விழா 2014 [நினைவுகள்!]

aw

2014 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை ஞானக்கூத்தனுக்கு அளிப்பது என்ற முடிவை ஆகஸ்டில்தான் எடுத்தோம். ஆனால் விழா சம்பந்தமான பதற்றம் ஏதுமில்லை. பணம் வந்துவிடும். விழா ஒழுங்காக நடக்கும் என்ற எண்ணம் எழுந்துவிட்டது.

DSC_3309

விஷ்ணுபுரம் விழா இம்முறை முடிந்தபின் கோவை நண்பர்களுக்கெல்லாம் மிக ஏமாற்றம். வெவ்வேறு கோணங்களில் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தனர். இது ஐந்தாவது விழா. நான்கு விழாக்களை நடத்திய அனுபவத்தில் எந்தக் குளறுபடிகளும் இல்லாமல் எந்த சிக்கல்களையும் சந்திக்காமல் மிக எளிதாக விழா நடந்து முடிந்தது.

இம்முறை கோவை நண்பர் வே.சுரேஷ் அனைத்துப்பொறுப்புக்களையும் எடுத்துச் செய்தார். செல்வேந்திரன், விஜய் சூரியன், ‘ஸ்டீல்’ சிவா என நண்பர்களால் அழைக்கப்படும் சிவக்குமார், ‘ஷிமோகா’ ரவி, ‘தம்பி’ ராதாகிருஷ்ணன், ‘க்விஸ்’ செந்தில், தியாகு புத்தக நிலையம் தியாகு ஆகியோர் துணைநின்றனர். அரங்கசாமி ஒருங்கிணைத்தார்.

10801634_1610522862504600_4619839606095336190_n

“என்னசார், சாதாரணமா நடந்து முடிஞ்சிருச்சே? சவாலே இல்லியே. இதுவரை நடந்ததிலேயே பெரிய விழா இதுதான். ஆனா அதுபாட்டுக்கு நடந்துட்டுது. பெரிசா ஏதாவது பண்ணலேன்னா சம்பிரதாயம் மாதிரி ஆயிடும்சார்” என்று அரங்கசாமி சொல்லிக்கொண்டே இருந்தார்.

ஐந்துவருடங்களுக்கு முன் சாதாரண உரையாடல் ஒன்றில் இந்த எண்ணம் வந்தது, சரி நாமே ஒரு விருது அளித்தால் என்ன. நாம் மதிக்கும் படைப்பாளிகளுக்கு விருதளிப்போம். வாசகர்களும் எழுத்தாளர்களும் அளிக்கும் பரிசு. அவர்களை முழுமையாக வாசித்தவர்களால் அளிக்கப்படும் பரிசு. அவ்வாறுதான் விஷ்ணுபுரம் விருது ஆரம்பிக்கப்பட்டது.

அன்று ஓர் எண்ணம் இருந்தது. அந்த விருதை ஒரு வாழ்நாள்சாதனை விருதாகவே அளிக்கிறோம். ஆகவே பங்கேற்கும் படைப்பாளிக்கு அதற்கான நிறைவு வரவேண்டும். அரங்கு நிறைந்த விழாவாக இருக்கவேண்டும். அவர் மட்டுமே முன்னிலைப்படவேண்டும். விழாவுக்கு தமிழின் வி.ஐ.பிக்களை அழைத்து நிகழ்த்த எங்களைத் தூண்டியது அதுவே.

தமிழின் உதாசீனத்தைப் பார்த்து சலித்தவர்கள் மூத்த படைப்பாளிகள். புறக்கணிப்பால் சோர்ந்தவர்கள். அவர்கள் விழா அரங்கிலும் அந்தப் புறக்கணிப்பைக் கண்டு மேலும் சலிப்புற்றுவிடக்கூடாது. அவர்களுக்கு ஊக்கமும் நிறைவும் அவ்விழாவால் கிடைக்கவேண்டும். ஆகவே கூட்டம் வந்தாகவேண்டும். பெரிய அரங்கு இருந்தாகவேண்டும். ஆடம்பரமாகவே விழா நிகழவேண்டும். ஊடகங்களனைத்தும் அதை எழுதவேண்டும். மறுநாள் காலை அனைத்துச்செய்தித்தாள்களிலும் அது வெளிவரவேண்டும்.

IMG_9158[1]

ஆகவே முதல் விழாவிலேயே ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதி கொண்ட விருதுக்கு எழுபத்தைஐந்தாயிரம் ரூபாய் விழாச்செலவுக்காகவும் செலவிட்டோம். முடிந்தவரை ஊடகங்களில் செய்திகளைக் கொண்டுசென்றோம். முடிந்தவரை எழுத்தாளர்களை நேரில் சென்று அழைத்தோம். ஆனால் அப்போது இவ்விழாவுக்கு எதிராக எழுத்தாளர்கள் சிலரிடமிருந்தே வந்த கசப்பும் எதிர்ப்பும் பெரும் தடையாக இருந்தமையால் பெருமளவில் எழுத்தாளர்கள் வரத்தயங்கினார்கள்

முதல் விழாவை மணிரத்னமும் என் பிரியத்திற்குரிய இக்கா புனத்திலும் வந்திருந்து சிறப்பித்தார்கள். வேதசகாயகுமாரும் நாஞ்சில்நாடனும் பேசினார்கள். அது ஊடகங்களில் பெரிய செய்தியாக ஆகியது. ஆ.மாதவன் அடைந்த மனநிறைவைக் கண்டு எங்களுக்கும் நிறைவு. அது ஓர் உத்தேவகமூட்டும் தொடக்கம்

அன்றுமுதல் விஷ்ணுபுரம் விருது வளர்ந்துகொண்டே செல்கிறது. முதல் விழாவின்போது முந்தையநாளே நண்பர்கள் கூடிவிட்டனர். நான்கு அறைகள் கொண்ட விடுதியில் படுக்க இடம் போதாமல் முப்பது நண்பர்கள் இரவெல்லாம் பேசிக்கொண்டே கோவைத்தெருக்களில் சுற்றி வந்தோம். கால்கடுக்கும்போது ஆங்காங்கே அமர்ந்து டீ குடித்தோம். மொத்த செலவையும் நண்பர் ஆடிட்டர் கோபி தலையில் கட்டினோம்.அன்று அது ஒரு முடியாத இரவாக இருந்தாலும் இன்று இனிய நினைவாக எஞ்சுகிறது

அடுத்தவருடம் இன்னும் வசதியான இடம்தேடினோம். அம்முறை தொடர்ச்சியாக உரையாடல்கள், விவாதங்கள் நிகழ்ந்தன. ஆனால் எதிர்பார்த்ததை விட கூடுதலாக நூறுபேர் வந்திருந்தனர். இரவில் தங்க இடம் போதவில்லை.

அதற்கடுத்த வருடம் தங்குவதற்குக் கல்யாணமண்டமே பார்த்துவிட்டோம். அதுவும் சென்றமுறை போதவில்லை. இம்முறை மூன்று கூடங்களும் அறைகளும் பெரிய கல்யாணமண்டபத்தை முழுமையாகவே எடுத்துக்கொண்டோம். இவ்வருடம் மேலும் அதிகக் கூட்டம். இருநூறு பேருக்குமேல் வந்து மூன்றுநாட்கள் தங்கி கிட்டத்தட்ட ஒரு பெரிய கருத்தரங்காகவே விழா மாறியது. ஆறுவேளை நான்கு பந்திகளிலாக உணவு பரிமாறவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட பெரிய அளவிலான ஒரு திருமணத்துக்கு நிகர்.மாலையில் நிகழும் விருதளிப்புவிழாவை ஒரு துணைநிகழ்வாக ஆகிவிட்டிருக்கிறது

விழாச்செலவு இப்போது மும்மடங்குக்கும் மேல்.விருது தொகை ஒரு லட்சம் ரூபாய்,விமான,ரயில் கட்டணங்கள், நண்பர்களின் கொடைதான் முதன்மையானது. இம்முறை சென்றதடவை இருந்த சில செலவுகளைக் குறைத்தோம். சென்றமுறை நாளிதழ்களில் பணம்செலவழித்து விளம்பரம் செய்தோம். நகரெங்கும் தட்டிகள் வைத்தோம். இம்முறை ஏதுமில்லை. அழைப்பிதழ்கள் தவிர. அதேயளவுக்குக் கூட்டம் வந்தது. இது விஷ்ணுபுரம் விழாவுக்காக மட்டுமே உருவாகி வந்துள்ள கூட்டம் என்பது பெரும் நிறைவை அளித்தது

27 காலையில் நானும் அருண்மொழியும் சைதன்யாவும் நாகர்கோயிலில் இருந்து பேருந்தில் வந்தோம். ரயில் டிக்கெட் உறுதிப்படவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் ஏன்றால் அந்தப்பயணத்துக்குபின்னர் நான் எழுந்து அமர்ந்திருக்கவே மாட்டேன். ஆனால் தொடர்ந்து மூன்றுநாட்கள் ஒரு நாளில் மூன்று மணிநேரம் மட்டுமே தூங்கியபடி பேசிக்கொண்டே இருந்தோம். நான்காம் நாள் ரயிலில்தான் நல்ல தூக்கம்

காலை ஆறுமணிக்கு தேவதேவனையும் பேருந்துநிலையத்தில் இருந்து கூட்டிக்கொண்டு ஸ்டீல் சிவா எங்களை ராஜஸ்தானி நிவாஸுக்குக் கொண்டு செல்லும்போதே அங்கு நூறுபேர் இருந்தனர். குளித்து தயாரானதுமே ஒன்பது மணிக்கே விவாத அரங்கை ஆரம்பித்துவிட்டோம்.

முதல்சந்திப்பு பாவண்ணனுடன். வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பாவண்ணன் பதிலளித்தார். அவரது புனைவுலகம், கன்னட இலக்கிய உலகின் இன்றைய போக்குகள், தலித் இலக்கியம் பற்றி பாவண்ணன் விரிவாகப் பதிலளித்தார். அவரது பி.எஸ்.என்.எல் வாழ்க்கை, கடலூர் மாவட்டத்தின் பொதுவான சூழல் அனைத்தைப்பற்றியும் பேசினார்.

கன்னட இலக்கியத்திலும் இன்று வரலாற்றை விரித்துரைக்கும் பெரியநாவல்களே உள்ளன என்றும், தலித் பண்டாயா இயக்கம் வலுவிழந்துவிட்டது என்றும் பாவண்ணன் சொன்னார். தலித் இலக்கியவாதிகளான தேவனூரு மகாதேவா போன்றவர்கள் இன்று அரசியல் செயல்பாட்டாளர்களாக மாறிவிட்டிருக்கின்றனர்.

DSC_3412[1]

பன்னிரண்டு மணி முதல் புவியரசுடன் விவாதம். வானம்பாடி கவிதை இயக்கத்தின் பிறவி நோக்கம் பற்றி அவர் சொன்னார். கவிதையின் கட்டமைப்பு, மொழி ஆகியவற்றில் வானம்பாடி இயக்கத்தின் சாதனை எல்லைக்குட்பட்டதுதான் என்றார். ஆனால் கவிதையை ஒரு போராட்டவழியாக, மக்களுடன் உரையாடுவதற்கான முறையாக மாற்றியவர்கள் அவர்கள்தான்.

அவர்கள் இல்லாவிட்டால் தமிழ் நவீனக்கவிதை வெறும் புலம்பலாகவும் எளிய காட்சிச் சித்திரங்களாகவும்தான் முடிந்திருக்கும். சமூகவிஷயங்களைப் பேசுவதற்கு கவிதைக்கு பொறுப்புள்ளது என உணர்த்தியது வானம்பாடி இயக்கமே என்றார் புவியரசு. ஞானக்கூத்தன் தன் நண்பர் ,ஆனால் கவிதையில் அவருக்கு தான் முற்றிலும் எதிரானவன் என்றார்

‘ஆமா, தெருவிலே நின்னு பாடினோம். அறைக்குள்ள வச்சு புக்கு வெளியிடாம நடுத்தெருவிலே வெளியிட்டோம். அதெல்லாம் கவிதையோட இன்னொரு முகம். இதுதான் கவிதைன்னு வகுக்க எவருக்கும் உரிமை இல்லை. நாங்க இல்லேன்னா அடுத்தகட்ட அரசியல்கவிதைகள் ஒண்ணுமே தமிழிலே வந்திருக்காது’ என்றார்.

ஒருமணிநேர மதிய உணவு இடைவேளை. மூன்றுபந்திகளிலாகக் கல்யாணவீடுகள் போலவே சாப்பாடு. அரங்கசாமியும் விஜயராகவனும் செல்வேந்திரனும் பந்திவிசாரணையெல்லாம் கூட செய்தனர். இலக்கியத்திற்காக இத்தனைபேர் கூடுவது ஓர் உவகையளிக்கும் நிகழ்வு என்றால் கேலிகளும் கிண்டல்களுமாக இப்படி சாரிசாரியாகச் சேர்ந்து உணவுண்பது இன்னும் நிறைவளிக்கிறது. அனைவரும் பெரியதோர் ஒற்றைக் குடும்பம் என்ற உணர்வு எழுகிறது.

IMG_9185[1]

சென்றமுறை எழுத்தாளர்களை வரவழைத்து அவர்களை வாசகர்கள் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம். பல இடங்களில் பல வகைகளில் உரையாடல் நடந்தது. இம்முறை சந்திப்புகளை முறைப்படுத்தியிருந்தோம். ஆனால் விஷ்ணுபுரம் கருத்தரங்குகளைப்போல அனைவரும் அனைத்து அரங்குகளிலும் கலந்துகொண்டாகவேண்டும் என்பது போன்ற நிர்ப்பந்தங்களேதுமில்லை. ஆனாலும் அனைவரும் சந்திப்புகளிலேயே ஆர்வம் காட்டினர்

மதியம் சு.வேணுகோபாலுடன் சந்திப்பு. வேணுகோபாலின் புனைவுகளை வந்திருந்தவர்கள் விரிவாக வாசித்திருந்தனர். பொதுவாக எழுத்தாளர்கள் எப்போதும் சொல்லும் ஒன்று உண்டு. விஷ்ணுபுரம் அரங்கைத் தவிர எங்கும் அவர்களின் படைப்புகளை விரிவாக வாசித்த வாசகர்களை அவர்கள் சந்திக்க முடிவதில்லை. ஆ.மாதவன்,பூமணி, யுவன் என அனைவருமே அதைச் சொல்லியிருக்கிறார்கள்.

வேணுகோபால் அவரது புனைவுகளை அவர் உருவாக்கும் விதம் பற்றிச் சொன்னார். ‘என்னோட அக்கறை என் மண்ணைப்பத்திச் சொல்றதுதான். உழுது மரமோட்டி போடுற மண்ணோட வாசம் வரணும்னு நினைக்கிறேன். அது வந்ததுன்னா என் கதை ஜெயிச்சதுன்னு தோணும்’ என்றார். விவசாயம் அழிந்து கிராமங்கள் குடியால் அழிவதைப்பற்றி, இளமைக்கால விவசாய வாழ்க்கையின் நினைவுகளைப் பற்றி, மனித மனங்களின் உறவுச்சிக்கல்களைப் பற்றி கேள்விகள் எழுந்ததுமே ஆணித்தரமாக பதில் சொன்னார்

susiilaa

மாலை ஐந்துமணிக்கு எம்.ஏ.சுசீலா அவர்களின் ‘யாதுமாகி’ என்னும் சுயசரிதை நாவல் வெளியீட்டு விழா அந்த அரங்கிலேயே ஏற்பாடாகியிருந்தது. பாவண்ணன் நூலை வெளியிட நான் பெற்றுக்கொண்டேன். வம்சி பிரசுரம் ஷைலஜா பேசினார். பேராசிரியைகள் அனுராதா,பாத்திமா ஆகியோர் உரையாற்றினர்.சுசீலாவின் மகள் மினு பிரமோத் ஒருங்கிணைத்தார்

இரவு ஏழரை மணிமுதல் டி.பி.ராஜீவனுடன் விவாதம். ராஜீவன் தன்னுடைய சமீபத்தின கவிதை நம்பிக்கைகளைப் பற்றி பேசினார். அரங்கின் மிகச்சிறந்த செறிவான விவாதங்களில் ஒன்றாக அது அமைந்தது. ராஜீவன் மலையாளத்தில் சுருக்கமான வசனகவிதைகளை உருவாக்கிய முன்னோடி. அங்கே பெரும்புகழ் பெற்றிருந்த இசைக்கவிதையை எதிர்த்தவர். ஆனால் சமீபகாலமாக கவிதைக்கு ஓரளவு இசை தேவை, அதுவே கவிதையின் பித்துநிலையை நிலைநிறுத்துகிறது என்று தான் எண்ணுவதாகச் சொன்னார்

அத்துடன் படிமங்களால் ஆன நவீனக் கவிதையில் இருந்து தான் விலகிவிட்டதாகவும், படிமங்கள் அற்ற கவிதையை உருவாக்க விழைவதாகவும் சொன்னார். படிமங்கள் சிந்தனையைத் தொடாமல் நேரக பிரக்ஞைக்குச் செல்வது ஃபாசிசத்துக்குரிய கருவியாக ஆகிவிடுகிறதோ என்று ஐயமிருப்பதாகவும், ஆகவே கவிதையை தர்க்கத்தை நோக்கியும் செலுத்தும் புனைவுமுறைதேவை என உணர்வதாகவும் சொன்னார்

அதற்கு எதிராக இரு வாதங்கள் வலுவாக முன்வைக்கப்பட்டன. தேவதேவன் கவிதை என்பதே படிமங்களால் ஆனது, படிமம் என்பது கடவுளின் மொழி என்று ஒரு கூற்று உள்ளது, படிமம் இல்லாது கலை சாத்தியமில்லை என்றார். ராதாகிருஷ்ணன் மரபு என்பது படிமங்கள் வழியாகவே கடத்தப்படுகிறது, படிமங்கள் மரபின் நீட்சியாகவே மனிதரில் நீடிக்கின்றன, படிமங்களை இழந்தால் மரபே இல்லை என்றார்

DSC_3266[1]

ராஜீவன் அந்த இருகோணங்களையும் ஒத்துக்கொண்டு மேலே சிந்திக்கலாம் என்றார். சமகாலத்தின் மிதமிஞ்சிய படிம உருவாக்கத்தையே தான் உத்தேசிப்பதாகவும் இந்த விவாதம் தன் கருத்தை பலகோணங்களில் மறுபரிசீலனை செய்ய தூண்டுவதாகவும் சொன்னார்

இரவில் அந்தக்கூடத்திலேயே படுத்துக்கொண்டோம். ஆறு அறைகளிலும் கீழே உள்ள இரு சிறு கூடங்களிலுமாக முன்னரே பலர் தூங்கிவிட்டனர். கூடத்திலிருந்தவர்கள் தூங்க இரவு இரண்டுமணி ஆகிவிட்டது. சுரேஷ்,ராமச்சந்திர ஷர்மா ஆகியோர் பாடினர். வேடிக்கைகள் சிரிப்புகள் என விஷ்ணுபுரம் நிகழ்வின் முக்கியமான அம்சமான நட்புக்கூடல் அது

DSC_3292[1]

மறுநாள் காலைமுதல் தொடர்ச்சியாகச் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் முக்கியமான குளறுபடி காலை 10 மணிக்கு வந்துசேரவேண்டிய ஞானக்கூத்தனும் சா.கந்தசாமியும் மாலை 430க்குத்தான் வரமுடிந்தது என்பதே. அவர்களின் விமானம் டெல்லியில் இருந்து கிளம்பி சென்னை வந்து கோவை வரவேண்டியது. மூடுபனி காரணமாக அது 7 மணி நேரம் தாமதம். ஆகவே சா.கந்தசாமி, ஞானக்கூத்தனுடனான சந்திப்புகள் நிகழவில்லை

காலை 10 மணிக்கு வெண்முரசு நாவலைப்பற்றிய விவாதம் ஒன்று நிகழ்ந்தது. வெண்முரசின் தகவல்கள், வரலாற்றுப்பின்புலம் பற்றியே பெரும்பாலும் விவாதிக்கப்பட்டது. அதன்பின் ஞானக்கூத்தனின் கவிதைகள் மீதான ஒரு வாசிப்பரங்கு நிகழ்ந்தது. மதியம் 2 மணிவரை.

நான்கரை மணி வரை பொதுவான பேச்சுகளும் தனித்தனிச் சந்திப்புகளும். காலையில் ஞானக்கூத்தனின் விமானத்திலேயே டெல்லியில் இருந்து வருவதாக இருந்த நாஞ்சில்நாடனும் நாலரை மணிக்கே வந்தார். க.மோகனரங்கன், தேவதேவன், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் வாசகர்கள் பேசிக்கொண்டிருந்தனர்

[ஓவியர் ஷண்முகவேல்]

இம்முறை வாசகர்களுக்கு இனிய சந்திப்பாக அமைந்த்து வெண்முரசு ஓவியர் ஷண்முகவேலுடன் சந்திப்பு. பெரும்பாலும் கூச்சப்புன்னகையை மட்டுமே உரையாடலின் வழியாக வைத்திருந்தார் ஷண்முகவேல்

வசந்தபாலன் ராஜஸ்தானி நிவாஸுக்கு வந்திருந்தார். பேசிக்கொண்டிருந்துவிட்டு நாலரைமணிக்குக் கிளம்பி அரங்குக்குச் சென்றோம். கார்களிலும் பைக்குகளிலுமாக பயணம். ஐந்துமணிக்கே அரங்கு நிறைந்தது. கே.பி.வினோதின் இலைமேல் எழுத்து என்ற ஞானக்கூத்தன் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது

ஆவணப்படம்தான். ஆனால் வினோதிடம் ஒரு இயக்குநர் புதுப்பட வெளியீடன்று கொள்ளும் பதற்றம் தெரிந்தது. ஆவணப்படம் 40 நிமிடம் ஓடியது. அதைத்தொடர்ந்து பலர் வினோதை ஓடிச்சென்று கட்டிப்பிடித்து வாழ்த்தத் தொடங்கினர். ‘படம் ஹிட்’ என்று அந்த பூரிப்பு அவர் முகத்தில் தெரிந்தது

ஆறுமணிக்கு கூட்டம் தொடங்கியது. எவரும் நீளமாகப் பேசவில்லை. கச்சிதமான உரைகளுடன் 9 மணிக்கு விழா முடிவடைந்தது. அதன்பின் பத்தரை மணிவரை அரங்கிலேயே நின்று நண்பர்களைச் சந்தித்துப்பேசிக்கொண்டிருந்தேன்

மீண்டும் சந்திப்பு. ராஜஸ்தானி நிவாஸில் இரவுணவுக்குப்பின் பதினொரு மணிமுதல் சா.கந்தசாமியும் ஞானக்கூத்தனும் வசந்தபாலனும் நண்பர்களைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர் . பெரும்பாலும் தமிழ்ப்பண்பாட்டின் இலக்கிய, தொல்லியல் ஆதாரங்களைப்பற்றியும் இந்தியப்பண்பாட்டின் அடிப்படைகளைப்பற்றியும் பேசினர். வசந்தபாலன் இரவு ஒருமணிக்குக் கிளம்பிச்சென்றார். அதன்மேலும் விவாதம் நீண்டுசென்றது.

தஞ்சை பெரியகோயில் ராஜராஜன் கட்டியது என எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதில் தொடங்கி படிப்படியாக எப்படி தமிழ் வரலாறும் அடையாளமும் கட்டி உருவாக்கப்பட்டது என்று கந்தசாமி பேசினார்.சங்க காலத்தில் இருந்த குறிப்புகளை ஒட்டி வட இந்தியாவுடனான தொடர்புகளை ஞானக்கூத்தன் குறிப்பிட்டார்

தொடர்ச்சியாக செறிவான உரையாடல்கள் நிகழ்வதைப்பற்றி கிருஷ்ணன் ஐயப்பட்டுக்கொண்டே இருந்தார். சாதாரணமாக அத்தனை நேரம் கவனிப்பது சாத்தியமல்ல, ஆனால் விழா மனநிலை இருந்தால் அது எளிது. நாம் திரைவிழாக்களில் ஒருநாளிலேயே ஐந்து சினிமாக்களைப் பார்க்கிறோம்.அவை ஐந்துமே நம் மனதில் ஆழமாகப் பதிகின்றன. இசைவிழாக்களில் நாலைந்து கச்சேரிகளைக் கேட்கமுடிகிறது.

இந்த விழாமனநிலை இல்லையேல் இப்படி ஒருநாளில் 16 மணிநேரம் இலக்கியச்சந்திப்புகள் என்பதை நினைத்தே பார்க்கமுடியாது. எவரும் சலிப்படைந்தது போலத் தெரியவில்லை. ஏனென்றால் புகைபிடிப்பதற்கன்றி எவரும் எழுந்து செல்லவில்லை. எவரும் செல்பேசிகளை திறந்து வைத்திருக்கவில்லை. பலர் சந்திப்புகளில் குறிப்புகளை எடுப்பதையே காணமுடிந்தது

DSC_3424[1]

28 மாலையிலேயே பெரும்பாலானவர்கள் கிளம்பிச்சென்றுவிட்டிருந்தனர். ஒவ்வொருவரையும் விடைகொடுத்தனுப்புவது வருத்தமானது. ஆனால் விஷ்ணுபுரம் அமைப்பைப் பொறுத்தவரை மீண்டும் மூன்றுமாதங்களுக்குள் சந்திப்போம். வரும் ஏப்ரலிலேயே ஊட்டி கருத்தரங்கு நிகழவிருக்கிறது. டிசம்பரில் விஷ்ணுபுரம் விழா முடிந்ததுமே அனைவரும் அதைத்தான் சொல்லிக்கொண்டு விடைபெறுவோம்

29 ஆம் தேதி காலையிலும் மண்டபத்தில் அறுபதுபேர் வரை எஞ்சியிருந்தனர். மண்டபத்தை மீண்டும் நீட்டிக்கவேண்டாம் என்று அருகே ரேஸ்கோர்ஸில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு இடம்பெயர்ந்தோம். அங்கும் தொடர்ந்து உரையாடல்

பொதுவாக விழா முடிந்ததும் ஒரு சோர்வும் தனிமையும் வரும். அதை ஒருநாள் நீட்டிக்கும் சந்திப்புகள் குறைத்துவிடும். 29 பகல் முழுக்க விழாவைப்பற்றியும் இனி செய்யவேண்டியது என்ன என்பதைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தது நிறைவூட்டும் ஏக்கத்தை மெல்லக் குறைத்து உத்தேகமூட்டும் புதியவற்றை நோக்கிக் கொண்டுசென்றது

மாலை எனக்கு 820 க்கு நாகர்கோயிலுக்கு ரயில். செல்வேந்திரனும் குடும்பமும் என்னுடன் கிளம்பினார்கள்.ரயிலில் வரும்போது சைதன்யாவிடம் கேட்டேன், எப்படி இருந்தது விழா என்று. ‘ஒருவருஷம் முழுக்க காலேஜிலே சொல்லிக்கொடுப்பதை மூணுநாளிலே கத்துக்கிட்டது மாதிரி இருந்திச்சு. இனிமே நினைச்சு நினைச்சு எல்லாத்தையும் அடுக்கிக்கிடணும்’ என்றாள்

புகைப்படங்கள்

விஷ்ணுபுரம் நண்பர்கள்

vishNupuram face book page

விஷ்ணுபுரம் இணையப்பக்கம்

 

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Dec 31, 2014 @ 0:03

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது நினைவுகள்
அடுத்த கட்டுரைடி.பி.ராஜீவன் கவிதைகள்