‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 74

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 3

துரியோதனன் ரதத்தில் ஏறிக்கொண்டதும் பின்னால் வந்த கர்ணன் ரதத்தூணைப் பிடித்தபடி சிலகணங்கள் விழிசரித்து ஆலய வாயிலை நோக்கி நின்றான். பின்னர் வலக்காலை தேர்த்தட்டிலேயே தூக்கிவைத்து ஏறிக்கொண்டு அமராமல் நின்று கொண்டான். அவன் ரதத்தில் ஏறுவதும் இறங்குவதும் பீஷ்மரைப்போல் இருப்பதாக துரியோதனன் எப்போதும் எண்ணிக்கொள்வதுண்டு. குழப்பம் கொள்கையில் கைகளை மார்பில் கட்டி தலையை சற்றே சரித்து தொலைவில் விழிநாட்டி நிற்பதும் பீஷ்மரைப்போலவே. துரியோதனன் “மாளிகைக்கா?” என்று கேட்டதுமே அவன் அகத்தை தன் அகம் எத்தனை நுட்பமாக பின் தொடர்கிறது என உணர்ந்துகொண்டான்.

பெருமூச்சுடன் கலைந்த கர்ணன் “அவர்கள் அடுத்த ஆலயத்திற்கு சென்றிருக்கிறார்கள் அல்லவா?” என்றான். துரியோதனன் “ஆம், ஐந்து அன்னையரில் அடுத்தவள் லட்சுமி. மேற்குதிசையில் அவள் ஆலயம் இருக்கிறது” என்றபின் உதடுவளைந்த புன்னகையுடன் “வடக்கே சரஸ்வதி, கிழக்கே சாவித்ரி, தெற்கே ராதாதேவி…” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் தலையும் திருப்பாமல் நின்றான். துரியோதனன் சாரதியிடம் “லட்சுமி ஆலயம்” என்றான். ரதம் சகடம் அதிர கிளம்பி வளைந்து தெற்குரதவீதியில் நுழைந்து இருபக்கமும் நெரிசலிட்ட மக்கள் திரளைக் கடந்து சென்றது. அவர்களுக்குப் பின்னால் துச்சாதனன் தனி ரதத்தில் தொடர்ந்து வந்தான்.

ரதமுகடில் பறந்த அஸ்தினபுரியின் கொடியைக் கண்ட மக்கள் சுட்டிக்காட்டி பேசிக்கொள்வதை துரியோதனன் நோக்கினான். அனைவர் விழிகளும் கர்ணன் மீதுதான் என்று அறிந்ததும் அவன் தன் பெரிய இடக்கையால் தலையை வருடி குழலை கழுத்தில் சேர்த்துக்கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். பின்னர் கைகளைக் கட்டிக்கொண்டு காலை நீட்டி கண்மூடி அமர்ந்துகொண்டான். கண்களை மூடியபோது அக்காட்சி மேலும் துல்லியமாகத் தெரிந்தது. ரதத்தட்டில் கைகளை மார்பில் கட்டியபடி பறக்கும் குழலுடன் நிமிர்ந்து நின்றிருக்கும் கர்ணன் தெருவில் நெரிந்து நிறைந்த மக்கள்திரள் மேல் கந்தர்வனைப்போல பறந்து சென்றான்.

நூற்றுக்கணக்கான விழிகள். விரிந்து அசைவிழந்து மின்னுபவை. வியப்பும் மகிழ்வும் தெரிபவை. காமம் கொண்ட பெண்விழிகளை அவனால் அத்தனை அண்மையில் காணமுடிந்தது. அனலில் இட்டு பழுக்கச்செய்தவை போன்ற விழிகள். வெம்மையே நீர்மையாக ஆகி படர்ந்தவை. அவ்விழிகளை எங்கே கண்டான்? ஆம், துர்க்கையின் ஆலயத்தில் கூடி நின்ற பரத்தையரில். மழைகாத்துக் கிடக்கும் பாலைநிலம் போல உடல்களில் பரந்திருந்த வெம்மை. உடலசைவுகளில் வெளிப்பட்ட காமம்! அத்தனை அப்பட்டமாக காமம் வெளிப்பட்டு அவன் கண்டதே இல்லை.

முகம் சுளித்து அவன் விழிதிறந்தபோது முகங்கள் அருவி என அவன் மேல் பொழிந்துகொண்டிருந்தன. ஆனால், காமம் எப்போதுமே அப்படித்தானே வெளிப்பட்டிருக்கிறது? காமம் போல அத்தனை திட்டவட்டமாக வெளிப்படுத்தியாகவேண்டிய வேறு ஏது உண்டு இவ்வுலகில்? விழைவு போல ஐயமற்றதாக, திரிபோ மாற்றோ இல்லாததாக பிறிது ஏது உள்ளது? ஆம், அவன் அதுவரை கண்ட அத்தனை காம வெளிப்பாடுகளும் நேரடியானவை, மறைவற்றவைதான். காமம் கொண்டவர்கள் தெய்வங்களுக்கு முன் நின்றிருக்கிறார்கள். உடல்கள் ஆடை துறப்பதற்கு முன் உள்ளங்கள் துறந்துவிடுகின்றன.

பார்வைவெள்ளப் பெருக்கின் கீழ் நின்றிருந்த கர்ணனை நோக்கினான். அவன் எதையும் அறியவில்லை போல. அல்லது அவன் அகம் அறிகிறது. இப்பார்வைகளில் ஒன்று குறைந்தால், ஒன்று விலகினால் அவன் அகம் பற்றி எரியும். துரியோதனன் புன்னகை செய்துகொண்டான். தன் காமத்தை எவரேனும் இப்படி உணர முடியுமா? உணர்ந்தபின் காமத்தில் ஆடுதல் கூடுமா?

பொன்னிறமாக ஒளிவிட்ட வெண்கலத்தகடுகள் வேய்ந்த ஏழடுக்கு கோபுரம் மக்களின் தலைகளுக்கும் வணிகர்களின் தோலால் ஆன கூடார முகடுகளுக்கும் வேப்பமரங்களின் இலைச்செண்டுகளுக்கும் மேல் எழுந்து தெரிந்தது. அதன் மேலிருந்த மணி அதிர்ந்துகொண்டிருக்க பெருமுரசம் ஒலிக்கத் தொடங்கியது. “இளவரசி முற்றத்தை அடைந்துவிட்டாள்” என்றான் துரியோதனன். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.

அவர்களின் ரதம் எதிரே வந்த புரவிக்கூட்டத்தால் தடுக்கப்பட்டது. அப்பால் பெருமுற்றத்தில் பாஞ்சாலத்தின் பட்டத்து இளவரசன் சித்ரகேதுவின் தேர் நிற்பதை துரியோதனன் கண்டான். “இங்கே ஆலயக்காவலனாக பட்டத்து இளவரசனே வந்திருக்கிறான் போலும்” என்றான். அதை கர்ணன் கேட்டதாகத் தெரியவில்லை. முதலில் சேடியர் சென்ற ரதம் சென்று நின்றது. அவர்கள் இறங்கி ஆடை திருத்திக்கொண்டு தாலங்களை கையிலெடுத்துக்கொண்டனர். மலர்களையும் கனிகளையும் அவற்றில் சீர்ப்படுத்தி வைத்தனர்.

பிருஷதியும் திரௌபதியும் சென்ற மூடுரதம் முற்றத்தில் வளைந்து நின்றதும் வீரர்கள் வந்து குதிரைகளின் கடிவாளங்களை பிடித்துக்கொண்டனர். ரதத்தின் மறுபக்கத்து வாயில் திறந்து முதலில் பிருஷதி இறங்கினாள். அதன்பின் திரௌபதியின் வலக்கால் தெரிந்தது. பின்னர் இடக்கால். மெல்ல மண்ணை ஒற்றி நடந்து ரதத்தின் விளிம்பிலிருந்து அவள் வெளிவந்தாள். துரியோதனன் திரும்பி கர்ணனை நோக்கினான். கர்ணன் அங்கில்லை என்று தோன்றியது.

சேடியர் முன்னால் செல்ல முரசும் கொம்புகளும் சேர்ந்து உருவாக்கிய கார்வையின் ரீங்காரத்துடன் திரௌபதி பொன்வண்டு பறப்பது போல பெருவாயிலைக் கடந்து உள்ளே சென்றாள். வாயிலில் நின்ற வீரன் சங்கெடுத்து ஊதினான். உள்ளிருந்து இரு பந்தங்களுடன் இருவர் அவர்களை நோக்கி வந்தனர். அந்தச் செவ்வொளியில் அவள் நுழைந்து சுடர்ந்து உள்ளே சென்று மறைந்தாள். இடைதாழ்ந்து அலைபாய்ந்த நீள்கூந்தலின் காட்சி அப்போதும் விழிகளில் எஞ்சியிருந்தது. கண்களை மூடித்திறந்தபின்னரும் அதை காணமுடிந்தது.

எதிரே வந்த குதிரைகளில் பாஞ்சால வீரர்கள் இருந்தனர். வங்கநாட்டுக் கொடியுடன் ஒரு ரதம் சென்று லட்சுமியின் ஆலயமுகப்பில் நின்றது. அவர்களின் ரதம் வெவ்வேறு இடங்களில் தயங்கியும் தேங்கியும் ஆலயத்தின் பெருவாயிலை நோக்கிச் சென்று திரும்பியது. உள்ளே வரிசையாக அமைந்த எட்டு சிறிய கருவறைகளுக்கு மேலே எழுந்த பெரிய கருவறையில் இருமேல்கரங்களிலும் தாமரையும் இடக்கையில் அஞ்சல் முத்திரையும் வலக்கையில் அருளல் முத்திரையுமாக ஆளுயரமான சுதைச்சிலையாக லட்சுமிதேவி ஏழடுக்குத் தாமரை மேல் அமர்ந்திருந்தாள். அந்தக்கருவறையில் இருந்து இறங்கிவந்த பதினெட்டு படிகளும் பொன்பூசப்பட்டிருந்தன.

இருபக்கமும் நான்குநான்கு கருவறைகளில் எண்திருமகளிர் கோயில்கொண்டிருந்தனர். முகப்பில் இருந்த பலிமண்டபத்திற்கு வலப்பக்கம் பெண்கள் நின்றிருக்கும் வண்ணங்கள் தெரிந்தன. பந்த ஒளிகளில் பட்டாடைகள் மின்னி அசைந்தன. துரியோதனன் இறங்கப்போனபோது கர்ணன் கை நீட்டித் தடுத்து “வேண்டாம், செல்வோம்” என்றான். துரியோதனன் “ஏன்?” என்றான். “சென்றுவிடுவோம்” என்றான் கர்ணன். அவன் முகத்தில் எரியம்பு துளைத்தவனின் வலி தெரிவதைக் கண்டு வியப்புடன் திரும்பி ஆலயத்தை நோக்கியபின் துரியோதனன் “செல்க, அரண்மனைக்கு” என்று சாரதியிடம் சொன்னான்.

தேர் அசைந்ததும் கர்ணன் இருக்கையில் ஓசையுடன் அமர்ந்து தொடைகளில் கைவைத்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான். துச்சாதனன் திகைப்புடன் ஆலயத்தின் உள்ளே இன்னொரு முறை நோக்கியபின் அவர்களை பின் தொடர்ந்தான். அவன் எண்ணுவதென்ன என்று கேட்கவேண்டுமென எழுந்த அகத்தை துரியோதனன் அடக்கிக் கொண்டான். ஆனால் தன் உடலெங்கும் ஏன் மெல்லிய உவகை பரந்திருக்கிறது என்று எண்ணிக்கொண்டபோது அவ்வெண்ணத்தை அவனாலேயே சந்திக்கமுடியவில்லை. ஒரு கதாயுத்தத்தில் வென்றபின்பு வரும் தோள்மிதப்பு. அல்லது பெண்ணுறவுக்குப்பின் எழும் தனித்த உள்ளுவகை.

மீண்டும் அவன் கர்ணனை நோக்கினான். உள்ளூர ஒரு குறுநகை ஊறியது. ஏதேனும் சொல்லவேண்டும். என்ன சொல்வது என்று தேடினான். யாதவக்கண்ணனைப் பற்றி சொல்லலாம். அதுதான் இவனை நிறையழியச் செய்கிறது. ஆனால் அதையே மீண்டும் சொல்வது எப்படி? அவன் தலையை கையால் வருடிக்கொண்டான். மீசையை முறுக்கியபடி ஒதுங்கி வழிவிட்டவர்களின் முகங்களையே நோக்கினான். அவர்கள் பார்ப்பது ஒரு மானுடனை அல்ல. உடல்கொண்டு வந்த கந்தர்வனை. அவனையன்றி பிறிது எதையும் அவர்கள் பார்க்கவில்லை. அந்தத் தெருவில் அப்போது ஒருவனே இருந்தான். அவனைச்சூழ்ந்து மின்மினிக்கூட்டங்களாக பறந்த விழிகளும்.

காம்பில்யத்தில் கங்கைக்கரையோரமாக இருந்த சோலைகளில் அந்த மணஏற்பு நிகழ்வுக்காகவே கட்டப்பட்டிருந்த மரத்தாலான மாளிகைகளில் அரசர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். மாளிகைகளின் முகப்பில் இருந்த காவல்குடில்களில் அவர்களின் கொடிகள் பறந்தன. கங்கையை ஒட்டியபடி சென்ற மண்சாலையில் முதன்மையாக துதிக்கை தூக்கிய யானை பொறிக்கப்பட்ட மகதத்தின் பொன்னிறக்கொடி பறந்துகொண்டிருந்தது. ஜராசந்தன் முந்தையநாளே வந்துவிட்டான் என்று ஒற்றர்கள் சொல்லியிருந்தனர்.

அப்பால் அஸ்தினபுரியின் அமுதகலசம் பொறிக்கப்பட்ட செந்நிறக் கொடி நீர்க்காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது. கர்ணன் துரியோதனனைத் தொட்டு “நாம் சற்றுநேரம் கங்கைக்கரையில் அமர்ந்திருக்கலாமே?” என்றான். துரியோதனன் “ஆம்…” என்றபின் தேரோட்டியிடம் திரும்பி கங்கை நோக்கிச் செல்லும்படி சொன்னான். மென்மணல்விளிம்பை அடைந்ததும் நிறுத்தச்சொல்லி இறங்கிக்கொண்டான். கர்ணன் இறங்கி கைகளை மெல்ல ஆட்டியபடி நீரை நோக்கிச் சென்றான். பின்னால் வந்த தேரில் இருந்த துச்சாதனனை ஒருமுறை நோக்கிவிட்டு துரியோதனன் பின்னால் நடந்தான். துச்சாதனன் இறங்கி அங்கே நின்ற பெரிய அத்திமரத்தடியை நோக்கி நடந்தான்.

துரியோதனன் கர்ணனின் பின்னால் சென்று நின்றான். அவனுக்கு அப்பால் கங்கையின் நீர்ப்பெருக்கின் மேல் ஒளிரும் விழிகளுடன் பெரும்படகுகள் சென்றுகொண்டிருந்தன. மிக அருகே சென்ற ஒரு படகில் கொடிகள் பறக்கும் சடசடப்பும் பாய்மரக்கயிறு இழுபட்டு முனகுவதும் கேட்டது. தூரத்தில் காம்பில்யத்தின் துறைமுகத்தில் நின்றிருந்த படகுகளில் இருந்து எழுந்த ஒளி வானில் செந்நிறப் பனிப்படலம்போல் தெரிந்தது. அதில் அப்படகுகளில் நடமாடுபவர்களின் நிழல்கள் பறக்கும் பூதங்கள் என அசைந்தன.

துரியோதனன் கர்ணனிடம் எதையாவது சொல்ல விழைந்தான். அப்போது சொல்லவேண்டியது என்ன என்று அவனால் தெரிவுசெய்ய முடியவில்லை. கர்ணனிடம் யாதவக் கண்ணனைப் பற்றி சொன்னதில் இருந்த சிறுமையை அப்போதுதான் அவன் முழுதுணர்ந்தான். உடனே அதைப்பற்றிய தன் வருத்தத்தைத் தெரிவிக்க கையைத் தூக்கி மறுகணமே தழைத்தான். அதைச் சொல்லத் தொடங்கவில்லை என்பதற்காக தன்னை பாராட்டிக்கொண்டான்.

கர்ணன் திரும்பாமலேயே “பதினைந்தாண்டுகாலம் நான் எங்கிருந்தேன் என்று அறிவீர்களா?” என்றான். முதலில் அவன் சொன்னதை துரியோதனன் விளங்கிக்கொள்ளவில்லை. அக்குரல் வேறு எங்கிருந்தோ ஒலித்தது போலிருந்தது. “என்ன?” என்று கேட்டான். கர்ணன் ”பதினைந்தாண்டுகாலம் நான் பரசுராமருடன் இருந்தேன்” என்றான். பெருமூச்சுடன் “தென்னகத்தில்…” என்று சொல்லி தலையசைத்தான்.

துரியோதனன் “ஆம், அறிவேன்” என்றான். கர்ணன் “அன்று படைக்கலப்பயிற்சியில் நீங்கள் என்னை அங்கநாட்டரசனாக முடிசூட்டியிருக்கவில்லை என்றால் சென்றிருக்க மாட்டேன்” என்றான் கர்ணன். “அது வரை நான் என்னை தனியனாக சூதனாக மட்டுமே எண்ணியிருந்தேன். நான் வில்திறன் கொண்டது என் இயல்பினாலும் என் தன்மதிப்பை எங்கும் இழந்துவிடக்கூடாதே என்பதனாலும் மட்டும்தான்.”

துரியோதனன் கர்ணனின் அருகே மேலும் ஒரு அடிவைத்துச் சென்று நின்றான். கர்ணன் “ஆனால் அன்று நீங்கள் என்னை மணிமுடி சூட்டி அரசனாக்கினீர்கள். அந்த அவைநடுவே நானடைந்த இழிவை எல்லாம் பெருமையாக்கினீர்கள். அன்று உங்கள் தோள்தழுவி களம் விட்டு விலகுகையில் நான் சொன்னேன், என் வாழ்வும் இறப்பும் உங்களுக்காகவே என” என்றான். துரியோதனன் “ஆம், அதை நான் ஏற்றுக்கொண்டது ஒரே அடிப்படையில்தான். என் வாழ்வும் இறப்பும் உனக்காகத்தான் என்பதனால்… நான் விழைவது அந்த நட்பை மட்டுமே” என்றான்.

“அந்த உளவிரிவை உங்கள் ஒவ்வொரு அசைவிலும் அறிகிறேன். இளவரசே, அஸ்தினபுரியின் மணிமுடியோ மண்ணோ அல்ல தங்கள் தந்தை தங்களுக்களித்திருக்கும் கொடை. மதவேழத்தின் மத்தக நிமிர்வும் முடிவில்லா பெருந்தன்மையும்தான்” என்றான் கர்ணன். “ஆம் கர்ணா, உண்மை” என்றபடி துரியோதனன் அவன் தோளைத் தொட்டான். “ உன்னிடமன்றி இதை நான் எவரிடமும் சொல்ல முடியாது. என்னைக் கடந்து என் அகம்புக எவரும் இல்லை” என்றான்.

சிலகணங்கள் தன் எண்ணங்களைத் தொகுத்து “அன்று அவையில் பீமன் உயிருடனிருப்பதை அறிந்து எந்தை மகிழ்ந்து நடமிட்டபோது நான் கண்ணீர் மல்கினேன். அவர் செய்யக்கூடுவது அதுவே என்று நான் அறிவேன். அதையன்றி வேறெதை அவர் அங்கே செய்திருந்தாலும் அகம் உடைந்திருப்பேன். மலைமேல் ஏறி அமர்ந்து அசையாமல் காலப்பெருக்கைக் கடந்துசெல்லும் பெரும்பாறையாக மட்டுமே அவரை என்னால் எண்ணமுடியும்…” என்றான்.

“அன்றிரவு என் இளையோர் என்னைச்சூழ்ந்து அமர்ந்து துயருற்றனர். ஒரு சொல் என்னிடம் சொல்ல எவரும் துணியவில்லை. ஆனால் நான் இயல்பாக இருந்தேன். என் துணிவுக்குச் சான்றாக அவர்கள் அதைக் கொண்டனர். அவர்கள் துயின்ற பின் என் மஞ்சத்தில் படுத்தபடி புன்னகை செய்தேன். நாளை அவர்கள் மீண்டு வந்து நான் செய்ததை எந்தையிடம் சொல்லி அவர் தன் கதாயுதத்தால் என் தலையை பிளப்பாரென்றாலும் அதை உவகையுடன் ஏற்பேன். அவர் செய்யக்கூடுவது அதுவே.”

“ஆம், அதை பிறரைவிட அறிந்தவன் தருமன். ஆகவே ஒருபோதும் அதை அரசரிடம் அவன் சொல்ல மாட்டான்” என்றான் கர்ணன். துரியோதனன் தலைகுனிந்து “ஆம், அதை நானும் அறிவேன்” என்றபின் முகத்தை கைகளால் வருடிக்கொண்டு “கர்ணா, மலைச்சிகரங்கள் சூழ்ந்த வெளியில் கூழாங்கல் என சிறுத்து நின்றிருக்கிறேனா?” என்றான். “திருதராஷ்டிரரின் மைந்தனிடம் சிறுமை கூடாது. இச்சொற்களன்றி வேறு சான்றே அதற்குத் தேவையில்லை” என்றான் கர்ணன்.

துரியோதனன் பெருமூச்சு விட்டான். “சொல்… நீ பரசுராமரிடம் எதற்காகச் சென்றாய்?” என்றான். கர்ணன் ”இளவரசே, அன்று அக்களத்தில் அறிந்தேன். என்றோ ஒருநாள் பெரும்போர் ஒன்றில் நான் பாண்டவர்களுக்கு எதிராக படைநிற்கப் போகிறேன். உங்களுக்காக, உங்கள் தம்பியருக்காக அதில் நான் வென்றாகவேண்டும். ஆனால் நான் களப்போர் கற்கவில்லை. தனிப்போரில் என் திறம் பார்த்தனுக்கு நிகரானதல்ல என்று துருபதனுடனான போரில் அறிந்து கொண்டேன்” என்றான்.

“ஆகவே அதை எனக்குக் கற்பிக்கும் திறனுடையவரை தேடிச்சென்றேன். சூதர்களிடம் கேட்டேன். குருகுலங்களில் விசாரித்தேன். பரசுராமரன்றி பிறர் அதற்கு உதவமாட்டார்கள் என்று உணர்ந்து அவரைத் தேடிச்சென்றேன்” என்றான் கர்ணன். “விந்தியனைக் கடந்து தெற்கே தண்டகாரண்யத்தையும் வேசரத்தையும் கடந்து திருவிடத்தின் முனையில் அவரை கண்டுகொண்டேன். முதல் பார்க்கவராமரின் அன்னையின் நாடாகிய ரேணுபுரியின் அருகே அடர்காட்டுக்குள் பரசுராமரின் குருகுலம் இருந்தது.”

கர்ணன் “பார்க்கவ குருமரபின் பதிநான்காவது பரசுராமர் இப்போது இருப்பவர். பதின்மூன்றாவது பரசுராமர் தண்டகாரண்யத்தில் பஞ்சாப்ஸரஸ் என்ற இடத்தில் தவம் செய்தார். முதல்பரசுராமர் பாரதவர்ஷத்தை ஐந்தாகப்பிரித்து ஐந்து ஷத்ரிய குலங்களை அமைத்தார் என அறிந்திருப்பீர்கள். அந்நிலங்களின் பழங்குடிகளில் வேதமும் தர்ப்பையும் அளிக்கப்பட்டவர்கள் பிருகு குலத்து பிராமணர்களானார்கள். செங்கோலும் மணிமுடியும் அளிக்கப்பட்டவர்கள் அக்னிகுல ஷத்ரியர்களானார்கள்” கர்ணன் சொன்னான்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரசுராமர் அமைந்தார். கிழக்குதிசையை அத்துவரிய ராமனும் வடக்கை உதகாத ராமனும் மத்திய தேசத்தை ஆசியப ராமனும் ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்ட ராமனும் அதற்கு அப்பால் உள்ள திருவிடத்தை சதசிய ராமனும் வழிநடத்தினர். பரசுராமரின் கதையைச் சொல்லும் சூர்ப்பவிஜயம் என்னும் புராணம் இதைச் சொல்கிறது.

சதசியகுலத்தைச் சேர்ந்தவர் இன்றிருக்கும் பரசுராமர். படைக்கலத்திறனும் படைத்திறனும் நூல்திறனும் அரசுசூழ்திறனும் அமைந்தவர். அவரைநாடியே நான் சென்றேன். காடுகள் எழுந்த மலைகளையும் நீர் பெருகிய பேராறுகளையும் வெயிலில் வெந்துகிடந்த பாழ்நிலங்களையும் கடந்து சூதர்களின் சொற்களையே வழிகாட்டியாகக் கொண்டு அவரை சென்று அடைந்தேன். ரேணுநாட்டின் பிரதீபம் என்னும் காட்டுக்குள் அவரது குருகுலம் இருந்தது. அவரை நான் சென்றடைந்தபோது என் தாடி மார்பை எட்டியிருந்தது. என் குழல் சடைபிடித்து தோளில் விரிந்திருந்தது.

அடர்காட்டின் நடுவே கோதாவரி நதிக்கரை ஓரத்தில் அமைந்த அவரது யானைத்தோல் கூடாரத்தின் முன் மாணவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டேன். அதிகாலையில் அவர் செய்து முடித்திருந்த வேள்வியின் நெய்ப்புகை மரக்கிளைகளின் இலையடர்வுகளில் தங்கி மெல்ல பிரிந்துகொண்டிருந்தது. நான் உள்ளே அழைக்கப்பட்டேன். அங்கே புலித்தோல் விரிக்கப்பட்ட யோகசிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார் பரசுராமர். நீண்ட வெண்ணிறமான தாடி விரிந்த கரியமார்பில் பரவிக்கிடந்தது. தோளிலும் முதுகிலுமாக வெண்குழல் கற்றைகள் கிடந்தன. வலக்கையில் எழுத்தாணியும் இடக்கையில் சுவடியுமாக என்னை ஏறிட்டு நோக்கியதுமே “நீ ஷத்ரியனா?” என்றார்.

“இல்லை ஆசிரியரே, நான் சூதன்” என்றேன். என்னை கூரிய விழிகளால் நோக்கி “ஷத்ரியனுக்குரிய தோற்றத்துடன் இருக்கிறாய்” என்றார். “அங்கநாட்டுச் சூதனாகிய அதிரதனுக்கும் ராதைக்கும் மைந்தன் நான். அஸ்தினபுரியின் இளவரசராகிய துரியோதனரின் அணுக்கத்தவன்” என்றேன். “அந்த அனலைத் தொட்டு ஆணையிடு. நீ ஷத்ரியன் அல்ல என்று” என்றார். நான் அந்த அனல்மேல் கையை வைத்து “நான் சூதன். அறிக அனல்” என்றேன். அவர் தாடியை நீவியபடி மெல்ல சரிந்தமர்ந்து “நீ கோருவதென்ன?” என்றார்.

“நான் இயல்பிலேயே ஷாத்ரகுணம் கொண்டிருக்கிறேன். ஆகவே என்னால் சவுக்கேந்தி குதிரைக்காரனாக வாழ முடியவில்லை. துரோணரிடம் விற்கலை கற்றேன். குலத்தின் பொருட்டு அவரால் அவமதிக்கப்பட்டேன். என் தன் மதிப்பைக் காக்கும் விற்கலை எனக்குத்தேவை” என்று அவரிடம் சொன்னேன். அவர் என் விழிகளை நோக்கி “மண்ணாள விழைகிறாயா?” என்றார். “விற்கலையில் இனி நீ அறிய ஏதுமில்லை என உன் விழிகளும் விரல்களும் சொல்கின்றன” என்றார்.

நான் “ஆம், ஆசிரியரே. என் ஆணவம் அரியணையின்றி அமையாது” என்றேன். புன்னகையுடன் “பாரதவர்ஷம் முழுக்க புதிய ஷத்ரியர்களை உருவாக்குவதே என் முதலாசியரின் ஆணை. நீ இங்கிருக்கலாம். போர்க்கலை பயிலலாம். என்னிடமே அனல்சான்று பெற்று ஷத்ரியனாகு. மண்ணை வென்று புனல்சான்று பெற்று முடிசூடு. உனக்கு பார்க்கவர்களின் வாழ்த்துரை துணையிருக்கும்” என்றார். அவர் பாதங்களை வணங்கி அருகமர்ந்தேன்.

அவர் கையில் இருந்த நூலை விரித்து ஏழு சுவடிகளைத் தள்ளி ஏழுவரிகளைக் கடந்து ஏழு சொற்களை எண்ணி “அஹம்” என்று வாசித்தபின் நிமிர்ந்து “ஷத்ரியனின் முதல் சொல் நான் என்பதே. எனக்கு, என்னுடையது என்பதிலிருந்துதான் அவனுடைய அனைத்துச் சொற்களும் தொடங்கவேண்டும். ஷத்ரியன் என்பவன் அடங்கா விழைவினால் ஆனவன். அவன் வெல்வதெல்லாம் அவ்விழைவுக்கு அவியாகவேண்டும். அவி என்பது அனலை வளர்ப்பதே என்று அறிக” என்று முதல் அறவுரையைச் சொல்லி என்னை அவரிடம் சேர்த்துக்கொண்டார்.

பன்னிரு ஆண்டுகாலம் நான் அவருடன் இருந்தேன். முதலில் அவரது சொற்களைக் கற்றேன். பின்னர் சொற்குறிப்புகளை உணர்ந்தேன். அதன்பின் அவரது எண்ணங்களை அறியலானேன். இறுதியில் அவருடன் இணைந்து என் அகம் சிந்திக்கத் தொடங்கியபோது அவரது மாணவனாக ஆனேன். இரவும் பகலும் அவருடனேயே இருந்தேன். நான் கற்றது எதை என இன்று என்னால் சொல்லிவிடமுடியாது. நான் மெல்லமெல்லக் கரைந்து அவராக ஆனேன். முதல்பரசுராமருக்கும் எனக்குமான தொலைவென்பது இருபெயர்களின் ஒலிமாறுபாடு மட்டுமே என அறிந்தேன்.

என்னை திருவிடத்துக்கும் அப்பால் தமிழ்நிலத்திற்கு அனுப்ப அவர் எண்ணியிருந்தார் என்றறிந்தேன். பதினைந்தாண்டுகள் அவருடைய அறிவின் பொழிகலமாக அமைந்தபின் நான் அமைக்கவேண்டிய பேரரசின் நெறிகளைத்தான் அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். பிறரிடம் தன் கனவுகளை ஏற்றிவிடவே மானுடர் எப்போதும் முயல்கிறார்கள். ஆனால் ஆசிரியர் போல தன்னை முழுமையாக இன்னொருவரிடம் பெய்து நிறைக்கும் மானுட உறவென மண்ணில் பிறிது ஏதுமில்லை.

ஆசிரியருடன் மாணவன் கொள்ளும் உறவென்பது ஆடிப்பாவையை நோக்கி விடப்பட்ட அம்பு போன்றது. நெருங்கிநெருங்கிச் செல்லும் முதற் காலகட்டம். அவரைத் தொடும் கணம் நிகழ்ந்ததுமே அவன் விலகிவிலகிச் செல்லத் தொடங்குகிறான். மேலும் மேலுமென அவரில் தன்னைக் காண்கிறான். பின் தன்னை விலக்கி விலக்கி அவரைக் காண்கிறான். விதைமுதிரும்போது கனியின் காம்பு நொய்கிறது. விதைக்குள் இருக்கும் முளை மண்ணுக்காக ஏங்குகிறது. அந்தத் தருணத்தை நான் அறிந்தேன். அவரது சொல்லுக்காகக் காத்திருந்தேன்.

கல்விமுடிந்தது என்பதை முடிவுசெய்பவர் ஆசிரியர். அதன்பின் அவன் அவருக்கு அயலவன். மாணவனிடம் அவர் காணிக்கை கேட்பதே அவன் அயலவனாகிவிட்டான் என்பதனால்தான். அம்முடிவை நோக்கிச் செல்வதென்பது ஆசிரியனுக்கும் மாணவனுக்கும் இடையே நிகழும் நுண்மையான சமர். தான் கற்றதென்ன என்பதை மாணவன் அறிவான். ஆகவே அவன் விடுபட விழைகிறான். அவன் மேலும் கற்கவேண்டியதென்ன என்று ஆசிரியரே அறிவார். அவர் அதை அவனுக்கு உணர்த்த விழைகிறார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்காணிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதிப்பிடுகிறார்கள்.

இளவரசே, ஆசிரியனை மாணவன் அடைவதென்பது பேரன்பு கணம் தோறும் வளர்வது. பிரிவதென்பது வளரும் பெருவலியுடன் ஒவ்வொரு சரடாக வெட்டிக்கொள்வது. எத்தனை எழுச்சியுடன் அணுகினார்களோ அத்தனை துயர் மிக்கது அகல்வது. நான் அவரது ஒவ்வொரு சொல்லில் இருந்தும் என் சொற்களை உருவாக்கிக் கொண்டிருந்தேன். என் சொற்களில் அவர் தன்னை கண்டெடுத்துக்கொண்டிருந்தார். துலாமுள் நிலையழிந்தாடிக்கொண்டிருந்த நாட்கள்.

கோதையின் கரையில் நின்றிருந்தோம். மீன்கள் துள்ளித்துள்ளி அமிழ்வதை நோக்கி நீரலைகளின் ஒளி அலையடித்த வெண்தாடியுடன் நின்றிருந்த ஆசிரியர் திரும்பி என்னிடம் “இதில் ஒரு மீனை வெல்ல உனக்கு எத்தனை கணம் பிடிக்கும்?” என்றார். நான் “அதை நான் என் அம்பில் கோர்க்க முடியும். வெல்வேனா என்று அறியேன்” என்றேன். “ஏன்?” என்றார். “ஆசிரியரே, வெற்றியும் தோல்வியும் இருசாராராலும் மாற்றுப்புரிதல் வழியாக ஏற்கப்படுவதே. தோல்வியை ஏற்காதவனை எவரும் வெல்ல முடியாது” என்றேன்.

புன்னகையுடன் என் தோளில் கையை வைத்து “வில்லென்பது என்ன என்று அறிந்தவனின் சொல் இது” என்றார். பின்னர் திரும்பிச்சென்று அரசமரத்தடியில் அமர்ந்துகொண்டார். தாடியை அவரது கைகள் நீவியபடியே இருப்பதைக் கண்டேன். நீர்வெளி நோக்கி சுருங்கிய கண்களில் இருந்த ஒளியை இதழ்களின் புன்னகையைக் கண்டு அருகே நின்றேன். “அமர்ந்துகொள்” என்றார். நான் அமர்ந்ததும் “மீண்டும் அஸ்தினபுரிக்கே செல்கிறாயா?” என்றார்.

பதினைந்தாண்டுகளில் அவர் நான் திரும்பிச்செல்வதைப்பற்றி முதன்முறையாகப் பேசுகிறார் என்று உணர்ந்ததும் என் உள்ளம் கொப்பளித்தெழுந்தது. உடலெங்கும் ஓடும் குருதியின் விரைவை உணர முடிந்தது. “ஆம், நான் கடன்பட்டவன்” என்றேன். அவர் ஏதோ சொல்லவந்தபின் கையை ஊன்றிச் சரிந்து என் மடியில் தலைவைத்து கண்மூடிக்கொண்டார். “தவிர்க்கமுடியாதது ஆசிரியனின் வெறுமை” என்றார். அச்சொற்கள் வழியாக அவரது அகத்தை அறிந்தேன். அவர் என்னை விடமறுப்பது ஏன் என்று. புன்னகையுடன் அவரது தலையை என் தொடையில் ஏந்திக்கொண்டேன்.

அவர் இருமுறை பெருமூச்சுவிட்டார். பின்பு துயிலத் தொடங்கினார். காற்று அவரது மெல்லிய பனித்தாடியை அசைப்பதை மூச்சில் அவரது மூக்குத்துளைகள் விரிவதை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அவர் எழுந்ததும் “நான் எங்கும் செல்லவில்லை ஆசிரியரே” என்று சொல்லிவிடலாமா என எண்ணினேன். அவர் விழித்திருந்தால் அப்போதே அதை சொல்லியிருப்பேன். மெல்ல அந்த அகநெகிழ்விலிருந்து விலகினேன். இலக்கே கல்வியை பொருளுள்ளதாக்குகிறது. கடமைகளே வீரனை வாழ்க்கையுடன் பிணைப்பவை. ஆம், எல்லாவற்றையும் சொற்களால் முறையான தர்க்கங்களாக ஆக்கிக்கொள்ள முடியும்.

என் தொடையின் அடியில் ஏதோ கடிப்பதை உணர்ந்தேன். அனிச்சையாக தொடை துடித்து விலக ஆசிரியர் “ம்ம்” என்றார். ஒருவேளை அதுவே இறுதித் தேர்வாக இருக்கமுடியும் என்று உணர்ந்தேன். அரசமரத்தின் வேருக்குள் ஒரு துளையில் இருந்த வண்டு என் தசையை கொட்டித் துளைக்கத் தொடங்கியது. அதன் இல்லத்தின் வாயிலை என் தசை முழுமையாகவே மூடியிருந்தது போலும்.

வலி தசைகளில் இருந்து நரம்புகள் வழியாக உடலெங்கும் பரவுவதை உற்று நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன். வலி அலையலையாகப் பரவுகிறது. ஓர் அலைக்கும் இன்னொரு அலைக்கும் இடையேயான இடைவெளியில் நிறையும் அமைதியை, அப்போது நரம்புகள் தளர்ந்து அடுத்த அலைக்காக காத்திருப்பதைக் கண்டேன்.

வலியால் ஆன காலம். வலியால் ஆன தாளம். கேட்கும் ஒலிகளெல்லாம் வலியால் ஆனவையாக இருந்தன. விழிதூக்கி நோக்கியபோது அத்தனை காட்சிகளும் வலியால் இணைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு எண்ணத்துடனும் வலி இருந்தது. ஏதோ ஓர் இடத்தில் வண்டு நின்றுவிட்டது. அக்கணம் வரை அதற்கு எதிர்வினையாற்றிய தசை அதை எதிர்பார்த்து துடித்தது. இன்னும் இன்னும் என்றது. பின்னர் அடங்கி காத்திருந்தது. வண்டு மீண்டும் கடித்தபோது விரைந்தெழுந்து அதை எதிர்கொண்டது.

நான் கற்ற சொல் அனைத்திலும் அந்த வலி பரவுவதை உணர்ந்தேன். பதினைந்தாண்டுகாலத்தின் ஒவ்வொரு கணமும் வலியாக மாறி விரிந்து கிடந்தது. வலியில் திளைத்த அந்த அரைநாழிகை நேரம் அப்பதினைந்தாண்டுகளுக்கு நிகராக நீண்டிருப்பதை அறிந்தேன். உள்ளே ஏதோ நரம்பில் அந்த வண்டின் கொடுக்கு மெல்லத் தொட்டது. உடலெங்கும் மின்னலடித்தது போல ஓடிய வலியில் தொடை அதிர கையால் அழுத்தி அதை வென்றேன். அதற்கு மிக அருகே இன்னொரு நரம்பு கூசி மிகக்கூசி மேலும் கூசி காத்திருந்தது. அந்தக் கூச்சமே என் விழியிலிருந்து நீராக வழிந்தது.

நெடுங்காலத்திற்குப் பின், விதைகள் ஆலமரமாகி, பாறைகள் மணல்களாகி, கோதை வறண்டு மறைந்து மீண்டபின், வண்டு அசைந்து சென்று அந்நரம்பை மெல்லத் தீண்டியது. என் பற்களெல்லாம் கூசின. செவிக்குள் கண்களுக்குள் தலையின் இருபக்கமும் புழுக்களென நரம்புகள் சுண்டி நெளிந்தன. மிக அப்பால் பனிக்குடம் உடைந்து சிதறியதுபோல ஏதோ சொல் உடைந்தது. ஒன்றோடொன்று முட்டி உடைந்த பளிங்குக் குரல்கள். கண்களுக்குள் ஓர் ஒளித்துளி உடைந்து தெறித்தது.

வண்டு தன் சிறகுகளால் குடைந்துகொண்டு தசைக்கதுப்புக்குள் மெல்லப்புரண்டபோது என் வாழ்நாளில் அதுவரை அறியாத உடலின்பம் ஒன்றை அடைந்தேன். காமத்தை விட ஆயிரம் மடங்கு பெரியது. இறப்புக்கு நிகரானது. என் முதுகெலும்பு குளிர்ந்து சொடுக்கிக்கொண்டது. விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஏறிக்கொள்ள தொண்டைக்குள் நாக்கு இறங்கி நிற்க காலம் முழுதாக அழிந்து எங்கோ மறைய மீண்டு வந்தபோது மலைப்பாறைக்கூட்டம் வந்து உடல்மேல் பொழிந்ததுபோல் வலியின் அலைகள். அடியில் குருதிக்குழம்பாகக் கிடந்த என் சித்தம் கோரியது. அந்த உடலின்பத்தை மேலும் மேலும் என கெஞ்சியது.

மெல்லிய இன்னொரு சிறகுத்துடிப்பு. தசைகள் குழைந்து உருகின. குருதி இன்பக்கொப்பளிப்பாக பல்லாயிரம் ஓடைகளில் நுரைத்து வழிந்தது. தசை என்னும் இன்பக்கதுப்பு. அதில் ஒரு கருவண்டு. அது என்றும் அங்கிருக்கவேண்டும். ஒருபோதும் விலகலாகாது. அதுவே என் வாழ்வின் பேரின்பம். என் இருப்பின் சாரம். மாயமா? பெருவலி எப்போது பேரின்பமாகியது. வலியும் இன்பமும் ஒன்றன் இரு முகங்களா? கண்ணீர் வழிய அங்கே அமர்ந்திருந்தேன்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

கர்ணன் பெருமூச்சுடன் பேசுவதை நிறுத்திவிட்டு நீர் வெளியை நோக்கி நின்றிருந்தான். துரியோதனன் அவன் பேசுவது புரியாதவனாக திரும்பி அப்பால் நின்ற துச்சாதனனை நோக்கிவிட்டு கைகளை மார்பில் கட்டிக்கொண்டான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைமாதொரு பாகன் எதிர்ப்புகள்
அடுத்த கட்டுரைஞானக்கூத்தன் பற்றி இசை