கிறித்தவர்கள்மீதான தாக்குதல்கள்

தன்னுடைய புகழ்பெற்ற சுயசரிதையில் ஹிட்லர் ஜனநாயகத்தின் அடிப்படைகளாக நாம் எண்ணிவரும் பலவற்றை தர்க்கபூர்வமாக நிராகரிக்கிறார். தனிமனிதனின் சிந்தனைத்திறன், மனசாட்சி ஆகியவற்றை அவர் ஊதித்தள்ளிவிடுகிறார். தனிமனிதர்கள் ஒரு கூட்டமாக ஒன்றிணையும்போது அவர்களின் தனிப்பட்ட அறிவுத்திறன்கள், தர்க்கநியாயங்கள் அனைத்தையும் இழந்து உணர்ச்சிகளால் ஆட்டுவிக்கப்படும் அறிவற்ற ஒற்றைப்பெரும்கும்பலாக ஆகிவிடுகிறார்கள் என்கிறார் ஹிட்லர்.அத்தகைய கும்பல்களிடமே ஜனநாயகத்தின் அதிகாரம் உள்ளது.

ஆகவே ஜனநாயகத்தில் அதிகாரமையம் என்பது இந்தக் கும்பல் மனநிலையுடன் உரையாடும் சக்தியுள்ளவர்களுக்கே வாய்க்கிறது என்பது ஹிட்லரின் வாதம். ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது பெரும் வாயாடிகளுக்கு மட்டுமே உரியது என்று வரையறுக்கிறார் ஹிட்லர். பலநூறு கட்டுரைகளை விட ஒரு நல்ல மேடையுரை பிரச்சார வல்லமை மிக்கது. மேடையுரைகள் எப்படி அதிகாரத்தை உருவாக்குகின்றன என்பதை முதன்முறையாக நடைமுறையில் — அதாவது இலட்சியவாத நெடி ஏதும் இல்லாமல் – விளக்கியவர் ஹிட்லரே. பிரிட்டிஷ் ஜனநாயகப் பேச்சாளர்கள் மேடையுரை என்பது ஜனநாயகத்தின் அடிப்படைகளை மக்களுக்குக் கற்பிக்கவும் அவற்றை நிலைநாட்டவும் கூடிய ஒரு தொடர்புமுறை என்று சொல்லிவந்தார்கள் என்றால் மேடையுரை என்பது ஜனநாயகத்தில் பெரும் வலிமைபெற்று ஜனநாயகத்தின் அடிப்படைகளை அழிக்கக் கூடிய ஒரு சக்தி என்று ஹிட்லர் காட்டுகிறார். ஜனநாயகத்தின் வழியாகவே ஜனநாயகத்தை அழித்தும் காட்டினார் அந்த கொலைகாரக் கிறுக்கு மேதை.

மேடையுரைக்கு ஹிட்லர் கொடுக்கும் இலக்கணங்கள் மிக நுட்பமானவை. ஒருபோதும் மேடை உரையை ஒரு விவாதமாக ஆக்க அவர் விரும்புவதில்லை. உரையாற்றுபவன் நம்மில் ஒருவன்தான் என்று ஒருபோதும் மக்கள் நினைக்கக் கூடாது. அவனுடன் அவர்களுடைய தர்க்க புத்தி உரையாடலுக்கு முன்வரக்கூடாது. அவன் அசாதாரணமானவன், அபூர்வமானவன் என்று அவர்கள் நினைக்க வேண்டும். ஆகவே அவன் நின்றிருக்கும் மேடை உயரமானதாகவும், தனி ஒளியில் ஜொலிப்பதாகவும் இருக்கவேண்டும். அதாவது மேடையுரை அம்மேடைமுன் கூடிய ஒவ்வொருவரிடமும் அந்தரங்கமாகப் பேசுவதாக அமையக்கூடாது. அவர்களை ஒட்டுமொத்தமாக அழைத்துப் பேசக்கூடியதாக இருக்க வேண்டும். அது தன் வேகம் மூலம் தனிமனிதர்களாகக் கூடியவர்களை ஒரு கும்பலாக ஆக்கிவிடவேண்டும்.

அதற்கான சிறந்த வழிகள் பலவற்றை ஹிட்லர் சொல்கிறார். அவரது உரைகளில் இருந்து இன்னும் ஏராளமானவற்றை நாம் ஊகித்தறிய முடியும் என்கிறார் புகழ்பெற்ற உளவியலாளரும் ஹிட்லரை உளவியல் அடிப்படையில் ஆராய்ந்து ‘•பாசிசமும் பொதுமக்கள் உளவியலும்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவருமான வில்ஹெல்ம் ரீஷ். கூடியிருக்கும் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு மையப்பிரச்சினையை மட்டுமே பேச்சுக்கு எடுத்துக்கொள்வார் ஹிட்லர். அதை மெல்ல முன்வைத்து மேலும் மேலும் உணர்ச்சிகரமானதாக ஆக்கிக் கொண்டே செல்வார். நாடகத்தன்மையுடன் உரையை கொந்தளிக்கச் செய்து,  அறைகூவி, ஆர்ப்பரித்து, கண்ணீர் விட்டு அதன் உச்சத்துக்குக் கொண்டு செல்வார். மேடையுரை என்பது முழுக்க முழுக்க உணர்ச்சிகரமானது என்பதில் ஹிட்லருக்கு ஐயமே இல்லை.

அத்துடன் ஆரம்பம் முதலே மக்களை அதில் உணர்ச்சிகரமாகப் பங்கெடுக்கச் செய்வார். முதலில் கேள்விகள் கேட்டு அவர்கள் பதில் சொல்லவைப்பார். ”நம்முடைய தந்தையர் தேசம் ஐரோப்பாவின் மையம் என்பதை நம்புகிறீர்களா?”. ”ஆம் ! ஆம்1” இந்தவகையில். பின்னர் அந்தக்கூட்டம் தனக்கு எதிர்வினையாற்றச் செய்வார். அவர்கள் கைதட்டவும் கூச்சலிடவும் இடைவெளிகளை உருவாக்குவார். அவர்கள் மெல்லமெல்ல கொந்தளிக்க ஆரம்பிப்பார்கள். ஒரு கட்டத்தில் கூட்டம் வெறிகொண்டு கத்திக்கொண்டிருக்கும். அதை தூண்டிவிடும் சில கோஷங்களை மட்டுமே பேச்சாளர் சொன்னால் போதும். ஒரு பெரும் கூட்டத்தில் கால்பங்கினர் உணர்ச்சிக் கொந்தளிப்பு கொண்டால்போதும். மெல்லமெல்ல மொத்தக் கூட்டமே  அவ்வுணர்ச்சியை பகிர்ந்து கொள்ளும். அதில் அவ்வுணர்ச்சிக்கு எதிர்நிலை உள்ள ஒருவன் வந்து நின்றால்கூட அவனும் அந்த உணர்ச்சிவேகத்துக்கு ஆளாகிவிடுவான்.

அன்றாட வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளை தவிர்த்துவிடுவது •பாசிசத்தின் பாணி. அவை ஒருபோதும் ஒரு மக்கள் திரளை கொந்தளிக்கவைப்பதில்லை. கலாச்சாரம் சார்ந்த விஷயங்களை பேசுபொருளாக எடுத்துக்கொள்வதே அவர்களை கவரும். அவற்றை கனவும் இலட்சியவாதமும் சார்ந்து உச்சப்படுத்துவார் அவர். பொது எதிரியை உருவாக்குவார். சகல தீமைகளுக்கும் அதுவே காரணம் என்பார். அதன் மீதுவெறுப்பை உருவாக்கி தீவிரப்படுத்தியபடியே செல்வார். திரும்பத்திரும்ப ஒன்றைச் சொன்னால் அது பொதுமக்கள் மனதில் உண்மையானதாகவே பதிந்துவிடும். திரும்பத்திரும்பச் சொல்வதற்கு சிறந்த வழி வலியுறுத்த விரும்பும் கருத்தை ஒரு கோஷமாக ஆக்கிக் கொள்வதே. சொற்றொடர்களுக்கு ஓசையொழுங்கை அளிப்பதன் மூலம் அதை செவிகளில் நிறுத்த முடியும். அதன்மூலம் நினைவில் நிறுத்த முடியும் . அதன்மூலம் அதை நிலைநாட்ட முடியும்.

ஆனால் மேடைப்பேச்சைவிட பலமடங்கு பிரச்சார வலிமை உடையவை என்று ஹிட்லர் சிறு சிறு அடிதடிகளையும் கலவரங்களையும் சுட்டிக்காட்டுகிறார். •பாஸிசம் சிறு குழுவாக இருந்தபோது பொது இடங்களில் திட்டமிட்ட அடிதடிகளையும் கலவரங்களையும் நிகழ்த்தினார்கள். அதன்மூலம் செய்திகளில் இடம்பெற்றார்கள். அவர்கள் சொல்வதை மக்கள் கவனித்து விவாதித்தார்கள். சீருடை, குறியீடுகள் போன்ற பொது அடையாளங்கள் தாங்கி வந்து உணர்ச்சிபூர்வமான கோஷங்களுடன் கலாட்டா செய்வதே •பாசிசத்தின் மைய உத்தியாக இருந்தது.

உலக ஜனநாயகத்தில் இன்று மிக அதிகமாகப் பின்பற்றப்படும் தலைவர் என்றால் ஹிட்லர்தான். அவரது வழிமுறைகளை கடைப்பிடிக்காத அரசியல் கட்சிகள் உலகில் மிக மிகக் குறைவே. ஹிட்லரை தீமையின் மானுட உருவமாகச் சித்தரிக்கும் இடதுசாரிகளுக்கும் ஹிட்லரே வழிகாட்டி. ஹிட்லர் என்ற கிறித்தவ சக்தியே நமது இந்துத்துவ அமைப்புகளுக்கும் முன்னோடி.

எழுபதுகளில் சிவசேனையின் வளர்ச்சி இந்துத்துவ அமைப்புகளுக்கு சில புதிய வாசல்களை திறந்தது. ஒரு சிறிய குழுவாக இருந்த சிவசேனை அடிதடிகள் மூலமே புகழ்பெற்றது. அதற்கென நகர்புற ‘லும்பன்’களை ஒருங்கிணைத்து அமைப்பாக ஆக்கிக் கொண்டது. கிராமிய தொண்டர்படைகளை நம்பி இருந்த இந்து அமைப்புகளுக்கு நகர்ப்புற லும்பன்களின் பயன்பாடு பிரமிப்பூட்டுவதாக இருந்தது. சாதிய அடையாளம் இல்லாமல் திரளக்கூடியவர்கள் நகர்ப்புற லும்பன்கள். அவர்கள் கிட்டத்தட்ட அடையாளமில்லாதவர்கள், அடையாளமின்மையால் துயரப்படுபவர்கள். அவர்களுக்கு மத இன மொழி பிராந்திய அடையாளங்களை உருவாக்கி அளிப்பதன் மூலம் அவர்களை எளிதில் திரட்டமுடியும். அதேசமயம் தொண்டர்படைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய அரசியல் கல்வி எதையும  அவர்களுக்கு அளிக்க வேண்டியதில்லை.

நகர்ப்புற லும்பன்கள் ஏற்கனவே குற்றம் சார்ந்த ஒரு வாழ்க்கை முறை கொண்டவர்கள். ஆகவே அடிதடி போன்ற குற்றங்களில் தயக்கமில்லாமல் இறங்குவார்கள். உணர்ச்சிகரமாக தூண்டி விடக்கூட வேண்டியது இல்லை– ஆணையிட்டாலே போதும். அவர்களின் அடையாளமின்மை அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டபின் அவர்களைப் பாதுகாக்கிறது. அவர்களை தலைமையோ அமைப்போ கட்டுப்படுத்த முடியாது என்பதே சிக்கல். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாவிட்டால் அவர்கள் சக்தி வாய்ந்த ஆயுதம். அனைத்தயும் விட ஒரு கட்டத்தில் அவர்களை பயிற்சிபெற்ற குற்றவாளிகளின் படையாக பயன்படுத்தி பொருளியல் சுரண்டல்களில் ஈடுபட முடியும்.

அந்த ஆயுதத்தை தங்களுக்காகவும் இந்துத்துவ சக்திகள் பயன்படுத்திக் கொண்டமையின் விளைவே ‘பஜ்ரங் தள்’ போன்ற அமைப்புகள். பெயரே சொல்வது போல வால்முளைத்த , தீ வைக்கும், குரங்குக் கும்பல்கள் இவை. பாரதீய ஜனதா வட இந்தியாவில் ஒரு பெரும் சக்தியாக வளார்வதற்கு இந்த அமைப்புகள் உருவாக்கிய  அடிதடிகள் மற்றும் கலவரங்களின் பிரச்சார வல்லமை பெரிதும் உதவியது என்பது வரலாறு.

ஆனால் ஒரு கட்டத்தில் அனுமனைக் கும்பிட்டு காலடியில் ராமன் அமரவேண்டி வந்தது. இன்று இந்த அமைப்புகள் மீது ஆர்.எஸ்.எஸ் அல்லது பாரதிய ஜனதாவுக்கு கட்டுப்பாடே இல்லை என்று சொல்கிறார்கள். அவர்களை விட்டுவிடவோ வைத்துக்கொள்ளவோ முடியாத நிலையில் இருக்கிறது அது. பாரதிய ஜனதா கட்சி அவை உருவாக்கும் அரசியல் லாபங்களை அறுவடைசெய்கிறது, அவை உருவாக்கும் தர்மசங்கடங்களை விழுங்க முனைகிறது.

இதைத்தான் இன்று ஒரிஸாவிலும் கர்நாடகத்திலும் கிறித்தவர்கள் மீதான தாக்குதலின் பின்னணியாக நான் காண்கிறேன். ஒரிஸாவின் முழுமையான நிலைமை பற்றி இப்போது நாம் எதுவுமே சொல்ல முடியாது என்பதே என் எண்ணம். ஆங்கில இதழ்களும் அவற்றில் எழுதும் பத்தி எழுத்தாளர்களும்  எந்த நாளிலும் உண்மைகளைச் சொல்பவர்கள் அல்ல. அவர்கள் எடுக்கும் நிலைபாட்டுக்கு ஏற்ப கூச்சமில்லாமல் எதையும் திரித்துச் சொல்ல அவர்களால் முடியும். இன்னொரு பக்கம் இந்துத்துவ அமைப்புகள் அவர்களின் அரசியல் சார்ந்த உண்மைகளை மட்டும் சொல்கின்றன.

ஒரிஸாவில் கிறித்தவ மதமாற்றம் திட்டமிட்ட முறையில் பெரும் பணபலத்துடன் நடக்கிறது என்றும், மதம் மாறியவர்களும் மாற்றுபவர்களும் பூர்வீகப் பண்பாட்டை வெளிப்படையாக இழிவுசெய்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டும் இந்துக்கள் அங்கே பரவலாக கிறித்தவ அமைப்புகள் மேல் கடும் சினத்துடன் இருக்கிறார்கள். பழங்குடிகளுக்கான இட ஒதுக்கீட்டில் மதம் மாறிய கிறித்தவ தலித்துக்கள் பங்கு கேட்பதனால் அங்குள்ள மலைவாழ் மக்கள் சினம் கொண்டிருக்கிறார்கள். இச்சூழலில் அங்கே கிறித்தவ மதமாற்றத்துக்கு எதிராக பணியாற்றிவந்த லட்சுமணானந்த சரஸ்வதி என்ற துறவி கொல்லப்பட்டார். அந்த நிகழ்ச்சியை முன்வைத்து ஏற்கனவே கனன்றுகொண்டிருந்த கோபம் கலவரமாக வெடித்தது. அங்கே கிறித்தவ ஆலயங்கள் அழிக்கப்பட்டன. கிறித்தவர்கள் தாக்கப்பட்டு பல்லாயிரம் பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளார்கள்.

இதற்கு மேலும் விரிவான இன்னொரு பின்புலம் உண்டு.  20 வருடம் முன்பு கந்தமால் பகுதிகளில் நேரடியாகவே பயணம்செய்தவன் என்ற முறையில் என்னால் சிலவற்றைச் சொல்ல முடியும். ஒரிஸா மக்கள்தொகையில் கணிசமான ஒரு பகுதி பழங்குடிகள். அவர்கள் தலித்துக்களையும் விட கீழ்ப்படியில், கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி நம்பமுடியாத வறுமைச்சூழலில் வாழ்கிறார்கள். கடந்த ஐம்பதாண்டுகளில் சுதந்திர இந்திய அரசு உருவாக்கிய எந்த நலத்திட்டங்களும் அம்மக்களுக்குச் சென்று சேராமல் உயர்மட்ட சாதிய அமைப்பு முழுமையாகவே தடுத்து வருகிறது. நான் பட்டினியின் மிகப்பயங்கரமான கோலங்களை ஒரிஸாவின் காலகண்டி பகுதியில் கண்டிருக்கிறேன்.

இச்சூழலில் கிறித்தவ அமைப்புகள் உள்ளே புகுந்து அந்த அடித்தள மக்களுக்கு குறைந்தபட்ச பொருளியல் உறுதிகளை அளித்தன, பதிலுக்கு மதமாற்றம் செய்தன. ஒரிஸாவின் கிறித்தவ எண்ணிக்கை சரசரவென்று பெருகியது. எண்பதுகளில் ஒரிஸாவின் பட்டினிச்சாவுகள் தேசத்தை உலுக்கின. அந்தச் செய்திகள்தான் கிறித்தவ அமைப்புகளை அங்கே செல்லவைத்தன. ஒரிஸாவின்  கீழ்மட்டத்தில் சமூகத்தளத்தில் ஓர் அசைவை உருவாக்கியவை இந்தக் கிறித்தவ அமைப்புகளே. அந்த மதமாற்றம் கண்டு எச்சரிக்கை அடைந்து ஆர்.எஸ்.எஸின் வனவாசி கல்யாண் கேந்திரா போன்ற அமைப்புகளும் லட்சுமணானந்த சரஸ்வது போன்றவர்களும்  அங்கே பணியாற்ற வந்தார்கள்.

ஆக அரைநூற்றாண்டுகளாக முழுமையாக கைவிடப்பட்டு கிடந்த ஒரு மக்கள்சமூகத்துக்கு மீட்பின் ஒளியுடன் வந்தவர்கள் கிறித்தவர்களே. அவர்கள் மதமாற்ற நோக்கம், அதற்கு பின்னால் உள்ள ஏகாதிபத்திய திட்டம் ஆகியவற்றைப்பற்றி இந்துஅமைப்புகள் சொல்வனவெல்லாம் உண்மை என்று கொண்டாலும் நான் கிறித்தவ அமைப்புகளின் செயல்பாடு மகத்தானது என்றே சொல்வேன். அவர்கள் வராமலிருந்திருந்தால் இன்னும் நூறாண்டுகள் அம்மக்கள் பட்டினியில் உருகிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். கிறித்தவ மதத்தின் அடிப்படை இயல்புகள் சேவையும் மதமாற்றமும். அவற்றை அவர்கள் செய்வது இயல்பானதுதான்.

அம்மதமாற்றத்தைப் பற்றி கவலை கொண்ட இந்து அமைப்புகளின் செயல்பாடுகளையும் நான் வரவேற்கிறேன். ஒரிஸாவின் சாதிய இறுக்கத்தை குறைக்கவும், அடித்தள மக்களைப்பற்றி அச்சமூக அமைப்பு கவலைகொள்ளச்செய்யவும் அவர்களால் முடிந்தது என்றால் அது சிறப்பானதே. ஆம், கிறித்தவ மதமாற்றத்தை தவிர்க்க மிகச்சிறந்த வழி அவர்களை விட அதிக சேவையை அம்மக்களுக்கு வழங்குவதே. அதில் ஒரு போட்டி உருவானாலாவது அம்மக்களின் ஆயிரமாண்டுகால துயரம் நீங்குமென்றால் அதுவே நிகழட்டும்.

ஆனால் சட்டென்று இந்துத்துவ அமைப்புகள் ‘பஜ்ரங்தள்’ பாணியை இங்கே கையிலெடுத்ததென்பது ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் அராஜகம். அடித்தள மக்கள் நடுவே இருந்த அவநம்பிக்கையை ஊதிபெரிதாக்கவும் அதன்மூலம் வன்முறையை தூண்டிவிடவும் செய்யப்பட்ட முயற்சிகள் இந்துத்துவ அரசியல் இன்று வந்து நின்றிருக்கும் இடம் எத்தனை கேவலமான ஒன்று என்பதற்கான ஆதாரங்கள்.

ஒரிஸாவில் நிகழ்ந்த கொடிய வன்முறையின் நீட்சியாக கர்நாடகத்தில் நடந்த வன்முறைகளை அராஜகத்தின் உச்சம் என்று சொல்லவேண்டும். இரு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கிறது என்னும்போது இந்த வன்முறைகள்  அப்பட்டமான பொறுக்கித்தனம் என்றே பொருள்படுகின்றன. தன் சிறுபான்மையினரை கௌரவத்துடனும் அச்சமில்லாமலும் வாழ வைக்காத ஒரு சமூகம் நீதியின் அடிப்படைகளைப் பற்றிப் பேசும் தகுதியை முழுமையாகவே இழந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.

ஆனால் இந்த இந்துத்துவ சக்திகள் இந்து ஆன்மீகம் அல்லது இந்து மதம் அல்லது இந்து சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல. மிகமிகச் சிறுபான்மையினரான இந்த லும்பன்களுக்கு இந்து விழுமியங்களுடன் எந்த தொடர்பும் இல்லை. அதேசமயம் இவர்கள் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக நிகழ்த்தும் இந்த இழிசெயல்களுக்காக ஒவ்வொரு இந்துவும் நாணித் தலை குனியத்தான் வேண்டும். இதற்கான தார்மீகமான பொறுப்பை இந்து சமூகம் ஏற்றாக வேண்டும்.

‘அப்படியானால் ஒரு சமூகம் அதன் மீதான பண்பாட்டு படையெடுப்பையும் , விழுமிய அழிப்பையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா?’ என்றார் இந்துத்துவ இயக்கம் சார்ந்த நண்பர் ஆவேசமாக.  அந்த சமூகம் உண்மையிலேயே பண்பட்டதாக இருந்தால் அந்தப் பண்பாடு மீலமே அந்த தாக்குதலை எதிர்கொள்ளலாமே என்றேன். அதன் மீதான பண்பாட்டுத்தாக்குதலை ஏன் அது தனது குறைகளை களைவதன்மூலம் நேர்மையாக எதிர்கொள்ளக்கூடாது? அதற்கு அநீதி இழைக்கப்படுமென்றால் அந்த அநீதியை ஏன் அது உலகுக்குச் சொல்லக் கூடாது? ஏன் அது கருத்துரீதியாக, தார்மீக ரீதியாக எதிர்த்துப் போராடக்கூடாது? அப்படி போராடும் தார்மீக வலிமையை இழந்து, தெருக்குண்டர்களை வைத்துத்தான் அந்தப் பண்பாடு தன்னைக் காத்துக் கொள்ளும் என்றால் அது என்ன பண்பாடு?

ஏதேனும் ஒருவகையில் இந்து என தன்னை உணரும் ஒருவன் உரக்கச் சொல்லவேண்டிய தருணம் இது. இத்தகைய அராஜகத்தை ஒரு போதும் இந்துசமூகம் ஏற்றுக் கொள்ளாது. இந்து மறுமலர்ச்சி இந்த இந்துத்துவர்கள் சொல்வது இந்துமரபுக்குள் முல்லாத்தனத்தைக் கொண்டுவருவதுதான் என்றால்  நாளடைவில் அது இந்து ஞானமரபின் அடிப்படை விழுமியங்களையே அழிப்பதாகவே மாறும். அடிப்படையில் இந்து மரபை அது நிர்மூலம் செய்யும்.

இந்துத்துவர்களுக்கு ஒரு சொல். உங்கள் நோக்கம் வெறும் அரசியலதிகாரமும் ஊழல்செல்வமும் மட்டும் அல்ல என்றால், இந்துசமூகத்தின் வளர்ச்சியும் வாழ்வும் மட்டும்தான் என்றால், இந்த அராஜக வன்முறை உங்கள் அடிப்படை நோக்கங்களையே சீரழிப்பதாகும். உங்கள் தரப்பில் நீங்கள் சொல்லும் எளிய நியாயங்களைக்கூட மதிப்பிழக்கச்செய்வதாகும். இத்தகைய ஒரு நேரடி வன்முறை நிகழும்போது ‘அதற்கான காரணம் என்னவென்றால்…’என்று பேச ஆரம்பிப்பது போன்ற அயோக்கியத்தனம் ஏதும் இல்லை.ஆனால் நீங்கள் பெரும்பாலும் செய்வது அதையே. கற்பழிக்கும் கும்பல்களைக் கொண்டு இந்து தர்மத்தைப் பாதுகாக்க இறங்கியிர்க்கிறீர்களா என்ன? உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது.

பலவீனமான ஒரு சமூகமே வெற்றுக்குண்டர்களை உருவாக்குகிறது. இந்த தாக்குதல்கள் இந்து சமூகம் தார்மீகமாக எத்தனை தூரம் சீரழிந்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள். அதன் அடிப்படை விழுமியங்களை இழந்து வெறும் அடையாளம் தரித்த வெறிக்கும்பலாக அதை ஆக்கும் •பாசிஸ அரசியலின் வெற்றிக்கான சான்றுகள். இந்த அராஜகக்கும்பல்களுக்கு எதிராகச் சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லும் நம் பல்லாயிரமாண்டும் பண்பாட்டைக் காக்கும் மந்திரங்கள் என்று சொல்லத்தோன்றுகிறது.

முந்தைய கட்டுரைமதம் கடவுள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகிறிஸ்தவர் மீது தாக்குதல்:கடிதங்கள்