விழா கடிதங்கள் 2

IMG_9628[1]

வணக்கம்,

தமிழை வளர்க்க,தாய்மொழியாக கொண்டவர்களை விட தாய்நாட்டு மொழியாக கொண்டவர்களின் பங்கு மிக அதிகம் என்பதை இரத்தின சுருக்கமாக எனக்கு இந்த விழா ஆணித்தரமாக உணர்த்தியமைக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்,தமிழை தமிழர்களைவிட மற்றவர்கள் தான் அழகாக உச்சரிக்கவும் செய்கின்றனர்.

ஒரு விதத்தில் நானும் விழா நாயகர் திரு.ஞானகூத்தன் அவர்களும் ஒரே சமயத்தில் எங்களது வாழ்நாளில் ஒரே நேரத்தில் இது போன்ற அனுபவத்தை பெற்றதில்லை,ஆம் இது போன்ற விழாவிற்கு அரங்கு நிறைய இத்தனை பேர் வருவார்களா என்ற அதிசயத்தை பெற்றோம்.(இதனை அவர் குறிப்பிட்டு காட்டினார்)

(நிகழ்ச்சி ஆரம்பத்ததில் இருந்தும் இடையிலிலும் நான் எழுந்து அரங்கத்தை சுற்றி நோட்டமிட்டு அதனை உறுதி செய்து கொண்டேன்)

நான் பயந்து கொண்டிருந்தது போல நல்லவேளையாக விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கும் விழாவில் ஆங்கிலத்தில் பேசாமல் தமிழில் பேசி விழாவை தமிழ் விழாவாக மாற்றியமைத்ததற்கு நன்றி,

காரணம்,28.12.2014 காலையில் இருந்து ராஜஸ்தானி நிவாஸில் நடைபெற்ற எழுத்தாளர்களுடனான கலந்துரையாடலில் பல இடங்களில் ஆங்கிலத்தில் நடைபெற்றது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நான் இது போன்ற கலந்துரையாடலில் இதுவரை கலந்துகொண்டது இல்லை இது தான் முதல்முறை,அதனாலோ என்னவோ எல்லா இடங்களைப்போல இங்கே ஆங்கில கலப்பு இல்லாமல் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் வந்தேன்,

நான் திரு,கல்கி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலைத் தான் முதன்முதலில் வாசிக்க ஆரம்பித்தேன் அன்றிலிருந்து தினம் 25 பக்கங்களாவது படிக்கவேண்டும் என்ற முடிவோடு என்னை மாற்றிக்கொண்டேன்,

நமது திருமிகு,ஜெயமோகன் அவர்களின் ”வெண்முரசு” வாசிக்க ஆரம்பித்தவுடன் அவர் மேல் எனக்கு ஒரு பெரு மரியாதை உண்டாயிற்று,திரு வசந்தபாலன் அவர்கள் சொல்லிய ஒரு கருத்தை இங்கே நான் மேற்கோள்காட்ட விரும்புகிறேன்,” நான் இந்த உலகை என் கண்களை கொண்டு பார்க்கவில்லை ஜெயமோகன் அவர்களின் கண்கள் வழியாகவே பார்க்கிறேன்”,, ஆம் நானும் அவர் போலவே இந்த உலகை அவர் கண் கொண்டே பார்க்கிறேன்,இதை அவர் சொல்லிய பின்புதான் நான் அதனை உணர்ந்தேன்,

நைய்யாண்டியாகச் சிறு திருத்தம்,

அன்பர் நன்றியுரையில் விஷ்ணுபுரம் விழாவிற்கு கோவையில் இருந்து உள்ளூர் வாசகர்கள் வந்து சிறப்பித்தமைக்கு நன்றி என்று முடித்தார்,மன்னிக்கவும் உள்ளூரில் இருந்து மட்டும் அல்ல ஒரு மாவட்டம் தாண்டி நாமக்கல்லில் இருந்தும் வாசகர்கள் வந்திருந்தோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்,

நீலம் காலண்டர் கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் வந்தேன்,ஏமாற்றம் அதில் மட்டும் தான் கிடைத்தது.

மிகச்சிறப்பாக இதனை நடத்திமுடித்த விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தை சார்ந்த அனைவருக்கும் எனது மற்றும் என் நண்பர்கள் சார்பாக பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்,குறிப்பாக ஓவியர் திரு.சண்முகவேலு அவர்களுக்கு நன்றிகள்.அருமையான உயிருள்ள ஓவியங்களை தருகிறார்.

நாமக்கலில் இருந்து,
மாது.
DSC_3513[1]

ஜெ

விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சி நான் கலந்துகொண்ட மிகச்சிறந்த விழா என்றால் அது உண்மை. இம்மாதிரி நிகழ்ச்சிகளிலே என்ன நடக்கும் என்று நான் நிறைய கண்டிருக்கிறேன்.மேடையில் இருந்தவர்களை பொய்யாகப் புகழ்ந்துபேசுவது நகைச்சுவை என்றபேரிலே ஏதாவது மாற்றிமாற்றி வம்பு சொல்வது. மூன்றுநாலுமணிநேரம் நிகழ்ச்சி போய்க்கொண்டே இருக்கும். யாராவது ஒருவர் சொன்ன ஏதாவது ஒரு விஷயத்தை பிடித்துக்கொண்டு மாற்றிமாற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். ஒரு அர்த்தமும் இருக்காது. பெரும்பாலும் எந்த பின்னணித் தயாரிப்பும் இல்லாமல் அங்கேயே ஏதாவது பேசுவார்கள், அதைக்கேட்டு பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துத்தான் எல்லாரும் வருவார்கள்

ஆனால் விழா மிகச்சரியாகத் தொடங்கி மிகச்சரியாக முடிந்தது. யாருமே பொய்யாக ஏதும் சொல்லவில்லை. புவியரசு ஞானக்கூத்தனை பாராட்டி பேசும்போது அப்படியே வானம்படி கவிதைமரபைப்பற்றி சொன்னார். அதுவும் சொல்லவேண்டியதுதான். ஏனென்றால் கோவை வானம்பாடிக் கவிதைகள் உருவான மண். நானெல்லாம் சின்ன வயதிலே வானம்பாடிக்கவிதைகளை வாசித்து எழுச்சி கொண்டவன். அந்த மாற்றுக்கருத்தும் நாகரீகமாக முன்வைக்கப்பட்டது. அதை நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அனைவருமே ஞானக்கூத்தன் கவிதைகளைக் கூர்ந்து வாசித்துவிட்டு அழகாக பேசினார்கள்

இசை பேச்சு மிகச்சிறப்பு. அவர் கவிதைகளை விகடனில் பார்த்திருக்கிறேன். அவர் கோவைக்காரர் என்று அறிந்ததில் நிறைவு அடைந்தேன். நீங்கள் பேசியதும் ஞானக்கூத்தன் பேசியதும் இரண்டு வகையில் நகைச்சுவை பகடி என்பதெல்லாம் கவிதையிலே எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டியது. சிறந்த நிகழ்ச்சி. கோவைக்காரனாக நான் பெருமைகொள்ளக்கூடிய நிகழ்ச்சி.கோவையின் ஒரு முத்திரை நிகழ்ச்சி

கோவையிலே இப்படி ஒரு அற்புதமான விழா நடப்பது சிறப்பு. கோவையில் இருந்து இவ்வளவுபேர் இந்தமாதிரி ஒரு தீவிர இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்து கடைசிவரை அமர்ந்திருந்ததை எண்ணி பெருமைகொள்கிறேன்

சுப்ரமணியம்

ஜெ சார்

விஷ்ணுபுரம் விழா மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. எனக்கு இது புதிய அனுபவம். இத்தனைபேர் இளைஞர்களாக இருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் பேசவில்லை. என்னைப்போலவே பேசுமளவுக்கு பெரிதாக வாசிக்கவில்லை என்ற நினைப்புதான் காரணமாக இருந்திருக்கும். பேசப்பட்ட விஷயங்களெல்லாமே மிகவும் புதியவையாக இருந்தன. வியப்புடன் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒருநாளில் நாலைந்து அரங்குகளில் தொடர்ச்சியாக இலக்கியம் பண்பாடு பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்க என்னால் முடியும் என்ரே எனக்கு இப்போதுதான் தெரிந்தது

கவிஞர் தேவதேவன் என்னுடைய ஆதர்ச மனிதர். அவரைச் சந்தித்து பேசிக்கொண்டிருக்கமுடிந்தது மகிழ்ச்சியை அளித்தது. அவருடன் இருந்த நேரம் என் வாழ்க்கையிலே மறக்கமுடியாதது

நன்றி

பிரவீண்

முந்தைய கட்டுரைஞானக்கூத்தன் பற்றி இசை
அடுத்த கட்டுரைபுத்தாண்டுச் சூளுரை