‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 73

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 2

கையிலிருந்த தாலத்தில் குருதிக்கவளத்துடன் விரைந்த நடையில் முதுகணியர் மயானங்களைக் கடந்து திட்டிவாயிலுக்குள் நுழைந்து மண்பாதையில் சென்று தெற்குரதவீதியை அடைந்தார். அவர் வருவதை தொலைவிலேயே அங்கு கூடி நின்றவர்கள் பார்த்துவிட்டனர். அவர் கோட்டைக்கதவைக் கடந்ததும் காவல்மேடை மேல் நின்ற வீரன் விளக்கசைக்க நகர் முழுக்க நூற்றுக்கணக்கான முரசுகளும் கொம்புகளும் மணிகளும் பேரொலி எழுப்பத்தொடங்கின.

நகரத்தெருக்களில் கூடியிருந்த மக்கள் கைகளைத் தூக்கி “ஐந்து அன்னையர் புகழ் வாழ்க! பன்னிரு உடனுறை அன்னையர் புகழ் வாழ்க!” என்று கூவினர். விழாவுக்காக பெண்களும் குழந்தைகளும் செந்நிற மேலாடையும் ஆண்கள் செந்நிறத்தலைப்பாகையும் அணிந்திருந்தனர். செம்மலர்தோரணங்கள் ஆடிய இல்லங்களின் முகப்புகளில் ஏழுமுகக் குத்துவிளக்குகள் ஏற்றப்பட்டு அப்பமும் மலரும் இளநீரும் படைக்கப்பட்டிருந்தன.

தெற்குரதவீதியின் தொடக்கத்தில் செம்பட்டுத்தலைப்பாகை சூடி செங்கச்சை அணிந்து நின்றிருந்த ஐந்து முதன்மைப் பூசகர்களும் கைகளில் மங்கலத்தாலங்களுடன் ஐம்பெரும் வாத்தியங்கள் பின்னால் ஒலித்துவர முதுகணியரை எதிர்கொண்டனர். மெல்லிய உடல் உளஎழுச்சியால் புல்நுனி வெட்டுக்கிளிபோல் தாவி அவர் அணுகியதும் வாழ்த்துக்கூச்சல்கள் உச்சத்தில் எழுந்தன. அவர் அவர்கள் முன்னால் வந்து காற்றிலாடும் மரம்போல நின்றார்.

அவரது பாதங்களைத் தொட்டு வணங்கியபின் அவரது கைகளில் இருந்த ஊன்சோறை ஐந்து பூசகர்களும் வாங்கினர். அவர்களைச் சூழ்ந்து வாழ்த்தொலிகளும் மேளமும் காற்றை அதிரச்செய்தன. ஊன்கவளத்தை ஐந்தாகப் பகுத்து தங்கள் கைகளில் இருந்த தாலங்களில் எடுத்துக்கொண்டனர். செம்பட்டால் அதை மூடி மேலே செவ்வரளி மலர் வைத்து எடுத்துச்சென்றனர். அவர்கள் திரும்பிப்பார்க்கலாகாது என நெறியிருந்தது.

காற்று நின்றதும் அது அள்ளிச்சென்ற துணி நிலம் சேர்வது போல முதுகணியர் தொய்ந்து கீழே விழப்போக இருவர் அவரை பற்றிக்கொண்டனர். அவர் கைகளை மட்டும் அசைத்து குடிக்க நீர் கேட்டார். ஒருவர் ஓடிச்சென்று குவளையில் நீருடன் வந்தார். அவரை அள்ளிச்சென்று பாதையோரமாகவே ஒரு மண்டபத்தின் திண்ணையில் படுக்கச்செய்தனர். நீரை அவர் ஆவலுடன் தலைதூக்கி குடித்தார். பின்னர் உதடுகளை இறுக்கியபடி கண்களை மூடிக்கொண்டார். தலையை மெல்ல அசைத்து விழிகளின் முனைகளில் இருந்து நீர் வழிந்து காதுகளை நிறைக்க அழத்தொடங்கினார்.

ஐந்து பூசகர்களும் தெற்குவீதியின் திருப்பத்தில் வந்ததும் தங்கள் மேளக்காரர்களுடனும் அகம்படியினருடனும் ஐந்தாகப்பிரிந்தனர். முதல்பூசகரான விருபாக்‌ஷர் தென்மேற்கு மூலையில் அமைந்திருந்த துர்க்கையின் ஆலயம் நோக்கி சென்றார். அவர் வருவதைக் கண்டதும் துர்க்கையின் ஆலயமுகப்பில் இருந்து எரியம்புகள் வானிலெழுந்து வெடித்துச் சிதறின. ஆலய முகப்பிலிருந்த பெரிய முரசுமேடையில் சரிந்தமைந்திருந்த பெருமுரசு இடியோசை எழுப்பத்தொடங்கியது.

ஆலயத்தின் மரத்தாலான பன்னிரண்டு அடுக்குக் கோபுரத்தின் நடுவே அமைந்திருந்த மாபெரும் கண்டாமணியின் நா சுழன்று ஒலித்த ரீங்காரம் முரசின் கார்வையுடன் கலந்து ஒரு கொழுத்த திரவமாக ஆகி காதுகளையும் வாயையும் நிறைத்து உடலில் புகுந்து நெஞ்சையும் வயிற்றையும் தலையையும் நிரப்பி காதுச்சவ்வை உள்ளிருந்து மோதியது. அந்த அழுத்தம் தாளாமல் அனைவரும் வாயைத் திறந்து திறந்து மூடினர். ஒலியதிர்வுகளில் அங்கிருந்த அத்தனை கட்டடங்களும் மரங்களும் மிதந்து நின்றன. அலைகளில் நெற்றுகளைப்போல அவ்வொலி அவர்களை எற்றி அலைக்கழித்தது.

கோபுரம் சூடிய பேராலயம் இரண்டு துணைக்கருவறைகளுக்கு நடுவே மையப்பெருங் கருவறை கொண்டதாக இருந்தது. அருகே இரு பக்கமும் இரண்டு துணைச் சிற்றாலயங்கள் இருந்தன. அவற்றைச் சுற்றிவளைத்த பெரிய மண்சுவருக்கு நான்கு மூலையிலும் முரசுமேடைகள். நான்கு வாயில்களிலும் மூன்றடுக்குக் கோபுரங்கள். மரச்சிற்பங்கள் நிழலுருக்களாகத் தெரிய விண்மீன்கள் நிறைந்த வானத்தின் பகைப்புலத்தில் எழுந்த கோபுரங்களில் அத்தனை நெய்விளக்குகளும் ஏற்றப்பட்டு மலைத்தீ எனத் தெரிந்தது.

ஆலயமுகப்பிலிருந்து மங்கலவாத்தியக்குழுக்களும் மலர்த்தாலமேந்திய அணிப்பரத்தையரும் நிறைகுடமேந்திய வைதிகரும் விருபாக்‌ஷரை எதிர்கொண்டு வரவேற்றனர். அவர்கள் நடுவே பட்டுமணிமுடி சூடி வைரக்குண்டலங்கள் பந்த ஒளியில் கனலாகச் சுடர்விட செம்பட்டு மேலாடை சுற்றிய சத்யஜித் உருவிய உடைவாள் ஏந்தி நடந்து வந்தார். விருபாக்‌ஷர் தன் கையிலிருந்த குருதிச்சோற்றுத் தாலத்துடன் அவர்களை அணுகியதும் சத்யஜித் அவர் முன் நின்று தன் வாளை பந்தச் செவ்வொளி மின்ன மும்முறை தாழ்த்தி தலை வணங்கினார். பின்னர் வாளுடன் தாலத்துக்குத் துணையாக நடந்தார்.

ஆலயத்தின் மேற்கு நோக்கிய பெருவாயில் வழியாக விருபாக்‌ஷர் உள்ளே நுழைந்தார். அங்கே நின்றிருந்த துணைப்பூசகர் எழுவர் அவரை வணங்கி சூழ்ந்து நடந்தனர். சத்யஜித் உருவிய வாளுடன் வந்து பலிமண்டபத்தின் அருகே இடப்பக்கம் நின்றுகொண்டார். விருபாக்‌ஷர் அந்த செம்பட்டுத் தாலத்தை பலிமேடைமேல் வைத்து முழுதுடல் நிலம்பட விழுந்து வணங்கிவிட்டு உள்ளே சென்றார்.

இரு துணைக் கருவறைகளில் வலப்பக்கத் துணைக் கருவறையில் சங்கு சக்கரமேந்திய மேல்கைகளும் கதையேந்திய கீழ் இடக்கரமும் அஞ்சல் காட்டிய கீழ் வலக்கரமும் கொண்டு மஞ்சள் பட்டு அணிந்து நாராயணி நின்றிருந்தாள். இடப்பக்கத் துணைக்கருவறையில் பிறைசூடிய மணிமுடியும் மான் மழுவேந்திய மேல்கைகளும் சூலமேந்திய இடக்கீழ்க்கரமும் அஞ்சல் காட்டிய கீழ்வலக்கரமுமாக நீலநிறப் பட்டணிந்து சிவை நின்றிருந்தாள். நடுவே எழுந்த பெரிய கருவறையில் மூன்று ஆள் உயரத்தில் சுதையாலான உக்ர துர்க்கையின் பெருஞ்சிலை கோயில் கொண்டிருந்தது.

தழலெனப்பறக்கும் பிடரிமயிர்கொண்ட சிம்மம் வால் சுழற்றி, உகிர் புடைத்த வலது முன்னங்கால் முன்னெடுத்து வைத்து, சற்றே தலைதாழ்த்தி, செங்குருதி சொட்டிய வாய் திறந்து உறுமிய கோலத்தில் நின்றிருக்க அதன் முதுகின் மேல் வலக்காலை தூக்கி வைத்து, இடக்கால் நிலத்தில் மலர்ந்த செந்தாமரை மேல் ஊன்றி, இடை சுழற்றித் திரும்பிய கோலத்தில் துர்க்கை நின்றிருந்தாள். வட்டமாக விரிந்த பத்து கரங்களில் வலது மேல் கை நான்கில் வில்லம்பும், கதையும், மின்னலும், பாதிமலர்ந்த தாமரையும் கொண்டிருந்தாள். இடது மேல்கை நான்கில் திரிசூலமும், பாசமும், மணியும், விழிமணிமாலையும் ஏந்தியிருந்தாள். இடது கீழ்க்கரம் அஞ்சல் காட்ட வலது கீழ்க்கரம் அருளல் காட்டியது.

அன்னையின் பாதம் அமைந்த தாமரையைச் சுற்றி மலர்முற்றம் அமைக்கப்பட்டு அதில் நூற்றெட்டு அகல்கள் நெய்ச்சுடர் கூப்பி மெல்ல அசைந்தன. இருபக்கமும் நூற்றெட்டுத் திரிகள் சுடர்ந்த அடுக்கு விளக்குகள் கொன்றைப்பூங்கொத்து கீழிருந்து மலர்ந்ததுபோல நின்றிருந்தன. அன்னையின் நேர்முன்னால் பலிமண்டபம் இருந்தது. அதில் தாலத்தில் வைக்கப்பட்ட குருதிச்சோற்றை செம்பட்டை விலக்கி மலரிட்டு வைத்தனர். பல்லியமும் முழவும் பறையும் கொம்புகளுமாக சூதர்கள் சூழ்ந்து நின்றனர். மங்கலப்பரத்தையர் இரு வரிசைகளாக நின்றனர்.

மடைப்பள்ளியில் இருந்து வெம்மை பறந்த சோற்றுருளைகளை பெரிய மரத்தாலங்களில் பூசகர்கள் கொண்டுவந்து பலிமண்டபத்தில் வைத்தனர். ஆயிரத்தெட்டு உருளைகளாக உருட்டப்பட்ட கோதுமை, அரிசி, வஜ்ரதானியம் ஆகியவற்றால் ஆன அன்னம் ஒன்பது குவைகளாக குவிக்கப்பட்டது. அவற்றின் மேல் செவ்வரளி, செந்தாமரை, செந்தெச்சி மலர்கள் வைக்கப்பட்டன. விருபாக்‌ஷர் உக்ர துர்க்கையின் ஆலயத்திற்குள் சென்று வலம்புரிச்சங்கை எடுத்து ஊதினார். உடனே நாராயணியின் ஆலயத்திலும் சிவையின் ஆலயத்திலும் பூசகர்கள் சங்குகளை ஊதினர்.

ஐந்து பூதங்களை, மலர்களை, விலங்குகளை, மனிதர்களை, அளித்தலை, போற்றலை சுட்டும் கைமுத்திரைகளுடன் விருபாக்‌ஷர் மந்திரங்களைச் சொல்லி மலர்செய்கையை தொடங்கினார். பிற இரு ஆலயங்களிலும் பூசகர்கள் மந்திரங்கள் உருவிட்டு மலரளித்தனர். கொடிகள் போல கைகள் சுழன்று தேவியின் முன் விரலிதழ்கள் விரிந்து மலராகி உதடுகளாகி ஒருசொல்லைச் சொல்லி மீண்டன.

ஆலயவாயிலில் ரதம் வந்து நிற்கும் ஒலிகேட்டு பரத்தையர் திரும்பி நோக்கினர். வாழ்த்தொலிகள் ஏதுமில்லாமல் மூவர் கைகூப்பியபடி உள்ளே வந்தனர். ஒரு பரத்தை பெரியவிழிகளைத் திருப்பி நோக்கி மெல்லிய குரலில் “அஸ்தினபுரியின் இளவரசர்கள்” என்றாள். மெல்லிய குரல் ஆனதனாலேயே அனைவரும் அதைக் கேட்டனர்.

குழல்சூடிய மலர்மாலைகள் அசைய அணிநகைகள் ஒசிய வளையல்கள் ஒலிக்க இடைகள் மெல்லத் துவள அத்தனைபேரும் மான்கூட்டம் போன்ற அசைவுகளுடன் திரும்பி நோக்கினர். அத்தனை விழிகளும் ஒருவனை மட்டுமே நோக்கின. அறியாது குழல் நீவி செவிக்குப்பின் சரிக்கவோ, மேலாடை நீக்கி அமைக்கவோ, கழுத்தைத் தொட்டு இறங்கி அணிதிருத்தவோ அசைந்த கரங்களுக்கிணங்க இளமுலைகள் விம்மி குழைந்தன. மென்கழுத்து சரிவுகளில் மூச்சு நின்று மெல்லத் துடித்தது. செவ்விதழ்கள் வெம்மை கொண்டு கனத்தன. விழிகளில் குருதிவரிகள் எழ இமைகள் படபடத்தன. ஓரிரு மூச்சொலிகள் எழுந்தன.

இளம்பரத்தை “உயரமானவரா துரியோதனர்?” என்றாள். இன்னொருத்தி விம்மிய மூச்சுடன் “இவரன்றி எவர் இளவரசியை கொள்ளமுடியும்? மணஏற்பு முடிந்துவிட்டதடி” என்றாள். உற்று நோக்கிய பேரிளம்பெண் “அஸ்தினபுரியின் முதல் கௌரவர் பேருடல் கொண்டவர் என்கிறார்கள். மணிக்குண்டலமிட்டவர் அவர்தான். அருகே வருபவர் அவரது இளையோன் துச்சாதனர். அவரும் பேருடல் கொண்டவரே. உயரமானவர் யாரென்று தெரியவில்லையடி” என்றாள். இன்னொருத்தி “தோழனா? தளகர்த்தனா?” என்றாள். ”வாயை மூடு மூடப்பெண்ணே. அவரல்லவா பாரதவர்ஷத்தின் பேரரசன் போலிருக்கிறார்?”

ஒருத்தி மெல்ல முன்னகர்ந்து அருகே நின்ற சூதரின் சால்வையைப்பிடித்து இழுத்து கடந்துசெல்பவர்களைக் காட்டி “அவர்கள் யார்?” என்றாள். அவர் “அஸ்தினபுரியின் இளவரசர்கள்” என்றார். “அது தெரியும்… உயரமானவர்?” என்றாள் அவள். “அதைத்தானே கேட்பீர்கள்? அவர் அங்கநாட்டரசர் கர்ணன்.” அவள் திகைத்து “அவரா?” என்றாள். “ஆம், பாரதவர்ஷத்திலேயே யாதவ கிருஷ்ணனை தவிர்த்தால் அவர்தான் பேரழகன் பெருவீரன் என்கிறார்கள்.” அவள் நோக்கி “இவரைவிடவா ஒருவன் அழகு?” என்றாள்.

பிறபெண்கள் அவள் மேலாடையை இழுத்து “சொல்லடி… யாரவர்?” என்றார்கள். அவள் திரும்பி “கர்ணன். அங்கநாட்டரசர்” என்றாள். அவன்மேலேயே விழிநாட்டியிருந்த பரத்தையரில் ஒருத்தி “ஆம், அவரைப்பற்றி சூதர்கள் பாடியதை கேட்டிருக்கிறேன். வெறும் சொற்களென்றல்லவா எண்ணினேன்?” என்றாள். “சூதர்கள் மூடர்கள். அவர்களுக்கு அழகைப்பற்றி என்ன தெரியும்? ஒரு ஆடல்பரத்தை நடித்துக்காட்டவேண்டும் அவனழகை” என்றாள் ஒருத்தி. “நடிக்கிறாயாடீ?” என ஒருத்தி கேட்க அவள் “மேடையிருந்தால் நடிப்பதற்கென்ன?” என்றாள். அவள் தோழிகள் சிரிக்க அப்பால் நின்றிருந்த ஆலய ஸ்தானிகர் திரும்பிப்பார்த்தார். அவர்கள் சிரிப்பை உறையச்செய்து மந்திரம் நிகழ்ந்துகொண்டிருந்த கருவறையை நோக்கினர்.

அவர்கள் மூவரும் அரசகுலத்தவருக்குரிய இடத்தில் சென்று நின்றுகொண்டனர். கர்ணன் மார்பில் கைகளை கட்டிக்கொண்டு தோளில் புரளும் குழலுடன் நிமிர்ந்து நின்றான். அவன் தோள் அளவே இருந்த துரியோதனன் தன் பெரிய கைகளை விரல்பின்னி இடைமுன் வைத்தபடி நிற்க பின்பக்கம் துச்சாதனன் நின்றான். பெண்கள் கூடிய அவையில் அவர்களின் கைகள் என்னசெய்வதென்றறியாமல் அலைக்கழிந்தன. அதை அவர்களின் உள்ளம் இறுகப் பற்றிக்கொண்டிருந்தது. ஆலயத்தின் ஸ்தானிகர்களில் ஒருவர் அருகே சென்று அவர்களிடம் ஏதோ சொல்ல துரியோதனன் கையசைத்து மறுத்து புன்னகைசெய்தான்.

வெளியே ரதச்சகடங்கள் ஒலித்தன. ஒருத்தி “யாரடி அது?” என்றாள். இன்னொருத்தி “யாராக இருந்தால் என்ன? இனி இந்த புவிக்கு இன்னொரு ஆண்மகன் தேவையில்லையடி” என்றாள். அவளை கிள்ளியபடி இருவர் சிரிக்க சற்று முதிய பரத்தை “அமைதி” என்று பல்லைக்கடித்தாள். அவர்கள் கேளாமலேயே சூதர் திரும்பி நோக்கி “அவர் காம்போஜ மன்னர் சுதட்சிணன்” என்றார். “நாங்கள் கேட்கவில்லையே” என்றாள் ஒருத்தி. சிரிப்பொலி எழ சூதர் பொருள் அறியாமல் தானும் சிரித்து “பின்னால் வருபவர் உசிநார இளவரசர் சிபி” என்றார். பரத்தையரில் ஒருத்தி “மண்ணும் மணியும் நிகரென நோக்கும் நுண்விழியோன்” என்றாள். அத்தனை பேரும் சிரித்து ஸ்தானிகரை நோக்கி வாய்பொத்தி அடக்கியபின் மீண்டும் பீறிட்டுச் சிரித்தனர்.

இளவரசர்கள் சென்று ஒருவரை ஒருவர் வாழ்த்துரைத்து வணங்கி தனித்தனியாக நின்றுகொண்டனர். அனைவரும் ஒருமுறை கர்ணனை நிமிர்ந்து நோக்கியபின் விழிகளை விலக்கிக் கொண்டனர். ஆனால் அவர்கள் உள்ளத்தால் அவனையன்றி பிறரை அறியவில்லை என்று தெரிந்தது. ரிஷபநாட்டு பிரத்யும்னனின் மைந்தனாகிய சாருசேனன் உயரமற்றவன். அவன் உள்ளே வந்ததுமே கர்ணனை நோக்கி திகைத்து ஒரு கணம் நின்றுவிட்டான். பின்னர் தன்னை உணர்ந்து ஓடிச்சென்று தனித்து நின்றான்.

ஆலயத்தின் பெருவாயிலுக்கு அப்பால் பெருமுரசு அதிர்ந்ததும் அனைவரும் திரும்பி நோக்கினர். ஸ்தானிகர் மூவர் வாயிலை நோக்கி ஓடினர். ஆலயத்தின் இருபக்கங்களில் இருந்தும் இரு வீரர்கள் ஐந்துமுக நெய்ப்பந்தங்களுடன் சென்று வாயிலின் இருமருங்கிலும் நின்றுகொண்டனர். கருவறைக்குள் மந்திரம் ஓதிக்கொண்டிருந்த பூசகர்களையும் வாளுடன் நின்றிருந்த சத்யஜித்தையும் தவிர அனைவருமே வாயிலில் விழிநாட்டினர்.

பெருவாயிலுக்கு அப்பால் இருந்து பட்டாடையும் ஒளிரும் நகைகளும் அணிந்த சேடிகள் ஐவர் கையில் பூசைத்தாலங்களுடன் மெல்ல நடந்துவந்தனர். அவர்களைத் தொடர்ந்து துருபதனின் இளைய அரசி பிருஷதி பூத்தாலமேந்தி வந்தாள். அவளுக்கு சற்றுப்பின்னால் மணித்தாலமேந்தி வந்த திரௌபதியின் தலையும் நெற்றியின் வைரச்சுட்டியும் மட்டும் தெரிந்தது. அவ்வளவே தெரிந்தும் அவள் பேரழகி என அறிந்துவிட்ட உள்ளத்தை எண்ணி வியந்தான் துரியோதனன்.

அன்னை சற்று விலகியதும் திரௌபதி பந்தங்களின் செவ்வொளியில் முழுமையாக வெளிப்பட்டாள். அவள் அணிந்திருந்த அரக்குநிறப் பட்டாடையின் மடிப்புகள் சற்றுமுன்னர் அணிந்ததுபோல குலையாமலிருந்தன. நடப்பதன் நெளிவுகளேதும் அவளுடலில் நிகழவில்லை. சீராக ஓடும் பேராற்றில் செல்லும் படகுபோல காற்றில் மிதந்து வந்தாள்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

கர்ணனின் கைகள் மார்பிலிருந்து தாழ்ந்த ஒலி கேட்டு துரியோதனன் திரும்பி நோக்கினான். நிமிர்ந்து அவன் விழிகளுக்குள் தெரிந்த செஞ்சுடர்ப்புள்ளிகளை பார்த்தான். கர்ணனின் இடக்கை அவனை அறியாமலேயே மேலெழுந்து மீசையை நீவிக்கொண்டது. துரியோதனன் திரும்பி திரௌபதியை நோக்கினான். அவள் இயல்பாக ஆடைநுனியை இடக்கையால் பற்றி வலக்கையில் தாலத்துடன் பெருவாயிலைக் கடந்து மண்டபத்தை அடைந்தபோது அச்சூழலை தொட்டுச் சுழன்ற விழிகள் கர்ணனை அடைந்து திகைத்து அசைவிழந்து உடன் தன்னை உணர்ந்து விலகிக்கொண்டன.

அவளுக்கு கர்ணனை முன்னரே தெரியும் என்ற உளப்பதிவுதான் துரியோதனனுக்கு முதலில் எழுந்தது. இவன் எங்கே இங்கு வந்தான் என்று, இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று, இவனா அவன் என்று, இவன் என்னை அறிவானா என்று அவை எண்ணியதென்ன என்று அவன் வியந்துகொண்டிருக்கையில் அவள் முகத்தைத் திருப்பி முகவாயை சற்று தூக்கி கர்ணனை நேருக்குநேர் நோக்கினாள். அவள் நோக்குவது அவன் மார்பை என்று அப்போது துரியோதனன் உணர்ந்தான். ஐயத்திற்குரிய ஏதோ ஒன்றை அவன் மார்பிலோ தோளிலோ கண்டாளா? அல்லது வியப்பிற்குரிய ஒன்றை?

துரியோதனன் திரும்பி கர்ணனின் மார்பை ஒருகணம் நோக்கினான். நீலப்பட்டு மேலாடையை தோளில் தழையவிட்டிருந்தான். மயிரற்ற விரிந்த கரிய மார்பின் தோளருகே இறுகிய தசைவளைவில் பந்தச்சுடர்கள் மறுஒளிர்வு கொண்டிருந்தன. அழகன் என்று துரியோதனன் எண்ணிக்கொண்டான். பாதாளக் கருநாகங்கள் போல தசை இறுகி உருண்டு நீண்ட கரங்கள். இறுகிய சிற்றிடை.

திரௌபதியின் விரிந்த விழிகள் வந்து துரியோதனனை பார்த்தபின் விலகிச்சென்றன. அவள் தன் குழலை காதருகே இருந்து மெல்ல விலக்கி பின்னோக்கி நீவி நிமிர்ந்து கருவறைக்குள் நோக்கினாள். துரியோதனன் அவளையே நோக்கிக்கொண்டு நின்றான். அவள் கன்னத்தை, கழுத்தின் பளபளக்கும் வளைவை, தோளின் கருந்தேன் குழைவை அவன் பார்வை ஊன்றி நோக்கிக் கொண்டிருந்தது. அத்தகைய நோக்கை எவர் உடலும் அறியாமலிருக்க முடியாது. ஆனால் அவள் ஒரு கணம் கூட திரும்பவில்லை. பெண்ணுடலைக் காக்கும் தேவதை அதை அறிந்ததாகவே தெரியவில்லை.

சால்வையைப் பற்றியிருந்த கைகள் தழைய துரியோதனனின் தோள்கள் தளர்ந்தன. அவ்வசைவில் கர்ணன் திரும்பிப்பார்த்துவிட்டு விழிவிலக்கிக் கொண்டான். அக்கணம் முரசுப்பரப்பில் கோல் விழுந்த அதிர்வுடன் துரியோதனன் உணர்ந்தான், அவ்விழிகளுக்கு அப்பாலிருந்த கர்ணனின் அகம் அவனை நோக்கவே இல்லை என. மறுகணமே திரௌபதியின் விழிகள் தன்மேல் பதிந்தபோது அவளும் தன்னை நோக்கவில்லை என்று தெரிந்தது. அவன் உடல் பதறத் தொடங்கியது. மீண்டும் சால்வையை இழுத்துப்பற்றிக்கொண்டு பற்களைக் கடித்தான். அவன் தாடை இறுகி மீள்வதைக் கண்டு துச்சாதனன் அவனை அறியாமலேயே மெல்ல அசைந்தான். அதை அவன் உணர்ந்து திரும்பி நோக்கி மீண்டான்.

மீண்டும் மீண்டும் அவளுடைய அந்த ஒருகணநோக்கு அவன் முன் மின்னி மின்னி அணைந்து கொண்டிருந்தது. அது மின்னுவது தன் இமையசைவால்தான் என்றும் காற்றின் திரையில் அது ஓர் ஓவியமாக வரையப்பட்டிருப்பதாகவும் தோன்றியது. பெருமூச்சுடன் அவன் விழிகளை மூடி தலையை குனிந்து கொண்டான். இல்லை என ஒருமுறை அசைத்தபின் தலை தூக்கினான். அவளுடைய அந்த நோக்கை மிக அண்மையில் மிகநுணுக்கமாக பார்க்கமுடிந்தது. உள்ளே ஆளற்ற இல்லத்தின் சாளரங்கள் போன்ற வெற்று நோக்கு.

எடைமிக்க பாறைகளைத் தூக்குவதுபோல விழிகளைத் தூக்கி அவன் கர்ணனை நோக்கினான். அவன் விழிகள் அவளை நோக்கியே மலர்ந்திருப்பதைக் கண்ட கணமே தசைதெறிக்க பாறை கைநழுவுவதுபோல விழிகள் விலகிச் சரிந்தன. மீண்டும் அவளை நோக்கினான். அவள் நின்றிருந்த நிமிர்வை அறிந்ததும் அவளைக் கண்ட முதற்கணமே அகம் அறிந்தது அதைத்தான் என்று உணர்ந்தான். அவள் தலை எப்போதும் நிமிர்ந்துதான் இருந்தது. அதற்கேற்ப முகவாயை சற்று மேலே தூக்கி அனைத்தையும் நோக்கினாள். விழிகள் நேராக வந்து நோக்கிச் சென்றன. முகத்தை தூக்கியிருப்பதனால் இமைகள் சற்றுச் சரிந்து அவள் மெல்லிய மயக்கத்தில் இருப்பதுபோல தோன்றவைத்தது.

வியப்புடன் ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டான் துரியோதனன். பெண்ணுடல்களில் நிகழும் நெளிவுகளும் குழைவுகளும் அவளில் முற்றிலும் இருக்கவில்லை. இரு தோள்களும் நிகராக இருபக்கமும் விரிந்திருந்தன. அந்த நிகர்நிலை உடலெங்கும் இருந்தது. சங்குசக்கரமேந்திய விஷ்ணுவின் சிலைகளிலும் மலர்சுடர் ஏந்திய சூரியனின் சிலைகளிலும் மட்டுமே தெரியும் நிகர்நிலை. அதை சிற்பிகள் ஏதோ சொல்லிட்டு அழைப்பதுண்டு. சமபங்கம். பெண் சிலைகளேதும் அவ்வகையில் பார்த்ததில்லை.

சிலைதான். திருவிடத்தில் இருந்து கொண்டுவந்த கடினமான கருங்கல்லில் செதுக்கப்பட்ட சிலை. நெற்றி வளைவு மூக்கில் இறங்கி பெரிய இதழ்களை அடைந்த வளைவுகளில் இருந்தது பெருஞ்சிற்பியின் கைத்திறன். கோடானுகோடி சிற்பங்களைச் செய்து அவன் அடைந்த முழுமையின் கணம். வாள்வீச்சென தூரிகை விழுந்து உருவான சித்திரம். ஒருகணத்தில் பிரம்மனின் கனவு நிகழ்ந்திருந்தால் மட்டுமே அவ்வுருவை அவன் அடைந்திருப்பான்.

திரும்பி மீண்டும் கர்ணனை நோக்கினான். அவனிலும் முதல்பார்வையில் தன்னைக் கவர்ந்தது அந்த நிமிர்வுதான் என அப்போது உணர்ந்தான். நிகரற்றவன் என அவனே அறிந்திருப்பதுபோல. நிமிர்வும் உடலின் சமநிலையும் ஒன்றா என்ன? ஒருபோதும் கர்ணன் வளைந்து நின்றதில்லை. ஓரவிழியால் நோக்கியதில்லை. பணிந்து ஏதும் சொன்னதில்லை. கன்னங்கரியவன். அவளைப்போலவே.

அவள் கூந்தலை அப்போதுதான் நோக்கினான். ஐந்து பிரிசடைகளாக அவற்றைப் பின்னி இறக்கி இடைக்குக் கீழே அவற்றை ஒன்றாக்கிக் கட்டியிருந்தாள். முழங்கால்வரை நீண்டுகிடந்த கூந்தல் கரிய பாறையில் இருளுக்குள் ஓசையின்றி வழிந்துகொண்டிருக்கும் மலையருவி போலிருந்தது. கூந்தலிழைகளின் பிசிறுகளில் பந்தங்களின் செவ்வொளி சுடர்விட்டது. அருகே நின்றிருந்த அவள் அன்னையின் நகைகளில் கால்பங்கைக்கூட அவள் அணிந்திருக்கவில்லை. அவள் மூக்கில் இருந்த வெண்வைரம் தனித்த விண்மீன் என அசைவற்று நின்றது.

அசையாத விண்மீன். அவள் கூந்தல் காற்றில் அலையிளகியது. ஆடை மெல்லப்பறந்து அமைந்தது. அசைவில்லாத விண்மீனுக்கு என்ன பெயர்? துரியோதனன் பெருமூச்சுடன் கைகளை மீண்டும் கட்டிக்கொண்டான். துருவன்! அச்சொல் உள்ளத்தில் எழுந்ததும் அவன் புன்னகை செய்தான். துருவ விண்மீனை எப்போது அவன் நோக்கினான் என்று எண்ணிக்கொண்டான். எப்போதுமே பார்த்ததில்லை என்று தோன்றியதுமே பார்த்ததில்லை என்றால் எப்படி நினைவிலெழுகிறது என்றும் எண்ணிக்கொண்டான்.

சிவையின் கருவறையில் இருந்து பூசகர் வெளியே வந்து கையில் இருந்த சுடரால் பலிமண்டபத்தில் இருந்த நெய்விளக்கொன்றை ஏற்றினார். நாராயணியின் கருவறையில் இருந்து வந்த பூசகர் மறுபக்கமிருந்த நெய்விளக்கை ஏற்றினார். ஆலயப் பாங்கர் சங்கொலி எழுப்பியதும் விருபாக்‌ஷர் உக்ர துர்க்கையின் மையக்கருவறைக்குள் இருந்து கையில் தழல்பறந்த பந்தத்துடன் வெளியே வந்தார். அனைத்து வாத்தியங்களும் இணைந்து பேரொலி எழுப்ப மங்கலப்பரத்தையரின் குரவை ஒலிகள் சூழ பலிமண்டபத்தருகே நின்று குவிக்கப்பட்டிருந்த உணவை பந்தத்தின் தீயால் ஏழுமுறை வருடிச் சுழற்றினார்.

ஊட்டுமந்திரத்தைக் கூவியபடி குருதிச்சோற்றை எடுத்து அங்கிருந்த பெருஞ்சோற்று உருளைகள் மேல் வீசினார். துதிகளுடன் மலர்களையும் வீசிவிட்டு. சைகையால் துர்க்கையிடம் பலி ஏற்கும்படி சொன்னார். பன்னிருமுறை அச்சைகையை செய்தபின் உள்ளே சென்று கதவைமூடிக்கொண்டார். அனைவரும் கருவறையை நோக்கி கைகுவித்து நின்றனர். முரசும் பறைகளும் முழவுகளும் கொம்புகளும் சங்கும் மணியும் இணைந்த பேரொலி போர்க்களத்தில் நின்றிருக்கும் உணர்வை அளித்தது. வெடித்துவெடித்துக் கிளம்பும் ஒலி ஆலயச்சுவர்களை துணித்திரைகளாக நெளியச்செய்தது.

கதவு மணியோசையுடன் திறக்க உள்ளே நூற்றெட்டு சுடர்களின் ஒளியில் துர்க்கை பெருந்தழல் வடிவம்போல தோன்றினாள். விருபாக்‌ஷர் நூற்றெட்டு நெய்ச்சுடர்கள் எரிந்த அகல்கொத்தைச் சுழற்றி அன்னைக்கு சுடராட்டு செய்தார். பின் ஐம்பத்தாறு சுடர்கள். பின் நாற்பத்தொரு சுடர்கள். பின் பதினெட்டு சுடர்கள். பின் ஒன்பது சுடர்கள். ஐந்து சுடர்கள் கொண்ட சிறிய விளக்கு ஒரு மலர்ச்செண்டு போலிருந்தது. மூன்று சுடர் கொண்ட சிறுவிளக்கால் சுடராட்டியபின் ஒற்றைத்திரி விளக்கை மும்முறை சுழற்றி அதை கையில் எடுத்து வெளியே வந்து அந்த உணவுக்குவைமேல் வைத்தார்.

அதன்பின் சிவைக்கும் நாராயணிக்கும் அதேபோன்று சுடராட்டு காட்டப்பட்டது. சிறு விளக்குகள் சோற்றுக்குவைகளின் மேலேயே வைக்கப்பட்டன. விருபாக்‌ஷர் வெண்கல வாளால் சோற்றை ஏழுமுறை வெட்டினார். பின் அதில் ஒரு சிறுபகுதியை அள்ளி வாளுடன் நின்ற சத்யஜித்துக்கு அளித்தார். அவர் அதை பெற்றுக்கொண்டு ஒருவாய் உண்டார். பின்னர் அரசிக்கும் திரௌபதிக்கும் அவ்வுணவை அளித்தார். அரசகுலத்தவர் அனைவருக்கும் அவ்வுணவு அளிக்கப்பட்டது.

மீண்டும் பெருமுரசு ஒலித்தபோது அரசியும் திரௌபதியும் மூன்று தேவியரையும் வணங்கிவிட்டு திரும்பினர். கரிய தழல் போல செந்நிற நகமுனைகளுடன் அவள் கைகள் குவிந்தன. பின் கருங்குருவியின் அலகு போல இரு நகவளைவுகள் மேலாடையை நுனியை மெல்லப்பற்றித் தூக்கி அமைத்தன. செந்நிற நகங்கள் மின்னும் பட்டுக்கால்கள் கல்தரையை ஒற்றி ஒற்றி முன் சென்றன.

தாலங்களுடன் சேடியர் முன்னால் செல்ல அவர்கள் பின்னால் சென்றனர். அவள் மீண்டும் ஒருமுறை பார்ப்பாள் என்று துரியோதனன் நோக்கிக்கொண்டு நின்றான். அவள் கனத்தகூந்தல் மெல்ல அசைந்தாடியது. காற்று அவளை கையிலேற்றிக் கொண்டு சென்றது. வெளியே அவர்களின் வருகையை அறிவிக்க சங்கொலி எழுந்தது.

பெருமூச்சுடன் கர்ணன் திரும்பி துரியோதனனிடம் “அவள் பாஞ்சாலனின் மகள். கிருஷ்ணை” என்றான். அந்தச் சொற்களின் பொருளின்மையை உணர்ந்து துரியோதனன் இதழ்கோட புன்னகைசெய்தான். கர்ணன் அதை உணராமல் “கிருஷ்ணை என அவளுக்கு பெயர் வைத்தவனை வணங்குகிறேன்” என்றான். அக்கணம் துரியோதனன் உள்ளத்தில் ஒரு கூரிய புன்னகை எழுந்தது. “இளைய யாதவன் பெயரும் கிருஷ்ணன்தான்…” என்றான். பாம்பு தீண்டியதுபோல கர்ணன் திரும்பி நோக்கினான். துரியோதனன் விழிகளை சந்தித்தபின் “ஆம்…” என்றான்.

”ஐந்து தேவியரின் ஆலயத்திற்கும் அவள் இன்றிரவு சென்று வழிபடுவாள் என நினைக்கிறேன்” என்றான் துரியோதனன். சற்று மிகையாக சென்றுவிட்டோமோ என்ற உணர்வில் ஓர் அடி பின்னகரும் பொருட்டு. கர்ணன் “இளைய யாதவன் வந்திருக்கிறானா?” என்றான். “ஆம், வந்துள்ளான் என்றார்கள். மாதுலரும் கணிகரும் நாளை வருகிறார்கள்…” யாதவன் பெயருடனேயே கணிகரும் சகுனியும் துரியோதனனுக்கு நினைவுக்கு வருவதை எண்ணி கர்ணன் அவனை அறியாமலேயே புன்னகை செய்தான். அப்புன்னகை துரியோதனனை குழப்பவே அவன் “பாண்டவர்களும் வந்திருக்கலாம். இந்நகரில் அவர்கள் எங்கோ இருக்கிறார்கள்” என்றான்.

“நம் ஒற்றர்கள் என்ன சொல்கிறார்கள்?” என்றான் கர்ணன். அவன் குரலில் இருந்த இயல்புத்தன்மை உருவாக்கப்பட்டது என உணர்ந்தவனாக “தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எளிதில் ஒளிய முடியாது” என்றான் துரியோதனன். அவனுக்கு கர்ணனின் அந்தப்புன்னகை அப்போதும் குழப்பத்தையே அளித்தது. அவர்கள் வெளியே வந்தபோது கர்ணன் யாதவனைப்பற்றி ஏதேனும் கேட்பான் என துரியோதனன் எதிர்பார்த்தான். அவன் ஒருசொல்லும் சொல்லவில்லை. விண்மீன்கள் விரிந்த வானை நோக்கி “நாளை பின்னிரவு வரை…” என்றான். அவன் என்ன சொல்கிறான் என்று துரியோதனனுக்கு புரியவில்லை. ஆனால் அவன் அதை வினவவில்லை.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைநம்மாழ்வார் நினைவு இன்று
அடுத்த கட்டுரையானைடாக்டர்- கடிதம்