பாலாவுக்கு விருது

இந்த மாதம் பத்தொன்பதாம் தேதி இயக்குநர் பாலா ஜனாதிபதி பிரதிபா பட்டேலிடமிருந்து ‘நான் கடவுள்’ படத்திற்கான தங்கத்தாமரை விருதைப் பெற்றிருக்கிறார்.இந்தியாவின் எந்த ஒரு இயக்குநருக்கும் கனவாக இருக்கும் விருது இது. இந்தியாவின் திரைமேதைகளின் வரிசையில் ஒரு இடம் என்பதே இந்த விருதின் பொருள்.

 

பாலா விருதுபெறும் புகைப்படம் அபாரமான ஒரு நிறைவை அளித்தது. கிட்டத்தட்ட நான்காண்டுகள் நான்கடவுள் படத்திற்காக பாலாவுடன் பழ நேர்ந்திருக்கிறது. அவரது வாழ்க்கை முறை என்னுடைய இயல்புக்கு ஒத்துவராதது என்றபோதிலும்கூட அந்த நட்பு மிகுந்த உள்ளன்புடன் இன்றுவரை நீடித்திருக்கிறது.

அன்றாடச் சிறிய விஷயங்களுக்கு அப்பால் எளிதாகச்செல்லும் தன்மை பாலாவிடம் உண்டு. தன்னைப்பற்றிய மிகையான பிம்பங்களை உருவாக்காமல் தன்னை நகைச்சுவையுடன் அணுகும் பார்வையும். அவரது அபூர்வமான நகைச்சுவை உணர்வு இன்றும் புன்னகைக்கச் செய்யும் பல நினைவுகளை உருவாக்கியிருக்கிறது.

 

நான்கடவுளின் கருவைப்பற்றிய விவாதத்தில் முதல்முறையாக அதை பிச்சைக்காரர்களின் உலகுக்குக் கொண்டுசெல்லலாம் என்று நான் சொன்ன நாள் நினைவிலிருக்கிறது. 2005 ஆகஸ்ட் மாதம் சென்னை விஜய்பார்க் ஓட்டலில் இருந்து அந்த எளிய முன்வரைவை எழுதினேன். அந்த எண்ணம் எந்த வணிக இயக்குநருக்கும் ஒரு தயக்கத்தை அளித்திருக்கும். அது விற்கக்கூடிய ஒரு கருவே அல்ல.

கிரீன்பார்க்கில் தங்கியிருந்த பாலா அந்த தாள்களை வாசித்துவிட்டு அதீத உற்சாகத்துடன் சோபாவில் இருந்து எழுந்து ”செஞ்சிருவோம். என்ன ஆனாலும் சரி…மயிரு, கெரியரே போனாலும் சரி, பாத்திருவோம்” என்று சொன்னார். அந்த கண்களில் தெரிந்த உற்சாகம் கொஞ்சம் கிறுக்குத்தனம் கலந்த படைப்பாளிகளுக்குரியது என இப்போது படுகிறது. அவர்களே எல்லைகளைத் தாண்டிச்செல்கிறார்கள்.

சேது மூலம் பாலா உருவாக்கிய ஒரு திறப்பு இன்று வரை தமிழில் யதார்த்தவாத சினிமாக்களுக்கான வாசலாக நீடிக்கிறது. நான்கடவுள் வரை தன்னை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டிருக்கும் கவனம் இன்றும் படைப்பாளிகளுக்கு ஒரு முன்னுதாரணம். இந்த விருது அவற்றுக்கான அங்கீகாரம்

பாலாவுக்கு மீண்டும் வாழ்த்துக்கள். 

 http://www.envazhi.com/?p=17023

முந்தைய கட்டுரைமூழ்குதல்
அடுத்த கட்டுரைஇரு நூல்கள்