இல்லாதது எனினும் உணரமுடிவது. மாயை அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று உளம் கூர்ந்தாள். அவளுக்குள் எண்ணங்கள் எங்கே பாய்கின்றன. நிலையழிந்த சிறுகுருவி அவ்வுள்ளம். அடுத்தகணம் எங்கு செல்லும் என அதுவே அறியாது.
“அவர் அணிந்திருந்த அந்த மணிக்கவசம் எங்குள்ள மரபு?” என்றாள் திரௌபதி. மாயை சற்று திகைத்து “எவர்?” என்றாள். ஒருகணம் சினந்து கனன்ற திரௌபதியின் பார்வை வந்து மாயையை தொட்டுச்சென்றது. அவள் சற்று குன்றி பின்பு மேலும் திகைத்து “எவரை சொல்கிறீர்கள் இளவரசி?” என்றாள். திரௌபதியின் இதழ்கள் அழுந்தி கீழுதடு முன்னால் வந்து சென்றது. அவள் கடும்சினம் கொள்வதன் குறி அது என அறிந்த மாயை சற்று பின்னடைந்தாள்.
ஆலயவாயிலை நோக்கிச் சென்ற திரௌபதியின் இடை சற்று ஒசிந்து அந்த மென்வளைவில் செம்பந்த ஒளி மின்னியது. கைவளை ஒலிக்க காதில் குழை ஆடி கழுத்தில் தொட்டு விலக, மெல்லத் திரும்பி “சூரியபடக் கவசம்… அவர் நெஞ்சில் அணிந்திருந்தது…” என்றாள். மாயை கால்கள் தளர சற்று அருகே சென்று அவளை நோக்கினாள். தன் அச்சமும் குழப்பமும் உண்மையானவை என மறுஎண்ணத்தால் உணர்ந்தபின்னரே திரௌபதி தணிந்து வந்து அதைச் சொல்கிறாள் என்று அவளுக்குப்புரிந்தது. “இளவரசி, தாங்கள் சொல்வதை நான் எவ்வகையிலும் அறியேன்” என்றாள்.
திரௌபதி நின்றுவிட்டாள். அவள் இமைகள் நன்றாக மேலெழுந்து விரிந்த கருவிழிகள் மாயையை நோக்கி திகைத்து சிலகணங்கள் நின்றன. ”நீங்கள் சொல்வது அங்கநாட்டரசர் கர்ணனை சற்று முன் துர்க்கை ஆலயத்தில் பார்த்ததை பற்றித்தானே?” என்றாள் மாயை. “ஆம்” என்றாள் திரௌபதி. மாயை பொருள் திரளா நோக்குடன் நிற்க திரௌபதி “அவர் தன் மார்பில் செவ்வைரங்களால் ஆன சூரியபடம் பொறிக்கப்பட்ட பொற்கவசம் அணிந்திருந்தார், அதைக் கேட்டேன்” என்றாள்.
“எப்போது?” என மூச்சின் ஒலியில் மாயை கேட்டாள். “உள்ளே நாம் செல்லும்போதே… நாம் விலகும்போதும் அவர் மார்பில் அது இருந்தது. தேரில் அக்கவசம் சுடர அவர் எழுந்து நின்றதை நான் கண்டேன்.” மாயை சற்று முன்னால் வந்து உறுதியாக “இளவரசி, நான் அவரை பலமுறை உறுதியாகவே பார்த்தேன். அவர் மார்பில் நகை ஏதும் அணிந்திருக்கவில்லை” என்றாள். திரௌபதியின் உதடுகள் மிகமெல்ல ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து விடுபட்டன. அந்த ஒலியைக்கூட கேட்கமுடியும் என்று தோன்றியது.
“அவர் காதுகளில் இளஞ்செந்நிற ஒளிசுடர்ந்த குண்டலங்களைக் கண்டேன் மாயை.” சட்டென்று மாயையின் உடல் சிலிர்த்தது. கதைகளில் கேட்டது. அப்படி நிகழக்கூடுமா என்ன? ஆனால் அந்த மாயங்களுடன் வருபவர்கள் கந்தர்வர்கள் அல்லவா? குளிர்ந்தபோதுதான் அக்கணங்களுக்குள்ளேயே உடல் வியர்த்திருந்ததை அவள் அறிந்தாள். “நீ பார்க்கவேயில்லையா?” என்றாள் திரௌபதி. “இல்லை இளவரசி… அதை தாங்கள் மட்டுமே கண்டிருக்கிறீர்கள்… தங்கள் உளமயக்காக இருக்கலாம்.”
திரௌபதி இதழ்களின் இருபக்கமும் சிறிய மடிப்புகள் விழ வெண்பற்களின் கீழ்நுனி ஒளியுடன் தெரிய புன்னகை செய்தாள். அவள் குழல் திருத்தித் திரும்பியபோது அவள் கழுத்து மிகமென்மையாக சொடுக்கி அசைந்தது. பெண்ணின் உள்ள எழுச்சியை வெளிப்படுத்தும் அசைவு அது என மாயை அறிந்திருந்தாள். அவள் கரியகன்னங்களில் கழுத்தில் வெம்மை ஏறிக் கனல்கொண்டதுபோல தெரிந்தது. மூச்சில் முலைக்குவைகள் சற்றே அசைய மேலுதட்டை இழுத்து பற்களால் கடித்து “ஆம்” என்றாள்.
பிருஷதி முன்னால் சென்று நின்று திரும்பி நோக்க திரௌபதி இயல்பாக முன்னால் சென்றாள். மாயை பின்னால் நடந்தபடி “ஒருவேளை அவர் தென்னகத்தில் மாயங்கள் கற்றிருக்கலாம். அங்கே உளமயக்கும் விழிமயக்கும் காலமயக்கும் கற்பிக்கும் பெருமாயர் உள்ளனர் என்று நூல்களில் அறிந்திருக்கிறேன்…” என்றாள். திரௌபதி திரும்பாமலேயே புன்னகை செய்தாள். “உண்மை இளவரசி. அவர் ஏதோ மாயம் செய்திருக்கிறார்” என்றாள் மாயை.
திரௌபதி வாய்விட்டு நகைத்தபடி திரும்பி “ஆம், அவர் செய்த மாயம்தான்… நானறிவேன்” என்றாள். அச்சிரிப்புடன் அவள் திரும்பியபோது எதிரே நான்கு பரத்தையர் நடுவே கையில் மலர்க்கூடையுடன் படியேறி வந்த கரிய உருவம் கொண்ட அந்தண இளைஞன் அவள் முகத்தைக் கண்டு விழிமலைத்து அசையாமல் நின்றுவிட்டான். அவள் அவனை நோக்கியபடி படிகளில் இறங்க மாயை அவனையே திகைப்புடன் நோக்கினாள்.
இளவரசியை அப்படி விழிமூடாமல் நேர்நோக்கு கொள்வது பெருங்குற்றச்செயல் என்று அறிந்த இளம்பரத்தை அதை அவன் அறிந்திருக்கவில்லை என்பதை கவனித்து படியில் இறங்கி வந்து அவன் தோளைத்தொட்டு மிரண்ட விழிகளுடன் மேலே செல்லலாம் என்றாள். அவன் அதை கேட்டதாகவே தெரியவில்லை. அவன் விழிகள் திரௌபதியில் நிலைத்திருக்க இதழ்களில் ஒரு சொல் உறைந்து நின்றது.
பிருஷதியின் முன்னால் சென்ற ஆலயத்தின் ஸ்தானிகராகிய அந்தணன் திரும்பி நோக்கி அவனருகே ஓடிச்சென்று சினத்துடன் கையில் இருந்த வெள்ளிப்பூணிட்ட பெருந்தடியை ஓங்கி “விலகிச்செல் மூடா” என்று கூவி அடிக்கமுனைந்த கணம் அவன் பாம்புப் படம்போல தலை திருப்பி நோக்கினான். அந்தத் தடி சுழன்று எழுந்தபோது ஒருகணம் கூட அவன் உடல் அனிச்சையாக அச்சம் கொள்ளவில்லை. பதறி விலகவும் இல்லை. அவன் விழிகள் மட்டுமே அதை எதிர்கொண்டன. அவ்விழிகளைக் கண்டதும் ஸ்தானிகர் கையிலிருந்த தடி தாழ்ந்தது.
அவன் விலகிக்கொள்ள திரௌபதி அவனை விழிதூக்கி நோக்கியபடி கடந்து சென்றாள். கையில் மலர்க்கூடையுடன் அவன் அவளை இறுதிப்படி வரை திரும்பி நோக்கினான். தடியுடன் ஸ்தானிகர் அவளை நோக்கி ஓடிவந்து “பித்தன்போலிருக்கிறான் இளவரசி… விழிகளை நோக்கினால் தெரிகிறது… பொறுத்தருளவேண்டும்” என்றார். திரௌபதி தன் தேர் அருகே நின்று மீண்டும் திரும்பி அவனை நோக்கினாள். அவன் அங்கேயே படிக்கட்டின் நடுவே நின்று அவளை நோக்கிக்கொண்டிருந்தான். இரு பரத்தையர் அவனருகே வந்து அவன் கைகளைப்பற்றி மேலே அழைத்தனர்.
“அவனை தண்டிக்கிறோம் அரசி” என்றார் ஸ்தானிகர். “இப்போதே காவலர்களை வரவழைத்து… அடேய்!” என திரும்பிய அவரை அவள் மெல்லிய குரலால் தடுத்தாள். “வேண்டாம்…” என்றாள். அவர் “இளவரசி…” என்று தவிக்க “அவரை நீங்கள் தண்டிக்க முடியாது…” என்றபின் தேரில் ஏறிக்கொண்டாள். மாயை ஒருமுறை திரும்பிப்பார்த்தபின் தானும் தேரில் ஏறிக்கொண்டாள். திரௌபதி மான்தோல் இருக்கையில் அமர்ந்துகொண்டு திரைச்சீலையை மெல்ல விலக்கி வெளியே நோக்கிக்கொண்டு வந்தாள்.
அவள் முகத்தை மாயை நேராகவே நோக்கினாள். விழிகள் சுடர, முகமெங்கும் செம்மை ஓட திரௌபதி புன்னகைத்துக்கொண்டிருந்தாள். மாயைக்கு மீண்டும் அச்சம் வயிற்றை குளிரச்செய்தது. “இளவரசி, உண்மையிலேயே தாங்கள் அவர் நெஞ்சில் மணிக்கவசத்தை பார்த்தீர்கள் என்றால் அது மாயம்தான்… நாம் சென்றதுமே நிமித்திகரை வரவழைத்து…” என்றதும் திரௌபதி திரும்பி நோக்கி “தேவையில்லை மாயை. அது என் கற்பனை என்று சொன்னேன் அல்லவா?” என்றாள்.
“அந்தக்கற்பனை தங்கள் உள்ளத்தில் எப்படி வந்தது? அதைத்தான் பார்க்கவேண்டும். இளவரசி, தாங்கள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி என்று பாடாத சூதர் இல்லை. ஆரியவர்த்தத்தின் பேரரசர்கள் அனைவரும் அதற்காகவே வந்திருக்கிறார்கள். நாளை தாங்கள் எடுக்கப்போகும் முடிவின் அடிப்படையிலேயே தேசங்களின் எதிர்காலங்கள் முடிவாகப்போகின்றன. இந்நிலையில் தங்கள் உள்ளம் தெளிவாக இருக்கவேண்டும். அதை ஒருவர் மாயமாக கவர முடியும் என்றால்…”
அவள் பேசுவதை திரௌபதி அறிந்தது போலவே தெரியவில்லை. “கர்ணன் சூதர்குலத்தவர். அங்கநாட்டு மணிமுடியைச் சூடினாலும் இன்னமும் ஷத்ரியர்களால் ஏற்கப்படாதவர். அவருக்கு ஆரியவர்த்தத்தை வென்று பேரரசை அமைக்கும் கனவு இருக்கலாம். அதன்பொருட்டே அவர் வந்திருக்கிறார். அஸ்தினபுரியின் இளவரசர் மூடர். கர்ணன் அவருக்கு துணையாக வரவில்லை என்றுகூட அறியாதவர்” என்றாள் மாயை. “நான் சொல்வதை கேளுங்கள் இளவரசி… நாம் இதை இப்படி விடக்கூடாது.”
திரௌபதி புன்னகையுடன் திரும்பி “நாளை மணத்தன்னேற்பில் இளையபாண்டவர் அர்ஜுனனை இவர் வெல்லக்கூடுமா?” என்றாள். மாயை சற்று திகைத்து “இளையபாண்டவரா? அவர்கள் எரிபட்டார்களே” என்றாள். “இல்லை. அவர்கள் உயிருடனிருக்கிறார்கள் என்று ஒற்றர் செய்திவந்தது. ஏகசக்ரநகரியில் பகன் கொல்லப்பட்டான் என்று தெரிந்ததுமே தந்தை சொல்லிவிட்டார். இளையபாண்டவராகிய பீமசேனர் உயிருடனிருக்கிறார் என்று. அவர்கள் கங்கைக்கரையில் இடும்பவனத்தில் இருந்ததாக பின்னர் செய்திவந்தது. ஏழாண்டுகளுக்குப்பின் அவர்கள் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்கள் என்றால் அது இங்கே மணத்தன்னேற்பு நிகழ்வுக்காகவே!”
மாயை ”ஆனால் அவர்கள் இங்கு வந்ததாக எவரும் சொல்லவில்லையே” என்றாள். “வந்துவிட்டார்கள்” என்றாள் திரௌபதி. அவள் விழிகளைக் கண்டதுமே மாயை புரிந்துகொண்டு திகைப்புடன் தேரின் திரைச்சீலையை பிடித்துக்கொண்டு “அவரா?” என்றாள். திரௌபதி மேலும் விரிந்த புன்னகையுடன் “ஆம்” என்றாள். மாயை பெருமூச்சுடன் தளர்ந்து இருக்கையில் அமர்ந்துவிட்டாள். ”என்ன?” என்றாள் திரௌபதி? “அனைத்தும் ஏதோ கூத்து போலிருக்கின்றன இளவரசி. அவர் ஏன் அந்தணராக வரவேண்டும்?”
“அவர்களில் மூத்தவருக்கு அந்தணர் வேடமன்றி பிற ஏதும் பொருந்தாது என்கிறார்கள்” என்று திரௌபதி சிரித்தாள். ”சொல், அர்ஜுனனும் கர்ணனும் மணநிகழ்வில் வில்லேந்தினால் எவர் வெல்வார்?” மாயை “அதை எப்படி சொல்லமுடியும் இளவரசி?” என்றாள். “எவர் வென்றாலும் அதை ஷத்ரியர் ஏற்கமாட்டார்கள். நாளை மணமண்டபத்தில் குருதி விழுவது உறுதி.” திரௌபதி சிரித்து “ஆம், குருதி விழாமல் விழா முடிந்தால் அதிலென்ன சிறப்பு?” என்றாள்.
அவளை அணுகிச்செல்லும்போது ஓர் இடத்தில் எப்போதும் அடையும் அச்சத்தை மாயை அடைந்தாள். அவள் பெண்ணல்ல, பெண்ணுருக்கொண்டு தீயில் எழுந்த கொற்றவை என்று சூதர்கள் பாடுவது உண்மை என்று தோன்றும் கணம் அது. அவள் பார்வையை விலக்கிக்கொண்டு திரைச்சீலையின் அலையடிப்பை நோக்கிக்கொண்டிருந்தாள். வெளியே நகரத்தின் ஓசைகள் கேட்டன. சகட ஒலி. வணிகக்கூச்சல்கள். வாழ்த்தொலிகள்.
”இருவரையும் ஒப்பிட்டுக்கொண்டிருந்தேன் மாயை” என்றாள் திரௌபதி. “ஒருவர் இவ்வுலகை நோக்கி கொடுத்துக்கொண்டே இருப்பவர். ஒருவர் அனைத்தையும் அள்ளி எடுத்துக்கொண்டே இருப்பவர். கர்ணனிடம் இனிய தயக்கம் ஒன்றிருக்கிறது. அவர் விழிகளில் தெரிந்த நாணம் அழகானது. அவரது தயக்கம் என்னுள் ஓர் அன்னையை எழுப்புகிறது. அத்துடன்…” திரௌபதி கண்களில் நாணம் சிவக்க சிரித்து “அவர் கண்களில் தெரியும் ஒன்று உண்டு. அவர் இதுவரை பெண்ணை அறிந்ததில்லை” என்றாள்.
மாயையும் சிரித்துவிட்டாள். “ஆம், அதை அறிவது மிக எளிது” என்றாள். “ஆனால் இவர் பெண்களில் திளைப்பவர். அவருடன் வந்த பரத்தையரின் உடல்களிலேயே அது தெரிந்தது. அத்தனைபேரும் விழையும் காதலன்.” மாயை ஒரு கணம் திரௌபதியை நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டாள். “கோட்டைக் கதவுகளை உடைத்து உட்புகுந்து வெல்பவர்… மாயை, உண்மையைச் சொல். பெண்பித்தர்களை விரும்பாத பெண் உண்டா இவ்வுலகில்?”
“இளவரசி, என்ன பேச்சு இது?” என்றாள் மாயை சினத்தில் முகம் சிவக்க. “உண்மையைச் சொல்” என்றாள் திரௌபதி சிரித்துக்கொண்டே அவள் கையைப்பிடித்து. “நான் சொல்லப்போவதில்லை” என்றாள் மாயை. “நீ அவனைப் பார்த்தாய். உன் காமம் அவனை அறிந்தது. ஆகவேதான் நான் சொல்லாமலேயே நான் அவனைக் குறிப்பிடுவதை உணர்ந்தாய்!” மாயை நுண்ணிதாக நிலையழிய அவள் உடலில் அவ்வசைவு வெளிப்பட்டது.
திரௌபதி “சொல்” என்று சொன்னபோது அவள் குரல் மாறியிருந்தது. மாயை திடுக்கிட்டு அவள் முகத்தைப்பார்த்தாள். அங்கே ஆணையிடும் அரசியைக் கண்டு தலைதாழ்த்தி மிக மெல்லியகுரலில் “ஆம், பெண்களுக்கு பிடிக்கும்” என்றாள்.
“ஏன்?” என்றாள் திரௌபதி அதே கூர்குரலில். “ஏனென்றால்…” என்று மாயை இழுத்தபின் “அத்தனை பெண்களும் அவனை பார்க்கிறார்கள். எதனால் அவனுக்கு அத்தனை பெண் என்று அகம் வினவுகிறது. அதை அறியாமல் அகம் அடங்காது. ஆகவே நாம் அவனை பார்க்கிறோம்.”
மாயை மூச்சிரைக்க “அதோடு, அவன் எப்போதுமே காமத்தை நினைவுபடுத்துகிறான். அவன் அதுவன்றி வேறல்ல. அவனைப் பார்க்கையிலேயே உள்ளம் கிளர்கிறது” என்றாள். திரௌபதி மீண்டும் புன்னகை செய்து “ஆம்” என்றாள். “அத்துடன் இன்னொன்றும் உள்ளது. அத்தனை பெண்ணைக் கண்டவனுக்கு தான் மட்டும் மிகமிகத் தனித்தவள், அவன் வேறெங்கும் அடையமுடியாதவள் என ஒவ்வொரு பெண்ணும் எண்ணுகிறாள்.”
மாயை முலைகள் விம்மி அமைய பெருமூச்சு விட்டு கன்னக்குழலை விரல்நுனியால் ஒதுக்கி கழுத்தை வருடி வளை ஒலிக்க கைதாழ்த்தி மெல்ல உடல் ஒசிந்து விழிதிருப்பி “நாம் வேறெதையாவது பேசுவோமே இளவரசி” என்றாள். அவளை கூர்ந்து நோக்கி தனிக்குரலில் “எதை அஞ்சுகிறாய்?” என்று திரௌபதி கேட்டாள். மாயை ஒருகணம் அவளை நோக்கி பின் பார்வையை விலக்கிக்கொண்டு தன் கையைப்பார்த்தாள். அது திரைச்சீலையை கசக்கிக்கொண்டிருப்பதைக் கண்டு பிடியை விட்டு மடியில் கைகோர்த்து வைத்து சற்று முன்னால் குனிந்தாள்.
”நான் உண்மையிலேயே அவனுக்கு அரியவள் அல்லவா? நீ என்ன நினைக்கிறாய்?” என்றாள் திரௌபதி. திடுக்கிட்டு திரும்பி நோக்கிய மாயை “இளவரசி… தாங்கள்…” என்று ஏதோ சொல்ல வந்து நிறுத்திக்கொண்டாள். அவள் அறிந்த திரௌபதி முழுமையாகவே மாறிவிட்டிருந்ததை கண்டாள். அவள் உடலுக்குள் பிறிதொருத்தி குடியேறியிருந்தது போல. ஆலயங்களில் வாழும் அணங்கு அவளில் நுழைந்திருக்குமோ என்று மாயை ஒரு கணம் எண்ணிக்கொண்டாள்.
“சொல், நீ கேட்க வந்தது என்ன?” என்று திரௌபதி கேட்டாள். “ஒன்றுமில்லை இளவரசி” என்றாள் மாயை. திரௌபதி அவள் விழிகளுக்குள் நோக்கி “கர்ணனைக் கண்டதும் நான் காதல்கொண்ட பேதையானேன் என்று எண்ணியாய் அல்லவா?” என்றாள். மாயை “இல்லை இளவரசி…” என்றபின் தலைதூக்கி அவள் விழிகளை சந்தித்து “ஆம், அப்போது அப்படி தோன்றியது” என்றாள். இமைசரித்து குரல் தழைய “நான் அதை விழைந்தேன் இளவரசி” என்றாள்.
“அது உண்மைதான்” என்றாள் திரௌபதி. மாயை முகம் மலர்ந்து மெல்லிய துள்ளல் உடலில் நிகழ தலைதூக்கி “காதல்கொள்வது இனியது இளவரசி. மானுடர் மேலும் கீழும் பதினான்கு உலகங்களின் வாழ்க்கையையும் மண்ணிலேயே வாழ்கிறார்கள் என்கின்றனர் சூதர். காதல்கொண்டவர்கள் விண்ணுக்கு மேல் கந்தர்வர்களின் உலகில் வாழ்கிறார்கள்” என்றாள். திரௌபதி “ஆம், அதை உணர்கிறேன். இனிய இசை முடிந்தபின் சிலகணங்கள் நீளும் மீட்டலாக உள்ளம் மாறிவிட்டதுபோலிருக்கிறது” என்றாள்.
“அதை கந்தர்வர்களின் இசை என்பார்கள்… அகம் மட்டுமே கேட்கும் இசை அது.” திரௌபதி புன்னகைகொண்டு “கர்ணன் இனிய காதலன் மாயை. பேரழகன். நிமிர்வும் தருக்கும் கொண்டவன். கூடவே நாணமும் தயக்கமும் நிறைந்தவன். அவன் உடல் என்னைக் கண்ட கணம் முதல் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது. என்னை அவன் விழிகள் வழிபட்டன. என் ஒவ்வொரு மயிர்க்காலிலும் அவன் பேரழகை காண்பான். என் கால்கள் தொட்ட மண்ணையே தூயது என எண்ணுவான்” என்றாள்.
பின்னர் சிரித்து “பாவம், என் பின்னால் வந்து இவ்வாலயத்திற்குள் நுழையக்கூட அந்த ஆண்மகனால் முடியவில்லை. ஆண்மை திரண்டவன் நாணம் கொள்வதைப்போல மகளிர் விரும்புவது வேறில்லை. எப்பெண்ணும் விழையும் முழுமையான காதலன் அவனே” என்றாள்.
மாயை மலர்ந்த முகத்துடன் “ஆம், இளவரசி” என்றாள். “அங்கே நின்றிருந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது நீங்கள் இருவரும் ஒன்றின் இருபாதிகள் என. முழுமையான இணை என்பது அரிதாகவே மண்ணில் நிகழ்கிறது.” திரௌபதியின் கண்களில் சிரிப்பு மேலும் முனைகொள்ள, முகம் சற்று இறுகியது. “ஆனால் என் அந்தப்புரத்திற்கு நள்ளிரவில் வரச்சொல்வதென்றால் அர்ஜுனனையே தேர்ந்தெடுப்பேன். அச்சமும் நாணமும் அற்றவன். தயக்கங்களின்றி என்னை கையகப்படுத்தக்கூடியவன். இருள் வழியாக வந்து உள்ளங்களுக்குள் நுழையும் இந்திரன்” என்றாள்.
“இளவரசி!” என்று தவிப்புடன் சொல்லி இருகைகளையும் இறுக்கி தன் நெஞ்சுடன் சேர்த்துக்கொண்டாள் மாயை. “அப்படியும் ஓர் ஆண்மகன் தேவைதானே மாயை? அவனுக்கு நான் ஒரு பொருட்டே அல்ல. வெறும் உடலென்பதற்கு அப்பால் என்னை அவன் பொருட்படுத்தவே போவதில்லை. என் அகம் அவனுக்கு தெரியவே போவதில்லை.” கனன்ற முகத்துடன் மாயையை நோக்கியபடி திரௌபதி சொன்னாள் “வெறும் உடலாக பெண்ணை எண்ணுபவன் அல்லவா உண்மையான காமத்தை அவளுக்குக் காட்டமுடியும்?”
“என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை இளவரசி” என்று சற்று தழுதழுத்த குரலில் மாயை சொன்னாள். “காமமும் காதலும் போரிடட்டும். வெல்வது எதுவென்று பார்ப்போம்” என்றபடி திரௌபதி சாய்ந்து அமர்ந்து தன் தொடைகள் மேல் கைகளை நீட்டிக்கொண்டாள். பின்னர் தனக்குள் என மெல்ல சிரித்து “இரண்டும் வெல்லமுடியும் என்றால் நன்று” என்றாள்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்