நவீன அடிமைமுறை- கடிதங்கள் 1

ஜெ

down sizing, lay-off, redundancy என்று எத்தனை வார்த்தைகளில் சொன்னாலும், ஒரே அர்த்தம் கல்தா கொடுப்பது கழுத்தில் கை வைத்து தள்ளுவது மட்டுமே. எல்லாவற்றிலும் நிறைகள் இருந்தாலும் தனியார் நிறுவனங்களின் குறைகளை மட்டும் பார்த்தால் பணியில் இருக்கும் காலத்தில் செய்ய வேண்டிய பாசாங்குகள் சொல்லி மாளாது. எல்லாவற்றையும் diplomacy என்று சொல்லி கடந்து விட முடியாது. தனியாக யோசிக்கும் போது வரும் வெட்கம், அருவருப்பு, இயலாமை தன்னிரக்கத்தில் ஆழ்த்தும். நம் ஆளுமையை தக்க வைத்துக்கொள்வது நம் கையில் தான் இருக்கிறது.
எப்போது வேண்டுமானாலும் வேலையில் இருந்து தூக்கபடுவோம் என்ற நினைப்பு இருக்குமாறு பார்த்துகொள்வது நிரூபிக்கப்பட்ட மேலாண்மை உத்தி போலும். இதை செவ்வன செய்ய நிறைய நிறுவனங்களில் ப்ராஜெக்ட் மேனேஜர்ஸ் + அதற்கு மேம்பட்ட ஸ்லேவ் டிரைவர்ஸ் இருப்பார்கள்.

நிறுவனங்கள் அவர்களின் அஜெண்டாவை நடத்தட்டும். நிறுவனங்களுக்கு தவிர்க்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை என்பதே உண்மையெனில் நம் வாழ்வில் தவிர்க்க இயலாத நிறுவனம் என்ற ஒன்று நமக்கு மட்டும் ஏன்? நம்முடைய ஆளுமையை தக்க வைத்து கொள்வதும், will never ever bend backwards என்பதும் அவ்வளவு முடியாத காரியமா? நமக்கு இருக்கும் வாழ்க்கை பயம் (சுருக்கமாக பணம் (இன்மை) பற்றி பக்கம் பக்கமாக பேசலாம். இந்த அச்சம் இருப்பவர்களுக்கு ஒரு நிறுவனத்தின் உச்ச பதவியில் அமர்ந்தால் மட்டும் அச்சம் போய் விடுமா என்ன. நம்முடைய முதுகெலும்பு வளையாமல் இருப்பது நம் கையில் தான். வேலை என்பது சம்பளமும், அதிகாரமும், designation மட்டும்தானா? நம்முடைய ஆளுமை மதிக்கபடுகிறதா, செய்யும் வேலையை passionate ஆக, மகிழ்ச்சியாக, அர்பணிப்புடன் செய்ய பணிசூழல் வாய்ப்பு தருகிறதா போன்றவை கணக்கில் உண்டு தானே. cog in a machine ஆக இருந்தாலும் அவ்வாறு இருப்பது நம்முடைய தேர்வாக இருப்பது உசிதம்.

என் நண்பர் ஒருவர் கிண்டலாக எழுதியது போல அதிகாரமும் பணமும் சிறந்த மேலாண் உத்திகளாக இருந்தாலும் நம் மேல் பிரயோகிக்க அனுமதிப்பதா இல்லையா என்பது நம் கையில்தான் இருக்கிறது. Economic freedom is real freedom, rest are illusory என்பதை ஒரு அளவுக்கு மேல் பிடித்து தொங்கி கொண்டு இருந்தால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

மங்கை

பிகு
இதை எழுதும் எனக்கும் பெரிய லௌகீக பின்புலம் இந்த நிமிடம் கிடையாது.

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம் தானே. பிரயாகை 68 படித்த போது தான் அரசியல் சூதின் இன்றைய நிலையையும் இன்றைய மக்களின் மன நிலையையும் ஒப்பிட்டு பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன்.

ஊழலுக்கு எதிராக மாய்ந்து மாய்ந்து குரல் கொடுத்த இதே கூட்டம் தான் என்ன இருந்தாலும் பாவம்யா அந்த அம்மா என்று ஒரு தலைவரின் ஊழல் குற்றச் சாட்டின் கீழ் நடந்த கைதிற்கு கண்ணீர் வடித்தது. இந்த மக்கள் கூட்டத்தை மேய்ப்பவன் நல்ல தலைவனாகவே இருந்தாலும் வரலாற்றில் அவன் நல்ல தலைவனாக இடம் பெறவே இயலாது என்பது புரிந்தது.

பிரயாகை முடித்த பின் ” நவீன அடிமை முறை” கட்டுரை படித்தேன். இந்த செய்தி நாளிதழில் வெளி வந்த போதே நினைத்தேன். இதற்கு எதிராக நிச்சயம் மென் பொருள் துறையில் ஒரு கூட்டம் உருவாகும் என்று. வா மணிகண்டன் கட்டுரையில் நியாயம் இருக்கலாம். முக நூலில் கூட அந்த டிசிஎஸ் நிர்வாகத்திற்கு எதிராக ஆதரவு கேட்டு சில பக்கங்கள் துவங்கப் பட்டு இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

தங்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறி ஆகும் என்னும் போது உருவாகும் கோபமும் கூட்டம் சேர்த்து ஆதரவு தேட வேண்டும் என்ற எண்ணம் வருகிறதே இது ஏன் கையினில் அள்ளி அள்ளி பணம் தரப்பட்ட போது அவர்களுக்கு வரவில்லை. என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சனையும் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் நடத்தும் போராட்டங்களும் இப்போது கூட அவர்களின் கண்களில் தென்பட்டு இருக்காது.

தாங்களும் தங்களின் வாழ்வியலும் இந்த சமூகத்தில் ஏற்படுத்தும் எதிர்மறை பாதிப்புகள் பற்றி யாரேனும் எடுத்தச் சொன்னால் கூட ” என்ன மச்சி பொறாமையா” என்ற கேள்வியே முதலில் வைக்கப் பட்டது?

மென்பொருள் துறையில் இது போன்ற ஒரு நிகழ்வு என்றொ ஒருநாள் நிகழ்ந்தே தீரும் என்று தெளிவான சமூக அரசியல் பார்வை உள்ளவர்களுக்குத் கண்டிப்பாகத் தெரியும்.

முதலில் நோக்கியா அடுத்து பாக்ஸ்கான் இப்போது டிசிஎஸ். இன்னும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே தான் போகும். அந்நிய நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் அது எந்த முகமுடியில் இங்கே உலவினாலும் அவை தங்களின் டார்கெட் முடிந்ததும் கிளம்பும் அல்லது ஆட்க் குறைப்பு செய்யும். இது நிகழந்தே தீரும். நாம் தான் மிகக் கவனமாக பணியாற்ற வேண்டும்.

மென் பொருள் துறையினர் இந்த தேசத்திற்குள் நுழையும் போதே தங்களின் சக துணையாக பல்வேறு நிறுவனங்களையும் அழைத்தே தான் வந்தனர். அதன் மூலம் ஒரு மென்பொருள் நிறுவனம் தான் தரும் சம்பளத்தை சிறிது அளவினை கூட யாருமே சேமித்து வைத்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தது இப்போது வரை இருக்கிறது. என் கண் முன்னே என் நண்பர்கள் அடைந்த பிரமிப்பான வளர்ச்சியையும் கண்டேன். இன்று கட்டுப்பாடு அற்ற செலவுகளால் கடன்காரனாய் மாறி தத்தளித்துக் கொண்டு இருப்பதையும் காண்கிறேன்.

நல்ல வேலையாக நான் வேறு துறையில் மிக அடிப்படையான நிறைவான சம்பளத்தில் ( மாதம் 11000/-ல் )தான் இருக்கிறேன். வேலையை விட்டு என்னை அனுப்பினால் கூட நிச்சயம் இதே சம்பளத்தில் இன்னொரு வேலை தேடிக் கொள்வேன். என்னைப் போலவே நிறைய நபர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மென் பொருள் துறையின் அசுர வளர்ச்சிக்கு பின்னர் சந்தித்த உளவியல் சிக்கல்கள் சொல்லில் அடங்காது.

12000 சம்பளத்தை எல்லாம் வச்சுட்டு இன்னிக்கு எப்படிங்க வாழ முடியும்? கடனா இருந்தாக் கூட சொந்த வீடு வேணாமா என பெண் கேட்டு போகும் இடங்களில் துவங்கி விசேஷ வீடுகள் வரை பதில் சொல்லித் தீராது.
ஆனால் நிரந்தர வேலை நிரந்தர வருமானம் என்பது வேறு திடீர் வளர்ச்சி என்பது என்றோ ஒரு நாள் நின்றே தீரும் என்பதை எப்படி இவர்களுக்கு சொல்லிப் புரிய வைப்பது என்பதை புரியாமலே நின்று இருந்தோம்.

என்னுடைய மென்பொருள் துறை நண்பர்களுக்கு நிறைய அறிவுரை செய்தேன். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பினை அதிகப் படுத்துங்கள். அத்தியாவசிய தேவை இன்றி எளிதாக கிடைக்கிறதே என்று கடன் வாங்காதீர்கள் என்று அவர்கள் கேட்கத் தயார் இல்லை. வளர்ச்சி வேறு. வளர்ச்சி என்று நம்ப வைக்கப் படுவது வேறு.

மென்பொருள் துறை ஊழியர்கள் அனைவரின் உழைப்பும் மிகக் கடுமையானது என்று தெரியும். கொடுக்கும் சம்பளத்திற்கு ரத்தத்தை சொட்டு கூட மிச்சம் வைக்காமல் உறிஞ்சாமல் இருக்க மாட்டார்கள் என்பதும் தெரியும். ஆனால் அதற்காக மென்பொருள் துறையினர் பெரும்பாலனோர் சமூகம் பற்றிக் தங்களுக்குள் கொண்டு இருக்கும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள இயலாதே.

ஒவ்வொரு சங்கமும் பல்வேறு மக்களும் தங்கள் பிரச்சனைகளை முன் நிறுத்தி சாலைகளில் இறங்கி
போராடிய போது இவர்கள் அதில் பங்கெடுக்கா விட்டால் கூட பரவாயில்லை ஆனால் அதை பார்த்ததும் அவர்களின் எதிர்வினைகள் கீழ்க் கண்டவாறு தானே இருந்தது.

” இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல ஆவூனா தேருவுல இறங்கிருவானுங்க…பாதி நாள் ஆபீசுக்கு லேட்டா தான் போக முடியுது?

” திறமை இருந்தா ஏங்க கம்பனிக்காரன கிட்ட போய் கெஞ்சிட்டு இருக்கீங்க? வேற கம்பனிக்கு போக வேண்டியது தானே ?

இப்படி தான் மென்பொருள் துறையினர் இது வரை சமூகம் சார்ந்த விசயங்களில் இயங்கிக் கொண்டு இருந்தனர். சில விதி விலக்குகள் இருக்கலாம். பெரும்பான்மை மனநிலை சார்ந்தே இந்த கடிதம்.

தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் தான் அவர்களுக்கு தொழிலாளர் நலச் சட்டம் பற்றி எல்லாம் பேசத் தோன்றுகிறது.

தீபாவளி போனஸ் வாங்குவதற்குள் இங்கே ஒவ்வொரு மற்ற துறை ஊழியனும் படும் வேதனைகளையும் அவர்கள் உணரத் தயார் நிலையிலே இல்லை.

தங்களின் தந்தை ஐம்பது வயதிற்கு மேல் ஏன் வீடு வாங்குவதைப் பற்றி யோசித்தார் ?. நாம் ஏன் இப்போதே வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம் என்ற மிக அடிப்படையான கேள்வ்யினை கேட்டுக் கொள்ளக் கூட இங்கே அவர்கள் தயார் இல்லை.

யாரேனும் கேட்டால் நாங்கள் வாழ்கையை அனுபவிக்கிறோம் உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல் என்றே பதில் தந்தார்கள். அதற்க்கு துணையாக சில ஆளுமைகள் கூட மேல்நாட்டு மொக்கைத் தத்துவங்களை தரவிறக்கம் செய்து உளறிக் கொட்டினார்கள் . உழைப்பவர்கள் பயன் பெறுவதில் தவறில்லை ஆனால் இருபது முப்பது வருடங்களுக்கு சேர்த்து கடன் வாங்கி வைத்து விட்டால் அவர்கள் சார்ந்து இருக்கும் நிறுவனங்கள் அத்துணை வருடங்கள் இங்கே எப்படி இயங்கும் சாத்தியம் உண்டு என்ற அடிப்படையினைக் கூட யோசிக்கத் தவறி விட்டனர்.

சென்னை ,மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் முதலிய இடங்களில் இருந்து தீபாவளி பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னதாக விடுமுறை எடுத்துச் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் இவர்களில் எத்துனை சதவிகிதம் பேர் தேர்தலுக்கும் சொந்த ஊருக்குப போய் ஓட்டுப் போட அதே விகிதத்தில் செல்கிறார்கள் என்று கணக்கிட்டால் ஏமாற்றம் மட்டுமே எஞ்சும். ஆனால் தங்களுக்கு பிரச்சனை என்னும் போது மட்டும் அரசாங்கம் வந்து உதவி செய்ய வேண்டும் என்பது சுயநலம் இல்லையா?

2000 ஆண்டு வரை இருந்த நிலைமையே இன்று வரை இருந்து இருந்தால் மென்பொருள் துறையினரின் வாழ்வு எப்போதுமே சிறப்பாக இருந்திருக்கும்

ஆனால் தங்களின் அமெரிக்க பாணி வாழ்க்கை முறை பற்றிய பெரிய போலிப் பெருமைகளை ஒவ்வொரு மென்பொருள் துறை ஊழியரும் பெரும் உவகையோடு சுய விளம்பரம் செய்து கொண்டதால் அதன் மீது ஆர்வம் கொண்ட பெரும் பேராசைக் கூட்டம் ஒன்று கடந்த 15 வருடங்களில் MBA, MCA , MSC, ME என அவர்களுக்கு பெரும் போட்டி கொடுக்க கிளம்பி விட்டனர். ஊரெங்கும் கல்வித் தரமற்ற பல கல்லூரிகள் திறந்து கல்வித் தந்தைகள் கல்லா கட்டத் துவங்கினர்.

விளைவு இன்றைய நிலைமையில் மென்பொருள் துறை சார்ந்த பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வாய்ப்புகள் கம்மியாக இருக்கிறது. ஏற்கனவே கொள்ளை லாபம் சம்பாதிக்க இந்திய சந்தைகளைத் தேர்ந்தெடுத்து உள்ள அந்நிய மற்றும் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு இதுவே சரியான தீனியாகி விட்டது.

குறைந்த ஊதியத்தில் அதிக வேலை செய்ய பெரிய கூட்டம் ஒன்று தயாராகி விட்டது. நிர்வாகங்கள் நிச்சயம் அவர்களைத் தான் தேர்ந்தெடுக்கும். அதை எப்படி நாம் தவறு என்று சொல்ல முடியும்?

புதிதாக வேலைக்கு வரத் தயார் நிலையில் இருப்பவர்களின் கோணத்தில் இருந்து பார்த்தால் அவர்களின் வளர்ச்சியை தடை செய்வதைப் போல தோன்றாதா?

மென்பொருள் துறையின் வளர்ச்சி பல வசதிகளை சமூகத்திற்கு ஏற்படுத்தித் தந்து இருந்தாலும் அவற்றின் மூலமாக ஊழியர்களும் சமூகமும் நிறைய இழந்து இருப்பதும் கூட உண்மை தான்.

உண்மையில் சொல்ல வேண்டுமானால் மென்பொருள் துறை மூலம் தரப்படும் அபரிமித சம்பளம் அந்நிய குளிர்பானங்கள், உணவுகள், உடைகள், தொழில்நுட்ப சாதனங்கள் தனியார் வங்கிகளுக்கு தரப்படும் வட்டிகள், கொள்ளை வாடகை வாங்கும் வீடுகள், கொள்ளை லாபம் அடிக்கும் தனியார் பள்ளிகளில் தவம் கிடத்தல் எல்லாவற்றிற்கும் உச்சமாக மது இவற்றிற்குத் தான் அதிகம் செலவாகிறது என்பதை யாராவது மறுக்க இயலுமா? யாரோ ஒரு சிலர் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தேன். அம்மாவை ப்ளைட்டில் அழைத்துச் சென்றேன் என்று கண்ணீர் கதை சொல்லலாம். பெரும்பாலானோர் வீண் செலவுகளையே செய்கின்றனர்.

மேற்சொன்னவைகளில் பெரும்பாலனவை பொறுப்பற்ற தன்மையாலும் போலி கௌரவதிற்க்க்காகவும் தான் செலவு செய்யப் படுகின்றன. அது போன்ற ஆடம்பர செலவுகள் பாதிக்கின்றன என்பதற்காக எல்லாம் இங்கே யாரும் வருத்தம் தெரிவிக்க இயலாது அல்லவா?

ஆனாலும் விரித்த வலை தெரியாமல் சிக்கி விட்டார்கள் என்பதற்காகவும் அவர்களின் தவறுகளுக்கு அவர்களின் குடும்பமும் சேர்ந்தே சிரமப் பட வேண்டும் என்பதை நினைக்கையில் நமக்கும் கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது.

ஆனால் இந்த ஆட்குறைப்பும் சம்பளக் குறைப்பும் இது போன்ற நிறுவனங்களில் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது. சுதாரிக்க வேண்டியது அந்தத் துறை ஊழியர்களே.வீண் செலவுகளையும், போலி கௌரவத்திற்க்காக வாங்கப் படும் கடன்களையும் குறைக்காமல் இதில் இருந்து தப்பிக்க இயலாது. அடுத்த முக்கியமானது சேமிப்பு. இதைச் செய்தாலே நிச்சயம் தனிநபர் பொருளாதாரமும் தேசப் பொருளாதாரமும் சேர்ந்தே வலுப்பெறும்.

ஆனால் இது நடக்க ஊழியர்கள் விரும்பினாலும் அந்த நிறுவனங்கள் அப்படி ஒரு நேர்மறை மாற்றத்தை விரும்புமா என்பதும் கேள்விக் குறியே?

நீங்கள் சொன்னது போல மென்பொருள் துறையினரின் தேனிலவுக் காலம் முடிவுக்கு வந்து விட்டது என்றே நினைக்கிறேன்.

நன்றி

அன்புடன்

பிரசன்னா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 76
அடுத்த கட்டுரைவிழா -கடிதங்கள் 3