ஞானியர், இரு கேள்விகள்

வணக்கம்,

தாங்கள் காஞ்சங்காடு சுவாமி நித்யானந்தர் குறித்து எழுதியிருந்ததைப் படித்தேன்.

இந்த நேரத்தில் இந்தக் கட்டுரை சிலிர்ப்பாக இருந்தது.

வெறுமனே கோயில்களை மட்டும் சுற்றி வந்தேன். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், ரமணர் என்று படித்த பிறகு சந்யாசிகள், மகான்கள் அவர்களின் சமாதிக் கோயில்களைக் காணும் ஆர்வம் ஏற்பட்டது.

நான் சக்தி விகடன் பொறுப்பாசிரியராக இருந்தபோது,  திருவடி தரிசனம் என்ற தலைப்பில் மகான்களைப் பற்றியும் சமாதிக் கோயில்கள் பற்றியும் தொடரை எழுதிவந்தேன்.

அதற்காக பல்வேறு மகான்களைப் பற்றிய குறிப்புகளை சேகரித்துள்ளேன். காஞ்சங்காடு ராமதாஸர் உள்பட. அவ்வகையில் உங்கள் கட்டுரை அதிகமாக ஈர்த்தது.

ஒருமுறை வாசகி ஒருவர், ஏன் சார் சமாதியான மகான்களை மட்டுமே பத்திரிகையில் வெளிப்படுத்துகிறீர்கள்… இப்போது இருக்கும் மகான்களைப் பற்றியும் சொன்னால், ஏதாவது பலன் எங்களுக்குக் கிடைக்குமே… என்று கேட்டார். நான் அதற்கு, எங்கள் கொள்கை அளவில் இதைப் பற்றி யோசிக்க வில்லை. பின்னர் பார்க்கலாம் என்று சொன்னேன். காரணம், இப்போது நடந்திருக்கும் விஷயம்போல் நொடிப்பொழுதில் எல்லாம் மாறிவிடலாம்… தினமலர் ஆன்மிக மலரில் அந்த ஒரு பக்கத்தைக் கிழிக்க பட்ட பாடை நண்பர் ஒருவர் சொல்லி வருத்தப்பட்டார்.

சுயநலன் வேண்டி ஒருவரை ஆராதிக்க விரும்புவதும், ஒன்றும் நடக்கவில்லை என்றால் அவரைத் தூற்றுவதும் இந்த உலகியல் வாழ்வில் சகஜமாகிவிட்டது. இந்தப் போக்குக்கு மனிதனின் ஆசை என்பதை விட, நுகர்கலாசாரப் பெருக்கமே காரணம் என்று தோன்றுகிறது. தங்கள் சாட்டையடி கட்டுரைகளையும் வழிகாட்டும் தெளிந்த குறிப்புகளையும் படித்து வருகிறேன்.

மிக்க நன்றி.

அன்பன்,

செங்கோட்டை ஸ்ரீராம்

நித்ய சைதன்ய யதி

அன்புள்ள ஸ்ரீராம்

நித்ய சைதன்ய யதியிடம் ஒருமுறை ஒருவர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டபோது நான் இருந்தேன். ‘சமகாலத்தில் உள்ள ஒரு ஞானியை ஏன் நம்மால் சுட்டிக்காட்ட முடிவதில்லை?’ என்று அவர் கேட்டார். நித்யா ‘சுட்டிககட்டினால் மட்டும் உங்களுக்கு தெரிந்துவிடுமா? எந்த அளவுகோலை வைத்துக்கொண்டு அவரை நீங்கள் ஞானி என்று மதிப்பிடுவீர்கள்?” என்றார். ‘அந்த அளவுகோல் உங்களிடம் இருக்கும் என்றால் எவரும் சுட்டிக்காட்டவேண்டிய அவசியமே இல்லையே”

அருகே நின்ற என்னைச் சுட்டிக்காட்டி ”ஒரு பெரிய இலக்கியவாதி இங்கே நிற்கிறான். நீங்கள் இலக்கியமே வாசிக்காதவர் என்றால் இவரை நான் உங்களுக்கு எப்படி அடையாளம் காட்டுவேன்?” என்றார் நித்யா. ”எபப்டி நீங்கள் இவரை புரிந்துகொள்வீர்கள்? இவர் இலக்கியவாதி என்பதற்கான புற அடையாளம் ஏதேனும் இருக்கிறதா என்று பார்ப்பீர்கள் இல்லையா? ஜிபப போட்டிருக்க வேண்டும். நல்ல தாடி இருக்க வேண்டும்… இவர் முழுக்கை சட்டை போட்டு ஒரு பாவம் அரசாங்க ஆபீசர் மாதிரி இருக்கிறார். எப்படி கண்டுபிடிப்பீர்கள், எப்படி நம்புவீர்கள்?

ஞானிகள் எங்கும் இருக்கிறார்கள். ஞானிகள் யாரென்ன்று அறிந்து தேடுபவர்கள் கண்டுகொள்கிறார்கள்.  அதை ஒரு போலிஈஸ்காரனோ இதழாளனோ கண்டுபிடிக்க முடியாது. குருவை சீடன் மட்டுமே கண்டு பிடிக்கமுடியும்

சரி இதைக் கேட்கிறீர்கள், குமாரன் ஆசானை ஏன் வாழ்ந்தகாலத்தில் மகாகவி என்று கேரளம் கண்டுகொள்ளவில்லை. ஏன் சுப்ரமணிய பாரதியை கண்டுகொள்ளவில்லை. சமகாலத்தில் ஏன் அவர்களைப்போல மகா கவிகள் இல்லை என்று நீங்கள் கேட்கலாம் இல்லையா? இருக்கிறார்கள், கண்டுகொள்ள உங்களிடம் ரசனை இல்லை அவ்வளவுதான்

மாமனிதர்கள் அடிக்கடி வருபவர்கள் அல்ல. வந்தாலும் அவர்களை சாமானியர்களால் கண்டுபிடிக்க முடியாது. பெரும்பாலும் சாமானியர்கள் அவர்களை பயப்படுவார்கள் வெறுப்பார்கள் நிராகரிப்பார்கள். ஏசுகிறிஸ்துவை அவரது சமகாலத்தின் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நிராகரித்தார்கள் அல்லவா? சிலுவையில் ஏற்றினார்கள் அல்லவா? பெரும் சிந்தனையாளர்கள் பெரும் கலைஞர்கள் எல்லாருக்குமே அதே விதிதான்.

ஞானியை அறிய ஞானம் வேண்டும். கவிஞனை அறிய மனதில் கவிதை வேண்டும். வெளிச்சத்தை விரலால் தேடமுடியுமா என்ன?”

நித்யாவின் சொற்களை இப்போதும் காதில் கேட்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

நித்ய சைதன்ய யதியிடம் நீங்கள் எந்த அற்புதத்தையும் கண்டது இல்லையா?

சரவணன் எம்

அன்புள்ள சரவணன்,

சாட்டில் வந்து கேட்கிறீர்கள். தனி மடலாக பொதுவில் இதை எழுதுகிறேன்.

நடராஜ குருவிடம் ஒருவர் வந்து ”குரு சாய்பாபா  வெறும் கையால் அந்தரத்தில் இருந்து லட்டு எடுத்துக் கொடுக்கிறார்” என்றார். நடராஜகுரு சீரியஸாக ”சின்ன லட்டா? இல்லை தேங்காய் அளவுக்கு பெரிதா?” என்றார். ”சின்ன லட்டுதான் குரு, நெல்லிகாய் அளவுக்கு சின்னது” என்றார் அவர்.

”நல்லவேளை, அந்த அளவுக்காவது இயற்பியல் விதிகளை கடைப்பிடிக்கிறாரே” என்றார் நடராஜகுரு ஆறுதலாக.

நடராஜகுரு

நித்யாவிடம் ஒரு சுவாமி வந்து சாய்பாபாவின் அற்புதங்களைச் சொன்னார். அதேபோல நீங்களும் அற்புதங்களைச் செய்ய வேண்டும் குரு என்றார்

நித்யா ”அற்புதம் தானே, வா காட்டுகிறேன்” என்று கூட்டிசென்றார். வெளியே கொண்டு சென்று ஒரு தென்னை மரத்தைக் காட்டினார். ”பாத்தாயா, ஒரு தென்னைமரத்தின் உச்சியில் ஐம்பது லிட்டர் வரை தண்ணீர் இருக்கும். எந்த மோட்டாரும் இல்லாமல் இத்தனை உயரத்துக்கு எப்படி தண்ணீர் செல்கிறது? அந்த அற்புதத்தைப் பற்றி என்றாவது யோசித்ததுண்டா?” என்றார்

இந்தபுவி முழுக்க அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன. அந்த பெரும் அற்புதங்களை, அந்த அற்புதம் மூலம் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு துளியிலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒன்றை, காணும் கண் இல்லாத எளிம மக்களே இயற்பியல் விதிகள் மீறப்பட்டால் மட்டுமே அற்புதம் என்று நினைக்கிறார்கள்.

மாறாக இயற்பியல் விதிகளே பெரும் அற்புதங்கள். சலிம் அலியின் பறவைகளைப் பற்றிய நூலை நித்ய சைதன்ய யதி ‘அற்புதங்களின் அகராதி” என்று சொல்வார்

எந்த ஞானியும் இத்தகைய லௌகீக அற்புதங்களைக் காட்டமாட்டார். அவர்கள் காட்டும் அற்புதங்களே வேறு. நித்ய சைதன்ய யதி, நடராஜ குரு போன்றவர்கள் முறைப்படி அறிவியல் கற்றவர்கள். முனைவர் பட்டங்களை வாங்கி பல்கலைகழகங்களில் பணியாற்றியவர்கள். ‘சுத்த அறிவே சிவமென கூவும் சுருதிகள்’ அறிந்தவர்கள். அறிவே இருப்பாகி அறிவிலமர்ந்தவர்கள்.

அவர்களின் அற்புதமென்பது முழ்மையறிவே ஓர் ஆளுமையாக ஆகும் மாயம்தான்.

ஜெ

முந்தைய கட்டுரைபுத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்
அடுத்த கட்டுரைபாலமுருகன் பதில்