மாதொருபாகன்- எதிர்வினை

அன்புள்ள ஜெ,

உங்கள் மாதொருபாகன் பற்றிய பதிவை படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. காரணம் உங்களை ஒரு நடுநிலையாக எழுத்தாளர் / சிந்தனையாளர் என்ற முறையில் உங்கள் தொடர் வாசிப்பாளராக இருந்து வந்தேன். முக்கியமாக ஃபோர்டு ஃபவுண்டேசன் பற்றி தைரியமாக கட்டுரை எழுதியது என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் பல விஷயங்களில் உங்கள் கட்டுரையை வைத்தே ஒரு கருத்தை உருவாக்கி கொள்வேன்.

ஆனால் இந்த பதிவு உங்கள் மீதுள்ள பிம்பத்தையே மாற்றிவிட்டது. காரணம் நான் திருச்செங்கோட்டுக்காரன் என்பதால் நீங்க எழுதியது அத்தனையும் தவறு என்பது எனக்கு கண்கூடாக தெரிகிறது. இங்கே களத்தில் என்ன நடக்கிறது என்று எதுவும் உங்களுக்கு தெரியவில்லை.

மாதொரு பாகன் பிரச்சினையை பற்றி கருத்து சொல்லும் முன், சம்பந்தப்பட்ட மக்களிடம் நேரிடையாக பேசி, அதன் பின் கருத்து சொல்லுவதுதானே முறை. ஆனால் இணையத்தில் வரும் பின்னூட்டங்களை வைத்து உங்கள் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. முக்கியமாக ஜடாயு எழுதிய கட்டுரையின் அடிப்படையில். அவருடைய எழுத்துபிழையை (கண்டங் குலம்) அப்படியே எடுத்து போட்டிருக்கிறீர்களே .

ஜடாயுவின் கட்டுரையே அரைவேக்காட்டுத்தனமானது. இந்த பிரச்சினையை பற்றி எழுத வேண்டும் என்ற கட்டாயத்தினாலோ/அவசரத்தினாலோ எழுதப்பட்டதாகத்தான் தெரிகிறது. அந்த கட்டுரையின் பின்னூட்டங்களில் வாசகர்களின் கேள்விக்கு அவர் திணறியது அப்பட்டமாக தெரியும். கள தகவல் எதுவும் முழுமையாக அறியாமல் கூறியுள்ளார். விசாரிக்காமல் இப்படி எழுதிய கட்டுரையை அடிப்படையாக வைத்து நீங்கள் கருத்து சொல்லியிருக்கிறீர்கள். கருத்து என்பதை விட வெறுப்பை உமிழ்ந்திருக்கிறீர்கள். மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை உபயோகப்படுத்தியது எந்த விதத்தில் நியாயம்?

திருசெங்கோட்டை சேர்ந்தவன் என்ற முறையிலும், கன்ன குலத்தை சார்ந்தவன் என்ற முறையிலும், எங்கள் பகுதியில் என்ன நடந்தது என்பதை விளக்க விரும்புகிறேன். ( நீங்கள் திறந்த மனதுடம் கேட்பீர்கள் என்ற நம்பிக்கையில்)

* மோரூர் கன்ன குல கோயில் நிர்வாகத்தினரிடம் இந்த புத்தகத்தை பற்றிய புகார் அவர்கள் குல மக்கள் ஒருவரின் மூலம் வந்துள்ளது. அதன் பிறகுதான் இது சம்பந்தமாக தங்கள் குல மக்களின் கூட்டத்தை கூட்டி, முறையான புகார் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தனர். திருச்செங்கோட்டு பகுதியை சேர்ந்த மற்ற சமூகத்தினர்களும் இதைப்பற்றி கேள்விப்பட்டு கோபமடைந்து, தஙக்ள் எதிர்ப்பை காட்ட விரும்பினர். இதன்மூலம் அனைத்து சமூக போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் , ஹிந்து முன்னனி, பா.ஜ.க வோ முதலில் தலையிடவில்லை. போராட்டத்தின் போது திருச்செங்கோட்டு பக்தர்கள் அமைப்பு சார்பாக அவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் அடுத்த நாள் ஊடகத்தில் இது ஹிந்துத்துவ அமைப்பின் எதிர்ப்பாக காட்டியது எல்லாருக்கும் ஆச்சர்யம்தான்.

* இங்கே பிரச்சினை புத்தகத்தை எரிப்பது பற்றி அல்ல. கருத்து சுதந்திரம் பற்றியதும் அல்ல. பெருமாள் முருகன் எழுதிய நாவலில், திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள் அனைவரும், திருச்செங்கோட்டு கோயில் விழாவில், தனக்கு பிடித்த ஆணோடு கூடி குழந்தை பேறு பெற்றுக்கொள்வதாக சித்தரித்து, அதை நியாயப்படுத்தியும் வருகிறார். மேலும், இப்படி பிறந்த குழதையைத்தான் “சாமி கொடுத்த குழந்தை” போன்ற பேச்சு வழக்குகள் குறிப்பதாகவும் எழுதியுள்ளார். இதைப் படித்த எங்கள் பகுதி பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். இங்கே விரதமிருந்து, கோயில் கோயிலாக சுற்றி, குழந்தை பெற்ற அத்தனை பெண்களையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. தங்கள் பகுதி பெண்களை இவ்வலவு கீழ்தரமாக சித்தரிக்கும் ஒரு நாவலை எரிப்பது அவர்களது எதிர்ப்பின் / கோபத்தின் அடையாளமே. இதை பெரிது படுத்துவது முக்கிய பிரச்சினையை திசை திருப்பும் ஒரு தந்திரமாகவே படுகிரது. தங்கள் குலப்பெண்களை கீழ்தரமாக சித்தரிக்கப்பட்டதை பார்த்துக்கொண்டு கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது, சிலர் உணர்சிவசப்படத்தான் செய்வார்கள்.. இதை உளவியல் ரீதியாக, அவர்கள் நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும்.

* திருசெங்கோட்டைப் பற்றிய ஏராளமான இலக்கியங்கள், குறிப்புரைகள், திருசெங்கோட்டைப் பற்றி விளாவாரியாக எழுதப்பட்ட வெள்ளையர் ஆவணங்கள், ஏன், (பெருமாள் முருகன் தொகுத்த) நாவலில் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த திரு.முத்துசாமி கோனார் அவர்களின் கொங்குநாடு புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி விலாவாரியாக கூறப்பட்டுள்ளது, அதிலும் இல்லை. இந்த கோயில் மண்டப கட்டளைதாரர்கள் (பல்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்), முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் எவருமே இதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளனர். நிலை இப்படி இருக்க பெருமாள் முருகனின் ஆதாரமற்ற கூற்றை நீங்கள் ஆதரிக்கிரீர்களா?

*நாவல் நடந்த காலகட்டமாக சொல்லியிருப்பது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தீயாக பரவிய காலம். இப்படியொரு சம்பவம் (மனதளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டு) நடந்திருக்குமெனில் திராவிட இயக்கத்தவர்கள் கூட இதை விட்டு வைத்திருப்பார்களா? இதைப்பற்றி இதுவரை வந்த எந்தவொரு சமூக வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடாதது ஏன்?

* மாதொருபாகன் நூலை மட்டுமல்லாது பெருமாள் முருகனின் அனைத்து படைப்புக்களையும் வாசித்துள்ளேன். வாசித்தவர்களுக்கு அவரது சித்தாந்த-எண்ண ஓட்டம் பற்றி உணர முடியும். மாதொருபாகன் நூலை வாசித்தபோது எனக்கு முதலில் தோன்றியது நீங்கள் எழுதிய ஆய்வுலகின் அன்னியகரங்கள் கட்டுரைதான். இந்த புத்தகத்தை எழுதியதன் பின்னணி குறித்து பெருமாள் முருகனே அவரது முகவுரையில் தெரிவித்துள்ளார். டாடா மற்றும் ரோஜா முத்தையா நூலகம் போன்ற அமைப்புகள் உள்ளன. போர்டு பவுண்டேசனின் மறைமுக செயல்பாடுகளின் வெளிப்பாடு இது.

புனைவின் எல்லையில் இருந்து பார்க்கவேண்டிய இலக்கியப் படைப்பு என்று கூறியிருந்தீர்கள். இது வெறும் புனைவு என்றால் யாரும் வருந்தமாட்டார்கள். நாவலின் முன்னுரையில் இவர் களத்தில் கண்டுபிடித்த விஷயத்தை கருவாக கொண்டு எழுதிய புனைவு என்று உண்மைச்சாயம் பூச முயல்கிறார். ஒரு நாவலில் கற்பனையாக எழுதியிருந்தால் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நிஜ அடையாளத்தை கொண்டு எழுதுவது, அந்த வட்டார மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயமாகத்தான் பார்க்க வேண்டும். கருத்துக்கு சுதந்திரம் இருப்பது போல எல்லைகளும் உள்ளது.

எதிர்கருத்து என்றில்லாமல் களத்தின் எதார்த்த நிலை என்றளவிலாவது உங்கள் தளத்தில் இந்த கடிதம் பிரசுரிக்கப்படவேண்டும் என்ற குறைந்தபட்ச அறத்தை எதிர்பார்க்கிறேன்.

நன்றி

ந. சிவகுமார்
திருச்செங்கோடு

*

மதிப்பிற்குரிய ஜெ,

மாதொருபாகன் நாவல் எதிர்ப்பு பற்றிய உங்கள் கட்டுரை கண்டு மனம் நொந்தது என்றுதான் சொல்லவேண்டும். நான் திருசெங்கோட்டை சேர்ந்தவன். குலாலர் சமூகத்தை சேர்ந்தவன். எங்களுக்கு திருசெங்கோட்டு கோயிலில் மண்டபக்கட்டளை உரிமைகள் உள்ளது. இந்த நாவலில் சொல்லப்பட்ட விஷமத்தனங்களை எதிர்க்க வேண்டும் என்று மோரூர் நாட்டுக் கவுண்டர்கள் சொல்லியபோது அணைத்து சமுதாய கூட்டம் திருச்செங்கோடு சென்றல் கபே ஹோட்டலில் நடைபெற்றது. கோயில் உரிமைகள் உள்ள எல்லா ஜாதியின் பிரதிநிகளும் கலந்துகொண்டார்கள். அந்த கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன்.

கூட்டத்திலோ, போராட்டத்திலோ எந்த ஒரு அரசியல் நெடியும் இல்லை; ஜாதி மேலாதிக்கம், அரசியல் அழுத்தம் கொடுத்தல் போன்ற நோக்கங்களும் இல்லை. பொய்களைக் கூறி கேவலம் பரப்பும் நச்சுத்தன்மையை எதிர்த்து எங்கள் வட்டார மக்களுக்கு அவதூறு செய்பவனை எதிர்த்து போராட உரிமை கூட இல்லையா?

முற்போக்கு எழுத்தாளர்கள் போல நீங்களும் எழுதுவது, அதுவும் உண்மை நிலை புரியாமல் எழுதுவது மிகவும் வருத்தமளிக்கிறது.

சுதந்திர இந்தியா குறித்த உங்களின் திருப்பூர் அறம் உரையை பலருக்கும் சிடி போட்டு கொடுத்தேன். எங்கள் முகத்தில் கறி பூசியது போல உள்ளது. விசாரித்து மீண்டும் ஒரு மறுப்புரை எழுதினால் நலம்.

இப்படிக்கு,
சிவானந்தன் அன்பழகன்.

*

அன்புள்ள சிவக்குமார், சிவானந்தன்

பிரச்சினையின் நீள அகலங்கள் எனக்குத்தெரியாது. இங்கு விவாதம் அது அல்ல. இலக்கியம் என்பது எப்போதுமே ஆய்வுண்மையை முன்வைப்பது அல்ல. அந்த எழுத்தாளனின் தனிப்பட்ட மனப்பதிவுகளையும் உணர்வுகளையும் முன்வைப்பது. அது அந்தரங்க உண்மை மட்டுமே. அது வாசிக்கும் அனைவருக்கும் தெரியும். எந்தப்புனைவையும் எவரும் முழுவரலாறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

ஓர் எழுத்தாளன் சமூகத்தை விமர்சிக்க உரிமை உள்ளவன். கடமையும் உள்ளவன். விமர்சனங்களில் தவறு இருக்கலாம். ஏன் உள்நோக்கம் கூட இருக்கலாம். அவற்றை இலக்கியத்தின் தளத்தில், அறிவுத்தளத்தில் எதிர்கொள்ளலாம். அதற்கான வழிகள் உள்ளன

பெருமாள் முருகனின் நாவல் முழுக்க முழுக்க பிழையானது என ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதலாம். அவரை கடுமையாக விமர்சித்து, நிராகரித்து எழுதலாம். கிழிகிழி என்று கிழிக்கலாம். நூறு கட்டுரைகள் எழுதி அந்நாவலை அம்பலப்படுத்தலாம். அந்நாவலைப்பற்றி எங்கு எவர் தேடினாலும் அதன் சாரமின்மையை வெளிப்படுத்தும் நூறு கட்டுரைகள் கூடவே கிடைக்கும்படிச் செய்யலாம். திருச்செங்கோடு ஆலயம் மற்றும் விழா பற்றி ஆணித்தரமான நூல்களை உருவாக்கலாம். அறிவுத்தள எதிர்ப்பு என்பது அதுவே.

ஆனால் இங்கே நிகழ்வது தெருமுனை ஆர்ப்பாட்டம். நீதிமன்ற மிரட்டல். இதன் விளைவு என்ன? பெருமாள் முருகனின் நூலை இலக்கியம் என்றால் என்ன என்றே அறியாத பல்லாயிரம்பேரிடம் கொண்டுசென்று சேர்த்துவிட்டீர்கள். அந்த நூலில் எழுதியிருக்கும் அந்தச் சில பக்கங்களை இன்று வாசிக்கும் பழக்கமே இல்லாதவர்கள்கூட வாசிக்கவைத்துவிட்டீர்கள். நாளிதழ்களில் தொலைக்காட்சியில் கொண்டுசென்று வைத்துவிட்டீர்கள்.

விளைவாக இலக்கியப்படைப்பு பேசுவது தனிப்பட்ட உண்மையை மட்டுமே என்றும் அது ஆய்வு உண்மையோ புறவயமான தகவலோ அல்ல என்றும் தெரியாத பல்லாயிரம் பேர் அதை வாசிக்க வைத்துவிட்டீர்கள். அது ஒரு வாய்மொழித் தகவலாக பலமடங்கு பெருகி தமிழகம் முழுக்க நீடிப்பதைத்தான் காணப்போகிறீகள். நீங்கள் செய்த தெருமுனை எதிர்ப்பால் உண்மையில் வேறு என்ன லாபம்?

உணர்ச்சிகளை தெரிவித்துவிட்டீர்கள். சரி, இனி என்ன செய்யப்போகிறீர்கள்? உங்கள் முகத்தில் கரிவாரிப்பூசிக் கொண்டது நீங்களேதான். வேறு எவரும் அல்ல. கருத்தியல் தரப்புக்கு அந்தத் தளத்தில் மட்டும் எதிர்வினையாற்றுங்கள்.

இங்குள்ள சாதிய அமைப்புக்கள் வலுவானவை. எழுத்தாளன் தனிமனிதன். இதேபோல ஒவ்வொரு சாதியும் தங்களைப்பற்றிய கருத்துக்களை எதிர்க்க ஆரம்பித்தால் எந்த எழுத்தாளன் இங்கே கருத்துச் சொல்ல முடியும்? என்ன இலக்கியப்படைப்பை எழுத முடியும்? எழுதுபவன் சாதிய அமைப்புகளிடமும் மத அமைப்புகளிடமும் அனுமதிபெற்றபின் வந்து எழுதவேண்டுமா என்ன? அதன்பின் இங்கே அறிவியக்கம் உண்டா?

பாரதி சாதிகளை எதிர்த்து கருத்துச் சொல்லியிருக்கிறார். மதபீடங்களை மடாதிபதிகளை சோற்றுப்பிண்டங்கள் என எழுதியிருக்கிறார். சாதிப்பெயர் சொல்லியே எழுதியிருக்கிறார். ‘பேராசைக்காரனடா பார்ப்பான் எனில் பெரிய துரை என்றால் உடல் வேர்ப்பான்’ என எழுதியிருக்கிறார். அன்று ஒரு பிராமண அமைப்பு ‘மனம் புண்பட்டு’ அவரை எதிர்த்து நீதிமன்றத்துக்கும் தெருவுக்கும் இழுத்தடித்திருந்தால் இலக்கியம் உண்டா? ’நாசகார குமப்ல்’ என்று வேளாளச் சாதியை விமர்சித்தார் புதுமைப்பித்தன். அ.மாதவையா அவரது சாதியை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறார். அதை அவர்கள் அன்று அவதூறாகவும் அத்துமீறலாகவும்தான் கருதினர். சாதிவிலக்கு செய்தனர்.

இலக்கியவாதிகளில் அப்படி சாதியை ,மதத்தை, சடங்குகளை ,ஆசாரங்களை, நம்பிக்கைகளை விமர்சனம் செய்யாத எவரேனும் உண்டா? அவர்களுக்கு எதிராக இன்று கிளம்பியிருக்கும் இந்த சாதியக்குழுக்கள் நம் சிந்தனைத்தளம் மீதுதான் பெரும் தாக்குதலைத் தொடுத்திருக்கின்றன. நீங்கள் செய்யும் இதை நாளை அத்தனை உதிரி அமைப்புகளும் செய்யலாம். சாதியை மதத்தை கோயிலை ஆசாரங்களை நம்பிக்கைகளை எதையும் எதுவும் சொல்லக்கூடாது என்று மிரட்ட ஆரம்பிக்கலாம். ஆரம்பித்துவிட்டார்கள்.

நீங்கள் சொல்லும் நியாயம் எதுவாக இருந்தாலும் ஓர் எழுத்தாளனை, தனிமனிதனை தெருவுக்கு வந்து கும்பலாகச்சேர்ந்து மிரட்டவும் நீதிமன்றம் மூலம் தாக்குதல் விடுக்கவும் முன்வந்தபோதே கருத்தியல் அராஜகத்தை ஆரம்பித்துவிட்டீர்கள். மத அதிகாரத்தை சாதியக்குழுக்களான நீங்கள் எப்படி கையில் எடுத்துக்கொள்ள முடியும்? யார் அதற்கான அதிகாரத்தை அளித்தது?

இன்று வேறு வழியே இல்லை.உங்களை எல்லாம் எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது. இது உங்கள் காலம். நீங்கள் சர்வவல்லமை கொண்டவர்கள். அரசும் நீதிமன்றமும் உங்களிடம். பணம் உங்களிடம். உங்களை எதிர்த்து எழுத்தாளர்கள் சிறைசெல்ல வேண்டியிருக்குமென்றால் அப்படியே சிறைசென்றாவது போராடவேண்டியிருக்கிறது. நான் எழுதியது அதைத்தான். அதுதான் என் நிலைப்பாடு.

ஜெ

நிழல் நாடுவதில்லை நெடுமரம்

முந்தைய கட்டுரைமாதொருபாகன்- மிரட்டல்
அடுத்த கட்டுரைமாதொரு பாகன் – தெருமுனை அரசியல்