அன்புள்ள ஜெ,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களின் உறுதி மொழிகளைப் பற்றிய கட்டுரை மிக அருமை. உண்மையில் இன்றைய எங்கள் தலைமுறையைப் பெரிதும் பாதிப்பது சோம்பேறித் தனம் தான். வெண்முரசின் மொழியில் தூய தமோ குணம். என்னிலும் அது தான் இருந்து வருகிறது. கடந்த ஒரு நான்கு மாதங்களாகத் தான் உணர்ந்திருக்கிறேன். மாறி வருகிறேன். ஆனால் அடிக்கடி வரும் உடல் சோர்வு தவிர்க்க முடிவதில்லை. கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்கள் சோர்ந்தேயிருந்த உடலும், மனதும். மனது விழித்து விட்டாலும், உடலின் ஒத்துழைப்பு இன்னும் முழுவதுமாகக் கிடைக்கவில்லை. ஆயினும் என் வழியைக் கண்டுவிட்டதாகவே நினைக்கிறேன்.
எங்கள் தலைமுறையின் அடுத்த தலையாய பிரச்சனை திட்டமிடுதல். குறுகிய கால, புறவயமான நிகழ்வுகளை மிகச் சரியாகத் திட்டமிட்டு செயல்படுத்த பயிற்சி பெற்றுள்ளோம். ஆனால் அகவயமான, ஆன்மிகப் பயணத்திற்கான திட்டமோ, தயாரிப்போ, வழிகாட்டலோ இல்லாத ஓர் நிலையில்தான் உள்ளோம். என்னைப் போல எதையோ தேடிக் கொண்டிருக்கிறோம் என்ற சுயப் பிரக்ஞை உள்ளவர்களே உங்களைப் போன்றவர்களை நாடி வருகிறோம். மற்றவர்கள் ஆன்மிகமான ஓர் வெறுமையை மட்டுமே உணர்கிறார்கள். இறுதியில் நிறுனப்படுத்தப் பட்ட ஏதோ ஓர் சகதியில் விழுகிறார்கள்.
அனேகமாக எங்களின் அடுத்த தலைமுறை இத்தவறை செய்யாது என்றே நம்புகிறேன். இன்றைய பெரும்பாலான குழந்தைகளிடம் அறிந்து கொள்வதற்கான ஆர்வமும், செய்து பார்க்கும் விழைவையும் பார்க்கிறேன். பெற்றோர்கள் ஐபேட் தந்து கெடுக்காமலிருந்தால் சரி!!
மீண்டும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
என்றும் நன்றியுடன்,
மகாராஜன் அருணாச்சலம்