மலை ஆசியா – 6

ஜனவரி முப்பதொன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் டத்தோ சரவணன் தன் தொகுதிக்குச் செல்வதாகவும் கூடவே செல்லலாம் என்றும் சொன்னார்கள். அதிகாலையிலேயே கிளம்பிவிடுவோம் என்றார்கள். ஆறு மணிக்கு கிளம்ப வேண்டும் என்றால் நாஞ்சில் நான்கு மணிக்கு எழுந்திருக்க வேண்டும். நான் தூங்கும்போது புதிய செல்போனில் மகளிடம் பேசிக்கொண்டிருந்தார். கண்விழிக்கும்போதும் பேசிக்கொண்டிருந்தார். நான் பீதியுடன் அவரைப்பார்க்க, ‘நான் குளிச்சாச்சு’ என்றார்.

நான் அவசரமாக பாத்ரூமுக்குப் பாய்ந்து சென்று மூன்றே நிமிடத்தில் பல்தேய்த்து குளித்து தயாராகி வந்தேன். ஒரேசமயம் பல செயல்கள். நாஞ்சில் அவரது வழக்கமான ஆபீசர் உடையில் தமிழ் சினிமா கலெக்டர் போல நின்றிருந்தார். டியோடரண்ட் அடித்து பௌடர் போட்டார். கண்ணாடி முன் நின்று தலை சீவினார். பளபளப்பான ஷ¥க்களை மேலும் துடைத்தார். நான் ஜீன்ஸ் போட்டு டி ஷர்ட்டை மேலே போட்டு சீப்பை தேடி அது இல்லாததனால் தலையை கையாலேயே சீவி தயாரானேன்.

லி·ப்டில் இறங்கும்போது அந்த வெள்ளைக்காரி கூடவே ஏறினாள். ‘இவதான்” என்றார் நாஞ்சில். அவளை சமாதானப்படுத்தலாம் என்று அவள் கண்கள் இவரிடம் திரும்பியதும் புன்னகை செய்தார். அவள் பதறி வெளுத்து திரும்பிக்கொண்டாள். ”கோவம் போலிருக்கு” என்றார் என்னிடம் ”அவளுக ஜாக்கெட் போடாம அலையறதுக்கு நமக்கு எவ்வளவு கோவம் வரணும்…” என்றேன். ”வரமாட்டேங்கே” என்றார் நாஞ்சில்.

காரில் கிளம்பி அமைச்சரின் குழுவுடன் சேர்ந்து கொண்டோம். அமைச்சரின் வண்டி எவருக்காகவும் நிற்காது, நாம்தான் கூடவே செல்லவேண்டும் என்றார் மனோகரன். ஆகவே யாரும் விலகியெல்லாம் செல்லவேண்டாம் என்றார். முத்தையா பளபளப்பான முன்னெற்றியுடன் தீவிரமாக  வந்தார்.

அகலமான சாலையில் இருபக்கமும் எண்ணைப்பனை தோட்டங்களாகவே வந்து கொண்டிருந்தன. அங்கெல்லாம் மனித நடமாட்டம் இருப்பது போல தோன்றவில்லை. ஊர்கள் தெருக்கள் எதுவும் கண்ணில் படவில்லை. ஒருமணிநேரம் வரைச் சென்றபின்னர்தான் ஒரு குடியிருப்பு தெரிந்தது. ஆனால் அது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம். கிராமம் என்பதற்கு நம் மனதில் இருக்கும் சித்திரம் வரவேயில்லை.

அமைச்சரின் தொகுதியான தாபாவில் முதலில் நாங்கள் சென்ற இடம் ஒரு சர்ச். எல்லாருமே தமிழர்கள். அசெம்ப்ளீஸ் ஆ·ப் காட் சர்ச் என்று தோன்றியது. பிரார்த்தனை முடிந்து ஒரு நாற்பது பேர் ஒரு பொதுக்கூடத்தில் எங்களுக்காக காத்திருந்தார்கள். அது திருமணம் போன்ற சடங்குகளுக்கான கூடம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அங்கிருந்த மக்கள் தமிழகத்தில் எந்த சிறு கிராமத்திலும் ஒரு தேவாலயத்தில் நாம் காணும் மக்களைப் போன்றிருந்தார்கள். சிலர் மலேசிய பாணி உடையணிந்திருந்தார்கள் என்பது மட்டுமே வேறுபாடு. வறுமையின் விளைவான மெலிவும், பணிவும், சந்தேகமும், வெட்கமும் கலந்த முகபாவனைகள் ”கொலாலம்பூர் இல்ல மலேசியான்னு தெரியுது” என்றார் நாஞ்சில்நாடன். ஒருவேளை உலகமெங்கும் எல்லா நாட்டிலும் தமிழர்கள் இப்படி அடித்தட்டு மக்களாகவே இருப்பார்களா என்ற ஏக்கம் ஏற்பட்டது

அமைச்சர் அவர்களிடம் பேசினார். அவர்களுக்காக செய்யப்பட்டிருக்கும் சில நலத்திட்டங்களைப் பற்றிச் சொன்னார். அவர்களின் கோரிக்கைகளை கேட்டார்.  தேவாலயத்தில் சில திருப்பணிகள் செய்யவேண்டும், அரசு நிதி தேவை என்றார் அவர்களின் தலைவர் போலிருந்தவர். ஒருவர் அங்கே வரவிருந்த ஒரு கல்விநிறுவனம் என்ன ஆயிற்று என்றார். அதன் பணிகள் முடிவடையவில்லை, அது வந்தால் அந்த மக்களுக்குப் பயன் கிடைக்கும் என்றார் அமைச்சர்.

பெரும்பாலான மக்களிடமிருந்து குடியிருப்பு சம்பந்தமான கோரிக்கைகளே வந்துகொண்டிருந்தன. அங்கே அதுதான் மையச்சிக்கல் போலிருக்கிறது. தோட்டங்களின் பழைய குடியிருப்புகளில் இருந்து வெளியே வந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் வசதிக்காக வேறு வீடுகளை தேடுகிறார்கள். ஒருவர் குடியிருப்பின் முன்னால் ஒரு பெரிய மரம் சாய்ந்து நிற்கிறது அதை வெட்ட வேண்டும் என்று கோரினார்.  அதை உடனே வெட்டும்படிச் சொன்னார் அமைச்சர்.

கூட்டம் முடிந்ததும் கொண்டுவந்திருந்த பரிசுகளை அங்கிருந்தவர்களுக்கு வழங்கினார். பெரும்பாலும் நம் ஊர் லுங்கிகள். அவர்கள் சிரித்துக்கொண்டு வந்து வாங்கினார்கள். கூட்டங்களை உணவு அளித்து உள்கூடங்களில் நடத்துவதும் பரிசு கொடுப்பதும் அந்த நாட்டு வழக்கம். மக்கள்தொகை குறைவான நாடுகளில் சாத்தியம்தான்

அடுத்தது ஒரு இந்துக்கோயில். மௌனகுரு சுவாமிகள் என்ற துறவி சமாதியடைந்த இடத்தில் உருவாக்கப்பட்ட கோயிலில் அவரது சமாதிதினம் அன்று கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்தது. ஒரு கேரளத்துக் கோயில் போல தோற்றமளித்தது. சாப்பாடு உண்டு. அதற்கான சமையல் ஏற்பாடுகள் அருகே நிகழ்ந்துகொண்டிருந்தன. ஐம்பதுபேர் இருந்தார்கள். பல பெண்களிலும் மலையாளச் சாயலைக் கண்டேன். பூமாலைகளை தோரணமாகக் கட்டிக்கொண்டிருந்தார்கள். ஒரு இடம் முழுக்க வாழைக்குலைகள்.

கோயிலைச் சுற்றி வந்து வணங்கினார் அமைச்சர். அவருக்கு வெள்ளிச்சரிகை போட்ட தலைப்பாகை அணிவித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்கள். உடனே கிளம்பி சரிவான சாலையில் இறங்கிச் சென்றோம். ஒரு சிறிய ஆற்றின் கரையில் கல்யாண ஊர்வலம் போல் ஒன்று நடந்துகொண்டிருந்தது. ஐம்பது பேர் இருப்பார்கள். பின்புதான் தெரிந்தது, காவடிகட்டுகிறார்கள் என்று.

அப்பகுதி வீடுகள் எல்லாமே முற்றத்தில் செம்பருத்திச் செடிகள் நிற்க இறக்கிய முன் தாழ்வாரமும் ஜன்னல்களில் படரவைத்த கொடிகளுமாக கேரள வீடுகளை நினைவூட்டின. அதிக வறுமை தென்படவில்லை, செழிப்பும் இல்லை. மீ£ண்டும் மையச்சாலைக்கு வந்து பயணம் செய்து ஒரு குடிசைப்பகுதிக்குச் சென்றோம். தகரமும் மரமும் கொண்டு கட்டப்பட்ட ஒரு நீளமான குடிசை தீ விபத்தில் எரிந்து போயிருந்தது. அந்த குடிலில் வாழ்ந்த குடும்பம் இன்னொரு இடத்தில் ஒண்டி வாழ்வதாகச் சொன்னார்கள்.

அமைச்சர் சென்றதும் அவர்களைகூட்டி வந்தார்கள். தமிழகக் கிராமங்களில் காணும் வறுமையுற்று, இழிவுற்று, தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் இழந்து பராரிகளாகிப்போன மக்கள். மெலிந்த கரிய உடல்கள். அமைச்சர் அவர்களுக்கு நிதி உதவிசெய்தபோது கண்ணீருடன் கைகூப்பினார்கள். என்ன கேட்பதென்றே அவர்களுக்கு தெரியவில்லை.

அந்தக்குடிசை ஒரு சீனருக்கு உரியது. அவர்கள் அங்கே வாடகைக்குத்தான் இருந்தார்களாம். அவர் அமைச்சர் வந்த செய்தி கேட்டு [பாய்ந்து] வந்துகொண்டே இருப்பதாக ஒரு மலாய்பெண்மணி அமைச்சரிடம் சொன்னார். நிதி உதவி பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கே ஒழிய வீட்டுக்காரருக்கு அல்ல என்று சொல்லி அமைச்சர் கிளம்ப அந்தப்பெண்மணி பின்னாலேயே வந்தார்.

குடிசையருகே முழங்கால் உயரமுள்ள ஒரு கோயில் இருந்தது. உள்ளே தரைவரை நீண்டு தொங்கும் தாடியுடன் சபரிமலை அய்யப்பன் அமர்ந்திருந்தார். ரொம்ப வயதான அய்யப்பன், ர் போடவேண்டும். அவர் ஏதோ சீன போதிசத்வர். நாங்கள் போவதைப்பார்த்தபடி சிலர் லுங்கிகளுடன் நின்றனர். அவர்கள் எதிர்கட்சிக்காரர்கள், நாங்கள் போனதுமே அவர்கள் வந்து பணம் கொடுப்பார்கள் என்றார் அமைச்சரின் உதவியாளர்.

அதன்பின் நீண்ட பயணம். மலைப்பாதை சுற்றிச் சுற்றிச் சென்றது. சாலையோரங்களில் பல்வேறுவகையான காய்கறிப்பண்ணைகளைப் பார்த்தேன். சில இடங்களில் நாற்றுகளை உருவாக்கும் இடங்கள் இருந்தன. பாலிதீன் கூடாரங்களுக்குள் நாற்றுப்பைகள் அடுக்கப்பட்டிருந்தன. பன்னிரண்டு மணிக்கு ஓரான் அசிலி என்ற பழங்குடியினர் வாழும் மலைக் கிராமத்தைச் சென்று சேர்ந்தோம்.

மலாய் நாட்டு பூர்வகுடிகளின் கிராமம் அது. ஓராங் அஸ்லி என்றால் பூர்வகுடிகள் என்றுதான் பொருள். அவர்களில்  செமாங், செனாய், மலாய் என மூன்று இனங்கள். செமாங் இனம் திராவிட உடல் கொண்டது. செனாய் இனம் சீன உடல். மலாய் இனம் கலப்புத்தன்மை கொண்டது. நாங்கள் சென்ற கிராமத்தில் எல்லா அடையாளங்கள் கொண்ட மனிதர்களும் இருந்தார்கள். கிராமத்தலைவராக எங்களை வரவேற்றவர் உசிலம்பட்டிப் பக்கத்துப் பெரிசு மாதிரி கறுப்பாக கண்களைச் சுருக்கி சிரித்துக்கொண்டு காட்சியளித்தார். அவரது மனைவி சீனப்பெண்மணி போலிருந்தார்

பொதுவாக இந்த மக்கள் மிக அழகாக இருப்பது போல தோன்றியது. காரணம் இவர்கள் கலப்பினம் என்பதே. வெள்ளையோ மஞ்சளோ கறுப்போ இல்லாத தாமிர நிறம், கூர் மூக்கு, பெரிய கண்கள் என எல்லா நல்ல அம்சங்களும் கொண்ட மக்கள். குழந்தைகளை அள்ளிக் கொஞ்சவேண்டும் என்ற ஆவலை அடக்கவே முடியாது. ஏகப்பட்ட குட்டி மண்டைகளை தொட்டு ‘நாம்?’ என்று கேட்டேன். அங்கும் பெயரென்றால் அதுதான். மலாய் மொழியில் உருது சம்ஸ்கிருதம் நிறையவே உண்டு. [அஸ்லி கூட உருதுச் சொல்லே. அசல்]தாங்கமுடியாத வெட்கம். அம்மாக்கள்தான் பெயர் சொன்னார்கள். குழந்தைபெயரா அவர்கள் பெயரா என்று தெரியவில்லை.

ஐம்பதாண்டுக்கு முன்புகூட அவர்கள் முழுக்கமுழுக்க மலைவாசிகளாக இலையாடையுடந்தான் இருந்திருக்கிறார்கள். இப்போதும் சுற்றுமுள்ள காடுகளில் இருந்து காய்கனிகளை சேகரித்து விற்பதும் வேட்டையும்தான் தொழில். அவர்களின் குடில்கள் செறிவாக ஒரு மலைச்சரிவில் அமைந்திருந்தன. மூங்கிலை சதைத்து தட்டியாக ஆக்கி பளபளப்பான பக்கம் மேலே தெரியும்படி கட்டப்பட்ட சிறிய வீடுகள் அழகானவை, வசதியானவை. சமையலறையும் படுக்கையறையும் வரவேற்பறையும் தனித்தனியாக இருந்தன.

பழங்குடிகள்.  இருபக்கமும் நாஞ்சில், கனகலட்சுமி.பல இன சாயல்களை கவனிக்கவும்

எல்லா வீடுகளும் தடித்த தூண்களுக்கு மேலே  ஐந்தடி உயரத்தில் அமைந்திருந்தன. பல வீடுகளில் அந்த வீடுகளின் அடியில் நாய்கள் கட்டப்பட்டிருந்தன. வேட்டைநாய்கள். வேட்டையாடிக் கொண்டுவந்த பன்றி ஒன்றை கம்பியால் கட்டிப்போட்டிருந்தார்கள். சாப்பாட்டுக்காக.  அந்த மக்கள் எல்லா உயிர்களையும் சாப்பிடுவார்கள். ஆகவே அவர்களுக்கு உணவுப்பஞ்சமே இல்லை. நாய்களை அவை ரிட்டயர் ஆனதும் சாப்பிட்டு விடுவார்கள். மலையாளத்தில் ரிட்டயர் ஆவதற்கு அடுத்தூண் என்று பெயர் . பிறரை அடுத்து உண்ணுதல். அடுத்தபடியாக உண்ணப்படுதல் என்றும் பொருளுண்டு போலும். புழுக்கள் பூச்சிகள் பாம்புகள் என அவர்களுக்கு தினமும் வேட்டை கிடைத்துக்கொண்டே இருக்கும்.

பொதுவாக உற்சாகமான மக்களாக தெரிந்தார்கள். வறுமையின் சுமை அல்லது இழிவுணர்ச்சி எவரிலும் இல்லை. அமைச்சர் உட்பட எங்களை தங்களுக்குச் சமானமாகவே நடத்தினார்கள். முந்தைய ஆட்சியில் அவர்களுடைய கிராமத்துக்கு போட்டுக்கொடுக்கப்பட்ட சாலை மழையில் அரிக்கப்பட்டிருந்தது. அதைச் செப்பனிட வேண்டும் என்றார் ஊர்த்தலைவர். வீடுகள் அத்தனை செறிவாக இருந்தாலும் சாக்கடையோ துர்நாற்றமோ குப்பைகளோ இல்லை. அழகான குடியிருப்பு என்றுதான் சொல்லவேண்டும். நான் விரும்பி அங்கே தங்குவேன் என்று தோன்றியது

ஊர்ப்பள்ளிக்கூடத்தில் கூட்டம். அமைச்சர் தாப்பாவில் இருந்து ஏற்பாடு செய்து கொண்டுவந்திருந்த உணவு வேனில் வந்திருந்தது. சாப்பாடு வந்த தகவல் கேட்டதுமே ஊரார் கூடிவிட்டார்கள். சாப்பாட்டில் கூச்சம் எல்லாம் இல்லை. சாப்பாடு எல்லாரும் பகிர்ந்து உண்பதற்கானது என்ற எண்ணம்தான். ஊர்க்கூடம் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம். பக்கத்து வகுப்பறையில் ஆங்கிலப்பள்ளிக்கான படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அங்கிருந்த ஆசிரியை அங்கே நூறு பிள்ளைகள் படிப்பதாகச் சொன்னார். பெண்களுக்கு அமைச்சர் லுங்கி பரிசுகளை அளித்தார்.

பழங்குடிகளின் ஊர்த்தலைவர்

கூட்டத்தில் அமைச்சருக்கு உள்ளூர் கட்சிக்காரர் வரவேற்பு சொல்ல ஊர்த்தலைவர் பேசினார். பின்பு சரவணன் பேசினார். அவை ஒலியாகவே எங்களுக்கு கேட்டன. அதன்பின்னர் கோரிக்கைகள். பல்வேறு கோரிக்கைகள். அமைச்சர் பதில் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆங் சான் சூகியின் சின்னத்தங்கச்சி மாதிரி நீளமுகத்துடன் ஒரு பேரழகி சிவப்பு ஆடையுடன் வந்திருந்தாள். அவள் சலிக்காமல் கேள்வி கேட்டாள். அமைச்சர் பதில் சொல்லச் சொல்ல மேலும் மேலும் அதிருப்தியுடன் கேட்டுக்கொண்டே இருந்தாள். துணைக்கு மற்ற பெண்கள். மடக்குகிறாள் என்று தெரிந்தது. அவள் மடக்க மடக்க இன்னும் பேரழகியாக தெரிய ஆரம்பித்தாள்

என்ன கேட்டாள் அவள் என்று நான் விசாரித்தேன். அங்கே அரசுப்பள்ளிகளில் ·பீஸ் கட்ட முடியாத பிள்ளைகள் அதைக் கட்டவேண்டாம் என்று சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே கட்டிய பிள்ளைகளுக்கு பணத்தை திருப்பி அளிக்கவேண்டும் என்றாள். அது முடியாது என்று அமைச்சர் சொல்வதை அவள் ஏற்கவில்லை. அப்படியானால் பணம் கட்டுவது முட்டாள்தனமா என்ன என்றாள். அமைச்சர் பணம் திருப்பி அளிக்கப்படும் என்று ஒப்புக்கொண்ட பின்னரே அமைந்தாள். எதிர்கால அரசியலில் ஒரு நட்சத்திரமோ என்னவோ. கனகலட்சுமியிடம் அவளை ஒரு படம் எடுக்கச் சொன்னேன். போஸ் தர முடியாதென்று சொல்லிவிட்டாள்.

சந்திரமௌலி வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தார். அவர் ஒரு பிறவி இதழாளர். யாரிடமும் எந்நேரமும் பேட்டி எடுக்கச் சித்தமான மனநிலை. குழந்தைகள் சந்திரமௌலியை சன்னல்கள் வழியாக எட்டிப்பார்த்து சிரித்தன. அங்கெல்லாம் சாப்பாடு பரிமாறப்பட்டு அதன் முன் அமர்ந்தே இந்த பேச்செல்லாம். கோழிகள் அதற்குள் மறுபிறப்பாகி எங்கோ கோழிக்குஞ்சாக நடக்க ஆரம்பித்திருக்கலாம். மீன்களுக்கு கண்களில் தெளிவான பார்வை இருந்தது. ஒருவழியாக சாப்பிடலாமென்றானதும் நான் தட்டை எடுத்தேன். சந்திரமௌலி விழித்தார். எல்லா உணவுமே அசைவம். சைவம் ஏற்பாடு செய்ய மறந்துவிட்டார்கள்.

என்ன செய்வதென தெரியவில்லை. ஒரு ஆள் வந்து சந்திரமௌலியை எழுப்பி கொண்டு போனார். மேலும் மேலும் நடப்பன பறப்பன சிந்திப்பன  எல்லாம் உணவு வடிவில் வந்துகொண்டே இருந்தன. வெளியே மக்கள் ஆரவாரமாக உண்டார்கள். ”என்ன சாப்பாடு அங்கே?” என்றேன். ”இதேதான். ஆனால் இந்த மக்களுக்கு கறி நிறைய வேண்டும். எல்லாமே சாப்பிடுவார்கள்” என்றார் சரவணன்.

நான் ஒரு சீனக்கதையைச் சொன்னேன். ஒருவன் சீனாவுக்கு பயணம் போனான். ஒரு ஓட்டலுக்குள் தன் செல்லநாயுடன் சென்று தனக்கு சாப்பாடு வேண்டும். அதற்கு முன் நாய்க்கும் சாப்பாடு தேவை என்று சைகையால் சொன்னான். சரி என்று மும்முறைக் குனிந்து சொல்லி நாயை உள்ளே கொண்டுசென்றார்கள். சாப்பாடு வந்தது. சாப்பிட்டு முடித்து நன்றி சொல்லி நாயைக் கொண்டுவாருங்கள் என்றான். ‘நாயா, நீங்கள் சொன்னபடி அதைத்தானே இப்போது சமைத்து பரிமாறினோம்’ என்றார்கள்

”ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இடம் வேறு மாதிரி. சந்திரமௌலியை வேறு கூப்பிட்டுக்கொண்டு போனார்கள். நாம் சாப்பிடுவது சந்திரமௌலியை இல்லையே” என்றேன். சரவணன் சிரித்து ”அப்படியானால்கூட பிரச்சினை இல்லை. நாம் சைவ உணவு உண்ணும் உயிர்களை சாப்பிடலாம்” என்றார். ”சேச்சே அவர் எங்கேங்க இந்தமாதிரி ருசியா இருக்கப்போறார்” என்றார் மரபின்மைந்தன்.

சரவணன் நின்று மிஞ்சிய சாப்பாட்டை அந்த மக்களுக்கே கொடுக்க சொல்லி கொடுப்பதைப் பார்த்தபின் கிளம்பினார். ” இல்லேன்னா பேசாம திருப்பிக் கொண்டு போயிடுவாங்க” என்றார். ”அப்டித்தாங்க இருக்கணும் அரசியல்வாதின்னா….ஒரு அக்கறை இருக்கு பாருங்க” என்றார் நாஞ்சில்நாடன் என்னிடம்.

அடுத்தது ஒரு மலாய் சந்திப்பு. நல்ல வெப்பம். ஒரு மசூதி முன்னால் கொட்டகை போட்டு மலாய்மக்கள் கூடியிருந்தார்கள். நிறைய செக்கச்சிவந்த பெண்கள்.பூப்போட்ட லுங்கி சட்டை அணிந்து தலையில் முக்காடு போல கைக்குட்டை கட்டியவர்கள். சரவணனுக்காக காத்திருந்தார்கள் போல. அவர் போனதுமே விழா ஆரம்பித்துவிட்டது. சாப்பாடு உண்டு. சோறு சாட்சியாக இல்லாமல் அரசியலே கிடையாது.

அவர்களில் ஒரு மலாய் பெண்மணி நன்றாக தமிழ் பேசினாள். நாஞ்சில்நாடனுக்கு அவளிடம் பேசபேச பரமானந்தம். அவள் நல்ல வட்ட முகத்துடன் மஞ்சள் நிறமாக குண்டாக இருந்தாள். அவள்தான் பேசுகிறாளா என்று எனக்கு சந்தேகம், காரணம் டப்பிங் படம் பார்ப்பது மாதிரியே இருந்தது. தமிழ் பகுதியில் ஆசிரியை வேலை பார்த்தாளாம்.

அதன்பின்னர் கடைசியாக ஒரு சீன வரவேற்பு. சீனர்களுடைய சந்திப்புக் கூடம் நெரிசலாக இருந்தது. ஏகப்பட்ட பாட்டிகள். பல பாட்டிகளுக்கு நூறு தாண்டியிருக்கும். கணவர்களுடன் ஜாலியாக இருந்தார்கள். குவிக்கப்பட்ட இறைச்சிகளும் நூடில்களும் தட்டுகளில் காத்திருந்தன. சீன மொழியில் காய் ழாய் லாய் என்று பேச்சு வழியாக டத்தோ சரவணன் என்ற ஒலிமட்டும் புரிந்தது. ”பரவால்ல சொல்றானுங்களே. நம்மூர்ல இந்திக்காரம் சொல்லிகிட மாட்டானே” என்றார் நாஞ்சில்.

 

சீனப்பாட்டு ஒன்றுக்கு இசை டிராக்கை மட்டும் பதிவு செய்து வைத்து ஒரு பெண் சேர்ந்து பாடினாள். நாலைந்து பாட்டிகள் கைதட்டி ஆட மொத்த சீனர்களும் கைகளைத்தட்டிக்கொண்டு குதூகலமாக பாடினார்கள். கிழ முகங்களில் என்ன ஒரு சிரிப்பு. அதன்பின் வழக்கமான லுங்கி வினியோகம். அதன் பின் சாப்பாடு. வரிசையாகச் சென்று தட்டுகளில் பெற்றுக்கொண்டு குச்சிகளைக் கொண்டு சாப்ப்பிட ஆரம்பித்தார்கள்.

”இதெல்லாம் அசல் சீன சாப்பாடு. நம்ம டேஸ்டுக்கு சரிவராது”என்றார் முத்தையா. அமைச்சர் கிளம்ப கூடவே நாங்களும் கிளம்பினோம். இருட்ட ஆரம்பித்து விட்டிருந்தது. திரும்பும் வழியில் மௌனகுருசாமி கோயில் அருகே ரதம் இழுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. சின்ன தேர்தான். புடவைகட்டி பூவைத்த தமிழ்ப்பெண்கள். சுடிதார் இளைஞிகள். அமைச்சர் இறங்கி வடம் பிடித்து இழுத்தார்.  அவருக்கு மலர்மாலை போட்டார்கள்.

அந்தக்கூட்டத்தில் ஓர் இளைஞன் ”நீங்க ஜெயமோகன்தானே?” என்றார் . இணையதளத்தில் தொடர்ந்து வாசிக்கிறாராம். தமிழ்கூறும் நல்லுலகு முழுக்க எழுத்து சென்று சேர்கிறது என மிகைபப்டுத்தி மகிழ்ந்தேன்., கடிதங்கள் போட்டிருக்கிறார் என்றார்.

இருளில் கொலாலம்பூர் திரும்பினோம்.  ”என்ன ஒரு நெறைவா இருக்கு. எல்லா சாதிகளும் ஒரே மண்ணிலே ஒரு நாட்டோட பிரஜைகளா இருக்காங்க. பங்குபோடறதிலே முன்னபின்ன இருக்கும்தான். ஆனா சண்டை சச்சரவு இல்லை. அடிதடி இல்லை. மெல்லமெல்ல இந்த நாடு முன்னேறிடும்…இப்டி இருக்கணும் ஒரு நாடு… என்னத்த எனம் மொழி மயிரு மட்டை…. சனங்க சேர்ந்து வாழ்ந்தா லட்சுமி தானா வந்திருவா.மனசுக்கு அப்டி ஒரு நெறைவா இருக்கு” என்றார் நாஞ்சில்

[மேலும்]

முந்தைய கட்டுரைஅங்காடித்தெரு இன்று
அடுத்த கட்டுரைஎந்த வாசகர்களுக்காக?