இந்துத்துவம், மோதி:கடிதங்கள்
அன்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு
இந்த விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி விட்டதால் நான் மேற்கொண்டு விவாதிப்பது நாகரீகமாகது. என் சார்பில் ஓரிரு விளக்கங்களை மட்டும் தந்து நானும் நிறுத்திக் கொள்கிறேன்.
நான் கூறியது மார்க்ஸின் சிந்தனைகளுக்கும் ஸ்டாலினியத்திற்கும் சம்பந்தமில்லை என்பதுதானே தவிர லெனியத்திற்கும் ஸ்டாலினியத்திற்கும் சம்பந்தமில்லை என்பதல்ல. லெனினின் ஆளுமையும் ஸ்டாலினின் ஆளுமையும் மிக மிக வேறுபட்டவை. ஆனால் ஸ்டாலின் பின்பற்றியது லெனினின் கொள்கைகளையும் லெனின் உருவாக்கிய கட்சி அமைப்பையும் தான். நான் போல்விஷம் என்று குறிப்பிட்டதும் ரஷ்யாவில் லெனின் உருவாக்கிய சித்தாந்தத்தைத் தான். லெனின் மீது கடுமையான விமர்சனங்கள் எனக்குண்டு. ஆனால் அவர் மீதும், அவரது பங்களிப்பின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதையும் உண்டு. சித்தாந்த ரீதியாக சில முக்கியமான தவறுகளை இழைத்து விட்ட ஒரு மாபெரும் கம்யூனிஸ்டாகவே அவரை நான் பார்க்கிறேன். ஆனால் ஸ்டாலினை என்னால் துளியேனும் ஏற்க முடிந்ததில்லை. ஸ்டாலின் ஒரு கம்யூனிஸ்ட் என்றால் நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை. அதாவது ஸ்டாலினை ஒரு கம்யூனிஸ்டாகவே நான் கருதுவதில்லை. ஸ்டாலினின் அரசு சாத்தியமானதற்கு காரணமே போல்விஷத்தில் இருந்த சில முக்கியமான அடிப்படை கோளாறுகள் தான் (முக்கியமாக ஜனநாயகம் இல்லாது போனது). அவற்றைப் பற்றி இங்கு விவாதித்தால் கடிதம் மிகவும் நீண்டு விடும். லெனினை கம்யூனிஸ்டாக கருதும் நான் அவரைப் பின்பற்றிய ஸ்டாலினை அப்படி கருதாதது ஒரு முரண் என்பதை நான் அறிவேன். இருந்தும் இந்த முரணை நான் ஏற்கக் காரணம் தனி மனிதர்கள் தங்கள் சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் கொண்டுள்ள, பின்பற்றுகிற மதிப்பீடுகள் முக்கியமானவை என்று நான் கருதுவதே. லெனினுக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் இருக்கும் ஆளுமை வேறுபாடு சித்தாந்த விவாதத்திற்குரிய பொருளல்ல. ஆனால், தனிமனித உறவுகளிலும் சரி, ஒரு அமைப்பை அல்லது சமூகத்தை தலைமையேற்று வழி நடத்துவதிலும் சரி தனி மனித ஆளுமைகள் கணிசமான பங்கு வகிக்கின்றன.
இந்திய தத்துவ பாரம்பரியத்தில் விவாதத்திற்கு மிகச் சிறப்பான இடம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். பல்வேறு தத்துவ பிரிவினருக்கு இடையே நடக்கும் விவாதங்கள் பல நாட்கள் வரை கூட நீளும். இவ் விவாதங்களில் தோற்றவர் வெற்றி பெற்றவரின் தத்துவத்தை ஏற்க வேண்டும் என்பது ஒப்பந்தமாக இருக்கும். மிகவும் போற்றுதலுக்குரிய ஒரு மரபு அது. என்னைப் பொறுத்த வரையில் விவாதங்களை திறந்த மனதுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவன், அதை பின்பற்றுகிறவன். கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்ட மிகத் தொடக்க காலத்தில் ஸ்டாலினின் தவறுகள் வரலாற்று ரீதியாக தவிர்க்க முடியாதவை என்று எனக்கு கூறப்பட்ட போது அதை பரிபூரணமாக நம்பி ஏற்ற நான் விரைவில் அது மிகவும் தவறான, ஏற்க முடியாத கூற்று என்பதை பல கம்யூனிச அறிஞர்களின் (மார்க்ஸ் உட்பட) சிந்தனைகளை படித்த போது அறிந்து கொண்டேன். உலகில் நிலவும் அனைத்தையும் பற்றிய ஈவிரக்கமற்ற விமர்சனம் தேவை என்ற மார்க்ஸின் வரிகள் எனக்கு மிகப் பிடித்தமானவை.
அரசியல் விவாதங்கள் வேண்டாம் என்று நீங்கள் முடிவெடுத்திருப்பதற்கு உங்களுக்கான நியாயமான காரணங்கள் இருக்கக் கூடும். ஆகவே சந்தோஷ் அவர்களின் கடிதம் பற்றியும், அதையட்டிய உங்களது கருத்துக்கள் பற்றியும் மேலும் விவாதிக்காமல் நிறுத்திக் கொள்கிறேன். என்னைப் பற்றிய ஒரு சிறு புரிதல் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் மிகவும் மதிக்கிற, போற்றுகிற மனிதர்களின் ஒரு சிறு பட்டியல்: புத்தர், சாக்ரடீஸ், கார்ல் மார்க்ஸ், பெட்ரண்ட் ரஸ்ஸல், நோம் சோம்ஸ்கி.
நீங்கள் எழுதிய நீண்ட கடிதத்திற்கு நன்றி.
அன்புடன்
க. திருநாவுக்கரசு.
***
அன்புள்ள ஜெயமோகன்; உங்களின் ஹிந்துத்துவம் மோதி கடிதம் கண்டேன்.நீங்களும் நண்பர் திருநாவுக்கரசும் சிறப்பாகவே விவாதித்துள்ளீர்கள்.நான் மோதியை ஆதரிக்கிறேனா இல்லையா என்பதை விட இன்று மதக்காழ்ப்பு கடந்தவர்கள் என்று சொல்லபடுபவர்கள் செய்வதை விட ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக அவருடைய பணிகள் எப்படி அவருடைய எதிர்ப்பாளர்களின் பாராட்டையும் பெற்று வருகின்றன என்பதை சொல்லவே அதை எழுதினேன். கட்டமைப்பு வசதிகள் பற்றி உங்கள் பயணக்குறிப்பில் நீங்கள் நிறையவே சுட்டிக்கட்டியுளீர்கள். அந்த கட்டமைப்பு வசதிகள் குஜராத்தில் எப்படி?என்று நான் விசாரித்தபோது எனக்கு கிடைத்த தகவல்கள் அதை நான் பல இடங்களிலும் சரிபார்த்துக் கொண்டே ஒரு உறுதி கிடைத்த பிறகே அதை குறிப்பிட்டேன். எனக்கு அவருடைய மக்கள் நல பணிகள் பிடித்திருக்கிறது. அவருடைய வகுப்புவாத முகம் பற்றி ஒரு முடிவுக்கு வர என்னால் முடியவில்லை?காரணம் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி ஒரு எளிய வாசகனாக அற்புதமான கொள்கையும் அறிவு திறனும் ஒரு கட்ச்சியில் இருக்கலாம்.ஆனால் இறுதியில் அது செய்த நன்மை என்ன? அந்த இடத்திலிருந்து மிகவும் பழிக்கப்படுகிற ஒரு மனிதர் இவ்வளவு செய்திருப்பது எனக்கு வியப்பை அளித்தது அதையே நான் குறிப்பிட்டுள்ளேன். என்னுடைய கடிதத்தை சரியான நோக்கில்எடுத்துக்கொண்டது மகிழ்ச்சி.அரசியில் விவாதங்களில் ஈடுபட நீங்கள் விரும்பவில்லை என்று சொல்லியிருந்தீர்கள். அதையும் மீறி இதை எழுதாலமா என்கிற பல மணி நேர யோசன்னைக்கு பிறகு எழுதி விட்டேன். அன்புடன் சந்தோஷ் |