இணையக்குழுமத்தில் அரங்கசாமி இந்த போஸ்டரை எடுத்துப்போட்டிருந்தார். கோட்ஸேவுக்குக் கோயில் கட்ட இந்துமகாசபை முயல்வதைப்பற்றிய ஒரு விவாதம் எனக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்தது.
இதன் பின்னணியை சுருக்கமாகப் புரிந்துகொண்டபின்னரே மேலே பேசமுடியும். அகில இந்திய இந்து மகாசபா தான் இந்தியாவின் முதல் இந்துத்துவ அரசியல் அமைப்பு. 1906ல் மிண்டோமார்லி சீர்திருத்தங்களை ஒட்டி பிரிட்டிஷ் ஆதரவுடன் அகில இந்திய முஸ்லீம் லீக் உருவானபோது அதன் எதிர்வினையாக உருவானது இவ்வமைப்பு. 1910ல் அகில இந்திய இந்து சம்மேளனம் வழியாக இவ்வமைப்புக்கான அடித்தளம் அமைந்தது. சட்டபூர்வமாக ஆரம்பித்தது 1914ல்.
1925ல் இவ்வமைப்பில் இருந்துதான் ஆர்.எஸ்.எஸ் கிளைத்தது. அதன் நிறுவனர் கேசவ பலிராம ஹெட்கேவார் இந்துமகாசபையில் பணியாற்றியவர். அதன் ‘மெத்தனப்போக்கு’ பிடிக்காமல் வெளியேறியவர். அன்றுமுதல் ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்துமகாசபையும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டும் ,வெறுத்தும் ,அவ்வப்போது தழுவிக்கொண்டும்தான் அரசியல் செய்துவருகின்றன
அகில இந்திய இந்து மகாசபை ‘பெரியமனிதர்கள்’ வழிநடத்திய இயக்கம். பிரிட்டிஷ் அரசுடன் நீக்குபோக்கான உறவு உடையது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஒரு தொண்டர் இயக்கம். ஆகவே அது தீவிர நிலைபாடுகள் எடுக்க்க முடிந்தது. அடித்தளத்தை விரிவாகக் கட்ட முடிந்தது. எனவே விரைவிலேயே அது இந்துமகாசபையை கடந்து விரிந்து வளர்ந்தது.
ஆகவே ஆர்.எஸ்.எஸுக்கு எதிர்வினையாக 1930களுக்குப்பின் இந்துமகாசபை அதிதீவிர நிலைபாடுகளை எடுக்க ஆரம்பித்தது. ஹிந்துமகாசபை தலைவரான வீர் சவார்க்கர் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் காக்கிக் கால்சட்டைபோட்ட கையாலாகாத கும்பல் என தாக்கினார். ஓர் ஆர்.எஸ்.எஸ் காரன் ஆர்.எஸ்.எஸ்காரனாக வாழ்கிறான்,அப்படியே சாகிறான், வாழ்நாளில் அவன் ஒன்றுமே செய்வதில்லை என்று அவர் எழுதினார்.
கடுமையான பூசல்கள் அன்று இருதரப்புக்கும் நடுவே நிகழ்ந்தன. ஆனால் சீரான தொண்டர் அடித்தளம் ஒன்றை அமைக்க முடிந்தமையாலும், உடனடி தேர்தல் அரசியலை தவிர்த்தமையாலும் ஆர்.எஸ்.எஸ் வளர்ந்தது. இந்துமகாசபை தொடர்ந்து மகாராஷ்டிர அரசியலில் ஈடுபட்டு வந்தமையால் பலவகை சமரசங்கள் செய்து தேங்கி வெளியே பரவமுடியாமலாகியது.
இந்துமகாசபை முப்பதுகளுக்குப்பின் தேர்தல் அரசியலில் அதிகமாக ஈடுபட ஆரம்பித்தபோது கொஞ்சம் தீவிரத்தைக் குறைத்துக்கொண்டது. அதன் தீவிரப் போக்கு குறைந்தமையால் இந்துமகாசபையில் இருந்து விலகி ஒரு தனி அமைப்பை உருவாக்க முயன்ற நாதுராம் கோட்சே தான் காந்தியைக் கொலை செய்தான்.
அவனுக்கும் இந்துமகாசபைக்கும் ஓரளவு தொடர்பிருந்தது. ஆகவே காந்திகொலையால் இந்துமகாசபை பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதன் அரசியல் எதிர்காலம் அனேகமாக இல்லாமலாகியது. இன்று வரை அது ஓர் உதிரிக்கும்பல் மட்டுமே.
ஆர்.எஸ்.எஸின் எதிர்முகாமில் இருந்தவன் கோட்ஸே. ஆர்.எஸ்.எஸ் விலைபோய்விட்ட கோழைகளின் இயக்கம் என நினைத்தவன். காந்திகொலையில் ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்பட்டபோது இந்த ஆதாரங்களை விரிவாக முன்வைத்துத்தான் அக்குற்றச்சாட்டில் இருந்து ஆர்.எஸ்.எஸ் வெளிவந்தது
ஆர்.எஸ்.எஸ் தன் இலக்கியங்கள் அனைத்தில் இருந்தும் கோட்ஸேயை விலக்கி வைத்தது. மகாத்மா காந்தியை மகத்தான இந்துத் தலைவராக ஏற்றுக்கொண்டது. ஆர்.எஸ்.எஸின் காலைநேரப் பிரார்த்தனையில் புராணகாலம் முதல் சமகாலம் வரையிலான இந்து தலைவர்களின் பட்டியலில் கடைசியாக சொல்லப்படும் பெயர் மகாத்மா காந்தி. கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொருநாளும் மகாத்மா காந்தியின் பெயரைச் சொல்லிவரும் இயக்கம் அதுவே.
1990களில் காந்தியப் பொருளியலை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது பாரதிய ஜனதா. இந்திய அரசியலில் அதிகாரத்தைக் கையாளச் சாத்தியம் கொண்ட கட்சிகளில் காந்தியப்பொருளியலை ஏற்றுக்கொண்ட ஒரே அரசியல் கட்சியும் பாரதிய ஜனதாதான்.[பின்னர் அது கைவிடப்பட்டது] \
அவ்வாறு ஏற்றுக்கொள்ளக் காரணம் காந்தியப் பொருளியலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த பலர் அதனுள் இருந்தனர் என்பதே. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான நானாஜி தேஷ்முக் போன்றவர்கள் பின்னர் அதிலிருந்து விலகி காந்திய கிராம நிர்மாணப் பணிகளுக்குச் சென்று சாதனைகளைச் செய்தனர். காந்தியவாதிகளான தலைவர்கள் பலர் பின்னரும் அதில் இருந்தனர்.
இன்றும் பாரதிய ஜனதாவுக்குள் காந்திய -சுதேசி பொருளியல் நம்பிக்கை கொண்டவர்களின் வலுவான தரப்பு உண்டு. தொடர்ந்து ஓரம்கட்டப்பட்டுவரும் அவர்களை முழுமையாக விலக்கவே இந்த புதிய கோஷம் எழுப்பப்படுகிறதா என்றும் தெரிந்தாகவேண்டும்
பாரதிய ஜனதாக் கட்சி வலுப்பெறும்தோறும் பல்வேறு உதிரி அமைப்புகளை , லும்பன் அமைப்புகளை அது தன்னுடன் சேர்த்துக் கொண்டே சென்றது. நகரங்களில் அதிகாரத்தை கையகபடுத்த இந்தியாவில் உள்ள அத்தனை கட்சிகளுக்கும் லும்பன் அமைப்புகள் தேவையாக இருப்பதுதான் இன்றைய அரசியல் சூழல். பாரதியஜனதாவின் லும்பன் அமைப்புகளில் உள்ள பலர் இந்துமகாசபை போன்றவற்றில் இருந்து உதிர்ந்தவர்கள்.
உதிரிகளின் அடையாளம் என்பது விரிவான வரலாற்று நோக்கு இல்லாத அதிதீவிர ஒற்றைக்குரல். அவர்களின் நோக்கம் உடனடி அரசியல் ‘லாபம்’. அவர்கள் இன்றைய தேர்தல் அரசியலில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். சூடுசோற்றை குட்டியை வைத்து அள்ளும் குரங்குபோல பாரதிய ஜனதா அவர்களைப் பயன்படுத்துகிறது. ஆனால் தேவையற்றபோது எளிதில் அடக்க முடிவதில்லை
இந்த உதிரிகள் கோட்சேவைப் பற்றி வீரவழிபாட்டுத் தொனியில் பேசும்போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா அதிலிருந்து தன்னை விலக்கியே வைத்திருந்தது. அதன் வழிபாடுகளில் காந்தி எப்போதும் மாமனிதராக முன்னுதாரண புருஷராகச் சுட்டப்பட்டார். உதிரிகளை அது கண்டித்தும் வந்தது
இந்துமகாசபையைப் பொறுத்தவரை பல்வேறு குற்றச்சாட்டுகளால் ஆர்.எஸ்.எஸில் இருந்து விரட்டப்பட்டவர்கள் சென்று சேரும் இடமாகவே அது இருந்து வருகிறது. தமிழகத்திலும் சென்ற முப்பதாண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸில் இருந்து தண்டிக்கப்பட்டு விலக்கப்பட்டவர்களே அதன் தலைமையில் இருக்கிறார்கள். அவ்வாறு விலக்கப்பட்டவர்களால் உருவாக்கப்பட்ட வேறு சில உதிரி இந்துத்துவ அமைப்புகளும் உள்ளன- அர்ஜுன் சம்பத்தின் கட்சி போல.
எல்லா மாநிலங்களிலும் இப்படி பல குழுக்கள் உள்ளன. கர்நாடகத்தில் முத்தலிக்கின் ராம் சேனா போல. இவர்களுக்கு தொண்டர்பலம் இல்லை. பணபலமும் குறைவு. இருப்பு என்பது செய்திகள் வழியாகவே சாத்தியம். செய்திகளில் இருந்துகொண்டிருப்பது ஒன்றையே அவர்கள் நாடுகிறார்கள் .ஆகவே ‘மேலும் தீவிர இந்துத்துவர்’ என்று தன்னைக் காட்டிக்கொள்ளவேண்டிய தேவை இவர்களுக்கு உண்டு.
அதற்கு இந்துத்துவம் மட்டும் போதாது. கூடவே மாநிலவாதம், சாதியவாதம், கலாச்சார காவல், சினிமாக்களை எதிர்ப்பது ஆகியவற்றையும் கலந்துகொள்கிறார்கள். சிவசேனை இப்படி ஆரம்பித்து அதிதீவிரவாதம் பேசி பெரிய அரசியல் சக்தியாகி ஆட்சியைப்பிடிக்க முடிந்தது அவர்களுக்குப் பெரிய முன்னுதாரணம்
சென்ற தேர்தலில் மோடி வென்றபின்னர் பழைய ஆர்.எஸ்.எஸ் காரர்களே திகைக்கும் வண்ணம் சென்னை கோவை போன்ற நகரங்களில் புத்தம்புதிய இந்துத்துவ லும்பன் குழுக்கள் கிளம்பி வந்தன. பல்வேறு ‘ஜி’க்கள் பெரிய பெரிய போஸ்டர்களை மோடி படத்துடன் அச்சிட்டு ஒட்டிக்கொண்டனர். பெரும்பாலானவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவதற்குப்பதில் எவ்வகையில் பயன்படுத்திக்கொள்வது என பாரதிய ஜனதா எண்ணுவதாகவே தெரிகிறது.
இதுதான் நாடெங்கும் நிகழ்கிறது. முற்றதிகார நோக்கு கொண்டவரான மோடி ஆரம்பம் முதலே இந்துமகாசபை போன்றவர்களை அதிகாரத்தில் இருந்து விலக்கி வைத்திருக்கிறார். விஸ்வ ஹிந்து பரிஷத்தைக் கூட அவர் அண்டவிடுவதில்லை. ஆனால் இந்த உதிரிக்குழுக்களை அவர் அடக்கவும் முடியாது. இவர்கள்தான் மோடி பதவி ஏற்றபின் ‘அதிதீவிரம்’ பேசுகிறார்கள்.
இவர்களை நம்மூர் சீமான், வை.கோபால்சாமி, நெடுமாறன் வகையறா அரசியலுடன் ஒப்பிடலாம். தி.மு.க தீவிரமாக இல்லை, விலை போய்விட்டது என்ற குற்றச்சாட்டின் அடித்தளத்திலேயே இவை செயல்பட முடியும். அல்லது ம.க.இ.க போன்ற அமைப்புகளுடன் ஒப்பிடலாம். அவர்கள் சி.பி.எம் விலைபோய்விட்டது, தீவிரமற்றது என்ற குற்றச்சாட்டின் மேலேதான் செயல்பட முடியும்.
கோட்சேவுக்கு நினைவுச்சின்னம் அமைப்பதோ வீரவழிபாடு செய்வதோ என்னவாகப் பொருள்கொள்ளப்படும் என இதைச் செய்பவர்களுக்குத் தெரியும். அது மக்களாதரவைப் பெறப்போவதில்லை. ஆனால் அது பரபரப்பாகப் பேசப்பட்டு அவர்களை செய்தியில் நிறுத்தும். ஓரளவு அரசுநடவடிக்கை வந்தால் மேலும் விளம்பரம் கிடைக்கும். இந்துத்துவ அலை இன்று இருக்கிறது என்றால் அதில் ஒரு பகுதியை அறுவடை செய்யமுடியும். மைய இந்துத்துவ அரசியலை மிரட்டி சில லாபங்களை அடைய முடியும்
மைய இந்துத்துவ அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் ,பாரதிய ஜனதாவைப்பொறுத்தவரை இது அவர்களுக்குச் சங்கடம். இந்த உதிரிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவிடக்கூடாது. கோட்சே என்ற அடையாளம் தன்மேல் படிய விழவும் கூடாது. உதிரிகளை பகைக்கவும் கூடாது. ஆகவே எளிய கண்டனங்கள் வழியாக அவர்கள் அதைக் கடந்துசெல்ல முயல்வார்கள்.
இந்துத்துவ எதிர்ப்பு அரசியலை செய்துகொண்டிருப்பவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸை அல்லது பாரதிய ஜனதாவை எதிர்ப்பதற்கு ஒரு பெரிய வாய்ப்பு. அவர்கள் இந்துத்துவ அமைப்புகளுக்குள் இருக்கும் முரண்பாட்டைக் கருத்தில்கொள்ளப்போவதில்லை. அது அவர்களுக்கு வசதியானது அல்ல.ஒட்டுமொத்தமாகப் பார்த்து மட்டையடி அடிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு தாலிபானியக் கொள்கை கொண்ட இஸ்லாமிய உதிரிகளை முற்போக்காக ஏற்று கட்டித்தழுவிக்கொள்ள தயக்கமே இல்லை.
இந்த மூன்று தரப்புகளும் மாறிமாறி ஊடகங்களை நிறைக்கையில் இதன் உண்மையை எவ்வகையிலும் நாம் உணரப்போவதில்லை. உண்மையின் குரலுக்கு மதிப்பே இருக்கப்போவதில்லை. எல்லா தரப்பாலும் அது வெறுக்கப்படும், திரிக்கப்படும், ஏளனம் செய்யப்படும். ஏதேனும் ஒரு ஹிஸ்டீரியா கும்பலுடன் சேர்ந்து கத்தினால்தான் இங்கே அது அரசியலாக கருதப்படும். ஆனாலும் சொல்லி வைக்கவேண்டியது எழுத்தாளனின் கடமை
இதில் நான் தொகுத்துச் சொல்ல விழைபவை இவையே
கோட்ஸேவை முன்வைத்து ஓர் அரசியல் எழுமென்றால் அது நல்லதுதான். இந்த இந்துத்துவ லும்பன்குழுக்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆனால் மைய ஓட்ட இந்துத்துவர் என்ன சொல்லப்போகிறார்கள் என்பது முக்கியம். அவர்கள் இந்தப்போக்கை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பார்ப்போம். முதலில் அவர்கள் வெளிப்படையாக ஒரு நிலைபாடு எடுக்கட்டும்.
சென்ற சில ஆண்டுகளாக நேரு போன்ற தேசியத்தலைவர்கள் மேல் இந்துத்துவர்களால் ஊடகங்கள் வழியாக உருவாக்கப்படும் காழ்ப்புதான் காந்திமேலும் திருப்பப்படுகிறதா என்று தெரிந்தாகவேண்டும். காந்தியை அவர்கள் தங்கள் வழிபாட்டுப் பட்டியலில் இருந்து விலக்குகிறார்களா என தெளிவாக வேண்டும்.
அல்லது அவர்கள் இதுவரை மறைத்துவந்த கோட்சே அபிமானமே இந்த உதிரிகளின் குரல்களாக வெளிப்படுகின்றதா என அறிந்தாகவேண்டும். காந்தியா கோட்ஸேயா யார் தேவை என இந்திய மக்கள் முடிவு எடுக்க அது வசதியாக இருக்கும்.
சிலவருடங்களுக்கு முன் எர்ணாகுளத்தில் ஒரு முதிய மீனவர் சொன்னார். இந்தியா பிறக்கும்போதே அதன் மீது தந்தையின் சாபம் விழுந்துவிட்டது என்று. ஒரு கிராமியத்தனமான கருத்தாக இருந்தாலும் அதுவே இந்த மண்ணின் ஆன்மாவில் இருந்து எழுவது
இந்த நாடு உருவாக்கிய மாமனிதர் ஒருவரை கொன்று அக்குருதி மேல் நின்று இந்த நாட்டைக் கட்டிக்கொண்டோம். அது குறியீட்டு ரீதியான ஒரு செயல். நம்மை அதுவரை கொண்டுவந்து சேர்த்த இலட்சியவாதங்கள், அறநெறிகள் ஆகியவற்றை நோக்கியே நாம் மூன்று குண்டுகளால் சுட்டோம்
இன்றுவரை அதற்கான பொறுப்பை எவரும் ஏற்கவில்லை. இந்து மகாசபை இப்போது ஏற்கிறது. அத்தனை இந்துத்துவர்களும் ஏற்பதென்றால் அது நல்லதுதான். அக்குருதியின் கறை ஏந்தி நிற்கும் கீழ்மகன்கள் அனைவரையும் வென்று கடந்துசெல்வோம்.நம் ஆன்மாவின் இழிவாகவே நீடிக்கும் அந்தப்பாவத்தில் இருந்து விடுவித்துக்கொள்வோம். நமக்கு மீட்புக்கான வழி இருக்கிறது.
இல்லை அந்தப்பாவத்தில் திளைக்கவே இந்த நாடு முடிவெடுக்குமென்றால் அது கண்ணீராலும் குருதியாலும் அதற்கான விலையைக் கொடுக்கட்டும். அதன்பின் உண்மையை உணரட்டும். காந்தி காத்திருப்பார்
*
ஆனால் ஒன்று உண்டு. இப்போது கோட்ஸே காந்தியைக் கொன்றவன், அவனைக் கொண்டாடுவதா என்று கூச்சலிடும் இடதுசாரிகள், தலித்தியர்கள், கிறித்தவ இஸ்லாமிய அமைப்புகள் ஏற்கனவே ஐம்பதாண்டுக்காலமாக அவரை அனுதினமும் சித்திரவதை செய்து கொன்று கொண்டிருந்தவர்கள். அவதூறுகள் வழியாக அவரது பிம்பத்தை நொறுக்கியவர்கள். அப்பட்டமான அவதூறாகவும், திரிபாகவும் ,வசைகளாகவும் இவர்களால் எத்தனை ஆயிரம் பக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன என எண்ணுகையில் உள்ளம் நடுங்குகிறது.
காந்தி இந்தியாவின் முதன்மையான சாதிவெறியராக, இனவெறியராக, மதவெறியராக, தலித்துக்களை ஒடுக்கிய துரோகியாக, ஏகாதிபத்திய கைக்கூலியாக, பெண்பித்தராக, ஊழல்வாதியாக, சர்வாதிகாரியாக, மக்கள் எழுச்சியை ஒடுக்கிய பூர்ஷூவா ஆக, பார்ப்பனியத்தின் கைக்கூலியாக, தன் பனியா சாதி அரசதிகாரம் பெற சதிசெய்த ரகசிய வணிகனாக இவர்களால் மாறிமாறிச் சித்தரிக்கபப்ட்டார். தமிழில் காந்தி பற்றி எழுதப்பட்ட நூல்களில் இவ்வகை எழுத்துக்களே பெரும்பான்மை.
இப்புவியில் பிறந்த மானுடரில் கீழ்மகனிலும் கீழ்மகன் காந்தியே என இவர்கள் பேசினர். ஒவ்வொரு காந்திபிறந்த நாளிலும் எழுதிக்குவிக்கப்படும் அவதூறுகள் எந்த காந்தியவாதியையும் கண்ணீர் விடவைப்பவை. மீளமீள ஆதாரபூர்வமாக மறுக்க்ப்பட்டாலும் அமைப்பு ரீதியான ஒட்டுமொத்தப் பிரச்சாரம் மூலம் அவ்வுண்மைகளை முறியடித்தனர். இவர்கள் முதலில் அந்த அவதூறுப் பிரச்சாரத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளட்டும். அதற்காக வருத்தம் தெரிவிக்கட்டும்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முதிரா இளைஞன் மனதிலும் காந்தியைப்பற்றிய அடிப்படையே அற்ற கசப்பையும் வன்மத்தையும் விதைத்தவர்கள் யார்? இந்துத்துவர்கள் அல்ல, இங்குள்ள முற்போக்கினரும் இஸ்லாமிய- கிறித்தவ மதவாதிகளும்தான் அதற்கு முதன்மைப்பொறுப்பு. இன்று இந்துத்துவ மதவெறி அமைப்புகளால் கோட்ஸே முன்னிறுத்தப்படும்போது இளைஞர்களிடம் எந்த எதிர்ப்பையும் அதிர்ச்சியையும் உருவாக்கவில்லை என்றால் அது இவர்கள் உருவாக்கிய காந்திவெறுப்பு காரணமாகவே.
இவர்கள் தங்கள் அறியாமையால், ஆணவத்தால் ,சிறுமை மிக்க மதக்காழ்ப்பால் உடைத்த காந்தியின் பிம்பத்தையே இந்து மதவெறியர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த தேசத்தின் ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை நிலைநாட்டியிருக்கும் அடிப்படையை நோக்கி ஐம்பதாண்டுக்காலம் இவர்கள் தாக்குதல் தொடுத்தார்கள். இத்தனைகாலம் இந்த தேசத்தின் மனசாட்சியை நொறுக்கிக்கொண்டிருந்தார்கள். அந்த இடைவெளியை இன்று அடிப்படைவாத அரசியல் நிறைக்கும்போது கூச்சலிடுகிறார்கள்
இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு காந்தியே அடிப்படை. இங்குள்ள தலித்துக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் அவரது இலட்சியவாதமே காவல். அவர்கள் காலம் கடந்தாவது அதைப்புரிந்துகொண்டால் சரி.