சாதியும் அடையாளமும்

மதிப்பிற்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு,

வணக்கம்.நான் உங்களுக்கு ஏற்கனவே எழுதியுள்ளேன்.

சாதி பற்றிய எதிர்வினைகள் முடிந்த பின்னே எழுத வேண்டுமெனக் காத்திருந்தேன்.தங்களின் எழுத்துகளை 80% வாசித்துள்ளேன்.எனவே இதைப்பற்றி உங்களால் மட்டுமே கூற இயலும் என்று எண்ணுகிறேன்.

நான் சாதிமறுப்பு மணம் புரிந்துகொண்டவள். சிறிய சாதிவேறுபாடுதான். எங்கள் இரு குடும்பங்களுமே திராவிட இயக்கப் பின்னணியிலானவை. பெரும் போராட்டங்களுக்குப் பின் இரு வீட்டினரும் சம்மதித்து திருமணம் செய்து வைத்தனர்.

ஏறக்குறைய உங்கள் திருமணம் போலவே நான் வீட்டிலிருந்து வெளியேறி வந்தேன்.அதன் பிறகே இரு வீட்டிலும் அழைப்பிதழ் அச்சிட்டு மணமுடித்தனர்.வட மாவட்டங்களில் எங்கள் இனத்தினர் பற்றி தாங்கள் அறிவீர்கள்.வெட்டு குத்துக்கு அஞ்சாதவர்கள். என் பிறந்த வீட்டினரின் முரட்டுத் தனங்களுக்கும் மிரட்டல்களுக்கும் சற்றும் அஞ்சாமல் என் கணவர் என்னை மணமுடித்தார்.பன்னிரண்டாண்டுகள் ஆகிவிட்டன.இப்பொழுது எல்லா உறவுகளும் சரியாகி விட்டது.

என்னுடைய மன வருத்தம் இதுதான்.முற்போக்கு சிந்தனை கொண்ட என் கணவருமே தற்பொழுது சாதிப்பற்று கொண்டு விட்டாரோ என்பதுதான்.நாற்பது வயது நெருங்குகையில் அதுவரை கொண்ட புரட்சி பகுத்தறிவு எல்லாம் கொஞ்சங்கொஞ்சமாக மறைந்து ஆதி புத்தி வந்து விடுகிறதோ என தோன்றுகிறது.என் புகுந்த வீட்டினரும் என்னை ஏற்றுக் கொண்டனர்.எல்லா மருமகள்களையும் விட என் சமையலையும் பழக்கங்களையும் அரசுப் பணியையுமே உயர்வாக கூறுகிறார்கள்.ஆனால் வீட்டில் எதாவது குலதெய்வ வழிபாடு,ஒன்று கூடுதல் என்று வரும் போது அவர்கள் சாதி வழக்கங்கள் எனக்கு தெரிந்தாலும் அங்கு நான் சற்று அந்நியமாகவே உணர்கிறேன்.

இதில் தற்போது என் கணவரும் அவர்களுடன் இணைந்து தன் சாதிப் பெருமை பேசுவதைப் பார்க்கிறேன்.அவர் என் மீது கொண்ட காதலோ பற்றோ குறையவில்லை.ஆனால் சாதி என்று வரும்போது ஆரம்பத்தில் இருந்த அவரின் பரந்த மனப்பானமை மாறிவிட்டது.நாங்கள் இருவரும் பணிபுரிவது ஒரே வட்டத்தில்.இங்குமே அவர் சாதிப்பெண்களுக்கு கார்டியன் போல பேசுகிறார்.அவர்களுக்கு ஒன்று என்றால் மட்டும் சப்போர்ட்.எங்க சாதிப் பொண்ண வேற பையன் கட்டக்கூடாது என்கிறார்.

இத்தனைக்கும் பத்தாண்டுகளுக்கு முன் எத்தனையோ காதல் திருமணங்களை நடத்தி வைத்தவர்.குறிப்பிட்ட வயதிற்குப்பின் இப்படி நிறைய பேர் மாறுகிறார்கள்.நான் நிறைய பேரைப் பார்க்கிறேன்.நிறைய படைப்பாளிகளிலும் இந்த மாறுதல்களை அவர்களின் எழுத்துகளிலேயே உணர்ந்திருக்கிறேன்.

நீங்கள் கூறுவது போல ஆணின் காதல் பெருங்காதலாக இருக்கலாம்.ஆனால் தன் சுயத்தை இழப்பது பெண்ணே.

நான் பொது வெளியில் பலரைப் பார்ப்பவள்.என் குழந்தைகள் இருவருமே என் கணவரின் சாதி, பழக்கங்கள் என்றே வளர்கின்றனர்.இது நான் பார்க்கும் நிறைய கலப்பு மணங்களில் நிதரிசனம்.பெண்ணின் அடையாளம் அழிக்கப்படுகிறது.

காதலில் வேண்டுமானால் ஆண்கள் விட்டுத்தரலாம்.திருமண உறவில் அதுவும் சாதி மாறும் மணங்களில் அதிகம் அடையாளம் இழப்பது பெண்களே.நீங்கள் உங்கள் வாழ்வில் இல்லை என்று சொல்லலாம்.ஆனால் சாதாரண நடுத்தரக் குடும்பங்களில் இது தான் உண்மை.

என் புகுந்த வீட்டினர் எதாவது ஒரு இளம்பெண்ணைப் பற்றி அது நம்ம சாதிப் பொண்ணு,அந்த அந்தஸ்து யாருக்கு இருக்கும் என்றெல்லாம் சொல்லும் போது என் கணவரும் ஆமாம் என்று பெருமை பேசுகையில் நான் சாதி மாறி திருமணம் செய்தது தவறோ அந்தந்த இனத்தில் தான் பெருமிதமோ என்றே தோன்றுகிறது.என் கணவரிடம் கேட்டால் நான் உன்னை நல்லாத்தான வச்சிருக்கேன் என்கிறார்.

என் அனுபவத்தில் மட்டும் இதை எழுதவில்லை.மேலும் சில நண்பிகளின் அனுபவங்களும் இப்படித்தான்.(பணிபுரியுமிடத்தில் சாதி மாறி திருமணம் புரிந்த எங்களை தனி சாதியாக ஒதுக்கி விடுகின்றனர்) .என் பிறந்த வீட்டிற்கு சென்றால் என் அண்ணியும் ,சகோதரிகளும் நீ உங்க மாமியார் வீட்டு முறையில தான சாமி கும்புடுவ என்கிறார்கள்.இது பெரிய விஷயமா என்று தோன்றலாம்.அந்த புறக்கணிப்புகளே என்னைப் போன்ற பெண்களை காயப்படுத்துகின்றன.

எங்கள் வட்டாரத்தில் என் திருமணம் புகழ் பெற்றது.எனவே நிறைய இளம் பெண்கள் காதல் பற்றி என்னிடம் ஆலோசனை கேட்பதுண்டு.

ஜெ சார் மன வருத்தத்துடன் சொல்கிறேன்.வட மாவட்டங்களில் இப் பொழுது சாதிய வேறுபாடுகள் முன்பைவிட மிக அதிகம்.நான் என்னிடம் கேட்பவர்களிடம் கூறுவது இதைத்தான் வேறு மதத்தில் வேண்டுமானால் கூட திருமணம் செய்யலாம்.ஆனால் சாதி மாறி திருமணம் வேண்டாம்.

ஏனெனில் இங்கு கிறித்தவ முதலியார்களும்.இந்து முதலியார்களும் ஒன்றாகி விடுகின்றனர்.அதே போலத்தான் கவுண்டர்,நாயுடு,கருநீகர்.ஆச்சாரி என எல்லா சாதிகளும்.

அதிகம் வாசித்து உலக இலக்கியங்களையும் உங்களையும் அறிமுகம் செய்து கொண்ட எனக்கு இந்த சாதீய போக்குகள் மன வருத்தத்தை அளிக்கின்றன
.
என் கணவர் கூறுவது போல அவரின் காதலோ,அக்கறையோ என்மீது குறையவில்லை மாறாக அதிகரித்து தான் உள்ளது.ஆனால் சாதி என்று வரும்போது அவரின் பற்று என்னை வருத்தமுற வைக்கிறது.குழந்தைகளுக்காக மௌனமாகி விடுகிறேன்.ஆனாலும் இதற்கு யாராவது பதில் கூற மாட்டார்களா என மனம் ஏங்குகிறேன்.

இத்தனை சாதி வெறி கொண்ட இந்திய சமூகத்தில் காதல் எதற்கு என்றே தோன்றுகிறது.இளம் வயதில் காதலிக்கும் ஆண் வேறு.நாற்பது வயது குடும்பத் தலைவனான ஆண் வேறு என்பதே இங்கு உண்மை.

இந்து மதத்தின் உன்னதங்களை உணர்ந்து உங்களின் எழுத்துகள் மூலம் தெளிவு பெற்றவள் என்பதால் எனக்கு இந்த சாதி வெறிகள் மனச்சோர்வை அளிக்கின்றன.இவற்றைக் களையவே முடியாதா.

ஆணும் பெண்ணும் அன்பால் மட்டுமே இணையும் உன்னதமான காதல் உணர்வு கொண்டவள் நான்.நீ நீயாக இருப்பதால் உன்னை நேசிக்கிறேன் என்பதே என் நிலை.உலகில் எத்தனையோ சமூகங்கள் அப்படி காதலைக் கொண்டாடும்போது இம்மண்ணில் மட்டும் ஏன் இந்த சாதிப்பேய்.

உங்களின் எழுத்துகளிலேயே காதலின் மேன்மையை அதிகம் உணர்ந்தவள் நான்.அனல் காற்று,காடு மற்றும் தற்போது வெண்முரசில் ராதை மற்றும் இடும்பியின் பெருங்காதலை உணர்வுபூர்வமாய் உணர்பவள் நான்.நிஜ வாழ்வில் இவைசாத்தியம் என்றே என் இளமையில் நம்பினேன்.இப்பொழுதும் அதே மாறா பிரேமையுடனே வாழ்கிறேன் ஆனால் நம் சமூகத்தில் அது சாத்தியமில்லையோ எனத் தோன்றுகிறது.

பிராமணர்கள் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்த பின் என் மனதில் தோன்றுபவை இவை.

நீங்கள் கூறுவது போல தமிழர்கள் வசைபாடுபவர்கள் என்பதால் இப்படி பிற சாதியை பழிக்கின்றனரா.அல்லது அது நம்முள் உறைந்த பழங்குடிப் பண்பா?

தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எனக்கு பதில் அளிக்கவும்.இதை வெளியிட்டால் என் பாதுகாப்பு கருதி பெயர் வெளியிட வேண்டாம்.

நன்றி
__

அன்புள்ள —

பொதுவாக இளமைப்பருவத்தில் ‘நான் வேறு மாதிரி. நான் தனித்தன்மை கொண்டவன்’ என்ற எண்ணமே ஆண்களை ஆட்டுவிக்கிறது. பிறரைவிட மாறுபட்டிருக்கும் துணிச்சல் அப்போது இருக்கிறது. அது பெருமையாகவும் தோன்றுகிறது

ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் பெரும்பாலானவர்களுக்கு அந்தத் தனித்தன்மை மிகக்குறைவே என்றும் அல்லது அது ஒரு பாவனையே என்றும் தோன்றிவிடுகிறது. அப்படித் தோன்றாதவர்கள் ஏதாவது துறையில் தனித்தன்மையை அடைந்தவர்களாக, சாதித்தவர்களாக இருப்பார்கள்

சாதிக்காதவர்கள் மீண்டும் மந்தையுடன் சென்று சேர்ந்துகொண்டு தன் இனக்குழு, மொழி, மதம் சார்ந்த பொது அடையாளங்களைச் சுமந்து மகிழ்பவர்களாகவே இருப்பார்கள். இது மிக விதிவிலக்கு

உங்கள் கணவர் அவ்வகைப்பட்ட ஓர் எளிய மனிதர் என்றே நினைக்கிறேன். அவரை பெரிதாக எண்ணவேண்டியதில்லை. அவரால் அவருக்குரியதென எதையுமே அடையமுடியவில்லை. இந்த மட்டில் இந்த அடையாள மாற்றத்தை ஒட்டி உங்கள் மீதான அன்பையும் மதிப்பையும் இழக்காமலிருக்கிறாரே என்று எண்ணிக்கொள்ளவேண்டியதுதான்

அத்துடன் சாமானியர்களுக்கு வாழ்க்கையின் இறுதிப்பகுதியில் ஒருவகையான பாதுகாப்பின்மை உணர்வு வந்து விடுகிறது. சாதியை உதறி மணம் புரிந்த பலர் “நமக்குன்னு ஆளு வேணும் சார்” என்று சொல்வதைக் கண்டிருக்கிறேன். அது உண்மையும் கூட. ஏனென்றால் நம் சமூகம் சாதியச் சமூகம். ஒருவருக்கு ஒரு இக்கட்டில் அவன் சாதிதான் பெரும்பாலும் சமூகப்பின்புலமாக வந்து நிற்கிறது. அந்தப்பாதுகாப்பை எளிய மனிதர்கள் நாடுவதும் இயல்பே.

ஆக இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை, இது ஒரு பெரும் வீழ்ச்சி என்றெல்லாம் எண்ண வேண்டியதில்லைம். அன்றாடவாழ்க்கையின் ஒரு பகுதியாக மட்டும் எண்ணிக்கொண்டால் போதும்.

பண்பாட்டு மாற்றம் போல மிகமிக மெல்ல நிகழ்வது பிறிதில்லை. அது நம் பொறுமையைச் சோதிக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பெரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டும் இருக்கிறது. சென்ற தலைமுறையில் நீங்கள் இப்படித் திருமணம் செய்துகொண்டிருந்தால் பெரிய சிக்கல்களைச் சந்தித்து ஒவ்வொருநாளும் வாழ்க்கை நரகமாகியிருக்கும். இப்போது சிறிய உறுத்தல்கள்தான்

நீங்களே ஒரு பெருநகரில் வாழ்ந்திருந்தால், உறவினர் சூழ இல்லாமலிருந்தால் வேறுவகையில் இருந்திருக்கும். மாற்றம் நிகழ்கிறது. நாம் எதிர்பார்க்குமளவுக்கு அல்ல.

என் உறவுச்சூழலில் இன்று மூன்றில் ஒரு பங்கு திருமணங்களே சாதிக்குள் நிகழ்கின்றன. எண்பதுகளில் கொஞ்சம் நீங்கள் சொல்லும் பேச்சுகளின் உரசல்கள் இருந்தது. இப்போது அதுவும் இல்லை. சாதி ஒரு பிரச்சினையாகவே இல்லை. ஏனென்றால் பெரும்பாலும் சாதிசார்ந்த அடையாளங்கள் கொண்ட வாழ்க்கை இங்கே இல்லை

ஆனால் பணம் முக்கியமானது. நான் என்னிடம் கேட்கும் [கேரளப் பின்னணி கொண்ட] பெண்களிடம் சொல்வது எக்காரணம் கொண்டும் உங்களைவிட பணமுள்ள ஒருவனை மணந்துகொள்ளவேண்டாம் என்பதுதான். அது இங்கே மிமமிக பெரிய பிரச்சினை. ஒவ்வொரு நாளும்.நகையில் சாப்பாட்டில்

இந்தக்கடிதத்தை நான் எழுதக்காரணமே இன்றைக்குக்கூட அப்படி ஒரு பெரிய அழுகையை சந்தித்து சமாதானம் சொல்லி வந்ததுதான். விஷயம் இதுதான், பெண் ஒரு உயர்தர ஓட்டலில் முந்தானையால் முகத்தை ஒற்றிக்கொண்டு விட்டாள். மாப்பிள்ளை வீட்டில் நாட்கணக்காக கிண்டல். அறிவுரைகள்.

ஆக மனிதர்களிடையே இன்னொருவரை ஒரு படி கீழாக காட்டும் மனநிலை இருந்துகொண்டேதான் இருக்கும். அதன் வழியாகவே அவர்கள் மேலே செல்லமுடியும். அதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 64