பாலமுருகன் பதில்

சீ முத்துசாமி தமிழ் விக்கி

10 மார்ச் அன்று சிதனா என்கிற மலேசிய போலி அடையாளவாதி ஜெயமோகன் அவர்களின் வலைத்தலத்தில் ஜெயமோகனின் விமர்சனத்தைத் தடுமாற்றங்கள் நிரம்பியவை என மேதாவித்தனமான மதிப்பீடுகளுடன் என்னையும் சாடி ஒரு சிறு விமர்சனத்தை வெளியீட்டிருந்தார்.

சிதனா என்கிற நன்கறிந்த மலேசிய படைப்பாளி ஒருவர் இருக்கிறார், அண்மையில் சமுத்திரக்கனி, அஸ்ட்ரோ தமிழ்ப் பிரிவு தலைவர், மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் அவர்களால் கூட்டுச் சேர்ந்த முயற்சியில் அவரது நாவலின் மூலம் ஏமாற்றப்பட்டவர், மலேசியாவில் சிறப்புப் பரிசை வென்ற அவரது நாவலைக் குறைந்த விலையில் வாங்கி அதை மெகாத்தொடராக சன் தொலைகாட்சி என்கிற மெகாத்தொடர் குப்பைகளின் உற்பத்திக்கும் மையத்தில் வெளியீட்டிருந்தது குறிப்பிடத்தக்கது- மேலும் தற்பொழுது எந்தத் மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் எழுதாமல் எந்தச் ச்அமரசத்திர்கும் உட்படாமல் அநங்கம் வல்லினம் போன்ர இதழ்களில் மட்டுமே எழுதி வரும் ஓர் எழுத்தாளர் சிதனா. ஆகையால் வாசகர்கள் அந்த சிதனாவையும் இந்தச் சிதனாவையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்தச் சிதனா அதுவும் மலேசியாவில் இவ்வளவு தீவிரமாக வாசிக்கக்கூடிய பெயர் கொண்ட சிதனாவை நான் இப்பொழுதுதான் திடீரென்று அறிகிறேன், மேலும் கட்டாயம் அது உண்மை அடையாளமாக இருக்கவும் வாய்ப்பில்லை என சில நண்பர்கள் உறுதியாகத் தொலைப்பேசியின் மூலம் தெரிவித்திருந்தார்கள். பரவாயில்லை யாராக இருந்தால் என்ன. . . .

ஜெயமோகன் அவர்கள் தனது தீவிரமான எழுத்தின் மூலமும் விமர்சனத்தின் மூலமும் நன்கு அறியப்பட்ட முக்கியமான தமிழ் எழுத்தாளர் மேலும் பல முரண்பாட்டு விமர்சனங்களுக்கும் எதிர்வினைகளுக்கும் தூற்றுதலுக்கும் இன்றும் அவரது அடையாளமும் எழுத்தும் ஆளாகி வருவதை அவர் அறிந்திருக்க, இந்த மாதிரி எதிர்வினைகளுக்கு முன் அல்லது அவதூறுகளுக்கு முன் நீங்கள்(ஜெயமோகன்) செய்யும் மிக முக்கியமான நடவடிக்கை என்ன என்பதை சிதனா போன்றவர்களுக்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். காரணம் ஒவ்வொரு எழுத்தாளனும் பல விமர்சனங்களையும் அவதூறுகளையும் தடைகளையும் கடந்துதான் இன்றளவும் எழுதியும் தனக்குத்தானே பயிற்சியளித்தும் வருகிறான் என்பதைக்கூட அறியாத அப்பாவியாக சிதனா இருக்கிறார்.

எழுத்தாளன் என்பவன் எவ்வகையிலும் முரணாக இயங்கக்கூடாது என்றும் எழுத்தாளன் என்றால் ஒவ்வொரு தமிழ் வாசகனுக்கும் தீராத திருப்தியை அளித்த வண்ணம் இருக்க வேண்டும் என்றும் மதிப்பீடுகள் மிகப் பத்திரமாகத் திணிக்கப்படுகிறது. தனித்தனியாக உடைந்து கிடக்கும் இந்தச் சமூகத்தின் எல்லாம் வகையினருக்கும் ஏற்புடைய ஒரு வடிவமாகத்தான் ஓர் எழுத்தாளன் மிக நேர்த்தியாக ஒழுங்கின் பிரதியாக இயங்க வேண்டும் என்கிற கூர்மையான ஒரு விமர்சனம் பலருக்கும் உண்டு. இந்த ஒழுங்குகளை உடைத்துக் கொண்டு வெளிவருவதுதான் இளம் எழுத்தாளன் தனக்கான வெளியை இலக்கிய் உலகில் பாதுகாப்பான முறையில் உருவாக்கிக் கொள்ள முடியும் என நம்புகிறேன். இல்லையெனில் சனரஞ்சக பரப்பில் சிக்கிக் கொண்டு சராசரி எழுத்தாளனாக எவ்வித வளர்ச்சிக்கும் உட்படாமல் போய்விடும் அபாயமும் இருக்கிறது. எழுத்தாளனுக்கும் சேர்த்து அவனுடைய தேர்வையும் சுதந்திரத்தையும் சிதனா போன்ரவர்களின் அவதூறான மொழியின் வழியில் கட்டமைக்க முயலும் ஒரு முட்டாள்த்தனத்தைத்தான் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

ஜெயமோகன் அவர்கள் என் படைப்பு மீதான விமர்சனத்தை மிகவும் ஆரோக்கியமான மொழியில் தேர்ந்த விமர்சனத்துடன் முன்வைத்திருக்கும் விதம்தான் ஒவ்வொரு இளம் படைப்பாளியும் எதிர்ப்பார்ப்பது. ஆனால் அதற்கு எதிராக கிண்டல் அடிப்பதையும் கேலி செய்வதையும் இலக்கியம் விமர்சனம் என்றால் அதைக் கடக்கும் ஒரு அலட்சியத்தை நாடுவதுதான் சிறந்த தேர்வு எனப்படுகிறது. தமிழக மூத்த எழுத்தாளர்களில் பலரும் இப்படிக் கிண்டலையும் கேலியையும் முன்வைத்து பிறரை விமர்சிக்கும் ஒரு உத்தியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஜெயமோகன் எழுத்தின் மீது எனக்கு ஆர்வம் உண்டு. மலேசிய மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள்தான் ஜெயமோகனின் “ஆயிரம்கால மண்டபங்கள்” எனும் சிறுகதை தொகுதியைக் கொடுத்து வாசிக்க வாய்ப்பளித்தார். பிறகு மின்னஞ்சல்கள் மூலம் அவ்வப்போது அவருடன் பிறர் கொண்டிருப்பது போன்ற ஒரு சாதாரண தொடர்பு மட்டுமே எங்களுக்கிடையில் உண்டு. இதில் எந்த அதிசயமும் கிடையாது. மேலும் தொலைப்பேசியின் மூலம்கூட தொடர்புக் கொள்ள முயற்சித்தது கிடையாது. ஜெயமோஜன் அவர்கள் அவரது ஒரு கட்டுரையில் மலேசியாவில் தீவிரமாக எழுதி வருபவர் பாலமுருகன் என்ற ஒரு சொல்லை எழுதியதற்காகப் பலரும் பல மாதிரியாக புரிந்துகொண்டிருக்கக்கூடும். மற்றபடி சிங்கப்பூரில் நண்பர்களைச் சந்தித்தபோது ஜெயமோகன் தங்களைப் பற்றி எழுதியுள்ளாரே கவனித்தீர்களா என அவர்களே கேட்டார்கள் தவிர நான் எந்தவித தம்பட்டமும் அடிக்கவில்லை. சிதனா போன்றவர்கள் கொண்டிருக்கும் பொதுபுத்தி என்கிற அறியாமையை மன்னித்துவிடலாம். மேலும் இணையம் மூலம் வளர்ந்தும் அரிமுகப்படுத்தப்பட்டும் வரும் தமிழ் வெளிக்குள், வலைப்பதிவுகளின் அறிமுகம், பிறர் எழுத்தை இன்னொருவர் அறிமுகம் செய்வதும், விமர்சனம் என்கிற பெயரில் யாரையும் எப்பொழுதும் விமர்சிக்கவும், தனது எழுத்திற்கு தானே முழு உரிமையும் கொண்டவர்களாகவும் ஒரு பெரும் பரப்பினில் இயங்கி வரும் கணினி படைப்புலகம் குறித்து பரந்த அனுபவம் குறைவாக இருக்கும்பட்சத்தில் சிதனாவின் அறியாமையை மன்னித்து விடலாம்.

எனது இலக்கிய முயற்சிகள் சமீபத்தில் தொடங்கியவைத்தான். 5 வருடத்திற்கு முன் தான் எழுதத் துவங்கினேன், அதுவும் முதல் 2 வருடங்கள் சனரஞ்சக வெளிக்குள் மிதமான வாசிப்பின் மூலம் சனரஞ்சக எழுத்தையே எழுதி வந்தேன். பிறகு வாசிப்பின் தளம் மாறத் துவங்கியதும்தான் தீவிரமான வாசிப்பிற்கு என்னை உட்படுத்தினேன். எனது வாழ்வனுபவங்களைப் படைப்புகளாக மாற்றும் முயற்சியில் மொழி ரீதியிலும் கலை ரீதியிலும் நான் அடைய வேண்டிய எல்லையை அல்லது இடத்தை உறுதியாக யாராலும் தீர்மானிக்க இயலாதபோதும், இந்த 5 வருட முயற்சிக்கு ஜெயமோகனின் ஆரோக்கியமான விமர்சன மொழிகளைக் கொண்ட விமர்சனமும் பார்வையும் வரவேற்க்கத்தக்கதே. யாரும் எங்கும் எந்த இடத்திலும் திருப்திய்டைந்துவிடக்கூடாது என்பார்கள். இன்னமும் நான் வாசிக்க வேண்டியதும் விவாதிக்க வேண்டியதும் கற்றுக் கொள்ள வேண்டியதும் அதிகமாக உள்ளன. ஒரு சிலரைப் போல நான் திடீர் ஞானியாகிவிட முடியாது, அதே சமயம் எந்தக் கோட்பாட்டையும் எந்தப் புரிதலையும் நான் விவாதத்திற்குக் கொண்டு வரவே கூடாது என்று தடுக்கவும் எவருக்கும் உரிமை கிடையாது. அவரவர் சுதந்திரத்தையும் எல்லையையும் அவரவர் நன்கு அறிந்து கொண்டால், நமது இலக்கிய பரப்பில் விமர்சனம் என்கிற பெயரில் அடர்ந்து வரும் கிண்டலும் கேலியும் அதீதமான வசைகளுடன் நிகழாது என்றே சொல்லலாம். எதையும் ஆரோக்கியமாக அணுகும் முதிர்ச்சி பலருக்கு இங்குக் கைவரவில்லை.

புதியதாகக் கையில் கிடைத்த ஒரு பொருளை அதைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பே அதை உபயோகித்துப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் எனது  சிறு வயது முதல் எனக்குள் இருக்கும் ஒரு பழக்கம். அது சரியா தவறா என விவாதித்து உங்களை நீங்கள் சிரமப்படுத்திக் கொள்ள வேண்டாம் அன்பிற்கினிய நண்பர்களே. எனக்குள் இன்னொரு புதிய பழக்கமும் முளைத்துள்ளது. எத்துனை கடுமையான கேலி வார்த்தையாக இருந்தாலும் வசை சொல்லாக இருந்தாலும், அதை அப்படியே விழுங்கி வெளியே தூக்கியெறியும் உத்தி. இந்தத் தொழில்நுட்பத்தை அண்மையில்தான் பழகிக் கொண்டேன். பின்நவீனத்துவத்தைப் பற்றி மேலும் மேலும் விவாதிக்கவும் எழுதவும் நான் தயாராக இருக்கிறேன். மேலும் அதன் தொடர்பாக வாசிப்பதிலும் ஆர்வம் கொண்டிருக்கிறேன், வாசித்துக் கொண்டும் இருக்கிறேன். இந்த ஆர்வத்தை என்னை மீறியது என எப்படி அடையாளப்படுத்த முடிகிறது என்பதில் சிரு குழப்பம். நான் எழுதும் “அரைகுறை” பின்நவீனத்துவம் சிலருக்கு அபத்தமாகவும் சிலருக்கு அது புரியாமலும் சிலருக்கு அது அவர்களின் மலச்சிக்கலுக்கு மருத்துவத் தீர்வாகவும் இருக்கக்கூடும். அதற்கு அவர்களே பொறுப்பு.

ஜெயமோகன் அவர்களுக்கு, மலேசிய இலக்கியம் குறித்து தங்களுக்கிருக்கும் புரிதலையும் விமர்சனத்தையும் உங்களின் சிதனாவிற்குரிய பதிலில் நனகறிய முடிகிறது. வேகமாக கரைந்து மறைந்து வரும் தமிழ்வாழ்க்கையின் பின்புலத்தில் இருந்து அவர்கள் எழுதுகிறார்கள்தீவிர எழுத்தை உருவாக்கும் கலாச்சாரச் சூழலும் கலாச்சார நெருக்கடிகளும் அங்கே இல்லை” இதை இவ்வளவு திட்டவட்டமாகத் தாங்கள் முன்வைத்திருப்பதைப் பார்த்தால் எனக்கொரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. மலேசிய அரசியல் பின்புலத்தை நாவலாக எழுதுவதற்காக எழுத்தாளர் அகிலன் அவர்கள் இங்கு வந்திருந்து, பல கலா ஆய்வுகள் செய்து அவருடைய நாவலை எழுதினார். ஆனால் அந்த நாவல் ஒரு ரொமெண்டிக்சம் தன்மையைக் கொண்டிருப்பதாகப் பலரும் விவாதித்துக் கேட்டதுண்டு. நேரிடையாக வாசிக்கும்போது அவர் மலேசிய அரசியல் பின்புலத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஏதோ ஒரு கற்பனையை மட்டும் அள்ளி வீசிவிட்டு சென்றிருக்கிறார். அப்படியொரு புரிதல் உங்களுக்கு இருக்கும் என்று நான் உடனடியாக மதிப்பீட விரும்பவில்லை. உங்களிடம் நான் முன்வைக்கும் கேள்விகள் பின்வருமாறு:

1.     தீவிர எழுத்தை உருவாக்கும் கலாச்சாரச் சூழல் என்றால் என்ன?

2.     அது ஏன் மலேசியாவில் இல்லை என்று இத்துனை உறுதிப்பட கூறுகிறீர்கள்?  

“ஆக இப்பகுதிகளில் இருந்து வெளிவரும் ஆக்கங்கள் பொதுவாக கலை எழுச்சியற்றவை”

 

3.     கலை எழுச்சிக்குரிய எழுத்து வகையென நீங்கள் குறிப்பிடும் எழுத்தின் கலையைச் சொல்லவும்.

4.     மலேசியாவிலிருந்து வரும் ஆக்கங்கள் பொதுவாகக் கலை எழுச்சியற்றவை என்பதை எப்படி நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள்? இத்தகைய நிலப்பரப்பில் உங்களின் பார்வையையும் கடந்த எம்மாதிரியான கலை எழுச்சிமிக்க இலக்கியம் வரக்கூடும் என நினைக்கிறீர்கள்?

இந்த விளக்கம் எனக்கு மட்டுமல்ல இன்னும் சில நண்பர்களுக்கு மலேசிய இலக்கியத்தின் மீதான தங்களின் பொதுவான விமர்சனம் குறித்த புரிதலுக்கு மேலும் வலுவூட்டும் என நம்புகிறேன். மேலும் என் எழுத்தின் மீதான உங்களின் விமர்சனத்திற்கும் மேலும் நவீன இலக்கியம் அறிமுகம் போன்ற முயற்சிகளின் மூலம் வெளிப்படும் தங்களின் அக்கறைக்கும் எனது நன்றி.

குறிப்பு: ஜெயமோகன் போன்ற பரவலாக அறியப்பட்ட ஒரு அடையாளத்தின் மூலம் புகழப்பட்டால்தான் ஒரு நல்ல எழுத்தாளனாக வளர முடியும் அல்லது அவரைப் போன்றவர்கள் பரிந்துரை செய்தால்தான் அவர்கள் நல்ல இலக்கியவாதியாக இருக்க முடியும் என்கிற புரிதலுக்குள் தன்னை முழுமையாக ஒப்படைத்திருக்கும் சிதனா போன்றவர்கள் ஒரு வாசகனாக/வாசகியாக மேலும் வளர வேண்டும் என அவரின் குலத்தெய்வங்களை வேண்டிக் கொள்கிறேன்.

கே.பாலமுருகன்

மலேசியா

http://bala-balamurugan.blogspot.com/

[email protected]

முந்தைய கட்டுரைஞானியர், இரு கேள்விகள்
அடுத்த கட்டுரையோகம், ஒரு கடிதம்