அயோத்திதாசரின் மாற்றுப்புராண அழகியல்

இந்தியாவின் பண்பாட்டின் நெடுங்கால உறைநிலை கலங்கி புரண்ட ஒரு காலகட்டம் என்று பதினெட்டாம் நூற்றாண்டைச் சொல்லலாம். இங்கே இருந்த புராணமரபை வெளியே நின்று பார்க்கக்கூடிய ஒரு பார்வையை ஐரோப்பியர்கள் நமக்களித்தனர். அக்காலகட்டத்தில் ஐரோப்பிய தாக்கத்துடன் இந்தியச்சூழலில் எழுந்துவந்த நவீனச் சிந்தனையாளர்கள் அனைவரிடமும் புராணங்களை நிராகரிக்கக் கூடிய குரலை நாம் பார்க்கமுடியும்.

உதாரணமாக சுப்ரமணிய பாரதி புராணங்களைப்பற்றிச் சொல்லும்போது

கடலினைத் தாண்டும் குரங்கும்–வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்ததனாலே–தெற்கில்
வந்து சமன்செய்யும் குட்டை முனியும்

நதியி னுள்ளேமுழு கிப்போய்–அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த–திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

என்று பாடி

கவிதை மிகநல்ல தேனும்–அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;

என்று தீர்ப்புரைப்பதை நாம் பள்ளிநாட்களிலேயே வாசித்திருப்போம். இதேகுரலை நாம் குமாரனாசானிடமும் குவெம்புவிடமும் எல்லாம் காணக்கூடும். ஏனென்றால் இது பழைய மரபில் இருந்து மீண்டு நவீன உலகுக்கு வருவதற்கான ஒரு முயற்சி.

பாரதியில் இருந்து தொடங்கி சுந்தர ராமசாமி வரை இந்த நிராகரிப்பை நாம் காணமுடியும். தமிழ் நவீனத்துவம் [modernism] என்பதே இந்த நிராகரிப்பில் இருந்து உருவாகி வந்தது என்று சொல்லலாம். ‘மரபின் பின்பாரம்’ என்ற சொல்லாட்சி வழியாக சுந்தர ராமசாமி சுட்டுவது இதையே.

ஆனால் பண்டித அயோத்திதாசரின் படைப்புகளை நாம் பார்க்கும்போது புராணமரபை அவர் அப்படி நிராகரித்திருக்கவில்லை என்பது வியப்பூட்டுகிறது. புராணங்கள் சொல்லும் வரலாற்றுச்சித்தரிப்புடன் மாறுபடுகிறார்.அதற்குப்பதிலாக மாற்றுப்புராணம் ஒன்றை உருவாக்கவே முயல்கிறார். அவர் 1910 வாக்கில் உருவாக்கி தமிழன் இதழில் தொடர்ச்சியாக வெளியிட்ட இந்திரர் தேச சரித்திரம் என்ற சிறிய நூலை ஒரு மாற்றுப்புராண உருவாக்கத்திற்கான ஆரம்பகட்ட முயற்சி என்று சொல்லலாம்

பாரதிக்குச் சமகாலத்தவர் அயோத்திதாசர். பாரதி உள்ளிட்ட அத்தனை நவீனச் சிந்தனையாளர்களிடமிருந்தும் அயோத்திதாசர் இவ்வகையில் விலகி நிற்கிறார். ஒரு சம்பிரதாயமான பார்வையில் அயோத்திதாசரின் பழைமைவாத நோக்கு என்று அதைச் சொல்பவர்கள் இருக்கலாம். எனக்கு அன்றைய ஆங்கிலக்கல்வி மற்றும் நவீனசிந்தனையின் பொதுப்போக்குக்கு ஆட்படாமல் நின்று செய்யப்பட்ட ஒரு தனித்துவம் கொண்ட முன்னோடி முயற்சியாகவே அது பொருள்படுகிறது.

இன்று நவீனத்துவத்தின் அலைகள் அடங்கி பின்நவீனத்துவ காலம் உருவாகிவிட்டிருக்கிறது என்கிறோம். நவீனத்துவம் உருவாக்கிய அறிவுக்கருவிகளால் வரலாற்றையும் பண்பாட்டையும் ஆராய்ந்து அதற்கு அடுத்தகட்ட வினாக்களுக்கும் வழிகளுக்கும் வந்து சேர்ந்திருக்கிறோம். இன்றைய நோக்கில் பண்டிதரின் இந்த முயற்சி பலவகையிலும் முக்கியமானது என்று நினைக்கிறேன்

இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றுண்டு. புதுமைப்பித்தன் ஆற்றங்கரைப்பிள்ளையார், நாரதநாராயணம் போன்ற சில புராணவடிவங்களை எழுதிப்பார்த்திருக்கிறார். அவற்றையும் அயோத்திதாசரின் முயற்சியையும் ஒப்பிடமுடியாது. புதுமைப்பித்தனின் எழுத்துமுறை என்பது சாராம்சத்தில் நவீனத்துவத்தின் பகுத்தறிவுத் தர்க்கமுறையைக் கொண்டது. அதனடிப்படையில் புராணத்திற்கும் வரலாற்றுக்கும் ஒரு மாற்றுவடிவை அங்கதநோக்குடன் எழுதுவது.

பண்டிதர் உருவாக்கியது அங்கதம் அல்ல.அன்று மெல்லமெல்ல உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த இந்தியவரலாற்றுக்கு நிகராக அவர் உருவாக்கி அளித்த ஒரு புராணவரலாறு அது. பண்டைய நூல்களில் இருந்தும், மதம் சார்ந்த தொன்மங்களில் இருந்தும் செவிவழி மரபுகளில் இருந்தும் தரவுகளைத் திரட்டிக்கொண்டு புராண உருவாக்கத்தின் விதிகளின்படி அவர் ஆக்கிய படைப்பு

அது படைப்பாக முழுமை பெறவில்லை என்றே நினைக்கிறேன். அதை முழுமையாக எழுதி முடிப்பதற்கான சந்தர்ப்பமும் அவருக்கு அமையவில்லை. ஆனால் இன்று நவீனத்துவத்திற்கு அடுத்தகட்ட நகர்வை நோக்கி விழி தூக்கி நிற்கும் தமிழ்ச்சூழலில் ஒரு முன்னோடி முயற்சி என்றவகையில் அது மிக முக்கியமானது

*

வரலாற்றையும் புனைவையும் ஒன்றாக்கிக்கொண்டு செல்லும் தொன்மையான கூறுமுறையே புராணம் என்ற சொல்லால் அடையாளப்படுத்தப் படுகிறது. புராணம் என்பது புனைவு என அனைவரும் அறிவர். ஆனால் அதனுள் வரலாறு மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இந்தியர்களாகிய நாம் நம் இறந்தகாலத்தை வரலாறாக நினைவுகொள்ளவில்லை. புராணமாகவே நினைவில் கொண்டோம். நாம் இன்று வரலாறு என அழைக்கும் புறவயமான தரவுகளை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றெழுத்துமுறை என்பது பிரிட்டிஷாரால் நமக்களிக்கப்பட்டது.

புராணம் என்று நாம் சொல்லும் இந்தக் கூறுமுறையின் விதிகள் என்ன? என் நோக்கில் நான்கு அம்சங்களை வகுத்துள்ளேன்.

1 வாழ்க்கையிலிருந்து பெறப்பட்ட செய்திகள், அதாவது தரவுகள் சார்ந்த வரலாறு.

2 அவற்றில் அழுத்தம் கொடுக்கவேண்டியவற்றைச் சார்ந்த ஒரு தெரிவு அதாவது நாயக உருவாக்கம், மற்றும் எதிரீடுகளை உருவாக்குதல்.

3 அந்த அழுத்தமளிக்கப்பட்டவற்றை கற்பனையால், உணர்ச்சிகளால் உச்சப்படுத்தி உலகியலுக்கு அப்பால் கொண்டுசென்று நிறுத்தும்தன்மை , அதாவது மிகுபுனைவு.

4. அவற்றை எக்காலத்திற்கும் உரியவையாக ஆக்கும்தன்மை. அதாவது தெய்வீகமாக்கல்

நாம் நின்றிருக்கும் கடந்தகாலம் என்பது, நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் பண்பாடு என்பது இந்த மாபெரும் புராணமயமாக்கலின் விளைவாக பல்லாயிரமாண்டுக்காலமாக உருவாகி வந்த ஒன்றாகும்.

உதாரணமாக, கிருஷ்ணனின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் இந்தியப்பெருநிலத்தில் மேய்ச்சல்குடிகளின் அரசியல் வெற்றி என்ற ஒரு வரலாற்றுப்புலம் அதற்குண்டு. அதனடிப்படையில் கிருஷ்ணன் நாயகனாக ஆக்கப்படுகிறான். அவனுடைய எதிரிகள் வலுவாக உருவாக்கப்பட்டு எதிரீடுகள் அமைக்கப்படுகின்றன. கிருஷ்ணனின் வரலாறு மிகைக்கற்பனைகள் வழியாக உச்சப்படுத்தப்படுகிறது. கிருஷ்னன் காலாதீதனாகிய தெய்வமாக உருவாக்கப்படுகிறான்

அயோத்திதாசர் எழுதிய இந்திரர் லோக சரித்திரம் இதே விதிகளின்படி செயல்படும் ஒரு மாற்றுப்புராணம். அது இந்தியாவுக்கான ஒரு மாற்றுவரலாறாக முன்வைக்கப்படுகிறது. அதை அயோத்திதாசர் அந்தரத்தில் இருந்து எடுக்கவில்லை. தமிழின் தொன்மையான சமண, பௌத்த நூல்களில் இருந்தும் நிகண்டுக்களில் இருந்தும் அக்காலத்தைய பிரம்மஞானசங்க ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட பௌத்த,சமண மதத்தின் மூலநூல்களில் இருந்தும் எடுத்துத் தொகுக்கப்பட்ட செய்திகளை தனக்குரிய முறையில் ஒழுங்குசெய்து தர்க்கபூர்வமாக முன்வைப்பதன் வழியாகவே அதைச் சாதிக்கிறார்

அதன் நாயகராக கௌதமபுத்தர் எழுந்து வருகிறார். கிருஷ்ணனையும் ராமனையும் மையமாகக் கொண்ட ஓர் இந்தியாவுக்குப் பதிலாக புத்தரை மையமாகக் கொண்ட ஓர் இந்தியாவின் வரலாற்றை பண்டிதர் உருவாக்குகிறார் என்று சொல்லலாம். அதில் முந்தைய இந்திய உருவகங்கள் முழுமையான எதிர்நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அவர்களின் இந்தியா என்னுடைய இந்தியா என்ற முரண்பாடு வலுவாக உருவாக்கப்படுகிறது

புத்தர்வரலாற்றைக்கொண்டு முழுமையாகவே இந்தியவரலாற்றைத் தொகுக்கும் முயற்சியில் அயோத்திதாசர் மிகையான அழுத்தங்களை உருவாக்குகிறார். ஒரு நவீன வரலாற்றெழுத்துக்கு இத்தகைய அழுத்தங்கள் உவப்பானவை அல்ல. இந்த அம்சத்தால்தான் அது புராணமாக ஆகிறது. புத்தரின் இறைநிலை வழியாக தன் வரலாற்றெழுத்தை தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒரு நம்பிக்கையாக நிறுவ அயோத்திதாசர் முயல்கிறார்

*

இத்தகைய மாற்றுப்புராணங்களின் சாத்தியம் என்ன? இவற்றின் பயன்கள் என்ன?

நாம் உணரவேண்டிய ஒன்றுண்டு. புராணமயமாக்கம் என்பது ஒவ்வொரு கணமும் நம் சமூகத்தில் நம்மைச்சூழ்ந்து நிகழ்ந்துகொண்டிருப்பது. இன்றும் நிகழ்வது.

அயோத்திதாசர் தன் மாற்றுப்புராண மரபை உருவாக்கிக்கொண்டிருந்த அக்காலத்திலேயே ஒரு புராணம் மெல்லமெல்ல கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பதை நாம் இங்கே நினைவுகூரலாம்.அதனுடன் ஒப்பிட்டு பண்டிதரின் பங்களிப்பை ஆராயலாம்

திருக்குறள் பதினெட்டாம் நூற்றாண்டைச் சந்திக்கும்போது திருவள்ளுவரை சாதிமீட்பு செய்தாகவேண்டிய கட்டாயம் தமிழ்மீட்பாளர்களுக்கு ஏற்பட்டது என்று ராஜ்கௌதமன் சொல்கிறார். வள்ளுவர் என்பது பறையர் சாதியின் உட்பிரிவு. தெய்வப்பறையர் என்றே வள்ளுவர் குறிப்பிடவும் பட்டார்

ஆகவே அவரது முதல் குறளில் இருந்து ஒரு கதை உருவாக்கப்பட்டது. ‘ஆதி’ என்ற பறைச்சிக்கு ‘பகவன்’ என்ற பிராமணனில் இருந்து பிறந்தவர் திருவள்ளுவர் என்ற அக்கதை வாய்மொழி மரபில் சிலகாலம் முன்பு உருவாகி திருக்குறளின் அச்சுப்பதிப்புகளில் சேர்க்கப்பட்டது. 1835ல் வெளிவந்த விசாகப்பெருமாள் ஐயர் பதிப்பில் இக்கதை உள்ளது 1847 வேதகிரி முதலியார் பதிப்பில் இக்கதை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதற்கு முன் இக்கதை எழுத்தில் இல்லை என்கிறார் ராஜ் கௌதமன்

பல்வேறு ’அற்புதக்’கதைகள் உருவாக்கப்பட்டன. வள்ளுவர் நெசவாளர் என்றும், வாசுகி என்ற மனைவி அவருக்கு இருந்தார் என்றும் கதைகள் எழுதப்பட்டன. பல கதைகள் குழந்தைத்தனமானவை. உதாரணமாக, வள்ளுவர் அழைத்ததும் வாசுகி நீர் இறைத்துக்கொண்டிருந்த கயிற்றை அப்படியே விட்டுவிட்டு ஓடிப்போனார் என்றும் குடமும் கயிறும் கிணற்றுக்குள் விழாமல் அப்படியே நின்றன என்றும் ஒருகதை அனைவரும் கேள்விப்பட்டதே.

இக்கதைகள் பின்னர் திருக்குறள் பதிப்புகளில் திருவள்ளுவநாயனார் புராணம் என்றபேரில் சேர்க்கப்பட்டன. ஒரு சைவ ஆச்சாரியாரின் தோற்றத்துடன் வேணு கோபால் சர்மா அவர்களால் வள்ளுவரின் படம் வரையப்பட்டது. அதிலிருந்த பூணூல் மட்டும் நீக்கப்பட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. வெறும் நூறாண்டுகளில் ஒரு புராணம் வரலாறாக ஆகியது.

இவ்வாறுதான் இந்தியாவின் இன்றைய வரலாற்றுச் சித்திரம் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது அதன் பெரும்பகுதி புனைவு என்று ஒருவர் சொல்வாரென்றால் அவரை மறுப்பது கடினம். உதாரணம், சங்ககால வரலாறு. அது குமரிக் கண்டம். முல்லைக்குத்தேர் கொடுத்தல் போன்ற புராணங்களையே பெரும்பாலும் உள்ளடக்கமாகக் கொண்டது

இந்த ‘அங்கீகரிக்கப்பட்ட’ புராணங்களுக்கு மாற்றாக அயோத்திதாசர் உருவாக்கிய புராணம் என்று இந்திரர் தேச சரித்திரத்தை சொல்லலாம்

கறாராகச் சொல்லப்போனால் இந்தியவரலாறு முதலில் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டு இந்தியதேசியவாதிகளால் மறு ஆக்கம் செய்யப்ப்ட்டது. அவர்கள் இருவருக்கும் நடுவே ஒரு சமரசப்புள்ளியில் நாம் பயிலும் இன்றைய வரலாறு உள்ளது. அயோத்திதாசன் உருவாக்க முனைந்த்து ஒரு மூன்றாவது வரலாறு.

*

இரண்டு அடிப்படைகளே வரலாற்றை புனைவாக்கும்போது நாம் கவனிக்கவேண்டியவை என்று தோன்றுகிறது.

ஒன்று நம்முடைய அன்றாடச் செவிவழிச் செய்திமரபு, நாட்டார் மரபு, மதம்சார்ந்த தொன்மமரபு ஆகியவற்றில் இருந்து அத்தனை வரலாற்றுத்தரவுகளும் நமக்குக் கிடைக்கின்றன. சொல்லப்போனால் எதுவுமே அழிந்துவிடுவதில்லை. எல்லாமே எங்கோ இருந்துகொண்டிருக்கும்.

ஏனென்றால் இந்தத் தேசம் மிகப்பெரியதும் மிகச்சிக்கலானதுமாகும் என்பதுதான். அம்பேத்கர், டி.டி.கோசாம்பி இருவருமே வெவ்வேறு இடங்களில் இதைக்குறிப்பிடுகிறார்கள். மகாபாரதத்தைப் பற்றிபேசும் அம்பேத்கர் அதில் ஒரு பகுதியில் ஒரு செய்தி விடப்பட்டிருக்கிறது அல்லது திரிக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணினால் மொத்த மகாபாரதத்திலும் அதைத் தேடும்படி சொல்கிறார். எங்கோ அது இருந்துகொண்டுதான் இருக்கும். ஏனென்றால் மகாபாரதப்பிரதி மிகப்பெரியது. ஒட்டுமொத்த பிரதியையும் திருத்தியமைப்பது எளிதல்ல. மேலும் அதன் நூற்றுக்கணக்கான பாடபேதங்கள், பல்லாயிரம் வாய்மொழிபேதங்கள் இந்தியாவெங்கும் இருந்துகொண்டிருக்கின்றன. எந்தச் சக்கரவர்த்தியும் அதை முழுமையாக மாற்றியமைக்கமுடியாது

அதையே டி.டி.கோசாம்பியும் இன்னொருவகையில் சொல்கிறார். இந்தியவரலாற்றின் அறியப்படாத ஒன்றை, அறுபட்டக் கண்ணியைத் தேடவேண்டுமென்றால் சமகால இந்திய வரலாற்றிலேயே தேடினால் போதும். எங்கோ ஒரு மக்கள் கூட்டத்தில் அந்த வரலாறு இருக்கும். அந்தக்காலகட்ட வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். ஏனென்றால் வரலாற்றின் அனைத்துப்பக்கங்களையும் வாழ்க்கையாகக் கொண்ட பல்லாயிரம் இனக்குழுக்களின் பெருந்தொகையாக உள்ளது இந்த நாடு

இந்த பிரம்மாண்டமான database, தகவல்கருவூலம், நம்முடைய பெரும் சொத்து என நான் நினைக்கிறேன். நமது இலக்கியம், வரலாற்றாய்வு அனைத்துக்கும் அடித்தளம் இதுவே. இந்த அடித்தளத்துடன் எத்தனை தீவிரமான விரிவான உறவு உள்ளது என்பதே சமகால இலக்கியவாதியை அளக்கும் அளவுகோல் என்று சொல்லத் தோன்றுகிறது.

இரண்டாவது அடிப்படை என நான் நினைப்பது இந்தத் தகவல்களை புனைவாகவோ வரலாறாகவோ ஒருங்கிணைப்பதற்கு இருக்கும் கூறுமுறைவிதிகள். இந்தியாவுக்கே உரிய ஒரு மொழிபியல் [narratology] என்று அதைச் சொல்லலாம்.

இந்தியாவெங்கும் இதன் அழகியல் விதிகள் ஏறத்தாழ ஒன்றே. செவ்வியலிலும் நாட்டாரியலிலும்கூட நாம் இதையே காண்கிறோம். எந்த முறைமைப்படி கண்ணகி பத்தினித்தெய்வமாக ஆகிறாளோ அதே முறைமைப்படித்தான் கிராமத்தில் இறந்துபோன கன்னிப்பெண் கன்னியம்மனாக ஆகிறாள். அப்பரும் திருஞானசம்பந்தரும் வள்ளலாரும் கிருபானந்த வாரியாரும் ஒரே புராணமுறைமையின்படித்தான் புராணங்களாக ஆகிறார்கள்.

மேலே சொன்ன திருக்குறளின் புராண உருவாக்கத்தையே எடுத்துக்கொள்ளலாம். அதில் பல்வேறு பழைய தொன்மங்கள் மறுசமையல் செய்யப்பட்டிருக்கின்றன. முதல்கதை கேரளத் தொன்மங்களில் முதன்மையானதான ‘பறைச்சி பெற்ற பன்னிருகுலம்’ என்பது. கேரளத்தில் உள்ள நம்பூதிரிகள் உள்ளிட்ட அனைத்துச் சாதியினரும் ஒரு பறைச்சியின் வயிற்றில் பிறந்தார்கள் என்பது பதினைந்தாம் நூற்றாண்டு முதல் கேரளத்தின் நூல்களில் கண்டுவருவதும் வாய்மொழியில் உள்ளதுமான புராணம். பின்னர் அக்கதை வரருசி என்ற பிராமணனுக்கும் பறைச்சிக்கும் பிறந்த பன்னிருகுலங்கள் என்று திருத்தம் பெற்றது.

இன்னொன்று முத்துப்பட்டன் கதை. அதில் பிராமணசாதியில் பிறந்த அவர் பறைச்சியை மணம் செய்து சகோதரர்களால் கொல்லப்பட்டார். இத்தகைய பழையகதைகளில் இருந்து தான் ஆதி மற்றும் பகவன் என்ற கதை உருவாக்கப்படுகிறது.

அதாவது புராண உருவாக்கத்திற்கான மூலக்கதைகளை முன்னரே இருக்கும் வாய்மொழி மரபில் இருந்தோ புராணங்களில் இருந்தோ எடுத்தாள்வதும் அவற்றை புராண அழகியலின் அடிப்படையில் மறு ஆக்கம் செய்வதும்தான் இதற்கான முறைமையாக உள்ளது

அயோத்திதாசரின் இந்திரர்தேச சரித்திரம் இந்த முறைமையையே சிறப்பாக கையாள்கிறது. அதன் முன்வரைவு மிக எளியது.இங்கு அனைவரும் அறிந்தது. முன்னொருகாலத்தில் இருந்த இந்திரர்தேசம் என்பது எப்படி அங்கே வந்து குடியேறிய யாசகத்தை வாழ்க்கைமுறையாகக் கொண்ட அன்னியர்களால் அறவீழ்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டது, எப்படி மெல்லமெல்ல பிளவுகள் அடைந்து சிதைந்தழிந்தது என்று அயோத்திதாசரின் நூல் சித்தரிக்கிறது.

இந்தியாவின் பூர்வகுடிகள் பௌத்தர்களே என்றும் பௌத்தர்களால் ஆளப்பட்டு சீரும்சிறப்புமாக அகிம்சைநெறியில் வாழ்ந்த நாட்டில் பிராமணர்களின் ஊடுருவல் நிகழ்ந்து சாதிபேதங்கள் உருவாகி வந்தன என்றும் அதன் விளைவாக இந்தியா அழிவுற்றது என்றும் தொடர்ந்து வாதிட்டு வந்த அயோத்திதாசர் அதன் ஒரு புனைவுச்சித்திரமாகவே இந்நூலை ஆக்கியிருக்கிறார்

இந்த ஆக்கத்துக்கான அடிப்படைகளை அவர் பல்வேறு நூல்களில் இருந்து எடுத்திருக்கிறார். ஆனால் இதிலுள்ள புராணப்புனைவு முறையின் மீதே என் கவனம் குவிகிறது. இந்திரர்தேச சரித்திரத்தின் மொழிபில் பெரும் செல்வாக்கு செலுத்தியிருக்கும் தொன்மம் என்பது மகாபலியை வாமனன் குறியவனாக வந்து ஏமாற்றி மூன்றடி மண் பெற்று தலையில் காலூன்றி பாதாளத்துக்கு அனுப்பிய கதைதான். இந்திரர்தேச சரித்திரத்தை கேரளத்தின் புலையர் முதலிய அடித்தள மக்களிடையே பெரும் செல்வாக்குடன் இருந்துவரும் அக்கதையின் இன்னொரு வடிவம் என்றே சொல்லமுடியும்

”மாவேலி நாடு வாணீடும் காலம்
மானுஷர் எல்லாரும் ஒந்நு போலே’

என்று மாபலி ஆண்ட பொற்காலம் பற்றி இன்றும் அவர்கள் பாடுகிறார்கள். அவர்களிடமிருந்து நாடு குறியவனாகிய பிராமணனால் பறிக்கப்பட்டது. பேதங்கள் உருவாகி வந்தன. ஆண்டான் அடிமை உருவானார்கள். துயரம் மிக்க வாழ்க்கை உருவானது. அதே மூலப்படிமம்தான் அயோத்திதாசரிலும் வளர்ச்சிகொண்டிருக்கிறது

இந்த மூலப்படிமத்தின் வேர் மகாபாரதம் போன்ற தொன்மக்களஞ்சியத்தில் உள்ளது என்பதே இன்னமும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. மகாபாரதம் அத்தனை குலக்குழுக்களும் அவரவர் கதைகளை கொண்டுசேர்த்த கருவூலம். அதில் மிகவிரிவாகச் சித்தரிக்கபப்ட்டிருக்கும் அசுரர்களின் அரசுகளின் விவரணைகளும் அவர்களின் அழிவின் சித்திரங்களும் மிக எளிதாக அயோத்திதாசரின் விவரணைக்கு நெருக்கமாக வருகின்றன

இங்கு புராணங்கள் உருவாக்கப்படுவதில் கையாளப்படும் முக்கியமான ஒரு வழிமுறையையும் அயோத்திதாசரில் காணலாம். அது சொல்லாராய்ச்சி. சொற்களை புதுவிதமாகப் பொருள்கொள்வதன் மூலம் கதைகளை மாற்றுவதும் கூறுபொருளை மாற்றுவதும் புராண எழுத்தில் எப்போதுமே காணக்கூடியது.

உதாரணமாக கிருஷ்ணன் என்றால் சம்ஸ்கிருதத்தில் கரியவன் என்றே பொருள். அப்பொருளிலேயே பல்லாயிரம் இடங்களில் அது கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் புகழ்பெற்ற புராணச் சொற்பொழிவாளர் ஒருவர் கிருஷ் என்ற மூலச்சொல் வளர்வது விரிவது என்றே பொருள் தரும். அதிலிருந்தே கிருஷி [விவசாயம்] என்ற சொல் வந்துள்ளது, ஆகவே கிருஷ்ணன் கருப்பன் அல்ல, அவன் பொன்னிறமானவன். வளம் மிக்கவன் வளர்பவன் என்றபொருளிலேயே அவன் கிருஷ்ணன் என்று விளக்கியிருப்பதை வாசித்திருக்கிறேன்

இந்தமுறை புராண உருவாக்கத்தில் இயல்பானது என்று கொண்டால் இந்திரர் தேச சரித்திரத்தில் அயோத்திதாசர் மிக விரிவாக இதைக்கையாள்வதை கண்டு வியப்படையமாட்டோம்

மனிதரை சுரர் என்று பிறரை அசுரர் என்றும் வகுத்து இருமையை உருவாக்குபவை புராணங்கள். அயோத்திதாசர் அதை திரும்பச்செய்கிறார். சுரர் என்றால் சுராபானம் அருந்தும் ஒழுக்கமற்றவர் என்றும் அசுரர் அதை அருந்தாதவர் என்றும் சொல்கிறார். சுரர் மதுவையே ஆயுதமாகக்க் கொண்டு அசுரர்களை அழித்ததாக புனைந்துசெல்கிறார்

இந்தியா என்ற சொல்லே இந்திர என்ற சொல்லின் மரூஉ என்கிறார். இந்திரியங்களை வென்றவர் இந்திரர். அவர்களின் நாடு இந்திரர்தேசம். அதுவே இந்தியா என்றாயிற்று என்று சொல்கிறார்

அயோத்திதாசர் உருவாக்கிய இந்த முன்னோடி முயற்சி நமது மாபெரும் தொன்மக்களஞ்சியத்தில் இருந்து தரவுகளை எடுத்துக்கொண்டு புராண உருவாக்க அழகியலைக்கொண்டு மாற்றுப்புராணம் ஒன்றை உருவாக்குவதற்கான அறைகூவல்

*

நாம் இந்தியாவில் மண்ணில் மட்டும் வாழவில்லை. புராணங்களிலும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொருநாளும் நம்மைச்சுற்றி இந்த புனைவுவெளி பின்னிப்பின்னி விரிந்துகொண்டே இருக்கிறது. இருபதாண்டுகளுக்கு முன் நாமறிந்த ஒரு உண்மை நிகழ்வு தொன்மமாக நம் முன் வந்து நிற்கிறது. நாமறிந்த மனிதர்கள் புராணக்கதாபாத்திரங்களாக ஆகிவிடுகிறார்கள். இடைவெளி இல்லாமல் ஒரு புனைவு இயந்திரம் நம் வாழ்க்கையை சமைத்து சமைத்து குவித்துக்கொண்டிருக்கிறது. சற்றுக் கவனித்தாலே அதன் விதிகளை நாமறியமுடியும்.

ஆகவே நவீன புனைகதை எழுத்தாளனுக்கு முன்னால் ஒரு பெரும் வாய்ப்பு, பெரும் அறைகூவல் உள்ளது. ஒரு மாபெரும் தகவல் களஞ்சியம் அதை புனைவாக ஆக்கும் அழகியல் முறைமை. இதுவரை இந்த தகவல்களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்டு புராணமாக., புனைவாக ஆக்கப்பட்டு அவனுக்குக் கிடைப்பவை கொஞ்சம்தான். அவை இன்றுவரை இங்கே திகழ்ந்த அதிகாரத்தால், மேலாதிக்கக் கருத்தியலால் உருவாக்கப்பட்டவை. அந்த ஒட்டுமொத்த புனைவுகளையும் கடந்து சென்று அவனுக்கான புனைவை உருவாக்கிக் கொள்ளமுடியும். முற்றிலும் புதியதோர் இறந்தகாலத்தைக் கண்டடைய முடியும். அது முற்றிலும் புதிய நிகழ்காலத்துக்கான அடித்தளமாக அமைய முடியும்

வெவ்வேறுவகையில் ஆப்ரிக்காவிலும் கீழைநாடுகளிலும் நடந்துகொண்டிருப்பது இதுவே. இதன் விளிம்பை நாம் இப்போதுதான் தீண்டத் தொடங்கியிருக்கிறோம். அயோத்திதாசர் அதற்கான ஒரு முன்னுதாரணம்.

[19- 12-2014 அன்று சென்னையில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவெலெப்மென்டல் ஸ்டடீஸ்- ல் ஆற்றிய உரை]

முந்தைய கட்டுரைஅறம் வரிசையில்…
அடுத்த கட்டுரைவிழா- கிருஷ்ணன் பதிவு