அர்ஜூனன் கூறினான்:
1. ஜனார்த்தனா,
அறிவானது
செயலை விட
மேலானது என்று
நீ எண்ணினாய் என்றால்,
கேசவா,
குரூரமான இச்செயலுக்கு
என்னை ஏன் தூண்டுகிறாய்?
2. சிக்கலான
சொற்றொடர்களால்
எனது அறிவு
மயங்குகிறது;
எதன் மூலம் நான்
சிறப்படைவேனோ
அந்த ஒன்றை மட்டும்
எனக்குக் கூறுக.
3. கிருஷ்ணன் கூறினார் –
பாவமற்றவனே,
முற்காலம் முதலே
இவ்வுலகில்
சாங்கிய ஞானம் கொண்டவர்களுக்கு
ஞான யோகம்,
யோக ஞானம் கொண்டவர்களுக்கு
கர்ம யோகம்
என
இருவகைப்பட்ட முறைகளை
நான் கூறியிருக்கிறேன்.
4. புருஷன்
செயல்களை
தொடங்காமலிருப்பதனால்
செயலின்மையை அடைவதில்லை,
துறப்பதனால்
வீடுபேறு பெறுவதுமில்லை.
5. பிறந்தவர் எவரும்
கணமேனும்
செயலாற்றாமல்
இருப்பதில்லை,
ஏனென்றால்
இயற்கையான
குணங்களால் கட்டப்பட்டு
அனைவருமே
செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
6. அர்ஜூனா,
செயற்புலன்களை அடக்கி,
மனத்தால்
புலன் விழைவுகளை
நிகழ்த்திக் கொண்டிருப்பவன்
மூடன்,
பொய்யில் உழல்பவன்
எனப்படுகிறான்
7. புலன்களை
மனதால் வென்று
செயற்புலன்களைக் கொண்டு
கர்மயோகத்தை
ஆற்றுபவனே
சிறப்படைகிறான்
செயல் யோகத்தின் தேவை என்ன?
அர்ஜூனனின் முதல் வினாவில் அவனுடைய மனக்குழப்பம் வெளிப்படுகிறது. ‘அறிவானது செயலைவிட மேலானது என்று கருதுவீர்கள் என்றால்…’ என்று அவன் கிருஷ்ணனிடம் கேட்கிறான். சாங்கிய யோகத்தில் 49ஆம் பாடலில் கிருஷ்ணன் ‘புத்தியோகத்தை விட கர்மம் மிகவும் தாழ்ந்தது’ என்று கூறுகிறார். புத்தியோகம் என்று அந்தச் செய்யுளில் உள்ளது. அர்ஜூனன் இங்கே அதைக் கேட்கும்போது புத்தி என்று மாறிவிட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். சாதாரண செயலைவிட செயலை ஆழ்ந்தறிந்து, அந்த ஞானத்தில் உறுதி கொண்டுள்ள புத்தி யோகம் மேலானது என்பதே கிருஷ்ணனின் கூற்று என்றால், செயலைவிட மேலானதா அறிவு என்று அர்ஜூனன் கேட்கிறான்.
தொடர்ந்து அர்ஜூனன் ‘சிக்கலான சொற்றொடர்களால் என் அறிவு மயக்கம் அடைகிறது’ என்கிறான். முந்தைய செய்யுள்வரை கிருஷ்ணனின் கூற்றுக்கள் மிகத் தெளிவாகவே உள்ளன. எதையும் குழப்பத்துடனோ அரைகுறையாகவோ கூறும் போக்கே கிருஷ்ணனிடம் இல்லை. அப்படியானால் அர்ஜூனனின் இந்த மனத்தடுமாற்றம் எப்படி ஏற்பட்டது?
கிருஷ்ணன் சென்ற அத்தியாயம்வரை கூட ‘செயல்புரிக’ என்றுதான் கூறுகிறான். கூடவே, ‘புலன்களை அனைத்து இச்சைகளில் இருந்தும் விலக்கிக் கொள்பவனுடைய ஞானம் உறுதியானது’ என்றும் கூறுகிறான். அனைத்து உயிர்களுக்கும் எது இரவோ அப்போது விழித்திருக்கும் யோகியின் நிலையை அடையும்படிச் சொல்கிறான். ‘எல்லா விழைவுகளையும் விடுத்து, எதிலும் பற்றில்லாமல், தன்முனைப்பில்லாமல் இருப்பவன் முழுமையான அமைதியைக் கண்டடைகிறான்’ என்கிறான்.
புத்தியோகம் என்று கிருஷ்ணன் குறிப்பிடுவது இதையே. புத்தியின் முரணியக்கம் என்று இதை நாம் புரிந்து கொள்ளலாம். செயலின் எல்லைகளை உணர்ந்து, செயலின் விளைவுகளில் பற்று வைக்காமல், செயலுடன் புத்தியை இணைத்துக் கொள்ளுதல். அச்செயலை நிராகரிப்பது அல்ல. ஆனால் அர்ஜூனன் அப்படி அதைப் புரிந்து கொண்டிருக்கிறான்.
இங்கு அர்ஜூனன் கூறும் வரிகளை இன்னொரு விதத்திலும் நாம் கவனிக்க வேண்டும். ‘எனக்கு சிறப்பு தேடித்தருவதை உபதேசித்தருள்க’ என்று கூறி கிருஷ்ணனைச் சரண் அடைந்த அர்ஜூனனை நோக்கித்தான் கிருஷ்ணன் சாங்கிய யோகத்தின் மொத்த விளக்கத்தையும் அளிக்கிறான். ஆனால் அவ்வியக்கம் முடிந்ததுமே அர்ஜூனன் ‘எனக்கு சிரேயஸ் அளிப்பது எதுவோ அதைச் சொல்லி தருவாயாக’ என்று மீண்டும் கேட்கிறான். அவனுக்கு சாங்கிய யோகம் நிறைவளிக்கவில்லை என்பதற்கான சான்று இது.
செயல்களின் மீது பற்றில்லாமல் இருப்பதென்றால் எதையும் செய்யாமல் ஒதுங்கிவிடுவது என்று அவன் புரிந்து கொண்டிருக்கக்கூடும். உலகியல் செயல்களை அவ்வாறு முற்றிலும் விலக்கிவிடுவதையே அறிவார்ந்த நிலை என்றும் அவன் புரிந்து கொண்டிருக்கக்கூடும். தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை முழுமையாக ஒதுக்கிவிட்டு தனக்குள் சுருங்கி, தன் அறிவுக்குள் ஆழ்ந்து செல்லும் ஒரு நிலையை அவன் எண்ணியிருக்கலாம்.
ஏனெனில் அத்தகைய ஒரு தரப்பு கீதையின் காலம் முதலே வலுவாக இருந்து வந்தது. உலகச் செயல்பாடுகள் அனைத்தும் பாவத்தையே உண்டு பண்ணுபவை, ஆகவே உலகச் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் ஒதுங்குவதன் மூலமே முக்தி கிடைக்கும் என்று நம்புகிறவர்கள் வேதகாலத்திலேயே இருந்தார்கள். உபநிடத காலத்தில் அவர்கள் வலுவான ஒரு தரப்பு. அந்தத் தரப்பு பின்னர் ஆசீவக மதமாகவும் சமண மதமாகவும் விரிவாக்கம் பெற்றது.
இந்த மனக்குழப்பத்தையே இங்கு முன்வைக்கிறான். அதற்குப் பதிலாகவே கிருஷ்ணன் கர்மயோகத்தைக் கூற ஆரம்பிக்கிறார். அதாவது ‘புலன்களை அவற்றின் இன்ப விழைவுகளில் இருந்து தடுத்து, தன்முனைப்பழிந்து இருத்தலே இறுதியான அமைதியை அளிக்கும்’ என்று கூறப்பட்ட போது, ‘அப்படியானால் புலன்களை நாடும் இன்பவிழைவுகளை தடுக்கும் பொருட்டும் தன் முனைப்பை அழிக்கும் பொருட்டும் மொத்த உலகியல் வாழ்வை¨யும் துறந்து விட வேண்டுமா?’ என்ற கேள்விக்கான விடையே கர்ம யோகமாக விரிகிறது.
இந்த மனக்குழப்பம் அர்ஜுனனுக்கு ஏன் வருகிறது என்பதையும் இங்குக் நோக்கியாக வேண்டும். சாங்கிய யோகம் ஏன் அவனுக்குப் போதாமல் போகிறது? ஏனெனில் சாங்கிய யோகத்தால் நிறைவு கொள்ளும் இடத்தில் அவன் இல்லை. அவனுடைய கேள்வி சாங்கிய யோகத்தை விடவும் பெரிது. ஒரு நடைமுறை விடையால் அவனுடைய தத்தளிப்பு அடங்கிவிடாது. அது மேலும் வளர்கிறது.
அர்ஜூனனைப் போன்ற ஒரு உண்மையான சத்திரியன் சாங்கிய யோகத்தின் இறுதியாக வரும் புலன் ஒறுத்தலை நோக்கி இத்தகைய வினாவை எழுப்பவில்லை என்றால்தான் ஆச்சரியம். கீதையின் புனைவுத்தருணத்தின் கூர்மையையே இந்தத் துல்லியமான வினா காட்டுகிறது. புலன்கள் நாடும் அரச போகத்துக்காகவும், தன்முனைப்பு நாடும் வெற்றிக்காகவும்தானே அவன் போர்புரியவே வந்தான். அவை தேவை இல்லை என்றால் ஏன் போர் புரிய வேண்டும்?
கர்மயோகத்தைப் பற்றிப் பேசத் தொடங்குவதற்கான விவாத முகாந்திரம் துல்லியமாக உருவாக்கப்பட்டுவிட்டது. அதன்பின் மிக மெதுவாக, முதல் படியில் இருந்து வேதாந்தத்தின் பேராசிரியன் பேச ஆரம்பிக்கிறான்.
தேடலுடைய இருவர்.
கீதையின் ஞான விவாதத்தில் முதன் முறையாக மனிதர்களைப் பகுக்கும் குரல் இப்பகுதியில் ஆரம்பிக்கிறது. கீதை தொடர்ச்சியாக மனிதர்களைப் பல கோணங்களில் பகுத்து ஒவ்வொருவருக்கும் உரிய வழிகளைச் சுட்டிக்காட்டியபடி முன் செல்கிறது என்பதை வைத்துப் பார்த்தால் இந்த முதல் பிரிவினை மிகவும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.
மனிதர்களை மூன்றாவது பாடல் இரு பெரும் பிரிவாகப் பிரிக்கிறது. ‘சாங்கியபுத்தி உடையவர்கள்’, ‘யோகபுத்தி உடையவர்கள்’. ஏராளமான கீதை உரைகளில் பலவகையான பிழைபட்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ள பாடல் இது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். சென்ற சாங்கிய யோகம் பகுதியில் சொல்லப்பட்டவற்றுடன் சாங்கிய என்ற சொல்லை தொடர்பு படுத்திக் கொண்டு, அந்த சாங்கிய யோக ஞானம் அனைத்தையும் எய்தியவர்கள் என்ற பொருளில் பலரால் சாங்கிய புத்தி உடையவர்கள் என்ற சொல்லாட்சி விளக்கப்பட்டுள்ளது.
அதேபோல ‘யோகினாம்’ [ யோக புத்தி உடையவர்கள்] என்ற சொல்லாட்சியானது யோகிகளைக்குறிக்கிறது என்றும், இதுவரைச் சொல்லப்பட்ட யோகஞானம் அனைத்தையும் அடைந்தவர்கள் என பொருள் தருகிறது என்றும், பலரால் விளக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் பொருளுக்கு அச்சொற்கள் பொருந்தி வரவில்லை என்பதை எவரும் கவனிக்கலாம். ‘சாங்கிய யோக ஞானத்தை முற்றுணர்ந்தோருக்கு ஞானயோகத்தால் மீட்பு, யோகிகளுக்கு கர்மயோகத்தால் மீட்பு’ என்று எடுத்துக்கொண்டால் அது மிக அபத்தமாக அல்லவா இருக்கிறது.
இவ்வரிகள் வாசிக்கும்போது சாங்கிய, யோக என்ற இரு சொற்களையும் கீதையின் விவாதத்தால் பொருள் ஏற்றப்பட்ட கலைச் சொற்களாக எடுத்துக்கொள்ளலாகாது. அக்காலத்தில் சாதாரணமாக பயன்படுத்தப்பட்ட பொருளில் நேரடியாக எடுத்துக் கொண்டாலே போதுமானது. சாங்கிய புத்தி உடையவர் என்றால் நடைமுறை புத்தி உடையவர் என்று மட்டுமே பொருள். யோக புத்தி உடையவர் என்றால் அறிதல்களை தொகுத்து ஒன்றாகப் பார்க்கும் தன்மை உடையவர் என்று மட்டுமே பொருள்.
ஸங்கியா என்ற சொல்லில் உருவான சொல் சாங்கியம். எண்ணிக்கை சார்ந்த என்பது நேர்ப்பொருள். ‘கணக்கு வழக்கு சார்ந்த’, ‘நடைமுறை ரீதியான’ என்று விரிந்த பொருள். அதே போல யுஜ் என்ற மூலச் சொல்லில் இருந்து வந்தது யோகம் என்ற சொல். இணைத்தல், ஒன்றாக்குதல், இணையாக்குதல், கூட்டிப்பார்த்தல் போன்ற பொருள்கள் அதற்கு உண்டு. இங்கு ‘விஷயங்களைத் தொகுத்துப் பார்க்கும் தன்மை கொண்ட’ என்ற பொருளில் அச்சொல் உள்ளது.
கீதையில் ”யோக மார்க்கம்” என்று சொல்லப்படும்போது முரண்பட்ட விஷயங்களை ஒன்றாக்கிப் பார்க்கும் முரணியக்க அணுகுமுறையே குறிப்பிடப்படுகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதேபோது சாங்கிய யோகம். புத்தியோகம் என்று கூறப்படும் போது அதில் உள்ள யோகம் என்ற சொல் ஒட்டு மொத்தமாகப் பார்த்தல் மற்றும், ஒன்றாக்கிப் பார்த்தால் என்று பொருள்படுகிறது. சில இடங்களில் யோகம் என்றும் செயல்பாடு குறிப்பிடப்படுகிறது. யோகம் ஒரு செயல்பாடாகக் குறிக்கப்படும்போது ஒன்றுடன் இணைதலை, ஒன்றிவிடுதலை அது குறிப்பிடுகிறது. இந்தக் கடைசி அர்த்ததிலேயே இப்போது யோகம், யோகி என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று யோகமரபு விரிவாக பேசப்பட்டுவிட்டமையால் யோகம் என்றால் யோகசாதனை மட்டுமே சுட்டப்படுகிறது. யோகி என்றால் சாதனை மூலம் மீட்படைந்தவர் என்றும் உத்தேசிக்கபப்டுகிறது. ஆகவே இன்றைய வாசிப்புகள் இந்தப் பாடலில் உள்ள யோகினாம் என்ற சொல்லுக்கு யோகி என்று உடனடிப் பொருள் கொண்டுவிடுகின்றன. அது பலவிதமான கருத்துக் குழப்பத்திற்கு இடமளிக்கிறது.
‘சாங்கியனாம்’, ‘யோகினாம்’ என்ற இரு சொற்களின் வழியாக மானுட இயல்பை கிருஷ்ணன் இரு பிரிவாக்குவதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ‘நடைமுறைவாதிகள், ஒட்டுமொத்த நோக்குள்ளவர்கள்’ என்ற இரு சாரார்தான் அவர்கள். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் நாம் இத்தகைய பிரிவினைக்கு உள்ளடக்கியபடியேதான் இருக்கிறோம். ”ரொம்ப பிரக்டிக்கலான ஆளுப்பா அவரு” என்றும், ”எல்லாத்தையும் பார்த்துச் செய்றவரு அவரு” என்றும் நாம் சொல்லாத நாளே இல்லை. அந்த பொதுவான பெரும் பகுப்பையே இந்தப் பாடலும் சுட்டுகிறது.
இப்பாடலில் உள்ள குறிப்பு ஒன்று பெரிதும் சிந்திக்கச் செய்வதாகும். சாங்கிய புத்தி உடையவர்களுக்கு ஞானயோகத்தாலும் யோக புத்தி உடையவர்களுக்கு கர்மயோக த்தாலும் விடுதலை என்று இருவகை வழிகளை சொல்லியிருப்பதாக கிருஷ்ணன் கூறுகிறார். நடைமுறை ஞானம் உடையவர்களுக்கு ஞானயோகம் உபதேசிக்கப்படுகிறது. அவர்களின் இயல்பில் சாதாரணமாக இல்லாத ஒன்று அது. அதேபோல யோகபுத்தி உடையவர்களுக்கு செயல் உபதேசிக்கப்படுகிறது. அவர்களின் இயல்பினால் அவர்கள் தயங்கி நிற்கும் இடம் அது. அவர்களின் அடிப்படை இயல்பினால் அவர்கள் தவிர்த்துவிடும் மறுபக்கத்தையே இங்கு அவர்களின் மீட்புக்கான வழியாக கிருஷ்ணன் கூறுகிறார்.
இங்கே எழுந்துவரும் ஒரு முரணியக்கத்தையும் நாம் கவனிக்கலாம். அர்ஜூனன் சாங்கியபுத்தி கொண்ட க்ஷத்ரியன். ஆகவேதான் அவனுக்கு ஞானயோகம் உபதேசிக்கப்பட்டது. ஆனால் அவர் தன் சாங்கிய புத்தியின் எல்லையைக் கூர்ந்து ஞானயோகியின் தளத்தில் நின்று இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் உள்ள விடுதலை கேட்கிறான். அதாவது செயலூக்கத்துடன் இணைய வேண்டிய ஞானத்தைப் பற்றிய பேச்சை ஞான சஞ்சாரங்களில் பயணப்படுவதற்கான அழைப்பாக எடுத்துக் கொள்கிறான். ஆகவேதான் இங்கே கிருஷ்ணன் அவனுக்கு கர்மயோகத்தை முன்வைக்க ஆரம்பிக்கிறார். அடுத்த பாடல் முதல் கர்மயோகம் சார்ந்த விவாதம் ஆரம்பமாகிறது.
நித்ய சைதன்ய யதி தன்னுடைய கீதை உரையில் இந்தப் பாடலுக்கு மேலும் விரிவான ஒரு வரலாற்று விளக்கத்தை அளிக்கிறார். வேத மரபிலேயே பண்டைய வேத மரபு பிற்கால வேதமரபு என்று இரண்டு உள்ளது என்கிறார் நித்யா. ரிக்வேதம் பண்டைய வேத மரபுக்கான உதாரணம் என்றால் அதர்வண வேதம் பிற்கால வேதமரபுக்கான உதாரணம். பண்டைய வேதமரபு என்பது பெரிதும் நடைமுறை சார்ந்தது, சடங்கு சார்ந்தது. வேள்வி-வேள்விப் பயன் என்ற இருமையில் இயங்குவது அது. ஆகவே அது வேதத்தைச் சார்ந்த சாங்கியத் தளம் [நடைமுறைத்தளம்] ஆகும். சாங்கியம் என்பதற்குச் சடங்குகள் என்றும் பொருள் உண்டு.
பிற்காலத்தில் வேதமரபு பல்வேறு வகையான புறப்பாதிப்புகளை உள்வாங்க ஆரம்பித்தது. பல்வேறு பழங்குடி வழிபாட்டு முறைகள் வேத மரபுக்குள் புகுந்தன. அதர்வணவேதம் காட்டுவது அதையே. அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து கொள்ளும் போக்கு வேதமரபுக்குள் உருவாயிற்று. இங்கே யோகம் என்று குறிப்பிடப்படுவது இதுவே. இந்த யோகப்போக்குதான் வேத மரபுக்குள் ஆழமான தத்துவ விசாரணைகளை உருவாக்கியது. வேதங்களில் ஞான காண்டம் என்று கூறப்படும் தத்துவார்த்தமான பகுதிகள் இதன் விளைவாக உருவானவையே. சடங்கு சார்ந்த முந்தைய பகுதிகள் கர்மகாண்டம் என்று கூறப்பட்டன.
மகாபாரதத்துக்கு முந்தைய காலகட்டத்தில் வேதத்தில் உள்ள சாங்கியம், யோகம் என்ற பிரிவுகள் மிக முக்கியமான விவாதப் பொருளாக இருந்தன என்று நித்யசைதன்யயதி கூறுகிறார். பின்னர் வேதாந்த காலகட்டத்தில் இப்பிரிவினை கர்மம்-ஞானம் என்ற பிரிவினையாக ஆகியது. ஞானகாண்டமே வேதத்தின் உச்சம் என்றும் அது ‘வேதாந்தம்’ என்றும் கூறப்பட்டது. வேதாந்தம் பின்னர் உபநிடதங்களாக வளர்ச்சி கொண்டது. அக்காலகட்டத்தில் இருந்த முக்கியமான இரு சிந்தனைப்போக்குகளை கிருஷ்ணன் இங்கே இயல்பாகவே குறிப்பிட நேர்ந்தது என்பது நித்யாவின் வாதமாகும்.
அப்படிப் பார்த்தால் இந்தப் பாடலின் பொருள் மேலும் அற்புதமானதாக ஆகிறது. சாங்கியர்களுக்கு ஞானயோகத்தை உபதேசிக்கிறார் கிருஷ்ணன். அதாவது கர்மகாண்டத்தில் மூழ்கி சடங்கு மற்றும் ஆசாரங்களாக மட்டுமே வேதத்தைக் காண்பவர்களுக்கு அவர்களுடைய நேர் மறுபக்கமான ஞான காண்டத்தை வலியுறுத்துகிறார். அதேசமயம் யோகபுத்தியால் வேதத்தை தொகுத்துக் காண்பவர்களுக்கு, அதாவது ஞான காண்டத்தில் தத்துவ விவாதங்களுக்குள் மூழ்கி இருப்பவர்களுக்கு, கிருஷ்ணன் செயலை வேள்வியாகச் செய்வதை வலியுறுத்துகிறார்.
கர்மயோகத்தில் அடுத்த பாடலில் (பாடல் 4) இரு சொற்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். ‘புருஷன் செயல்களைத் தொடங்காததனால் செயலின்மை நிலையை அடைவதில்லை’ என்கிறார் கிருஷ்ணர் முதல் சொல் ‘அனாரம்பாத்’ [ஆரம்பமின்மை]. இரண்டாவது சொல் ‘நைஷ் கர்மயம்’ [செயலின்மை] இரண்டும் இரண்டு எல்லைகள். ஒரு பெரிய பாதையின் தொடக்கத்துக்கு முந்தைய நிலை அனாரம்பாத் என்றும் அப்பாதையின் இறுதி இலக்கு நைஷ்கர்மயம் என்றும் கூறப்படுகிறது. செயல்களைச் செய்யாமல் எவரும் இருக்க முடியாது. ஆகவே சொல்களைத் தொடங்காத ஒரு நிலையை நாம் ஊகிக்கலாம். நைஷ்கர்ம்யம் என்பது செயலாற்றா நிலை அல்ல. செயல்களை ஒருவனிடமிருந்து அவையே உதிர்ந்துவிடும் இறுதி நிலை மட்டுமே.
கர்மயோகத்தின் ஐந்தாவது பாடலில் ஒரு சமயம் கூட எவரும் செயலற்று இருப்பதில்லை என்கிறார் கிருஷ்ணன். இயற்கையின் குணங்களால் மனிதர்கள் கட்டுப்பட்டிருக்கிறார்கள். இயற்கையில் உள்ள சத்வகுணம், தமோகுணம், ரஜோகுணம் ஆகிய மூன்றில் உயிர்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இக்கருத்து ஆறுதரிசனங்களில் ஒன்றாகிய சாங்கிய தரிசனத்தின் தத்துவ சாரமாக உள்ளது. இயற்கையும் இயற்கையை அறிபவனாகிய புருஷனும் சத்வ, ரஜோ, தமோ குணங்களால் கட்டுப்பட்டவர்கள் என்கிறது சாங்கியம். (சில உரைகளில் முக்குணம் என்பது காமம், குரோதம், மோகம் என்று கூறப்பட்டுள்ளது. அது இந்தப் பாடலுக்குச் சரியாகப் பொருந்தாது)
சாங்கியத்தைப் பொறுத்தவரை சிருஷ்டி தொடங்குவதே மூன்று குணங்களின் சமநிலை குலைவதன் மூலம்தான். ஆகவே பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அவனுக்குள் மூன்று குணங்கள் தங்கள் சமநிலையை இழந்து மீண்டும் சமநிலையை அடைவதற்காக நிகழ்த்தும் ஓயாத போராட்டத்துடன்தான் பிறக்கிறான். இன்றும் விரிவான பார்வையில் இயற்கையின் முக்குணச் சமநிலைப் போராட்டத்தின் ஒரு துளிதான் ஒவ்வொரு மனிதனும் .ஒரு பெரும் இயந்திரத்தின் உறுப்புதான் மட்டும் தன் செயலை தீர்மானிக்க முடியாது. இயந்திரம் இயங்கும்போது அதுவும் இயங்கித்தான் ஆகவேண்டும். ஆகவே பூமியில் உள்ள ஒவ்வொரு உயிர்துளியும் ஒவ்வொரு அணுவும் மாபெரும் செயல்திட்டத்தின் பகுதியாக இயங்கக் கடமைப்பட்டுள்ளது.
இன்னும் விரிவாகப் பார்த்தால் இப்பிரபஞ்சம் தன் அடிப்படைக் கட்டமைப்புக்குள் மூன்று குணங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. பிரபஞ்சத்தை சாங்கிய தரிசனம் ஆதி இயற்கை என்கிறது. அந்த ஆதி இயற்கை அல்லது மூலப்பிரகிருதியில் மூன்று குணங்களும் அதன் இயல்பாகவே உள்ளன. ஆகவே அதன் துளியாக உள்ள ஒவ்வொரு உயிர்த்துளியினும் ஒவ்வொரு பருப்பொருள் துளியிலும் மூன்று குணங்களும் உள்ளுறைந்துள்ளன. அதாவது செயலுக்கான சாத்தியக்கூறு உள்ளே உறையாத பிரபஞ்சத்துளியே இல்லை.
இந்தக் கோணத்தில் அனாரம்பம் என்ற சொல்லுக்கு உருவாகும் அழுத்தத்தை நாம் கவனிக்க வேண்டும். ‘தொடக்கத்திற்கு முந்தைய நிலை’ என்ற இந்தக் கருத்து சாங்கியத்தில் இருந்து பெறப்பட்டது. ஆதி இயற்கை என்னும் மூலப்பிரகிருதி முக்குணங்களின் சமநிலையில் இருந்தபோது செயல் தொடங்குவதற்கு முந்தைய நிலையில் இருந்தது. அப்போது மூலப்பிரகிருதியின் அழியா சாட்சியான புருஷனும் செயல் தொடங்குவதற்கு முந்தைய நிலையில் இருந்தான். அப்படியானால் அவர்கள் ‘செயலற்ற’ நிலையில் இருந்தார்களா என்ன? இல்லை என்கிறார் கிருஷ்ணன். நைஷ்கர்மயம் அப்போது இல்லை. ஏனென்றால் முக்குணங்களும் அந்த மூலப்பிரகிருதியில் இருக்கின்றன. செயல் அதில் ஒளிந்திருக்கிறது. அதாவது ‘செயலுக்கான சாத்தியம்’ அதில் உள்ளது. ஆகவே அது ஒருபோதும் ‘செயலின்மை’ நிலையில் இல்லை.
செயல் என்பதை செயலுக்கான சாத்தியக்கூறு என்பதையும் சேர்த்தே இங்கே கிருஷ்ணன் பார்க்கிறார். கிறித்தவ மரபில் உள்ள சோஃபிஸ்டுகளிடம் இதற்குச் சமானமான ஒரு கருத்து உள்ளது. பாவம் என்பது பாவத்திற்கான சாத்தியங்களையும் உள்ளடக்கியதே என்பார்கள் அவர்கள். ஒருவன் ஒரு கணம் கூட செயலாற்றாமல் இருக்க முடியாதென்பதற்குக் காரணம் அவனில் உள்ள முக்குணங்களே என்பதை வலியுறுத்தும் கிருஷ்ணன் ஆறு, ஏழாம் பாடல்களில் மீண்டும் அதே கருத்தை விளக்குகிறார்.
பொதுவாக நம்மை செயலில் ஈடுபடுத்துபவை புலன்கள். இவை கர்ம இந்திரியங்கள், ஞான இந்திரியங்கள் என்று இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்தும் செயல்படும் கர்ம இந்திரியங்கள். இவை செயற்புலன்கள். மனமும் புத்தியும் ஞான இந்திரியங்கள் அல்லது அறிவுப்புலன்கள் . ஒருவன் தன்னுடைய செயற்புலன்களை முழுமையாகவே கட்டுப்படுத்திவிட்டான் என்றால் அவர் செயலற்றவனாகிவிடுவானா? அவன் தன் மனத்தால் அதே செயல்களைச் செய்து கொண்டுதானே இருப்பான்? செயலுக்கான சாத்தியம் அவனில் தீவிரமாகத்தானே இருக்கிறது? அதுவும் ஒருவன் செயல்தானே? செயலைப்போலவே அதுவும் விளைவுகளை உருவாக்கக் கூடியதுதானே?
அப்படிச் செய்பவனை ‘மித்யாசரன்’ என்று அழைக்கப்படுவான் என்கிறது கீதை. ‘பொய்யில் உழல்பவன்’ என்பது அச்சொல்லுக்குப் பொருள். தனக்குத்தானே பொய் சொல்லிக் கொள்பவன் அவன். தன்புலன்களைக் கட்டுப்படுத்திவிட்டேன் என்றும் தன் செயல்கள் ஒருங்கிவிட்டன என்றும் அவன் எண்ணிக் கொண்டிருக்கிறான். விசையை வைத்துப் பார்த்தால் கார் ஓடிக்கொண்டிருக்கிறதைப் போலவே உட்கார்ந்த இடத்திலேயே இருக்கும் கடிகாரமும் ஓடிக்கொண்டுதானே இருக்கிறது?
இந்த இடத்தில் ஃப்ராய்டியக் கருத்துக்கள் நம் நினைவுக்கு வரலாம். புலன்கள் ஒடுக்கப்படும்போது தடுக்கப்படும் இச்சைகள் மனத்துக்கும் பின் ஆழ்மனத்துக்கும் செல்கின்றன என்பது ஃப்ராய்டியக் கருதுகோள். அவ்வாறு ஆழ்மனத்தில் சென்றுபடியும் இச்சைகள் அங்கே பலவிதமான உளச்சிக்கல்(காம்பெளக்ஸ்) ஆக வடிவம் பெறுகின்றன. அவை மனித நடத்தைகளையும் உறவுகளையும் தீர்மானிக்கின்றன என்கிறார் ஃப்ராய்ட். இன்ப விழைவுக் கோட்பாடு (பிளஷர் பிரின்சிப்பிள்) என்று ஃபிராய்டியத்தால் விரிவாகப் பேசப்படும் உளவியல் கருத்தாக்கத்தை இந்த இடத்தில் நாம் இந்தப் பாடலுடன் இணைத்து விரிவாக யோசிக்கலாம்.
விழைவுகளை வெல்வதற்கான நடைமுறை விதி ஒன்றை தொடர்ந்து கீதை முன்வைக்கிறது. இப்பாடலில் ‘இந்திரியாணி ‘ என்று கீதை கூறுவது ‘அறிவுப்புலன்களை’ மட்டுமே என்று பொருள் கூறப்படுகிறது. காரணம் அடுத்ததாக ‘கர்மந்திரியே’ என்ற சொல்லாட்சி மூலம் செயற்புலன்கள் சுட்டப்படுகின்றன. அறிவுப் புலன்களை மனதால் வென்று செயற்புலன்களை செயலெனும் யோகத்தைச் செய்ய வைப்பவன் சிறப்படைகிறான் என்கிறது கீதை.
அறிவுப்புலன்களாகிய மனம், புத்தி இரண்டையும் மனதால் கட்டுப்படுத்த வேண்டும் என்று கீதை கூறுவது பெரிய விவாதங்களை உருவாக்கிய ஒரு கூற்றாகும். தியானம் சார்ந்த ஆய்வுகளில் விரிவாகப் பேசப்படும் பாடல் இது. மனம் என்பது நம் புலன்களில் ஒன்று. அதுவும் அறியும் செயலைச் செய்தபடியே இருக்கிறது – கண், காது, மூக்கு, தோல், நாவு போல. ஆகவே அதற்கும் விழைவுகள் உள்ளன. அப்படி இருக்க அது எப்படி தன்னையும் இன்னொரு அறிவுப்புலன் ஆக இருக்கும் புத்தியையும் கட்டுப்படுத்தும்?
மனத்தின் இயல்பை வைத்தே இதை விளக்கமுடியும். இங்கு கிருஷ்ணன் கூறும் சொல் மனத்தடை ‘அடக்குவது’ மனதை ‘வெல்வது’ ஏதும் அல்ல. மனதை கட்டுப்படுத்துவதுதான் ‘நியம்ய’ என்ற சொல் ‘வரையறைக்குள்ளாக்குவது’, ‘எல்லைக்குட்பட்டதாக ஆக்குவது’, ‘ஒழுங்குபடுத்துவது’ என்றெல்லாம்தான் பொருள்படுகிறது. நியமம் என்றால் சட்டம் அல்லது விதி.
மனம் ஒரு புலன் என்றால் அந்தப் புலனை அறிவது எது? அதுவும் மனம்தானே? மனதின் இருபாற்பட்ட இயல்பை இது காட்டுகிறது. மனம் செயல்படும் போது எப்போதும் இந்த இரட்டை நிலையை நாம் அவதானிக்கலாம். ஒருமனம் புறவுலகை அவதானிக்கிறது. இன்னொரு மனம் அந்த அவதானிப்புகளை உள்வாங்கித் தொகுத்தபடியே கூடவே ஓடுகிறது. மனமாக நிகழும் ஒன்று, அதைக் கண்காணிக்கும் இன்னொன்று என்றே நாம் மனதை அறிகிறோம். ‘ஒரு மரத்தில் இரு கிளிகள் ஒரு கிளி பழம் உண்கிறது. இன்னொரு கிளி அதை வேடிக்கை பார்க்கிறது’ என்று உபநிடத உவமை இதையே குறிப்பிடுகிறது.
அதாவது மனதை மனதாலேயே கட்டுப்படுத்த முடியும். கண்காணிக்கும் மனம் செயல்படும் மனதைக் கட்டுப்படுத்துகிறது. கண்காணித்தல் என்பதேகூட ஒருவகை கட்டுப்படுத்தல்தான். இவ்வாறு மனம் கட்டுப்படுத்தப்படும்போது செயல் என்பது யோகமாக ஆகிவிடுகிறது. புறச் செயல்களில் மனம் இச்சையுடன் ஈடுபடாத நிலையே செயலை கர்மயோகமாக ஆக்குகிறது என்பதே கிருஷ்ணன் சாங்கியயோகத்தின் இறுதியில் கூறிய வழி. அதுவே இங்கும் மீண்டும் கூறப்படுகிறது. அதாவது சென்ற அத்தியாயத்தில் பேசி நிறுத்திய இடத்திலிருந்து கீதை மேலே பேச ஆரம்பிக்கிறது.
சொற்பொருள் கொள்ளும் சிக்கல், சங்கர ராமானுஜ விவாதம்
வேதாந்தத்தின் பிற்காலத்தைய குருநாதர்களின் உரைகளில் இந்தப் பிரிவினையைப் பற்றி விரிவான விவாதங்கள் நடந்திருப்பதைக் காணலாம். இவ்விவாதங்கள் இரண்டு வகையான பொருள்கோடலின் விளைவாக நிகழ்ந்துள்ளன. ஒன்று யோகபுத்தி கொண்டவர், சாங்கியபுத்தி கொண்டவர் என்ற பிரிவினையை துறவி, லெளகீக வாழ்வில் இருப்பவர் என்று பொருள் கொள்கிறார்கள். துறவிக்கு ஞானத்தையும் லெளகீகர்களுக்கு செயலையும் கிருஷ்ணன் பரிந்துரைக்கிறாரா என்ற வினா எழுப்பப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. சில குருகுல முறைகளில் அப்படித்தான் இன்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
சங்கரர் தன்னுடைய கீதை உரையில் இந்த வகையான பொருள் கோடலை கடுமையாக நிராகரிக்கிறார். அதாவது துறந்தவர்களுக்கு மட்டுமே ஞானவழி அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் பிறருக்கு செயல்களின் வழி மட்டுமே கூறப்பட்டுள்ளது என்றும் பொருள்கொள்ள இந்து ஞானமரபின் நூல்களில் ஆதாரம் இல்லை என்று அவர் வாதிடுகிறார். மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே ஞானம் தேவை என்றும், ஞானத்தேடல் இன்றி விடுதலை சாத்தியமல்ல என்றும்தான் மூலநூல்கள் கூறுகின்றன என்றும் வாதிடும் சங்கரர் பிரகதாரண்யக உபநிடதம் மகாநாராயண உபநிடதம் முதலிய பல நூல்களையும் மகாபாரதத்தையும் மேற்கோள் காட்டி ஞானம் தேடுதல் என்பது அனைவருக்கும் உயர்ந்த கடமையாகவே விதிக்கப்பட்டுள்ளது என்கிறார்.
இன்னொரு திரிபு என்னவென்றால் இங்கே கர்மங்கள் என்று கிருஷ்ணன் கூறுவதை வேதகர்மங்கள், அதாவது வேள்வி முதலியவை, என்று பொருள் கொள்வதாகும். அதன் அடுத்தபடியாக சிலர் கர்மங்கள் என்றால் அனுஷ்டானங்கள், சடங்குகள் என்று பொருள் கொள்கிறார்கள் கீதையின் இந்த எளிமையான அழகிய சொற்களில் அப்படி பொருள் கொள்வதற்கான எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்பதே உண்மை. இந்த வகையான பொருள்கோடல்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த ஒரு சமூகச்சூழலில் அன்றைய மன நிலைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் ஏற்ப எழுந்தவை என்றுமட்டுமே கூறமுடியும். இங்கே கர்மங்கள் என்று கூறப்படுபவை அனைத்துவகையான உலகியல் செயல்பாடுகளையும்தான் குறிக்கின்றன.
வேதாந்த மூவரின் உரைகளைக் கவனிக்கும் போது சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கர்மமா ஞானமா என்ற விவாதம் எழுந்து வருவதைக் காணலாம். கர்ம யோகத்தில் மூன்றாம் பாடல் அந்த விவாதத்திற்கு மேலும் இடம் கொடுக்கும் ஒன்று என்பதனால் அதையொட்டிய விவாதம் இயல்பானதே. சங்கரர் இந்த பாடல் ஞானத்தின் மேன்மையைக் குறிப்பிட கிருஷ்ணரால் கூறப்படுகிறது என்கிறார். ஞானம் என்பது ஆத்ம ஞானம் மட்டுமே என்றும், அதைப் பிரித்தறியும் சக்தி உடையவனையே சாங்கியபுத்தி உடையவன் என்று கிருஷ்ணன் கூறுகிறார் என்றும் சங்கரர் வாதிடுகிறார். இப்படிப்பட்ட சாங்கிய புத்தி உடையவர்கள் பிரம்ம சாரிகளாக இருந்து துறவு பூண்டு ஞானத்திற்காகவே தங்களை அர்ப்பித்துக் கொண்டவர்கள் என்று கூறும் சங்கரர் கர்மத்தை கிருஷ்ணன் கர்ம யோகமாக அதை நிகழ்த்தக் கூடியவர்களுக்காக மட்டுமே கூறுகிறார் என்கிறார்.
ராமானுஜாரின் உரையில் அவர் எளிய மக்களுக்கு கர்மம் மட்டுமே சாத்தியம் என்றுதான் கிருஷ்ணன் இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார் என்கிறார். புத்திக்கூர்மை உடையவர்களை சாங்கிய ஞானம் உடையவர்கள் என்று குறிப்பிடும் கிருஷ்ணன் அவர்கள் விதிவிலக்குகள் என்று கூறிவிட்டு அனைவருக்குமாகக் கூறுவது கர்மத்தையே என்கிறார் ராமானுஜர். ராமானுஜரின் உரையில் நாம் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் அவர் கர்மத்தையும் பக்தியையும் கிட்டத்தட்ட ஒன்றாகவே கருதுகிறார் என்பதுதான். அதாவது ஞானம் x கர்மம் என்பதை ராமானுஜர் ஞானம் X பக்தி என்று மாற்றிக்கொள்கிறார். இதற்குக் காரணம் ராமானுஜரின் ஞானமரபின்படி கைங்கரியம் அதாவது சேவை இல்லாமல் பக்தி இல்லை என்பதே.
முன்னோடிகளின் பொருள் கொள்ளும் முறையை நாம் தாண்டிச் செல்லலாமா? அது அகங்காரமோ அதிகப்பிரசங்கித்தனமோ ஆகுமா என்ற கேள்வி இங்கே எழுகிறது. ஏதேனும் ஒரு குருபரம்பரையை உறுதியாக ஏற்று அதன் வழியாக ஒழுகுபவர்களுக்கு அது அத்துமீறலாக இருக்கலாம். ஆனால் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நின்று வாசிக்கும் வாசகன் அந்த மீறலை நிகழ்த்தியே ஆகவேண்டும். இல்லையேல் அது கண்மூடித்தனமான மூலநூல் வழிபாடாக மாறி சிறுத்துவிடும். ஞானத்திற்குப் பதில் அஞ்ஞானத்திற்கும், விடுதலைக்குப் பதில் சிறைப்படலுக்கும் இட்டுச் செல்லும்.
ஞானகுருக்கள் சங்கரராக இருந்தாலும் ராமானுஜராக இருந்தாலும் நாராயண குருவாக இருந்தாலும் வழிகாட்டிகள் மட்டுமே. உண்மையான குரு என்பவர் ஒருவனின் ஆத்மாவே. அதை நம்பித்தான் தன் ஞானத் தேடலில் ஒருவன் முன்னகரவேண்டும். ஏனென்றால் உண்மையான ஞானம் என்பது மெய்மையாக தன்னை மாற்றிக் கொள்வதுதான். அப்படி மாற்றிக் கொண்ட பிறகு ஞானம் ஏறிவிட்டவனின் ஏணி போன்றது. பிறர் ஏறிய ஏணிகள் நமக்கு உதவலாம். கடைசி ஏணி நாமே நமக்கு என உருவகித்துக் கொள்வதாகும்.
கீதை போன்ற பல்லாயிரம் வருடத்து வரலாறு உள்ள நூல்கள் ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்திலும் அக்காலகட்டத்து சமூகச்சூழல்கள் , மனநிலைகள் ஆகியவற்றை ஒட்டியே வாசிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் நினைவுகூரவேண்டும். கீதை ஏதோ ஒரு காலகட்டத்தில் மானுட ஞானம் அடைந்த ஒரு மெய்த்தரிசனத்தின் மொழிவடிவம். அது மொழியில் கூறப்பட்டபோதே அதன் சாராம்சமான ஒரு பகுதி விடுபட்டிருக்கும். மொழியினூடாக நம் நுண்ணுணர்வை கொண்டு ஏறித்தான் அதை நாம் அடைய முடியும்.
மொழியினூடாக அது வாசிக்கபப்டுகையில் வேறு வேறு சூழல்களில் அது அக்காலகட்டத்திற்கும் அந்தத் தனிமனித மனங்களுக்கும் உரிய நுட்பமான திரிபுகளுடன்தான் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். இது எந்த ஒரு நூலுக்கும் பொருந்தக் கூடிய விஷயம்-விதிவிலக்கே கிடையாது. தங்கம் அது அகழ்ந்தெடுக்கப்பட்ட மண்ணுடன்தான் நமக்குக் கிடைக்கும். இது எந்த ஞானத்திற்கும் பொருந்தும் ராமானுஜர் சங்கரர் மட்டுமல்ல கிருஷ்ணனுக்கே கூட பொருந்தும் விதி இது. தூய்மையான ஞானம் என்பது இந்த நூல்கள் நம் அகத்தில் உருவாக்கும் ஒளி மட்டுமே.
இங்கே புரிதலில் வரும் இடறல்கள் இருவகை. முதல்வகை இடறல் என்பது அந்த வரலாற்றுச்சூழலின் சாயல் சிந்தனையில் ஊடுருவுவது என்று கூறலாம். உதாரணமாக இந்த மூன்றாவது பாடலுக்கு சங்கரர் அளிக்கும் விளக்கத்தில் ”இந்த உலகில் படைப்பின் போது என்னால் இரண்டு நிஷ்டைகள் உருவாக்கப்பட்டன. இவை சாஸ்திரங்களில் அதிகாரம் உள்ள மூன்று வர்ணத்தவர்களுக்குப் பொருந்தும்” என்று கிருஷ்ணன் கூறுவதாகக் கூறுகிறார் .
கீதையின் இந்த வரிகளில் அந்த வர்ணப்பகுப்பு எங்கே வருகிறது? அல்லது கீதையின் பிற வரிகளில் மூன்று வர்ணத்தவர் மட்டுமே ஞானத்தைப் பெறத் தகுதியானவர் என்று எங்கே திட்டவட்டமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது? இது சங்கரர் காலகட்டத்தில் மிக இயல்பான ஒரு சமூக உண்மையாக இருந்திருக்கிறது. அதைத்தாண்டி யோசிக்க அவரால் முடிந்திருக்கவில்லை. மாபெரும் ததுவ ஞானிகள்கூட சமகால அறநோக்குகளை தான்ட முடியாமல் போவதை காணலாம். பிளேட்டோ அடிமை முறையை நியாயபப்டுத்தினார் என்பது போன்றதே இதுவும். சங்கரரின் கண்ணைத் திறக்க சிவபெருமான் சண்டாளனாக வந்தான் என்று ஒரு பிற்காலத்தைய கதையே உண்டு.
கர்மங்கள் என்றதுமே வேள்விக் கருமங்கள் மற்றும் அனுஷ்டானங்கள் என்று எடுத்துக் கொள்வதையும் அந்தக் காலகட்டத்தின் சிந்தனை என்றுதான் கொள்ள வேண்டும். நாம் இன்று யோகசித்துக் கொண்டிருப்பதிலும் நம்முடைய காலகட்டத்திற்குரிய சிந்தனை வரையறைகள் இருக்கலாம். கர்மங்களை, வேள்விகர்மங்கள் என்று எடுத்துக் கொண்ட காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அதை பக்தி என்றும் கைங்கர்யம் என்றும் கூறிய ராமானுஜரின் சிந்தனை என்பது ஒரு மாபெரும் முன் பாய்ச்சல். ஆனால் அதுகூட எல்லைக்கு உட்பட்டதே. அனைத்து உலகியல் செயலையும் ஒட்டு மொத்தமாக கர்மம் என்று எடுத்துக் கொள்ளும் போதே கீதையின் பொருள் முழுமையாக நம்மை வந்து சேர்கிறது.
இரண்டாவது இடர் என்பது கீதையை ஒரு தத்துவ நூலாக எடுத்துக்கொண்டு அதன் சொற்களையும் கூறுமுறையையும் அது உருவான காலகட்டத்தை கணக்கில் கொண்டு ஆராயமல் அதை ஒரு முழுமுதல் மூலநூலாக எடுத்துக் கொண்டு அதன் சொற்களை எப்போதைக்கும் உரிய மாறாத பொருள் தருபவையாக எண்ணி தங்கள் காலகட்டத்திற்குரிய பொருளை அதற்கு அளிப்பதே. சங்கரர், ராமானுஜர், மத்வர் அனைவருமே இதைச் செய்திருக்கிறார்கள் என்று நடராஜகுரு சுட்டிக்காட்டுகிறார்.
அக்காலகட்டத்தின் சிந்தனையில் உள்ள எல்லைகளே இதற்குக் காரணம். ஒரு சிந்தனைப் போக்கு என்பது ஒரு குரு குல முறைமையாக, ஓர் அமைப்பாக, நிறுவப்பட்டு இறுகிவிடுகிறது. அதன்பிறகு அந்த முறைமைக்கு உள்ளேயே நூல்கள் ஆராய்ப்படுகின்றன. பிறமுறைமைகள் திறந்த மனத்துடன் ஆராயப்படுவதே இல்லை. அவை மாற்றுத்தரப்புகளாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு தரப்புக்கும் சொற்பொருள் என்று இருக்கும். அந்தப் பொருளே மூலநூல்களில் உள்ள சொற்களுக்கு எப்போதும் அளிக்கப்படும். அத்துடன் வரலாற்று ஆய்வும் அன்று இல்லை. அதாவது ஒரு சொல் வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் ஒருவிதமாகப் பயன்படுத்தப்பட்டு பிற்பாடு வேறுவகையாக மாறியிருக்கலாம் என்று அக்காலப் பேரறிஞர்கள் கூட ஊகித்திருக்கவில்லை. வரலாற்று நோக்குடன் சொற்பொருளை ஆராய்வது என்பது உண்மையில் ஒரு நவீனகால வழிமுறையாகும்.
உதாரணமாக சாங்கிய என்ற சொல்லுக்கு இந்த வரிகளில் சங்கரர் கொள்ளும் பொருளையே கூறலாம். பிரம்ம ஞானத்தை அறியும் தன்மை கொண்ட என்ற பொருளில்தான் அச்சொல்லை சங்கரர் எடுத்துக் கொள்கிறார். கீதையின் இந்த வரியில் அப்படி பொருள் கொள்வதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. அதேபோல யோகம் என்ற சொல்லுக்கு யோகம் புரிதல் என்ற பொருளில்தான் சங்கரரும் ராமானுஜரும் பொருள் கொள்கிறார்கள். இக்குறிப்பிட்ட வரிகளுக்கு அந்தப் பொருள் பொருந்தாது. இங்கே புத்தியின் இரு இயல்புகள் மட்டுமே பேசப்படுகின்றன. அந்தப் பொருளில் எடுத்துக் கொண்டால் சாங்கியத்தன்மை யோகத்தன்மை என்று மட்டுமே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்நூலில் முன்னரே குறிப்பிட்டதுபோல கீதையின் பெரும்பகுதி உபநிடத காலத்திற்கு மிகவும் முந்தையது. அதன் இன்றைய வடிவமும் தொகுப்புத்தன்மையும்தான் காலத்தால் பிந்தையது. இதனால் அதன் சொற்கள் பல அர்த்தங்களில் பயின்று வருகின்றன. ஒரே சொல் பல அர்த்தங்களை அளக்கும். குறிப்பாக சாங்கியம், யோகம் போன்ற சொற்கள். சாங்கியம் என்பது நடைமுறை சார்ந்த, தனித்தன்மை கொண்ட, தர்க்கப்பூர்வமான, அறிவார்ந்த என்ற பொருளில்தான் கீதை உருவான காலகட்டத்தில் இருந்துள்ளது. சாங்கியயோகம் என்று அந்தப் பொருளிலேயே கீதை பேசுகிறது. அதேசமயம் வேறு சில இடங்களில் அது சாங்கிய தரிசனம் என்ற தனித்தன்மை கொண்ட தரிசனத்தை குறிப்பிடவும் அதே சொல்லைப் பயன்படுத்துகிறது.
அதேபோல யோகம் என்ற சொல் இணைதல், ஒருங்கமைதல், முரண்படும் கூறுகளின் உரையாடல், முரணியக்கம் என்ற பொருளில்தான் பொதுவாக கீதையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை முன்னரே கண்டோம். கணிசமான கீதை உரைகளில் உள்ள மாபெரும் பிழை என்பது யோகம் என்ற சொல்லைப் பார்த்ததுமே அதை யோக சாதனையுடன் இணைத்துக் கொண்டு பொருள் கொள்வதே.
ராமானுஜரின் காலகட்டத்தில் வரலாற்று நோக்கு இல்லாத காரணத்தால் அவரது குரு மரபு அளித்த பொருளே கொள்ளப்பட்டது. இன்று அத்தனை மூலநூல்களும் விரிவாக காலநிர்ணயம் செய்யப்பட்டு தொகுத்துப் பொருள் கொள்ளப்பட்டிருக்கின்றன. அதாவது சென்ற நூற்றாண்டில் இந்து மெய்ஞான மரபின் பேரறிஞர் ஒருவருக்குக்கூட சாத்தியமில்லாத ஒட்டுமொத்த வாசிப்பு இன்று ஒரு தொடக்கநிலை வாசகனுக்குச் சாத்தியமாகியுள்ளது. நாளை கணிப்பொறியுகத்தில் அந்த அத்தனை பொருள்களும் வாசகன் கையருகே வந்துகாத்து நிற்கக்கூடும். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தியாக வேண்டும். முன்னோர் மகாஞானிகள், அவர்களே சொல்லிவிட்ட பிறகு மேலே யோசிக்க நாம் யார் என்பது போன்ற போலித்தன்னடக்கம் உண்மையில் மூளைச் சோம்பலின் மறுவடிவமேயாகும்.
இந்தச் செய்யுளில் யோகம் என்பது இணைத்துப் பார்த்தல், ஒருங்கிணைப்புள்ள நோக்கு என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவு. பாகுபடுத்திச் சிந்திக்கும் இயல்புடையவர்களுக்கு ஞானமார்க்கமும், ஒருங்கிணைத்து பேதங்கள் அகற்றி அணுகும் இயல்புடையவர்களுக்கு கர்ம மார்க்கமும் என்றால் கூறப்பட்டுள்ளன என்பது எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதே. அவர்கள் இல்லறத்தாரா துறவிகளா, அவர்கள் எந்த வர்ணம் என்பதெல்லாம் இங்கே பேசப்படவில்லை. இந்த பிரிவினை மனிதர்களில் மிக இயல்பாக உள்ள ஒன்று என்று கொஞ்சம் யோசிக்கும் எவருக்கும் புரியும்.
ஒரு சிலர் எதையும் உள்ளே பகுத்து ஆராய்ந்தபடியே இருப்பார்கள். எதையும் ஐயப்படுவார்கள், தர்க்கப்பூர்வமாக அனைத்தையும் அடுக்கிக் கொள்ள முயல்வார்கள். எவற்றுக்கும் நடைமுறை சாத்தியங்களை தேடுவார்கள். அவர்கள் ஞானமார்க்கத்தையே நாட வேண்டும். ஏனென்றால் அது அவர்களின் இயல்பு. அவர்கள் அப்படி படைக்கப்பட்டிருக்கிறார்கள் படைப்பின் தொடக்கத்திலேயே அது உருவாகிவிட்டது என்று கீதை கூறுவதை நாம் கவனித்தாக வேண்டும்.
இவர்களுக்கு மறாக முரண்படும் கூறுகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும் மனம் உடையவர்களுக்கு செயல்தளம் பரிந்துரைக்கப்படுகிறது. இவர்கள் பகுத்துப் பார்ப்பவர்கள் அல்ல, தொகுத்துப் பார்ப்பவர்கள். தர்க்கததை விட அனைத்தையும் அணைத்துப் போகும் நோக்கே இவர்களில் ஓங்கியிருக்கிறது. சேவையும், செயலூக்கம் கொண்ட நடவடிக்கைகளும் இவர்களுக்குரியவை .
ஓர் உதாரணத்திற்காக விவேகானந்தரையும் காந்தியையும் இவ்விரு இயல்புகளின் மாதிரிகளாக கொள்ளலாம். விவேகானந்தரிடம் நாம் காண்பது சாங்கிய புத்தியை. அனைத்தையும் அவர் பகுத்தாய்கிறார், விளக்குகிறார். பிறருக்கும், தனக்கும். ஆனால் காந்தி அனைத்தையும் நான் கொண்டிருக்கும் உறுதியான அடித்தள நம்பிக்கையை நோக்கி தொகுப்பதற்கே முயல்கிறார். மீண்டும் மீண்டும் முரண்பாடுகளை சமன் செய்து தன்னை நோக்கி கொண்டு வருகிறார் காந்தி. காந்தியின் மனம் யோக புத்தி உடையது. விவேகானந்தர் ஞானயோகி . காந்தி கர்மயோகி.
கீதையின் கர்மயோகப் பகுதியானது ஞானயோகத்திற்குப் பதிலாக கர்மத்தை முன்வைப்பதல்ல, அல்லது கர்ம யோகத்தை ‘கொஞ்சம் குறைந்த’ மனிதர்களுக்காக பரிந்துரைப்பதுமல்ல. கீதை ஒரு தொடர்விவாதம் என்பதை இந்நூலின் ஆரம்பத்திலேயே கூறியிருக்கிறேன். அதன் விவாதம் என்பது ஒரு முரணியக்கம். அதன் ஒவ்வொரு பகுதியும் ஒரு யோகம் என்று கூறப்பட்டிருப்பது அந்த முரணியக்கத்தைச் சுட்டவே.
அதாவது சாங்கிய யோகத்திற்கு நடைமுறை வழிக்கு நேர்மாறானது கர்மயோகம். இதிலிருந்து முரண்பட்டதே அடுத்த யோகம். இவ்வாறுதான் கீதை வளர்ந்து செல்கிறது. இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணன் கர்மத்தின் இன்றியமையாமை, அதன் விடுதலையளிக்கும் தன்மை ஆகியவற்றைப் பற்றி கூறுவதெல்லாமே அந்த ஒட்டு மொத்த விவாதத்தின் பகுதியாகத்தான். தனியாக, துண்டுபடுத்திப் பார்த்து அறிவதற்காக அல்ல.
[மேலும்]