அன்புள்ள ஜெயமோகன்
மரகதம் திரைபப்டத்தை நான் இருமுறை பார்த்திருக்கிறேன். கருங்குயில் குன்றத்து கொலை என்ற நாவலை தழுவியது அது என்று இப்போதுதான் புரிகிறது. நீங்கள் சொல்வது உண்மைதான். ஒரு மேதையின் மை பட்ட திரைக்கதை அதனுடையது. இதை நான் பலரிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எந்தவித பிசிறும் இல்லாமல் சரளமாகச்செல்லும் திரைக்கதை ஒரு இடத்தில் கூட தொய்வு கொள்ளாது. வீணை எஸ் பாலசந்தர்தான் அதற்கு திரைக்கதை எழுதியவர் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா என்ன? ஆனால் அவராக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று நானும் நினைக்கிறேன்
சண்முகம்
சென்னை
**
நீண்ட நாட்களுக்குப் பின்னர் கருங்குயில் குன்றத்துக்கொலை பற்றிய ஒரு குறிப்பை பார்த்து அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். நான் சிறுவனாக இருந்த நாட்களில் மிக விரும்பிப் படித்த நாவல் அது. நூலகங்களில் அந்த நாவலை சொல்லிவைத்து வாங்கிப்போய் படிப்போம். நீங்கள் சொல்வதுபோல துண்சிச்சலான ஒரு இளம்பெண்ணை வாசக கற்பனையில் பார்த்தது எங்களுக்கு அன்றெல்லாம் ஏகப்பட்ட மனக்கிளர்ச்சியினை அளிப்பதாக இருந்தது. பிற்பாடு பானுமதி செய்த எல்லா கதாபாத்திரங்களும் அந்த தன்மை கொண்டவைதான். இப்போது மீண்டும் அந்த நாவலை படித்துப்பார்க்க ஆசைப்படுகிறேன். மறுபதிப்பாக வரப்போவதறிந்து மகிழ்ச்சி
சுப்ரமணியம்
நெல்லை
****
ஐயா,
திருக்குறள் பற்றிய முரளி,அரங்கராசன் அவர்களது கடிதங்கள் படித்தேன். திருக்குறள் குறித்த அவர்களது சில கருத்துக்களோடு எனக்கிருக்கும் வேறுபாடுகளையும், மாற்றுக்கருத்துகளையும் குறித்தே இக்கடிதம்.
ஒவ்வொரு படைப்புமே, கிட்டத்தட்ட, தினச்செய்தி நாளிதழ், மற்றும் மாதாந்திர நாவல்கள் தவிர மற்ற படைப்புகள் (புனைவுகள்) எல்லாமே ஒன்றுக்கும் மேற்பட்ட பரிமாணங்களில் புரிந்துகொள்ள வாய்ப்பளிப்பதாகவே கருதுகிறேன். இதுவே நான் எந்த ஒரு படைப்பையும் சற்றே முனைந்து முயன்றால் தத்துவத்தளத்திற்கு எடுத்துச்சென்று விடலாம் என்று கூறியதன் காரணம்.
எனது புரிதலின் படி நாம் அறியாத ஒரு பரிமாணத்தில் ஒரு படைப்பை புரிந்துகொள்வது என்பது கடினமே. அதுவே எனக்கு குறளின் தத்துவ பரிமாணத்தை பார்க்கும்படி அமையவில்லையோ என்னவோ.ஆயினும் என் சிந்தனைக்கெட்டியவரையில் தோன்றுவன குறித்து சொல்லிவிடுகிறேன்.
ஒரு படைப்பின் உண்மை தரிசனம் என்று முரளி அவர்கள் குறிப்பிட்டிருப்பது எனக்கு சரியெனப்படவில்லை. ஏனெனில் தரிசனம் என்பது சுய அனுபவம் சார்ந்தும், அனுபவத்தின் நீட்சியாகவும் மட்டுமே இருக்கமுடியும் என்று நம்புகிறேன். அப்படிப்பட்ட நிலையில், உண்மை தரிசனம் என்பதும் படைப்பின் விரிவை உள்ளடக்கிய பிம்பம் என்பதும், நாமே கட்டமைத்துக்கொள்வது என்றும் நம்புகிறேன். ஒருவேளை, உண்மை தரிசனம் என்பது அப்படைப்பை எழுதியவருக்கு மட்டுமே தெரிந்திருக்கலாமோ? அதுவும், அவரது புரிதலும், தரிசனமும் என்ன என்று மற்றவர்களுக்கு விளக்கமாக தெரிவிக்க முடிந்திருக்கும் என்றால் அப்படைப்பின் தேவைதான் என்ன? உண்மையில் ஒரு சிறந்த படைப்புக்குப் பின் எந்த ஒரு நோக்கமோ, படிப்பினையோ இருக்கக்கூடாது என கருதுகிறேன். அவை வாசகரின் நிலைக்கேட்ப உணரப்படுவதுதான். அவ்வகையின் எந்த ஒரு புரிதலும்/தரிசனமும் உண்மையானதாக மட்டுமே இருக்கமுடியும். முரளி அவர்கள் கூறுவதுபடி பார்த்தால், அது தத்துவத்தை சிறப்பிடத்தில் நிறுவுவதாகவும், சாமானியர்களின் புரிதலை விட அது சிறப்பானதாக இருப்பதாகவும் நிறுவ முயற்சிப்பதாகவே தோன்றுகிறது.
உயிர் சார்ந்த அன்பை போதிப்பதும், சமூகத்திற்கான அறத்தை நிறுவுவதும் ஒரு தத்துவ நூலின் அல்லது அதன் தத்துவ பாஷ்யத்தின் வேலையல்ல. நீங்கள் சொன்னதுபோலே “தத்துவ விசேஷம்” என்பது ஈவு இரக்கம் இல்லாத உண்மையை மட்டுமே எடுத்துச்சொல்வதாக இருக்கமுடியும். திருக்குறள், நீங்கள் முன்னம் வேறொரு கட்டுரையில் குறிப்பிட்டது போல சமூகக்கட்டமைப்பினுள் சாத்தியப்பட்ட அதிகபட்ச எழுச்சியாக இருக்கமுடியுமே ஒழிய தத்துவத்தளத்திற்கு ஒத்துவரக்கூடிய சாத்தியங்களும், அவசியங்களும் இல்லை. சமூகக்கட்டமைப்புக்குள் நின்று பேசக்கூடியனவற்றை எப்படி தத்துவ தளத்திற்கு எடுத்துச்செல்லமுடியும் என்பதும் எனக்குப் புரியவில்லை.தத்துவம் சமூகத்திற்கானதல்ல. அது தனி மனிதனுக்கானது.அது இந்த ப்ரபஞ்சத்தில் ஒவ்வொருவரையும் தனி மனிதனாகவே சித்தரித்து அவர்களுக்குள் இருக்கும் இணை தொடர்புகள் குறித்து மேலோட்டமாக மட்டுமே குறிப்பிட்டுச்சொல்ல முடியும்.அதுவும் அவனது உள்ளுயிர் சார்ந்த புரிதலுக்காக மட்டுமே இருக்கும்.