எனது இந்தியா:கடிதங்கள்

அன்புள்ள ஜெ,
முதலில் இப்படி ஒரு கட்டுரை [ எனது இந்தியா ] எழுதியதற்காக எனது மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும். மனதின் ஆழம் சென்று தைக்கும் முத்தான வாக்கியங்கள் ஒவ்வொன்றும்.
இந்த தேசத்தின் அடிப்படை பலம் இதன் அறவுணர்வு. புராணங்கள் , இதிகாச காலம் தொடங்கி இன்றும் அறுபடாது நம்மை இணைக்கும் , முன்னடத்தும் இழை அது.
அநீதி இங்கு இல்லை என்பது இல்லை.ஆனாலும் , அறம் அதனை வென்றபடியே வந்திருக்கும் மிகச்சில தேசங்களில் தலையாயது இது.உங்கள் கட்டுரை அதனை தெளிவாக முன்வவைக்கிறது.
உங்களோடு இணைந்து உரக்கக் கூவுவதில் பெருமிதம் கொள்கிறேன் “வெல்க பாரதம்”
அன்புடன்,
மதி
****

அன்புடன் ஜெயமோகனுக்கு

கடந்த வார குமுதம் இதழ் அரசு பதில்களில் தீவிரவாதிகள் பற்றிய இரு கேள்விகள்…

முதல் கேள்வியில் தீவிரவாதிகளிடம் சகோதரத்துவத்தையும் அன்பையும் கடைப்பிடிக்க வலியுற்த்தும் ஆசிரியர், அடுத்த கேள்வியிலேயே தீவிரவாதிகளை  வெறி பிடித்த சைக்கோ என்று வர்ணிக்கிறார்… இத்தகைய முரண்பாடுகளை நம் எல்லா ஊடகஙளிலும் மீண்டும் மீண்டும் காண முடிகிறது.
இது போன்ற எளிய முரண்பாடுகளைக் கூட கவனிக்க முடியாத அளவில் தான் பெரும்பாலான் வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்கது.

அருந்ததி ராயின் கருத்துக்களும்,  மேடைப் பேச்சுக்களில் ஒவ்வொரு கைத்தட்டலுக்கும் அவர் வெட்கப் படும் விதமும் ஒரு சிறுவயது பள்ளிச் சிறுமியின் தோற்றத்தையே ஞாபகப்படுத்துகிறது. (ஆனால்… நீங்கள் குறிப்பிட்டது போல் வெட்கப்படும் போதுதான் ஒரு பெண் மிகவும் அழகாக இருக்கிறாள்). பள்ளிச் சிறுமிக்கு PhD பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் வேதனை.

‘படிப்பறிவில்லாத சமூகத்தில் ஜன நாயகம் என்பது கும்பல் அராஜகமாகவே முடியும்’ என்ற ப்ளேட்டோவின் கருத்துக்கு ‘படித்த அரசியல் வாதிகள் எல்லாம் அராஜகத்தில் ஈடுபடுவதில்லையா’ என்று பாமரத்தனமாக எதிர்வினையாற்றிய வாசந்தி போன்றவர்கள், அருந்ததி ராய், ஆர்,பி,வி.எஸ்.மணியன் போன்றோர் எல்லாம் அறிவுஜீவியாக வலம் வருவது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்.

ஆனாலும் உங்களைப் போன்ற சிந்தனையாளர்கள் மீதும், ஜக்கி வாசுதேவ் போன்ற ஆன்மீகவாதிகள் மேலும் எனக்கு அபார நம்பிக்கை உண்டு. 1000 ஆண்டு இருளை ஒரு தீக்குச்சி ஒரு நொடியில் அழித்துவிடும். 1000 கோணல் சிந்தனைகளை ஒரு உயர்ந்த சிந்தனை காலம் கழித்தேனும் நொறுக்கி  விடும்.

வெல்க பாரதம்!

நன்றி
ரத்தன்

****

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்திய சுற்றுபயணத்தில் இருந்தபோது எழுதிய பயண கட்டுரைகள் அனைத்தையும் தவறாமல் படித்து, உடன் பதில் எழுதினால் பயணத்திற்கிடையில் தங்கள் அதைவேறு படித்து தொலைய வேண்டும் என்பதால் தற்போது எழுதுகின்றேன்.

பயணம் முடிந்து திரும்ப வீடு வந்து சேர்ந்தவுடன் சென்ற பயணத்தைப் பற்றி புதிய எண்ணங்கள் தோன்றக் கூடும் அல்லவா? அவற்றை படிக்கவும் ஆவலாக இருக்கிறேன். உங்கள் பயணக் கட்டுரைகளை படிக்கும்பொழுது அதன் அடிப்படையில் எனக்கு தோன்றிய கேள்வி என்னவென்றால், தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இம்மாதிரி சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலையிலா நம் நாட்டின் மற்ற மாநிலங்கள் உள்ளன? தனியாக இம்மாநிலங்களை சுற்றி வரவே முடியாதா? புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் மட்டும் தான் பாதுகாப்பு கிடைக்குமா?

எனது இந்தியா கட்டுரை படித்தேன். நீங்கள் குறிப்பிடும் “குருவிமண்டை” மக்களுக்காக போராடி சிறைச்சாலையில் வாடிய கதையை நீங்கள் அறிந்ததுண்டா? அந்த தியாக மனப்பான்மையை புரிந்து கொள்ளவில்லையே நீங்கள்? கொள்கை குப்பையென்றாலும், அவரின் ஆங்கில எழுத்து நடை அற்புதமாக இருக்கும்.  அவரின் புக்கர் பரிசு வாங்கிய நாவல் நன்றாக இருக்குமென்றாலும், அந்த சமயத்தில் அதை விட சிறந்த நாவல்களும் இருந்தன. ஒருவேளை புக்கர் பரிசுக்கு அவைகள் போட்டி போடவில்லை போலும்.

அன்புடன்

Josh

அன்புள்ள ஜோஷ்

ஒரு விஷயம் சொல்கிறேன். இந்தியாவின் மிகச்சில பகுதிகளை தவிர எங்கும் நீங்கள் எந்த பயமும் இல்லாமல் சென்றுவரலாம். பொலீஸ் பாதுகாப்பைச் சொல்லவில்லை. எந்த இடத்திலும் நீங்கள் காணும் அன்பான நட்பான மக்களை வைத்தே சொல்கிறேன். உங்களுக்கு வழி சொல்ல எட்டு பேர் பாய்ந்து முன்வருவார்கள். ஆலோசனைகள் சொல்வார்கள். கூடவந்து உதவுவார்கள். ஒப்பு நோக்க இந்தியா அளவுக்கு அமைதியான பாதுகாப்பான நாடே இல்லை. அதன் விரிந்த ஆளில்லா நிலங்கள் பொட்டல்கள் கைவிடப்பட்ட கிராமங்கள் என்று பார்க்கும் போது இந்த அமைதி மிக மிக வியப்பூட்டுகிறது. நிர்வாக எந்திரத்தின் பங்களிப்பு இல்லாமல் இயல்பாக நூற்றாண்டுக்கால கிராமிய வாழ்க்கையில் இருந்து உருவான அமைதி அது.

அருந்ததி ராய் சிறைசென்ற கதை எனக்கும் தெரியும். நர்மதா போராடம் உருவான நாள் முதல் அதில் எனக்கும் சிறு பங்கு உண்டு. மேதா பட்கர் போன்றவர்கள் அதில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவதை , அவர்கள் அடையும் உலகப்புகழை கண்டு பாதியில் உள்ளே புகுந்து ஒஉ ‘ஷோ’செய்து ஊடகங்களில் அலம்பிவிட்டு விலகியவர் அருந்ததி. மேதா செய்த ஒரே பிழை அந்த போராட்டத்துக்கு உலக ஊடகங்களின் கவனம் கிடைக்கும் என்று என்ணி அவர் அருந்ததியை ‘தலைமை’தாங்க அழைத்ததுதான். நர்மதா பிரசினையின் உண்மையான சிக்கலை வெறும் பரபரப்பாக மாறிவிட்டு அடுத்த பரபரப்பை தேடிச்சென்றது குருவி

காந்தியப்போராடம் நீடித்து பிடிவாதமாக ஆர்ப்பாட்டமில்லாமல் மட்டுமே நிகழ் முடியுமென்ற ஆரம்ப பாடத்தை மேதா மீணும் கற்றுக்கொன்டர்

அருந்ததியின் நாவல் பற்றி நான் ஏற்கனவே ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். ஆழமில்லாத அந்த போலி நாவல் இந்திய இலக்கியமென அடையாளம் காட்ட்ப்படுவது நம் துரதிருஷ்டம். நாம் எதை எழுதவெண்டுமென்றும் மேற்கு ஆணையிடுகிறது

ஜெ

***
அன்புள்ள ஜெயமோகன்,

சில கருத்துகள் தீவிரமாக இருந்த போதிலும், உங்கள் பதிவில் இருக்கும் மத, மொழி தாண்டிய நேர்மை சுடுகிறது. அத்தனையும் சத்தியம். போன வாரம் தன் சாரு நிவேதிதாவின் ‘இந்தியா குப்பை; தேறாது’ என்னும் பதிவை ஏறிட நேர்ந்தது.
வயிறு எரிந்தது.

இன்னும் கொஞ்சம் ஆழ்ந்த தேடுதலோடு இந்த பதிவை நீங்கள் முன்னகர்த்த வேண்டும் என்பது என் விருப்பம்.
கூறியிருக்கும் வெளி சக்திகள், ஆயுத பண பலங்கள், இங்கு குழி தோண்டும் ‘நமது சொந்த சகோதரர்கள்’, மற்றும் போலி அறிவு ஜீவிகள் அனைத்திற்கு நடுவிலும் ஒரே பலம், நாமும் நம்மை போன்ற என் நாட்டை நேசிக்கும், அதன் பண்பை விரும்பி போற்றும் மக்களே பெரும்பான்மை என்பதே.

“ஒரு தேசத்தின் அறிவுஜீவிகளில் பெரும்பான்மை அந்த தேசத்தின் பாரம்பரியத்தை அழிக்க எண்ணுவதும் ,அதுவே முற்போக்கு என்று அங்கே நம்புவதும் வேறு எந்த தேசத்திலாவது உள்ளதா?” – ஒரு கொடுங்கோன்மை தேசத்திலோ அன்றி வறிய செயலற்ற அன்றி கருத்து சுதந்திரம் சிறிதும் அற்ற ஒரு நாட்டிலோ இவ்வகையான நிலை நீடிப்பதை புரிந்து கொள்ள முடியும்.

இந்நாடு அழிகிறது, அடக்குமுறை தாண்டவமாடுகிறது என்பதற்கு நேர்மையற்ற அழிவு சக்திகளால் என்ன ஆதாரம் கொடுத்து விட முடியும், அவர்களது “ஒருவரை ஒருவர் சொரிந்து கொள்ளும்’ சுகத்திற்காக செய்வதை தவிர?

மிக்க உணர்ச்சி பூர்வமாகவெல்லாம், “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை; ஆணை இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை” என்றெல்லாம் கூவ வேண்டியதில்லை.

பொருளாதார, அரசியல் சமூக ரீதியின் படி பாரதம் இன்னும் இருபது வருடங்களில் உலகின் இரண்டாவது பெரிய வர்த்தக மையமாக திகழும் ( சீனத்திற்கு அடுத்தபடி) என்பதை ஐஎம்எப், உலக வங்கி, ஆசிய முன்னேற்ற வங்கி, யுஎன் எனும் கருத்து கூடங்களும், அமெரிக்கா உள்ளிட்ட (இவர்களுக்கு சொறிவதற்கு கூலி கொடுக்கும் முதலாளிகள் உட்பட) அனைவரும் ஏற்று கொண்ட ஒரு நிதர்சனம்.

இவர்களின் அறைகூவல்கள், சதி வேலைகள், பரப்பு கூலிகள் எல்லாம் கடந்த அறுபது வருடங்களாக தொடர்ந்த போதிலும், பாரதம் எவ்விதத்திலும் சளைக்கவில்லையே; நமது விஞ்ஞான, பொருளாதார வளர்ச்சி சுனங்கவில்லையே;

இந்த சக்திகளை பாரதம் அடி பணிய செய்யும்.
அது காலத்தின் கட்டாயம்.

சரவணன்

**

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் ‘எனது இந்தியா’ கட்டுரையை இது வரை மூன்று முறை படித்துவிட்டேன்.  என் முனைவர் பட்ட ஆய்வுக்காக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தனித்தமிழ் தேசிய இயக்கத்துக்கும் வெளிநாட்டு மதமாற்ற மற்றும் அமெரிக்க ஐரோப்பிய அரசு சார்ந்த மற்றும் சாராத அமைப்புகளுக்கும் இருக்கும் தொடர்புகள் குறித்த பல ஆவணங்களையே வகைப்படுத்தி பகுத்தாய்ந்து கொண்டிருந்ததன் விளைவாக கிடைத்த மிகப்பெரிய மனச் சோர்வுக்கும் (கூடவே எழும் வெறுப்புணர்ச்சியையும் குறிப்பிடவேண்டும்) ஆத்திரத்துக்கும் மிகப்பெரிய மருந்தினை அளித்துள்ளீர்கள்.] ஒரு மிகச்சிறந்த ஆக்கப்பூர்வமானதும் அறம் சார்ந்ததுமான குரலை முன்வைத்துள்ளீர்கள். சக-மானுடத்தின் மீது நம்பிக்கை இழக்காமல் அதே நேரத்தில் யதார்த்தத்தையும் மறக்காமல் கூறப்படும் இந்த வார்த்தை விதைகள் இதனை படிக்கும் ஒவ்வொரு பாரத மனதிலும் நல்லெண்ணங்களையும் பரஸ்பர சகோதரத்துவத்தையும் அன்பையும் உருவாக்கட்டும். உங்களுக்கு தமிழர் சமுதாயம் கடமைப்பட்டுள்ளது. உணர்ச்சிகளை தூண்டிவிடும் சந்தர்ப்பங்களிலும் அன்பையையும் அறத்தையும் கைவிடாமல் உண்மையை கூறும் உங்களுக்கு ஒவ்வொரு இந்தியனும் கடன்பட்டிருக்கிறார்கள். நாளைக்கு இந்த தேசத்தின் குழந்தைகள் சர்வதேச அகதிகள் முகாம்களில் வளராமல் அன்பான வீடுகளில் வளர வேண்டுமானால், உங்கள் வார்த்தைகளை ஒவ்வொருவரும் (நான் உட்பட) உணர்ச்சிகள் பெருகும் தருணங்களில் உணர்ந்து நடப்பது நல்லது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தங்கள் இணையதள வாசகர்களுக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

பணிவன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்

முந்தைய கட்டுரைகருங்குயில் குன்றம், குறள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழிலக்கியம் ஒருவிவாதம்